சங்கீதம் 24 விளக்கம்
(தாவீதின் சங்கீதம்.)
தேவனுடைய முதலாவது சங்கீதம்
பொருளடக்கம்
1. பூமியின் மீது தேவனுடைய உரிமை - (24:1-2)
2. தேவனுடைய ஜனங்களின் சுபாவம் - (24:3-6)
3. பூமியின் வருங்கால ராஜா வெளிப்படுத்தப்படுகிறார் - (24:7-10)
இருபத்து நான்காவது சங்கீதம் இயேசுகிறிஸ்துவின் ராஜ்யத்தைப்பற்றி விரிவாகச் சொல்லுகிறது. இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபித்திருக்கிறார் (சங் 24:1,2) இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் அவருடைய கிருபையின் ராஜ்யமாகும். அவர் தம்முடைய கிருபையினால் தம்முடைய சபையை ஆளுகை செய்கிறார் (சங்24:3). இயேசுகிறிஸ்துவின் ராஜ்யத்திற்குச் சொந்தமானவர்களும் அவர்களுடைய சுபாவங்களும் (சங் 24:4-6). தேவனுடைய ராஜ்யத்தில் ராஜாவாய் ஆளுகை செய்கிறவர் (சங் 24:7-10).
கிறிஸ்துவின் ராஜ்யம் சங் 24 : 1,2
பூமியும் அதின் நிறைவும்
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது (சங் 24:1).
வானம் கர்த்தருக்குச் சிங்காசனம். வானம் மாத்திரமே கர்த்தருடையது என்று நாம் நினைக்கக்கூடாது. கர்த்தர் வானத்தைக் குறித்து மாத்திரமே கரிசனையோடிருக்கிறார் என்றும் சொல்லக்கூடாது. பூமியும் கர்த்தருடையதுதான். கர்த்தர் தம்முடைய சிருஷ்களில் எதையும் அற்பமாய் எண்ணுவதில்லை. அவர் ஒவ்வொன்றையும் சிருஷ்டித்து அவையெல்லாம் நல்லது என்று கண்டார். கர்த்தருடைய சிருஷ்டிகளெல்லாமே அவருடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. கர்த்தர் தம்முடைய சர்வசிருஷ்டிகளிலும் பிரியமாயிருக்கிறார். எல்லாவற்றின்மீதும் அக்கறையோடும் கரிசனையோடும் இருக்கிறார்.
கர்த்தருக்கு பூமியைக் குறித்தும் அக்கரை உண்டு. பூமி கர்த்தருடையது. இது கர்த்தருடைய சம்பத்து. கர்த்தர் பூமியை மனுபுத்திரருக்கு குடியிருக்கக் கொடுத்திருக்கிறார். கர்த்தரே இந்தப் பூமியின் சொந்தக்காரர். மனுபுத்திரர்களெல்லாம் இந்தப் பூமியிலே கொஞ்சக்காலம் ஜீவிக்கிறார்கள். இதில் பயிர்செய்து, அறுவடை செய்து, அதன் பலனைப் புசிக்கிறார்கள்.
பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. இந்தப் பூமியிலுள்ள சுரங்கங்கள், கனிமவளங்கள், விருட்சத்தின் கனிகள், காடுகளிலுள்ள மிருகங்கள், பர்வதங்களிலுள்ள கால்நடைகள், நம்முடைய நிலங்கள், வீடுகள் எல்லாமே கர்த்தருடையதுதான். மனுஷன் கையிட்டுச் செய்கிற பிரயாசத்தின் கிரியைகள், தொழிற்சாலைகள், இந்தப் பூமியிலுள்ள அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் எல்லாம் கர்த்தருடையது.
தேவனுடைய கிருபையின் ராஜ்யத்தில் பூமியின் சொத்துக்களெல்லாம் வெறுமையும் மாயையுமாயிருக்கிறது. உலகப்பிரகாரமான காரியங்கள் நம்முடைய சரீரத்திற்கு பிரயோஜனமாயிருக்கலாம். ஆனால் இவற்றினால் நம்முடைய ஆத்துமாவுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. இந்தப் பூமி தேவனுடைய ஐசுவரியங்களினால் நிரம்பியிருக்கிறது. சமுகத்திரத்திலுள்ள மச்சங்களுக்கும் கர்த்தரே சொந்தக்காரர்.
