பாடுகளின் வாரம்: செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 2(5)
இராயனுக்கு வரிகொடுக்கிறது
பேச்சிலே அகப்படுத்தும்படி
அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனை பண்ணி, (மத் 22:15).
இயேசுகிறிஸ்துவை பேச்சிலே அகப்படுத்தும்படி பரிசேயர் யோசனைபண்ணுகிறார்கள். தங்களுடைய வேத ஞானத்தினால் இயேசுகிறிஸ்துவை சோதிப்பதற்கு முயற்சி செய்து தோல்வியடைந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் வேத ஞானத்தையும், அவருடைய சாதுரியத்தையும் கண்டு, அவரை வேறு ஏதாவது ஒரு கண்ணியில் சிக்க வைக்கலாம் என்று முயற்சி பண்ணுகிறார்கள்.
ஒருவர் எவ்வளவுதான் ஞானமுள்ளவராக இருந்தாலும், வேலைகளில் சுறுசுறுப்பாக இருந்தாலும், தன்னுடைய கடமைகளை சரியாக செய்கிறவராக இருந்தாலும், எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும், இவர்கூட சில சமயங்களில் தன்னுடைய நாவின் கட்டுப்பாட்டை இழந்து எதையாவது பேசிவிடுவதற்கு வாய்ப்புள்ளது. இயேசுகிறிஸ்துவின் சத்துருக்கள் இதுபோன்ற சூழ்நிலை அவருக்கு வராதா என்று எதிர்பார்க்கிறார்கள். அவருடைய பேச்சினாலே அவரை தங்கள் கண்ணியில் அகப்படுத்தலாம் என்று பரிசேயர் தங்களுக்குள் யோசனை பண்ணுகிறார்கள்.
யோசனைபண்ணாமல் செய்யும் பாவமும் மோசமானதாக இருக்கும். ஒரு பாவத்தை யோசனைபண்ணி, திட்டமிட்டு செய்யும்போது அந்த பாவம் மிகவும் மோசமானதாக இருக்கும். பரிசேயர்கள் துன்மார்க்கராக இருக்கிறார்கள். துன்மார்க்க சிந்தனையும், துன்மார்க்க யோசனையும் இவர்களுடைய இருதயத்தில் நிறைந்திருக்கிறது. தங்கள் உள்ளத்தில் உள்ள துன்மார்க்க சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவை அவருடைய பேச்சிலே அகப்படுத்தும்படி முயற்சிபண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து எதையும் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக பேசக்கூடியவர். தம்முடைய உள்ளத்தில் உள்ளதை அப்படியே பேசிவிடுவார். இயேசுகிறிஸ்துவின் கள்ளம் கபடமற்ற பேச்சை பரிசேயர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஒருவரை அவருடைய பேச்சினாலே பிடிப்பது சாத்தானுடைய பல தந்திரங்களில் ஒன்று. வார்த்தைக்கு தவறாக வியாக்கியானம் கூறுவது, சத்தியத்தை தவறாக புரிந்துகொள்வது ஆகியவையெல்லாம் சாத்தானுடைய கிரியைகள்.
இயேசுகிறிஸ்துவின் சத்துருக்கள் அவரை எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென்றும், அவரை பழிவாங்கவேண்டுமென்றும், முயற்சி செய்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை சட்டத்தின் பிரகாரமாக சந்தித்து அவரை அழிக்கவேண்டும், அல்லது அவரை பலாத்காரமாக அழித்துப்போடவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். சட்டத்தினால் இயேசுகிறிஸ்துவை அழிக்கமுடியவில்லை. அரசாங்க காரியங்களில் இயேசுகிறிஸ்துவுக்கு ஈடுபாடுயில்லை. அவரை அரசாங்கம் சம்பந்தமான கொள்கைகளில் ஈடுபடுத்தினால்தான், இயேசுவுக்கு பிரச்சனையை உண்டுபண்ணமுடியும் என்று பரிசேயர் யோசிக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்துவை அவர்களால் பலாத்காரமாகவும் அழிக்கமுடியவில்லை. ஏனெனில் ஜனங்கள் அவரை தீர்க்கதரிசியென்று நினைக்கிறார்கள். ஜனங்களால் போற்றப்படும் தீர்க்கதரிசியை அழித்துவிட்டால் ஜனங்கள் பரிசேயருக்கு விரோதமாக கலகம்பண்ணுவார்கள். பரிசேயர்களால் ஜனங்களை இயேசுவுக்கு எதிராக திருப்ப முடியவில்லை.
