சங்கீதம் 21 விளக்கம்



சங்கீதம் 21 விளக்கம்


    (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

    மேசியாவைப் பற்றிய நான்காவது சங்கீதம்


    பொருளடக்கம்


        1. இராஜாவாக அபிஷேகம் - மேசியாவுக்காக கர்த்தர் செய்துள்ள எட்டு காரியங்கள் - (21:1-7) 

        2. ஆளுகை - இராஜாவுக்காகக் கர்த்தர் செய்யப் போகும் எட்டு காரியங்கள் - (21:8-13) 


    இருபதாவது சங்கீதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தாவீது இராஜாவுக்காக கர்த்தரிடத்திலே ஜெபம்பண்ணுகிறார்கள். கர்த்தர் தாமே இராஜாவைப் பாதுகாத்து அவரை ஆசீர்வதிக்க வேண்டுமென்று விண்ணப்பம்பண்ணுகிறார்கள். கர்த்தர் இஸ்ரவேல் ஜனத்தாரின்  வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் கேட்டு தாவீது இராஜாவை ஆசீர்வதித்திருக்கிறார். யுத்தத்திலே அவருக்கு ஜெயத்தைக் கொடுத்திருக்கிறார். கர்த்தர் கொடுத்த கிருபைகளுக்காக, ஜனங்கள் இருபத்து ஒன்றாவது சங்கீதத்தில், அவருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறார்கள். 


    தாவீது பெற்றிருக்கிற ஜெயங்களுக்காக ஜனங்கள் அவருக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். கர்த்தர் தாவீதைக் கனப்படுத்தியிருக்கிறார். தாவீதுக்கு கர்த்தருடைய ஆசீர்வாதம் அதிகமாய்க் கிடைத்திருக்கிறது (சங் 21:1-6). தாவீதின் ராஜ்யத்திற்கு விரோதமாய் எழும்பியிருக்கிற சத்துருக்களை கர்த்தர் தம்முடைய மகத்துவமான வல்லமையினால் முற்றிலுமாக அழித்துப்போட்டார்.  சத்துருக்களுக்கு பூரண சங்காரமுண்டாயிற்று (சங் 21:7-13).


    தாவீதுக்கு கர்த்தருடைய ஆசீர்வாதம் சங் 21 : 1-6


    கர்த்தருடைய வல்லமை


    கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பில் எவ்வளவாய்க் களிகூருகிறார்!  (சங் 21:1) 


    தாவீது கர்த்தருடைய வல்லமையில் மகிழ்ச்சியாயிருக்கிறார்.  அவருடைய இரட்சிப்பிலே களிகூருகிறார். தாவீதுக்கு தன்னுடைய சொந்த பலத்திலோ  அல்லது அவருடைய சொந்த பராமக்கிரமத்திலோ மகிழ்ச்சியில்லை. அவர் தன்னுடைய சேனையின் திரட்சியிலோ அல்லது அவர்களுடைய வலிமையிலோ களிகூரவில்லை.  தன்னுடைய சேனையின் பலத்தினால் தனக்கு ஜெயமுண்டாகும் என்னும் நம்பிக்கைகூட தாவீதுக்கு இல்லை.  


    தாவீது கர்த்தருடைய  வல்லமையைச் சார்ந்திருந்து சத்துருக்கள்மீது  யுத்தம்பண்ணுகிறார். கர்த்தர் தாவீதுக்கு சத்துருக்கள்மீது ஜெயத்தைக் கொடுக்கிறார். யுத்தங்களிலே வெற்றி பெற்றாலும் தாவீது  தன்னுடைய சுயவல்லமையில் மகிழ்ச்சியாய் சந்தோஷப்படவில்லை. அதற்குப் பதிலாக அவர் கர்த்தருடைய வல்லமையில் மகிழ்ச்சியாயிருக்கிறார். தன்னோடு சேர்ந்து தன்னுடைய சேனையிலுள்ளவர்களும் கர்த்தருடைய வல்லமையில் மகிழ்ச்சியாயிருக்குமாறு அவர்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார். 


