புலம்பல் புத்தகம் ஒரு கண்ணோட்டம்




புலம்பல்
புத்தகம் ஒரு கண்ணோட்டம்

முன்னுரை 

எபிரெயு பாஷையில் எரேமியாவின் புலம்பல் புஸ்தகத்திற்கு தலைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. மோசேயின்  பஞ்சாகம புஸ்தகங்களுக்கு, முதல் வார்த்தையே அந்தந்த புஸ்தகங்களுக்கு பெயராகயிருக்கும்.   ஆதியாகமம் புஸ்தகம் எபிரெயு பாஷையில்  ""பெரிஷித்'' என்று  அழைக்கப்படுகிறது.  அதுபோல  எரேமியாவின் புலம்பல் புஸ்தகம்,  எபிரெயு பாஷையில் ""எக்கா''  என்னும் முதல் வார்த்தையினால்  அழைக்கப்படுகிறது.

யூதமார்க்கத்தின் வியாக்கியான ஆசிரியர்களும்,  எபிரெய ஆசிரியர்களும்  இந்தப் புஸ்தகத்திற்கு  ""கீனோத்'' என்னும் பெயரை கொடுத்திருக்கிறார்கள். இந்தப் பெயருக்கு ""புலம்பல்கள்'' என்று பொருள்.  பரிசுத்த வேதாகமத்தில் பரிசுத்தமான சந்தோஷ கீதங்கள் இருப்பதுபோல, பரிசுத்தமான சோககீதங்களும், புலம்பலின் கீதங்களும் இருக்கிறது. 

புலம்பல் புஸ்தகத்தின் ஆசிரியர் எரேமியா. இவர்  இந்தப் புஸ்தகத்தை கவிதை நடையில் எழுதியிருக்கிறார்.  எரேமியாவின் புலம்பல் புஸ்தகம், அவருடைய  தீர்க்கதரிசன புஸ்தகத்தோடு  சேர்த்து கோர்க்கப்பட்டிருக்கிறது.  எரேமியாவின் புலம்பல் புஸ்தகம் அவருடைய  தீர்க்கதரிசன புஸ்தகத்திற்கு பின்னிணைப்பாக  சேர்க்கப்பட்டிருக்கிறது. 

எரேமியா தன்னுடைய தீர்க்கதரிசன புஸ்தகத்தில்,  யூதா, எருசலேம் ஆகியவற்றின் அழிவை  தீர்க்கதரிசனமாய்ச்  சொல்லியிருக்கிறார். எரேமியா தீர்க்கதரிசன புஸ்தகத்தின்  52-ஆவது அதிகாரத்தில்,  யூதாவும் எருசலேமும்  எவ்வாறு அழிந்துபோயிற்று  என்னும் வரலாற்று சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது.  எரேமியா  இந்தப் புலம்பல் புஸ்தகத்தில், யூதா, எருசலேம் ஆகியவற்றின் அழிவுக்காக வருத்தத்தோடு புலம்புகிறார். 

எரேமியா தீர்க்கதரிசி  யூதாதேசத்திற்கும் எருசலேம் நகரத்திற்கும் வரப்போகும் அழிவை தீர்க்கதரிசன பார்வையோடு பார்த்தார்.  அப்போது தன்னுடைய கண்கள் நீரூற்றாயிருந்தால்  நலமாயிருக்கும் என்று   தன்னுடைய விருப்பத்தைச் சொன்னார். எரேமியா தீர்க்கதரிசனம் சொன்ன பிரகாரமாக யூதாதேசத்திற்கும்,  எருசலேம் நகரத்திற்கும் அழிவு வந்தது. எரேமியா தன்னுடைய தேசத்தின் அழிவைப் பார்த்து அழுது புலம்புகிறார்.  

யூதாதேசத்தார்  எரேமியாவின்மீது சிநேகமாயில்லை.  அவரை விரோதித்தார்கள்.  அவருக்கு தீங்கு செய்தார்கள்.  ஆனாலும் எரேமியா  யூதாதேசத்தின் அழிவுக்காக அழுது புலம்புகிறார். கர்த்தருடைய கோபத்தினால் யூதாதேசம் அழிந்துபோகும் என்று எரேமியா தீர்க்கதரிசனம் சொன்னார்.   அவர் சொன்ன பிரகாரம்  யூதாதேசமும் அழிந்துபோயிற்று. இதனால்  எரேமியா  ஒரு மெய்யான தீர்க்கதரிசி என்பது நிரூபணமாயிற்று.  ஆனாலும் யூதாதேசம் அழிந்துபோனதற்காக  எரேமியா வேதனையோடு அழுது புலம்புகிறார். 

