பாடுகளின் வாரம்: செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 2(4)
கலியாண விருந்து
குமாரனுக்கு கலியாணம்
இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் க-யாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது (மத் 22:1,2).
இயேசுகிறிஸ்து தேவாலயத்தில் இருக்கிறார். பிரதான ஆசாரியரும், பரிசேயரும், யூதமார்க்கத்தின் மற்ற தலைவர்களும் அங்கு கூடியிருக்கிறார்கள். இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாக பேசுகிறார். தம்முடைய சத்துருக்கள் கூறிய எதிர் கருத்துக்களுக்கு இயேசுகிறிஸ்து இங்கு பிரதியுத்தரம் கூறவில்லை. அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து, அவர்களோடு இந்த உவமையைக் கூறுகிறார். அவர் மனுஷருடைய எண்ணத்தை அறிந்திருக்கிறவர். மனுஷருடைய எண்ணங்களுக்கு எவ்வாறு பிரதியுத்தரம் கூறவேண்டும் என்று இயேசுவுக்குத் தெரியும். கலியாண விருந்தைப்பற்றிய உவமையில் சுவிசேஷத்தின் அழைப்பு விவரிக்கப்படுகிறது. அந்த அழைப்பை சில ஜனங்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள்.
ஒரு ராஜா தன் குமாரனுக்கு கலியாணம் செய்கிறான். கலியாணத்தோடு ஒரு பெரிய விருந்தையும் ஆயத்தம்பண்ணுகிறான். கலியாண விருந்து ஆயத்தம்பண்ணுவது சுவிசேஷத்தின் ஆயத்தங்களுக்கு ஒப்புமையாக இருக்கிறது. ராஜா தன் குமாரனுக்கு கலியாணம் செய்கிறான். இயேசுகிறிஸ்து மணவாளனாகவும், அவருடைய சபை மணவாட்டியாகவும் இருக்கிறார்கள். சுவிசேஷத்தின் உடன்படிக்கை கிறிஸ்துவுக்கும் அவருடைய விசுவாசிகளுக்கும் இடையில் நடைபெறும் திருமண உடன்படிக்கையை போன்றிருக்கிறது.
ராஜா தன் குமாரனுக்கு கலியாணம் செய்யும்போது ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுகிறார். புதிய உடன்படிக்கையில் பல ஆசீர்வாதங்கள் உள்ளன. பாவமன்னிப்பு, தேவனுடைய கிருபை, மனச்சாட்சியில் அமைதி, சுவிசேஷத்தின் வாக்குத்தத்தங்கள், பரிசுத்த ஆவியானவரின் ஆறுதல்கள், நித்திய ஜீவனில் நம்பிக்கை ஆகியவை புதிய உடன்படிக்கையின் மூலமாக நமக்கு வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் ஆசீர்வாதங்களாகும். கலியாண விருந்திலுள்ள விதவிதமான பாதார்த்தங்கள் இந்த ஆசீர்வாதங்களை குறிக்கிறது. புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் நமக்கு வரும்போது இந்த பூமியில் பரலோகம் இறங்கி வரும்.
கலியாண விருந்தில் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்படுகிறது. இது சாதாரண விருந்தல்ல. திடமான ஆகாரத்தினால் இந்த விருந்து ஆயத்தம்பண்ணப்படுகிறது. எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது. எல்லோருக்கும் போதுமான அளவு நல்ல போஜனம் இருக்கிறது. இந்த விருந்து அன்பின் நிமித்தமாக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது. இது ஒப்புரவாதலின் விருந்தாகும். இந்த விருந்தில் பங்குபெறுகிறவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். பூரண ஆசீர்வாதமும், சம்பூரண நிறைவும் இந்த விருந்தினால் உண்டாகும். சுவிசேஷமும் இந்த விருந்தைப்போலவே தாகமுள்ள எல்லா ஆத்துமாக்களையும் நன்மையினால் நிரப்பும். இந்த விருந்தின் மூலமாக ஐக்கியம் உண்டாகும்.
இது சாதாரண விருந்தல்ல. கலியாண விருந்து. கலியாண விருந்து பொதுவாக ருசியுள்ளதாகவும், பல பதார்த்தங்கள் நிறைந்ததாகவும், சந்தோஷமாக புசிக்கக்கூடியதாகவும் இருக்கும். கலியாண விருந்து இலவசமாக கொடுக்கப்படும். இயேசுகிறிஸ்து தமது முதலாவது அற்புதத்தை ஒரு கலியாண வீட்டில் நடப்பித்தார். திராட்சரசம் குறைவுபட்டபோது, தண்ணீரை திராட்சரசமாக்கி, அந்த குறைவை நிறைவாக்கினார் (யோவா 2:7). கலியாண விருந்தில் பற்றாக்குறையிராது. எல்லாம் திருப்தியாகவும் தாராளமாகவும் இருக்கும்.
இந்த கலியாண விருந்து ராஜா வீட்டின் கலியாண விருந்தாகும். இது ஒரு வேலைக்காரனுக்கு செய்யப்படும் கலியாணமல்ல. ராஜாவின் குமாரனுக்கே இங்கு கலியாணம் நடைபெறுகிறது. புதிய உடன்படிக்கை கிருபையின் உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையின் மூலமாக விசுவாசிகளுக்கு ராஜாவின் மகிமை இலவச ஈவாக கொடுக்கப்படுகிறது. சுவிசேஷத்தின் விருந்தில் ஆத்துமாக்களுக்கு போஜனம் கிடைக்கும். இயேசுகிறிஸ்து தம்மையே ஜீவஅப்பமாக நமக்கு கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய குமாரனின் கலியாணத்திற்கு ராஜா பலரை அழைக்கிறார். விருந்தை ஆயத்தம்பண்ணி, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது என்று அழைக்கப்பட்டவர்களுக்கு கூறுகிறார். சுவிசேஷ அழைப்பும், விருந்தில் பங்குபெறுவதற்காக அழைக்கப்படும் அழைப்பை போன்றது. கலியாண விருந்தை ஆயத்தம்பண்ணும்போது, கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்தில் பங்குபெற்று அதை சிறப்பு செய்வார்கள். உலகம் எங்கிலுமுள்ள எல்லா ஜனங்களையும் சுவிசேஷ அழைப்பின் மூலமாக இயேசுகிறிஸ்து அழைக்கிறார்.
கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்களே விருந்தினர்களாக வரமுடியும். சுவிசேஷத்தின் சத்தம் எல்லோரும் கேட்கும்படியாக பிரசங்கிக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவிடம் வருமாறு எல்லோருக்கும் அழைப்பு கொடுக்கப்படுகிறது. சுவிசேஷம் யாரையும் புறக்கணிப்பதில்லை. ஜனங்கள்தான் தங்களுடைய அறியாமையினாலும், இருதய கடினத்தினாலும் சுவிசேஷத்தை புறக்கணிக்கிறார்கள்.
விருந்தில் பங்குபெறுவதற்கு ராஜா அழைக்கப்பட்டவர்களை அழைக்கிறார். அதுபோலவே சுவிசேஷமும் ஒரு அழைப்பாகவே கொடுக்கப்படுகிறது. இது கிருபையும் அன்பும் நிறைந்த அழைப்பு. தாகமுள்ள ஆத்துமாக்களும், பசியுள்ள ஆத்துமாக்களும் திருப்தியடைய வேண்டுமென்பதே இயேசுகிறிஸ்துவின் விருப்பம். ஜனங்களின் இரட்சிப்புக்காக இயேசுகிறிஸ்து சுவிசேஷத்தை ஆயத்தம்பண்ணி, இந்த இரட்சிப்பில் பங்குபெறுமாறு ஜனங்களை அன்போடு அழைக்கிறார். தம்முடைய ஊழியக்காரர்களை அனுப்பி எல்லோரையும் அழைக்கிறார். ஜனங்களுடைய பலவீனமும், தாகமும், பசியும், தரித்திரமும் இயேசுவுக்கு நன்றாக தெரியும்.
அழைக்கப்பட்டவர்களை கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி ராஜா தன் ஊழியக்காரரை அனுப்புகிறார். ஆனால் அவர்களோ வர மனதில்லாதிருக்கிறார்கள். மனுஷருக்கு அழைப்பு மட்டும் கொடுத்தால் போதும். அழைப்பை ஏற்று வருவதும் வராததும் அவர்களுடைய இஷ்டம் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். ராஜாவோ தங்கள் குமாரனுக்கு கலியாணம் செய்யும்போது, அழைக்கப்பட்ட விருந்தினர்களெல்லாம் வரவேண்டும் என்பதற்காக தன்னுடைய அரண்மனையை திறந்தே வைத்திருக்கிறார். அழைக்கப்பட்டவர்கள் வர மனதில்லாமல் இருக்கிறார்கள். அப்போதுகூட ராஜா சோர்ந்துபோகவில்லை. அவர் வேறு ஊழியக்காரர்களை அழைக்கப்பட்டவர்களிடத்தில் அனுப்புகிறார். ""விருந்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது, எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும், அடிக்கப்பட்டிருக்கிறது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது'' என்று அழைக்கப்பட்டவர்களிடம் கூறுகிறார்.
தேவனுடைய ராஜ்யத்தில் கலியாண விருந்தைப்போல, புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களெல்லாம் ஆயத்தமாக இருக்கிறது. மன்னிப்பு, சமாதானம், ஆறுதல், வாக்குத்தத்தங்கள் ஆகிய அனைத்துமே ஆயத்தமாக இருக்கிறது. பரலோகமும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது. சுவிசேஷத்தை கேட்கிறவர்கள், அதன் அழைப்பை ஏற்று வந்தால் ஆயத்தமாக இருக்கும் இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம். விருந்து ஆயத்தமாக இருக்கும்போது நாம் ஆயத்தமில்லாமல் இருக்கக்கூடாது. இவையெல்லாம் நமக்காகவே ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறது. ஆகையினால் நமக்கு அழைப்பு உண்டா என்னும் சந்தேகம் நம்முடைய உள்ளத்தில் வரவே கூடாது. நாம் அழைக்கப்பட்டவர்கள் என்னும் நிச்சயம் நம்மிடம் காணப்படவேண்டும்.
ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தைப் பற்றி வெளி 19:7-10 ஆகிய வசனங்களில் நாம் வாசிக்கிறோம். ஆனால் இந்தக் கலியாண விருந்து ஒரு இராஜாவினுடைய மகனின் கலியாண விருந்து.
அழைக்கப்பட்டவர்கள்
அழைக்கப்பட்டவர்களைக் க-யாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள். அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; க-யாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான். அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள். மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலை செய்தார்கள் (மத் 22:3-6).
கலியாணத்திற்கு வருமாறு ராஜா எல்லோரையும் அழைக்கிறார். ஆனால் அவர்களோ வர மனதில்லாதிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவும் தம்முடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுமாறு பாவிகளை அழைக்கிறார். ஆனால் பாவிகளோ வர மனதில்லாதிருக்கிறார்கள். அவர்களால் வர முடியும். ஆனால் வருவதற்கு மனதில்லாதிருக்கிறார்கள்.
