சங்கீதம் 23 விளக்கம்
(தாவீதின் சங்கீதம்.)
மேசியாவைப் பற்றிய ஆறாவது சங்கீதம்
பொருளடக்கம்...
ஏழுவிதமான ஊழியம் - மேசியாவின் பதினான்கு ஆசீர்வாதங்கள் - (23:1-6)
கர்த்தருடைய பரிசுத்தவான்கள் எல்லோரும் இருபத்து மூன்றாவது சங்கீதத்தை சந்தோஷமாய்ப் பாடுகிறார்கள். ஆத்தும திருப்தியோடும், இருதயத்தில் சந்தோஷத்தோடும் கர்த்தருடைய பிள்ளைகள் இந்த சங்கீதத்தை நீண்டகாலமாய் பாடி வருகிறார்கள். தாவீது தனக்கும் கர்த்தருக்குமுள்ள ஐக்கியத்தைப்பற்றிச் சொல்லுகிறார். கர்த்தர் அவருடைய மேய்ப்பராயிருக்கிறார் (சங் 23:1).
கர்த்தர் தனக்குச் செய்த நன்மையான காரியங்களையெல்லாம் தாவீது இங்கு ஒவ்வொன்றாகச் சொல்லுகிறார். ஒரு மேய்ப்பர் தன் ஆடுகளை மேய்ப்பதுபோல, கர்த்தர் தாவீதை பாதுகாத்து பராமரிக்கிறார் (சங் 23:2,3,5). கர்த்தர் தாவீதின் மேய்ப்பராயிருப்பதினால் அவர் தாழ்ச்சியடையமாட்டார். அவர் பொல்லாப்புக்கு பயப்படமாட்டார் (சங் 23:4). கர்த்தர் தாவீதை ஒருபோதும் கைவிடமாட்டார். கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் அவருக்கு எப்போதும் கிடைக்கும். தன் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தன்னைத் தொடரும் என்று தாவீது சொல்லுகிறார் (சங் 23:6).
நல்ல மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளுக்காக தன் ஜீவனையும் கொடுக்கிறார். இருபத்திரண்டாவது சங்கீதத்தில் தன்னுடைய ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுத்த இயேசுகிறிஸ்துவைப்பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த சங்கீதத்திலோ நல்ல மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளை நல்லமுறையில் பராமரிப்பது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் சங் 23 : 1...
சங் 23:1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நன் தாழ்ச்சியடையேன்.
தாவீதுக்கு கர்த்தரே அவருடைய மேய்ப்பராயிருக்கிறார். ஆகையினால் அவருக்குத் தேவையான நன்மை எதுவும் குறைவுபடாது. அவருக்குத் தாழ்ச்சி உண்டாகாது. ஒரு காலத்தில் தாவீதும் ஆடுகளை மேய்க்கிற மேய்ப்பராக இருந்தவர்தான்.
""தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத் தொழுவங்களி-ருந்து அவனை எடுத்தார். கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டு வந்தார். இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்'' (சங் 78:70-72).
தாவீதுக்கு ஆடுகளை மேய்க்கும் அனுபவம் உண்டு. ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை எப்படியெல்லாம் கரிசனையோடு மேய்க்க வேண்டுமென்பது தாவீதுக்கு நன்றாய்த் தெரியும். ஆடுகள் தங்கள் மேய்ப்பனிடமிருந்து எதையெல்லாம் எதிர்பார்க்கும் என்பதும் தாவீதுக்கு நன்றாகத் தெரியும். மேய்ப்பன் தன் ஆடுகளைப் பாதுகாக்கவேண்டும். ஒரு சமயம் தாவீது தன்னுடைய ஆட்டுக்குட்டிகளில் ஒன்றை காப்பாற்றுவதற்காக அவர் தன்னுடைய ஜீவனையே பணயம் வைத்தார்.
கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு மேய்ப்பராயிருக்கிறார். மேய்ப்பர் தன்னுடைய ஆடுகளை பாதுகாத்து பராமரிப்பதுபோல கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து பராமரிக்கிறார். இயேசுகிறிஸ்து தமக்கும் தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கும் இடையேயுள்ள உறவைப்பற்றிச் சொல்லும் ""நானே நல்லமேய்ப்பன்'' (யோவா 10:11) என்று சொல்லுகிறார்.
