பாடுகளின் வாரம்: செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 2(2)
இரண்டு குமாரரைப்பற்றிய உவமை
ஆயினும் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்; போகிறேன் ஐயா, என்று சொல்-யும், போகவில்லை (மத் 21:28-30).
இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார் (மத் 21:31,32).
பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசு கிறிஸ்துவின் கேள்விக்கு ""எங்களுக்குத் தெரியாது'' என்று பதில் கூறினார்கள். இவர்கள் பொய் சொன்னார்கள். ஆகையினால், இயேசு கிறிஸ்து இவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. யோவான் ஸ்நானனை இயேசுகிறிஸ்துவின் முன்னோடியாக ஏற்றுக் கொண்டால் இயேசு கிறிஸ்துவையும் மேசியாவாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் வரும். ஆகையினால் அவர்கள் இந்தப் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.
திராட்சத்தோட்டத்தில் வேலை செய்
ஆயினும் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான் (மத் 21:28).
இயேசுகிறிஸ்து தெய்வீக சத்தியங்களை உவமையின் மூலமாக தம்முடைய சீஷர்களுக்கு விளக்குகிறார். சில வேளைகளில் அவர்களை கடிந்து கொள்வதற்கும், சத்தியத்தை உறுதி பண்ணுவதற்கும், தெளிவாக விளங்கிக்கொள்வதற்கும் இயேசுகிறிஸ்து உவமைகளை பயன்படுத்துகிறார். இந்த உவமையை கூறும் முன்பாகவே இயேசு தம்முடைய சீஷர்களிடம் ""உங்களுக்கு எப்படி தோன்றுகிறது'' என்னும் கேள்வியோடு ஆரம்பிக்கிறார்.
இந்த உவமையில் இரண்டு குமாரர்கள் வருகிறார்கள். ஒருவன் தான் வாக்குப்பண்ணியதைவிட தன்னை நல்லவனாக நிரூபிக்கிறான். மற்றவன் தன்னை நிரூபிப்பதைவிட அதிகமாக வாக்குப்பண்ணுகிறான். இவர்கள் இருவருமே சகோதரர்கள் இவர்களுடைய தகப்பன் இவ்விரண்டு குமாரர்களுக்கும் ஒரேவிதமான வாய்ப்புக்களையும் ஆசீர்வாதங்களையும் கொடுத்து வருகிறார். இவ்விரண்டு குமாரருக்கும் குடும்பத்தில் ஒரேவிதமான கடமைகளே உள்ளன. ஆயினும் இவ்விரண்டு குமாரர்களுடைய சுபாவங்களிலும் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது.
தகப்பன் தன் மூத்த குமாரனிடத்தில் ""மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலை செய்'' என்று கூறுகிறார். தன்னுடைய சுதந்தரவாளியாக இருந்தாலும் தகப்பன் இவனுக்கு வேலை கொடுக்கிறான். இதுபோலவே நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருந்தாலும், அவருடைய ஆசீர்வாதங்களுக்கு சுதந்தரவாளிகளாக இருந்தாலும், தேவன் நமக்கும் ஊழியங்களை கொடுக்கிறார்.
தேவனுடைய ஊழியத்தை செய்வது திராட்சத்தோட்டத்தில் வேலை செய்வதைப் போன்றது. தேவனுக்கு கீழ்ப்படிந்து ஊழியம் செய்யும்போது நமக்கு ஆசீர்வாதமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். ஏதேன் தோட்டத்தில் பணிபுரிவதற்கு தேவன் ஆதாமை நியமித்தார். ஆதாமோ தேவனுக்கு விரோதமாக பாவம் செய்ததினால், ஏதேன் தோட்டத்து வேலையிலிருந்து ஆதாம் தள்ளப்பட்டார். இப்போதோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினால் அவருடைய திராட்சத்தோட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு நமக்கு மறுபடியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தேவனுடைய திராட்சத்தோட்டத்தில் சுவிசேஷ ஊழியம் செய்யவேண்டுமென்றால் முதலாவதாக நமக்கு கீழ்ப்படிதல் அவசியம். தகப்பன் மூத்த குமாரனை ""மகனே நீ போய் இன்றைக்கு வேலை செய்'' என்று கூறுகிறார். இதைப்போலவே தேவனும் நமக்கு இன்றைய தினத்தில் செய்யவேண்டிய ஊழியத்தை கட்டளையிடுகிறார். இந்த உலகத்தில் ஒரு வேலையும் செய்யாமல் சும்மாயிருப்பதற்காக தேவன் நம்மை தெரிந்தெடுக்கவில்லை. பகல் காலம் இருக்குமட்டும் விளையாடுவதற்காக தேவன் நம்மை எங்கும் அனுப்புவதில்லை.
