பாடுகளின் வாரம்: செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 2(6)

 




பாடுகளின் வாரம்: செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 2(6)

மரித்தோரின் உயிர்த்தெழுதல் 

உயிர்த்தெழுதல் இல்லை

உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையதினம் அவரிடத்தில் வந்து: (மத் 22:23).


இதுவரையிலும் பரிசேயர்கள் இயேசுகிறிஸ்துவோடு விவாதம்பண்ணினார்கள். இப்போது சதுசேயர்கள் அவரோடு விவாதம்பண்ண விருகிறார்கள். யூதமார்க்கத்தில் பரிசேயரும் சதுசேயரும் இரண்டு முக்கியமான பிரிவினர்கள். இவர்களிடையே கொள்கை வேறுபாடுள்ளது. ஒருவர் மரித்தபின்பு உயிர்த்தெழ மாட்டார் என்பது சதுசேயரின் கொள்கை. இவர்கள் உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள். இயேசுகிறிஸ்துவின் மார்க்கத்தில் மரித்தோரின் உயிர்த்தெழுதல் முக்கியமான சத்தியமாகும். 


யூதமார்க்கத்தில் சதுசேயர்களின் எண்ணிக்கை குறைவு. ஆயினும் இவர்கள் அந்த மார்க்கத்தில் அதிகாரமுள்ளவர்கள். ஒருவர் மரித்தபின்பு அவருக்கு மறுபடியும் வாழ்வு இல்லை. சரீரம் மரிக்கும்போது அவருடைய ஆத்துமாவும் அதோடு மரித்துப்போகும் என்பது இவர்களுடைய விவாதம். தேவனைத் தவிர வேறு ஆவியில்லை என்பது இவர்களுடைய கொள்கை (அப் 23:8). உயிர்த்தெழுதலும், தேவதூதரும், ஆவியும் இல்லை என்று இவர்கள் சாதிக்கிறார்கள். 


சதுசேயரும் பரிசேயரும் ஒருவருக்கொருவர் விரோதமாக இருக்கிறார்கள். ஆயினும் விரோதமாக இருக்கும் இவ்விரு பிரிவினரும் சேர்ந்து இயேசுவுக்கும் விரோதமாக இருக்கிறார்கள்.


இயேசுகிறிஸ்துவை விட்டு பரிசேயர் போனபின்பு சதுசேயர் அவரிடம்       வருகிறார்கள். தங்களுடைய கொள்கையை வலியுறுத்துவதற்காக ஒரு ஸ்திரீயைப்பற்றிய சம்பவத்தை உவமையாக கூறுகிறார்கள். இந்த ஸ்திரீக்கு ஏழுபேர் புருஷர்களாக இருக்கிறார்கள்.  இவர்கள் எல்லோருமே மரித்துப்போகிறார்கள். மரித்தோரின் உயிர்த்தெழுதல் உண்டு என்றால், அவ்உயிர்தெழுதலில் அந்த ஏழு பேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள் என்று ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கிறார்கள்.  உயிர்த்தெழுதலில் ஏழு பேருமே அவளுக்கு புருஷராக இருந்தால் அந்த குடும்ப வாழ்க்கை ஆசீர்வாதமாக இராது. உயிர்த்தெழுந்தபின்பு முதலாவது புருஷன் அவளுக்கு புருஷனாக இருப்பானா, அல்லது கடைசி புருஷன் அவளுக்கு புருஷனாக இருப்பானா, அல்லது இந்த ஏழுபேரில் இவள் யாரை அதிகமாக நேசிக்கிறாளோ அவன் அவளுக்கு புருஷனாக இருப்பானா, அல்லது             இந்த ஏழு பேரில் இவளோடு எவன் அதிககாலம் குடும்பம் நடத்தினானோ அவன் அவளுடைய புருஷனாக இருப்பானா என்று சதுசேயர்கள் மனுஷ ஞானத்தின் பிரகாரமாக இயேசுவிடம் கேள்வி கேட்கிறார்கள்.

மோசேயின் பிரமாணம்

போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே (மத் 22:24).