நல்ல மேய்ப்பர் தம்முடைய ஆடுகளைத் தொழுவத்திற்குள் வழிநடத்துகிறார். அவற்றை உள்ளும் புறமுமாகப் போஷித்துப் பராமரிக்கிறார். ஆடுகள் தங்கள் மேய்ப்பனுடைய சத்தத்தைக் கேட்டு அவருக்குப் பின் செல்லும். தாவீதுக்கு கர்த்தரே மேய்ப்பராயிருக்கிறார். ஆகையினால் ""நான் தாழ்ச்சியடையேன்'' என்று விசுவாசத்தோடு உறுதியாகச் சொல்லுகிறார். தன்னுடைய தேவைகளையெல்லாம் கர்த்தர் சந்திப்பார். தனக்கு எப்போது, எது தேவைப்படுகிறதோ, அதை கர்த்தர் தனக்குக் கொடுப்பார் என்று தாவீது சொல்லுகிறார்.
தாவீதுக்கு விருப்பமானதை கர்த்தர் கொடுக்கவில்லையென்றால், அதைப் பெற்றுக்கொள்வதற்கு தாவீது தகுதியானவரல்ல, அல்லது, தாவீது விரும்புவது அவருக்கு நல்லதல்ல, அல்லது கர்த்தர் தாவீதுக்கு அதை தமக்குச் சித்தமான வேளையிலே கொடுப்பார் என்பதே பொருளாகும். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து பராமரிக்கிறவர். கர்த்தர் நமக்கு நன்மையான ஈவுகளை மாத்திரமே கொடுப்பார். ஒருவேளை நன்மையானது எது என்று நமக்குத் தெரியாமலிருக்கலாம். கர்த்தர் மாத்திரமே எல்லாவற்றையும் அறிந்திருக்கிறவர். அவரே சர்வஞானமுள்ளவர்.
சங்கீதம் 23-இல் கூறப்பட்டுள்ள பரிபூரணமான காரியங்கள்...
1. கர்த்தர் - பரிபூரணமான தேவன் (சங் 23:1)
2. என் மேய்ப்பராயிருக்கிறார் - பரிபூரண பாதுகாப்பாளர்
3. தாழ்ச்சியடையேன் - பரிபூரண திருப்தி
4. அவர் என்னை மேய்க்கிறார் - பரிபூரண வழிநடத்துபவர் (சங் 23:2)
5. அமர்த்துதல் - பரிபூரண ஓய்வு
6. புல்லுள்ள இடங்கள் - பரிபூரண ஆதரிப்பு
7. வழிநடத்துகிறார் - பரிபூரண வழிநடத்துதல் (சங் 23:2-3)
8. அமர்ந்த தண்ணீர் - பரிபூரண சமாதானம்
9. தேற்றுகிறார் - பரிபூரண மீட்பு (சங் 23:3)
10. ஆத்துமா - பரிபூரண சுயம்
11. நீதியின் பாதை - பரிபூரண பரிசுத்தம் (சங் 23:3; எபி 12:14)
12. நாமத்தினிமித்தம் - பரிபூரண நாமம்
13. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் - பரிபூரண நம்பிக்கை (சங் 23:4)
14. பொல்லாப்புக்குப் பயப்படேன் - பரிபூரண பாதுகாப்பு
15. தேவரீர் என்னோடே கூட இருக்கிறார் - பரிபூரண பங்காளி
16. உமது கோல் - பரிபூரண பாதுகாப்பு
17. உமது தடி - பரிபூரண உதவி
18. என்னைத் தேற்றுபவர் - பரிபூரண ஆறுதல்
19. ஆயத்தப்படுத்துவார் - பரிபூரண பராமரிப்பு (சங் 23:5)
20. பந்தி - பரிபூரண போஜனம்
21. எனக்கு முன்பாக - பரிபூரண பிரசன்னம்
22. சத்துருக்களுக்கு முன்பாக - பரிபூரண பாதுகாப்பு
23. என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுவார் - பரிபூரண அபிஷேகம்
24. என் பாத்திரம் நிரம்பி வழிகிறது - பரிபூரண சந்தோஷம்
25. நிலைத்திருத்தல் - பரிபூரண உத்திரவாதம்
26. நன்மை - பரிபூரண உதவி
27. கிருபை - பரிபூரண மனதுருக்கம்
28. என் ஜீவனுள்ள நாள் எல்லாம் - பரிபூரண ஜீவன்
29. வாசம் பண்ணுதல் - பரிபூரண வாசஸ்தலம்
30. நீடித்த நாட்களால் கர்த்தருடைய வீட்டில் - பரிபூரண முடிவு
ஆடுகளின் ஆசீர்வாதங்கள்...
