பாடுகளின் வாரம்: செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 2(3)
திராட்சத்தோட்டத்தைப்பற்றிய உவமை
வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வே-யடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான். கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான் (மத் 21:33,34).
தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள் (மத் 21:35,36).
கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்-, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக் கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்-க்கொண்டு; அவனைப் பிடித்துத் திராட்சத் தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள் (மத் 21:37-39).
அப்படியிருக்க, திராட்சத் தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரை என்ன செய்வான் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: அந்தக் கொடியைரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள் (மத் 21:40,41).
இயேசு அவர்களை நோக்கி: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தி-ருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத்தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். இந்தக் கல்-ன்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 21:42-44).
பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக் குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள் (மத் 21:45,46).
வீட்டெஜமான்
வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வே-யடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான் (மத் 21:33).
யூதமார்க்கத்தாருடைய பாவங்களையும், அவர்களுடைய அழிவையும் இயேசுகிறிஸ்து இந்த உவமையின் மூலமாக தெளிவாக விளக்குகிறார். இந்த உலகத்தில் இயேசுகிறிஸ்து தமக்காக சபையை ஸ்தாபித்திருக்கிறார். இந்த பூமியில் தேவனுடைய ராஜ்யம் ஒரு திராட்சத்தோட்டத்திற்கு ஒப்பிட்டுக் கூறப்பட்டிருக்கிறது. இந்த தோட்டம் வேலி அடைக்கப்பட்டிருக்கிறது. இந்த தோட்டத்தின் பாதுகாப்பிற்கும், பராமரிப்பிற்கும், முன்னேற்றத்திற்கும், ஆசீர்வாதத்திற்கும் தேவையான அனைத்தும் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது.
வீட்டெஜமான் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கியிருக்கிறான். இதைப்போல கர்த்தர் சபையை உண்டாக்கியிருக்கிறார். இந்த பூமியில் இயற்கையாக முள்ளும் களைகளுமே முளைக்கும். திராட்சச்செடிகள் தானாக முளைக்காது. திராட்சச்செடிகளை நாம்தான் நட்ட வேண்டும்.
வீட்டெஜமான் திராட்சத்தோட்டத்தைச் சுற்றிலும் வேலியடைத்திருக்கிறார். இந்த பூமியில் தேவனுடைய சபை அவருடைய விசேஷித்த பாதுகாப்பின் கீழ் உள்ளது. தேவன் தமது சபையை சுற்றிலும் வேலியடைத்து பாதுகாத்து பராமரிக்கிறார். திராட்சத்தோட்டத்திலுள்ள திராட்சச்செடிகளை வீட்டெஜமான் கவனிப்பார் இல்லாமல் ஏனோதானோவென்று விட்டுவிடமாட்டார். திராட்சச்செடிகளை யெல்லாம் ஒன்று சேர்த்து, அதை பாதுகாப்பதற்காக அதை சுற்றிலும் வேலியடைப்பார். அதுபோலவே கர்த்தரும் தமது சபையை கவனிக்காமல் விட்டுவிடமாட்டார். அதை வேலியடைத்து பாதுகாத்து பராமரிப்பார்.
வீட்டெஜமான் தன்னுடைய திராட்சத்தோட்டத்தில் ஒரு ஆலையை நாட்டி கோபுரத்தையும் கட்டுகிறான். தேவன் தமது சபையில் நியதிகளையும், ஒழுங்குகளையும், சட்டதிட்டங்களையும் ஸ்தாபித்திருக்கிறார். சபையை கவனிப்பதற்காகவும், அதன் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காகவும் தேவன் சபையில் ஒழுங்குகளை நியமித்திருக்கிறார். சபையானது ஒழுங்காக கவனிப்பட்டு வந்தால் அது அதிகமாக கனிதரும். திராட்சத்தோட்டத்தில் கோபுரத்தின்மீது ஏறிநின்று அந்த தோட்டம் முழுவதையும் பார்த்து பராமரிக்க முடியும்.
தேவன் தம்முடைய சபையை யூதஜனத்தாரிடம் பொறுப்பாக ஒப்படைத்திருக்கிறார். வீட்டெஜமான் தன் திராட்சத்தோட்டத்தை தோட்டக்காரருக்கு குத்தகையாக விட்டிருப்பதுபோல, தேவன் தமது சபையை யூதஜனத்தாரிடம் ஒப்படைத்திருக்கிறார். யூதஜனங்கள் தோட்டக்காரரைப்போல இருக்கிறார்கள். தேவன் இவர்களிடம் கணக்கு கேட்பார். இவர்கள் தேவனை மகிமைப்படுத்த வேண்டியவர்கள்.