யூதமார்க்கத்தின் பிரகாரமாகவோ, நியாயப்பிரமாணத்தின் மூலமாகவோ, திரளான ஜனங்கள் மூலமாகவோ, ரோமப்பேரரசின் நீதிபதிகள் மூலமாகவோ அவர்களால் இயேசுகிறிஸ்துவை அழிக்க முடியவில்லை. வேறு ஏதாவது ஒரு வழியில் இயேசுவை அழிக்கவேண்டுமென்று பரிசேயர்கள் யோசனை பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் பேச்சிலே அவரை அகப்படுத்தலாம் என்று யோசனை பண்ணுகிறார்கள்.
தங்கள் சீஷரும் ஏரோதியரும்
தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக் குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம் (மத் 22:16).
பரிசேயர்கள் இயேசுகிறிஸ்துவை நேருக்கு நேராக சந்திக்கவில்லை. அவரிடத்தில் தங்கள் சீஷரை அனுப்புகிறார்கள். பரிசேயருடைய சீஷர்களைப் பார்க்கும்போது அவர்கள் இயேசுவை சோதிக்க வந்தவர்கள்போல தெரியாது. இயேசுகிறிஸ்துவிடம் உபதேசத்தை கேட்டு கற்றுக்கொள்ள வந்தவர்கள்போல தெரியும். துன்மார்க்கமான ஜனங்கள், தங்களுடைய துன்மார்க்கமான ஆலோசனையை நிறைவேற்றுவதற்கு, இதுபோல மாய்மாலமான காரியங்களை செய்வார்கள். தங்களுடைய துர்ச்செயல்களை நிறைவேற்றுவதற்கு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்துவார்கள்.
பரிசேயர்கள் தங்கள் சீஷர்களோடு ஏரோதியரையும்கூட அனுப்புகிறார்கள். ஏரோதியர்கள் யூதமார்க்கத்தில் ஒரு பிரிவினர். ரோமப்பேரரசோடு யூதர்கள் இணக்கமாக இருக்கவேண்டும் என்பது ஏரோதியரின் கொள்கை. யூதர்கள் எல்லோருமே ரோம அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டுமென்று ஏரோதியர்கள் வலியுறுத்துகிறார்கள்.
ஏரோதியரும் பரிசேயரின் சீஷரும் இயேசுகிறிஸ்துவிடம் வருகிறார்கள். ஏரோதியர்கள் ரோமப்பேரரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். பரிசேயர்கள் ரோமப்பேரரசுக்கு வரி செலுத்த மறுக்கிறார்கள். வித்தியாசமான கொள்கையுடைய இவ்விரண்டு பிரிவினரும் இப்போது இயேசுகிறிஸ்துவிடம் வந்து அவரை சத்தியமுள்ளவர் என்று அறிக்கை செய்கிறார்கள்.
ரோமப்பேரரசுக்கு வரி செலுத்தவேண்டுமென்று இயேசுகிறிஸ்து ஆலோசனை கூறினால், யூதமார்க்கத்து ஜனங்களை இயேசுவுக்கு விரோதமாக திருப்பிவிடலாம் என்பது பரிசேயரின் திட்டம். ரோமப்பேரரசுக்கு வரி செலுத்தவேண்டாம் என்று இயேசுகிறிஸ்து ஆலோசனை கூறினால், ஏரோதியர்கள் ரோமப்பேரரசிடம் இயேசுவுக்கு எதிராக பிராது கொடுப்பார்கள். ரோமப்பேரரசார் இயேசுவை பகைப்பார்கள். இதன் மூலமாக இயேசுவை அழித்துப்போடலாம் என்று பரிசேயர் திட்டமிடுகிறார்கள். ஏதாவது ஒரு வழியில் இயேசுவை அழித்துப்போட வேண்டுமென்பதே இவர்களுடைய திட்டம்.