1. கர்த்தர் அவைகளின் மேய்ப்பர் (சங் 23:1)
2. நன்மை குறைவுபடாது (சங் 34:9-10; சங் 84:11)
3. புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறார் (சங் 23:2)
4. அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார் (யோவான் 4:14; யோவான் 7:37-39)
5. ஆத்துமாவைத் தேற்றுவார் (சங் 23:3)
6. கர்த்தர், தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துவார்
7. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பாதுகாப்பாக வழிநடத்துவார் (சங் 23:4)
8. நான் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்
9. மேய்ப்பருடைய கோலும், தடியும் என்னைத் தேற்றும்
10. என் சத்துருக்களுக்கு முன்பாக, எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தினார் (சங் 23:5)
11. என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணினார் (சங் 104:15; மத் 26:6-7; மாற்கு 14:8; லூக்கா 7:45-50) பழங்காலத்தில் விருந்துகளில் பங்கு பெறுவதற்கு முன்பு நடைபெறும் காரியம்.
12. என் பாத்திரம் நிரம்பி வழிகிறது
13. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் (சங் 23:6)
14. நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் (யோவான் 14:1-3; எபி 11:10-16; எபி 13:14; வெளி 21-22)
புல்லுள்ள இடங்கள் சங் 23 : 2-4...
சங் 23:2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
சங் 23:3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
சங் 23:4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
கர்த்தர் தாவீதுக்கு நல்ல மேய்ப்பராகயிருக்கிறார். ஆகையினால் தாவீது ஒன்றுக்கும் பயப்படவேண்டியதில்லை. கர்த்தர் தாவீதின் மேய்ப்பராயிருக்கும்போது அவரை ஆபத்துக்களோ, நாசமோசங்களோ அணுகாது. கர்த்தர் தாவீதைப் பாதுகாத்துக்கொள்வார். கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களை புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறார். நாமெல்லோருமே கர்த்தருடைய மேய்ச்சலிலுள்ள ஆடுகள்.
கர்த்தர் நம்முடைய மேய்ப்பராயிருப்பதினால் நமக்கு விசேஷித்த ஆசீர்வாதங்கள் உண்டு. அவையாவன : 1. கர்த்தர் நம்மை புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறார். 2. கர்த்தர் நம்மை அமர்ந்த தண்ணீர்களண்டையில் கொண்டுபோய் விடுகிறார். 3. கர்த்தர் நம்முடைய ஆத்துமாவைத் தேற்றுகிறார்.
தேவனுடைய நல்ல கரத்திலிருந்து நாம் அநேக நன்மைகளைப் பெற்றுக்கொள்கிறோம். நம்முடைய பிதாவாகிய தேவன் நமக்கு அன்றன்றுள்ள அப்பங்களைக் கொடுத்து நம்மைப் போஷிக்கிறார். நம்முடைய ஜீவியத்திற்குத் தேவையான எல்லா ஆசீர்வாதங்களையும், ஆறுதல்களையும், பாதுகாப்புக்களையும், பராமரிப்புக்களையும் நாம் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்கிறோம்.
துன்மார்க்கனுக்கு புல்லுள்ள இடங்கள் நியமிக்கப்படவில்லை. அவன் வறண்ட நிலத்திலே தன்னுடைய போஜனத்திற்காக சுற்றி அலைவான். வனாந்தரத்திலே அவனுக்கு புசிக்க போஜனமும் கிடைக்காது, தாகத்தைத் தணிக்க தண்ணீரும் கிடைக்காது. துன்மார்க்கருக்கு அமர்ந்த தண்ணீர்களும் நியமிக்கப்படவில்லை.
