எரேமியா புத்தகம் ஒரு கண்ணோட்டம் Tamil Bible study

எரேமியா புத்தகம் ஒரு கண்ணோட்டம்



முன்னுரை

எரேமியா தீர்க்கதரிசி தன்னுடைய இளம் பிராயத்திலேயே கர்த்தருடைய ஊழியத்தை செய்ய ஆரம்பிக்கிறார். எரேமியாவுக்கு ஊழியத்தினிமித்தமாய் ஏராளமான பாரங்களும், வேதனைகளும் உண்டாயிற்று. ""தன் இளம் பிராயத்தில் நுகத்தை சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது'' (புல 3:27) என்று எரேமியா தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக சொல்லுகிறார்.  

ஏசாயா தீர்க்கதரிசி எரேமியாவைப்போல இளம் வயதில் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பிக்கவில்லை. தன்னுடைய வாலிப நாட்களிலோ அல்லது அதற்கு பின்போ ஏசாயா தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். ஏசாயா அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவே வாசமாயிருந்தார். அவரும் அசுத்த உதடுகளுள்ள மனுஷனாயிருந்தார். இதனால் ஏசாயாவின் உதடுகள் நெருப்பு தழலால் சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிற்று (ஏசா 6:5-7).

கர்த்தர் தமது கரத்தை நீட்டி எரேமியாவின் வாயைத் தொட்டார் (எரே 1:9). கர்த்தர் ஏசாயாவின் உதடுகளை நெருப்புத்தழலால் தொட்டதுபோல, எரேமியாவின் வாயை நெருப்புத்தழலால் தொடவில்லை. எரேமியா தன்னுடைய இளம்பிராயத்தில் இருந்தபடியினால், அவரிடத்தில் அதிகமான பாவங்கள் காணப்படவில்லை. அவர்களுடைய உதடுகளும் அசுத்தமாயில்லை. 

எரேமியா தீர்க்கதரிசி அநேக வருஷங்களுக்கு கர்த்தருடைய ஊழியத்தை செய்தார். சுமார் ஐம்பது வருஷகாலங்களாக எரேமியா கர்த்தருடைய ஊழியத்தை செய்திருக்கவேண்டுமென்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். வேறு சிலரோ அவர் நாற்பது வருஷங்களாக ஊழியம் செய்திருக்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.  

யூதாவின் ராஜாவாகிய யோசியா அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் எரேமியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று. யோசியா கர்த்தருக்குப் பயந்து நல்லாட்சி செய்தவன். யோசியாவுக்கு பின்பு யூதா தேசத்தை துன்மார்க்கமான ராஜாக்கள் ஆட்சி புரிந்தார்கள். எரேமியா தீர்க்கதரிசி அவர்களுடைய ஆட்சிக்காலத்திலும் கர்த்தருடைய ஊழியத்தை தொடர்ந்து செய்தார். 

எரேமியா பாவங்களை கண்டித்து உணர்த்தும் தீர்க்கதரிசியாக ஊழியம் செய்தார். யாக்கோபின் பாவங்களை எடுத்துச் சொல்லுவதற்கு எரேமியா கர்த்தருடைய நாமத்தினால் அனுப்பப்பட்டவர். எரேமியா அவர்களுடைய பாவங்களை எடுத்துச் சொல்லி, அவர்கள்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் வரும் என்று எச்சரித்தார். 

எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் தெளிவாகவும் கண்டிப்பானதாகவும் உள்ளது. அவர் பாவத்தைக் குறித்து கண்டித்து உணர்த்தும்போது மென்மையான வார்த்தைகளை பயன்படுத்தாமல், கடினமான, கண்டிப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளைவிடவும், மற்ற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைவிடவும், எரேமியாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் கடினமாயும், கண்டிப்பாயும் இருந்தது.  

நாம் பாவிகளோடு பேசும்போது மென்மையான வார்த்தைகளைப் பேசுவதற்குப் பதிலாக, கடினமான வார்த்தைகளை கண்டிப்புடன் பேசவேண்டும். அவர்களுடைய பாவங்களை, சுற்றி வளைத்து ஏனோதானோவென்று சொல்லுவதற்கு பதிலாக, தெளிவாகச் சொல்லவேண்டும். பாவிகள் மனந்திரும்பவேண்டுமென்று அவர்களுக்கு கண்டிப்போடு சொல்லவேண்டும்.  

எரேமியா அழுகையின் தீர்க்கதரிசியாகவும் இருந்தார். அவருடைய காலத்தில் ஜனங்கள் பாவத்திலே ஜீவித்தார்கள். அவர்களுடைய பாவங்களையெல்லாம் எரேமியா கண்ணீரோடு கவனித்து வந்தார். புலம்பலின் புஸ்தகத்தில் எரேமியா தீர்க்கதரிசியின் இருதய வேதனைகளெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது. 

எரேமியா பாடுகளை அனுபவிக்கிற தீர்க்கதரிசியாகவும் ஊழியம் செய்தார். அவருடைய சொந்த ஜனங்களே அவருக்கு நெருக்கத்தையும், உபத்திரவத்தையும் கொடுத்தார்கள். கல்தேயர்கள் யூதர்களை அழிப்பதற்கு முன்பாக, எரேமியா இஸ்ரவேல் ஜனத்தார் மத்தியில் கர்த்தருடைய செய்தியை தீர்க்கதரிசனமாகச் சொன்னார். 

ரோமப்பேரரசார் எருசலேமையும், யூதர்களையும் அழிப்பதற்கு முன்பு, யூதர்களுடைய குணாதிசயங்கள் எப்படி மோசமாயிருந்ததோ, அப்படியே எரேமியாவின் காலத்திலும் அவர்களுடைய குணாதிசயங்கள் மிகவும் மோசமாயிருந்தது. 