வீட்டெஜமானும் தோட்டக்காரருக்கு தன் திராட்சத்தோட்டத்தை குத்தகையாக விட்டபின்பு, புறதேசத்திற்கு போய்விடுகிறார். தேவனும் சீனாய் மலையில் தம்முடைய சபையை யூதர்கள் கையில் ஒப்படைத்துவிட்டு, வானத்திற்கு பரமேறிப்போயிருக்கிறார். இயேசு இந்த பூமியிலிருந்தபோது தம்முடைய ஜனங்களை நேரடியாக பிரத்தியட்சமாக கவனித்ததுபோல இப்போது அவர் கவனிப்பதில்லை. தற்போது தம்முடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய வேதாகமத்தின் மூலமாக சபையை ஆளுகை செய்கிறார்.
குத்தகைக்கு விடுவது மூன்று வகைப்படும். அவையாவன:
1. வேலையாட்களுக்கு விளைச்சலில் ஒரு பகுதி கொடுக்கப்படும்.
2. வேலையாட்களுக்கு சம்பளம் பணமாகக் கொடுக்கப்படும்.
3. எஜமானுக்கு விளைச்சலில் ஒரு பகுதி பொருளாகவோ அல்லது பணமாகவோ கொடுக்கப்படும்.
குத்தகை ஒவ்வொரு வருஷமும் விடப்படலாம். சில குத்தகை ஆயுட்காலத்திற்கும் உரியது. சில குத்தகை பரம்பரை பரம்பரையாகத் தொடரும். இந்த வசனங்களில் கூறப்பட்டிருக்கிற குத்தகையானது பரம்பரையாகத் தொடர்ந்து வருகிறது.
ஊழியக்காரன்
கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான் (மத் 21:34).
வீட்டெஜமான் தோட்டக்காரரிடமிருந்து குத்தகையை எதிர்பார்க்கிறார். இது நியாயமான எதிர்பார்ப்பு. வீட்டெஜமான் தோட்டக்காரரிடமிருந்து குத்தகையை உடனடியாக அவசரப்பட்டு கேட்கவில்லை. கனி காலம் சமீபித்தபோதுதான் குத்தகையை எதிர்பார்க்கிறார். தேவனும் இதுபோலவே கிருபையோடு காத்திருக்கிறார். ஏற்றவேளை வரும்போது நம்மிடம் கனியை எதிர்பார்க்கிறார்.
கனிகாலம் சமீபிக்கும்போது வீட்டெஜமான் தன் ஊழியக்காரரை தோட்டக்காரரிடத்தில் அனுப்புகிறார். தான் உண்டாக்கிய திராட்சத்தோட்டத்திலிருந்து அதின் கனிகளை வாங்கிக்கொண்டு வரும்படி அனுப்புகிறார். இந்த ஊழியக்காரர்கள் தோட்டக்காரரிடம் சென்று அவர்களுடைய கடமைகளை நினைவுபடுத்துவார்கள். கனிகளை சேகரிப்பதற்கு உதவிபுரிகிறார்கள். வீட்டெஜமானுக்குரிய கனிகளை தோட்டக்காரரிடமிருந்து வாங்கி வருகிறார்கள்.
ஊழியக்காரர்களுடைய வேலை கடினமானதல்ல. இவர்கள் தோட்டத்தின் கனிகளை தோட்டக்காரர்களிடத்தில் வாங்கிவரவேண்டும். தோட்டத்தில் விளையாத கனிகளை தோட்டக்காரரால் கொடுக்க முடியாது. அவர்களால் முடியாததை ஊழியக்காரர் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது. வேறு தோட்டத்திலிருந்து கனிகளை சேகரித்துக் கொடுக்குமாறு ஊழியக்காரர் அவர்களை வற்புறுத்தக்கூடாது. தன் எஜமான் உண்டாக்கிய திராட்சத்தோட்டத்திலிருந்துதான் கனிகளை வாங்கிவரவேண்டும்.