அழைக்கப்பட்டவர்கள் அழைப்பை அசட்டைபண்ணுகிறார்கள். கலியாண விருந்தில் பங்குபெறுவதினால் தங்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற ஒரு நல்ல விருந்தை தங்கள் வீட்டிலேயே தங்களுக்கு ஆயத்தம்பண்ணிக் கொள்ளலாம் என்று யோசிக்கிறார்கள். இவர்களைப்போலவே இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுமாறு அழைக்கப்பட்டவர்களும், தங்கள் அழைப்பை அசட்டைபண்ணுகிறார்கள். இந்த உலகத்தில் ஏராளமான ஜனங்கள் இயேசுகிறிஸ்துவின் அழைப்பை அசட்டைபண்ணுவதினால் அழிவுக்கு நேராக கடந்துபோகிறார்கள். அழைக்கப்பட்டவர்கள் கலியாண விருந்தைக் குறை சொல்லவில்லை. ஆனால் அந்த விருந்து தங்களுக்கு முக்கியமானதல்ல என்று அசட்டையாக இருக்கிறார்கள். அது தேவையில்லையென்றும் முடிவுபண்ணிவிடுகிறார்கள்.
கலியாண விருந்திற்கு போகாதவர்கள் தங்களுக்கு வேறு முக்கியமான வேலைகள் இருப்பதாக நினைக்கிறார்கள். சிலர் வயலுக்கு போய்விடுகிறார்கள். சிலர் தங்களுடைய வியாபாரத்தை கவனிக்க போய்விடுகிறார்கள். கலியாண விருந்தைவிட தங்களுடைய சொந்த வேலையே இவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது.
கலியாண விருந்தை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் கலியாண விருந்திற்கு வராமல் இருப்பதற்கு அழைக்கப்பட்டவர்கள் எல்லாருமே போக்குச்சொல்ல தொடங்குகிறார்கள். ஒருவன் வயல் வேலைக்கு போகவேண்டும் என்கிறான். ஒருவன் ஏர்மாடு வாங்கியிருக்கிறேன் அதைசோதித்துப் பார்க்க போகவேண்டும் என்கிறான். ஒருவன் பெண்ணை விவாகம்பண்ணியிருப்பதினால் தன்னால் வரக்கூடாது என்று மறுத்துவிடுகிறான் (லூக் 14:18).
கிராமத்தில் உள்ள ஜனங்களுக்கு விவசாய நிலங்கள் இருக்கும். இந்த நிலத்தில் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளும் ஏராளமாக இருக்கும். பட்டணத்திலுள்ள ஜனங்களுக்கு வியாபாரமும், வேறு அலுவல்களும் இருக்கும். எல்லோருமே ஏதாவது ஒரு வேலையை விறுவிறுப்பாக செய்து கொண்டிருப்பார்கள். கிராமத்திலுள்ள ஜனங்கள் தங்களுடைய விவசாய வேலையிலும், பட்டணத்திலுள்ள ஜனங்கள் தங்களுடைய வியாபாரங்களிலும், அலுவல்களிலும் அதிக கவனம் செலுத்தி வேலை செய்கிறார்கள். தேவனுடைய ராஜ்யத்தையோ கவனிக்காமல் புறக்கணித்துவிடுகிறார்கள். தங்கள் சொந்த வேலைகளில் காண்பிக்கும் ஆர்வத்தை இவர்கள் உள்ள ஆர்வம் தேவனுடைய காரியங்களில் காண்பிப்பதில்லை.
எல்லோருக்குமே சோதனைகள் வரும். கிராமத்தில் உள்ளவர்களுக்கும் வரும். பட்டணத்தில் உள்ளவர்களுக்கும் வரும். ஒவ்வொருவருடைய சோதனையும் வித்தியாசமாக இருக்கும். நமக்கு எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், நம்முடைய இருதயத்தை இயேசுகிறிஸ்துவே ஆளுகை செய்யவேண்டும். அவருக்கு கொடுக்க வேண்டிய இடத்தை நம்முடைய சொந்த வேலைகளுக்கு கொடுத்துவிடக்கூடாது. கிறிஸ்துவுக்கும் நமக்கும் இடையே நம்முடைய வேலைகள் நமக்கு தடையாக இருக்கக்கூடாது.
அழைக்கப்பட்டவர்களில் சிலர் அழைப்பை அசட்டைபண்ணி, கலியாண விருந்திற்குப்போகாமல், தங்கள் சொந்த வேலையை கவனிப்பதற்காக போய்விடுகிறார்கள். வேறு சிலரோ ராஜாவின் ஊழியக்காரரை பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்கிறார்கள். இயேசுகிறிஸ்து இந்த உவமையைக் கூறும்போது தேவாலயத்தில் இருக்கிற வேதபாரகரையும், பரிசேயரையும், பிரதான ஆசாரியரையும் சம்மந்தப்படுத்தி பேசுகிறார்.
இவர்களே கர்த்தருடைய ஊழியக்காரர்களை பிடித்து அவமானப்படுத்தி, கொலைசெய்கிறவர்கள். ஏற்கெனவே இவர்கள் தீர்க்கதரிசிகளையும் யோவான்ஸ்நானனையும் அவமானப்படுத்தியிருக்கிறார்கள். தேவனுடைய ராஜ்யத்திற்கு சத்துருவாக இருக்கிறவர்கள் கர்த்தருடைய ஊழியக்காரர்களை அவமானப்படுத்துவார்கள்.
யூதருடைய வழக்கத்தின் பிரகாரம் விருந்தினருக்கு இரண்டு அழைப்புக்கள் கொடுக்கப்படுவது வழக்கம். முதலாவது அழைப்பு திருமணத்திற்கு முன்பாகவே கொடுக்கப்படும். இரண்டாவது அழைப்பு திருமண விருந்து ஆயத்தமான பின்பு கொடுக்கப்படும்.
மற்றவர்கள் ராஜாவின் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலை செய்தார்கள். இதுபோலவே தேவனுடைய தீர்க்கதரிசிகளை இஸ்ரவேலர்கள் கொலை செய்தார்கள். (லூக்கா 11:47-51) இராஜா கொலைபாதகரை அழித்ததுபோலவே தேவன் இவர்களையும் நியாயந்தீர்ப்பார் (மத் 22:7).