ஒருவருக்கொருவர் கொள்கையிலும் செயலிலும் வித்தியாசமாக இருந்தாலும், முரண்பட்டு இருந்தாலும், இயேசுகிறிஸ்துவையும் அவருடைய ராஜ்யத்தையும் எதிர்க்கும்போது சத்துருக்கள் ஒன்று சேர்த்துவிடுகிறார்கள்.
பரிசேயரின் சீஷரும், ஏரோதியரும் இயேசுகிறிஸ்துவிடம் மிகவும் பணிவாக வருகிறார்கள். கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். ""போதகரே நீர் சத்தியமுள்ளவர் என்றும், தேவனுடைய மார்க்கத்தை சத்தியமாய் போதிக்கிறவரென்றும் அறிந்திருக்கிறோம்'' என்று கூறுகிறார்கள். தங்களுடைய உள்ளத்தில் எப்படிப்பட்ட உள்நோக்கம் இருந்தாலும், தங்களுடைய பேச்சை ஆரம்பிக்கும்போது இவர்கள் சாதுரிய வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.
இயேசுகிறிஸ்துவிடம் இவர்கள் ஒரு முக்கியமான காரியத்தை விசாரிப்பதற்காக வந்திருக்கிறார்கள். அதை விசாரிப்பதற்கு முன்பாக தங்களுடைய உண்மையையும், நேர்மையையும், கண்ணியத்தையும், பணிவையும் இவர்கள் இயேசுகிறிஸ்துவிடம் வெளிப்படுத்துகிறார்கள்.
இவர்கள் இயேசுகிறிஸ்துவைப்பற்றி கூறிய வார்த்தைகள் மெய்யானவை. அவர் மெய்யாகவே சத்தியமுள்ள போதகர். அவர் சத்தியமுள்ளவர். தேவனுடைய மார்க்கத்தை சத்தியமாய் போதிக்கிறவர். இயேசுகிறிஸ்துவே சத்தியமாக இருக்கிறார். தேவனுடைய வழியை இயேசுகிறிஸ்து உபதேசம் பண்ணுகிறார். அந்த வழியாக பிரவேசிக்கும்போது நமக்கு சந்தோஷம் உண்டாகும். இயேசுகிறிஸ்து சத்தியத்தை உபதேசம் பண்ணுகிறார். சரியான பாதையை ஜனங்களுக்கு காண்பிக்கிறார். உபதேசம்பண்ணும்போது அவர் தைரியமாக உபதேசம்பண்ணுகிறார். அவருக்கு எவனைக்குறித்தும் கவலையில்லை. மனுஷருடைய ஆதரவை அவர் எதிர்பார்த்து முகதாட்சணியம் பண்ணமாட்டார்.
பெரியோராக இருந்தாலும், சிறியோராக இருந்தாலும், பெரிய கூட்டமாக இருந்தாலும், சிறிய கூட்டமாக இருந்தாலும் இயேசுகிறிஸ்து சத்தியத்தை தைரியமாக உபதேசம் பண்ணுகிறவர். அவர் முகதாட்சணியம் இல்லாதவர். எவனைக் குறித்தும் கவலையில்லாதவர். கண்டித்து உணர்த்துகிறவர். பரிசேயரின் சீஷர்களும், ஏரோதியரும் இயேசுகிறிஸ்துவைப்பற்றி நயமான வார்த்தைகளைக் கூறினாலும், அவர்களுடைய உள்ளத்தில் கபடு இருக்கிறது. தங்கள் உள்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அவர்கள் வெளிவேஷம் போடுகிறார்கள்.