 தங்கள் விவாதத்திற்கு ஆதாரமாக சதுசேயர்கள் மோசேயின் பிரமாணத்தை இங்கு பயன்படுத்துகிறார்கள். ""சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும் போது, அவர்களில் ஒருவன் புத்திரசந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்தி-ருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்'' என்பது மோசேயின் பிரமாணம் (உபா 25:5).   இது ஒரு தேசியப்பிரமாணம். குடும்பங்களையும் சுதந்தரங்களையும் வெவ்வேறாக பிரித்து வைத்து பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட பிரமாணம். 


யூதமார்க்கத்தலைவர்களுடைய உபதேசத்தின் பிரகாரம் ஒரு ஸ்திரீக்கு இந்த வாழ்வில் இரண்டு புருஷர்கள் இருந்தால் அடுத்த வாழ்வில் அவளுடைய முதலாவது புருஷனே அவளுக்குப் புருஷனாக  இருப்பான்.

ஸ்திரீயும் இறந்துபோனாள்

எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.  எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள் (மத் 22:25-27).


சதுசேயர்கள் இங்கு கூறும் சம்பவம் கற்பனையானது. இது மெய்யாக நடைபெறவில்லை. இதன் பிரகாரம் நடைபெற்றால், உயிர்த்தெழுதலில் என்ன செய்வது என்பது இவர்களுடைய விவாதம். குடும்பத்தில் மரணம் வரும்போது அங்கு பேரிழப்பு உண்டாகும். ஆண் வாரிசு இல்லாமல் குடும்பத்தலைவர் இறந்துபோனால் அந்த குடும்பம் சீரழிந்துபோகும். அப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காக மோசேயின் பிரமாணத்தில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. 


இந்த கற்பனையான சம்பவத்தில் கூறப்பட்டிருக்கும் ஏழு சகோதரருமே மோசேயின் பிரமாணத்திற்கு கீழ்ப்படிகிறார்கள். ஏழாவது சகோதரன் தன்னுடைய ஆறு சகோதரர்களின் விதவையாக இருக்கும் இந்த ஸ்திரீயை கீழ்ப்படிதலோடு விவாகம்பண்ணுகிறான். தேவனுக்கும் தேவனுடைய பிரமாணத்திற்கும் கீழ்ப்படிகிறான். தன்னுடைய சொந்த விருப்பத்திற்கு இணங்கிப் போகாமல், தேவனுடைய கற்பனைக்கு இணங்கிப் போகிறான். இவனுடைய கடமை உணர்வை எல்லோருமே போற்றுவார்கள். மோசேயின் பிரமாணத்தின்படி இவன் நல்லவன். 


இந்த ஏழாவது சகோரனும் இவளை திருமணம் செய்தபின்பு மரித்துப்போகிறான். எல்லோருக்கும் பின்பு இந்த ஸ்திரீயும் மரித்துப்போகிறாள். இந்த குடும்பத்தில் மரணம் தொடர்ந்து நடைபெறுகிறது. இவர்களுக்கு மாத்திரமல்ல. மரணம் எல்லோருக்குமே வரும்.     

எவனுக்கு மனைவி

ஆகையால், உயிர்த்தெழுத-ல் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள் (மத் 22:28).


சதுசேயர்கள் இந்த கற்பனை சம்பவத்தை  இயேசுகிறிஸ்துவிடம் கூறுகிறார்கள். பின்பு ""உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்'' என்னும் கேள்வியை கேட்கிறார்கள். ""இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் கூறமுடியாது, ஆகையினால் உயிர்த்தெழுதல் இல்லையென்று நாங்கள் கூறுகிறோம்'' என்பது சதுசேயரின் விவாதமாகும்.


பரிசேயர்கள் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறார்கள். மரணத்திற்குப் பின்பு இருக்கும் வாழ்க்கைக்காக அவர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்த ஜீவியத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமைகளை நிறைவேற்றாமல், உயிர்த்தெழுந்த பின்பு வரப்போகும் வாழ்க்கையை நினைத்தே கனவு காண்கிறார்கள். ""நாங்களோ பரிசேயர்களைப்போல பொறுப்பற்றவர்களல்ல'' என்பது சதுசேயரின் விவாதமாகும். 