ராஜாவின் கோபம்
ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான் (மத் 22:7).
தன்னுடைய ஊழியக்காரர் அவமானப்படுத்தப்பட்டதையும், கொலை பண்ணப்பட்டதையும் ராஜா கேள்விப்பட்டு கோபமடைகிறார். தன்னுடைய சேனைகளை அனுப்பி அந்த கொலைபாதகரை அழித்துப்போடுகிறார். தன்னுடைய அழைப்பை அசட்டைபண்ணியவர்களை ராஜா அழித்துப்போடவில்லை. தன்னுடைய ஊழியக்காரரை கொலை செய்த கொலைபாதகரையே ராஜா அழித்துப்போடுகிறார். பல சமயங்களில் தேவன் தமது சுவிசேஷத்தின் மேன்மையைவிட, தம்முடைய ஊழியக்காரரின் நன்மையை விசாரிக்கிறவராக இருக்கிறார். ஊழியக்காரரை பாதுகாத்து பராமரிக்கிறார். கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியக்காரரை உபத்திரவப்படுத்துகிறவர்கள்மீது தேவனுடைய கோபாக்கினை இறங்கிவரும். அவர்களுடைய எல்லா பாவங்களிலும் ஊழியக்காரர்களை துன்புறுத்திய பாவமே பிரதான பாவமாக இருக்கும். யூதமார்க்கத்தார்கள் தேவனுடைய ஊழியக்காரர்களை துன்புறுத்தியதினால், அவர்கள் தேவனுடைய கோபாக்கினையினால் அழிந்துபோகிறார்கள்.
ராஜா தன்னுடைய சேனைகளை அனுப்பி கொலைபாதகரை அழித்துப்போடுகிறார். யூதமார்க்கத்தார்மீது தேவன் ரோமப்பேரரசின் சேனைகளை அனுப்பி யூதர்களை அழித்துப்போட்டார். கர்த்தர் பரமசேனைக்கு மாத்திரமல்ல, மனுஷருடைய சேனைக்கும் அவரே கர்த்தராக இருக்கிறார். தமக்கு சித்தமான பிரகாரம் சேனைகளை வழிநடத்துகிறார். இந்த சம்பவம் சுவிசேஷத்திற்கும் கிறிஸ்துவுக்கும் எதிர்த்து நிற்கும் துன்மார்க்கருக்கு ஒரு எச்சரிப்பாக எழுதப்பட்டிருக்கிறது.
வழிச்சந்தி
அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: க-யாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள். ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் க-யாணத்திற்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றான். அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; க-யாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது (மத் 22:8-10).
கலியாண விருந்து ஆயத்தமாக இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய் இருக்கிறார்கள். சுவிசேஷம் முதலில் யூதருக்கு அறிவிக்கப்படுகிறது. ஆனால் யூதர்களோ சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு, இரட்சிப்படைந்து, தேவஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வதற்கு அபாத்திரராக இருக்கிறார்கள். அழைக்கப்படுவது ஒரு சிலாக்கியம். ஆனால் யூதர்களோ தங்களுடைய சிலாக்கியத்தை அசட்டைபண்ணிவிடுகிறார்கள். பாவிகள் அழிந்துபோவதற்கு தேவன் காரணமல்ல. தங்களுடைய அழிவுக்கு பாவிகளே காரணம்.
அழைக்கப்பட்டவர்கள் கலியாணத்திற்கு வரவில்லை. ஆகையினால் ராஜா தன் ஊழியக்காரரிடம் மற்றவர்களை கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டு வருமாறு கூறுகிறார். முதலில் அழைக்கப்பட்டவர்களெல்லாம் பட்டணத்திலுள்ளவர்கள் (மத் 22:7). இவர்கள் ராஜாவின் அழைப்பை அசட்டைபண்ணிவிடுகிறார்கள்.
இப்போது ராஜா தன்னுடைய ஊழியக்காரரை வழிசந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டு வருமாறு அனுப்புகிறார். வழிசந்தி என்பது புறஜாதியாருடைய ஸ்தலங்களாகும். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களை முதலாவதாக ஊழியத்திற்கு அனுப்பும்போது ""நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்கு போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்'' என்று கட்டளை கொடுத்து அனுப்பினார் (மத் 10:5). ஊழியக்காரர்களும் கர்த்தருடைய கட்டளையின்படி இஸ்ரவேல் வீட்டாருக்கு சுவிசேஷத்தை அறிவித்தார்கள். ஆனால் அவர்களோ சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துவிடுகிறார்கள்.
யூதர்கள் தங்களுடைய இரட்சிப்பை இழந்துபோகிறார்கள். இப்போது கர்த்தருடைய இரட்சிப்பு புறஜாதியார்மீது வந்திருக்கிறது. இந்த பூமியில் தேவராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. தேவராஜ்யத்தின் கிருபையை பலர் புறக்கணித்துவிடுகிறார்கள். இந்த ராஜ்யத்தின் வல்லமைக்கு பலர் எதிர்த்து நிற்கிறார்கள்.
