சங்கீதம் 20 விளக்கம்
(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
இரண்டாவது நம்பிக்கையின் சங்கீதம்
பொருளடக்கம்
1. நாம் நம்பிக்கை வைக்கக்கூடிய ஆறுகாரியங்கள் - அவருடைய நாமம், பரிசுத்த ஸ்தலம், ப-, இரட்சிப்பு, ஜெபம், வல்லமை - (20:1-6)
2. வெவ்வேறு காரியங்களில் நம்பிக்கை வைப்பதும் அதன் விளைவுகளும் - (20:7-9)
இருபதாவது சங்கீதம் ஒரு ஜெபசங்கீதமாகும், தாவீது இராஜாவுக்காக கர்த்தரிடத்தில் ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறார்கள். அவர்கள் இராஜாவுக்காக தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்கள் (சங் 20:1-4). கர்த்தருடைய இரட்சிப்பினால் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். கர்த்தருடைய ஜனங்களுக்கு ஜெயம் கிடைக்குமென்றும் (சங் 20:5), கர்த்தர் தாமே தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்றும் (சங் 20:6) விசுவாசித்து ஜனங்கள் கர்த்தரைத் துதிக்கிறார்கள். ஜனங்களுக்காகவும் இராஜாவுக்காகவும் பொதுவான ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது (சங் 20:7,8). ஜனங்களுக்காக விசேஷித்த ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது (சங் 20:9).
தாவீதுக்காக ஜெபம் சங் 20 : 1-5
கர்த்தர் தாவீதின் ஜெபத்தை கேட்பாராக
ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக (சங் 20:1).
இருபதாவது சங்கீதத்திற்கு ""தாவீதின் ஜெபம்'' என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மெய்யாகவே தாவீதுக்காக ஏறெடுக்கப்படும் ஜெபமாகும். நாம் நமக்காகவும் ஜெபிக்கவேண்டும். மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். நம்முடைய சிநேகிதர்களுக்காக நாம் ஜெபிக்கும்போது, கர்த்தரிடத்தில் என்னென்ன காரியங்களுக்கெல்லாம் விண்ணப்பம்பண்ணலாம் என்பதை இந்த சங்கீதத்தின் மூலமாய் நாம் அறிந்துகொள்ளலாம். பவுல் தனக்காக ஜெபிக்குமாறு தன்னுடைய சிநேகிதரிடத்தில் கருத்தாய் வேண்டிக்கொண்டார்.
ஜனங்கள் தாவீது இராஜாவுக்காக கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்கள். ""ஆபத்து நாளிலே கர்த்தர் உமது (தாவீதின்) ஜெபத்தைக் கேட்பாராக'' என்று ஜனங்கள் ஜெபம்பண்ணுகிறார்கள். ""உமது (தாவீதின்) வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக'' (சங் 20:5) என்றும் ஜனங்கள் விண்ணப்பம்பண்ணுகிறார்கள். தாவீது மிகுந்த ஆபத்திலிருக்கிறார். அவருக்கு பலவிதமான ஏமாற்றங்கள் உண்டாயிற்று. தாவீதின் சத்துருக்கள் அவரை அதிகமாய் நெருக்குகிறார்கள். தாவீது தன்னுடைய சரீரத்திலும், ஆவியிலும் சோர்ந்து போய்விட்டார்.
தாவீது இஸ்ரவேல் தேசத்திற்கு இராஜாவாயிருக்கிறார். சிங்காசனத்தில் அமர்ந்திருந்து ஜனங்களை ஆட்சிபுரிகிறார். அவருடைய தலையில் கிரீடம் சூட்டப்பட்டிருக்கிறது. தாவீதின் இருதயத்தில் கிருபையும் அன்பும் நிரம்பியிருக்கிறது. ஆனாலும் அவருக்கும் ஆபத்து வந்திருக்கிறது. நம்முடைய நற்குணங்களுக்கும், நமக்கு ஆபத்து வருவதற்கும் சம்பந்தமில்லை. தாவீதுக்கு ஆபத்து வந்ததுபோல, கர்த்தருடைய பிள்ளைகள் யாருக்கு வேண்டுமானாலும் ஆபத்து வரலாம்.