துன்மார்க்கன் தன்னுடைய மாம்சத்தின் இச்சைகளை நிறைவேற்ற விரும்புகிறான். பேராசைப்படுகிறான். தனக்கு எல்லாம் அதிகமாய் வேண்டுமென்று ஆசைப்படுகிறான். கர்த்தர் அவனுக்கு புல்லுள்ள இடங்களைக் கொடுக்காமல், வறண்ட நிலங்களையும், பாழாய்ப்போன வனாந்தரங்களையும் திரளாய்க் கொடுக்கிறார். இதனால் அவனுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை கரம்பிடித்து வழிநடத்துகிறார். புல்லுள்ள இடங்கள் எங்கே இருக்கிறது என்பது கர்த்தருக்குத் தெரியும். நாம் கர்த்தருடைய கரங்களிலிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்கிறோம். நாம் அனுதினமும் தேவனுடைய நன்மைகளை ருசிபார்க்கிறோம். நமக்கு உலகப்பிரகாரமான சம்பத்தும், ஐசுவரியமும் கொஞ்சமாயிருக்கலாம். ஆனாலும் கர்த்தர் நமக்குக் கொடுக்கிற புல்லுள்ள இடங்கள் திரளாயிருக்கும்.
""துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது'' (சங் 37:16). ""சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது'' (நீதி 15:16,17).
கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களை ஓய்வாக அமர்ந்திருக்கச் செய்கிறார். தம்முடைய பிள்ளைகளுக்கு மனஅமைதியையும், போதுமென்னும் திருப்தியையும் கொடுக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு உலகப்பிரகாரமான ஆசீர்வாதத்தின் பங்கு குறைவாயிருந்தாலும், அவர்கள் அதில் திருப்தியோடிருப்பார்கள். உலகப்பிரகாரமான காரியமாயிருந்தாலும், ஆவிக்குரிய காரியமாயிருந்தாலும் கர்த்தருடைய பரிசுத்தவான்கள் குழப்பமில்லாமல் தெளிந்த சிந்தனையோடிருப்பார்கள். பரிசுத்தவான்களின் ஆத்துமாக்கள் கர்த்தருடைய சமுகத்தில் சமாதானமாய் தங்கியிருக்கும். பதட்டப்படாமல் தெளிவாய் நடப்பார்கள். அவர்கள் மேய்கிற இடங்கள் எல்லாமே புல்லுள்ள இடங்களாயிருக்கும்.
நல்ல மேய்ப்பர் தம்முடைய ஆடுகளை நன்றாக வழிநடத்துகிறார். அவர் தம்முடைய ஆடுகளுக்கு முன்னாகப் போகிறார். ஆடுகள் அவருடைய சத்தத்தைக் கேட்டு அவருக்குப் பின்னாகச் செல்லும். நல்ல மேய்ப்பர் தம்முடைய ஆடுகளை புல்லுள்ள இடங்களில் மேய்த்த பின்பு, அவற்றை அமர்ந்த தண்ணீர்களண்டையில் கொண்டுபோய் விடுகிறார். கர்த்தருடைய நன்மைகளைப் புசிக்கிறவர்கள், அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றவேண்டும். கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறவர்கள் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவேண்டும்.
கர்த்தரே நம்முடைய கண்களை வழிநடத்துகிறார். நம்முடைய வழியை வழிநடத்துகிறார். நம்முடைய இருதயத்தை வழிநடத்துகிறார். நம்மை தம்முடைய அன்புக்கு நேராக வழிநடத்துகிறார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு போஜனமும், ஓய்வும் கொடுக்கிறார். அதோடு சேர்ந்து அவர் நமக்கு புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறார்.
கர்த்தர் நம்மை அமர்ந்த தண்ணீர்களண்டையில் கொண்டுபோய்விடுகிறார். அசுத்தமான தண்ணீர்களண்டையிலோ, அல்லது நீண்டகாலமாக கெட்டிக் கிடக்கும் தண்ணீர்களண்டையிலோ, கொந்தளிக்கும் கடலிலோ, பிரவாகித்து வரும் வெள்ளத்திலோ கர்த்தர் நம்மை கொண்டு போய் விடுவதில்லை. கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களின் நன்மைகளை விசாரிக்கிறவர் அவர் நம்மை அமர்ந்த தண்ணீர்களண்டையில் மாத்திரமே கொண்டுபோய்விடுகிறார்.
