கொள்ளைநோய் very grievous Predatory disease யாத் 9:1-7
யாத் 9:1. பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை போகவிடு.
யாத் 9:2. நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்தாயாகில்,
யாத் 9:3. கர்த்தருடைய கரம் வெளியி-ருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின் மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளைநோய் உண்டாகும்.
யாத் 9:4. கர்த்தர் இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார்.
யாத் 9:5. மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்-, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார்.
யாத் 9:6. மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருக ஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.
யாத் 9:7. பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.
கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது மேலும் ஒரு வாதையை வரப்பண்ணுகிறார். எகிப்தியரின் மிருகஜீவன்கள்மீது மகாகொடிதான கொள்ளை நோய் உண்டாகும். கர்த்தர் இந்தக் கொள்ளை நோயை வரப்பண்ணுவதற்கு முன்பாக பார்வோனை எச்சரிக்கிறார்.
மோசே கர்த்தருடைய எச்சரிப்பின் வார்த்தைகளை பார்வோனுக்கு சொல்லுகிறார். கர்த்தர் மோசேயை நோக்கி: ""நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை போகவிடு'' (யாத் 9:1) என்று சொல்லச் சொல்லுகிறார். பார்வோன் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, இஸ்ரவேல் ஜனங்களை போகவிட்டால், எகிப்து தேசத்தின்மீது வாதை வராது. அவன் இஸ்ரவேல் ஜனங்களை போகவிடாவிட்டால், என்ன நடைபெறும் என்பதையும் மோசே பார்வோனுக்கு சொல்லுகிறார்.
மோசே பார்வோனை நோக்கி, ""நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்தாயாகில், கர்த்தருடைய கரம் வெளியி-ருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின் மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளைநோய் உண்டாகும்'' (யாத் 9:2,3) என்று கர்த்தருடைய வார்த்தையை சொல்லுகிறார்.
எகிப்தியருடைய மிருகஜீவன்கள்மேல் கர்த்தருடைய கரம் இருக்கும். கர்த்தருடைய பலத்த கரம் எகிப்தியருடைய மிருகஜீவன்களை கொன்றுபோடும். கர்த்தர் இந்த வாதையை எப்போது வரப்பண்ணுவார் என்றும் மோசே பார்வோனுக்கு சொல்லுகிறார். ""நாளைக்கு கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார்'' என்று மோசே சொல்லுகிறார். கர்த்தர் இந்தக் காரியத்தை செய்வதற்கு ஒரு காலத்தைக் குறித்திருக்கிறார். அந்தக் காலத்தில் கர்த்தர் செய்ய நினைக்கிற காரியம் நடைபெறும் (யாத் 8:5).
முற்பிதாக்களின் காலத்தில் பாலஸ்தீன தேசத்தில் குதிரைகள் அதிகமாகப் பயன்படுத்தப் படவில்லை. சாலொமோனின் காலத்தில் எகிப்து தேசத்தில் ஏராளமான குதிரைகள் இருந்தன. இஸ்ரவேல் தேசத்திற்கு சாலொமோன் ராஜா ஏராளமான குதிரைகளை இறக்குமதி பண்ணினார் (1இராஜா 4:26-28; 1இராஜா 10:25-28).
இந்தக் கொள்ளைநோய் மிகவும் கொடியது. மரணத்தை உண்டாக்கக்கூடியது. (யாத் 9:3#4,6) எகிப்தின் தெய்வங்களுக்கு எதிராகவும், இந்தக் கொள்ளை நோய் வருகிறது. எகிப்தின் தெய்வங்களில் பல மிருகங்களின் வடிவில் இருந்தன. அந்த மிருகங்களெல்லாம் கொள்ளைநோயினால் மாண்டுபோயிற்று. மிருகங்கள் எகிப்தியருக்குப் புனிதமானவை. மிருகங்கள் மாண்டுபோகும்போது தங்களுடைய தெய்வங்களே அழிந்துபோவதாக எகிப்தியர்கள் நினைப்பார்கள். எகிப்தின் தெய்வங்களால் தங்களைக் காத்துக் கொள்ள முடியவில்லை என்பதும், இஸ்ரவேலரின் தேவனே மெய்யான தேவன் என்பதும், அவர் சர்வ வல்லமையுள்ளவர் என்பதும் மறுபடியுமாக நிரூபணமாகிறது.