பூமி தேவனுடைய கிருபையினால் நிறைவாயிருக்கிறது. பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையதாயிருப்பதுபோல, உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. மனுபுத்திரர் கர்த்தருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, களிகூருகிறார்கள் (நீதி 8:31). நாம் நமக்குரியவர்களல்ல. நம்முடைய சரீரமும், நம்முடைய ஆத்துமாவும் நமக்குரியவையல்ல. நாமெல்லோரும் கர்த்தருக்குரியவர்கள். கர்த்தரே நம்முடைய எஜமானனாகவும், நம்மீது சொந்தக்காரராகவும் இருக்கிறார்.
தேவன் பூமியை சிருஷ்டித்தார் (ஆதி 1:1). ஆகையினால் நியாயமாக பூமி கர்த்தருக்குரியது. ஆனால் சாத்தானுடைய பிரச்சனையினால் பூமியிலுள்ளவர்கள் தேவனுக்கு எதிராக கலகம் பண்ணுகிறார்கள் தேவன் பரலோகத்திலிருந்து தமது சேனையை அனுப்பி சாத்தானையும் அவனுடைய அந்தகார வல்லமையையும் மேற்கொள்வார். இதுவே கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் நோக்கம் தேவனுடைய ராஜ்யத்தைப் பூமியில் மறுபடியும் ஸ்தாபிப்பார். பூமி தேவனுக்குப் பூரணமாக கீழ்ப்படியும். ஆதாம் மூலமாக நிறைவேற்ற வேண்டுமென்று தேவன் நினைத்த காரியங்கள் இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகள் மூலமாக நிறைவேறும்
பூமியின் அஸ்திபாரம்
அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார் (சங் 24:2).
பூமி கர்த்தருடையது. அவரே இந்தப் பூமியை கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தியிருக்கிறார். இதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்திருக்கிறார். இந்தப் பூமியை மனுஷர் பயன்படுத்தும் வண்ணமாக இதை உண்டாக்கி, மனுபுத்திரருக்கு இதை ஆசீர்வதித்துக் கொடுத்திருக்கிறார். ஒன்றுமில்லாத வெறுமையிலிருந்து கர்த்தர் இந்தப் பூமியை உண்டாக்கினார். இந்தப் பூமியின் வடிவம் கர்த்தருடைய திட்டத்தின்படி உண்டாக்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் தம்முடைய நித்திய ஆலோசனைகளில், தம்முடைய தெய்வீக சிந்தையின் பிரகாரமாக சிந்தித்து, இந்தப் பூமியை, இப்போதுள்ள வடிவத்தில் உண்டுபண்ணியிருக்கிறார்.
கர்த்தர் இந்தப் பூமியை சிருஷ்டித்தபோது அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். இதனால் பூமி அழிந்துபோகாமல் நிலைத்திருக்கிறது. இந்தப் பூமியிலே மனுஷருடைய பல சந்ததியார் கடந்துபோயிருக்கிறார்கள். இந்தப் பூமியில் இப்போது பலர் உயிரோடு ஜீவிக்கிறார்கள். ஒரு சந்ததி கடந்துபோகும்போது, மற்றொரு சந்ததி இந்தப் பூமியில் வந்து குடியேறுகிறது. மனுஷர் கடந்துபோனாலும், பூமி கடந்துபோகாமல் நிலையாய் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் கர்த்தருடைய கிரியை. கர்த்தரே இந்தப் பூமியை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்திருக்கிறவர்.
""ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது'' (பிர 1:4). ""உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது'' (சங் 119:90).
கர்த்தருடைய பர்வதம் சங் 24 : 3-6
பரிசுத்த ஸ்தலம்
யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? (சங் 24:3)
தாவீது பூமியைக் குறித்தும், அதன் நிறைவைக் குறித்தும் தியானம்பண்ணுகிறார். அவருடைய தியானம் இந்தப் பூமியிலிருந்து பரலோகத்திற்கு கடந்து செல்கிறது. பரலோகத்திலுள்ள மிகப்பெரிய காரியங்களையெல்லாம் அவர் தியானிக்கிறார். இந்தப் பூமி கடல்களுக்குமேல் அஸ்திபாரம் போடப்பட்டிருக்கிறது. இது நதிகளுக்கு மேலாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. பரலோகத்திற்கு கடல்கள் அஸ்திபாரமல்ல. பரலோகம் நதிகளுக்குமேல் ஸ்தாபிக்கப்படவில்லை.
