காரிருள் Thick darkness யாத் 10:21-29
யாத் 10:21. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
யாத் 10:22. மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள்மட்டும் காரிருள் உண்டாயிற்று.
யாத் 10:23. மூன்றுநாள்மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது.
யாத் 10:24. அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும்மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.
யாத் 10:25. அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் ப-களையும் சர்வாங்க தகனப-களையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும்.
யாத் 10:26. எங்கள் மிருகஜீவன்களும் எங்களோடேகூட வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளி-ருந்து எடுக்க வேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.
யாத் 10:27. கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.
யாத் 10:28. பார்வோன் அவனை நோக்கி: என்னை விட்டு அப்பாலே போ; நீ இனி என்முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான்.
யாத் 10:29. அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.
கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது அடுத்த வாதையாக காரிருளை வரப்பண்ணுகிறார். எகிப்து தேசத்தில் காரிருள் இருக்கும் போது ஒருவரையொருவர் காணமுடியாது. நரகத்தில் வெளிச்சம் இருக்காது. எகிப்து தேசத்தில் நரக இருளைப்போல மூன்றுநாள் காரிருள் உண்டாகும்.
""விளக்கு வெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே'' (வெளி 18:23).
எகிப்து தேசத்தில் காரிருள் உண்டாகும்போது ஜனங்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் தடவிக்கொண்டிருப்பார்கள். காரிருள் எகிப்தியருக்கு பயத்தையும், திகிலையும், நடுக்கத்தையும் கொடுக்கும்.
யூதர்களுடைய பாரம்பரிய நம்பிக்கையின் பிரகாரம், காரிருளில் பேய்கள் நடமாடும் என்று சொல்லுகிறார்கள். பேய்களின் விநோதமான கூக்குரல்களைக் கேட்டு ஜனங்கள் அதிகமாய்ப் பயப்படுவார்கள். அப்போது அவர்களுடைய மனச்சாட்சியும் அவர்களைக் குற்றப்படுத்தும். காரிருளின் பயங்கரத்தோடு, மனச்சாட்சியின் பயங்கரமும் அதிகமாயிருக்கும்.
கர்த்தர் மோசேயை நோக்கி, தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு'' என்று சொல்லுகிறார். மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டுகிறார்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள்மட்டும் காரிருள் உண்டாயிற்று (யாத் 10:21,22).
தேவனுடைய கோலை நீட்டிய மோசே, இப்பொழுது தன் கையை வானத்திற்கு நேராக நீட்டுகிறார். வானத்தின் தேவனுக்கு மோசே கீழ்ப்படிகிறார். தேவன் சர்வ வல்லமையுள்ளவர். அற்புதங்களைச் செய்கிறவர். அவரை நோக்கி, மோசே கையை நீட்டும்போது கர்த்தர் இஸ்ரவேல் ஜனத்தாருக்காகக் கிரியை செய்கிறார்.
தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் என்பது காரிருளைக் குறிக்கிறது. காரிருளில் ஒன்றையும் பார்க்க முடியாது. தடவிப்பார்க்கலாம். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு யாரும் போகமுடியாது. (யாத் 10:23). வேதாகமத்தில் இதுபோன்ற காரிருள் யாத் 10:22; யாத் 20:21; உபா 5:22; 1இராஜா 8:12; 2நாளா 6:1; யோபு 38:9; யோவே 2:2; செப் 1:15 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது.
யாத் 19:9,16; 2சாமு 22:12; யோபு 22:14; யோபு 26:8; யோபு 37:11; சங் 18:11-12 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் காரிருளும் இந்தக் கார்மேகமும் ஒன்றாக இருக்கலாம். காரிருளும், கார்மேகமும் ஒரே பொருளை உடையவை. நரகத்தின் இருட்டை விவரிப்பதற்காகக் காரிருள் என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது (மத் 8:12; மத் 22:13; மத் 25:30; 2பேதுரு 2:4,17; யூதா 1:6,13).
நரகத்தில் இருட்டும், அக்கினியும் இருக்கும். இவை ஏன் சேர்ந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அவை நித்திய காலமாக இருக்கும். (ஏசா 66:24; மத் 13:42-50; மத் 25:41,46; மாற்கு 9:32-49; வெளி 14:9-11; வெளி 20:10#15; வெளி 21:8; வெளி 22:15).
பரிசுத்த வேதாமத்தில், ஒரு சில இடங்களில் காரிருளைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
1. பூமி சிருஷ்டிக்கப்பட்டபோது இருந்த காரிருள். (யோபு 38:9) பூமியின்மீது வருங்காலத்தில் சூரியன் கறுப்புக் கம்பளியைப்போல கறுத்திருக்கும். (வெளி 6:12)
2. பூமியின் ஆழத்தின்மேல் இருள் இருந்தது. (ஆதி 1:2).
3. ஆபிரகாமைத் திகிலும், காரிருளும் மூடிக் கொண்டது. (ஆதி 15:12).