அமர்ந்த தண்ணீர் சத்தமில்லாமல் ஓடுகிற நீரோடையாகயிருக்கும். நம்முடைய ஆவி கர்த்தருக்கு நேராக புறப்பட்டு ஓடவேண்டும். நாம் ஆராவாரமில்லாமல், அமைதியாகயிருந்தாலும், நம்முடைய ஆவியின் ஓட்டம் கர்த்தரை நோக்கியே இருக்கவேண்டும். நாம் கர்த்தருக்காகச் செய்கிற காரியங்களை மிகுந்த ஆரவாரத்தோடு செய்யவேண்டும் என்னும் அவசியமில்லை. நாம் கர்த்தருடைய ஊழியத்தை அமர்ந்த தண்ணீர்களைப்போல, அமைதியாகவும் செய்யலாம். நாம் அமைதியாகச் செய்தாலும் அதை உறுதியாகச் செய்யவேண்டும். அமர்ந்த தண்ணீர் எப்போதும் முன்னோக்கி ஓடிக்கொண்டேயிருக்கும். அது ஒருபோதும் பின்னோக்கி ஓடாது. அதுபோலவே கர்த்தருடைய ஊழியக்காரர்களாகிய நாமும் கர்த்தரை நோக்கியே முன்னேறிச் செல்லவேண்டுமேயல்லாமல், கர்த்தரை விட்டு பின்வாங்கிப்போய்விடக்கூடாது.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே நம்மை ஓடச்செய்கிறார். கர்த்தர் நம்மிடத்தில் பொறுப்பாய் ஒப்புக்கொடுத்திருக்கிற ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு நம்மை வழிநடத்துகிறார். தம்முடைய வார்த்தையினாலே கர்த்தர் நமக்கு உபதேசிக்கிறார். தம்முடைய பராமரிப்பினாலும் நம்முடைய மனச்சாட்சியினாலும் அவர் நம்மை வழிநடத்துகிறார். கர்த்தருடைய ஊழியத்தை நாம் நேர்த்தியாய்ச் செய்யும்போது நமக்கு மெய்யான சந்தோஷம் உண்டாகும். ஊழியத்தின் பாதையே நமக்கு சந்தோஷமான பாதை. கர்த்தர் நம்மை வழிநடத்தவில்லையென்றால் நம்மால் ஊழியத்தின் பாதையில் கடந்து செல்ல முடியாது. கர்த்தர் தாமே நம்மை ஊழியத்திற்கும் வழிநடத்தவேண்டும். ஊழியத்திலும் வழிநடத்தவேண்டும்.
கர்த்தர் நம்முடைய ஆத்துமாவைத் தேற்றுகிறார். நம்முடைய ஆத்துமாவுக்கு எப்படிப்பட்ட வேதனைகள் வந்தாலும் கர்த்தரே நமக்கு ஆறுதலாகவும், தேறுதலாகவும் இருக்கிறார். தாவீது கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்தார். அப்போது அவருடைய இருதயம் முறிந்துபோயிற்று. தன்னுடைய பாவத்தை தாவீது மூடிமறைக்க முயற்சி செய்தார். ஆனால் கர்த்தரோ தாவீதை விடவில்லை. கர்த்தர் நாத்தான் என்னும் தீர்க்கதரிசியை தாவீதினிடத்தில் அனுப்பினார். நாத்தான் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு ""நீயே அந்த மனுஷன்'' என்று தாவீது ராஜாவிடம் தைரியமாய்ச் சொன்னார். தாவீது மனந்திரும்பினார். கர்த்தர் அவருடைய ஆத்துமாவை அழிந்துபோகாதபடி பாதுகாத்துக்கொண்டார். அவருடைய ஆத்துமாவைத் தேற்றினார்.