எகிப்து தேசத்திலே எகிப்தியருடைய மிருகஜீவன்களும், எபிரெயருடைய மிருகஜீவன்களும் கலந்திருக்கிறது. கர்த்தரோ இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை (யாத் 9:4).
கர்த்தர் நாளைக்கு இந்தக் காரியத்தை செய்யவேண்டுமென்று ஒரு காலத்தைக் குறித்திருக்கிறார். நாளைக்கு என்ன நடைபெறும் என்பது நமக்கு தெரியாது. ஆனால் கர்த்தரோ ஒவ்வொரு நாளையும் அறிந்திருக்கிறார். எந்தெந்த நாளில், எந்தெந்த காரியங்களை செய்யவேண்டும் என்பதை கர்த்தர் ஏற்கெனவே தீர்மானம் செய்திருக்கிறார். எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எதை சொல்லுகிறாரோ, அதை செய்வார்.
கொள்ளை நோய் வரும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. தேவன் நியமித்த காலத்தில் அவர் நியமித்திருக்கும் காரியங்கள் நிச்சயமாக நடைபெறும். எகிப்தியரின் மிருகஜீவன்களுடைய அழிவிற்குத் தேவன் நாள் குறித்து விட்டார்.
எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொன்ன பிரகாரம் மறுநாளிலே அந்தக் காரியத்தை செய்கிறார். எகிப்தியருடைய மிருக ஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை (யாத் 9:6).
""எகிப்தியருடைய மிருக ஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று'' என்னும் இந்த வாக்கியம் ஆகுபெயராக பயன்படுத்தப் பட்டிருக்கிறது. (ஆதி 41:56) எகிப்திலுள்ள எல்லா மிருகஜீவன்களும் மரிக்கவில்லை. யாத் 9:3 ஆவது வசனத்தில் ""வெளியிலிருக்கிற'' மிருகஜீவன்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. யாத் 9:19 ஆவது வசனத்தில் கல்மழையும், வாதையும் வருவதற்கு முன்பாக மிருகஜீவன்களைச் சேர்த்துக் கொள்ளுமாறு கூறப்பட்டிருக்கிறது.
இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை. தேவன் ஒவ்வொரு இஸ்ரவேலரையும் அவர்களுடைய மிருக ஜீவன்களையும், உடைமைகளையும் பாதுகாக்கிறார். எகிப்தியர்மீது பத்து வாதைகள் வந்தன. அந்த வாதைகளில் எதுவும் இஸ்ரவேல் புத்திரரைப் பாதிக்கவில்லை. (யாத் 9:6,7).
எகிப்தியர்கள் காளைகளை தங்கள் தெய்வங்களாக ஆராதிக்கிறார்கள். எகிப்து தேசத்தில் அடிமைகளாகயிருந்த இஸ்ரவேல் புத்திரரில் சிலர், தங்களுக்கு அந்தக் காளைகளை தெய்வங்களாக்கிக் கொண்டார்கள். அப்படிப்பட்டவர்களில் சிலர் வனாந்தரத்திலே பொன்கன்றுக்குட்டியை உருவாக்கி, அதை ஆராதனை செய்தார்கள். கன்றுக்குட்டியை ஆராதிக்கும் வழக்கத்தை இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தாரிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்.
எகிப்தியருக்கு காளைகள் தெய்வங்களாகயிருக்கிறது. கர்த்தரோ எகிப்தியருடைய மிருகஜீவன்கள் மேல் மகாகொடிதான கொள்ளைநோயை வரப்பண்ணுகிறார். அந்த மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று. தங்களுக்கு எவை தெய்வம் என்று எகிப்தியர்கள் நம்பினார்களோ அந்த மிருகஜீவன்கள் செத்துப்போயிற்று. ஆகையினால் இந்த வாதை எகிப்தியருடைய மனதிலே மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணிற்று.
எகிப்து தேசத்திலுள்ள எல்லா மிருகஜீவன்களும் செத்துப்போகவில்லை. கர்த்தர் இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும், எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணியிருக்கிறார். எகிப்தியருடைய மிருகஜீவன்கள் மாத்திரமே கொள்ளைநோயினால் செத்துப்போயிற்று என்பதையும், இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்பதையும் பார்வோன் அறிந்துகொள்கிறான்.
எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொன்ன பிரகாரம், எகிப்தியரின் மிருகஜீவன்கள் மாத்திரம் செத்துப்போயிற்று. பார்வோன் இதைப் பார்த்த பின்பும் மனந்திரும்பவில்லை. அவனுடைய இருதயம் கடினப்படுகிறது. பார்வோன் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்தைவிட்டுப் போகவிடவில்லை (யாத் 9:7).
இஸ்ரவேலரின் மிருகஜீவன்களும் செத்துப்போயிருந்தால், இது பொதுவான கொள்ளைநோய் என்று பார்வோன் நினைத்திருப்பான். ஆனால் எகிப்தியரின் மிருகஜீவன்கள்மட்டும் செத்துப்போயிற்று. இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை. ஆகையினால், இதுவும் தேவனுடைய செயல் என்பதைப் பார்வோன் புரிந்து கொள்கிறான். ஆனாலும், தேவனுக்குக் கீழ்ப்படிந்து, இஸ்ரவேல் புத்திரரை விடுதலை பண்ணுவதற்குப் பதிலாக பார்வோன் தன் இருதயத்தை மறுபடியும் கடினப்படுத்துகிறான். (யாத் 4:21).
எரிபந்தமான கொப்புளங்கள்
யாத் 9:8-12
யாத் 9:8. அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக் கடவன்.
யாத் 9:9. அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்மேலும் மிருக ஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப்பண்ணும் என்றார்.
யாத் 9:10. அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்குநேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருக ஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று.
யாத் 9:11. அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர் எல்லார்மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்கள் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது.
யாத் 9:12. ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்-யிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது மேலும் ஒரு வாதையை வரப்பண்ணுகிறார். எகிப்து தேசமெங்கும் மனிதர்கள் மேலும் மிருகஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்புகிறது. கர்த்தர் இதற்கு முன்பு எகிப்தியருடைய மிருகஜீவன்கள்மேல் கொடிதான கொள்ளை நோயை அனுப்பினார். அவர்களுடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று. தங்களுடைய மிருகஜீவன்கள் செத்துப்போன பின்பும், எகிப்தியர்கள் தங்களுடைய பாவங்களுக்கு மனந்திரும்பவில்லை. ஆகையினால் கர்த்தர் இப்போது எகிப்தியர்மீது எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப்பண்ணுகிறார். இந்தக் கொப்புளங்கள் அவர்களுடைய சரீரங்களை வாதிக்கிறது.
கர்த்தர் பாவிகளை சிட்சிப்பதற்கு, ஆரம்பத்தில் சிறிய தண்டனையைக் கொடுப்பார். அவர்கள் உடனே மனந்திரும்பினால் பெரிய தண்டனைக்கு தப்பித்துக்கொள்ளலாம். அவர்கள் தங்களுடைய ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளலாம். பாவிகள் கர்த்தருடைய சிறிய சிட்சைகளை அசட்டைபண்ணும்போது, கர்த்தர் அவர்களுக்கு பெரிய தண்டனைகளைக் கொடுப்பார். கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு கடுமையாயிருக்கும்.
கர்த்தர் பாவிகளைத் தண்டிக்கும்போது, அந்த தண்டனைக்கான காரணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: ""உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக் கடவன். அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்மேலும் மிருக ஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப்பண்ணும்'' (யாத் 9:8,9) என்று சொல்லுகிறார்.
சூளை என்பது சாதாரண அடுப்புச் சூளை மட்டுமல்ல. ஆதி 19:28 ஆவது வசனத்தில் இது சோதோமினுடைய அழிவின் புகையாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்தில் சூளை என்பது எகிப்து தேசத்தில் நரபலியிடும் இடத்தைக் குறிக்கலாம்.
எகிப்தியர் தைப்போன் என்னும் உக்கிரமான தெய்வத்தைச் சாந்தப்படுத்துவதற்காக மனுஷரைப் பலிசெலுத்தினார்கள் என்று எகிப்தியரின் வரலாறு கூறுகிறது. தங்கள்மீது வாதைகள் வந்ததினால் அவர்கள் தைப்போன் தெய்வத்திற்கு மனுஷரைப் பலிசெலுத்தியிருக்கலாம். மனுஷரைப் பலியாகச் செலுத்திய அந்த இடத்திலுள்ள சாம்பலை மோசே பயன்படுத்தி எகிப்தியர்மீது வாதையை உண்டுபண்ணுகிறார்.