சதுசேயர்களைப்போலவே இன்று ஏராளமானோர் சத்தியத்தை மறுதலிக்கிறார்கள். அதேவேளையில் பலர் பரிசேயரைப்போல சத்தியத்தோடு தங்களுடைய சுய ஆசைகளையும் கலந்து, சத்தியத்தை மாசுபடுத்துகிறார்கள். சத்தியம் தெளிவாக இருக்கவேண்டும். அப்போதுதான் அது தன்னுடைய முழு பலத்தோடு  கிரியை நடப்பிக்கும். 

தப்பான எண்ணம்

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்           (மத் 22:29).


இயேசுகிறிஸ்து தம்மிடத்தில் விவாதம்பண்ணும் சதுசேயரை ""தப்பான எண்ணம் கொள்ளுகிறீர்கள்'' என்று கூறி கடிந்துகொள்கிறார். இவர்கள் மரித்தோரின் உயிர்த்தெழுதலையும், மரணத்திற்கு பின்பு வாக்குப்பண்ணப்பட்டிருக்கிற ஜீவனையும் மறுதலிக்கிறார்கள். தேவனுடைய நியாயத்தீர்ப்பை குறித்து தப்பான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாதிருக்கிறார்கள். பிரதான ஆசாரியரையும் ஜனத்தின் மூப்பரையும் கடிந்து கொள்வதுபோல இயேசுகிறிஸ்து சதுசேயரையும் கடிந்துகொள்கிறார். 


அறியாமையே இவர்கள் தப்பான  எண்ணம் கொள்வதற்கு காரணமாயிற்று. இவர்கள் வெளிச்சத்தில் நடவாமல் இருளில் நடக்கிறார்கள். ஆகையினால் தங்கள் பாதை தெரியாமல் தடுமாறுகிறார்கள். மரித்தோரின் உயிர்த்தெழுதலையும், மறுஜீவனையும் பற்றி தங்கள் அறியாமையினால் தப்பான எண்ணம் கொண்டிருக்கிறார்கள்.


சதுசேயர்கள் உலகப்பிரகாரமாக ஞானிகளாக இருந்தாலும் ஆவிக்குரிய காரியங்களில் அறியாமையில் இருக்கிறார்கள்.  நாம் எப்படி இருப்போம் என்பது நமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாம் மகிமையில் பங்குபெறுவோம் என்பது மாத்திரமே நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் இப்போது இருக்கிற பிரகாரமாக உயிர்த்தெழுந்த பின்பு இருக்கமாட்டோம். இருளில் கைவிடப்படமாட்டோம். தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்போம். 


சதுசேயர்கள் தேவனுடைய  வல்லமையை அறியாதிருக்கிறார்கள். தேவனுடைய வல்லமையை இவர்கள் அறிந்திருந்தால் மரித்தோரின் உயிர்த்தெழுதல் உண்டு என்று விசுவாசிப்பார்கள். தேவனுடைய வல்லமையே அறியாதிருப்பதே பல தப்பான எண்ணங்களுக்கு காரணமாக இருக்கிறது. அதிலும் விசேஷமாக தேவனுடைய வல்லமையை அறியாதவர்கள் உயிர்த்தெழுதலைப்பற்றியும் தப்பான எண்ணங்கொள்கிறார்கள். 


நாம் மரிக்கும்போது நமது சரீரமும் ஆத்துமாவும் பிரிக்கப்படும். சரீரம் மரித்துப்போகும். ஆத்துமாவோ மரிக்காமல் உயிரோடிருக்கும். இது எப்படியாகும் என்னும் கேள்வி நமக்குள் எழும்பலாம். ஒருவன் மரிக்கும்போது அவன் எப்படி மறுபடியும் உயிரோடிருப்பான் என்பது சிலருடைய பொதுவான கேள்வி. இவர்கள் தேவனுடைய வல்லமையை அறியாதவர்கள். 