நமக்கு ஆபத்துக்கள் வரும்போது நாம் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணவேண்டும். நம்முடைய சிநேகிதர்களுக்கு ஆபத்து வரும்போது, நாம் அதைக் கண்டும் காணாதவர்போல இருக்கக்கூடாது. நாம் அவர்களுக்காகவும் ஜெபம்பண்ணவேண்டும். அவர்களுடைய ஜெபத்தை கர்த்தர் கேட்கமாட்டார் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர்களோடு நாமும் சேர்ந்து, அவர்களுக்காக ஜெபம்பண்ணும்போது, அவர்களுக்கு கர்த்தருடைய கிருபை அதிகமாய்க் கிடைக்கும். நாம் ஒருவரையொருவர் ஜெபத்தில் தாங்கவேண்டும்.
ஜனங்கள் கர்த்தரைப்பற்றிச் சொல்லும்போது, அவரை ""யாக்கோபின் தேவன்'' என்று சொல்லுகிறார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு யாக்கோபு முற்பிதாவாகயிருக்கிறார். யாக்கோபின் தேவனே இவர்களுடைய தேவன். ஆகையினால் ஜனங்கள் ஜெபம்பண்ணும்போது, ""யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு (தாவீதுக்கு) உயர்ந்த அடைக்கலமாவதாக'' என்று சொல்லி ஜெபிக்கிறார்கள். கர்த்தர் யாக்கோபுக்கு அடைக்கலமாயிருந்தார். அதுபோலவே அவர் தாவீதுக்கும் அடைக்கலமாயிருக்க வேண்டுமென்று ஜனங்கள் விண்ணப்பம்பண்ணுகிறார்கள்.
உறுதியான நம்பிக்கையின் அறிக்கை
1. ஆபத்து நாளிலே கர்த்தர் ஜெபத்தைக் கேட்பார் (சங் 20:1; சங் 34:15, 17-19; சங் 37:39; சங் 59:16).
2. தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாகும் (சங் 20:1; சங் 82:3).
3. பரிசுத்த ஸ்தலத்திலிருந்து ஒத்தாசை அனுப்புவார் (சங் 20:2; சங் 77:13; சங் 96:6; எபி 8:2).
4. சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார் (சங் 20:2; சங் 50:2; ஏசா 2:3; ஏசா 59:20).
5. வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவார் (சங் 20:5; சங் 34:9-10; சங் 84:11; மத் 21:22).
6. பரிசுத்த வானத்திலிருந்து ஜெபத்தைக் கேட்பார் (சங் 20:6).
7. தேவனாகிய கர்த்தர் நமது நம்பிக்கையாயிருப்பார் (சங் 20:7; சங் 125:1).
தேவனுடைய நாமத்தின் ஆசீர்வாதங்கள்
1. அடைக்கலம்
2. கொடி - ƒஇதைச்சுற்றி யுத்தம் பண்ணுவோம் (சங் 20:5)
3. நம்பிக்கையும் இரட்சிப்பின் உபாயமும் (சங் 20:7)
கர்த்தர் சீயோனிலிருந்து தாவீதை ஆதரிப்பாராக
அவர் பரிசுத்த ஸ்தலத்தி-ருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனி-ருந்து உம்மை ஆதரிப்பாராக. நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனப-யைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா) அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக (சங் 20:2-4).
சீயோன் கர்த்தருடைய வாசஸ்தலம். அதுவே அவருடைய பரிசுத்த ஸ்தலம். கர்த்தருடைய வாசஸ்தலத்திலிருந்து கிருபைகளும் இரக்கங்களும் புறப்பட்டு வரும். தேவனுடைய இரக்கம் இன்பமாயிருக்கும். கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களுக்கு, தம்முடைய பரிசுத்த ஸ்தலத்திலிருந்து ஒத்தாசை அனுப்புகிறார். கர்த்தரே தம்முடைய பிள்ளைகளை ஆதரிக்கிறார். ""சீயோன்'' என்னும் வார்த்தை கர்த்தருடைய சபையையும் குறிக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவருடைய சபையில் ஆறுதலும், ஆசீர்வாதமும், உதவியும், ஒத்தாசையும், ஆதரவும் உண்டு.