அவர்கள் இயேசுகிறிஸ்துவை ""போதகரே'' என்று அழைக்கிறார்கள். அவருடைய வார்த்தையிலேயே அவரை அகப்படுத்தும்படி யோசனை பண்ணுகிறார்கள். அவரை மரியாதையாக, ""போதகரே'' என்று அழைக்கிறார்கள். இயேசுவுக்கு விரோதமாக தீங்கு செய்ய நினைக்கிறவர்கள், அவரை போற்றுகிறார்கள். அவருக்கு மரியாதை கொடுக்கிறார்கள். தங்களுடைய பாராட்டு வார்த்தையினால் இயேசுகிறிஸ்து தங்களுக்கு செவி கொடுப்பார் என்று நினைக்கிறார்கள். இவர்களுடைய அறிமுகமும் ஆரம்பமும் அழகாக இருக்கிறது.
இந்தச் சதித்திட்டத்தில் மூன்று பிரிவினர்கள் இருக்கிறார்கள்.
1. ஏரோதியர்
2. சதுசேயர்
3. பரிசேயர்
ஏரோதியர் என்பவர் ஏரோது ராஜாவின் கொள்கைகளைப் பின்பற்றும் அரசியல் பிரிவினர். இதில் ஏரோதின் குடும்பத்தினரே அதிகமாக இருந்தார்கள். (மாற்கு 3:6) இவர்களுடைய உபதேசத்தின்படி எல்லோரும் ரோம சாம்ராஜ்ஜியத்திற்குக் கட்டுப்படவேண்டும். தங்களுக்கு அனுகூலம் இருக்குமென்றால் தாங்கள் பின்பற்றி வரும் மார்க்கக்கொள்கைகளுக்குக் கீழ்ப்படியாமல் அவற்றை ஒதுக்கி வைத்து விடலாம். இந்த வேளையில் ஏரோது எருசலேமில் இருந்தான். அவனுடைய வேலைக்காரர்களாகிய ஏரோதியர்களும் அங்கு அவனோடுகூட இருந்தார்கள்.
சதுசேயர் என்பவர்களும் இயேசுவிடம் கேள்வி கேட்டார்கள். ஆனால் தங்கள் கேள்விகள் மூலமாக இவர்களால் இயேசுவைக் குற்றப்படுத்த முடியவில்லை. (மத் 3:7, மத் 22:23-33)
பரிசேயர் என்பவர்களும் இயேசுவிடம் கேள்வி கேட்டார்கள். ஆனால் இயேசுவோ இவர்கள் வாயை அடைத்துவிட்டார். (மத் 22:34-46) இயேசு கிறிஸ்து 23-ஆவது அதிகாரத்தில் உவமைகள் மூலமாக இவர்களைக் கடிந்து கொள்கிறார். ஆனால் இவர்களோ தங்களைத் தாழ்த்தி இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புக் கொடுப்பதற்கு மனதில்லாமல் இருக்கிறார்கள். தங்களுடைய சதியாலோசனையில் ஏரோதியரையும், பங்காளிகளாகச் சேர்த்துக் கொள்கிறார்கள். இதுவரையிலும் மார்க்கக் காரியங்களைப் பற்றி இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் இப்போது அரசியல் ரீதியாகக் கேள்வி கேட்கிறார்கள். (மத் 22:17)
பரிசேயரின் சீஷரும், ஏரோதியரும் இயேசு கிறிஸ்துவிடம் நான்கு காரியங்களைக் கூறினார்கள். அவையாவன:
1. போதகரே நீர் சத்தியமுள்ளவர்.
2. நீர் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவர்.
3. நீர் முகதாட்சிணியம் இல்லாதவர்.
4. எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லை.
உமக்கு எப்படி தோன்றுகிறது
ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குக்குச் சொல்லும் என்று கேட்டார்கள் (மத் 22:17).