இந்தப் பூமி கர்த்தருடைய பாதபடி. நாம் இந்தப் பூமியில் சிறிதுகாலம் சஞ்சரிக்கிறோம். நம்முடைய ஜீவியகாலம் முடிந்தபின்பு நாம் இந்தப் பூமியைவிட்டு கடந்துபோய்விடுவோம். அதன்பின்பு, ""யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்'' என்று தாவீது தியானித்துப் பார்க்கிறார். மனுஷரெல்லோருமே மரித்துப்போவார்கள். மரித்த பின்பு யாரெல்லாம் பரலோகத்திற்குப் போவார்கள் என்பதுதான் தாவீதின் தியானம். இந்தப் பூமியில் ஜீவனோடிருந்த காலங்களில் தேவனோடு ஐக்கியிருந்தவர்களும், அவருடைய பரிசுத்த உடன்படிக்கைகளை கைக்கொண்டவர்களும் மாத்திரமே பரலோகத்திற்குப் போவார்கள்.
நம்முடைய ஆத்துமாவுக்கு நம்மைப்பற்றி நன்றாகத் தெரியும். நம்முடைய மனச்சாட்சி நம்முடைய ஆத்துமாவோடு எப்போதும் பேசிக்கொண்டிருக்கும். நம்முடைய சரீரம் அழிந்துபோகும். ஆத்துமாவோ நித்தியமானது. இந்தப் பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. கர்த்தர் நமக்கு பூமியின் ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்காக கொடுத்திருக்கிறார். ஆனாலும் நாம் இந்தப் பூமியில் ஜீவனோடிருக்கும் காலமெல்லாம், உலகப்பிரகாரமான நன்மைகளினால், நம்முடைய ஆத்துமாவுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. நம்முடைய ஆத்துமா பூமியிலிருந்தாலும், அது அமைதியில்லாமல், தத்தளித்துக்கொண்டுதான் இருக்கும். ஆத்துமா பூமிக்குரிய காரியங்களினால் திருப்தியடையாமலிருக்கும்.
கர்த்தர் தம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுகிறார். நாம் மரித்த பின்பு கர்த்தருடைய பர்வதத்தில் ஏறவேண்டும். கர்த்தருடைய சமுகத்திற்கு யாரெல்லாம் ஏறிப்போவார்கள் என்று தாவீது தியானித்துப் பார்க்கிறார். கர்த்தர் தம்முடைய பர்வதத்தில், வாசம்பண்ணுகிறார். அங்கு அவருடைய பரிசுத்தவான்கள் வாசம்பண்ணுவார்கள். நாம் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறிப்போனால், அங்கு கர்த்தரோடு கூட வாசம்பண்ணுவோம். அவருடைய பரிசுத்தவான்களோடு சேர்ந்து கர்த்தரைத் துதிப்போம். நாம் கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தில் அவரோடுகூட நித்திய காலமாய் நிலைத்திருப்போம். அங்கு நமக்கு பரிபூரண சந்தோஷம் உண்டாயிருக்கும்.
கைகளில் சுத்தமுள்ளவன்
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே (சங் 24:4).
கர்த்தருடைய பர்வதத்தில் யார் ஏறுவான் என்றும், அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் யார் நிலைத்திருப்பான் என்றும் தாவீது கேள்வி கேட்டுவிட்டு அதற்குப் பதிலும் சொல்லுகிறார். தாவீதின் கேள்விக்கு பரிசுத்த ஆவியானவரே அவருக்கு பிரதியுத்தரம் கொடுக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகள் அவருடைய பர்வதத்தில் ஏறுவார்கள். நாம் கர்த்தருக்கு விசேஷித்த ஜாதியாயிருக்கிறோம். கர்த்தருடைய கிருபையிலும் மகிமையிலும் நாம் அவரோடு ஐக்கியமாயிருக்கிறோம். இந்தப் பூமியில் நாம் வாழும் காலமெல்லாம் பாவத்தைவிட்டு விலகி ஜீவிக்க வேண்டும். கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுகிறவர்களின் சுபாவம் எப்படியிருக்கவேண்டுமென்று தாவீது சொல்லுகிறார்.