தாவீது கர்த்தருடைய ஆலயத்திலே அவருக்கு காணிக்கைகளைச் செலுத்துகிறார். சர்வாங்கதகனபலிகளையும் செலுத்துகிறார். தாவீது செலுத்துகிற காணிக்கைகளையெல்லாம் கர்த்தர் நினைவுகூரவேண்டும். அவர் செலுத்துகிற சர்வாங்கதகனபலியை கர்த்தர் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஜனங்கள் தாவீதுக்காக விண்ணப்பம்பண்ணுகிறார்கள். தாவீது கர்த்தருடைய சமுகத்தில் பலிகளைச் செலுத்தி, தன்னுடைய விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார். கர்த்தர் தாவீதின் விண்ணப்பத்திற்குச் செவிகொடுத்து அவருக்கு ஜெயத்தைத் தரவேண்டுமென்று ஜனங்கள் விண்ணப்பம்பண்ணுகிறார்கள்.
கர்த்தர் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கொடுக்கும்போது, அவர் நம்முடைய காணிக்கைகளையும், சர்வாங்க தகனபலிகளையும் பிரியமாய் ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். நம்முடைய சர்வாங்கதகனபலிகளை கர்த்தர் பிரியமாய் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவர் தாமே வானத்திலிருந்து தம்முடைய பரிசுத்த அக்கினியை அனுப்பவேண்டும். நம்முடைய பலியின்மீது தேவனுடைய அக்கினி வந்து இறங்கும்போதுதான், அது தேவனுக்கு சுகந்த வாசனையுள்ள பலியாகயிருக்கும். சுகந்தவாசனை தேவனுக்குப் பிரியமானது.
கர்த்தர் நம்முடைய துதிகளையும், ஸ்தோத்திர பலிகளையும் அங்கீகரிக்கிறார். இவை ஆவிக்குரிய பலிகள். கர்த்தர் தம்முடைய ஆவியினால் நம்முடைய ஆத்துமாவை உயிர்ப்பிக்கும்போது, நாம் ஸ்தோத்திர பலிகளை ஏறெடுக்கிறோம். கர்த்தருடைய ஆவியானவர் நம்முடைய ஆத்துமாவிலே விசுவாசத்தையும், தேவஅன்பையும் கொடுக்கிறார். நமக்குள்ளே மெய்யான தேவபக்தியும், தேவஅன்பும் இருக்கும் போது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொளுந்துவிட்டு எரியும். கர்த்தர் நம்முடைய ஸ்தோத்திர பலிகளை அங்கீகரித்திருக்கிறார் என்பதற்கு இதுவே அடையாளம்.
கர்த்தர் தாவீதினுடைய மனவிருப்பத்தின்படியெல்லாம் அவருக்குத் தந்தருளவேண்டுமென்று ஜனங்கள் ஜெபம்பண்ணுகிறார்கள். தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷன். தேவனுடைய சிந்தனையே தாவீதின் இருதயத்திலும் இருக்கிறது. தாவீது ஒருபோதும் கர்த்தருடைய சித்தத்திற்கு விரோதமாக சிந்திக்கமாட்டார். கர்த்தருடைய விருப்பமே தாவீதின் விருப்பம். ஜனங்களுக்கும் தாவீதின் இருதயத்தைப்பற்றித் தெரியும். ஆகையினால் அவர்கள் விசுவாசத்தோடு ""கர்த்தர் தாவீதின் மனவிருப்பத்தின்படி அவருக்குத் தந்தருளுவாராக'' என்று ஜெபம்பண்ணுகிறார்கள்.
தாவீது கர்த்தருக்குப் பிரியமான காரியங்களை மாத்திரமே சிந்திப்பார். அதை மாத்திரமே செய்வார். தேவனுக்கு விரோதமான திட்டம் எதுவும் தாவீதின் இருதயத்தில் இல்லை. கர்த்தரைத் துதிக்கிற துதியும், அவருடைய சித்தத்தின் பிரகாரமாக கிரியை நடப்பிக்கவேண்டும் என்னும் வாஞ்சையுமே தாவீதின் இருதயத்தில் நிரம்பியிருக்கிறது. தாவீது எப்போதும் கர்த்தருக்கு எப்படி பிரியமாய் நடப்பது என்பது பற்றியும், கர்த்தருடைய சித்தத்தை எப்படி நிறைவேற்றுவது என்பது பற்றியுமே ஆலோசனை செய்து கொண்டிருப்பார். ஜனங்களுக்கு தாவீதின் ஆலோசனை நன்றாகத் தெரியும். ஆகையினால் அவர்கள் கர்த்தரிடத்தில் தாவீதுக்காக விண்ணப்பம்பண்ணும்போது, ""கர்த்தர் தாவீதின் வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றுவாராக'' என்று விசுவாசத்தோடு விண்ணப்பம்பண்ணுகிறார்கள்.