இவர்கள் இயேசுகிறிஸ்துவிடம் வந்து ஆரம்பத்திலேயே ""உமக்கு எப்படி தோன்றுகிறது'' என்று கேட்கிறார்கள். ஏனெனில் தாங்கள் கேட்கப்போகும் காரியத்தைக்குறித்து ஜனங்கள் பலவிதமான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். இவற்றில் உம்முடைய கருத்து என்ன என்று கேட்கிறார்கள். ""ராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ, அல்லவோ'' இதுவே அவர்கள் இயேசுகிறிஸ்துவிடம் கேட்கும் கேள்வியாகும். தங்களுடைய கேள்விக்கு பதில் சொல்லுமாறு அவர்கள் இயேசுவிடம் கேட்கிறார்கள்.
ரோமப்பேரரசுக்கு நாமாகவே மனமுவந்து வரி செலுத்த வேண்டுமா? யூத தேசம் ஆதிகாலத்தில் விடுதலையோடு இருந்தது. அவர்கள் யாருக்கும் வரி செலுத்தவில்லை. அதுபோல இப்போதும் நாம் ரோமப்பேரரசுக்கு வரி கொடுக்காமல் இருந்துவிடலாமா? இவர்கள் இயேசுகிறிஸ்துவிடம் இந்த கேள்வியை கேட்டு அவருடைய பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனை பண்ணுகிறார்கள். வரி செலுத்தவேண்டும் என்று கூறினால் யூதர்களை இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக திருப்பலாம். வரி செலுத்த வேண்டாம் என்று கூறினால் ரோமப்பேரரசை இயேசுகிறிஸ்துவிக்கு விரோதமாக திருப்பலாம் என்பது இவர்களுடைய எண்ணம்.
துர்க்குணம்
இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? (மத் 22:18).
இயேசுகிறிஸ்து அவர்களுடைய துர்க்குணத்தை அறிகிறார். இவர்களுடைய வார்த்தை ஆரம்பத்தில் மரியாதையாக இருக்கிறது. அலங்கார வார்த்தைகளினால் இவர்கள் கண்ணியை பின்னுகிறார்கள். பசும் புல்லிற்குள் மறைந்திருக்கும் சர்ப்பத்தைப்போல் இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவுக்கோ மறைவான காரியம் ஒன்றுமில்லை. சாத்தான் ஒருவரை சோதிப்பதினால் அவனால் அந்த நபர்மீது வெற்றி கண்டுவிடமுடியாது. சாத்தான் நம்மை சோதிக்கும்போது அவனுடைய துர்க்குணத்தை நாம் அறியவேண்டும். சாத்தானுக்கு எதிர்த்து நிற்கவேண்டும். அப்போது அவன் நம்மைவிட்டு ஓடிப்போவான்.
இயேசுகிறிஸ்து அவர்களுடைய துர்க்குணத்தை அறிந்து அவர்களிடம் ""மாயக்காரரே நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்'' என்று கேட்கிறார். மாயக்காரன் எப்படியிருப்பான், மாயமில்லாதவன் எப்படியிருப்பான் என்பதெல்லாம் இயேசுவுக்கு நன்றாக தெரியும். மாயக்காரன் எப்படிப்பட்ட வேஷம் போட்டாலும் இயேசுகிறிஸ்து அதை கண்டுபிடித்து விடுவார். நமது சாதுரிய வார்த்தைகளினால் இயேசுகிறிஸ்துவை மயக்க முடியாது. மனுஷன் முகத்தைப்பார்த்தாலும் அவர் நம்முடைய இருதயத்தை பார்க்கிறவர். நம்முடைய நடிப்பு, பேச்சு, முகபாவம் ஆகிய அனைத்தையும் இயேசுகிறிஸ்து ஆராய்ந்து பார்க்கிறார்.
தம்மிடத்தில் கேள்வி கேட்பவர்களை ஆரம்பத்திலேயே ""மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்'' என்று கேட்கிறார். இயேசுகிறிஸ்துவை சோதிப்பது கடினம். அவருடைய பார்வை கூர்மையானது. அவர் சுத்த கண்ணர். துன்மார்க்கரின் மாய்மாலத்தை அவர் ஆராய்ந்து பார்க்கிறார். மனுஷனுடைய இருதயத்திற்குள் எப்படிப்பட்ட ஆலோசனைகள் இருந்தாலும் அது அவருக்கு மறைவாயிராது.