இயேசுகிறிஸ்துவின் காலத்திலே, யூதர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினார்கள். அவருக்கு உபத்திரவங்களைக் கொடுத்தார்கள். கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களையும் துன்பப்படுத்தினார்கள். யூதர்கள்மீது தேவனுக்கு பிரியமில்லாமல் போயிற்று. தேவனுடைய கோபம் அவர்கள்மேல் வந்தது.  

""அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் காலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து, புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள் மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது'' (1தெச 2:15,16).

எரேமியாவின் மரணம் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. எருசலேமிலுள்ள யூதர்கள் எகிப்து தேசத்திற்கு புறப்பட்டுப் போனபோது, அவர்கள் எரேமியாவையும் கட்டாயப்படுத்தி தங்களோடு எகிப்திற்கு அழைத்துக்கொண்டு போனார்கள். எரேமியா இரத்த சாட்சியாக மரித்திருக்கவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். 

எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் கி.மு. 685 # 606 ஆம் வருஷத்தில் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது. எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் முழுவதிலும் எரேமியாவே இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் என்பதற்கு அநேக ஆதாரங்கள் உள்ளன. வேதபண்டிதர்கள் அனைவரும் இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் எரேமியாவே என்பதில் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.

மையக்கருத்து

கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப்போவது, தேவதூஷணம் கூறுவது, ஆகியவற்றினால் ஏற்படும் விளைவுகளை எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் விவரித்துக் கூறுகிறது. வேதாகமத்தில் எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், ஓசியா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும் (ஓசி 4:16; ஓசி 11:7; ஓசி 14:4) மாத்திரமே பின்மாறிப் போதல் என்னும் வார்த்தை காணப்படுகிறது. எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில் மாத்திரம் இந்த வார்த்தை 13 தடவைகள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. (எரே 2:19; எரே 3:6-22; எரே 5:6; எரே 8:5; எரே 14:7; எரே 31:22; எரே 49:4)

எரேமியா தீர்க்கதரிசி தன்னுடைய ஜனங்களோடு தொடர்ந்து வெளிப்படையான யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். கர்த்தரை மறுதலிக்கிறவர்களுக்கும், கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப்போனவர்களுக்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு இரக்கமில்லாமல் வரும் என்பது எரேமியாவின் மையச்செய்தியாகும்.

எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் மற்ற கருத்துக்கள்:

 1. யூதா தேசத்தார் பாபிலோனுக்கு உடனடியாக சிறைப்பிடித்துச் செல்லப் படுவார்கள்.

 2. எழுபது வருஷ சிறையிருப்பிற்குப் பின்பு, இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய தேசத்திற்குத் திரும்பி வருவார்கள்.

 3. இஸ்ரவேல் ஜனங்கள் மறுபடியும் உலகம் முழுவதும் சிதறிப்போவார்கள்.

 4. இந்தக் காலத்தின் முடிவில் இஸ்ரவேல் புத்திரர் இறுதியாகக் கூட்டிச் சேர்க்கப் படுவார்கள். 

 5. மேசியா எருசலேமின்மீது நித்திய காலமாக ஆட்சி புரிவார்.

எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் எழுதப்பட்டதற்கான நோக்கத்தின் விவரம் வருமாறு:

 1. பாவத்தின் விளைவுகளையும், தேவனை விட்டுப் பின்வாங்கிப்போவதினால் ஏற்படும் விளைவுகளையும் இஸ்ரவேல் புத்திரருக்குத் தெளிவுபடுத்துவது.

 2. மனுஷனைக் குறித்த தேவனுடைய திட்டத்தில் இஸ்ரவேல் புத்திரரின் வருங்காலத்துப் பங்கை அவர்களுக்கு வெளிப்படுத்துவது.

 3. ஒவ்வொரு மனுஷனும் தேவனோடும், அவருடைய திட்டத்தோடும் இசைந்து போக வேண்டும். இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு மனுஷனுடைய முடிவும் அமையும் என்பதை வலியுறுத்துவது.