கல்தேயர்கள்  யூதாதேசத்தின்மீது  யுத்தம்பண்ணினார்கள்.  அவர்கள் எருசலேமை முற்றிக்கைப்போட்டார்கள். யூதாவின் பட்டணங்களையும் எருசலேம் நகரத்தையும் அழித்துப்போட்டார்கள்.  எருசலேமிலுள்ள தேவாலயத்தையும், அரமனையையும் தீயிட்டு கொளுத்திவிட்டார்கள். யூதாதேசம் அழிந்தது.  தேவாலயமும் அழிந்தது. கல்தேயர்கள் தேவாலயத்தின் பலிபீடத்தையும்  உடைத்துப்போட்டார்கள்.  தேவாலயத்திலுள்ள பரிசுத்த பணிமுட்டுக்களையெல்லாம் தங்கள் தேசத்திற்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். எரேமியா தீர்க்கதரிசி        இந்த சந்தர்ப்பத்தில் யூதாவுக்காகவும்,  எருசலேமுக்காகவும் அழுது புலம்புகிறார். 

யோசியா ராஜா மரணமடைந்தார். ""எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள் வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவே-லே வழங்கிவருகிறது; அவைகள்   புலம்ப-ன் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது''  (2நாளா 35:25). 

யோசியா ராஜா மரணமடைந்தபோது எரேமியா மிகவும் துக்கப்பட்டார். எரேமியா  யோசியாவின்மேல் பாடிய  புலம்பல் பாடலே,  ""எரேமியாவின் புலம்பல் புஸ்தகம்'' என்றும்  ஒரு சிலர் சொல்லுகிறார்கள். ஆனால்  எரேமியாவின் புலம்பல் புஸ்தகத்தில் யோசியாவைப்பற்றி  ஒன்றும் எழுதப்படவில்லை. யூதாவின்மீதும் எருசலேமின்மீதும் ஏற்கெனவே வந்துவிட்ட அழிவுக்காக  எரேமியா துக்கத்தோடு புலம்பல் பாடுகிறார்.   யோசியாவின்  அடக்க ஆராதனைக்காக  எரேமியா புலம்பல் பாடவில்லை. எருசலேம் நகரம் அழிந்துபோயிற்று.  கர்த்தருடைய பரிசுத்த நகரம்  இப்போது  மரித்துப்போனதுபோல இருக்கிறது.   எருசலேமின்  அடக்க ஆராதனையில்  புலம்புவதுபோல எரேமியா இந்தப் புலம்பல் பாடலை எழுதியிருக்கிறார்.  

எரேமியாவின் புலம்பல் பாடல் கவிதை நடையிலும் எழுதப்பட்டிருக்கிறது. இது எபிரெய பாஷையின் அகர வரிசையிலும் எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்தின் ஐந்தாவது அதிகாரத்தைத் தவிர,  மற்ற  நான்கு அதிகாரங்களும்  அகர வரிசையில் எழுதப்பட்டிருக்கிறது.  எபிரெய பாஷை எழுத்தியலில்  22 எழுத்துக்கள்  உள்ளன. முதலாவது எழுத்து ஆலெப். ஒவ்வொரு அதிகாரத்திலும்,   முதல் வசனத்தின் முதல் எழுத்து  ""ஆலெப்'' என்னும்  எபிரெய எழுத்தில் ஆரம்பமாகும்.  இரண்டாவது வசனம் ""பேத்'' என்னும் எழுத்திலும்,  மூன்றாவது வசனம் ""கிமெல்'' என்னும் எழுத்திலும் ஆரம்பமாகும்.   