இயேசுகிறிஸ்து அவர்களை மாயக்காரரே என்று அழைத்தாலும், அவர்களுடைய கேள்விக்கு பதில் கூற முன்வருகிறார். தம்முடைய பிரதியுத்தரத்திற்கு அஸ்திபாரமாக இயேசு ஒரு சில காரியங்களை கூறுகிறார்.
வரிக்காசு
வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார் (மத் 22:19,20).
ரோமப்பேரரசுக்கு இராயன் ராஜாவாக ஆட்சிபுரிகிறான். தன்னுடைய பேரரசிலுள்ள யூதர்களை இவனே ஆளுகை செய்கிறான். அவனுக்கு வரி கொடுப்பது நியாயமா என்று பரிசேயரின் சீஷரும், ஏரோதியரும் கேள்வி கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்து தமது பிரதியுத்தரத்தை கூறுவதற்கு முன்பாக வரிக்காசை தமக்கு காண்பிக்குமாறு கூறுகிறார். ஒரு காரியத்தை தீர ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும்போது குழப்பம் எல்லாம் நீங்கிப்போகும். இயேசுகிறிஸ்து அவர்களுக்கு உடனடியாக பதில் கூற விரும்புகிறார். ஆயினும் தம்முடைய பதிலை அவர்களுக்கு தெளிவுபடுத்தி விளக்குகிறார்.
ரோமப்பேரரசார் வரிப்பணத்தை தங்களுடைய பணத்திலேயே செலுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள். இக்காலத்தில் யூதர்கள் மத்தியில் ரோமப்பேரரசால் அங்கீகரிக்கப்பட்ட பணமே வழக்கத்திலிருந்தது. இது வெள்ளியினால் செய்யப்பட்டது. எல்லாவிதமான கொடுக்கல் வாங்கல்களுக்கும் ரோமப்பேரரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்தக் காசையே பயன்படுத்துகிறார்கள். இந்தக் காசில் இராயனுடைய சுரூபம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அவனுடைய மேலெழுத்தும் பதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு காசில் இவ்விரண்டும் இருந்தால்தான் ரோமப்பேரரசில் அது செல்லுபடியாகும். ரோமப்பேரரசு முழுவதும் இந்தக் காசை அங்கீகரிக்கவேண்டும். இந்த காசை அங்கீகரிப்பது ரோமப்பேரரசரான இராயனை அங்கீகரிப்பதற்கு சமம்.
இயேசுகிறிஸ்துவிடத்தில் பரிசேயரின் சீஷரும் ஏரோதியரும் ஒரு பணத்தை கொண்டு வருகிறார்கள். அதில் இராயனுடைய சுரூபமும் மேலெழுத்தும் இருக்கிறது. இயேசுகிறிஸ்து அவர்களிடம் ""இந்த சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது'' என்று கேட்கிறார்.
இராயனுடையதை இராயனுக்கு
இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார் (மத் 22:21).
இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ என்று பரிசேயரின் சீஷரும், ஏரோதியரும் இயேசுகிறிஸ்துவிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர் ""இராயனுடையதை இராயனுக்கு கொடுங்கள்'' என்று கூறுகிறார். இராயனுக்கு வரிகொடுப்பதைப்பற்றி இவர்கள் கேட்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ இராயனுடையதை அவனுக்கு கொடுங்கள் என்று கூறுகிறார். ஒருவர் ஒரு நிர்வாகத்தைப் பெற்றுக்கொள்ளும்போது, அதற்குரிய கடமைகளை நிறைவேற்றவேண்டும். இராயன் ஜனங்களிடமிருந்து தனக்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளும்போது, அவன் தன்னுடைய பொறுப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்றவேண்டும்.
