பாடுகளின் வாரம்: செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 2(1)

 




பாடுகளின் வாரம்: செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 2(1)

இயேசுவின் அதிகாரம்


அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம் பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்  (மத் 21:23).


இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; (மத் 21:24,25).


மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி, இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார் (மத் 21:26,27). 


""நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால்'' என்னும் இந்தக் காரியம் மூன்று இடங்களில்  வலியுறுத்தப்பட்டிருக்கிறது. (மத் 17:20; மத் 21:21; மாற்கு 11:23; லூக்கா 17:6) பொதுவாக நமக்கு மலையை அகற்றக்கூடிய தேவையோ அல்லது மரங்களைச் சபிக்கக்கூடிய தேவையோ இருக்காது. ஆனாலும் நம்மிடம் சந்தேகப்படாத விசுவாசம் வேண்டும். விசுவாசம் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்தும். (மத் 17:20;  மாற்கு 9:23; 1கொரி 13:2)


""இந்த மலை'' என்பது  ஒலிவமலையாக இருக்கலாம். இயேசு கிறிஸ்து தமது கடைசி நாட்களில் அனுதினமும் இந்த மலையின் வழியாக நடந்துபோனார். இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையோடு தொடர்புபடுத்தி 12 இடங்களில் இந்த மலை குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இயேசு கிறிஸ்து பரமேறிய மலையும் இதுதான். (அப் 1:12) இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது சகரியா 14:4-இல் ஒலிவமலையைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம். ""அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும். அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம். அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்''. ஒலிவமலை எருசலேமின் கிழக்குப் பகுதியில் இருக்கிறது. இதன் வழியாக கிழக்கு தேசத்திலிருந்து பெரும்பாதை செல்கிறது. ஒலிவமலைக்கு ""நாசமலை'' (2இராஜா 23:13) என்னும் மறுபெயரும் உண்டு.


 ஒரு விசுவாசி தேவனிடத்தில் விசுவாசமாக இருக்கும்பொழுது அவருடைய விசுவாச வார்த்தைக்கு அதிக வல்லமை உண்டு. தேவனும் அவர் மூலமாக கிரியை நடப்பிப்பார்.

தேவனிடம் ஜெபத்திலே கேட்க வேண்டிய காரியங்கள்


    1. தேவனுடைய உதவி (2நாளா 20:4)

    2. வரப்போகிற காரியங்கள் (ஏசா 45:11)

    3. பழைய வழிகள் (எரே 6:16)

    4. ஆவிக்குரிய மழை (சக 10:1)

    5. தேவைகள் (சங் 23:1; சங் 34:9-10; சங் 84:11; மத் 6:8)

    6. நற்காரியங்கள் (மத் 7:7-11)

    7. எதையாகிலும் (மத் 18:19; யோவான் 14:14; 1யோவான் 5:14)

    8. எதுவும் (மத் 21:22; யோவான் 14:13; யோவான் 15:16; யோவான் 16:23; 1யோவான் 3:22)

    9. பரிசுத்த  ஆவியானவர் (லூக்கா 11:9-13)

    10. உமக்குச் சித்தமானது (மாற்கு 11:24; யோவான் 15:7)

    11. ஞானம் (யாக் 1:5-8)

    12. ஜீவன் (1யோவான் 5:16)

எந்த அதிகாரத்தினால்


அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம் பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள் (மத் 21:23).


 இயேசுகிறிஸ்து எருசலேமிலுள்ள தேவாலயத்தில் வந்து உபதேசம் பண்ணுகிறார். தம்முடைய சுவிசேஷத்தை அவர் அதிகாரமுள்ளவராக பிரசங்கம்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்து மரிப்பதற்கு சற்று முன்பாக இந்த சம்பவம் நடைபெறுகிறது. பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுகிறிஸ்துவிடம் விவாதம்பண்ணுகிறார்கள். 


பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் யூதமார்க்கத்தில் மிகவும் முக்கியமானவர்கள். ஆலோசனைச்சங்கத்தில் தீர்ப்பு வழங்கும் பொறுப்பு இவர்களுக்கு உள்ளது. மார்க்க சம்பந்தமான காரியங்களை பிரதான ஆசாரியன் விசாரித்து தீர்ப்பு வழங்குவான். குடும்ப சம்பந்தமான காரியங்களையும், சமுதாயம் சம்பந்தமான காரியங்களையும் ஜனத்தின் மூப்பர் விசாரித்து தீர்ப்பு வழங்குவார்கள்.


பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பரும் இணைந்து இப்போது இயேசுகிறிஸ்துவிடம் தர்க்கம்பண்ணுகிறார்கள். ஏதாவது ஒரு வழியில் இயேசுகிறிஸ்துவை குற்றப்படுத்தி அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டுமென்பது இவர்களுடைய நோக்கம். ஆகையினால் இயேசுகிறிஸ்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணும்போது அவருக்கு இடையூறு செய்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை இவர்களும் கேட்கமாட்டார்கள். மற்றவர்களையும் கேட்கவிடமாட்டார்கள். 


இயேசுகிறிஸ்து எருசலேமுக்கு வந்தவுடன் தேவாலயத்திற்குப் போகிறார். ஒரு நாளுக்கு முன்புதான் இயேசு தேவாலயத்தில் விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய  பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்துப்போட்டிருக்கிறார். பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் இயேசுகிறிஸ்துவின்மீது கோபமாக இருக்கிறார்கள். அதே சத்துருக்கள் மத்தியில் இயேசுகிறிஸ்து இப்போது மறுபடியும் வந்திருக்கிறார். தமக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும், அதை சந்திப்பதற்காக ஆபத்தின் வாசலுக்கே வந்திருக்கிறார். 


இயேசுகிறிஸ்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணுகிறார். அவர் தேவாலயத்தை ""ஜெபவீடு'' என்று அழைக்கிறார்.               அந்த ஜெபவீட்டில்தான் இப்போது பிரசங்கம்பண்ணுகிறார். ஜெபமும் பிரசங்கமும் இணைந்து நடைபெறவேண்டும். ஒன்றில்லாமல் மற்றொன்று நடைபெறக்கூடாது. இவ்விரண்டும் சேர்ந்து நடைபெற்றால்தான் தேவ வல்லமை  வெளிப்படும்.


தேவனோடு ஐக்கியமாக இருக்கவேண்டுமென்றால், நாம் ஜெபத்தில் அவரோடு பேசினால் மாத்திரம் போதாது. தம்முடைய வார்த்தையின் மூலமாக அவர் நமக்கு கொடுக்கும் செய்திகளையும் கவனமாக கேட்கவேண்டும். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் கர்த்தருடைய வார்த்தைக்கும் ஜெபத்திற்கும் தங்களை ஒப்புக்கொடுக்கவேண்டும். 


இயேசுகிறிஸ்து தேவாலயத்தில் ஜனங்களுக்கு உபதேசம்பண்ணும்போது பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வருகிறார்கள். எந்த அதிகாரத்தினால் இயேசுகிறிஸ்து இவை எல்லாவற்றையும் செய்வதாக அவரிடமே கேட்கிறார்கள். சில சமயங்களில் தீமையான காரியங்களிலிருந்து நன்மையான விளைவு உண்டாகும். இங்கு பிரதான ஆசாரியர், ஜனத்தின் மூப்பர் ஆகியோரின் தீய நோக்கத்திலிருந்து இயேசுகிறிஸ்து நன்மையான சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். தமக்கு விரோதமாக கூறப்படும் குற்றச்சாட்டை பயன்படுத்தி தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறார். இவர்கள் இயேசுகிறிஸ்துவை உபதேசம்பண்ண விடாமல் அமைதிப்படுத்தவேண்டும் என்று முயற்சி பண்ணுகிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்முடைய தெய்வீக ஞானத்தினாலும் வல்லமையினாலும், அதிகாரத்தினாலும் அவர்களை அமைதிப்படுத்துகிறார். 


பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பரும் இயேசுகிறிஸ்துவினிடத்தில் வந்து      ""நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளை செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்கு கொடுத்தவர் யார்?'' என்று கேட்கிறார்கள். இவர்கள் உண்மையிலேயே இயேசுகிறிஸ்துவின் அற்புதத்தையும், அதிகாரத்தையும் தெரிந்துகொள்ளவேண்டுமென்று விரும்பியிருந்தால், இந்தக் கேள்விகளை அவர்கள் இயேசுகிறிஸ்துவிடம்           கேட்டிருக்கமாட்டார்கள். சில சமயங்களில் நாமும்கூட நமக்கு அதிகாரம் இருப்பதாக நினைத்து செயல்படுகிறோம். அப்போதெல்லாம் ""இந்த அதிகாரத்தை நமக்கு கொடுத்தது யார்'' என்னும் கேள்வியை நாம் நமக்குள்ளே கேட்டுக்கொள்ளவேண்டும். பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுகிறிஸ்துவிடம் அதிகாரத்தோடு கேள்விகேட்டபோது, அவர்களும் தங்களுக்குத் தாங்களே ""இந்த அதிகாரத்தை தங்களுக்கு கொடுத்தது யார்'' என்னும் கேள்வியை கேட்டிருக்கவேண்டும். சம்பந்தமில்லாமல் எந்தக் காரியத்திலும் தலையிடுகிறவர்கள்       ஒருபோதும் தேவஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளமாட்டார்கள்.