தேவன் நம்மை தம்முடைய ஊழியத்திற்கு அழைக்கும்போது, தம்முடைய சொந்த பிள்ளைகளை அழைப்பதுபோல ""மகனே நீ போய் இன்றைக்கு வேலை செய்'' என்று அன்போடு கூறுகிறார். இது பிதாவின் கட்டளை. இந்தக் கட்டளையில் அன்பும் அதிகாரமும் கலந்திருக்கிறது. தமக்கு ஊழியம் செய்கிற குமாரன்மீது பிதாவானவர் பிரியமாக இருக்கிறார்.
மாட்டேன்
அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான் (மத் 21:29).
தகப்பன் தன் இரண்டு குமாரர்களுக்கும் ஒன்றுபோலவே கட்டளை கொடுக்கிறார். இந்தக் குமாரர்களின் மனப்பாங்கு வித்தியாசமாக இருக்கிறது. ஒருவன் வாக்குப்பண்ணியதைவிட தன் வேலையை நன்றாக செய்கிறான். மற்றொருவன் தான் செய்யும் வேலையைவிட நன்றாக வாக்குப்பண்ணுகிறான். மூத்த குமாரன் தன் தகப்பனின் கட்டளையை கேட்டவுடனே ""மாட்டேன்'' என்று கூறி தகப்பனுக்கு கீழ்ப்படிய மறுத்துவிடுகிறான். இவனுடைய பிரதியுத்தரம் நன்றாக இல்லை. ஆனால் இவன் மாட்டேன் என்று கூறினாலும், மனஸ்தாபப்பட்டு, தன் தகப்பன் கூறிய வேலையை செய்து முடிக்கிறான். இவனுடைய கிரியை நன்றாக இருக்கிறது.
மூத்த குமாரன் தன் தகப்பனின் கட்டளையைக் கேட்டவுடன் ""மாட்டேன்'' என்று பதில் கூறுகிறான். கொஞ்சமும் யோசித்துப் பார்க்காமல் உடனே மறுக்கிறான். இவனுடைய பேச்சு தெளிவாக இருக்கிறது. ஒரு வேலையை செய்யாமல் சாக்குப் போக்கு சொல்லுவது நல்லதல்ல. அதிலும் நமக்கு ஒரு வேலை கொடுக்கும்போது செய்ய முடியாது என்று கூறுவது மிகப் பெரிய தவறு.
சுவிசேஷ ஊழியத்தை செய்யுமாறு தேவன் தம்முடைய பிள்ளைகளை அழைக்கிறார். நாமோ மூத்த குமாரனைப்போல, கொஞ்சமும் யோசித்துப் பார்க்காமல், ஆரம்பத்திலேயே ""மாட்டேன், முடியாது'' என்று ஊழியத்திற்கு மறுத்துவிடுகிறோம். சிலர் ஊழியத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள். ஆனால் ஊழியம் செய்யமாட்டார்கள். இவர்களுடைய இருதயங்களெல்லாம் தங்களுடைய சொந்த தோட்டங்களைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும். தேவனுடைய திராட்சத்தோட்டத்தைப்பற்றிய சிந்தனை இவர்களிடத்தில் இருக்காது. இவர்கள் தேவனுடைய திராட்சத்தோட்டத்தில் ஊழியம் செய்வதற்கு விரும்புவதில்லை. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரியங்களைவிட இவர்கள் உலகப்பிரகாரமான தங்களுடைய சொந்தக் காரியங்களையே விரும்புகிறார்கள்.
மூத்த குமாரன் ஆரம்பத்தில் தன் தகப்பனின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் ""மாட்டேன்'' என்று கூறிவிடுகிறான். சிறிது நேரத்தில் இவன் மனம்மாறுகிறான். மறுபடியுமாக தந்தையின் கட்டளையை சிந்தித்துப்பார்க்கிறான். ""ஆகிலும் பின்பு இவன் மனஸ்தாபப்பட்டு போகிறான்''.
ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதைவிட சற்று காலதாமதமாக செய்வதை பரவாயில்லை என்று அங்கீகரிக்கலாம். மூத்த குமாரன் காலதாமதம் செய்து பின்பு தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவேற்றினான். அவன் மனஸ்தாப்பட்டபோதுதான் வேலைக்கு போகிறான். அவன் வேலைக்கு போவது அவனுடைய மனந்திரும்புதலினால் உண்டான கனியாகும்.