தேவனும் தம்முடைய சபையிலிருந்து பெரிய காரியங்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதிகமான பக்தியையோ, அதிகமான கட்டுப்பாடுகளையோ தேவன் சபையிலிருந்து ஒருபோதும் எதிர்பார்க்கமாட்டார். தாம் சபைக்கு கொடுத்திருக்கும் பிரமாணங்களுக்கும், நீதிகளுக்கும் அவர்கள் கட்டுப்படவேண்டும் என்று மாத்திரமே தேவன் எதிர்பார்க்கிறார்.
தோட்டக்காரர்
தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள் (மத் 21:35,36).
தோட்டக்காரர்கள் நியாயமில்லாமல் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள். வீட்டெஜமான் அனுப்பிய ஊழியக்காரனை தோட்டக்காரர்கள் அடித்து கொன்றுபோடுகிறார்கள். இவர்களைப்போலவே யூதஜனங்களும் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடாமலும், கீழ்ப்படியாமலும் இருக்கிறார்கள். தேவனுடைய உண்மையுள்ள ஊழியக்காரர்களில் பலரை யூதஜனங்கள் கொன்று போட்டிருக்கிறார்கள். அவர்களை அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவுக்காக ஒருவன் பக்தியாக ஜீவித்தால் அவனை யூதர்கள் துன்புறுத்துகிறார்கள்.
துன்புறுத்துகிறவர்களும் அந்நியர்களல்ல. வீட்டெஜமானால் திராட்சத்தோட்டத்தை பராமரிக்குமாறு நியமிக்கப்பட்ட தோட்டக்காரர்கள்தான். தேவனால் நியமிக்கப்பட்ட தோட்டக்காரர்கள், தேவன் அனுப்பிய ஊழியக்காரரை துன்புறுத்துகிறார்கள்.
வீட்டெஜமான் வேறே ஊழியக்காரரை தோட்டக்காரரிடத்தில் அனுப்புகிறார். முந்தினவர்களிலும் அதிகமானவர்களை அனுப்புகிறார். ஆனால் தோட்டக்காரர்களோ எல்லா ஊழியக்காரர்களையும் அடித்து, கொலை செய்து விடுகிறார்கள். தேவனும் யூதஜனத்தின்மீது மிகவும் பொறுமையாக இருந்து தம்முடைய ஊழியக்காரரில் பலரை அவர்களிடத்தில் அனுப்பியிருக்கிறார். அவர்கள் எல்லோரையுமே யூதர்கள் துன்புறுத்துகிறார்கள். அவர்கள் எல்லோருக்குமே அப்படியே செய்கிறார்கள். ஒருவன் ஒருமுறை பாவம் செய்தால் அவன் திரும்ப திரும்ப அதே பாவத்தை செய்வான். அந்த பாவத்தை செய்வதில் பழகிப்போவான். அதைப்போலவே யூதர்களும் தேவனுடைய ஊழியக்காரர்களை துன்புறுத்துவதை தங்களுடைய பழக்கமாக்கிக் கொள்கிறார்கள்.
குமாரன்
கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்-, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான் (மத் 21:37).
வீட்டெஜமான் தோட்டக்காரரிடத்தில் இன்னும் அன்பாகவே இருக்கிறார். அவர்களை உடனே தண்டித்துவிடாமல் அவர்கள்மீது பொறுமையாக இருக்கிறார். எல்லா ஊழியக்காரர்களையும் தோட்டக்காரர்கள் கொன்றுபோட்ட போதிலும், வீட்டெஜமான் தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்புகிறார். தேவனும் வீட்டெஜமானைப்போலவே தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை யூதஜனங்கள் மத்தியில் அனுப்பியிருக்கிறார். யூதர்கள் தம்முடைய ஊழியர்களுக்கு இதுவரையிலும் அநியாயம் செய்தாலும், தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு அவர்கள் அஞ்சுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்.
தம்முடைய குமாரனை அனுப்புவதன் மூலமாக பிதாவாகிய தேவன் தமது கிருபையை வெளிப்படுத்துகிறார். குமாரனை அனுப்புவதே பிதா யூதஜனங்களுக்கு கொடுக்கும் கடைசி சந்தர்ப்பம். கடைசியில்தான் பிதா தமது குமாரனை அனுப்புகிறார். குமாரனுக்கு அவர்கள் தம் பிதா அஞ்சுவார்கள் என்று எதிர்பார்க்கிறார். அவர்கள் குமாரனுக்கு அஞ்சி, திராட்சத்தோட்டத்தின் கனிகளை அவரிடத்தில் கொடுத்து அனுப்பினால், தோட்டக்காரருக்கு தண்டனை கிடைக்காது. அவர்கள் இதுவரையிலும் செய்த தப்பிதங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். ஊழியக்காரர்களைவிட குமாரனுக்கு அதிக அதிகாரமுள்ளது. அந்த அதிகாரத்தோடு குமாரன் திராட்சத்தோட்டத்திற்கு வருகிறார்.