வழிசந்தியில் இருந்த ஜனங்கள் கலியாணத்திற்கு தாங்கள் அழைக்கப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. வழியில் சும்மா நின்ற ஜனங்களை கலியாணத்திற்கு வருமாறு அழைக்கும்போது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்திருக்கும். இதுபோலவே புறஜாதியாருக்கு சுவிசேஷமும் வேதமும் எல்லாமே புதியதாக இருக்கும். இதற்கு முன்பு இவர்கள் சுவிசேஷத்தை கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் (அப் 17:19,20). இவர்களுக்கு இதுவரையிலும் யாருமே இரட்சிப்பின் அழைப்பை கொடுத்திருக்கமாட்டார்கள். வழிசந்தியில் இருப்பதினால், கலியாண விருந்து தங்களுக்கல்ல என்றும், வேறு யாருக்கோ என்றும் இவர்கள் அதில் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் ராஜாவோ தன்னுடைய ஊழியக்காரரிடம் வழிசந்திகளில் போய் காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு வருமாறு அழைக்கச் சொல்லுகிறார். வழிசந்தி என்பது பொது ஜனங்கள் இருக்கும் இடம். இங்கு யார் வேண்டுமானாலும் இருப்பார்கள். நல்லாரும் பொல்லாரும் இருப்பார்கள். சுவிசேஷ அழைப்பும் இதைப்போலவே எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது. அழைப்பை எதிர்பார்க்காதவர்களுக்கும் இந்த அழைப்பு கொடுக்கப்படுகிறது. இரட்சிப்புக்கும் நமக்கும் சம்மந்தமில்லை என்று நினைப்பவர்களுக்கும் இந்த அழைப்பு கொடுக்கப்படுகிறது. சிறியோர், பெரியோர், செல்வந்தர்கள், தரித்திரர்கள், நல்லார், பொல்லார் ஆகிய எல்லோருக்குமே இரட்சிப்பின் அழைப்பு கொடுக்கப்படுகிறது.
இரண்டாவது கொடுக்கப்பட்ட அழைப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ராஜாவின் ஊழியக்காரர் புறப்பட்டு வழிகளிலே போய் தாங்கள் கண்ட நல்லார், பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். கலியாண சாலை விருந்தாளிகளால் நிறைந்திருக்கிறது. ஆத்துமாக்களை கூட்டிச்சேர்ப்பதே சுவிசேஷத்தின் திட்டம். யூத ஜனத்தாரை மாத்திரம் என்று வேறு பிரிக்காமல் தேவனுடைய பிள்ளைகள் எல்லோரையும் சுவிசேஷம் கூட்டிச் சேர்க்கிறது. அவர்கள் எங்கு சிதறி இருந்தாலும் அவர்கள் எல்லோரையுமே சுவிசேஷம் தேவனுடைய ராஜ்யத்திற்கு அழைத்து வருகிறது. இயேசுகிறிஸ்து யூதஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாக சேர்க்கிறதற்காக மரிக்கப்போகிறார் என்று பிரதான ஆசாரியனாகிய காய்பா தீர்க்கதரிசனமாக கூறுகிறான் (யோவா 11:52). யூதருடைய தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல் வேறே ஆடுகளும் இயேசுகிறிஸ்துவுக்கு உண்டு. அவைகளையும் இயேசுகிறிஸ்து கூட்டிச்சேர்க்கிறார் (யோவா 10:16).
கலியாண சாலைக்கு வழிகளிலே இருந்தவர்கள் எல்லோரும் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லோரும் புதிய உடன்படிக்கையின் சிலாக்கியங்களில் பங்கு பெறப்போகிறார்கள். நீரூற்று எங்கே இருக்கிறதோ அங்கே தாகமுள்ளவர்கள் கூடிவருவார்கள்.
கலியாண சாலை விருந்தாளிகளால் நிறைந்திருக்கிறது. ராஜாவின் ஊழியக்காரர் தாங்கள் கண்ட யாவரையும் கலியாண சாலைக்கு அழைத்துவருகிறார்கள். கூடியிருக்கும் விருந்தாளிகளில் நல்லாரும் இருக்கிறார்கள். பொல்லாரும் இருக்கிறார்கள். ஒரு சிலர் இரட்சிப்படுவதற்கு முன்பாகவும் நீதிநெறி பிரகாரம் நல்லவர்களாகவே இருந்திருப்பார்கள். வேறு சிலரோ இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக துன்மார்க்கமாக ஜீவனம்பண்ணியிருப்பார்கள். ஒரு சிலர் இரட்சிக்கப்பட்ட பின்பு மறுபடியும் தங்களுடைய பழைய பாவ வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள். வேறு சிலரோ தங்கள் பாவ வாழ்க்கையிலிருந்து இரட்சிக்கப்பட்ட பின்பு நீதியாகவும் நேர்மையாகவும் ஜீவிப்பார்கள். ஊழியக்காரர்கள் சுவிசேஷ வலையை விரிக்கும்போது அதில் நல்ல மீன்களும், பொல்லாத மீன்களும் வந்து விழும்.
மத் 22:5-7-ஆவது வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிற கொலை பாதகர்களை இந்த வசனம் குறிக்கும். யூதமார்க்கத்தலைவர்கள் ராஜாவால் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களைப் போன்றவர்கள். அவர்கள் அழைக்கப்பட்டிருந்தும் அபாத்திரராய்ப் போனார்கள். (அப் 13:46)
அழைக்கப்பட்டவர்கள் அபாத்திரராய்ப் போனதினால் வழிச் சந்திகளில் காணப்படுகிற நல்லார், பொல்லார் யாவரையும் அழைத்து வருமாறு ராஜா தன் ஊழியக்காரரை அனுப்புகிறான். அதுபோலவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் எல்லாப் பாவிகளையுமே மனந்திரும்புமாறு அழைக்கிறார். (மத் 13:38,48) இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் யூதர்களுக்கு மட்டும் என்று வரையறுக்கப்படவில்லை. (யோவான் 1:11; மத் 10:6; மத் 15:24) இஸ்ரவேல் புத்திரர் இயேசு கிறிஸ்துவைப் புறக்கணித்ததினால் அவர்களோடு தாம் செய்துகொண்ட உடன்படிக்கையைத் தேவன் நிறைவேற்ற வேண்டியதில்லை. ஆகையினால் தற்போது இயேசு கிறிஸ்து உலகம் முழுவதிலுமுள்ள எல்லா ஜனங்களையுமே இரட்சித்து தமது ராஜ்யத்தில் சேர்த்து வருகிறார்.
அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள். வழியிலே போகிறவர்களுக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்கும். விருந்து கொடுக்கிறவர் ராஜா. அவருடைய அரண்மனைக்கு சாதாரண நாட்களில் இவர்களால் உள்ளேயே போகமுடியாது. ராஜாவின் ஊழியக்காரர்கள் இவர்களைத் துரத்தி விடுவார்கள். ஆனால் இப்போதோ அதே ஊழியக்காரர்கள் வழியில் போகும் ஜனங்களை ராஜா ஆயத்தம்பண்ணியிருக்கும் கலியாண விருந்தில் கலந்து கொள்ளவருமாறு அழைக்கிறார்கள்.
ராஜா தனது விருந்து சாலையை விருந்தினர்களால் நிறைக்க விரும்பினார். ஏழை, பணக்காரர் வித்தியாசமில்லாமல் எல்லோரையும் விருந்திற்கு அழைத்தார். விருந்தில் பங்கு பெறுகிறவர்களுக்கு நல்ல வஸ்திரம் வேண்டும். அதையும் ராஜாவே தனது சொந்த செலவில் கொடுத்தார். தன்னுடைய வஸ்திரங்களை விருந்துக்கு வந்தவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தார். ராஜா கொடுக்கும் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டு, அந்த வஸ்திரத்தை அணிந்து, விருந்தில் பங்குபெறுவது ராஜாவிற்கும் கௌரவம். ராஜா கொடுக்கும் விருந்திற்கும் ஒரு கௌரவம். விருந்தில் பங்குபெறுகிற எல்லோருக்குமே கௌரவம்.
கலியாண வஸ்திரம்
விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, க-யாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: (மத் 22:11).
கலியாண சாலையில் விருந்தாளிகளெல்லாம் நிறைந்திருக்கிறார்கள். அவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள். பொல்லாதவர்களும் இருக்கிறார்கள். சபைகளில் நல்லவர்களும், மாய்மாலக்காரர்களும் இருப்பது போலவே கலியாண சாலையும் இருக்கிறது. கலியாண வஸ்திரம் தரித்திராதவன் மாய்மாலக்காரனுக்கு ஒப்பானவன். இவன் பொல்லாதவன்.
விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா கலியாண சாலைக்குள் பிரவேசிக்கிறார். அழைக்கப்பட்டவர்களை வரவேற்பதற்காக ராஜா அங்கு போகிறார். அழைக்கப்படாமலும், ஆயத்தமில்லாமலும் கலியாண சாலைக்குள் பிரவேசித்து, கலியாண விருந்தை அசிங்கப்படுத்த வந்திருக்கும் பொல்லாதவர்களை கண்டுபிடித்து அவர்களை புறம்பே துரத்துவதற்கு ராஜா வந்திருக்கிறார்.
கலியாண சாலைக்குள் ராஜா பிரவேசிப்பது மாய்மாலத்திற்கு ஓர் எச்சரிப்பாக இங்கு கூறப்பட்டிருக்கிறது. மாய்மாலத்தின் முகமூடி அகற்றப்படும். நல்லோர் மாத்திரமே கலியாண சாலையில் தொடர்ந்து இருக்கமுடியும். நாமும் தேவாலயத்தில் மாய்மாலமில்லாமல், பயபக்தியாக இருப்போமென்றால் கர்த்தர் தமது சபையில் நம்மை அங்கீகரித்து நமக்கு சாட்சி கொடுப்பார்.
கலியாண சாலையில் மாய்மாலக்காரன் கலியாண வஸ்திரம் தரித்திராமல் இருக்கிறான். கலியாண வஸ்திரம் தரித்திராமல் இருப்பதுதான் மாய்மாலக்காரனுக்கு அடையாளம். விருந்தாளிகளை பார்க்கும்படி ராஜாவே கலியாண சாலைக்குள் பிரவேசிக்கிறார். ராஜாவைப்போலவே சபையில் நமது கர்த்தராகிய ஆண்டவரும் பிரவேசிக்கிறார். சபையில் கூடியிருக்கும் ஜனங்களுடைய இருதயங்களைப் பார்க்கிறார். நாம் மனுஷரை வஞ்சிக்கலாம். ஆனால் தேவனை யாராலும் வஞ்சிக்க முடியாது.
ராஜா கலியாண சாலைக்குள் பிரவேசித்த போது கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கு காண்கிறார். ராஜாவின் பார்வை அவன்மீது பதிகிறது. கலியாண சாலையில் விருந்தாளிகளின் கூட்டம் எவ்வளவுதான் நிறைந்திருந்தாலும் ராஜாவின் பார்வையிலிருந்து அவனால் தப்பிக்கமுடியவில்லை. இதுபோலவே நியாயத்தீர்ப்பு நாளில் நியாயம் விசாரிக்கப்படுவோரின் கூட்டம் அதிகமாக இருந்தாலும், தெய்வீக நியாயத்தீர்ப்புக்கு நாம் யாருமே தப்பிக்கமுடியாது.
கலியாண சாலையில் இந்த மனுஷன் கலியாண வஸ்திரம் தரித்திராமல் அங்கு இருக்கிறான். சுவிசேஷம் என்பது கலியாண விருந்து என்றால், கலியாண வஸ்திரம் என்பது சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியும் மனுஷருடைய இருதயத்தையும், பரிசுத்த ஜீவியத்தையும் குறிக்கும். நமது ஜீவியம் சுவிசேஷத்தின் சத்தியங்களுக்கு உகந்ததாக இருக்கவேண்டும்.