நாமும் தேவனுடைய ஊழியத்தை ஆரம்ப நாட்களில் செய்ய மறுத்திருக்கலாம். நம்முடைய மறுதலிப்புக்கு மனஸ்தாபப்படவேண்டும். மனந்திருந்தவேண்டும். நாம் உடனடியாக மனந்திரும்பினால் நமக்கு மன்னிப்பு கிடைக்கும். நமக்கு கொடுக்கப்படும் கட்டளையை நிறைவேற்றுவதற்கு நாம் புறப்பட்டுப் போகவேண்டும். தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவது நமக்கு நல்லது.
தேவன் நமக்கு கட்டளை கொடுத்துவிட்டு பொறுமையோடு காத்திருக்கிறார். அவருடைய கிருபையே அவரை பொறுமையாக காத்திருக்க வைக்கிறது. தேவன் பொறுமையாக இருக்கும்போது நாம் மனந்திரும்பிவிடவேண்டும். நம்முடைய பழைய கீழ்ப்படியாமையை எல்லாம் அகற்றிப்போடவேண்டும். தேவனுடைய கட்டளைக்கு உடனடியாக கீழ்ப்படியவேண்டும். நமது பழைய பாவ சுபாவங்களிலிருந்து மனந்திரும்பி, கர்த்தருக்கு கீழ்ப்படியும்போது, அவர் தமது கிருபையினால் நம்மை அங்கீகரித்துக்கொள்கிறார். நம்மை ஆசீர்வதிக்கிறார். தம்முடைய உடன்படிக்கையை நம்மோடு மறுபடியும் உறுதிபண்ணுகிறார். நம்முடைய பாவங்களிலிருந்து நாம் மனந்திரும்பும்போது தேவன் நம்மை தமது கிருபையினால் மறுபடியும் அங்கீகரித்துக்கொள்வார் என்பது அவருடைய உடன்படிக்கையின் முக்கியமான அம்சமாகும்.
இளைய குமாரன் மூத்த குமாரனைவிட இனிமையாக பேசுகிறான். தன்னுடைய தகப்பனின் கட்டளையை கேட்டவுடன் ""போகிறேன் ஐயா'' என்று அழகாக பதில் கூறுகிறான். ஆனால் இவன் இப்படி சொல்லியும் வேலைக்கு போகவில்லை. இவன் பேச்சு நன்றாக இருக்கிறது. ஆனால் இவன் செயல் சரியில்லை. மூத்த குமாரனைப்போலவே இளைய குமாரனுக்கும் தகப்பன் ஒரேவிதமாகவே கட்டளைகொடுத்திருக்கிறான். இதைப்போலவே நம்முடைய தேவனும் தம்முடைய ஊழியத்திற்காக நம் எல்லோரையும் ஒன்றுபோலவே அழைக்கிறார். ஆனால் அந்த அழைப்பை நாம் ஏற்றுக்கொள்வதில் வித்தியாசம் காண்பிக்கிறோம். ஒரு சிலர் ""கீழ்ப்படிகிறேன் ஆண்டவரே'' என்று கூறிவிட்டு ஊழியம் செய்யாமல் போய்விடுகிறார்கள். வேறு சிலரோ ஊழியத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்காமல், பின்பு மனந்திரும்பி, ஊழியம் செய்வதற்கு தங்களை ஒப்புக்கொடுத்து ஊழியத்தை நிறைவேற்றுகிறார்கள்.
""மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப்போனான்'' என்னும் இந்த வசனம் பாவிகளைக் குறிக்கிறது. இவர்கள் சத்தியத்தை முதலாவது ஏற்க மறுக்கிறார்கள். ஆயினும் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப் பட்டு மனந்திருந்தி பின்பு தேவனுடைய சித்தத்தைச் செய்கிறார்கள். (மத் 21:31)
போகிறேன் ஐயா
இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்; போகிறேன் ஐயா, என்று சொல்-யும், போகவில்லை (மத் 21:30).
இளைய குமாரன் தன் தகப்பனிடம் மிகவும் மரியாதையாகவும் பணிவாகவும் பேசுகிறான். தன் தகப்பனை ""ஐயா'' என்று மரியாதையாக அழைக்கிறான். தகப்பனுடைய கட்டளைக்கு உடனே கீழ்ப்படிவதாக வாக்குப்பண்ணுகிறான். ""உங்கள் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நான் உடனே போகிறேன், என்னை நீங்கள் நம்பலாம். உங்கள் கட்டளைக்கு கீழ்ப்படிய நான் எப்போதுமே ஆயத்தமாக இருக்கிறேன்'' என்று பொருள்படும் விதத்தில் பேசுகிறான்.