அவர்களுடைய கைகள் சுத்தமாயிருக்கவேண்டும். நம்முடைய கைகளை உயர்த்தி கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது நம்முடைய கைகள் பரிசுத்தமாயிருக்கவேண்டும். நம்முடைய கைகளில் அநீதியோ, பாவத்தின் கறைகளோ காணப்படக்கூடாது. மனுஷருக்கு விரோதமாகவும், தேவனுக்கு விரோதமாகவும் நம்முடைய கைகள் பாவம் செய்திருக்கக்கூடாது. கைகளில் சுத்தமுள்ளவர்கள் மாத்திரமே கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவார்கள். அவர்கள் மாத்திரமே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பார்கள்.
பரிசுத்தவான்களின் உள்ளான மனச்சாட்சியும் சுத்தமாயிருக்கும். கர்த்தருடைய பிள்ளைகள் உள்ளும் வெளியும் பரிசுத்தமாயிருக்கவேண்டும். அவர்களுடைய இருதயத்தில் மாசு இருக்கக்கூடாது. சுத்த இருதயமுள்ளவர்கள் மாத்திரமே கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவார்கள். நம்முடைய இருதயம் உண்மையுள்ளதாயும், நேர்மையுள்ளதாயும் இருக்கவேண்டும். நம்முடைய இருதயத்தை விசுவாசத்தில் நாம் சுத்தப்படுத்தவேண்டும். நம்முடைய இருதயம் தேவனுடைய சித்தத்திற்கும் அவருடைய சாயலுக்கும் ஒத்ததாயிருக்கவேண்டும். ""இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்'' (மத் 5:8) என்று இயேசு சொல்லுகிறார்.
கர்த்தருடைய பிள்ளைகள் தங்களுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்கமாட்டார்கள். உலகப்பிரகாரமான காரியங்கள்மீது ஆசைப்படமாட்டார்கள். உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகை. ஆகையினால் இவர்கள் உலகத்தின் ஆசாபாசங்களுக்கு விலகியே ஜீவிப்பபார்கள். உலகத்தின்மீதும், உலகத்தின் காரியங்கள்மீதும் இவர்கள் ஆசை வையாமல், தேவன்மீதும், தேவனுடைய வார்த்தையின்மீதும் இவர்கள் பிரியமாயிருப்பார்கள். தேவனோடும் மனுஷரோடும் உண்மையாய் நடந்துகொள்வார்கள். கண்ணியமாய் ஜீவிப்பார்கள். தங்கள் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்கமாட்டார்கள். கபடாய் ஆணையிடமாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் மாத்திரமே கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவார்கள். இவர்கள் மாத்திரமே அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பார்கள்.
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். பூமியில் பலுகிப் பெருகுவார்கள்
இவர்களுடைய தகுதிகள்
1. சுத்தமான கைகள் (சங் 15:1-5)
2. மாசில்லாத இருதயம் (சங் 51:7; மல் 3:2-3; மத் 5:8; யோவான் 15:3)
3. விக்கிரகாராதனை (மாயை) இல்லை (1கொரி 6:9-11; கலா 5:19-21; எபி 12:14)
4. உண்மையுள்ளவன் (வெளி 21:8)
சங் 24:4; சங் 15:1-5; சங் 24:5-6 - ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ள தகுதிகளை உடையவன். கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்
இரட்சிப்பின் தேவன்
அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.) (சங் 24:5,6)
கர்த்தருடைய பிள்ளைகள் அவரிடத்தில் ஜெபம்பண்ணுகிற பிள்ளைகளாகயிருப்பார்கள். கர்த்தருடைய பரிசுத்த பர்வதத்தில் ஏறுகிறவர்கள் ஜெபிக்கிறவர்களாகயிருப்பார்கள். இந்த சந்ததியார் கர்த்தரைத் தேடி விசாரிப்பார்கள். கர்த்தருக்கு மீதமானவர்கள் ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு சந்ததியிலும் இருக்கிறார்கள். கர்த்தர் தமக்காக இவர்களைப் பாதுகாத்து பராமரித்து வருகிறார். ""ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும் தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்'' (சங் 22:3).
நாம் ஏறவேண்டியது கர்த்தருடைய பர்வதம். பர்வதத்தின் பாதை கீழ்நோக்கிப் போகாது. அது எப்போதும் மேல்நோக்கியே போகும். பர்வதத்திற்கு நாம் ஏறித்தான் போகவேண்டுமேயல்லாமல், இறங்கிப் போகமுடியாது. பரலோகத்தின் பாதை ஏறுகிற பாதை. அது இறங்குகிற பாதையல்ல. பாதை செங்குத்தான உயரமாகயிருக்கும்போது, நம்முடைய முழுப்பிரயாசத்தையும் பயன்படுத்தி, பர்வதத்தின்மேல் ஏறவேண்டும். நம்முடைய முழுசரீரபலத்தையும் பயன்படுத்தும்போதுதான் நம்மால் பர்வதத்தின்மீது ஏறமுடியும்.