பொருடளக்கம்

  ஒ. எரேமியாவின் ஊழியம்
1. தலைப்பு, ஆசிரியர், வரலாற்று பின்னணி (1:1-3)
2. எரேமியாவின் முதலாவது ஊழியம் (1:4-10)
3. வாதுமை மரக்கிளையின் அடையாளம் - முக்கியத்துவம் - நிறைவேற்றம் (1:11-12)
4. பொங்குகிற பானையின் அடையாளம் - முக்கியத்துவம் - பாபிலோனிய படையெடுப்பு (1:13-16)
5. எரேமியாவின் இரண்டாவது ஊழியம் (1:17-19)
 ஒஒ. யூதாவுக்கு எதிராக தேவனுடைய வழக்கு
1. யூதாவுக்கு முதலாவது செய்தி
(1) கன்னித்தன்மையின் ஏழு அம்சங்கள் (2:1-3)
(2) யூதாவின் பத்து பாவங்கள் (2:4-8)
(3) தேவனுடைய வழக்கு
  (அ) தேவர்களை மாற்றினார்கள் (2:9-11)
  (ஆ) இரண்டு தீமைகளைச் செய்தார்கள் (2:12-13)
  (இ) வரப்போகிற சிறையிருப்பு (2:14-18)
  (ஈ) பொதுவான பாவங்கள் (2:19)
  (உ) தேவனுடைய கடந்த கால கிரியைகள் (2:20-21)
  (ஊ) நம்பிக்கையின்மை (2:22-25)
  (எ) விக்கிரகாராதனை (2:26-28)
(4) இஸ்ரவேலின் கேள்வி - பதில் - யூதாவின் பதினாறு பாவங்கள் (2:29-3:5)
2. யூதாவுக்கு இரண்டாவது செய்தி
(1) தோல்வியின் மூன்று அம்சங்கள் (3:6-11)
(2) அழைப்பு - காரணம் - தேவனுடைய இரக்கம் - நிபந்தனை - மனந் திரும்ப வேண்டும் (3:12-13)
(3) அழைப்பு - காரணம் - திருமணம் - பதினான்கு ஆசீர்வாதங்கள் (3:14-21)
(4) அழைப்பு - வரப்போகிற பாவஅறிக்கை (3:22-25)
(5) திரும்பி வருவதற்கு ஏழு நிபந்தனைகள் (4:1-4)
(6) எச்சரிப்பு - பதினான்கு காரணங்கள் (4:5-7)
(7) அழைப்பு - காரணம் - ஒன்பது நியாயத்தீர்ப்புகள் (4:8-13)
(8) அழைப்பு - பத்து காரணங்கள் (4:14-18)
(9) எச்சரிப்பு - பதினான்கு அம்ச காரணம் (4:19-22)
(10) ஆதி பூமியின் ஒழுங்கின்மையின் எட்டு அம்சங்கள் (4:23-26)
(11) பூமியின் ஒழுங்கின்மையும் யூதாவின்மீது பாபிலோனின் நியாயத்தீர்ப்பும் (4:27-31)
(12) யூதாவின் பத்து பாவங்கள் (5:1-5)
(13) நியாயத்தீர்ப்பின் மூன்று அம்ச வருணனை (5:6)
(14) யூதாவின் ஐந்து பாவங்கள் (5:7-8)
(15) பகுதி நியாயத்தீர்ப்பு (5:9-10)
(16) யூதாவின் ஐந்து பாவங்கள் (5:11-12)
(17) பகுதி நியாயத்தீர்ப்பின் ஒன்பது அம்சங்கள் (5:13-19)
(18) யூதாவின் இருபது பாவங்கள் (5:20-28)
(19) நிச்சயமான நியாயத்தீர்ப்பு (5:29-31)
(20) எச்சரிப்பு - எட்டு அம்ச காரணம் (6:1-9)
(21) யூதாவின் எட்டு பாவங்கள் (6:10-17)
(22) நியாயத்தீர்ப்பின் பன்னிரெண்டு அம்சங்கள் (6:18-26)
(23) எரேமியாவின் மூன்றாவது ஊழியம் (6:27-30)
3. யூதாவுக்கு மூன்றாவது செய்தி
(1) ஆசீர்வாதத்திற்கு ஏழு நிபந்தனைகள் (7:1-7)
(2) யூதாவின் எட்டு பாவங்கள் (7:8-12)
(3) இரண்டு அம்ச நியாயத்தீர்ப்பு (7:13-15)
(4) யூதாவின் விக்கிரகாராதனை (7:16-19)
(5) ஐந்து அம்ச நியாயத்தீர்ப்பு (7:20)
(6) பத்து அம்ச புத்திமதி (7:21-28)
(7) புலம்பல் - காரணம் (7:29-31)
(8) பதினெட்டு அம்ச நியாயத்தீர்ப்பு (7:32-8:3)
(9) யூதாவின் பன்னிரெண்டு பாவங்கள் (8:4-9)
(10) ஒன்பது அம்ச நியாயத்தீர்ப்பு (8:10-13)
(11) யூதாவின்மீது பாபிலோனிய படையெடுப்பு முற்குறித்து கூறப்படுகிறது (8:14-17)
(12) எரேமியாவின் வருத்தம் (8:18-9:1)
(13) வருத்தத்திற்கு காரணங்கள் - யூதாவின் பதினைந்து பாவங்கள் (9:2-8)
(14) ஏழு அம்ச நியாயத்தீர்ப்பு (9:9-12)
(15) யூதாவின் ஐந்து பாவங்கள் (9:13-14)
(16) ஐந்து அம்ச நியாயத்தீர்ப்பு (9:15-16)
(17) புலம்பலுக்கு அழைப்பு - ஏழு அம்ச காரணம் (9:17-22)
(18) தேவன் பிரியமாயிருக்கிறார் (9:23-24)
(19) இஸ்ரவேலும் புறஜாதியாரும் ஒன்று போல தண்டிக்கப்படுவார்கள் (9:25-26)
(20) விக்கிரகங்களின் எட்டு அம்ச மாயை (10:1-5)