ஆனால் இவன் தான் வாக்குக் கொடுத்ததை நிறைவேற்றவில்லை. இவன் போகவில்லை. சொல்வது வேறு செய்வது வேறு. இவனைப் போலவே இன்றும் பலர் சொல்லுகிறார்கள். ஆனால் செய்வதில்லை. ஏராளமானோர் தங்கள் வாயினால் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் இருதயமோ வேறு திசையை நோக்கி திரும்பி இருக்கிறது. சொல்வது வேறாகவும், செய்வது வேறாகவும் இருக்கிறது. பூக்களும் மொட்டுக்களும் கனிகளல்ல.
""போகிறேன் ஐயா, என்று சொல்-யும், போகவில்லை'' என்னும் இந்த வாக்கியம், மாயக்காரரைக் குறிக்கிறது. பரிசேயர்கள் சுயநீதியுடையவர்கள். தேவனுக்காக எல்லாவற்றையும் செய்வோம் என்கிறார்கள். ஆனால் அவருக்காக இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். (மத் 21:31)
இவ்விருவரில் எவர்
இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 21:31).
இயேசுகிறிஸ்து இந்த உவமையைக் கூறும்போது ஒரு கேள்விகேட்கிறார். ""இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன்'' என்பது இயேசுகிறிஸ்துவின் கேள்வி. இவர்கள் இருவருமே தவறு செய்திருக்கிறார்கள். மூத்தவன் தகப்பனுடைய கட்டளையைக் கேட்டவுடனே ""மாட்டேன்'' என்று ஆணவமாக மறுத்துவிடுகிறான். இளையவனோ ""போகிறேன் ஐயா'' என்று பணிவோடு கூறியும் தன் தகப்பனை ஏமாற்றி போகாமல் இருந்துவிடுகிறான்.
இவ்விருவரைப்பற்றியும் தான் இயேசு இங்கு கேள்வி கேட்கிறார். இவ்விருவருமே தவறு செய்தவர்கள். ""இவர்களில் எவன் குறைவாக தவறு செய்திருக்கிறான்'' என்பதே இயேசுவின் கேள்வி. சீஷர்களும் இயேசுவின் கேள்விக்கு ""மூத்தவன் தான்'' என்று நல்லமுறையில் பதில் கூறுகிறார்கள். ஏனெனில் வார்த்தையை விட செயலே முக்கியத்துவம் வாய்ந்தது. துவக்கத்தைவிட முடிவே நல்லது.
இந்த உவமையிலிருந்து இயேசுகிறிஸ்து ஆவிக்குரிய சத்தியத்தை விளக்குகிறார். பிதாவின் சித்தத்தை செய்யுமாறு நாம் எல்லாருமே அழைக்கப்பட்டிருக்கிறோம். ஒரு சிலர் ""செய்யமுடியாது'' என்று கூறி புறக்கணித்துவிடுகிறார்கள். சிலர் முடியாது என்று கூறியும், பின்பு மனஸ்தாபப்பட்டு, தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள். வேறு சிலரோ ""செய்கிறேன் ஆண்டவரே'' என்று கூறியும் எந்த ஊழியமும் செய்யாமல் இருக்கிறார்கள்.
நீதிமார்க்கமாய் வந்த யோவான்
ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார் (மத் 21:32).
யோவான்ஸ்நானன் இயேசுகிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தம்பண்ணுவதற்காக வந்தான். ஆயக்காரரும் வேசிகளும் அவனை விசுவாசித்தார்கள். அவனுடைய உபதேசத்தைக் கேட்டு கீழ்ப்படிந்தார்கள். ஆனால் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் யோவான்ஸ்நானனை விசுவாசிக்கவில்லை. அவனுடைய ஊழியத்திற்கு இவர்கள் முரண்பட்டு இருக்கிறார்கள்.
யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, யாரால் உண்டாயிற்று என்று இயேசு கேட்ட கேள்விக்கு, பிரதான ஆசாரியனும் ஜனத்தின் மூப்பரும் ""எங்களுக்குத் தெரியாது'' என்று பிரதியுத்தரம் கூறுகிறார்கள். யோவான் கொடுத்த ஞானஸ்நானம் மனுஷரால் உண்டாகவில்லை, இது தேவனால் உண்டாயிற்று என்பதை இயேசுகிறிஸ்து அவர்களுக்கு விளக்குகிறார்.