இயேசுகிறிஸ்து பல சமயங்களில் தம்மைப் பற்றி வெளிப்படுத்தியிருக்கிறார். ""தாம் தேவனிடத்திலிருந்து வந்த போதகர்''        (யோவா 3:2) என்னும் சத்தியத்தை எவ்வித சந்தேகமுமில்லாமல் நிரூபித்திருக்கிறார். இங்கு மறுபடியுமாக தாம் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்னும் சத்தியத்தை இயேசுகிறிஸ்து மிகவும் தெளிவாக இங்கு உறுதிபண்ணுகிறார். பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பரும்  ""இயேசுகிறிஸ்து எந்த அதிகாரத்தினால் இவைகளை செய்கிறார்'' என்னும் கேள்வியோடு வருகிறார்கள். இயேசுகிறிஸ்துவுக்கு எந்த அதிகாரமுமில்லை என்பது இவர்களுடைய கருத்து. ஏனெனில் இயேசுகிறிஸ்து பிரதான ஆசாரியரோ, ஜனத்தின் மூப்பரோ அல்ல. தங்களுக்கு மாத்திரமே தேவன் அதிகாரம் கொடுத்திருக்கிறார் என்பது இவர்களுடைய கருத்து.


இவர்களைப்போலவே இக்காலத்தில் அதிகாரத்திலுள்ளவர்கள் தவறு செய்கிறார்கள்.  தங்களுடைய ஸ்தானத்தில் இவர்கள் பெருமைப்படுகிறார்கள். சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் தங்களுடைய ஸ்தானத்திற்கு ஏற்றபிரகாரம் இவர்கள் நடந்துகொள்வதில்லை. அந்த ஸ்தானத்திற்குரிய பொறுப்புக்களையும் கடமைகளையும் இவர்கள் நிறைவேற்றுவதில்லை. 


இயேசுகிறிஸ்துவிடமிருந்து சத்தியத்தை கற்றுக்கொள்ளவேண்டுமென்பது இவர்களுடைய நோக்கமல்ல. அவரை கண்ணியில் சிக்க வைக்கவேண்டும் என்பதே இவர்களுடைய பிரதான நோக்கம். இவர்களுடைய கேள்விக்கு இயேசுகிறிஸ்து பதில் கூறாமல் அமைதியாக இருந்தால், இவர்கள் ஜனங்கள் மத்தியில் இயேசுகிறிஸ்துவை அவமானப்படுத்துவார்கள். அவருக்கு ஒரு அதிகாரமும் இல்லையென்று அவதூறு பண்ணுவார்கள். தேவன் தமக்கு இந்த அதிகாரத்தை கொடுத்திருப்பதாக இயேசுகிறிஸ்து பதில் கூறினால், உடனே இவர்கள் வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை காண்பிக்க சொல்லுவார்கள். இல்லையென்றால் இயேசுகிறிஸ்து தேவதூஷணம் சொல்லுவதாக அவரை குற்றப்படுத்துவார்கள். 

யோவான் கொடுத்த ஸ்நானம்

இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;  (மத் 21:24,25).


பிரதான ஆசாரியரும் ஜனத்தின்     மூப்பரும் இயேசுகிறிஸ்துவிடம் கேள்வி கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்துவோ அவர்களுக்கு பிரதியுத்தரமாக ""நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்'' என்று கூறுகிறார். இயேசு அவர்களுக்கு நேரடியாக ஒரு பதிலும் கூறவில்லை. இந்த சூழ்நிலையை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த இயேசுகிறிஸ்து அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு தமது கேள்வியையே பதிலாக கூறுகிறார். 