சுதந்தரவாளி
தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக் கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்-க்கொண்டு; அவனைப் பிடித்துத் திராட்சத் தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள் (மத் 21:38,39).
தோட்டக்காரர்கள் குமாரனை காண்கிறார்கள். குமாரன் சுதந்தரவாளி என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். குமாரனை கொன்றுபோட்டால் அவருடைய சுதந்தரத்தை கட்டிக்கொள்ளலாம் என்று சிந்திக்கிறார்கள். குமாரனுடைய சுதந்தரத்தையே தாங்கள் அபகரித்துக்கொள்ளலாம் என்பது இவர்களுடைய எண்ணம்.
பிலாத்துவுக்கும், ஏரோது ராஜாவுக்கும் இயேசுகிறிஸ்துவைப்பற்றி சரியாக தெரியாது. இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதும், அவரே சுதந்தரவாளி என்பதும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால் பிரதான ஆசாரியருக்கும், ஜனத்தின் மூப்பருக்கும் இயேசுகிறிஸ்துவே சுதந்தரவாளி என்பது நன்றாக தெரியும். ஆகையினால் அவர்கள் இயேசுவைக் கொன்றுபோட்டு அவருடைய சுதந்தரத்தை கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று யூதமார்க்கத்தலைவர்களை அழைக்கிறார்கள்.
இக்காலத்தில் ஏராளமான கொலைகள் நடைபெறுகின்றன. பொதுவாக ஒருவரிடமுள்ள பொருளை கொள்ளையிடுவதற்காகவே கொலை நடைபெறுகிறது. இயேசுகிறிஸ்துவிடமுள்ள தெய்வீக அதிகாரத்தை பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இச்சிக்கிறார்கள். அவரை விரோதிக்கிறார்கள். ஜனங்கள்மீது இயேசுகிறிஸ்துவுக்கு இருந்த நெருக்கத்தையும், ஐக்கியத்தையும், பிரபல்யத்தையும் நினைத்து யூதமார்க்கத் தலைவர்கள் இயேசுவின்மீது பொறாமைப்படுகிறார்கள்.
ஆகையினால் ""இவரை கொன்றுபோட்டு, இவர் சுதந்தரத்தை கட்டிக்கொள்வோம் வாருங்கள்'' என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொள்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை அழித்துப்போட்டால் அவருடைய மகிமையெல்லாம் தங்களுக்கே வரும் என்று இவர்கள் தப்புக்கணக்குப் போடுகிறார்கள். தங்கள் எண்ணப்பிரகாரமாகவே இயேசுகிறிஸ்துவை கல்வாரி சிலுவையில் கொலைபண்ணுகிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தமது சிலுவை மரணத்தின் மூலமாக மகிமையடைகிறார்.
தோட்டக்காரர்கள் குமாரனைப் பிடித்து திராட்சத்தோட்டத்திற்கு புறம்பே தள்ளி கொலைசெய்கிறார்கள். குமாரன் இந்த பூமியில் இனிமேல் ஜீவிப்பதற்கு தகுதியற்றவர் என்று இவர்கள் நினைக்கிறார்கள். இந்த பூமியில் குமாரன் தொடர்ந்து ஜீவிப்பதை இவர்கள் விரும்பவில்லை. ஆகையினால் இவர்கள் குமாரனை திராட்சத்தோட்டத்திற்கு புறம்பே தள்ளுகிறார்கள். திராட்சத்தோட்டம் என்பது பரிசுத்த நகரத்திற்கு அடையாளமாகும். இயேசுகிறிஸ்துவையும் நகரத்திற்கு புறம்பே சிலுவையில் அறைந்து கொன்றார்கள் (எபி 13:12). இஸ்ரவேல் ஜனத்தாருக்கு மகிமையாக இருக்கிறவரை, தங்களுக்கு நிந்தையானவர் என்றும், அவமானமானவர் என்று நினைத்து அவரை கொலைசெய்கிறார்கள்.
திராட்சத்தோட்டத்தின் எஜமான்
அப்படியிருக்க, திராட்சத் தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரை என்ன செய்வான் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: அந்தக் கொடியைரைக் கொடுமையாய் அழித்து, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள் (மத் 21:40,41).