(21) தேவன் இருக்கிறார் என்பதற்கு பதினெட்டு ஆதாரங்கள் (10:6-13)
(22) விக்கிரகாராதனைக்காரரின் புத்தியீனம் (10:14-16)
(23) பன்னிரெண்டு நியாயத்தீர்ப்புகள் - காரணங்கள் (10:17-25)
 ஒஒஒ. அடையாளங்கள் - தீர்க்கதரிசனங்கள்
1. எரேமியாவின் நான்காவது ஊழியம் (11:1-7)
2. யூதாவின் எட்டு பாவங்கள் (11:8-10)
3. யூதாவின்மீது பத்து அம்ச நியாயத்தீர்ப்பு (11:11-17)
4. எரேமியாவிற்கு எதிராக முதலாவது சதி - அவனுடைய சகோதரர்கள் மூலமாக (11:18-20)
5. சதிகாரர்கள்மீது நியாயத்தீர்ப்பு (11:21-23)
6. எரேமியாவின் ஜெபம் (12:1-4)
7. தேவனுடைய பதிலுரை - எரேமியாவிற்கு எச்சரிப்பு - நியாயத்தீர்ப்பின் ஏழு அம்சங்கள் (12:5-13)
8. யூதாவின் விரோதிகள்மீது நியாயத்தீர்ப்பு (12:14-17)
9. சணல் கச்சையின் அடையாளம்
(1) சணல் கச்சை வாங்கப்படுகிறது (13:1-2)
(2) சணல் கச்சை ஒளித்து வைக்கப் படுகிறது (13:3-5)
(3) ஒன்றுக்கும் உதவாத கச்சை (13:6-7)
10. இஸ்ரவேலுக்கு இது பொருந்தும் (13:8-11)
11. ஜாடிகளின் அடையாளம் (13:12)
12. யூதாவுக்கு இது பொருந்தும் (13:13-14)
13. பெருமையுடையவர்களுக்கு எச்சரிப்பு (13:15-17)
14. ஆட்சியாளர்களுக்கு எச்சரிப்பு (13:18-27)
15. மழைத்தாழ்ச்சியைப் பற்றிய செய்தி
(1) யூதாவின் பத்து அம்ச அழிவு (14:1-6)
(2) எரேமியாவின் பாவ அறிக்கை (14:7-9)
(3) தேவனுடைய பதிலுரை - நியாயத்தீர்ப்பு (14:10-12)
(4) எரேமியாவின் முறையீடு (14:13)
(5) தேவனுடைய பதிலுரை - நியாயத்தீர்ப்பு (14:14-18)
(6) எரேமியாவின் பாவ அறிக்கை (14:19-22)
(7) தேவனுடைய பதிலுரை - நியாயத் தீர்ப்பு (15:1-9)
(8) எரேமியாவின் முறையீடு (15:10)
(9) தேவனுடைய பதிலுரை - மீதியாக இருப்பவர்கள் இரட்சிக்கப் படுவார்கள் - துன்மார்க்கர் தண்டிக்கப்படுவார்கள் (15:11-14)
(10) எரேமியாவின் பரிந்து பேசும் ஜெபம் (15:15-18)
(11) தேவனுடைய பதிலுரை - துன்ப வேளையில் எரேமியா பாதுகாக்கப்படுவார் (15:19-21)
16. திருமணமாகா தீர்க்கதரிசியின் அடையாளம்
(1) ஐந்து தடைகள் - பத்து காரணங்கள் (16:1-9)
(2) யூதாவுக்கு இது பொருந்தும் - பத்து பாவங்கள் - நியாயத்தீர்ப்பு (16:10-21)
(3) யூதாவின் அழிக்கமுடியாத பாவம் (17:1-4)
(4) உண்மையான நம்பிக்கையும் தவறான நம்பிக்கையும் (17:5-12)
(5) எரேமியாவின் ஜெபம் (17:13-18)
17. ஓய்வு நாளைக் குறித்த செய்தி
(1) ஐந்து கட்டளைகள் (17:19-23)
(2) நிபந்தனையுள்ள ஆறு ஆசீர்வாதங்கள் (17:24-26)
(3) மூன்று அம்ச நியாயத்தீர்ப்பு (17:27)
18. குயவன் வீட்டின் அடையாளம்
(1) குயவனுடைய கிரியை (18:1-4)
(2) யூதாவுக்கு இது பொருந்தும்
  (அ) தேவனுடைய சர்வ வல்லமை (18:5-10)
  (ஆ) நியாயத்தீர்ப்பைத் தவிர்க்க வாய்ப்பு (18:11)
  (இ) மறுப்பு - நியாயத்தீர்ப்பு (18:12-17)
19. எரேமியாவிற்கு எதிராக இரண்டாவது சதி - யூதாவின் மூலமாக (18:18)
20. எரேமியாவின் ஜெபம் (18:19-23)
21. குயவன் வேலையான கலசத்தின் அடையாளம்
(1) அடையாளம் - ஆறு பாவங்கள் - யூதாவின்மீது பத்து அம்ச நியாயத்தீர்ப்பு (19:1-10)
(2) யூதாவிற்கு இது பொருந்தும் - ஐந்து அம்ச நியாயத்தீர்ப்பு - காரணங்கள் (19:11-13)
22. தேவாலயப் பிரகாரத்தில் செய்தி (19:14-15)
 ஒய. இஸ்ரவேலின் தலைவர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனங்கள்
1. பஸ்கூருக்கு எதிரானது
(1) எரேமியாவின் மூன்றாவது உபத்திரவம் - பஸ்கூரினால் (20:1-2)
(2) பஸ்கூருக்கும் யூதாவிற்கும் எதிராக இருபது அம்ச தீர்க்கதரிசனம் (20:3-6)
(3) எரேமியாவின் பத்து அம்ச முறையீடு (20:7-10)