இரண்டு விதமான காணிக்கைகள்
1. அன்பின் காணிக்கைகள் - இதில் இரத்தம் சேரவில்லை.
2. சர்வாங்க தகனபலி - இதில் இரத்தம் சேர்ந்துள்ளது.
தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக (சங் 20:5).
தாவீது தன்னுடைய ஜனங்களுக்கு நல்ல இராஜாவாகயிருக்கிறார். ஜனங்களும் இராஜாவின்மேல் பிரியமாயிருக்கிறார்கள். இதனிமித்தமாய் அவர்கள் தங்களுக்காக ஜெபம்பண்ணும்போது, தங்களுடைய இராஜாவுக்காகவும் கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்கள். கர்த்தர் தங்களுடைய விண்ணப்பத்தைக்கேட்டு, தாவீது இராஜாவுக்கு சமாதானத்தையும் இரட்சிப்பையும் கொடுப்பார் என்று விசுவாசிக்கிறார்கள். விசுவாசித்து சந்தோஷப்படுகிறார்கள். ""நாங்கள் தாவீதின் இரட்சிப்பினால் மகிழ்ச்சியடைகிறோம்'' என்று சந்தோஷமாய்ச் சொல்லுகிறார்கள்.
கர்த்தர் தாவீதை இரட்சித்திருக்கிறார். இதனால் அவருடைய ராஜ்யத்தின் ஜனங்களெல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். கர்த்தர் தாவீதுக்கு சமாதானத்தையும், செழிப்பையும் கட்டளையிட்டிருக்கிறார். இதனிமித்தமாய் ஜனங்களுக்கு மிகுந்த சந்தோஷமுண்டாயிற்று. ""எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்'' என்று ஜனங்கள் பயபக்தியாய் ஜெபம்பண்ணுகிறார்கள்.
ஜனங்கள் தாவீதுக்காக ஜெபம்பண்ணுவது ஒரு தீர்க்கதரிசன ஜெபம் என்று வேதபண்டிதர்கள் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். அவர்கள் தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்காக ஜெபிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவில் நம்முடைய ஜெபங்கள் எல்லாம் கேட்கப்படுகிறது. கிறிஸ்துவானவரே நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார். அவரே நம்முடைய மீட்பின் கிரயத்தைச் செலுத்தியிருக்கிறார். நம்முடைய ஆத்தும மீட்புக்காக நிறைவேற்ற வேண்டிய எல்லா கிரியைகளையும் அவர் செய்து முடித்திருக்கிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, நமக்காக அந்தகாரத்தின் அதிகாரங்களோடு யுத்தம்பண்ணுகிறார்.
இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே மிகுந்த பாடுகளையும் வேதனைகளையும் அனுபவித்தார். அவருடைய ஆத்துமா மிகுந்த துக்கப்பட்டது. வேதனையினால் வியாகுலப்பட்டது. ""அவர் மாம்சத்தி-ருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்'' (எபி 5:7). கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஸ்தலத்திலிருந்து அவருக்கு ஒத்தாசை அனுப்பினார். இந்த வாக்கியம் தாவீதையும், இயேசுகிறிஸ்துவையும் குறிக்கும் என்று வேதபண்டிதர்கள் வியாக்கியானம் சொல்லுகிறார்கள்.
தாவீதின் ஜெபம் சங் 20 : 6-9
கர்த்தர் ஜெபத்தைக் கேட்பார்
கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த ஜெபத்தைக் கேட்பார் (சங் 20:6).
தனக்காக தன்னுடைய ஜனங்களும் ஜெபிக்கவேண்டுமென்று தாவீது விரும்புகிறார். கர்த்தர் தன்னுடைய ஜெபத்தைக் கேட்பதுபோல, தன்னுடைய தேசத்து ஜனங்களின் ஜெபத்தையும் கேட்டு பதில் கொடுப்பார் என்று தாவீது விசுவாசிக்கிறார். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் நமக்காக ஜெபம்பண்ணும்போது, நமக்கு தேவனுடைய கிருபையும் இரக்கமும் அதிகமாய்க் கிடைக்கும். தாவீது இதை உணர்ந்து, ""கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்'' என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார்.