எரேமியாவின் புலம்பல் புஸ்தகத்தில் முதல் இரண்டு அதிகாரத்திலும்  22 வசனங்கள் உள்ளன.  மூன்றாவது அதிகாரத்தில்  66 வசனங்கள் உள்ளன.  இந்த அதிகாரத்தில் முதல் மூன்று வசனங்களும்  ""ஆலெப்''  என்னும் எழுத்தில் ஆரம்பமாகும்.  அடுத்த மூன்று வசனங்கள் ""பேத்'' என்னும் எழுத்தில் ஆரம்பமாகும். எபிரெய பாஷையின் ஒவ்வொரு எழுத்தும்,  மூன்று வசனங்களில்  முதல் எழுத்தாக எழுதப்பட்டிருக்கிறது.  எபிரெய பாடல்கள் அகர வரிசைப்படி  எழுதப்பட்டிருப்பதினால்,  இந்தப் பாடல்களின் வரிகளை மனப்பாடம்பண்ணுவது மிகவும் எளிது.

எரேமியாவின் புலம்பல் புஸ்தகத்தின் 2; 3; 4 ஆகிய மூன்று அதிகாரங்களிலும், ""பே''  என்னும் எபிரெய எழுத்து, ""ஆயின்''  என்னும்  எபிரெய எழுத்திற்கு முன்பாக வருகிறது. எபிரெய எழுத்தியலில் ""ஆயின்'' என்னும் எழுத்திற்கு பின்பு  ""பே''  வரும்.  ஆனால் இந்த மூன்று அதிகாரங்களிலும் இவ்விரண்டு எழுத்துக்களும், வரிசை மாறி எழுதப்பட்டிருக்கிறது. 

எபிரெயர்கள் ""எழுபது'' என்னும் எண்ணைக் குறிப்பதற்கு ""ஆயின்''  என்னும் எபிரெய எழுத்தை பயன்படுத்துவது வழக்கம்.   யூதாவின் மனுஷரும் எருசலேமின் குடிகளும்  பாபிலோன் தேசத்தில்  எழுபது வருஷங்களாக சிறையிருப்பிலிருந்தார்கள். எழுபது வருஷங்களுக்கு பின்பு  இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்,  தம்முடைய ஜனங்களை பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்து விடுதலைபண்ணினார். எபிரெயர்கள்  தங்களுடைய  சிறையிருப்பின் வரலாற்றை மறந்துவிடாமல் நினைவுகூரும் வண்ணமாக,  ""ஆயின்'' என்னும் எழுத்து அகரவரிசை மாற்றி எழுதப்பட்டிருக்கிறது என்று வேதபண்டிதர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள்.

பக்தியுள்ள யூதர்கள், பாபிலோன் தேசத்தில்  தங்கள் முன்னோர்கள் அனுபவித்த  சிறையிருப்பு வேதனைகளை சோகத்தோடு நினைவு கூருவது வழக்கம். அவர்களுடைய துக்கத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.  எபிரெயர்கள் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்தாலும், அவர்கள் சீயோனையும் மறந்துவிடவில்லை.  

யூதமார்க்கத்தார் எரேமியாவின் புலம்பல் புஸ்தகத்திற்கு ஆவிக்குரிய வியாக்கியானங்களும் சொல்லுவது வழக்கம்.  யூதர்கள்  தங்களுடைய பாவங்களுக்காக கர்த்தரிடத்தில் அழுது புலம்பவேண்டும் என்று  யூதமார்க்கத்து ரபீமார்கள்  எரேமியாவின் புலம்பல் புஸ்தகத்தை ஆதாரமாக வைத்து எபிரெயர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள். 

எரேமியாவின் புலம்பல் புஸ்தகம் கி.மு. 606 ஆம் வருஷத்தில் பாலஸ்தீன தேசத்தில் எருசலேம் நகரம் அழிந்த பின்பு எழுதப்பட்டது.

 இந்தப் புஸ்தகத்தில் எந்த ஆசிரியரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. யூதமார்க்கத்தின் பாரம்பரியங்கள் அனைத்தும், இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் எரேமியாவே என்று ஒருமித்துக் கூறுகின்றனர். செப்துவஜிந்த் பதிப்பில் இந்தப் புஸ்தகத்தின் முன்னுரையில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. ""அக்காலத்தில் இஸ்ரவேல் சிறைபிடிக்கப்பட்டது. எருசலேம் பாழாக்கப்பட்டது. அப்போது எரேமியா அமர்ந்து, எருசலேமிற்காக புலம்பிய புலம்பல்......''  வல்கேட் பதிப்பிலும் எரேமியாவே இந்நூலாசிரியர் என்று கூறப்பட்டிருக்கிறது.