    தாவீது கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கும்போது         அவரோடு கூடயிருக்கிற அவருடைய சேனையிலுள்ளவர்களும் சந்தோஷமாயிருக்கவேண்டும். யுத்தங்களிலே கர்த்தர் கொடுத்த ஜெயங்களுக்காக அவரைத் துதிக்கவேண்டும். கர்த்தரை மகிமைப்படுத்தவேண்டும்.


    கர்த்தர் தாவீதுக்கு யுத்தங்களிலே வெற்றியைக் கொடுத்திருக்கிறார்.  இதனால் இஸ்ரவேல் ஜனங்கள் சந்தோஷமாயிருக்கிறார்கள். தாவீதும் சந்தோஷமாயிருக்கிறார்.  யுத்தத்திலே வெற்றி பெற்றதற்காக ஜனங்கள் தாவீதை வாழ்த்துகிறார்கள். ""கர்த்தாவே உம்முடைய வல்லமையிலே  இராஜா எங்களைப்போலவே மகிழ்ச்சியாயிருக்கிறார்'' என்று சொல்லுகிறார்கள். இராஜாவின் சந்தோஷத்திற்கு கர்த்தருடைய வல்லமையே காரணம்.  அதற்காக ஜனங்கள் கர்த்தரைத் துதிக்கிறார்கள். 


    இராஜா கர்த்தருடைய இரட்சிப்பிலே அதிகமாய்க் களிகூருகிறார். யுத்தம் கர்த்தருடையது.  யுத்தத்திலே ஜெயமும் கர்த்தருடையது. அதுபோலவே இரட்சிப்பும் கர்த்தருடையது. இராஜா கர்த்தருடைய  இரட்சிப்பிலே களிகூருவதற்காக ஜனங்கள் கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்திரம்பண்ணுகிறார்கள். கர்த்தரைக் கனம்பண்ணுகிறார்கள். 


    கடந்த கால ஆசீர்வாதங்கள்


        1. மனவிருப்பத்தின்படி தந்தருளினீர். (சங் 21:2)

        2. உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர்.  

        3. உத்தம ஆசீர்வாதங்களை தந்தருளினீர்  (சங் 21:3).

        4. சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர். 

        5. அவருக்கு  என்றென்றைக்குமுள்ள  தீர்க்காயுசை அளித்தீர்.      (சங் 21:4) - இது மேசியாவுக்கு மட்டுமே பொருந்தும். தாவீதுக்குப் பொருந்தாது. (அப் 2:27-32) 

        6. மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டினார் (எபி 2:7-18). 

        7.    நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குவார். (சங் 21:6; எபே 1:21-23; பிலி 2:9-11; 1பேதுரு 3:22). 

        8. கர்த்தருடைய  சமூகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குவார்      (சங் 21:6; எபி 12:1-2).


    விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர்


    அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா)  (சங் 21:2)


     கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் விண்ணப்பங்களுக்குச் செவிகொடுத்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். பல சமயங்களில்  நாம் ஜெபிப்பதற்கு முன்பாகவே கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து விடுகிறார். கர்த்தருடைய ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்வதற்கு  ஆயத்தப்படுவதற்கு முன்பாகவே அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். ஆனால் நமக்கோ கர்த்தருடைய ஆசீர்வாதத்தைக் குறித்து சந்தேகம் வந்துவிடுகிறது. கர்த்தர் நம்முடைய விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாரா என்று  சந்தேகப்படுகிறோம். கர்த்தரோ தம்முடைய பிள்ளைகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதவர். 


    கர்த்தர் தாவீதினுடைய மனவிருப்பத்தின்படி அவருக்குத் தந்தருளியிருக்கிறார்.  கர்த்தர் அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தை தள்ளாதிருக்கிறார். கர்த்தருடைய ஆசீர்வாதம் தாவீதுக்கு தாமதமில்லாமல் உடனடியாக கிடைக்கிறது. அவருடைய மனவிருப்பத்தின்படியெல்லாம் கர்த்தர் அவரை ஆசீர்வதிக்கிறார். கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணிய உடனே நமக்கு ஆசீர்வாதம் கிடைத்துவிட்டால் நம்முடைய இருதயத்தில் அவிசுவாசம் இருக்காது. 


    பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்


    உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கீரிடம் தரிப்பிக்கிறீர். அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர்  (சங் 21:3,4). 