கர்த்தர் யாக்கோபின் தேவனாயிருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் யாக்கோபின் சந்ததியாராயிருக்கிறார்கள். யாக்கோபின் தேவனுடைய நாமம் தாவீதுக்கு உயர்ந்த அடைக்கலமாயிருக்கிறது. யாக்கோபின் சந்ததியார் தனக்காக ஜெபம்பண்ணும்போது, யாக்கோபின் தேவன் அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டு, தனக்கு தம்முடைய பரிசுத்த ஸ்தலத்திலிருந்து ஒத்தாசை அனுப்புவார் என்றும், சீயோனிலிருந்து தன்னை ஆதரிப்பார் என்றும் தாவீது விசுவாசிக்கிறார்.
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஸ்தலத்திலிருந்து நம்முடைய வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் கேட்பார். அவர் சீயோனிலிருந்து தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களை ஆதரிப்பார். கர்த்தருடைய சபையே, இந்த சங்கீதத்தில் ""பரிசுத்த ஸ்தலம்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. ""அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்'' (எபி 9:24).
கர்த்தர் தமது வலதுகரத்தினால் இரட்சிப்பின் வல்லமைகளைச் செய்கிறார். கர்த்தர் நம்முடைய ஜெபங்களைக் கேட்கும்போது இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பிக்கும் அவருடைய வலது கரம் அவரோடு கூடவே இருக்கிறது. கர்த்தர் நம்மை ஒரு நிருபத்தினாலோ அல்லது வாயின் வார்த்தையினாலோ இரட்சிக்காமல் தம்முடைய வலதுகரத்தினால் நம்மை இரட்சிக்கிறார். கர்த்தர் தாமே தம்முடைய வலதுகரத்தினால் இரட்சிப்பின் வல்லமைகளைச் செய்து நம்மை மீட்டுக்கொள்கிறார்.
கர்த்தர் தம்முடைய வலதுகரத்தினால் செய்கிற இரட்சிப்பின் வல்லமைகளை நமக்குக் காண்பிக்கிறார். கர்த்தர் தனக்காக செய்த பலத்த கிரியைகளை தாவீது தன் செவிகளினால் கேள்விப்படுகிறார். கர்த்தர் தம்முடைய பரிசுத்த வானத்திலிருந்து தாவீதின் ஜெபத்தைக் கேட்கிறார். அவருக்குப் பதில் கொடுக்கிறார். தம்முடைய வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளை தேவன் தாவீதுக்குக் காண்பிக்கிறார்.
தேவனாகிய கர்த்தருடைய நாமம்
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம். அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம் (சங் 20:7,8).
கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருப்பார்கள். கர்த்தர் தங்களோடு ஐக்கியமாயிருப்பதை நினைத்து அவரை நன்றியோடு துதிப்பார்கள். கர்த்தர் தாமே தம்முடைய பிள்ளைகளுக்கு தம்மைப்பற்றி வெளிப்படுத்தியிருக்கிறார். இது கர்த்தருடைய பிள்ளைகளுக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய சிலாக்கியம். கர்த்தர் நமக்கு தம்முடைய தெய்வீக வல்லமையை வெளிப்படுத்தியிருக்கிறார். தம்முடைய கிருபையையும், இரக்கத்தையும் கர்த்தர் தாமே நமக்குக் காண்பிக்கிறார். நாம் ஆராதிக்கிற தேவன் இன்னாரென்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகையினால் நாம் கர்த்தரை மாத்திரமே நம்பி அவரிடத்தில் நம்முடைய முழுநம்பிக்கையையும் வைத்திருக்கிறோம்.
இந்தப் பிரபஞ்சத்தின் ஜனங்கள் உலகப்பிரகாரமான காரியங்களில் நம்பிக்கை வைக்கிறார்கள். உலகக்காரியங்களைக் குறித்து மேன்மை பாராட்டுகிறார்கள். இவர்களுக்கு கர்த்தருடைய கிருபையைவிட உலக ஐசுவரியங்களே பெரியதாய் தெரிகிறது. கர்த்தரே தம்முடைய பிள்ளைகளைப் பாதுகாக்கிறவர். உலகப்பிரகாரமான ஜனங்களோ இரதங்களும், குதிரைகளும் தங்களைப் பாதுகாக்கும் என்று வீணாய் நம்புகிறார்கள்.