(4) எரேமியாவின் பத்து அம்ச நம்பிக்கை (20:11-13)
(5) எரேமியாவின் பத்து அம்ச சாபம் (20:14-18)
2. சிதேக்கியாவிற்கு எதிராக
(1) சிதேக்கியாவைப் பற்றி விசாரிப்பு (21:1-2)
(2) மூன்று அம்ச பதிலுரை
  (அ) பதினாறு அம்ச நியாயத்தீர்ப்பு (21:3-7)
  (ஆ) ஜீவவழியும் மரணவழியும் (21:8-10)
  (இ) சிதேக்கியாவிற்கு கட்டளைகள் (21:11-14)
(3) தேவன் யூதாவை இன்னும் மீட்பார் - எட்டு நிபந்தனைகள் (22:1-4)
(4) ஏழு நியாயத்தீர்ப்புகள் (22:5-9)
3. சல்லூமுக்கு எதிராக (22:10-12)
4. யோயாக்கீமிற்கு எதிராக (22:13-19)
5. கோனியாவிற்கு எதிராக (22:20-30)
6. மேய்ப்பர்களுக்கு எதிராக
(1) விசுவாசமில்லாத மேய்ப்பர்களுக்கு ஐயோ - நான்கு பாவங்கள் (23:1-2)
(2) மேசியாவின்கீழ் மீதியாக இருப்பவர்களின் பதினான்கு அம்ச மீட்பு (23:3-8)
(3) தீர்க்கதரிசிகளின் எட்டு பாவங்கள் (23:9-14)
(4) தீர்க்கதரிசிகள்மீது நியாயத்தீர்ப்பு (23:15-20)
(5) தீர்க்கதரிசிகளின் ஆறு பாவங்கள் (23:21-27)
(6) தீர்க்கதரிசிகளின் நியாயத்தீர்ப்பு (23:28-40)
 ய. பாபிலோனிய சிறையிருப்பைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்
1. அத்திப்பழங்களின் அடையாளம்
(1) இரண்டு அத்திப்பழக் கூடைகள் - நல்லதும் கெட்டதும் (24:1-3)
(2) நல்ல அத்திப்பழங்கள் (24:4-7)
(3) கெட்ட அத்திப்பழங்கள் (24:8-10)
2. எழுபது வருஷ சிறையிருப்பைப் பற்றிய தீர்க்கதரிசனம்
(1) யூதாவின் ஏழு அம்ச கலகம் (25:1-7)
(2) பன்னிரெண்டு அம்ச நியாயத்தீர்ப்பு (25:8-11)
(3) பாபிலோன்மீது நியாயத்தீர்ப்பு (25:12-14)
3. உக்கிரமாகிய மதுபான பாத்திரத்தின் அடையாளம்
(1) எல்லா தேசங்களும் இதைக் குடிக்க வேண்டும் (25:15-17)
(2) தேவனுடைய கோபத்தை இருபது தேசங்கள் குடிக்க வேண்டும் (25:18-26)
(3) யூதா முதலாவது குடிக்க வேண்டும் (25:27-29)
(4) யூதாவிற்கு பிறகு எல்லா தேசங்களும் குடிக்க வேண்டும் (25:30-33)
(5) தேசங்களின் தலைவர்கள் கட்டாயமாக குடிக்க வேண்டும் (25:34-38)
4. தேவாலய பிரகாரத்தில் செய்தி
(1) நிபந்தனையுள்ள இரக்கம் (26:1-6)
(2) எரேமியா கூறியதைக் கேட்டவர்கள் (26:7)
(3) செய்தியைப் புறக்கணித்து விட்டார்கள் - எரேமியாவின் நான்காவது உபத்திரவம் - ஆசாரியர்களாலும், ஜனங்களாலும் (26:8-11)
(4) எரேமியாவின் பதிலுரை (26:12-15)
(5) எரேமியாவின்மீது வாக்குவாதம் (26:16-24)
5. நுகங்களின் அடையாளம்
(1) ஆறு தேசங்களுக்கு நுகங்கள் அனுப்பப்பட்டன - தீர்க்கதரிசனம் (27:1-6)
(2) எல்லா தேசங்களும் மூன்று சந்ததிகள் கால அளவிற்கு பாபிலோனைச் சேவிக்க வேண்டும் (27:7)
(3) தேசங்களுக்கு எச்சரிப்பு (27:8)
(4) யூதாவிற்கு எச்சரிப்பு (27:9-10)
(5) நிபந்தனையுள்ள ஆசீர்வாதம் (27:11)
6. சிதேக்கியாவிற்கு நுகங்களின் அடையாளம்
(1) கட்டளைகள் (27:12-15)
(2) யூதா முழுமைக்கும் கட்டளைகள் (27:16-17)
(3) தேவாலயத்தில் மீதமுள்ள பொக்கிஷங்கள் பாபிலோனுக்குப் போகும் (27:18-22)
7. தீர்க்கதரிசன போட்டி
(1) அனனியாவின் கள்ளத்தீர்க்கதரிசனம் (28:1-4)
(2) எரேமியாவின் பதிலுரை (28:5-9)
(3) அனனியாவின் கள்ளத்தீர்க்கதரிசனம் (28:10-11)
(4) எரேமியாவின் மெய் தீர்க்கதரிசனம் (28:12-16)
(5) மெய்தீர்க்கதரிசனத்திற்கு பரீட்சை (28:17)
8. முதலாவது சிறையிருப்பிலிருந்த யூதர்களுக்கு நிருபம்
(1) வீடுகளைக் கட்டி குடியிருங்கள் - பத்து அம்ச புத்திமதி (29:1-7)
(2) கள்ளத்தீர்க்கதரிசிகளை நம்ப வேண்டாம் (29:8-9)
(3) எழுபது வருஷத்திற்கு பின்பு ஒன்பது அம்ச மீட்பு (29:10-14)
(4) யூதாவிலுள்ள அவர்களுடைய சகோதரரின் ஒன்பது அம்ச நியாயத்தீர்ப்பு - காரணங்கள் (29:15-19)