இந்த மனுஷன் நிர்வாணமாகயில்லை. ஏதோ ஒரு வஸ்திரத்தை இவன் தரித்திருக்கிறான். ஆனால் இவன் தரித்திருக்கும் வஸ்திரம் கலியாண வஸ்திரமல்ல. இயேசுகிறிஸ்துவை தரித்திருக்கிறவர்கள் மாத்திரமே கலியாண வஸ்திரத்தை தரித்திருக்கிறவர்கள். இவர்களுக்கு மாத்திரமே இயேசுகிறிஸ்து எல்லாவற்றிற்கும் எல்லாமாக இருப்பார்.
விருந்தாளிகள் விருந்து உண்ணும்போது அக்காலத்து வழக்கத்தின்படி விருந்து நன்றாக நடைபெறுகிறதா என்பதை விருந்து கொடுக்கிறவர் வந்து பார்ப்பார். (லூக்கா 14:10)
ராஜா கலியாண விருந்துக்கு வந்திருக்கும் எல்லோருக்குமே வஸ்திரத்தைக் கொடுத்திருக்கிறார். அந்த வஸ்திரத்தை ஏற்க மறுப்பதும், அல்லது வஸ்திரத்தை வாங்கிக்கொண்டு அதை அணியாமல் இருப்பதும் ராஜாவிற்கு அவமரியாதை ஆகும். வெளி 19:7-10 ஆகிய வசனங்களில் பரிசுத்தவான்களின் மெல்லிய வஸ்திரத்தைக் குறித்து நாம் வாசிக்கிறோம்.
சிநேகிதனே
சிநேகிதனே, நீ க-யாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாம-ருந்தான் (மத் 22:12).
கலியாண சாலையில் கலியாண வஸ்திரம் தரித்திராத மனுஷனை ராஜா பார்க்கிறார். அவனிடத்தில் ""சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய்'' என்று கேட்கிறார். தன் குமாரனுடைய கலியாண விருந்தை நடத்துவதற்காக ராஜா இந்த கலியாண சாலையை ஒழுங்கு செய்திருக்கிறார். இதை பாதுகாத்து பராமரிக்கிறார். இந்த இடத்திற்குள் அபாத்திரனாக இந்த மனுஷன் வந்திருக்கிறான். அவனை ராஜா ""சிநேகிதனே'' என்று அழைக்கிறார்.
சிநேகிதன் என்று ராஜா அழைப்பது அவருடைய அன்பை வெளிப்படுத்துகிறது. ராஜாவும் அவனுக்கு சிநேகிதனாகவே இருக்க விரும்புகிறார். ஒரு சிநேகிதனுக்குரிய கடமையை ராஜா செய்ய விரும்புகிறார். அவனிடம் ""இங்கே எப்படி வந்தாய்'' என்று கேட்கிறார். இவனை கலியாண சாலைக்குள் அனுமதித்தற்காக ராஜா தன் ஊழியக்காரர் யாரையும் கடிந்துகொள்ளவில்லை. கலியாண சாலை விருந்தாளிகளால் நிரம்பியிருக்கிறது. அந்த ஸ்தலத்திற்கு ராஜா வந்து அங்கு வந்திருக்கும் விருந்தாளிகளின் இருதயங்களை சோதித்துப் பார்க்கிறார். இவனுடைய இருதயம் துன்மார்க்கமாக இருக்கிறது.
தேவனுடைய ஆலயத்திற்குள் நாம் பிரவேசிக்கும்போது நமது இருதயம் எப்படியிருக்கிறது என்று நம்மை நாமே சோதித்துப் பார்க்கவேண்டும். கர்த்தருடைய பந்தியில் நாம் பங்கு பெறும்போதும் நம்மை சோதித்துப் பார்க்கவேண்டும். தாழ்மையில்லாமல், பரிசுத்தமில்லாமல் கர்த்தருடைய பந்தியில் பங்குபெறக்கூடாது. பரிசுத்தமில்லாமல் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற்றால் ""இங்கே எப்படி வந்தாய்'' என்று தேவன் நம்மிடமும் கேட்பார்.
மந்தைக்குள் திருடுகிறவன் வாசல் வழியாக வரமாட்டான். வேறு ஏதாவது ஒரு வழியாக வருவான். ஆலயத்திற்குள் நாம் பிரவேசிக்கும்போது, நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து ""நாம் இந்த ஆலயத்திற்குள் எப்படி வந்திருக்கிறோம்'' என்று நமக்குள் கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டும். நமக்கு கலியாண வஸ்திரம் இருக்கிறதா, நம்முடைய இருதயம் கர்த்தருக்கு முன்பாக செம்மையாக இருக்கிறதா, நம்முடைய ஜீவியம் பரிசுத்தமாக இருக்கிறதா என்று நம்மை நாமே நிதானித்து அறியவேண்டும். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம்.
ராஜா அந்த மனுஷனிடம் ""இங்கே எப்படி வந்தாய்'' என்று கேட்கிறார். அதற்கு அவன் பேசாமல் இருக்கிறான். இவனுடைய மனச்சாட்சியில் இவனுடைய குற்றம் உணர்த்தப்படுகிறது. ஆகையினால் இவனால் பேசமுடியவில்லை.
ராஜாவின் கலியாண விருந்தில் பிரவேசிப்பதற்கு சில ஒழுங்கு முறைகள் உண்டு. அதுபோலவே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கும் சில ஒழுங்கு முறைகள் உள்ளன. நம்மிடத்தில் பாவம் இருக்குமென்றால், அந்த பாவங்களை கர்த்தரிடத்தில் அறிக்கை செய்யும்போது அவை மன்னிக்கப்படும். நம்முடைய பாவங்களை மூடி மறைத்து, நம்மிடத்தில் பாவம் இல்லாதவர்கள் போல நாம் நடித்தால் நமக்கு மன்னிப்பு கிடைக்காது. கலியாண விருந்தில் கலியாண வஸ்திரம் தரித்திராமல் இருப்பதைப்போல இருப்போம்.