    கர்த்தர் தாவீதின் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறார். அவருடைய சத்துருக்களோ  அவருடைய சிரசிலிருந்து கிரீடத்தை எடுத்துப்போட வகைதேடுகிறார்கள். தாவீதின் சிங்காசனத்தையே நீக்கிப்போடுவதற்கு சத்துருக்கள் சதிஆலோசனைபண்ணுகிறார்கள். ஆனால் கர்த்தரோ தாவீதுக்கு பொற்கிரீடம் தரிப்பித்து, அவருடைய ராஜ்யத்தைக் காத்துக்கொள்கிறார்.


    கர்த்தர் தாவீதினுடைய மனவிருப்பத்தின்படி அவருக்குத் தந்தருளுகிறார். தாவீது கர்த்தருடைய சமுகத்தில்  விண்ணப்பம்பண்ணும்போது, கர்த்தர் தாமே உத்தம ஆசீர்வாதங்களோடு அவருக்கு எதிர்கொண்டு வருகிறார். அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைக் கர்த்தர் ஒருபோதும் தள்ளுவதில்லை. தாவீது கர்த்தரிடத்தில்  ஆயுசைக் கேட்டார். கர்த்தரோ அவருக்கு ஆயுசைக் கொடுத்ததோடு, என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசையும் அவருக்கு அளித்தார். 


    தாவீது இந்தப் பூமியிலே எத்தனை வருஷம் ஜீவனோடு இருக்கப்போவதாக எதிர்பார்த்தாரோ, அதைவிட அதிகமான வருஷங்களை அவருடைய ஜீவனுக்குக் கூட்டிக்கொடுத்தார்.  தாவீதின் சரீரப்பிரகாரமான ஆயுசும் அதிகம். அது மாத்திரமல்ல தாவீதின் ராஜ்யம் நித்தியகாலமாய் அழியாமல் நிலைத்து நிற்கும். கர்த்தர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை  அளித்திருக்கிறார். 


    தாவீது யுத்தத்திற்குப் போனபோது சத்துருக்கள் மூலமாய் அவருடைய ஜீவனுக்கு ஆபத்து உண்டாயிற்று. தாவீது கர்த்தருடைய சமுகத்தில், ""தன்னுடைய ஜீவனைப் பாதுகாத்து  தனக்கு தீர்க்காயுசைத் தரவேண்டும்'' என்று விண்ணப்பம்பண்ணினார். கர்த்தரோ அவருக்கு தீர்க்காயுசைக் கொடுத்து, அவரைப் பரிபூரணமாய் ஆசீர்வதித்திருக்கிறார். தாவீதின் ராஜ்யம் மேசியாவின் ராஜ்யத்திலே  தொடர்ந்து வருகிறது. மேசியா தாவீதின் குமாரனாக இந்தப் பூமியிலே அவதரித்தார். இதனால் தாவீதின் ராஜ்யம் அழிந்துபோகாத நித்திய மகிமையுள்ளதாயிருக்கிறது. 


    மேன்மையும் மகத்துவமும்


    உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர் (சங் 21:5). 


    கர்த்தர் தாவீதுக்கு தம்முடைய இரட்சிப்பைத் தந்திருக்கிறார்.  கர்த்தருடைய இரட்சிப்பினால் தாவீதின் மகிமை பெரிதாயிருக்கிறது. தாவீது இஸ்ரவேல் தேசத்தை ஆட்சிபுரிந்த காலத்தில், புறஜாதி இராஜாக்கள் அண்டை தேசங்களை  ஆட்சிபுரிந்தார்கள். அவர்களுடைய மகிமையைவிட தாவீதின் மகிமை பெரிதாயிருந்தது. தாவீதுக்கு கர்த்தருடைய இரட்சிப்பு கிடைத்திருக்கிறது. தாவீது கர்த்தரால், கர்த்தருக்காக இரட்சிக்கப்பட்டிருக்கிறார். 