தங்களுக்கு எந்தத் தெய்வம் பாதுகாப்பு கொடுக்கும் என்று எகிப்தியர் நம்பினார்களோ அந்தத் தெய்வத்தின் பலிபீடத்திலுள்ள சாம்பலையே மோசே பயன்படுத்தி, அவர்களுக்கு மறுபடியும் வாதையை அனுப்புகிறார்.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலே செங்கல் சூளைகளில் அடிமைகளாக வேலை செய்கிறார்கள். இந்த சூளைகளில்தான் எகிப்தியர்கள் இஸ்ரவேல் புத்திரரை ஒடுக்குகிறார்கள். இங்கே அவர்களை அடித்து துன்பப்படுத்துகிறார்கள். இஸ்ரவேல் புத்திரர் எந்த சூளையிலே வேதனைகளை அனுபவித்தார்களோ, அந்த சூளையின் சாம்பலை கர்த்தர் ஒரு கருவியாகப் பயன்படுத்தி, எகிப்தியரை வாதிக்கிறார்.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்தியரின் ஆளோட்டிகளை பார்க்கும்போது பயப்படுவார்கள். இப்போதோ, செங்கல் சூளையின் சாம்பலைப் பார்க்கும்போது எகிப்தியர்கள் பயப்படுகிறார்கள். மோசே சூளையின் சாம்பலை பார்வோனுடைய கண்களுக்கு முன் வானத்திற்கு நேராக இறைக்கிறார். அப்பொழுது எகிப்து தேசமெங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று. எகிப்திருக்கு சூளையின் சாம்பல் மூலமாக மகாபெரிய வாதை உண்டாயிற்று (யாத் 9:10).
மோசேயும் ஆரோனும் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நிற்கிறார்கள். மோசே அதை வானத்துக்குநேராக இறைக்கிறார்; அப்பொழுது மனிதர்மேலும் மிருக ஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று. அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர் எல்லார்மேலும் உண்டாயிற்று. அந்தக் கொப்புளங்கள் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாதிருக்கிறது (யாத் 9:10,11).
எகிப்தியர்மீது எழும்பின எரிபந்தமான கொப்புளங்கள், யோபுவின் சரீரத்தில் வந்த கொப்புளங்களைப்போல இருக்கிறது. இந்தக் கொப்புளங்கள் பிற்காலத்தில் எகிப்தின் எரிபந்தமான பருக்கள் என்று அழைக்கப்படுகிறது. ""நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்'' (உபா 28:27).
எகிப்து தேசத்தின் மந்திரவாதிகள் பார்வோனுடைய இருதயம் கடினப்படுவதற்கு உதவியாகயிருக்கிறார்கள். மோசே கர்த்தருடைய நாமத்தினால் ஒவ்வொரு அற்புதமாக செய்தபோது, எகிப்தியரின் மந்திரவாதிகளும் அதை செய்து காண்பித்தார்கள். அதை பார்த்தபோது பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது. கர்த்தர் பார்வோனை தண்டிக்கும்போது, அவருடைய மந்திரவாதிகளையும் தண்டிக்கிறார்.
எகிப்தியரின் மந்திரவாதிகளுக்கு உண்மையான வல்லமை எதுவுமில்லை. ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு முன்பாக எகிப்தியரின் தெய்வங்களாலும், அவர்களுடைய மந்திரவாதிகளாலும் நிற்க முடியவில்லை. (யாத் 8:19).
கர்த்தர் துன்மார்க்கரை தண்டிப்பார். அதே வேளையில், கர்த்தர் துன்மார்க்கருடைய துன்மார்க்கத்திற்கு துணைபோகிறவர்களையும் தண்டிப்பார். இதுவே கர்த்தருடைய நீதி. மோசே சூளையின் சாம்பலை வானத்திற்கு நேராக இறைத்தபோது, அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள் மேலும் உண்டாயிற்று. இதனால் மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாமற்போயிற்று.
ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்-யிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை (யாத் 9:12). பார்வோன் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்துவதோடு, அவன் தேவனுடைய கிருபைக்கும் எதிர்த்து நிற்கிறான். ஆகையினால் கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தின் ஆசைகளுக்கு அவனை ஒப்புக்கொடுத்துவிடுகிறார்.