கர்த்தரை தேடுகிறவர்களும் ஏனோதானோவென்று அக்கரையில்லாமல் தேடினால் அவரைக் கண்டுபிடிக்க முடியாது. கர்த்தரைக் கருத்தாய்த் தேடவேண்டும். அவரைத் தேடி விசாரிக்கவேண்டும். அவருடைய சமுகத்தை நாடவேண்டும். கர்த்தரைக் கருத்தாய் தேடுகிறவர்கள் மாத்திரமே அவரைக் கண்டுபிடிப்பார்கள். அவர்கள் கர்த்தரோடும், கர்த்தரோடு கூடயிருக்கிற அவருடைய பரிசுத்தவான்களோடும் சேர்ந்து ஐக்கியமாயிருப்பார்கள்.
பழைய ஏற்பாட்டுக்காலத்திலே யாக்கோபு கர்த்தருடைய சமுகத்தைத் தேடினார். இதனால் யாக்கோபு என்னும் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்பட்டது. அவர் தேவனோடு போராடி ஜெயம் பெற்றார். தேவனைத் தேடி கண்டுபிடித்தார். அப்போஸ்தலர் பவுல் இரட்சிக்கப்பட்டவுடன் சீஷருடனே சேர்ந்துகொள்ளப் பார்த்தார் (அப் 9:26). யாக்கோபின் சந்ததியார் கர்த்தரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுவார்கள். அவர்கள் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயிருப்பார்கள். நித்திய சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.
கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்களெல்லாம் வருமென்று தாவீது சொல்லுகிறார். ""அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும் தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்''. கர்த்தரை விசுவாசிக்கிறவர்கள் நீதிமான்களாக்கப்படுவார்கள். பரிசுத்தப்படுத்தப்படுவார்கள். இவையெல்லாம் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு கொடுக்கப்படும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள். கர்த்தரைத் தேடும்போது நமக்கு பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் கிடைப்பதற்குப் பதிலாக பரலோகத்தின் மேன்மையான ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.
""நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் திருப்தியடைவார்கள்'' (மத் 5:6) என்று இயேசு சொல்லுகிறார். கர்த்தரைத் தேடுகிறவர்கள் இரட்சிப்பின் தேவனால் நீதியைப் பெறுவார்கள். இவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். தேவன் தாமே இவர்களுக்கு இரட்சிப்பின் தேவனாயிருப்பார். இரட்சிக்கப்படாதவர்களுக்கு கர்த்தர் நீதியுள்ள நியாயாதிபதியாயிருப்பார். இரட்சிக்கப்பட்டிருக்கிற நமக்கோ அவர் இரட்சிப்பின் தேவனாயிருப்பார்.
மகிமையின் ராஜா சங் 24 : 7-10
சங் 24:7. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
சங் 24:8. யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமுமுள்ள கர்த்தராமே.
சங் 24:9. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதிகதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.
சங் 24:10. யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.)
தாவீது ராஜா மகிமையின் ராஜாவைப்பற்றி இங்கு சொல்லுகிறார். அவர் வல்லமையும் பராமக்கிரமமுமுள்ள கர்த்தர். அவர் சேனைகளின் கர்த்தர். ""மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்'' என்று தாவீது பயபக்தியாய்ச் சொல்லுகிறார். இந்த வாக்கியத்திற்கு வேதபண்டிதர்கள் மூன்றுவிதமாய் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். அவையாவன : 1. ஆசரிப்புக்கூடாரத்திலும், தேவனுடைய ஆலயத்திலும் மகாபரிசுத்த ஸ்தலத்திற்குள் கர்த்தர் உட்பிரவேசிப்பார். 2. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து, பரமேறிப்போனபோது பரலோகத்திற்குள் பிரவேசிப்பார். 3. இயேசுகிறிஸ்து நம்முடைய இருதயத்திற்குள் பிரவேசிப்பார்.