    இந்தப் பிரபஞ்சத்திலே நற்குணமுள்ளவர்களையும், நற்கிரியைகளை செய்கிறவர்களையும் ஜனங்கள் புகழுகிறார்கள். அவர்களுடைய புகழ்ச்சிக்கு  கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் இரட்சிப்பே காரணம். நம்முடைய நற்கிரியைகளில் கர்த்தருடைய இரட்சிப்பு வெளிப்படுகிறது. நம்முடைய இரட்சிப்பினால் கர்த்தர் மகிமைப்படுகிறார். 


    கர்த்தர் தாவீதுக்கு  தம்முடைய இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறார். இதனால்  தாவீதுக்கு கர்த்தருடைய ஆசீர்வாதமுண்டாயிற்று. தாவீதின் மூலமாய் ஏராளமான ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். கர்த்தருடைய ஆசீர்வாதம் தாவீதின் வழியாக அவருடைய சந்ததியாருக்கு  கடந்து வருகிறது. 


    கர்த்தர் தாவீதினுடைய மனவிருப்பத்தின்படி அவருக்குத் தந்தருளியிருக்கிறார்.  அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தை கர்த்தர் தள்ளவில்லை. கர்த்தர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள  தீர்க்காயுசை அளித்திருக்கிறார். கர்த்தர் தாவீதுக்கு தம்முடைய இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறார்.  தாவீது கர்த்தருடைய இரட்சிப்பிலே அதிகமாய்க் களிகூருகிறார். கர்த்தருடைய இரட்சிப்பினால் தாவீதின் மகிமை பெரிதாயிருக்கிறது. கர்த்தர் தாவீதுக்கு மேன்மையையும் மகத்துவத்தையும் அருளியிருக்கிறார்.  கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்போது, தாவீதைப்போல பூரண ஆசீர்வாதங்களினால் நிரப்புகிறார். கர்த்தர் நம்மை இரட்சிக்கும்போது நம்முடைய மகிமையும் பெரிதாயிருக்கும். 


    நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்


    அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்  (சங் 21:6). 


     கர்த்தர் தாவீதை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறார் என்னும் வாக்கியத்திற்கு, ""கர்த்தர் தாவீதை  உலகமெங்குமுள்ள எல்லா ஜனங்களுக்கும் நித்திய ஆசீர்வாதத்தை உடையவராக ஆக்குகிறார்'' என்று வேதபண்டிதர்கள் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். தாவீது  முழுஉலகத்திற்கும் நித்திய ஆசீர்வாதமுள்ளராயிருக்கிறார். பூமியின் குடிகளெல்லாம் தாவீதினால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். இனிமேலும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.  ஏனென்றால் தாவீதின் ஆசீர்வாதம் நித்திய ஆசீர்வாதமாயிருக்கிறது. 


    ""கர்த்தர் தாவீதை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறார்'' என்பது  ஒரு தீர்க்கதரிசன வாக்கியம். இந்தத் தீர்க்கதரிசனம் இயேசுகிறிஸ்துவில் நிறைவேறிற்று.  தாவீதின் காலத்தில் அவர் மூலமாய் இஸ்ரவேல் தேசத்தாருக்கு ஆசீர்வாதமுண்டாயிற்று. தாவீதின் சந்ததியில் வந்த இயேசுகிறிஸ்துவின் மூலமாய் முழுஉலகத்திற்கு ஆசீர்வாதம் வந்திருக்கிறது. இயேசுகிறிஸ்து உலக இரட்சகராகயிருக்கிறார்.  இயேசுகிறிஸ்துவின் ஆசீர்வாதம் நித்திய ஆசீர்வாதம். கிறிஸ்துவானவர் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். கர்த்தர் தாவீதை தம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறார். 


    தாவீதின் சத்துருக்கள்மேல் கர்த்தருடைய கோபம்

    சங் 21 : 7-13


    ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்


    ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்  (சங் 21:7).


    கர்த்தர் தாவீது ராஜாவுக்கும் இஸ்ரவேல் தேசத்தாருக்கும் அநேக நன்மைகளைச் செய்திருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகள்,  கர்த்தர் தங்களுக்குச் செய்த நன்மைகளையெல்லாம் நினைவுகூர்ந்து, சந்தோஷத்தோடும் நன்றியோடும் அவரைத் துதிக்கவேண்டும். சங்கீதக்காரர் தன்னுடைய ஜனங்களிடம் கர்த்தர் செய்த நன்மைகளுக்காக  அவரைத் துதிக்குமாறு சொல்லுகிறார். கர்த்தர் இனிமேல் தங்களுக்குச் செய்யப்போகிற நன்மைகளை விசுவாசத்தோடும் ஜெபத்தோடும் நோக்கிப் பார்க்குமாறும் ஆலோசனை சொல்லுகிறார். 