கர்த்தருடைய பிள்ளைகள் ஒருவேளை தங்கள் பலவீனத்தினால் ஏதாவது ஒரு பாவத்தில் விழுந்துவிடலாம். பாவத்தில் விழுந்தவர்கள் அந்தப் பாவத்தில் நிரந்தரமாய் தங்கிவிடக்கூடாது. பாவத்தின் பள்ளத்திலிருந்து கர்த்தர் தாமே தன்னைத் தூக்கிவிடவேண்டுமென்று கருத்தாய் ஜெபம்பண்ணவேண்டும். அப்போது கர்த்தர் தம்முடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும் நம்முடைய ஆத்துமாவை பாவத்தின் குழியிலிருந்து தூக்கிவிடுவார். நம்முடைய ஆத்துமா அழிந்துபோகாதபடி அதைப் புதுப்பிப்பார். நம்முடைய ஆத்துமாவைத் தேற்றுவார். கர்த்தர் தம்முடைய நாமத்தினிமித்தம் நம்மை நீதியின் பாதையில் நடத்துகிறார்.
தாவீதுக்கு பல சமயங்களில் மரண ஆபத்து உண்டாயிற்று. பல சமயங்களில் அவர் நெருக்கப்பட்டார். ஆனாலும் கர்த்தர் தன்னோடே கூடயிருக்கிறார் என்னும் நம்பிக்கை தாவீதின் உள்ளத்தில் உறுதியாயிருந்தது. இந்த விசுவாசத்தோடு, ""நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்'' என்று சொல்லுகிறார். மரண ஆபத்து வந்தாலும் கர்த்தரே தாவீதுக்குப் பாதுகாப்பாயிருக்கிறார். எப்படிப்பட்ட ஆபத்துக்கள் வழியாய் தாவீது கடந்து செல்லவேண்டியதிருந்தாலும், கர்த்தர் அவரோடு கூடயிருக்கிறார். ஆபத்துக்கள் மத்தியிலும், மரண இருளின் பள்ளத்தாக்குகள் மத்தியிலும் தாவீது பதட்டமில்லாமல், பயமில்லாமல், அமைதலாயிருக்கிறார்.
""மரண இருள்'' என்பது மெய்யான மரணமல்ல. இது ஒரு நிழல். நிழல் ஒரு மாயை. நிழல் பிரத்தியட்சமான உருவமல்ல. நாம் பல சமயங்களில் மரணத்தைப் பார்த்து பயப்படுவதற்குப் பதிலாக, மரண இருளைப் பார்த்து பயப்படுகிறோம். மரண இருளில் தீமையில்லை. பாம்பு விஷமுள்ளது. ஆனால் பாம்பின் நிழல் நம்மை ஒன்றும் செய்யாது. நாம் பாம்பின் நிழலைப் பார்த்து பயப்படுகிறோம். பாம்பின் நிழல் யாருக்கும் ஒரு தீங்கும் செய்யாது. பட்டயத்தின் நிழல் யாரையும் சங்காரம்பண்ணாது.
தாவீது மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படாமலிருக்கிறார். இந்தப் பள்ளத்தாக்கு ஆழமானது, இருள் சூழ்ந்தது, அடர்ந்த வனப்பகுதியைப்போல் இருக்கிறது. ஆனாலும் பள்ளத்தாக்கில் கனிவிருட்சங்கள் அதிகமாயிருக்கும். நம்முடைய போஜனத்திற்குத் தேவையான கனிகளெல்லாம் பள்ளத்தாக்கிலே கிடைக்கும். கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு மரணத்தின் பள்ளத்தாக்கு மெய்யாகவே ஆசீர்வாதமான பள்ளத்தாக்குதான். மரணபள்ளத்தாக்கில்தான் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மெய்யான ஆறுதல் உண்டு.
நாம் பள்ளத்தாக்கிலே நிரந்தரமாகத் தங்கப்போவதில்லை. பள்ளத்தாக்கிலே நடக்கிறோம். பள்ளத்தாக்கின் வழியாக நடந்து போகிறோம். நாம் மரணஇருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும், நாம் காணாமல் போய்விடமாட்டோம். நம்முடைய கர்த்தர் நம்மோடு கூடயிருக்கிறார். பள்ளத்தாக்கின் மறுபக்கத்தில் பர்வதம் இருக்கிறது. கர்த்தருடைய பிரசன்னம் நம்மை பர்வதத்திற்கு வழிநடத்திச் செல்லும். பர்வதத்தில் வெளிச்சம் இருக்கும்.