(5) பாபிலோனிலுள்ள கள்ளத் தீர்க்கதரிசிகள்மீது நியாயத்தீர்ப்பு - காரணம் (29:20-23)
(6) செமாயாவின் பாவம் (29:24-29)
(7) செமாயாவின்மீது நியாயத்தீர்ப்பு (29:30-32)
 யஒ. சிறையிருப்பிலிருந்து மீட்கப்படுவது பற்றிய தீர்க்கதரிசனங்கள்
1. யூதாவையும் இஸ்ரவேலையும் பாலஸ்தீனாவிற்கு மறுபடியுமாக கூட்டிச் சேர்ப்பது (30:1-3)
2. மகா உபத்திரவம் (30:4-7)
3. மேசியாவின்கீழ் இஸ்ரவேல் மறுபடியுமாக கூட்டிச் சேர்க்கப்படுவதன் பதினைந்து அம்சங்கள் (30:8-17)
4. எருசலேம் மறுபடியும் கட்டப்படும் (30:18)
5. இஸ்ரவேலின் பன்னிரெண்டு ஆசீர்வாதங்கள் (30:19-22)
6. மகா உபத்திரவம் (30:23-24)
7. இஸ்ரவேலின் மனந்திரும்புதல் (31:1)
8. மீட்பின் பதினான்கு அம்சங்கள் (31:2-9)
9. இஸ்ரவேலின் பத்து ஆசீர்வாதங்கள் (31:10-14)
10. அழவேண்டாம் என்று நான்கு அம்ச புத்திமதி (31:15-17)
11. இஸ்ரவேலின் மனந்திரும்புதல் (31:18-22)
12. இஸ்ரவேலின் பத்து ஆசீர்வாதங்கள் (31:23-30)
13. புதிய உடன்படிக்கையின் பத்து ஆசீர்வாதங்கள் (31:31-34)
14. சந்திரன், சூரியனைப் போன்று இஸ்ரேல் நித்திய காலமாக இருக்கும் (31:35-37)
15. எருசலேம் நித்திய நகரமாக இருக்கும் (31:38-40)
16. உறவின் முறை மீட்பின் அடையாளம்
(1) சிதேக்கியாவின் கேள்வி (32:1-5)
(2) உறவின் முறை மீட்பின் நிறைவேற்றம் (32:6-14)
(3) யூதாவிற்கு பொருந்தும் (32:15)
17. எரேமியாவின் ஜெபம் - தேவனுடைய பதினாறு அம்ச மகத்துவம் (32:16-25)
18. தேவனுடைய பதிலுரை
(1) ஒன்பது அம்ச நியாயத்தீர்ப்பு - பத்து அம்ச காரணம் (32:26-36)
(2) இஸ்ரவேல் மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்படுவதின் பதினைந்து அம்சங்கள் (32:37-44)
19. தாவீதின் இராஜ்ஜியம் மறுபடியும் ஸ்தாபிக்கப்படும்
(1) முதலாவதாக அழிவு (33:1-5)
(2) மீட்பின் பதினாறு அம்சம் (33:6-13)
(3) மேசியாவின் ஆளுகை - தாவீதின் உடன்படிக்கையும் லேவியரின் உடன்படிக்கையும் உறுதி பண்ணப்படுகிறது (33:14-18)
(4) சந்திரன், சூரியனைப் போல தாவீதின் உடன்படிக்கை நித்தியமாய் இருக்கும் (33:19-22)
(5) சந்திரன், சூரியனைப் போல இஸ்ரேல் நித்திய காலமாயிருக்கும் (33:23-26)
 யஒஒ. பாபிலோனிய சிறையிருப்பைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்
1. சிதேக்கியாவின் பன்னிரெண்டு அம்ச பதவி இழப்பும் சிறையிருப்பும் (34:1-7)
2. சிதேக்கியாவின் நீதியான ஆணை
(1) செயல் இழந்தது (34:8-11)
(2) தேவனுடைய கடிந்து கொள்ளுதல் (34:12-15)
(3) தேவனுடைய கடிந்து கொள்ளுதல் - பதினான்கு அம்ச நியாயத்தீர்ப்பு (34:16-22)
3. ரேகாபியரின் அடையாளம்
(1) ரேகாபியரின் கீழ்ப்படிதல் (35:1-11)
(2) யூதாவிற்கு பொருந்தும் (35:12-15)
(3) யூதாவின்மீது நியாயத்தீர்ப்பு (35:16-17)
(4) ரேகாபிய உடன்படிக்கை (35:18-19)
4. யோயாக்கீமுக்கு எரேமியாவின் புஸ்தகம்
(1) நியாயத்தீர்ப்புகளின் புஸ்தகம் எழுதப்பட்டது (36:1-4)
(2) நியாயத்தீர்ப்புகளின் புஸ்தகம் யூதாவிற்கு வாசிக்கப்பட்டது (36:5-10)
(3) மிகாயாவின்மீது ஏற்பட்ட விளைவு (36:11-13)
(4) பிரபுக்களின்மீது ஏற்பட்ட விளைவு (36:14-19)
(5) யோயாக்கீமின்மீது ஏற்பட்ட விளைவு - புஸ்தகம் அழிக்கப்பட்டது (36:20-26)
(6) அதிக நியாயத்தீர்ப்புக்களோடு புஸ்தகம் மறுபடியும் எழுதப்பட்டது - யோயாக்கீம் தண்டிக்கப்பட்டான் (36:27-32)
5. சிதேக்கியாவின் ஆட்சி
(1) ஆட்சிக்கு வருவதும் சுபாவமும் (37:1-2)
(2) ஜெபிக்குமாறு சிதேக்கியாவின் விண்ணப்பம் (37:3-4)
(3) கல்தேயர் எருசலேமை விட்டு புறப்பட்டுப் போனார்கள் (37:5)