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்திலே பிரயாணம்பண்ணினார்கள். வனாந்தரப்பிரயாணத்தின்போது அவர்கள் கர்த்தருக்கு ஒரு ஆசரிப்புக்கூடாரத்தை ஸ்தாபித்தார்கள். ஆசரிப்புக்கூடாரத்தின் நடுவில் தேவனுடைய பிரசன்னமானது மகாபரிசுத்த ஸ்தலத்தில் வந்து இறங்கிற்று. அந்த ஸ்தலத்தில் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
தாவீது ராஜா கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டிக்கு ஒரு ஆசரிப்புக்கூடாரத்தைப் போட்டார். சாலொமோன் ராஜா கர்த்தருக்கு ஒரு தேவாலயம் கட்டினார். தாவீது ராஜா தேவாலயம் கட்டுவதற்குத் தேவையான பொருட்களையெல்லாம் சேகரித்தார். தேவாலயம் கட்டப்பட்டு, பிரதிஷ்டை பண்ணப்படும் என்று தாவீது உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார். தாவீது தேவாலயத்திற்கு கட்டுமான பொருட்களைச் சேகரித்ததுபோல, தேவாலயம் பிரதிஷ்டைபண்ணப்படும்போது, அவரைத் துதித்துப் பாடுவதற்காக, ஒரு துதிப்பாடலையும் இயற்றினார்.
தேவாலயத்திலுள்ள கதவுகள் ""அநாதி கதவுகள்'' என்று அழைக்கப்படுகிறது. ஆசரிப்புக்கூடாரத்தின் கதவுகளைவிட தேவாலயத்தின் கதவுகள் நீடித்து உழைக்கக்கூடியவை. ஆசரிப்புக்கூடாரத்தின் கதவுகள் திரைச்சீலைகளால் செய்யப்பட்டிருந்தது. திரைச்சீலையைவிட தேவாலயத்தின் கதவுகள் உறுதியானவை.
கர்த்தர் தம்முடைய வார்த்தையை மகிமைப்படுத்துகிறார். தம்முடைய நியமங்களைக் கனப்படுத்துகிறார். நம்மோடு உடன்படிக்கை செய்கிறார். கர்த்தர் தம்முடைய உடன்படிக்கையில் உண்மையுள்ளவர். கர்த்தருடைய ஆலயத்தில் அவர் மகிமையோடு பிரவேசிக்கும்போது, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அவரை மனமகிழ்ச்சியாய் வரவேற்கவேண்டும். தேவாலயத்தின் வாசல்களும், கதவுகளும் கர்த்தருக்குத் திறந்திருக்கவேண்டும். தாவீது இதை நினைவுகூர்ந்து, தேவாலயத்தின், ""வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள். அநாதி கதவுகளே உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்'' என்று சொல்லுகிறார்.
மகிமையின் ராஜா என்னும் பெயர் இயேசுகிறிஸ்துவுக்கும் பொருந்தும். தேவாலயத்திலுள்ள உடன்படிக்கை பெட்டியும், கிருபாசனமும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு அடையாளம். இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே மனுஷராக அவதரித்து, சிலுவையிலே தம்முடைய ஜீவனை நமக்காக ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்துவின் சரீரத்தை கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவர் மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்தார். நாற்பது நாட்களுக்குப் பிறகு வானத்திற்குப் பரமேறிப்போனார்.
இயேசுகிறிஸ்து பரமேறிப்போனபோது பரலோகம் அவருக்கு வரவேற்பு கொடுத்தது. பரலோகத்தின் கதவுகள் அவருக்குத் திறந்திருந்தது. பரலோகத்தின் வாசல்களும் கதவுகளும் நித்தியமானது. அவை, ""அநாதி கதவுகள்'' என்று அழைக்கப்படுகிறது.
பாவம் செய்த மனுஷருக்கு பரலோகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். இயேசுகிறிஸ்துவோ, நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காக, தம்முடைய சொந்த இரத்தத்தையே மீட்பின் கிரயமாகச் செலுத்தினார். இயேசுகிறிஸ்துவின் திருஇரத்தத்தினால் நம்முடைய பாவங்களுக்கு பரிகாரமும், பாவமன்னிப்பும் உண்டாயிற்று. இயேசுகிறிஸ்து தம்முடைய இரத்தத்தையே கிரயமாகச் செலுத்தி, நாமும் பரலோகத்தில் பிரவேசிப்பதற்கு, பரலோகத்தின் கதவுகளைத் திறந்தார்.
""கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்'' (எபி 9:11,12).