வீணான மனுஷர்கள் வீணாக சிந்திப்பார்கள். இவர்கள் ஜீவமார்க்கத்தை அறியாதவர்கள். அதன் சத்தியத்தையும் புரிந்து கொள்ளாதவர்கள்.  தேவன் சர்வவல்லமையுள்ளவர் என்பது அடிப்படை சத்தியம். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லையென்று நாம் விசுவாசிக்கவேண்டும். மரித்தோர் உயிர்த்தெழ முடியுமா என்றால், தேவனுடைய வல்லமையினால் எல்லாம் முடியும் என்று நாம் விசுவாசிக்கவேண்டும். தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாம் சந்தேகப்படக்கூடாது. தாம் வாக்குப்பண்ணியதை தேவன் நிறைவேற்றுவார் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். இயற்கையின் வல்லமையைவிட தேவனுடைய வல்லமை பெரிது. 


அவர்கள் வேதவாக்கியங்களை அறியாதிருக்கிறார்கள். மரித்தோரின் உயிர்த்தெழுதலைப்பற்றி வேதவாக்கியம் தெளிவாக கூறுகிறது. ஆத்துமா நித்தியமானது. அது அழிந்துபோகாது. மரணத்திற்கு பின்பு நமக்கு மற்றொரு ஜீவன் உண்டாயிருக்கும் என்று வேதவாக்கியம் தெளிவாக கூறுகிறது.  வேதவாக்கியத்தின் பிரகாரமாகவே இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் (1கொரி 15:3). அவரைப்போலவே நாமும் உயிர்த்தெழுவோம். வேதவாக்கியத்தில் வேதவாக்கியங்களை அறியாமல் இருக்கும்போது நமது உள்ளத்தில் பலவிதமான தீய எண்ணங்கள் உண்டாகும். 


இயேசுகிறிஸ்துவிடம் இப்போது பேசுகிறவர்கள் சதுசேயர்கள். அவர்கள் உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள். ஆனாலும் அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் உயிர்த்தெழுதலையும், மறுவாழ்வையும் குறித்து கேள்வி கேட்டு, இயேசுவைத் தங்கள் கண்ணியில் சிக்க வைக்க முயற்சி பண்ணுகிறார்கள்.        (மத் 22:23) ஆகையினால்தான் இயேசு கிறிஸ்து அவர்களிடம் நீங்கள் வேதவாக்கியங்களையும் அறியவில்லை, தேவனுடைய வல்லமையையும் அறியவில்லை என்று கூறுகிறார். உயிர்த்தெழுதலில் ஆண்களும், பெண்களும் திருமணம் செய்து கொள்வதில்லை.

தேவதூதரைப்போல

உயிர்த்தெழுத-ல் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;  (மத் 22:30).


சதுசேயரின் தப்பான எண்ணத்தை இயேசுகிறிஸ்து திருப்புகிறார். உயிர்த்தெழுதல் இல்லையென்று சதுசேயர்கள் சாதிக்கிறார்கள்.  உயிர்த்தெழுந்த பின்பு நாம் மறுஜீவனுக்குள் பிரவேசிப்போம். அந்த மறுஜென்ம ஜீவன் இப்போது நாம் பூமியில் ஜீவிக்கும் ஜீவனைப்போலயிராது. இங்கு பூமியிலே திருமணம் செய்து கொள்கிறோம். ஆனால் உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இருக்காது. 


இப்போதுள்ள ஜீவனில் நமக்கு திருமணம் அவசியமாக இருக்கிறது. நாகரீக உலகத்தில் எல்லா சமுதாயத்தாரும் திருமண உறவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். நாம் மரித்து உயிர்த்தெழுந்தபின்பு நமக்கு திருமணம் தேவைப்படாது. பரலோகத்தில் இனிமேல் மரணமில்லை (வெளி 11:4). ஆகையினால் அங்கு புதிய சிசுக்கள் பிறக்க வேண்டும் என்னும் அவசியமும் இராது.