ரோமப்பேரரசுக்கு உட்பட்ட ஜனங்கள் தங்கள் தேசத்திற்கு செய்யவேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவில்லாமல் செய்யவேண்டும். இராயனுடையது எதுவோ அதை அவனுக்கு செலுத்தவேண்டும். இயேசுகிறிஸ்து இவ்வாறு பதில் கூறுவதினால் யாரையும் குற்றப்படுத்தவில்லை. தம்மை ஒரு நியாயதிபதியாக அவர் இங்கு காண்பிக்கவில்லை. ஜனங்களை இரண்டாக பிரிப்பவராகவும் இயேசு இங்கு தம்மை வெளிப்படுத்தவில்லை.
இராயனுடைய அதிகாரத்தைக்குறித்து இயேசுகிறிஸ்து எதுவும் கூறவில்லை. அதேவேளையில் ஒரு தேசத்தின் ராஜாவுக்கு அந்த தேசத்து ஜனங்கள் கீழ்ப்படியவேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் இந்த பதிலுரையினால் ரோமப்பேரரசினர் இவர்மீது குற்றம் சுமத்தமாட்டார்கள். இயேசுகிறிஸ்துவின் பிரதியுத்தரம் இராயனுக்கு சாதகமாக இருப்பதினால் அவர்கள் இயேசுவின்மீது நன்றி உணர்வோடு இருப்பார்கள்.
பரிசேயருடைய சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் பிரதியுத்தரத்தை கவனமாக கேட்கிறார்கள். பரிசேயர்களாலும் இராயனை குற்றப்படுத்தமுடியாது. அவனுடைய ஆளுகைக்கு பரிசேயர்களும் உட்பட்டிருக்கிறார்கள். நாம் சத்தியத்தைப் பாதுகாக்க வேண்டும். ஆயினும் நாம் சத்தியத்தை மறைக்கக்கூடாது. அதே வேளையில் சத்தியத்தை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. சத்தியத்தை தவறாக வியாக்கியானம் பண்ணக்கூடாது.
இயேசுகிறிஸ்துவின் சத்துருக்களுக்கு அவருடைய பிரதியுத்தரம் ஆச்சரியமாக இருக்கிறது. பலர் தங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும். கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாக நிறைவேற்றாமல் தவிர்த்துவிடுவார்கள். தங்களுடைய கடமைகளை ஏன் செய்யவேண்டுமென்று விவாதம்பண்ணுவார்கள். இப்படிப்பட்ட ஜனங்களைப் பார்த்துதான் இயேசுகிறிஸ்து ""இராயனுடையதை இராயனுக்கு கொடுங்கள்'' என்று கூறுகிறார்.
இயேசுகிறிஸ்துவின் பிரதியுத்தரம் அவரோடிருக்கும் சீஷர்களுக்கும் ஆலோசனையாக உள்ளது. இயேசுகிறிஸ்துவின் மார்க்கம் எந்த அரசாங்கத்திற்கும் எதிரான மார்க்கமல்ல. விசுவாசிகள் தங்கள் அரசாங்கத்தை நேசிக்கவேண்டும். தங்கள் தேசத்தில் தங்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றவேண்டும்.
தேசத்திலுள்ள சட்டதிட்டங்களுக்கு விசுவாசிகள் கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும். ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு விதமான சட்டங்கள் இருக்கலாம். அந்தந்த தேசத்தில் வசிக்கும் விசுவாசிகள் அவர்களுடைய தேசத்தின் சட்டங்களுக்கு மதிப்பு கொடுத்து, அவற்றுக்கு கீழ்ப்படியவேண்டும். அதிகாரத்திலுள்ளவர்களுக்காக நாம் ஜெபிக்கவேண்டும். அரசாங்கத்தை ஏமாற்றுவது பாவம். அரசாங்கத்தை வஞ்சிப்பது பிறருடைய பொருளை வஞ்சிப்பதைப்போன்றது.