ராஜா அன்புள்ளவர். ஆகையினால் அவர் சிநேகிதனே என்று அழைக்கிறார். நமது கர்த்தரும் அன்புள்ளவர். கிருபையுள்ளவர். நமது பாவங்களை மன்னிப்பதில் கிருபை மிகுந்தவர். கலியாண வஸ்திரமில்லாமல் நாம் இருப்பதை, தேவன் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே, நம்முடைய நிலமையை உணர்ந்து தேவனிடத்தில் மன்னிப்பு கேட்டால், தேவன் நமது பாவங்களை மன்னித்து, நமக்கு இரட்சிப்பின் வஸ்திரத்தைக் கொடுப்பார்.
ராஜா அன்பளிப்பு கொடுத்திருக்கிறார். அதை அவன் வாங்கியிருக்கிறான். ஆனாலும் வஸ்திரத்தை இவன் தரிக்கவில்லை. ஆகையினால் இவனால் சாக்குப்போக்கு எதுவும் சொல்லமுடியவில்லை.
புறம்பான இருள்
அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான் (மத் 22:13).
தவறு செய்த மனுஷனுக்கு ராஜா தண்டனை கொடுப்பார். ஏமாற்றுக்காரன் ஒரு நாள் கையும் களவுமாக அகப்படுவான். ராஜா இந்த ஏமாற்றுக்காரனின் கையையும் காலையும் கட்டுமாறு தன்னுடைய பணிவிடைக்காரருக்கு கட்டளை கொடுக்கிறார். நாம் கர்த்தருடைய அடிச்சுவடுகளை பின்பற்றி நேர்மையாக நடக்கவேண்டும். கர்த்தர் நமக்கு கொடுக்கும் பரிசுத்தமான ஊழியங்களை நமது கரங்களினால் நிறைவேற்றவேண்டும். நமக்கு நியமிக்கப்பட்டபடி நமது கரங்களின் கிரியைகளும், நமது கால்களின் நடைகளும் இல்லையென்றால், நமது கையும் காலும் இவனைப்போலவே கட்டப்படும். இந்த தண்டனையிலிருந்து நம்மால் தப்பிக்க முடியாது. ராஜாவின் பணிவிடைக்காரர் நம்மை கட்டும்போது நம்மால் எதிர்த்து நிற்கவும் முடியாது.
கலியாண வஸ்திரம் இல்லாதவனாய் கலியாண சாலையில் இருக்கும் மனுஷனை ராஜா கண்டுபிடிக்கிறார். அவனை கலியாண விருந்து சாலையிலிருந்து கையும் காலையும் கட்டி வெளியே கூட்டிக்கொண்டு போகுமாறு கட்டளையிடுகிறார். கலியாண விருந்தில் இவனால் பங்குபெற முடியவில்லை. நாமும் இரட்சிக்கப்படவில்லையென்றால், இரட்சிப்பின் வஸ்திரத்தை தரித்துக்கொள்ளவில்லை யென்றால், நம்மாலும் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கமுடியாது. தேவனுடைய ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்படுவோம்.
மாய்மாலக்காரனை ராஜா கலியாண சாலையைவிட்டு வெளியே கொண்டு போகச்சொல்கிறார். அவன் ராஜாவை விட்டும், அவருடைய ராஜ்யத்தை விட்டும், ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கும் கலியாண விருந்தைவிட்டும் வெளியேற்றப்படுகிறான். கலியாண விருந்தின் மேன்மையிலும், சந்தோஷத்திலும் இவனால் பங்குபெற முடியவில்லை. நாமும் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல், ஆவிக்குரிய ஜீவியத்தில் தாறுமாறாக ஜீவித்தால் தேவன் நமக்கு வைத்திருக்கும் சந்தோஷத்திலும், இளைப்பாறுதலிலும் நம்மால் பங்குபெறமுடியாது. தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியாதவாறு நாம் வெளியேற்றப்படுவோம்.
மாய்மாலக்காரனை கையும் காலும் கட்டிக்கொண்டு போய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுமாறு ராஜா தன்னுடைய பணிவிடைக்காரருக்கு கட்டளையிடுகிறார். நரகமே புறம்பான இருள். பரலோகம் வெளிச்சத்தின் தேசம். பரலோகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் இருளான நரகத்திற்குத்தான் போகவேண்டும். நரகத்தின் இருளில் சிறிதுகூட வெளிச்சம் இராது. அங்கு நம்பிக்கையே இராது. நரகத்தில் அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அழுகை வருத்தத்தின் மிகுதியினால் உண்டாகும். பற்கடிப்பு வேதனையின் மிகுதியினால் உண்டாகும்.
தன்னையும், தன் விருந்தையும் அவமானப்படுத்திய அந்த மனுஷனை ராஜா தண்டிக்க விரும்பினான். அவன் செய்தது ராஜாவிற்கு எதிரான குற்றம். ராஜா இலவசமாகக் கொடுத்ததை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களும் இதுபோலவே தண்டிக்கப்படுவார்கள்.
தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்
அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார் (மத் 22:14).
இயேசுகிறிஸ்து இந்த உவமையின் முடிவுரையை இங்கு கூறுகிறார். ""அழைக்கப்பட்டவர்கள் அநேகர். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர்''. இந்த கருத்தை இயேசுகிறிஸ்து ஏற்கெனவே கூறியிருக்கிறார் (மத் 20:16). கலியாண விருந்திற்கு அநேகர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் கலியாண வஸ்திரத்தை தரித்துக்கொள்ளுமாறு ஒரு சிலர் மாத்திரமே தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