இயேசுகிறிஸ்து திராட்சத்தோட்டத்தைப் பற்றிய உவமையை பிரதான ஆசாரியரிடத்திலும் ஜனத்தின் மூப்பரிடத்திலும் கூறுகிறார். இந்த உவமையை கூறும்போது இயேசு அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார். ""அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்த தோட்டக்காரரை என்ன செய்வான்'' என்பது இயேசுகிறிஸ்துவின் கேள்வியாகும். தங்களுக்கு வரவேண்டிய தண்டனையை தாங்களே கூறும் அளவிற்கு இயேசுகிறிஸ்து அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறார். தங்கள்மீது வரும் நியாயத்தீர்ப்பை பாவிகளே அறிவிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் கேள்விக்கு ""அந்தக் கொடியரை கொடுமையாய் அழிப்பார்'' என்று பதில் கூறுகிறார்கள். இவர்களைப்போலவே நம்மில் பலர் மற்றவர்களுடைய தவறுகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று எளிதாக கூறிவிடுகிறோம். அதேவேளையில் நாம் செய்த தவறுகளையோ, நமக்கு கொடுக்கப்படவேண்டிய தண்டனைகளையோ நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
இயேசுகிறிஸ்து திராட்சத்தோட்டத்தைப் பற்றி உவமையாக கூறும்போது ""திராட்சத்தோட்டத்தின் எஜமான் வருவார்'' என்று முன்னறிவிக்கிறார். இந்த பூமியை நியாயந்தீர்க்க இயேசுகிறிஸ்து வருவார். அவர் தாமதம் பண்ணுவதினால் இனிமேல் அவர் வரமாட்டார் என்று துன்மார்க்கர் இறுமாப்பாய் இருக்கிறார்கள். நாம் மனந்திரும்பவேண்டும் என்பதற்காகவே அவர் தமது வருகையை தாமதப்படுத்துகிறார். தாமத்திக்கிறவர் வராமல் போய்விடமாட்டார். நிச்சயம் வருவார்.
திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது தம்முடைய குமாரனை கொன்றுபோட்ட அந்த கொடியரை கொடுமையாய் அழிப்பார். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. நாம் செய்த தவறை யாரும் காணவில்லை, ஆகையினால் நமது தவறுகளை மூடி மறைத்துவிடலாம் என்று யாரும் தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது.
இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைவதற்கு யூதர்கள் காரணமாக இருந்தார்கள். இயேசுகிறிஸ்துவின் இரத்தப்பழி தங்கள்மீதும், தங்கள் பிள்ளைகள் மீதும் வரட்டும் என்று ஆணவமாக கூறினார்கள். தங்களுக்கு ஒரு தீங்கும் வராது என்று இறுமாப்பாய் இருந்தார்கள். ஆனால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு யூதர்கள்மீது தாமதமில்லாமல் வந்தது. ரோமர்கள் மூலமாக யூதருக்கு அழிவு உண்டாயிற்று.
திராட்சத்தோட்டத்து எஜமான் கொடியரை கொடுமையாய் அழிப்பார். அதன்பின்பு ஏற்ற காலங்களில் தனக்கு கனிகளை கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தை குத்தகையாக கொடுப்பார். தேவன் தமது சபையை இந்த உலகத்தில் ஸ்தாபித்திருக்கிறார். அவிசுவாசிகளும் துன்மார்க்கரும் தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதில்லை. தேவனுக்கு மகிமை செலுத்துவதில்லை. இப்படிப்பட்ட துன்மார்க்கர்கள் சபைப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, கிறிஸ்துவுக்கு உக்கிராணத்துவ ஊழியம் செய்கிறவர்களிடத்தில் தேவன் ஊழியப் பொறுப்புக்களை ஒப்புக்கொடுப்பார்.
இவர்கள் கூறிய பதில் இந்த உவமையை அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டார்கள் என்பதைக் காண்பிக்கிறது. தேவன் இந்தப் பூமிக்குத் தம்முடைய ஊழியக்காரர்களில் பலரை அனுப்பினார். யூதர்கள் அவர்களைக் கொன்றுபோட்டார்கள். கடைசியாகத் தேவன் தமது ஒரேபேறான இயேசு கிறிஸ்துவையே அனுப்பினார். இந்த உவமையின் பிரகாரம் அவர்கள் இயேசு கிறிஸ்துவையும் கொன்று போடுவார்கள் என்பது தெரியவருகிறது. வீட்டெஜமான் தோட்டக்காரரை அழித்துப் போடுவார். அதோடு ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பார். (மத் 21:42-46)
மூலைக்கு தலைக்கல்
இயேசு அவர்களை நோக்கி: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தி-ருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத்தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். இந்தக் கல்-ன்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (மத் 21:42-44).