இராயனுடையதை இராயனுக்கு கொடுங்கள் என்று இயேசு கூறும்போது ""தேவனுடையதை தேவனுக்கு செலுத்துங்கள்'' என்றும் கூறுகிறார். நமது பணம் இராயனுக்குரியதாக இருக்கலாம். ஆனால் நம்முடைய மனச்சாட்சி தேவனுக்குரியது. நமது நேரம், தாலந்து, ஐசுவரியம் ஆகிய அனைத்திலும் தேவனுக்கு உரிமையுள்ளது. இதில் தேவனுடையதை நாம் தேவனுக்கு செலுத்திவிடவேண்டும். இராயனுடைய இராயனுக்கு செலுத்தும்போது தேவனை மறந்துவிடக்கூடாது. அதுபோலவே தேவனுடையதை தேவனுக்கு செலுத்தும் போது இராயனையும் மறந்துவிடக்கூடாது.
சில சமயங்களில் இராயனுடைய கட்டளைகள் தேவனுடைய கட்டளைகளுக்கு முரண்படுவதற்கு வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மனுஷருக்கு கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் தேவனுக்கு கீழ்ப்படிவது உத்தமம்.
இயேசுகிறிஸ்து தமது தெய்வீக ஞானத்தை இங்கு வெளிப்படுத்துகிறார். இராயனுக்குரியதை இராயனுக்குச் செலுத்த வேண்டும். அதேசமயத்தில் தேவனுக்குரியதைத் தேவனுக்குச் செலுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இராயனுக்கு வரி செலுத்த வேண்டாம் என்று கூறியிருந்தால் ஏரோதும், ஏரோதியரும் இயேசு கிறிஸ்துவை விரோதியாகப் பாவிப்பார்கள். அதேவேளையில் இராயனுக்கு வரிசெலுத்த வேண்டும் என்பதை மட்டும் இயேசு வலியுறுத்திக் கூறினால், யூதர்கள் அவரை வெறுப்பார்கள். இயேசு ஞானமாகப் பதில் கூறினார். தேவனுடைய ஞானம் வெளிப்பட்டது. ஜனங்கள் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப்போய் விட்டார்கள்.
ஆச்சரியப்பட்டு போய்விட்டார்கள்
அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள் (மத் 22:22).
இயேசுகிறிஸ்துவின் பிரதியுத்தரத்தைக் கேட்டு பரிசேயரும் சீஷரும் ஏரோதியரும் ஆச்சரியப்பட்டு அவரை விட்டு போய்விடுகிறார்கள். இயேகிறிஸ்துவை அவருடைய வார்த்தையினாலே அகப்படுத்த வேண்டுமென்பது இவர்களுடைய நோக்கம். ஆனால் இயேசுகிறிஸ்துவின் ஞானமான பிரதியுத்தரத்தைக் கேட்டு, அவரை எந்த கண்ணியிலும் சிக்க வைக்கமுடியாது, என்று தீர்மானம்பண்ணிவிட்டு அவரை விட்டு போய்விடுகிறார்கள்.
இயேசுகிறிஸ்துவின் பிரதியுத்தரத்தைக் கேட்டு, ஜனங்கள் ஆச்சரியப்பட்டு, இயேசுவை பின்பற்றுவதுதான் வழக்கம். ஆனால் இவர்களோ ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விடுகிறார்கள். பலருடைய பார்வையில் இயேசுகிறிஸ்து ஆச்சரியமானவராக இருக்கிறார். ஆயினும் அவர்கள் அவர் தங்களுக்கு தேவையில்லை என்று கிறிஸ்துவை அசட்டைபண்ணி விடுகிறார்கள். பலர் இயேசுகிறிஸ்துவின் ஞானத்தைக்குறித்து ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால் அவருடைய ஞானம் தங்களை வழிநடத்துவதற்கு தேவையில்லையென்று நினைக்கிறார்கள். இவர்களைப்போலவே பரிசேயரின் சீஷரும் ஏரோதியரும் இயேசுகிறிஸ்துவின் பிரதியுத்தரத்தைக் கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டு போய்விடுகிறார்கள். வெட்கப்பட்டுப்போகிறார்கள். தோல்வியடைந்து திரும்புகிறார்கள். யுத்தக்களத்தைவிட்டு பின்வாங்கிப்போகிறார்கள். இயேசுகிறிஸ்துவோடு யாரும் போராடி ஜெயிக்கமுடியாது.