நாம் மரணஇருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும், நமக்கு அங்கு ஒரு பொல்லாப்பும் இருக்காது. கர்த்தருடைய பிள்ளைகளை பொல்லாப்பு அணுகுவதில்லை. தேவனுடைய அன்பைவிட்டு மரணத்தினால் நம்மைப் பிரிக்க முடியாது. மரணம் சரீரத்தைக் கொல்லும். மரணத்தினால் ஆத்துமாவைத் தொடமுடியாது. நல்ல மேய்ப்பர் நம்மை எல்லா பள்ளத்தாக்குகளின் வழியாகவும் வழிநடத்துகிறார். நம்மை அவர் எந்த பள்ளத்தாக்கின் வழியாக நடத்தினாலும் அவரும் நம்மோடு கூடவருகிறார். அவரே நமக்கு முன்பாகச் சென்று வழிநடத்துகிறவர். நம்முடைய மேய்ப்பரின் பிரசன்னமே நமக்கு மெய்யான ஆறுதல்.
தான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படுவதில்லை என்று தாவீது விசுவாசத்தோடு சொல்லுகிறார். ""தேவரீர் என்னோடே கூடயிருக்கிறீர்'' என்பதே தாவீதின் விசுவாச வார்த்தை. கர்த்தருடைய வார்த்தையும், அவருடைய ஆவியும் அவருடைய பிள்ளைகளுக்கு ஆறுதலாயிருக்கும். கர்த்தருடைய கோலும் அவருடைய தடியும் நம்மைத் தேற்றும்.
பழைய ஏற்பாட்டுக்காலத்திலே ஆடுகளை எண்ணும்போது, அவற்றை மேய்ப்பர்கள் தங்கள் கோலின்கீழ் வழிநடத்துவார்கள். கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளில் பத்தில் ஒரு பங்கு ஆகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது (லேவி 27:32). நாய்களும் ஓநாய்களும் ஆடுகளைப் பிடிப்பதற்காக வரும். மேய்ப்பர்கள் தங்கள் தடியினால், ஆடுகளை அச்சுறுத்துகிற மிருகங்களை அடித்து துரத்துவார்கள்.
நம்முடைய மேய்ப்பருடைய கையில் நமக்கு ஆதரவான கோல் இருக்கிறது. சத்துருவுக்கு விரோதமான தடியும் அவருடைய கையில் இருக்கிறது. மேய்ப்பர்கள் தங்கள் கோலினால் விருட்சங்களிலுள்ள இலைகளைப் பறித்து ஆடுகளுக்குப் போஜனமாய்க் கொடுப்பார்கள். மேய்ப்பருடைய கையிலுள்ள கோல் நம்மை தண்டிக்கும் கோல் அல்ல. அது நம்மைப் போஷிக்கும் கோல். அது நமக்கு ஆதரவான கோல். கர்த்தருடைய கரத்திலுள்ள தடியைப்பார்த்து அவருடைய பிள்ளைகள் பயப்படவேண்டியதில்லை. சத்துருக்களுக்கே தடி நியமிக்கப்பட்டிருக்கிறது.
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது சங் 23 : 5,6...
சங் 23:5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
சங் 23:6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
தாவீது கர்த்தருடைய கரத்திலிருந்து அநேக நன்மைகளைப் பெற்றிருக்கிறார். கர்த்தர் தனக்குக் காண்பிக்கிற கிருபைகளையும் இரக்கங்களையும் நினைவுகூர்ந்து, தாவீது கர்த்தரைத் துதிக்கிறார். கர்த்தர் தாவீதுக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். தாவீதின் சரீரத்திற்கும், அவருடைய ஆத்துமாவுக்கும் தேவையான எல்லா நன்மைகளையும் கர்த்தர் அவருக்கு தாராளமாய்க் கொடுத்திருக்கிறார். தாவீதுக்கு அவ்வப்போது தேவைப்படுகிற நன்மைகளையும், அவருடைய நித்திய காலத்திற்குத் தேவையான தெய்வீக ஆசீர்வாதங்களையும் கர்த்தர் அவருக்குக் கொடுத்து அவரை அதிமாய் ஆசீர்வதித்திருக்கிறார்.