நாம் உயிர்த்தெழுந்த பின்பு பரலோகத்திலே தேவதூதரைப்போல இருப்போம்.  தேவன் மனுஷனை சிருஷ்டித்தபோது அவனை தேவதூதரிலும் சற்று சிறியவானவனாக சிருஷ்டித்தார் (சங் 8:5). ஆனால் நாம் உயிர்த்தெழுந்த பின்போ நாம் தேவதூதரைவிட  சிறியவர்களாக இருக்கமாட்டோம். தேவதூதரைப்போலவே இருப்போம். அவர்களைப் போலவே பரிசுத்தமாகவும் ஆவிக்குரிய காரியங்களில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருப்போம். சத்தியத்தை அறிந்தவர்களாகவும், தேவனை நேசிக்கிறவர்களாகவும், தேவனை எப்போதும் துதிக்கிறவர்களாகவும், தேவனோடு பரலோகத்தில் எப்போதும் இருக்கிறவர்களாகவும் இருப்போம். 


பரலோகத்தில் தேவதூதர்கள் தேவனுடைய சித்தத்தை செய்வதற்கு எப்போதுமே ஆயத்தமாக இருப்பார்கள். அதுபோலவே நாமும் இந்த பூமியில்  தேவனுடைய சித்தத்தை செய்வதற்கு ஆர்வமுள்ளவர்களாகவும் ஆயத்தமுள்ளவர்களாவும் இருக்கவேண்டும். ஏனெனில் விரைவில் நாமும் தேவதூதர்களைப்போல இருக்கப்போகிறோம். தேவதூதர்கள் பிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் நமது பரலோகப் பிதாவின் முகத்தை எப்போதும் தரிசிக்கப்போகிறோம்.


உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்கள் தேவதூதரைப்போல மரிப்பதில்லை. ஆகையினால் தங்களுடைய வம்ச விருத்திக்காக அவர்கள் திருமணம் செய்ய வேண்டிய தேவையில்லை. 

நீங்கள் வாசிக்கவில்லையா

மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்            (மத் 22:31,32).


இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுதலின் சத்தியத்தை தமது விவாதத்தினால் உறுதிபண்ணுகிறார். உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்களிடம் அவர்களுடைய தவறுகளை எடுத்துக் கூறினால் மாத்திரம் போதாது. உயிர்த்தெழுதல் உண்டு என்னும் சத்தியத்தை தெளிவாக உறுதிபண்ணவும் வேண்டும். இயேசுகிறிஸ்து சதுசேயரிடம் உயிர்த்தெழுதலின் சத்தியத்தை  உறுதிபண்ணுகிறார். 


வேதவாக்கியத்திலிருந்து உயிர்த்தெழுதலுக்கு ஆதரவாக ஆதாரங்களைத் தருகிறார். வேதவாக்கியம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம். ""தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா'' என்று இயேசுகிறிஸ்து சதுசேயரிடம் கேட்கிறார். தேவன் பேசுகிறதை வேதவாக்கியம் பேசுகிறது. தேவன் நமக்கு பேசியுள்ளவற்றை தெரிந்துகொள்ள வேதவாக்கியத்தை நாம் வாசிக்கவேண்டும். அவருடைய வசனத்தை நாம் கேட்கவேண்டும். ஏனெனில் வேதவாக்கியம் நமக்காகவே உரைக்கப்பட்டிருக்கிறது. தேவனே இதை நமக்கு உரைத்திருக்கிறார். 


வருங்கால வாழ்க்கையைக் குறித்து மோசேயின் பிரமாணத்தில் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைவிட, பிற்காலத்து தீர்க்கதரிசிகள் மூலமாக அதிகமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. உயிர்த்தெழுதலின் சத்தியத்தை குறித்து மோசேயின் பிரமாணத்தில் ஒன்றும் கூறப்படவில்லை. அக்காலத்து ஜனங்களுக்கு உயிர்த்தெழுதலின் சத்தியம் விநோதமாக இருந்திருக்கும். அவர்களுக்கு தேவையான சத்தியங்களை தேவன் அக்காலத்தில் மோசேயின் மூலமாக அவர்களுக்கு வெளிப்படுத்தினார். 


நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோ மோசேயின் பிரமாணத்திலும் உயிர்த்தெழுதலைப்பற்றிய சத்தியம் எழுதப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறார். வேதத்தில் தேவரகசியங்கள் பொக்கிஷங்களைப்போல புதைந்திருக்கிறது. ஒரு பொக்கிஷத்தை  தோண்டி எடுப்பதுபோல நாமும் வேதவாக்கியங்களிலிருந்து தேவ ரகசியத்தை தோண்டியெடுக்கவேண்டும்.


""நான் ஆபிரகாமின் தேவனாயிருக்கிறேன்'' என்று தேவன் கூறியிருக்கிறார். உயிர்த்தெழுதல் உண்டு என்பதை இந்த வேதவாக்கியம்  உறுதிபண்ணுகிறது. வேதவாக்கியத்திற்கு சரியான வியாக்கியானம் கொடுத்தால் தேவரகசியங்களெல்லாம் வெளிப்படும். உயிர்த்தெழுதல் உண்டு என்பது சந்தேகம் இல்லாமல் நிரூபிக்கப்படும். 


நாம் மரித்த பின்பு நமக்கு மற்றொரு ஜீவன் உண்டு. ""நான் ஆபிரகாமின் தேவனாயிருக்கிறேன்'' என்று தேவன் கூறியதிலிருந்து உயிர்த்தெழுதலின் சத்தியம் நிரூபிக்கப்படுகிறது. இஸ்ரவேலின் தேவனாக இருக்கிறவர் இஸ்ரவேலுக்கும் தேவனாக இருக்கிறார். அவர்களுக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தருகிறார். அவர்களுக்கு போதுமானவராக இருக்கிறார். பூரண நன்மையைத் தருகிறவராக இருக்கிறார். நித்திய மகிமையைத் தருகிறார். நமது தேவன் நித்திய தேவன். அவர் நித்திய உடன்படிக்கை பண்ணுகிறவர். நித்தியமாக இருப்பவர்களிடம் மாத்திரமே நித்திய உடன்படிக்கை பண்ணமுடியும். 


தேவன் நல்லோரோடு மாத்திரமே உடன்படிக்கை பண்ணுவார். ஆபிரகாம் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் அதிக நன்மையான ஆசீர்வாதங்கள் எதையும் அனுபவிக்கவில்லை. இவரைப்போலவே ஈசாக்கும், யாக்கோபும் இந்த பூமியில் வாழ்ந்தபோது நன்மையான ஆசீர்வாதங்களை அதிகமாக பெற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் அந்நியர்களைப்போலவும், பரதேசிகளைப்போலவும் இருந்தார்கள். இவர்களுக்கென்று தேசத்தில் சொந்தமாக ஒரு  அடி நிலம்கூட இல்லை. இவர்களை அடக்கம்பண்ணுவதற்கு கல்லறை பூமி மாத்திரமே இவர்களுக்கு இருந்தது. தேவன் இவர்களை ஆசீர்வதிப்பதாக வாக்குப்பண்ணினார். இந்த ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள். இந்த ஜீவியத்தில் இல்லையென்றாலும், வரப்போகின்ற ஜீவியத்தில் தேவஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளவோம் என்று நம்பிக்கையோடு ஜீவித்து மரித்தார்கள். 


இந்த பூமியில் நம்முடைய முற்பிதாக்கள் வாழ்ந்த போது அவர்களை சுற்றிலுமிருந்த ஜனங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு அந்நியர்களாக இருந்தார்கள். ஆயினும் இவர்களுக்கும் புறஜாதி ஜனங்களுக்கும் இந்த பூமியில் ஒரு வித்தியாசம் உண்டாயிருந்தது. தேவன் தம்முடைய வாக்குத்தத்தை தமது காணியாட்சிக்கு உட்பட்டிருந்த தம்முடைய பிள்ளைகளோடு மாத்திரமே உறுதிபண்ணியிருந்தார். புறஜாதி ஜனங்களோ தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு அந்நியர்களாக இருந்தார்கள். 