(4) அவர்கள் திரும்பி வருவதைப் பற்றிய தீர்க்கதரிசனம் (37:6-10)
(5) எரேமியாவின் ஐந்தாவது உபத்திரவம்
  (அ) தவறாக குற்றம் சாட்டப்பட்டு கைதானான் (37:11-14)
  (ஆ) காவற்கிடங்கில் தள்ளப்பட்டான் (37:15-16)
  (இ) எரேமியா விடுவிக்கப்பட்டான் (37:17)
  (ஈ) இரக்கத்திற்காக எரேமியா கெஞ்சுகிறான் (37:18-20)
  (உ) காவற்கிடங்கிலிருந்து காவற்சாலையின் முற்றத்திற்கு (37:21)
  (ஊ) பிரபுக்கள் எரேமியாவின்மீது குற்றம் சுமத்துகிறார்கள் - மரண தண்டனை கொடுக்க வேண்டுமென்று கோருகிறார்கள் (38:1-4)
  (எ) பிரபுக்கள் கையில் ஒப்புக் கொடுக்கப் படுகிறான் - இரண்டாவது காவற்கிடங்கில் போடப்படுகிறான் (38:5-6)
  (ஏ) ஒரு எத்தியோப்பியன் அவனை விடுவிக்கிறான் - காவற்சாலையின் முற்றத்தில் வைக்கப்படுகிறான் (38:7-13)
  (ஐ) சிதேக்கியாவோடு தனியாக சந்திப்பு - இரக்கத்திற்காக விண்ணப்பம் (38:14-16)
  (ஒ) நிபந்தனையுள்ள இரக்கம் குறித்த தீர்க்கதரிசனம் (38:17-23)
  (ஓ) சிதேக்கியா பிரபுக்களுக்காக பயப்படுகிறான் (38:24-27)
  (ஒள) சிறையிருப்பு வரையிலும் எரேமியா தொடர்ந்து கைதியாகவே இருக்கிறான் (38:28)
(6) யூதாவின் கடைசி சிறையிருப்பு
  (அ) எருசலேம் பிடிக்கப்பட்டது (39:1-4)
  (ஆ) சிதேக்கியாவின்மீது நியாயத்தீர்ப்பு (39:5-7)
  (இ) எருசலேம் அழிக்கப்பட்டது (39:8)
  (ஈ) கடைசியாக கடந்து போனவர்கள் (39:9)
  (உ) ஒருசிலர் மீதியாக வைக்கப் பட்டார்கள் (39:10)
  (ஊ) எரேமியா தப்புவிக்கப்பட்டான் (39:11-14)
  (எ) எத்தியோப்பியனுக்குச் செய்தி (39:15-18)
 யஒஒஒ. மீதியாக இருப்பவர்களுக்கு தீர்க்கதரிசனங்கள்
1. எரேமியா விடுவிக்கப்பட்டான் (40:1-6)
2. யூதர்கள் மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள் (40:7-12)
3. கெதலியாவிற்கு எதிரான சதி (40:13-16)
4. சதி நிறைவேறுகிறது (41:1-10)
5. யோகனான் தலைவனானான் (41:11-18)
6. யூதர்கள் எரேமியாவிடம் விசாரிக்கிறார்கள் (42:1-3)
7. எரேமியா தேவனிடம் விசாரிக்கிறான் (42:4)
8. யூதர்கள் கீழ்ப்படிவதாக வாக்குப் பண்ணுகிறார்கள் (42:5-6)
9. மீதியாக இருப்பவர்களுக்கு தேவனுடைய செய்தி
(1) ஆசீர்வாதம் - நிபந்தனை (42:7-12)
(2) சாபம் - நிபந்தனை (42:13-22)
10. மீதியாக இருப்பவர்களின் கலகம் (43:1-4)
11. அவர்கள் எகிப்திற்கு ஓடிப்போனார்கள் (43:5-7)
12. எகிப்தில் முதலாவது தீர்க்கதரிசனம்
(1) புதைத்து வைக்கப்பட்ட கற்களின் அடையாளம் (43:8-9)
(2) யூத ராஜ்ஜியத்திற்கு இது பொருந்தும் (43:10-13)
13. எகிப்தில் இரண்டாவது தீர்க்கதரிசனம்
(1) யூதாவின் அழிவு - காரணம் (44:1-6)
(2) யூதர்களின்மீது குற்றச்சாட்டு (44:7-10)
(3) பன்னிரெண்டு அம்ச நியாயத்தீர்ப்பு (44:11-14)
(4) புதுப்பிக்கப்பட்ட கலகம் (44:15-19)
14. எகிப்தில் மூன்றாவது தீர்க்கதரிசனம்
(1) யூதாவின் அழிவு - காரணம் (44:20-23)
(2) ஆறு அம்ச நியாயத்தீர்ப்பு (44:24-30)
 இடைக்காட்சி - பாருக்கிற்கு தீர்க்கதரிசனம் (45:1-5)
 ஒல. பன்னிரெண்டு புறஜாதியருக்கு எதிரான தீர்க்கதரிசனங்கள்
1. எகிப்திற்கு எதிராக
(1) யுத்தத்திற்கு அழைப்பு (46:1-4)
(2) எகிப்தின் கலகம் (46:5-6)
(3) எகிப்தின் ஆணவம் (46:7-8)
(4) யுத்தத்திற்கு அழைப்பு - வருங்காலம் (46:9-10)
(5) எகிப்தின் வீழ்ச்சி (46:11-12)
(6) பாபிலோனிலிருந்து நியாயத்தீர்ப்பு (46:13-17)
(7) சிறையிருப்பும் அழிவும் (46:18-26)
(8) இஸ்ரேல் மீட்கப்படும் (46:27-28)
2. பெலிஸ்தியா, தீரு, சீதோன், காப்தோர் ஆகியவற்றிற்கு எதிராக
(1) பாபிலோனிய படையெடுப்பு (47:1-5)