யோவான்ஸ்நானனுடைய ஸ்நானத்தைப்பற்றி இயேசு இங்கு கேள்வி கேட்கிறார். ""யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, யாரால் உண்டாயிற்று'' என்பது இயேசுகிறிஸ்துவின் கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு இவ்விரண்டு பதில்களில் ஒரு பதிலைத்தான் கூறமுடியும். இது குழப்பமான கேள்வியுமல்ல. இதற்கு தெளிவாக பதில் கூறலாம். எந்த பதிலைக்கூறினாலும் அந்த  பதில் அவர்களுடைய மனநிலமையை வெளிப்படுத்தும்.  


யோவான் கொடுத்த ஸ்நானம் மனுஷரால் உண்டாயிற்று என்று அவர்கள் எளிதாக பதில் கூறலாம். ""யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை'' (யோவா 10:41). ஆனால் இயேசுகிறிஸ்துவோ பல அற்புதங்களை செய்திருக்கிறார்.


யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்று என்று அவர்கள் சொன்னால் அவர்கள் யோவானை விசுவாசிக்கவேண்டும்.  யோவான் இயேசுகிறிஸ்துவைக் குறித்து சாட்சி கூறியிருக்கிறான். அந்த சாட்சியையும் அவர்கள் விசுவாசிக்கவேண்டும். இயேசுவின் கேள்விக்கு ஒரு பதிலும் கூறவில்லையென்றால், தாங்கள் இயேசுகிறிஸ்துவிடம் சுயபெருமையினால் வீணாக கேள்விகேட்டது வெளிப்படையாக தெரியவரும். ஆகையினால் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், என்ன பதில் கூறலாம் என்று தங்களுக்குள்ளே ஆலோசனை பண்ணுகிறார்கள்.

தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி


மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும்         யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று,தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி, (மத் 21:26).


இயேசுகிறிஸ்துவின் கேள்விக்கு என்ன பதில் கூறலாம் என்று பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் தங்களுக்குள்ளே ஆலோசனை பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் என்பதே அவர்களுடைய பிரதான நோக்கம். சத்தியத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் அவர்களிடத்தில் இல்லை. ஜனங்கள் மத்தியில் தங்களுடைய மதிப்பும் மரியாதையும் குறைந்து போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். தங்களுடைய சுய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் பிறருடைய நன்மையை தேடாமல் தங்களுடைய சுய நன்மையையே தேடுகிறார்கள். 


யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்று என்று அவர்கள் சொன்னால், பின்னே ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று ஜனங்கள் நம்மை கேட்பார்கள் என்று பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் தங்களுக்குள்ளே ஆலோசனை பண்ணுகிறார்கள்.


இவர்கள் தங்களுடைய பதவிகளை பாதுகாத்துக்கொள்வதற்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். யோவான் கொடுத்த ஸ்நானம் மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால் ஜனங்களுக்கு பயப்படுகிறோம், எல்லோரும் யோவானை தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று இவர்கள் தங்களுக்குள்ளே ஆலோசனை பண்ணுகிறார்கள்.


பிரதான ஆசாரியருக்கும் ஜனத்தின் மூப்பருக்கும் யோவான்ஸ்நானனைப்பற்றி தெரிந்திருப்பதைவிட,  ஜனங்கள் அதிகமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த ஜனங்களைப்பற்றி ""வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள்'' (யோவா 7:49) என்று பரிசேயர்கள் கூறுகிறார்கள். தங்களுக்கு சுவிசேஷம் தெரியுமென்றும், தாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களென்றும் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் நினைக்கிறார்கள்.


பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் ஜனங்களோடு நெருங்கிச் சேராமல் விலகியே இருக்கிறார்கள். ஆகையினால்தான் ஜனங்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஒரு பிரிவு உண்டாயிருக்கிறது. ஜனங்களைக் குறித்த பயம் இவர்களுக்கு வந்திருக்கிறது. இவர்கள் தங்களுடைய கடமைகளை சரியாக செய்து, ஜனங்களோடு ஐக்கியமாக இருந்திருந்தால், இவர்கள் ஜனங்களுக்கு பயப்படவேண்டிய அவசியம் இருந்திருக்காது. தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தையும் இவர்கள் முறையாக பயன்படுத்தவில்லை.