இயேசுகிறிஸ்து திராட்சத்தோட்டத்தைப் பற்றிய உவமையை கூறி அதற்கு வியாக்கியானமும் கூறுகிறார். தம்மைப்பற்றி வேதத்தில் எழுதப்பட்டிருக்கும் சத்தியத்தை ""நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா'' என்று பிரதான ஆசாரியரிடமும் ஜனத்தின் மூப்பரிடமும் இயேசுகிறிஸ்து கேட்கிறார். சங்கீதம் 118:22,23-ஆவது வசனங்களை இயேசுகிறிஸ்து இங்கு மேற்கோளாக கூறுகிறார். இயேசுகிறிஸ்துவை சுற்றியிருக்கும் ஜனங்களும் இதே சங்கீதப்பகுதியை பயன்படுத்தி ""தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தரின் நாமத்தினாலே வருகிறார் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா'' என்று சொல்லி ஆர்ப்பரிக்கிறார்கள். இந்த சங்கீதம் இயேசுகிறிஸ்துவின் சிநேகிதர்களுக்கும், அவரை பின்பற்றுகிறவர்களுக்கும் ஆறுதலாக இருக்கிறது. கர்த்தரை துதிப்பதற்காக இந்த சங்கீதத்தை பயன்படுத்துகிறார்கள். கர்த்தருடைய சத்துருக்களுக்கு அவர்களுடைய தவற்றை உணர்த்துவதற்கும், அவர்களுக்கு நியாயத்தீர்ப்பை கொடுப்பதற்கும் இந்த சங்கீதப்பகுதி பயன்படுத்தப்படுகிறது. கர்த்தருடைய வார்த்தை இருபுறமும் கருக்குள்ள பட்டயம். இது தேவனுடைய பிள்ளைகளுக்கு ஆசீர்வாதத்தையும் ஆறுதலையும் கொடுக்கிறது. தேவனுடைய சத்துருக்களுக்கோ எச்சரிப்பையும் நியாயத்தீர்ப்பையும் கொடுக்கிறது.
தோட்டக்காரர்கள் குமாரனை திராட்சத்தோட்டத்திற்கு புறம்பே தள்ளி கொலை செய்துவிடுகிறார்கள். அதுபோலவே வீடுகட்டுகிறவர்களும் ஒரு கல்லை ஆகாதது என்று தள்ளிவிடுகிறார்கள். அவர்கள் ஆகாததென்று தள்ளின கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று. தங்களுடைய ஆலயத்தில் அவர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு எந்த ஒரு ஸ்தானத்தையும் கொடுப்பதற்கு அனுமதிக்கவில்லை. அவரை ஆலயத்தைவிட்டு வெளியேற்றிவிடுகிறார்கள். உடைந்த பாத்திரத்தைப்போல அவரை தூக்கி எரிந்துவிடுகிறார்கள். கட்டடம் கட்டுவதற்கு ஆகாததென்று தள்ளப்படும் கல் பாதையிலே தள்ளியெறியப்படும். பின்பு அந்தக் கல்லே பலரும் இடறி விழுவதற்கு ஏதுவான கல்லாகி விடும்.
வீடு கட்டுகிறவர்கள் ஆகாததென்று தள்ளின கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று. திராட்சத்தோட்டத்து எஜமான் தன் குமாரனை கொலைசெய்த கொடியரை கொடுமையாய் அழித்து தன் திராட்சத்தோட்டத்தின் பொறுப்பை வேறே தோட்டக்காரரிடத்தில் கொடுப்பார். யூதர்கள் இயேசுகிறிஸ்துவை தேவகுமாரனாக அங்கீகரியாமல் அவரை புறக்கணித்துவிட்டார்கள். புறஜாதியாரோ அவரை தங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறார்கள். கிறிஸ்து எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்கிறார்.