பரலோகத்தின் கதவுகளை திறக்கும் திறவுகோல்களும், அதைத் திறக்கும் அதிகாரமும் இயேசுகிறிஸ்துவுக்கு உண்டு. அவர் தமக்காக மாத்திரமே பரலோகத்தில் பிரவேசியாமல், தம்முடைய பிள்ளைகளுக்காகவும் அங்கு பிரவேசிக்கிறார். நமக்கு முன்உதாரணமாக இருக்கிற இயேசுகிறிஸ்து, நமக்கு முன்பாக பரலோகத்திற்குள் பிரவேசித்தார். தம்மை விசுவாசிக்கிற எல்லா விசுவாசிகளும் பரலோகத்தில் பிரவேசிப்பதற்கு, இயேசுகிறிஸ்து அதன் கதவுகளைத் திறந்து கொடுத்திருக்கிறார்.
தாவீது ராஜா இந்த சத்தியத்தைத் தியானித்துப் பார்த்து, பரலோகத்தின், ""வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள், அநாதி கதவுகளே உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்'' என்று பயபக்தியோடு பாடுகிறார்.
இந்த வாக்கியத்தை, இயேசுகிறிஸ்து நம்முடைய ஆத்துமாவுக்குள் பிரவேசிப்பதாகவும் சொல்லி, வியாக்கியானம் பண்ணலாம். நாம் தேவனுடைய ஆலயங்களாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து தம்முடைய வார்த்தையினாலும் ஆவியினாலும் நம்முடைய ஆத்துமாவுக்குள் பிரவேசிக்கிறார். இயேசுகிறிஸ்து நமக்குள் வாசமாயிருப்பது தேவாலயத்திலே உடன்படிக்கை பெட்டி வாசமாயிருப்பதற்கு ஒப்புமையாயிருக்கிறது. கர்த்தருடைய வார்த்தை நம்மைச் சுத்தப்படுத்துகிறது.
""இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்'' (வெளி 3:20) என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்மோடு சொல்லுகிறார். நம்முடைய இருதயத்தின் வாசல்களையும் கதவுகளையும் நம்முடைய கர்த்தருக்குத் திறந்துகொடுக்கவேண்டும். நம்முடைய இருதயத்தில் இயேசுகிறிஸ்து ஒரு விருந்தினரைப்போல வந்துபோக வரவில்லை. நமக்குள் வாசம்பண்ணுவதற்காக வருகிறார். நம்முடைய இருதயத்தின் சொந்தக்காரர் இயேசுகிறிஸ்துதான். தமக்குச் சொந்தமான நம்முடைய இருதயத்தை கிறிஸ்துவானவர் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வருகிறார்.
நாம் இயேசுகிறிஸ்துவை நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும். நம்முடைய இருதயத்தை அவருக்கு அற்பணிக்கவேண்டும். நம்முடைய இருதயம் இயேசுவுக்குச் சொந்தமானது. இதுவே சுவிசேஷத்தின் அழைப்பு. இயேசுகிறிஸ்து மகிமையின் ராஜாவாகயிருக்கிறார். அவர் நம்முடைய இருதயத்திற்குள் உட்பிரவேசிப்பதற்கு, நம்முடைய வாசல்களின் தலைகளை உயர்த்தவேண்டும், கதவுகளை உயரமாயும் விரிவாயும் திறக்க வேண்டும். கர்த்தரை நமக்குள் வரவேற்கவேண்டும்.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மகிமையின் ராஜா. அவர் வல்லமையும் பராமக்கிரமமுமுள்ள கர்த்தர். அவர் யுத்தத்தில் பராமக்கிரமமுமுள்ள கர்த்தர். அவர் சேனைகளின் கர்த்தர். மகிமையின் ராஜா நம்முடைய ஆத்துமாவில் பிரவேசித்து, நம்முடைய ஆத்துமாவை தமக்குச் சொந்தமாக பெற்றுக்கொள்வது, நமக்குக் கிடைத்திருக்கிற பெரிய சிலாக்கியம். கர்த்தர் நம்மை ஆளுகை செய்யும்போது நமக்கு மெய்யான ஆசீர்வாதம் உண்டாகும். நம்முடைய ஆத்துமாவிலும், நம்முடைய ஆலயத்திலும் கர்த்தரே மகிமையின் ராஜாவாயிருந்து ஆளுகை செய்யவேண்டும்.
சிந்திக்க வைக்கும் எளிய நடை தாவீது ராஜா வின்சிந்தனை துளிகள் அருமையான விளக்கம் நன்றி யுடன்
ReplyDelete