4. எகிப்தின்மீது காரிருள் வாதையாக வந்தது. (யாத் 10:21-22).
5. எகிப்தியருக்கும், இஸ்ரவேலருக்கும் நடுவே அந்தகாரம் இருந்தது. (யாத் 14:20; யோசு 24:7).
6. நியாயப்பிரமாணம் சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட போது, தேவன் கார்மேகத்திற்குள் இருந்தார். (யாத் 20:21; உபா 4:11; உபா 5:22#23; எபி 12:18).
7. இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்தபோது பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. (மத் 27:45; மாற்கு 15:33; லூக்கா 23:44).
எகிப்து தேசத்தில் மூன்றுநாள் காரிருள் உண்டாயிற்று. அவர்களுக்கு பகல் வேளையே இல்லை. மூன்றுநாள் காரிருள் என்பது ஆறு இரவு பொழுதுகளாகும். அவையெல்லாம் ஒரே இரவு பொழுதாக, மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இருக்கிறது. மூன்று நாள் மட்டும் எகிப்தியர் ஒருவரையொருவர் காணவுமில்லை. அவர்களில் ஒருவரும் தம்மிடத்தை விட்டு எழுந்திருக்கவுமில்லை (யாத் 10:23).
ஆவிக்குரிய காரிருள் என்பது ஆவிக்குரிய அடிமைத்தனமாகும். சாத்தான் மனுஷருடைய ஆவிக்குரிய கண்களைக் குருடாக்குகிறான். அப்போது அவர்களால் ஆவிக்குரிய காரியங்களைக் காணமுடியாது. அது மாத்திரமல்ல. சாத்தான் மனுஷருடைய ஆவிக்குரிய கைகளையும் கால்களையும் கட்டிப்போடுகிறான். அப்போது அவர்களால் கர்த்தருக்காக கிரியை செய்யவும் முடியாது. அவர்களால் பரலோகத்தை நோக்கி போகவும் முடியாது. அவர்கள் காரிருளில் அமர்ந்திருப்பார்கள். தாங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தை விட்டு எழுந்திருக்கவுமாட்டார்கள்.
பார்வோனுடைய மனதும் குருடாயிருக்கிறது. எகிப்து தேசத்திலே காரிருள் உண்டானதுபோல, பார்வோனுடைய இருதயத்திலும் காரிருள் உண்டாயிருக்கிறது. எகிப்து தேசத்தார் தங்களுடைய அக்கிரமங்களினாலும், துன்மார்க்கங்களினாலும், கொடூரமான குணங்களினாலும் இஸ்ரவேலின் விளக்கை அணைத்துப்போட முயற்சி செய்கிறார்கள். அவர்கள் இஸ்ரவேலின் எரிகிற விளக்கை அவித்துப்போட பார்க்கிறார்கள். ஆகையினால் கர்த்தர் தம்முடைய நீதியினால் எகிப்தியரின் விளக்கை அணைத்துப்போடுகிறார். எகிப்து தேசமெங்கும் காரிருள் உண்டாயிற்று.
இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருக்கிறது (யாத் 10:23). கர்த்தர் எகிப்தியருக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் வித்தியாசம் காண்பிக்கிறார். எகிப்தியருக்கு காரிருளும், இஸ்ரவேலருக்கு வெளிச்சமும் உண்டாயிற்று.
எகிப்து தேசமெங்கும் காரிருள் உண்டானதினால், பார்வோன் மனம்திரும்பி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்தைவிட்டு அனுப்பிவிடவேண்டுமென்று நினைக்கிறான்.
பார்வோன் மோசேயை அழைப்பித்து, ""நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும்மாத்திரம் நிறுத்தப்படவேண்டும் ; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம்'' (யாத் 10:24) என்று சொல்லுகிறான்.
பார்வோன் இப்போது கர்த்தருக்கு பலியிட இஸ்ரவேல் புத்திரரின் குடும்பத்தாரையெல்லாம் அனுப்புவதற்கு சம்மதிக்கிறான். ஆனால் அவர்கள் ஆடுமாடுகளை எகிப்து தேசத்திலேயே விட்டு விட்டுப்போகவேண்டும் என்று சொல்லுகிறான். இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்திலே கர்த்தருக்கு பலி செலுத்தப்போகிறார்கள். அவர்கள் ஆடுமாடுகளை கர்த்தருக்கு பலியாக செலுத்துவார்கள். ஆனால் பார்வோனோ இஸ்ரவேல் புத்திரரை வெறுங்கையோடு அனுப்பவேண்டுமென்று நினைக்கிறான்.
பார்வோன் எல்லோரையும் போக அனுமதிக்கிறான். ஆனால் இஸ்ரவேலரின் ஆடுகளையும், மாடுகளையும் போக அனுமதிக்கவில்லை. மிருகஜீவன்கள் போகா விட்டால் இஸ்ரவேலர்கள் வனாந்தரத்திற்குப் போகமாட்டார்கள் என்று பார்வோன் நினைக்கிறான். ஆனால் மோசேயோ பார்வோனிடம் ""எங்கள் மிருகஜீவன்களும் எங்களோடேகூட வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை'' என்று கூறிவிடுகிறார் (யாத் 10:25-26).