தேவன் ஆபிரகாமையும், ஈசாக்கையும் யாக்கோபையும் நித்திய காலமாக ஆசீர்வதிப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். இவர்களை தேவன் ஆசீர்வதிக்க வேண்டுமென்றால் அவர் நித்திய காலமாக ஜீவிக்கவேண்டும். நமது தேவன் நித்தியமானவர். அதே சமயத்தில் நமது முற்பிதாக்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை நித்திய காலமாக பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவர்களும் நித்திய காலமாக ஜீவிக்கவேண்டும். தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பிரகாரமாக ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும், மரித்து உயிர்த்தெழுந்து, இப்போது நித்திய காலமாக ஜீவிக்கிறார்கள். தேவனுடைய நித்திய ஆசீர்வாதங்களை பெற்று அனுபவிக்கிறார்கள்.  


நமது மரணத்தின்போது சரீரம் மரித்துப்போகிறது. ஆத்துமா மரிப்பதில்லை.  அது நித்திய காலமாக ஜீவிக்கும். மரித்த பின்பு நாம் உயிர்த்தெழுவோம். அப்போது நமது ஆத்துமாவும், நமது சரீரமும் மறுபடியும் இணைக்கப்படும். ""நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன்'' என்று தேவன் மோசேயிடம் எறிகிற முட்செடிக்கருகில் கூறினார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய முற்பிதாக்கள் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, பல வருஷங்களுக்கு பின்பு, தேவன் இந்த வார்த்தையை மோசேயிடம் கூறுகிறார். ""நான் ஆபிரகாமின் தேவனாக இருந்தேன்'' என்றோ, அல்லது ""நான் ஆபிரகாமின் தேவனாக இருந்திருக்கிறேன்'' என்றோ தேவன் கூறவில்லை. ""நான் ஆபிரகாமின் தேவனாயிருக்கிறேன்'' என்று நிகழ்கால வினைச்சொல்லை பயன்படுத்தி தேவன் கூறுகிறார். 


தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார். நம்முடைய ஆத்துமா மரித்துப்போகாமல் நித்திய காலமாக ஜீவிக்கும் என்பதை இந்த வாக்கியம் உறுதிபண்ணுகிறது. நமது சரீரம் மரித்தபின்பு மறுபடியும் உயிர்த்தெழும் என்னும் கருத்து இந்த வாக்கியத்தின் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. 


""நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன்''  என்னும் வாக்கியத்தை இயேசுகிறிஸ்து சொல்லுகிறார். யாத் 3:6,16 ஆகிய வசனங்கள் இங்கு மேற்கோளாகக் கூறப்பட்டிருக்கிறது. மோசேயின் ஆகமங்கள் மட்டுமே வேதவாக்கியம் என்று சதுசேயர் கூறுகிறார்கள். இயேசு கிறிஸ்து தமது தேவத்துவத்தை உறுதிபண்ணுவதற்காக இந்த வாக்கியத்தைப் பயன்படுத்துகிறார். 

ஆச்சரியப்பட்டார்கள்

ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள் (மத் 22:33).


உயிர்த்தெழுதலைப்பற்றி இயேசுகிறிஸ்துவின் விளக்கத்தைக் கேட்ட  பின்பு சதுசேயர்களால் வேறொன்றும் பேசமுடியவில்லை. இயேசுகிறிஸ்துவின் போதகத்தை அங்கு கூடியிருக்கும் ஜனங்கள் கேள்விப்பட்டு ஆச்சரியப்படுகிறார்கள். ஏனெனில் உயிர்த்தெழுதலைப்பற்றிய உபதேசம் இவர்களுக்கு புதிது. வேதபாரகரால் வேதவாக்கியத்திலிருந்து இயேசுகிறிஸ்துவைப்போல தெளிவாக சத்தியங்களை எடுத்துரைக்க முடியவில்லை. 


இயேசுகிறிஸ்துவின் போதகத்தில் நன்மையும் ஆசீர்வாதமும் நிறைந்திருக்கிறது. சத்தியம் பிரதிபலிக்கிறது. ஆகையினால் இந்த சத்தியத்தைக் கேட்டு ஜனங்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த நல்ல சத்தியத்தை சதுசேயர்கள் எதிர்த்து நிற்கிறார்களே என்று நினைத்தும்,  ஜனங்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.