சாதாரண ஜனங்களும் தாங்கள் பக்திவைராக்கியமாக இருக்கும் காரியங்களில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறார்கள். தாங்கள் எதை பரிசுத்தமானது என்று நினைக்கிறார்களோ அது பரிசுத்தக் குலைச்சலாக்கப்படும்போது அவர்கள் எளிதாக கோபப்பட்டு விடுகிறார்கள். ஆகையினால் பரிசுத்தமானது எது என்னும் விவாதம் எப்போதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


பிரதான ஆசாரியரும் ஜனத்தின்     மூப்பரும் சத்தியத்தை வெளிப்படையாகவே மறுதலிக்கிறார்கள். இவர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு பயப்படவில்லை. ஆனால் ஜனங்களுக்கு பயப்படுகிறார்கள். இவர்களைப்போலத்தான் பிற்காலத்தில் துன்மார்க்கமான ஜனங்கள் தேவனுக்குப் பயப்படாமல் ஜனங்களுக்குப் பயந்து ஜீவிக்கிறார்கள்.  

எங்களுக்குத் தெரியாது

இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார் (மத் 21:27).


இயேசுகிறிஸ்துவின் கேள்விக்கு பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் பிரதியுத்தரம் கூற விரும்பவில்லை. ஆகையினால் ""எங்களுக்குத் தெரியாது'' என்று கூறுகிறார்கள்.  ""நாங்கள் சொல்ல விரும்பவில்லை'' என்று கூறுவதற்குப் பதிலாக ""எங்களுக்குத் தெரியாது'' என்று கூறிவிடுகிறார்கள். வேதவாக்கியத்தில் இவர்களுக்கு ஞானம் இருக்கவேண்டும். தங்களுக்குத் தெரியாது என்று கூறுவது இவர்களுக்கு அவமானமான காரியம். இவர்கள் தங்களுடைய தெய்வீக ஞானத்தை வெளிப்படுத்த வேண்டியவர்கள். ஆனால் இவர்களோ தங்களுடைய அறியாமையை வெளிப்படுத்துகிறார். 


இவர்களுக்கு யோவான் கொடுத்த ஸ்நானத்தைப்பற்றி தெரியும். அது தேவனால் உண்டாயிற்று என்பதும் தெரியும். இதை தெரிந்திருந்தும் இவர்கள் ""எங்களுக்குத் தெரியாது'' என்று பொய் கூறுகிறார்கள். இவர்கள் பாவத்திற்காகவும் வெட்கப்படவில்லை, பொய் சொல்வதற்காகவும் வெட்கப்படவில்லை.  தங்களுக்குத் தெரிந்ததை இவர்கள் வெளியே சொல்லப் பயப்படுகிறார்கள். தங்களுடைய சொந்தக் கருத்துக்களை வெளிப்படுத்த தயங்குகிறார்கள். தங்களை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்னும் ஆணவமும் இவர்களுடைய உள்ளத்தில் உள்ளது. பெருமை இவர்களை ஆளுகை செய்கிறது. 


பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுகிறிஸ்துவை ஒரு கண்ணியில் சிக்க வைக்கவேண்டுமென்று வலைகளை விரித்திருக்கிறார்கள். ஆனால் தாங்கள் விரித்த வலையிலேயே இவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்.   இயேசுகிறிஸ்துவிடம் தாங்கள் கேட்ட கேள்விக்கு அவர் பிரதியுத்தரம் கூறவில்லையென்றாலும் பரவாயில்லையென்று அமைதியாக இருக்கிறார்கள். ""எங்களுக்குத் தெரியாது'' என்று இவர்கள் பிரதியுத்தரம் கூறியவுடன் இயேசுகிறிஸ்துவும் அவர்களிடம் ""நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளை செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லேன்'' என்று கூறிவிடுகிறார். கிறிஸ்துவின் அதிகாரத்தைக் குறித்து கேள்வி எழுப்புவதற்கு  அவர்கள் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜனங்களிடம் சத்தியத்தை எவ்வளவுதான் விளக்கிக் கூறினாலும் அதை அவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளமாட்டார்கள். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.


தங்களுடைய சொந்தக் கருத்துக்களில்    சிறைப்பிடிக்கப்பட்டிருப்பவர்கள், சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்ப மாட்டார்கள். சத்தியத்தை தேடி கண்டுபிடிக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தாலந்தை பூமியிலே புதைத்தவனுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். இவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ஒரு தாலந்தும் எடுக்கப்பட்டு, அதை பயன்படுத்தும் வேறொருவருக்கு கொடுக்கப்படும். கண்ணை திறந்து பார்க்காதவர்கள் எதையும் பார்க்கமாட்டார்கள். பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் சத்தியத்தை தெரிந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள். இவர்கள் ஒருபோதும் சத்தியத்தை புரிந்துகொள்ளமாட்டார்கள். 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.