மோசேயோ, தங்களோடு ஆடுமாடுகளையும் அழைத்துக்கொண்டு போகவேண்டுமென்று சொல்லுகிறார். மோசே பார்வோனை நோக்கி, ""நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் ப-களையும் சர்வாங்க தகனப-களையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும். எங்கள் மிருகஜீவன்களும் எங்களோடேகூட வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளி-ருந்து எடுக்க வேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது'' (யாத் 10:25,26) என்று சொல்லுகிறார்.
எப்படிப்பட்ட ஆராதனை செய்ய வேண்டும் என்பது எவ்வளவு பலிகள் செலுத்த வேண்டுமென்பதும் இஸ்ரவேலருக்குத் தெரியாது. அவர்களுக்கு இன்னும் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படவில்லை. ஆகையினால் தங்களோடு எல்லா மிருகஜீவன்களையும் அழைத்துச் செல்ல வேண்டுமென்று மோசே விரும்புகிறார். தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளி-ருந்து எடுத்து, பலிசெலுத்த வேண்டுமென்று மோசே விரும்புகிறார்.
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்திலே கர்த்தருக்கு பலி செலுத்தப்போகிறார்கள். ஆடுமாடுகள் இல்லாமல் பலி செலுத்த முடியாது. ஆகையினால் ஆடு மாடுகளையும் தங்களோடு அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்று மோசே சொல்லுகிறார். ஆனால் பார்வோனோ, இஸ்ரவேல் புத்திரரோடு ஆடுமாடுகளை அனுப்ப மறுத்துவிடுகிறான்.
கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருக்கிறான் (யாத் 10:27).
பார்வோன் மோசேயை நோக்கி, ""என்னை விட்டு அப்பாலே போ; நீ இனி என்முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய்'' என்று சொல்லுகிறான். அப்பொழுது மோசே, ""நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை'' (யாத் 10:28,29) என்று சொல்லுகிறார்.
மோசே சொன்ன பதில் பார்வோனுக்குக் கோபமூட்டிற்று. மோசே இனிமேல் பார்வோனைப் பார்த்தால் மோசேக்கு மரணதண்டனை கொடுக்கப்படும் என்று கண்டிப்போடு கூறிவிடுகிறான். மோசேயையோ, ஆரோனையோ கொல்வதற்குத் தேவன் பார்வோனை அனுமதிக்கமாட்டார். ஏனெனில் தேவனுடைய திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. தேவன் அவர்களுக்கு ஒரு விசேஷித்த ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார். இஸ்ரவேல் புத்திரரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, கானான் தேசத்திற்குள் வழிநடத்திச் செல்ல வேண்டும். தேவனுடைய ஊழியத்திற்காகத் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் தேவன் நியமித்து வைத்திருக்கும் ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாக மரித்துப் போகமாட்டார்கள். தேவனுக்குக் கீழ்ப்படியவில்லையென்றால் அவர்களுக்கு மரணம் வரலாம். (1இராஜா 13)
ஒரு ƒசில ராஜாக்கள் கர்த்தருடைய ஊழியக்காரரின் வார்த்தைகளைக் கேட்டு கோபமடைந்திருக்கிறார்கள். பரிசுத்த வேதாகமத்தில் அவர்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு:
1. பார்வோன் ஆபிரகாமால் கோபமடைந்தான். (ஆதி 12:10-20)
2. அபிமெலேக்கு ஆபிரகாமால் கோபமடைந்தான். (ஆதி 20)
3. அபிமெலேக்கு ஈசாக்கால் கோபமடைந்தான். (ஆதி 26:6-16)
4. பார்வோன் மோசேயால் கோபமடைந்தான். (யாத் 10:24-29)
5. பாலாக்கு பிலேயாமினால் கோபமடைந்தான். (எண் 24:10-11)
6. யெரொபெயாம் ஒரு தீர்க்கதரிசியினால் கோபமடைந்தான். (1இராஜா 13:4)
7. ஆகாப் மிகாயாவினால் கோபமடைந்தான். (1இராஜா 22:6-28)
8. நாகமான் எலிசாவினால் கோபமடைந்தான். (2இராஜா 5:10-19)
9. ஆசா அனானியால் கோபமடைந்தான். (2நாளா 16:7-11)
10. யோவாஸ் சகரியாவினால் கோபமடைந்தான். (2நாளா 24:20-22)
11. உசியா அசரியாவினால் கோபமடைந்தான். (2நாளா 26:16-21)
12. யோயாக்கீம் ஊரியாவினால் கோபமடைந்தான். (எரே 26:20-24)
13. செதேக்கியா எரேமியாவினால் கோபமடைந்தான். (எரே 32:1-5)
14. ஏரோது யோவான்ஸ்நானனால் கோபமடைந்தான். (மத் 14:3)