சிலர் இரதங்களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள். தங்களுக்கு திரளான எண்ணிக்கையில் இரதங்களும், குதிரைகளும் இருந்தால், யுத்தத்திலே நிச்சயமாய் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். இவர்கள் கர்த்தரை நம்பாமல் தங்கள் இரதங்களையும் குதிரைகளையும் நம்புகிறார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய யுத்தம் நியமிக்கப்பட்டிருக்கிறது. கர்த்தரே நமக்காக யுத்தம்பண்ணவேண்டும். நாம் யுத்தம்பண்ணும்போது நமக்கு கர்த்தருடைய உதவிகளும், ஒத்தாசைகளும், கிருபைகளும், இரக்கங்களும் தேவை. கர்த்தரே நம்முடைய பெலன். நாம் கர்த்தரை மாத்திரமே நம்பவேண்டும். உலகப்பிரகாரமான ஜனங்கள் இரதங்களையும் குதிரைகளையும் நம்புவதுபோல, நாம் உலகப்பிரகாரமான காரியங்களில் நம்பிக்கை வைக்கக்கூடாது.
இஸ்ரவேல் ஜனத்தாரை குதிரைகள் இரட்சிக்கவில்லை. இரதங்களும் இரட்சிக்கவில்லை. தேவனுடைய விரலே அவர்களை இரட்சித்தது. தேவன் தம்முடைய ஜனங்களுக்காக பலத்த காரியங்களைச் செய்தார். அவர்களுக்காக யுத்தம்பண்ணினார். யுத்தம் கர்த்தருடையது. ஜெயமும் கர்த்தருடையது. இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இரதங்களும் குதிரைகளும் இல்லாதிருந்தும், அவர்கள் பார்வோனிடமிருந்து தப்பித்தார்கள். பார்வோன் தன்னுடைய இரதங்களையும் குதிரைகளையும் நம்பினான். இஸ்ரவேல் ஜனங்களோ கர்த்தரையும், அவர் தமது வலதுகரத்தினால் நடப்பிக்கிற இரட்சிப்பின் வல்லமைகளையும் நம்பினார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகள், கர்த்தர் தங்களுக்காக செய்கிற பெரிய காரியங்களையெல்லாம் அறிந்திருக்கிறார்கள். ஆகையினால் அவர்கள் இரதங்களையும் குதிரைகளையும் குறித்து மேன்மை பாராட்டாமல், தங்கள் தேவனாகிய கர்த்தரைக் குறித்தே மேன்மை பாராட்டுகிறார்கள்.
பார்வோனும் அவனுடைய இரதவீரர்களும் இஸ்ரவேல் ஜனங்களை துரத்திச் சென்றார்கள். தங்களுடைய குதிரைகளின் பலமும், இரதங்களின் வேகமும் தங்களுக்கு ஜெயம் தரும் என்று எதிர்பார்த்தார்கள். அவர்கள் நம்பின இரதங்களும் குதிரைகளும் அவர்களை இரட்சிக்க முடியவில்லை. செங்கடலிலே அவர்களும், அவர்களோடு சேர்ந்து அவர்களுடைய குதிரைகளும் இரதங்களும் முழுகி அழிந்துபோனார்கள். கர்த்தரோ தம்முடைய பலத்த கரத்தினால் தம்முடைய பிள்ளைகளை பார்வோனிடமிருந்து இரட்சித்தார். இஸ்ரவேல் ஜனங்கள் இதை நினைவுகூர்ந்து, ""நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்'' என்று பயபக்தியாய்ச் சொல்லுகிறார்கள்.
தாவீதுக்கு விரோதமாக சத்துருக்கள் யுத்தம்பண்ணினார்கள். சோபாவின் இராஜா அநேகக் குதிரைகளோடும், இரதங்களோடும் தாவீதோடு யுத்தம்பண்ண வந்தான். ""ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதியண்டையில் இருக்கிற சீமையைத் திரும்பத் தன் வசமாக்கிக்கொள்ளப்போகையில், தாவீது அவனையும் முறிய அடித்து, அவனுக்கு இருந்த இராணுத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்'' (2சாமு 8:3,4).