யோவான்ஸ்நானன் நீதிமார்க்கமாய் ஜனங்களிடத்தில் வந்திருக்கிறான். ஒருவர் நல்லவரா, அல்லது கெட்டவரா என்பதை அவருடைய கனியை வைத்தே நாம் அறியமுடியும். அவர்களுடைய உபதேசங்களின் கனிகளையும், அவர்களுடைய கிரியைகளின் கனிகளையும் வைத்தே அவர்களுடைய ஊழியங்களை நாம் அறிந்துகொள்ளமுடியும். யோவான்ஸ்நானன் தன்னுடைய ஊழியக்காலத்தில் ""மனந்திரும்புங்கள்'' என்று ஜனங்களுக்கு பிரசங்கித்தான். நீதியின் கிரியைகளை செய்யுங்கள் என்று ஆலோசனை கூறினான்.
யோவான்ஸ்நானனுடைய ஊழியத்தின் மூலமாக ஆயக்காரரும் வேசிகளும் மனந்திரும்பினார்கள். அவர்கள் யோவானை விசுவாசித்தார்கள். தேவன் யோவான்ஸ்நானனை அனுப்பவில்லையென்றால், அவனுடைய ஊழியத்தின் மூலமாக இப்படிப்பட்ட நற்கனி உண்டாயிருக்காது. யோவான்ஸ்நானனுடைய ஊழியத்தின் மூலமாக ஜனங்கள் மனந்திரும்பினார்கள். நீதிமார்க்கமாய் ஜீவித்தார்கள். யோவானுடைய ஊழியத்திற்கு இவர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள்.
பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் யோவான்ஸ்நானனுடைய ஞானஸ்நானத்தை தேவனால் உண்டான ஸ்நானம் என்று அங்கீகரிக்கவில்லை. யோவானை இவர்கள் விசுவாசிக்கவில்லை. ஆயக்காரரும் வேசிகளுமோ யோவான்ஸ்நானனை விசுவாசித்து அவன் மூலமாக ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறார்கள். மனந்திரும்பி, விசுவாசத்தோடு, கீழ்ப்படிதலோடு ஞானஸ்நானம் பெறுகிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாறுதல் உண்டாயிற்று. இவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள்.
ஆயக்காரரும் வேசிகளும் இந்த உவமையில் கூறப்பட்டிருக்கும் மூத்த குமாரனைப்போல் இருக்கிறார்கள். மூத்த குமாரன் ""மாட்டேன்'' என்று முதலில் கூறினான். ஆகையினால் தகப்பன் இவர்களிடத்திலிருந்து கீழ்ப்படிதலை எதிர்பார்க்கவில்லை. அதுபோலவே ஆயக்காரரிடமிருந்தும், வேசிகளிடமிருந்தும் ஆவிக்குரிய காரியங்களை யாரும் அதிகமாக எதிர்பார்க்கமாட்டார்கள். இவர்களோ யோவான்ஸ்நானனை விசுவாசித்து, மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டு, இப்போது ஆவிக்குரிய கனிகளை கொடுக்கிறார்கள். ஆரம்பத்தில் பயனற்றவர்களாக இருந்த இவர்கள், இப்போது பயனுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
வேதபாரகரும், பரிசேயரும், பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பரும், யூதமார்க்கத்தார் எல்லோரும் இந்த உவமையில் கூறப்பட்டிருக்கும் இளைய குமாரனைப்போல் இருக்கிறார்கள். இவர்கள் நற்கிரியைகளை செய்யவேண்டியவர்கள். இவர்களுடைய உபதேசங்களின் மூலமாக இவர்களிடத்தில் ஆவிக்குரிய கனிகளை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இவர்களோ இளையவனைப்போல மாய்மாலக்காரர்களாய் இருக்கிறார்கள். இவர்களுடைய பிரசங்கம் ஒன்றும், கிரியை வேறொன்றுமாக இருக்கிறது. மனந்திரும்பும் பாவியைவிட மாய்மாலக்காரன் மிகவும் மோசமானவன்.
யோவான்ஸ்நானம் மிகவும் நல்லவன். இவனுடைய ஊழியத்தின் மூலமாக பலர் நன்மைகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆயக்காரரும் வேசிகளும் யோவான்ஸ்நானனுடைய ஊழியத்தின் மூலமாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசித்திருக்கிறார்கள். இந்த சம்பவங்களையெல்லாம் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் பார்க்கிறார்கள். தங்களுக்கு முன்பாக இவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதை காண்கிறார்கள். இதைக் கண்ட பின்பும் இவர்கள் மனந்திரும்பவில்லை. விசுவாசிக்கவில்லை. பெருமை இவர்களை ஆளுகை செய்கிறது. இவர்கள் தங்களுடைய சுயகாரியங்களையே தேடுகிறார்கள். தேவனுக்குரியவைகளை இவர்கள் ஒருபோதும் தேடுவதில்லை.