வீடு கட்டுகிறவர்கள் ஆகாததென்று தள்ளின கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று அது கர்த்தராலே ஆயிற்று. இது கர்த்தருடைய கிரியை. இது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவை துன்மார்க்கமான யூதர்கள் புறக்கணித்தது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுபோலவே புறஜாதியார் இயேசுகிறிஸ்துவை அங்கீகரித்து கனப்படுத்துவதும் நமக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. மனுஷரால் புறக்கணிப்பட்டவர் ராஜாக்களால் அங்கீகரிக்கப்படுகிறார். இது கர்த்தராலே ஆயிற்று.
இயேசுகிறிஸ்து திராட்சத்தோட்டத்தைப்பற்றிய உவமையைக் கூறும்போது, பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் தோட்டக்காரருக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டுமென்று தீர்மானிக்கிறார்கள். அதே தண்டனையை இயேசுகிறிஸ்து அவர்களுக்கே கொடுக்கிறார். இந்த தண்டனையில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று திராட்சத்தோட்டத்தின் எஜமான் தன் குமாரனை கொன்று போட்ட கொடியரை கொடுமையாய் அழிப்பார். மற்றொன்று, ஏற்றகாலங்களில் தனக்கு கனிகளை கொடுக்ககத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தை குத்தகையாக கொடுப்பார். இந்த இரண்டாவது பகுதியையே இயேசுகிறிஸ்து அவர்களுக்கு தண்டனையாக அறிவிக்கிறார்.
""தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளை தருகிற ஜனங்களுக்கு கொடுக்கப்படும்'' என்பது இயேசுகிறிஸ்து பிரதான ஆசாரியருக்கும் ஜனத்தின் மூப்பருக்கும் கொடுக்கும் தண்டனையாகும். புத்திரசுவீகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவ ஆராதனையும், வாக்குத்தத்தங்களும் நீண்டகாலமாக யூதருடையதாகவே இருந்து வந்திருக்கிறது (ரோம 9:4). இந்த உலகத்தில் தேவனுடைய பரிசுத்த நாமத்தை தாங்கும் சிலாக்கியம் யூதர்களிடமே இருந்தது. தேவன் தமது மகிமையையும் தமது ஆள்தத்துவத்தையும் யூதருக்கே முதலாவதாக வெளிப்படுத்தினார். ஆனால் அந்த நிலமை இப்போது மாறிவிட்டது. யூதர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சிலாக்கியங்களை காத்துக்கொள்ள தவறிவிட்டார்கள். ஆவிக்குரிய காரியங்களில் கனியற்றவர்களாக இருக்கிறார்கள். தங்களுடைய சிலாக்கியங்களை சரியாக பயன்படுத்தாமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள். ஆகையினால் தேவனுடைய கோபம் இவர்கள்மீது இறங்கி வந்திருக்கிறது.
இயேசுகிறிஸ்து புறஜாதியாரை அங்கீகரிக்கிறார். தம்முடைய காணியாட்சிக்கு புறம்பாக இருந்தவர்களை இப்போது தம்முடைய ராஜ்யத்திற்குள் அழைத்துவருகிறார். தேவனுடைய திராட்சத்தோட்டத்தில் ஒரு திராட்சச்செடி பிடுங்கப்பட்டால், வேறொரு இடத்தில் மற்றொரு செடி நாட்டப்படும். இஸ்ரவேலின் வீழ்ச்சி புறஜாதியாருக்கு ஆசீர்வாதமாயிற்று. யூதர்கள் இதுவரையிலும் கனிகொடுத்ததைவிட புறஜாதியார்கள் இப்போது நற்கனிகளை தாராளமாக கொடுக்கிறார்கள். இந்த மாற்றம் உண்டாகும்போது இதனால் தேவனுக்கு இழப்பு இல்லை. யூதருக்கே இழப்பு உண்டாயிற்று.
இயேசுகிறிஸ்து மூலைக்கு தலைக்கல்லாக இருக்கிறார். இந்த கல்லின்மேல் விழுகிறவன் நெறுங்கிப்போவான். இது எவர்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும். இயேசுகிறிஸ்து இந்த பூமியில் தம்முடைய தாழ்மையில் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு சிலர் தங்களுடைய அறியாமையில் இந்த சத்தியத்தை புரிந்துகொள்ளாமல் இயேசுகிறிஸ்துவின்மீது இடறிவிழுகிறார்கள். வேறுசிலரோ தங்களுடைய ஆவிக்குரிய குருட்டுத்தன்மையினாலும், கவனக்குறைவினாலும் இந்தக் கல்லின்மீது விழுகிறார்கள். இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நெறுங்கிப்போவான் என்று வேதம் தெளிவாக சொல்கிறது.