இரதங்களையும் குதிரைகளையும் குறித்து மேன்மை பாராட்டியவர்கள் முறிந்துவிழுந்தார்கள். தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்து மேன்மை பாராட்டிய இஸ்ரவேல் ஜனங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறார்கள். கர்த்தர் தம்மை நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார். அவர்களுடைய கால்கள் தள்ளாடாதவாறு அவர்களை பாதுகாப்பார். அவர்கள் முறிந்து கீழே விழுந்துவிடாதவாறு கர்த்தர் அவர்களுக்காக யுத்தம்பண்ணுவார். கர்த்தருடைய பிள்ளைகள் கீழே விழுந்தாலும், தேவனுடைய உதவியினாலும் ஒத்தாசையினாலும், மறுபடியும் எழுந்து நிமிர்ந்து நிற்பார்கள். சத்துருக்களோ கீழே விழும்போது முறிந்து விழுவார்கள். அவர்களால் மறுபடியும் எழும்ப முடியாது.
மேன்மை பாராட்டும் காரியங்கள்
1. இரதங்கள் (ஏசா 31:1; ஏசா 36:9)
2. குதிரைகள் (சங் 33:17; சங் 147:10)
3. கர்த்தருடைய நாமம்
இரதங்களையும் குதிரைகளையும் நம்புவதற்குப் பதிலாக கர்த்தரை நம்புவதே உத்தமம்.
கர்த்தாவே இரட்சியும்
கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக (சங் 20:9).
இஸ்ரவேல் ஜனங்கள் தாவீது இராஜாவுக்காக ஜெபம்பண்ணும்போது, தங்கள் ஜெபத்தை, ""ஓசன்னா'' என்று சொல்லி முடிக்கிறார்கள். ஓசன்னா என்னும் வார்த்தைக்கு ""கர்த்தாவே இரட்சியும்'' என்று பொருள். கர்த்தர் தாவீதை இரட்சிக்கும்போது அவரும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார், அவர் மூலமாய் இஸ்ரவேல் ஜனங்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள். கர்த்தர் தாவீது இராஜாவுக்கு யுத்தத்திலே ஜெயத்தைக் கட்டளையிடும்போது, அது அவருக்கும் ஜெயமாயிருக்கும், இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஜெயமாயிருக்கும்.
ஜனங்கள் இராஜாவாகிய தாவீதினிடத்தில் நீதிக்காவும் நியாயத்திற்காகவும், இரக்கத்திற்காகவும் விண்ணப்பம்பண்ணுகிறார்கள். கர்த்தர் தாவீதை ஆசீர்வதித்து, அவருடைய சிங்காசனத்திலே அவரை நிலைத்திருக்கச் செய்யும்போது, ஜனங்களெல்லோரும் தங்களுடைய தேவைகளை, வழக்குகளை இராஜாவினிடத்தில் சொல்லுவார்கள். அப்போது, ""நாங்கள் கூப்பிடுகிற நாளிலே இராஜா எங்களுக்கு செவிகொடுப்பாராக'' என்று இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்கள்.
இஸ்ரவேல் ஜனங்களைப்போலவே நாமும் நம்முடைய தேசத்தின் தலைவர்களுக்காக ஜெபம்பண்ணவேண்டும். அதிகாரிகளுக்காக ஜெபம்பண்ணவேண்டும். நீதிபதிகளுக்காக ஜெபம்பண்ணவேண்டும். அவர்கள் நீதியாய் ஆளுகை செய்யவேண்டும் என்றும், நீதியான தீர்ப்புக்களைச் சொல்லவேண்டுமென்றும் நாம் அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும். கர்த்தரே அவர்களை அதிகாரத்தில் அமரச்செய்திருக்கிறார். அதிகாரிகள் தங்களுக்குக்கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தை துஷ்பிரயோகம்பண்ணி விடக்கூடாது. அவர்கள் நீதியாயும், நேர்மையாயும், கரிசனையோடும், இரக்ககுணத்தோடும் மனுஷ நேயத்தோடும் ஜனங்களை ஆளுகை செய்யவேண்டும்.