(2) தேவனுடைய நோக்கம் (47:6-7)
3. மோவாபிற்கு எதிராக
(1) பாபிலோனிய படையெடுப்பு ((48:1-5)
(2) மோவாபியர் தப்பி ஓடினார்கள் (48:6-10)
(3) மோவாபின் அழிவு (48:11-25)
(4) நியாயத்தீர்ப்பிற்கு பத்து காரணங்கள் (48:26-30)
(5) மோவாபிற்காக புலம்பல் (48:31-39)
(6) பாபிலோனிய படையெடுப்பு - காரணம் (48:40-43)
(7) மோவாபியர் தப்பி ஓடினார்கள் (48:44-46)
(8) மோவாபின் மீட்பு (48:47)
4. அம்மோனுக்கு எதிராக
(1) பாபிலோனிய படையெடுப்பு (49:1-2)
(2) அம்மோனுக்காக புலம்பல் (49:3)
(3) நியாயத்தீர்ப்பு - காரணம் (49:4-5)
(4) அம்மோனின் மீட்பு (49:6)
5. ஏதோமிற்கு எதிராக
(1) உடனடி அழிவு (49:7-12)
(2) வருங்கால அழிவு (49:13)
(3) பாபிலோனிய படையெடுப்பு (49:14-15)
(4) நியாயத்தீர்ப்பிற்குக் காரணம் (49:16)
(5) வருங்கால அழிவு (49:17-18)
(6) பாபிலோனிய படையெடுப்பு (49:19-22)
6. தமஸ்குவிற்கு எதிராக
(1) கலக்கமும் பலவீனமும் (49:23-24)
(2) பாபிலோனிய படையெடுப்பு (49:25-27)
7. கேதார், காத்சோர் ஆகியவற்றிற்கு எதிராக
(1) படையெடுக்கும் கட்டளை (49:28-29)
(2) ஓடுவதற்குக் கட்டளை (49:30)
(3) படையெடுக்கும் கட்டளை (49:31-32)
(4) ஆத்சோரின் அழிவு (49:33)
8. ஏலாமிற்கு எதிராக
(1) பாபிலேனியர்களால் ஏற்பட்ட அழிவு (49:34-37)
(2) கலக்கம் - நியாயத்தீர்ப்பு (49:38)
(3) ஏலாமின் மீட்பு (49:39)
9. பாபிலோனிற்கு எதிராக
(1) மேதிய - பெர்சியாவின் படையெடுப்பு (50:1-3)
(2) இஸ்ரவேலர் மறுபடியுமாக கூட்டிச் சேர்க்கப்பட்டார்கள் (50:4-7)
(3) படையெடுப்பு (50:8-16)
(4) பாபிலோன் தண்டிக்கப்பட்டது - இஸ்ரவேல் பாலஸ்தீனாவிற்கு திரும்ப வந்தது (50:17-20)
(5) பாபிலோனை அழிக்கும் கட்டளை (50:21-32)
(6) பாபிலோன் இஸ்ரவேலையும் யூதாவையும் அடக்கி வைத்திருந்தது (50:33-34)
(7) உடனடி நியாயத்தீர்ப்பு (50:35-38)
(8) வருங்கால நியாயத்தீர்ப்பு (50:39-40)
(9) உடனடியாக படையெடுத்து வந்தவர்கள் - மேதியா - பெர்சியா (50:41-51:4)
(10) யூதாவும் இஸ்ரவேலும் இன்னும் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனமாக இருக்கிறார்கள் (51:5)
(11) வருங்கால அழிவு (51:6-8)
(12) உடனடி அழிவு (51:9-18)
(13) யாக்கோபின் பங்குவீதம் (51:19)
(14) பாபிலோனைத் தண்டிப்பதற்கு கோரேஸ் தேவனுடைய கோல் (51:20-25)
(15) பாபிலோன் நித்தியமாக அழிக்கப்படும் (51:26)
(16) உடனடி நியாயத்தீர்ப்பு (51:27-33)
(17) இஸ்ரவேலின் முறையீடு (51:34-35)
(18) தேவன் இஸ்ரவேலைப் பழிவாங்குகிறார் (51:36-44)
(19) பாபிலோனை விட்டு வெளியேறுமாறு கட்டளை (51:45-46)
(20) காரணம் - நியாயத்தீர்ப்பு (51:47-49)
(21) சீயோனுக்கு திரும்புமாறு கட்டளை (51:50-51)
(22) காரணம் - பாபிலோன்மீது நியாயத்தீர்ப்பு - சிறையிருப்பு முடிந்தது (51:52-58)
(23) புஸ்தகத்தின் அடையாளம் (51:59-62)
(24) முக்கியத்துவம் - பாபிலோனின் வீழ்ச்சி (51:63-64)
 ல. யூதாவின் சிறையிருப்பு
1. யூதாவின் கலகம் (52:1-3)
2. எருசலேமின் வீழ்ச்சி (52:4-7)
3. சிதேக்கியாவின்மீது நியாயத்தீர்ப்பு (52:8-11)
4. எருசலேம் அழிக்கப்பட்டது (52:12-14)
5. யூதாவின் கடைசி சிறையிருப்பு (52:15)
6. ஒரு சிலர் மீதியாக வைக்கப்பட்டார்கள் (52:16)
7. தேவாயலத்தின் பொக்கிஷங்களை எடுத்துச் சென்றார்கள் (52:17-23)
8. ஆசாரியர்களையும் பிரபுக்களையும் வெட்டிக் கொன்று போட்டார்கள் (52:24-27)
9. நாட்டை விட்டு மூன்று வெளியேற்றங்கள் (52:28-30)
10. யோயாக்கீனின் பிந்தைய நாட்கள் (52:31-34)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.