    தாவீது ராஜா  கர்த்தருடைய வல்லமையில் மகிழ்ச்சியாயிருக்கிறார்.  கர்த்தர் ராஜா மேல் நம்பிக்கையாயிருக்கிறார். இதனிமித்தமாய் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கு நன்றி சொல்லவேண்டும்.  ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கும்போது, அவருடைய ஆளுகை நீதியுள்ளதாயிருக்கும். அவர் ஜனங்கள்மேல் கரிசனையோடிருப்பார். வழக்குகளை நீதியாய் விசாரிப்பார்.  ஜனங்களும் பக்தியுள்ள ராஜாவின் காலத்தில் உற்சாகமாயிருப்பார்கள். 


    நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே நமக்கு ராஜாதி ராஜாவாகயிருக்கிறார். ராஜா பிதாவின்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்.  பிதாவின் வல்லமையிலே நம்முடைய ராஜாவாகிய இயேசுகிறிஸ்து மகிழ்ச்சியாயிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் நம்பிக்கையும் சந்தோஷமுமே நம்முடைய எல்லாசந்தோஷத்திற்கும், நம்பிக்கைக்கும் ஆதரமாயிருக்கிறது. 


    தாவீதின் ராஜ்யம் அழிந்துபோகாமல் நிலைத்திருக்குமென்று ஜனங்கள் உறுதியாய் நம்புகிறார்கள். உன்னதமானவருடைய தயவு  தாவீதுக்குக் கிடைத்திருக்கிறது. கர்த்தருடைய தயவினால் தாவீது அசைக்கப்படாதிருப்பார். தன்னுடைய சுயவல்லமையினாலோ அல்லது  சுயபராக்கிரமத்தினாலோ தாவீதால் நிலைத்து நிற்கமுடியாது. கர்த்தருடைய தயவு இருந்தால் மாத்திரமே தாவீதினால் நிலைத்து நிற்க முடியும். உன்னதமானவருடைய தயவே தாவீதை  நிலைத்து நிற்கச் செய்கிறது. தாவீது சத்துருக்கள் நிமித்தமும், அவர்கள் மூலமாய் வந்த யுத்தங்கள் நிமித்தமும் அசைக்கப்படாதிருக்கிறார். 


    கர்த்தருடைய வலதுகரம்


    உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.  உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப் போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.   அவர்கள் கனியை பூமியி-ராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரி-ராதபடி ஒழியப்பண்ணுவீர். அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்கமாற்போயிற்று. அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி, அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்        (சங் 21:8-12).  


    தாவீதின் ராஜ்யத்திற்கு விரோதமாக அநேக சத்துருக்கள் எழும்பியிருக்கிறார்கள். இவர்களெல்லோரும் அழிந்துபோவார்கள் என்று  இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்குள் முழுநம்பிக்கையாயிருக்கிறார்கள். கர்த்தர் இதுவரையிலும் தாவீதுக்கு ஜெயத்தைக் கட்டளையிட்டிருக்கிறார்.  தாவீதின் கரங்களுடைய கிரியைகளை கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார். கர்த்தரே தாவீதின் கரங்களை யுத்தத்திற்குப் பழக்குவித்தவர். கர்த்தருடைய கிருபையும், அவருடைய அநுக்கிரகமும் தாவீதோடு எப்போதும் கூடயிருக்கிறது.  தாவீதுக்கு இதுவரையிலும் உதவி செய்த கர்த்தர் இனிமேலும் உதவிசெய்வார். தாவீதை அவருடைய சத்துருக்களிடமிருந்து இதுவரையிலும் பாதுகாத்த கர்த்தர் இனிமேலும் பாதுகாப்பார். 