 இஸ்ரவேலும், எருசலேமும் அழிக்கப்பட்டு விட்டன. இதனால் ஏற்பட்டிருக்கும் ஆழ்ந்த துயரத்தினால் எரேமியா புலம்பல் பாடல்களைப் பாடுகிறார். இந்தப் புஸ்தகத்தில் 5 புலம்பல் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

எரேமியா புலம்பல் புஸ்தகத்தில்           கூறப்பட்டிருக்கும் முக்கியமான கருத்துக்கள்

1. எருசலேம் முற்றிக்கையிடப்பட்ட போது, அவர்களுடைய துயரங்களை வெளிப் படுத்தும் புலம்பல் பாடல்கள்.

2. எருசலேம் நகரத்தாரின் கசப்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் புலம்பல் பாடல்கள்.

3. தங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் எருசலேம் நகரத்தார் புறஜாதி தேசத்தாரிடம் சிறையிருப்புக்கு உட்படுவதைக் கூறும் புலம்பல் பாடல்கள்.

பொருளடக்கம்

  ஒ. முதலாவது புலம்பல்  

1. யூதாவின்மீதும் எருசலேமின் மீதும் முப்பத்திரண்டு அம்ச நியாயத்தீர்ப்பு (1:1-7)

2. நியாயத்தீர்ப்பிற்கு ஆறு காரணங்கள் (1:8-11)

3. வழியில் நடந்து போகிறவர்களுக்கு அவளுடைய வருத்தத்தைக் காணுமாறு அழைப்பு - பன்னிரெண்டு நியாயத் தீர்ப்புக்கள் (1:12-19)

4. எரேமியாவின் பத்து அம்ச நெருக்கம் (1:20-22)

 ஒஒ. இரண்டாவது புலம்பல்  

1. முப்பத்திரண்டு அம்ச நியாயத்தீர்ப்பு (2:1-8)

2. பன்னிரெண்டு அம்ச தாழ்மை (2:9-14)

3. எருசலேமின்மீது ஆறு அம்ச பழித்துரை (2:15-16)

4. யூதாவின்மீது ஆறு அம்ச நியாயத்தீர்ப்பு (2:17)

5. ஜெபிக்குமாறு யூதாவிற்கு எரேமியா கூறிய ஏழு புத்திமதிகள் (2:18-19)

6. யூதாவின் அழிவைக் கண்நோக்கிப் பார்க்குமாறு தேவனிடத்தில் எரேமியாவின் ஜெபம் (2:20-22)

 ஒஒஒ. மூன்றாவது புலம்பல்  

1. முப்பத்திரண்டு அம்ச பாடு (3:1-20)

2. கர்த்தரின் எட்டு அம்ச சுபாவம் (3:21-38)

3. எரேமியாவின் பாவ அறிக்கையும் சீயோனுக்காக மனந்திருந்துவதும் (3:39-51)

4. தன் விரோதிகளைத் தேவன் பழிவாங்க வேண்டுமென்று எரேமியாவின் ஜெபம் (3:52-66)

 ஒய. நான்காவது புலம்பல்  

1. இருபத்திரண்டு அம்ச நியாயத்தீர்ப்பு (4:1-12)

2. நியாயத்தீர்ப்பிற்கான காரணங்கள் (4:13-14)

3. யூதா நாடு கடத்தப்பட்டபோது மற்ற தேசங்கள் யூதாவை நடத்திய விதம் (4:15-16)

4. உலகப் பிரகாரமான உதவி கிடைக்குமென்று யூதாவின் வீணான நம்பிக்கை (4:17-20)

5. ஏதோமின்மீது நியாயத்தீர்ப்பு (4:21)

6. யூதாவின் இறுதி மீட்பு (4:22)

 ய. ஐந்தாவது புலம்பல்  

1. ஜெபம் - இருபத்தெட்டு அம்ச அழிவு (5:1-16)

2. இரக்கத்திற்காக எரேமியாவின் விண்ணப்பம் (5:17-22)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.