கர்த்தர் தாவீதுக்கு அவருடைய சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். அந்தப் பந்தியிலே தேவையான போஜனமெல்லாம் நிரம்பியிருக்கிறது. மேஜை விரிக்கப்பட்டு, புசிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறது. மேஜையிலுள்ள பாத்திரங்களெல்லாம் நிரம்பி வழிகிறது. அவருடைய பசியை ஆற்றுவதற்கு போஜனமும், தாகத்தைத் தணிப்பதற்கு பானமும் பந்தியிலே வைக்கப்பட்டிருக்கிறது. பாத்திரம் நிரம்பி வழிவதினால், அது தாவீதுக்கும் போதுமானதாயிருக்கும், அவரோடுகூட பந்தியில் அமரும் அவருடைய சிநேகிதருக்கும் போதுமானதாயிருக்கும்.
கர்த்தர் தாவீதின் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறார். கர்த்தர் தாவீதின் மேய்ப்பராயிருக்கிறார். ஆகையினால் தாவீது தாழ்ச்சியடையமாட்டார். தாழ்ச்சியைப்பற்றிப் பேசின தாவீது, இப்போது நிரம்பி வழிகிற ஆசீர்வாதத்தைப்பற்றிப் பேசுகிறார். ""என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்'' என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார்.
தாவீதின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. அவருடைய விசுவாசம் வலுவடைந்திருக்கிறது. அவர் கர்த்தரை நம்பினார். கர்த்தர் அவரைக் கைவிடவில்லை. கர்த்தர் அவருடைய ஆத்துமாவைத் தேற்றுகிறார். அவரை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். தாவீது பொல்லாப்புக்குப் பயப்படாமலிருக்கிறார்.
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தின் வழியாகப் பிரயாணம் செய்தார்கள். அவர்களுக்கு தாகமுண்டாயிற்று. கர்த்தர் கன்மலையைப் பிளந்து அவர்களுக்கு நீரூற்றைக் கொடுத்தார். வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரரின் தாகத்தைத் தீர்த்தார். அவர்கள் வனாந்தரத்தில் பிரயாணம் செய்த வருஷங்களெல்லாம் கர்த்தர் அவர்களை மன்னாவினால் போஷித்தார். கர்த்தருடைய நன்மையும் கிருபைகளும் அவர்களைத் தொடர்ந்தது. அவர்கள் கானான் தேசத்திற்கு போய்ச்சேரும் வரையிலும் கர்த்தர் அவர்களை பட்டினி போடாமல் அனுதினமும் போஷித்தார். தாவீது கர்த்தருடைய கிருபையை நினைவுகூர்ந்து, தனக்கும் அப்படிப்பட்ட கிருபை கிடைக்குமென்று விசுவாசிக்கிறார்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் கரத்தைப் பற்றிக்கொண்டு அவர்களை முற்றும் முடிய வழிநடத்துகிறார். நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும். நாம் இந்தப் பூமியில் ஜீவிக்கிற நாளெல்லாம் கர்த்தருடைய ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும். நாம் இந்தப் பூமியில் ஜீவிக்கும்போது மாத்திரமல்ல, பரலோகத்திலே கர்த்தரோடு நித்திய காலமாயிருக்கும்போதும், அவருடைய நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்.
தாவீது பரலோகத்தை, ""கர்த்தருடைய வீடு'' என்று சொல்லுகிறார். ""நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாளாய் நிலைத்திருப்பேன்'' என்று தாவீது விசுவாசத்தோடு அறிக்கை செய்கிறார். பரலோகத்திலே நம்முடைய பிதாவின் வீடு இருக்கிறது. அங்கு தம்முடைய பிள்ளைகள் எல்லோருக்கும் கர்த்தர் வாசஸ்தலங்களை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார். பரலோகத்திலுள்ள நம்முடைய வாசஸ்தலங்களில் நாம் நித்திய காலமாய்த் தங்கியிருப்போம். கர்த்தரோடு கூடயிருப்போம். இதுவே கர்த்தருடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் மிகப்பெரிய சிலாக்கியம்.