    கர்த்தர் தாவீதை   தமக்குப் பிரியமானவராகக் கண்டார். அவரைத் தமக்குச் சொந்தமானவராகத் தெரிந்துகொண்டார். தாவீதை தம்மிடமாகச் சேர்த்துக்கொண்டார். இதனால் தாவீதின் சத்துருக்கள் அவர்மேல் கோபமாயிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் காலத்திலும் யூதர்கள் அவருக்கு விரோதமாயிருந்தார்கள். அவர்கள் ஒளியைப் பகைத்ததினால் இயேசுகிறிஸ்துவையும் பகைத்தார்கள். சத்துருக்கள் இயேசுகிறிஸ்துவைப் பகைப்பதற்கு  நியாயமான காரணம் எதுவுமில்லை. சத்துருக்கள் தாவீதைப் பகைத்தாலும், அவர்கள் இயேசுகிறிஸ்துவைப் பகைத்தாலும், அவர்கள் தேவனையே பகைக்கிறார்கள்.


    ""என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.  வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.  முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று'' (யோவா 15:23-25). 


    தாவீதிற்கு விரோதமாய் எழும்பியிருக்கிற சத்துருக்கள் தங்களை சத்துருக்கள் என்று பிரத்தியட்சமாய்க் காண்பிப்பதில்லை. அவர்கள்  நல்லவர்கள்போல பாசாங்கு பண்ணுகிறார்கள். மாய்மாலமாய் ஜீவிக்கிறார்கள். தாவீதிடத்தில் சிநேகிதர்களைப்போல வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய உள்ளத்திலோ கபடும் வஞ்சகமும் நிரம்பியிருக்கிறது. 


    சத்துருக்களிடத்தில் நீதியில்லை. அவர்கள் நீதியைவிட்டு வெகுதூரம் விலகிப்போய்விட்டார்கள். அவர்கள் மறைவிடங்களில் ஒளிந்திருந்து தாவீதுக்கு விரோதமாக சதிஆலோசனை பண்ணுகிறார்கள்.  தாவீதைப் பிடிப்பதற்கு மறைவான இடங்களில் கண்ணிகளை வைக்கிறார்கள். தங்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று ஆணவமாய் நினைக்கிறார்கள். ஆனாலும் கர்த்தருக்கு மறைவாக அவர்களால் எங்கும்  ஒளிந்து கொள்ள முடியாது. கர்த்தருடைய கை அவருடைய சத்துருக்கள் எல்லோரையும் எட்டிப் பிடிக்கும். அவருடைய வலதுகரம் தாவீதையும், கர்த்தரையும் பகைக்கிறவர்களை கண்டுபிடிக்கும்         (சங் 21:8).  


    கர்த்தர் தாவீதின் சத்துருக்கள்மீது கோபமாயிருக்கிறார். தாவீதுக்கு சத்துருக்களாயிருக்கிறவர்கள் கர்த்தருக்கும் சத்துருக்களாயிருக்கிறார்கள்.            கர்த்தர் அவர்கள்மீது கோபப்படுகிறார். கர்த்தர் தம்முடைய கோபத்தின் காலத்திலே, தம்முடைய சத்துருக்களை அக்கினி சூளையாக்கிப்போடுகிறார். தமது கோபத்திலே கர்த்தர் அவர்களை அழிக்கிறார். அக்கினி அவர்களை பட்சித்துப்போடும் (சங் 21:9).        


    கர்த்தர் தம்முடைய சத்துருக்களை அழிக்கும்போது, அவர்களுடைய கனியும் அழிந்துபோகும், அவர்களுடைய சந்ததியும் அழிந்துபோகும். கர்த்தர் தம்முடைய சத்துருக்களை அழிக்கும்போது,அவர்களுடைய கனியை பூமியிலிராதபடிக்கு அழித்துப்போடுவார். அவர்களுடைய சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி  ஒழியப்பண்ணுவார் (சங் 21:11). 