பாவிகளுடைய அவிசுவாசமே அவர்களுக்கு அழிவைத்தரும். இயேசுகிறிஸ்து தமது மகிமையை வெளிப்படுத்தும்போது அது பாவிகளுக்கு இடறலாக இருக்கிறது. வீடு கட்டுகிறவர்கள் ஆகாததென்று தள்ளின கல் மூலைக்கு தலைக்கல்லாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது எவர்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும். மூலைக்கு தலைக்கல்லாக இருக்கும் கல்லை யாராவது ஒருவர் தங்கள் தலையின்மீது இழுத்துப்போட்டால், அது அவர்கள்மீது விழுந்து அவர்களை நசுக்கிப்போடும்.
கிறிஸ்துவின் ராஜ்யத்தை அழித்துப்போட வேண்டுமென்று ஒருசிலர் முயற்சி பண்ணுகிறார்கள். தேவ ராஜ்யத்தை அகற்றிப்போட வேண்டுமென்பது இவர்களுடைய நோக்கம். கிறிஸ்துவின் ராஜ்யம் இவர்களுக்கு பாரமான கல்லைப்போல இருக்கிறது. இந்த கல்லின்மேல் இவர்கள் விழுந்தாலும் நொறுங்கிப்போவார்கள். இந்தக் கல் இவர்கள்மீது விழுந்தாலும் இவர்கள் நசுங்கிப்போவார்கள். தேவனுடைய ராஜ்யத்திற்கு விரோதமாக நிற்கிறவர்கள் அழிந்து போவது நிச்சயம். ஆகையினால் தேவனுக்கு விரோதமாக நமது இருதயத்தை ஒருபோதும் கடினப்படுத்தக்கூடாது. தன் இருதயத்தை தேவனுக்கு விரோதமாக கடினப்படுத்துகிறவன் வாழ்வடையமாட்டான்.
இயேசு கிறிஸ்துவின் கிருபையின்மீது யாரெல்லாம் விழுகிறார்களோ அல்லது யாரெல்லாம் ஒப்புக்கொடுக்கிறார்களோ அவர்களுடைய இருதயம் நொருங்கிப்போகும். கடினமாக இராது. (சங் 34:18; சங் 51:17; சங் 147:3) இயேசு கிறிஸ்துவின் கிருபையையும், இரக்கத்தையும் மறுதலிக்கிறவர்கள் நசுங்கிப்போவார்கள். முழுவதுமாக அழிந்துபோவார்கள்.
பிரதான ஆசாரியரும் பரிசேயரும்
பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக் குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள் (மத் 21:45,46).
பிரதான ஆசாரியரின் மனச்சாட்சி குற்றமுள்ளதாக இருக்கிறது. தங்களுடைய நியாயத்தீர்ப்பை இவர்கள் தாங்களாகவே வெளிப்படுத்துகிறார்கள். இயேசுகிறிஸ்து கூறிய உவமைகளை இவர்கள் கேட்டு, இயேசு தங்களைக்குறித்துத்தான் சொல்லுகிறார் என்பதை அறிந்துகொள்கிறார்கள். குற்ற மனச்சாட்சி உள்ளவர்களை யாரும் குற்றப்படுத்த வேண்டியதில்லை. அவர்களை அவர்களுடைய மனச்சாட்சியே குத்தும்.
பிரதான ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவின்மீது கோபமடைந்து அவரை பிடிக்க வகைதேடுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் இவர்களுடைய இருதயங்களை தாக்குகிறது. இயேசுகிறிஸ்து தங்களைப்பற்றித் தான் பேசுகிறார் என்பதை இவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை பிடிப்பதற்கு இவர்கள் வகைதேடினாலும் இவர்களால் அவரை பிடிக்க முடியவில்லை.
இவர்கள் ஜனங்களுக்கு பயப்படுகிறார்கள். ஜனங்கள் இயேசுவை தீர்க்கதரிசி என்று எண்ணுகிறார்கள். ஜனங்களுடைய மதிப்புக்குரிய ஒருவரை இவர்கள் பிடித்தால், ஜனங்களுடைய கோபம் இவர்கள்மீது திரும்பும் என்பது இவர்களுக்குத் தெரியும். இயேசுகிறிஸ்து தம்முடைய சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் இவர்களால் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த முடியவில்லை.