    சத்துருக்கள் தாவீதுக்கு விரோதமாய் பொல்லாங்கு நினைத்தார்கள்.  அவருக்கு தீவினை செய்ய எத்தனம்பண்ணினார்கள். ஆனால் ஒன்றும் வாய்க்காமல் போயிற்று. சத்துருக்கள் தாவீதுக்கு விரோதமாக மாத்திரமே யுத்தம்பண்ண வேண்டுமென்று எத்தனம்பண்ணினார்கள். ஆனால் அவர்களுக்கோ கர்த்தரோடு யுத்தம்பண்ண வேண்டியதாயிற்று. தாவீதைப் பகைத்தவர்களுக்கு இப்போது தேவனையும் பகைக்க வேண்டியதாயிற்று. ராஜ்யபாரத்திலிருந்து தாவீதை தள்ளிப்போடவேண்டுமென்று சதிஆலோசனை பண்ணியவர்களுக்கு, இப்போது கர்த்தருடைய சிங்காசனத்திற்கு விரோதமாக சதிஆலோசனை பண்ண வேண்டியதாயிற்று. இவர்களுடைய பொல்லாங்குகளும், தீவினைகளும் ஒன்றும் வாய்க்காமல் போயிற்று (சங் 21:11). 


    கர்த்தருடைய கோபத்திற்கு அவருடைய சத்துருக்கள் இலக்காகயிருக்கிறார்கள். கர்த்தர் தம்முடைய வில்லிலே நாணேற்றும்போது, அவருடைய சத்துருக்களே அவருக்கு இலக்கு. கர்த்தர் தம்முடைய அம்புகளை நாணேற்றி, தம்முடைய சத்துருக்களுக்கு நேரே விடுகிறார்.  அவருடைய அம்புக்கு யாரும் தப்பிக்க முடியாது. கர்த்தருடைய குறி ஒருபோதும் தப்பிப்பதில்லை. கர்த்தர் நாணேற்றி அம்புகளை விடும்போது அவை பிசகுவதுமில்லை (சங் 21:12). 


    வருங்கால ஆசீர்வாதங்கள் 


        1.    கர்த்தருடைய கை, சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்      (சங் 21:8).

        2. வலதுகரம் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.

        3. கர்த்தர் கோபத்திலே, சத்துருக்களை அழிப்பார் (சங் 21:9). 

        4. சத்துருக்களை அக்கினிச் சூளையாக்கிப் போடுவார்  

        5. அக்கினி அவர்களைப் பட்சிக்கும்

        6. சத்துருக்கள் கனியைப் பூமியிலிராதபடி அழிப்பார் (சங் 21:10).

        7.    அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப் பண்ணுவார்.

        8. அவர்களை இலக்காக வைத்து, அம்புகளை நாணேற்றி, அவர்கள் முகத்திற்கு நேரேவிடுவார் (சங் 21:12).


    கர்த்தருடைய பலமும் வல்லமையும்


    கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக்கீர்த்தனம் பண்ணுவோம்  (சங் 21:13). 


    தாவீது கர்த்தருடைய பலத்திலும் வல்லமையிலும் நம்பிக்கையாயிருக்கிறார்.  கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவருக்காக எழும்பி வருவார். தாவீது தன்னுடைய பலத்திலும், தன்னுடைய வல்லமையிலும் நம்பிக்கை வைக்காமல், கர்த்தருடைய பலத்திலும் வல்லமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறார்.  நம்முடைய தேவன் சேனைகளின் கர்த்தராயிருக்கிறார். அவர் ஆவிகளின் பிதாவாகயிருக்கிறார். அவர் நம்முடைய பலவீனத்திலே, தம்முடைய பலத்தினால் நம்மை இடைக்கட்டுகிறார். தாவீதுக்கு கர்த்தருடைய பலம் கிடைத்திருக்கிறது. அவர் சோர்ந்துபோயிருக்கிற வேளைகளில் கர்த்தர் தாமே அவரை உற்சாகப்படுத்துகிறார்.  


    தாவீது கர்த்தருடைய பெலத்தையும் வல்லமைûயும் நினைவுகூர்ந்து, ""கர்த்தாவே உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தர் எழுந்தருளும்போது தாவீதின் சத்துருக்கள் எல்லோரும் முறிந்துவிழுவார்கள். தாவீதுக்கு ஜெயமுண்டாகும்.  அப்போது தாவீதும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருடைய வல்லமையைப்பாடி கீர்த்தனம்பண்ணுவார்கள்.  


     



    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.