சங்கீதம் 14 விளக்கம்




14 சங்கீதம் விளக்கம்

(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

முதலாவது அறிவுறுத்தும் சங்கீதம் - துன்மார்க்கனைக் குறித்து 

பொருளடக்கம்

 1. மதிகெட்டவனின் வார்த்தைகளும் செயல்களும் - (14:1) 
 2. கர்த்தர் பூமியில் பக்தியுள்ள மனுஷரைத் தேடுகிறார் - (14:2)             
 3. தேவனுடைய கண்டுபிடிப்பு - எல்லா மனுஷரும் துன்மார்க்கர் - (14:3-6)       
 4. தேவனுடைய இறுதி நோக்கம் - பூமியிலுள்ள மனுஷர் நீதிமானாயிருக்க வேண்டும் - (14:7) 

தாவீது பதிநான்காவது சங்கீதத்தை எந்த சந்தர்ப்பத்தில் எழுதினார் என்று தெளிவாகத் தெரியவில்லை. சவுல் தாவீதை துன்புறுத்தியபோது, அவர் இந்த சங்கீதத்தை எழுதியிருக்கவேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். வேறு சிலரோ, அப்சலோம் தாவீதுக்கு விரோதமாக கலகம்பண்ணியபோது, அவர் இந்த சங்கீதத்தை எழுதியிருக்கவேண்டுமென்று சொல்லுகிறார்கள். இவை இரண்டுமே யூகங்கள்தான். மெய்யாகவே இந்த சங்கீதத்தை தாவீது எப்போது எழுதினார் என்பது ஆதாரபூர்வமாக தெரியவில்லை. 

அப்போஸ்தலர் பவுல் பதிநான்காவது சங்கீதத்திலிருந்து ஒரு சில வசனங்களை தன்னுடைய நிருபத்திலே மேற்கோளாக காண்பித்திருக்கிறார் (ரோம 3:10-18). யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்கள் என்று பவுல் சொல்லுகிறார் (ரோம 3:9). உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்கள் (ரோம 3:19). மனுஷன் தன்னுடைய நல்ல சுபாவத்திலிருந்து தீயசுபாவத்திற்கு மாறிவிடுகிறான். மனுஷனுடைய துர்க்குணமே அவனுடைய பாவத்திற்கு பிரதான காரணம். 

தாவீது தன்னுடைய சத்துருக்கள் மூலமாய் தனக்கு ஏற்பட்டிருக்கிற துன்பத்தையும், நெருக்கத்தையும், ஆபத்தையும் பற்றி மூன்றாவது சங்கீதத்திலிருந்து பதிநான்காவது சங்கீதம் வரையிலும் எழுதியிருக்கிறார். எட்டாவது சங்கீதத்தின் செய்தி மாத்திரம் சற்று வித்தியாசமாயிருக்கிறது. மற்ற சங்கீதங்களெல்லாவற்றிலும் தாவீதின் சத்துருக்கள் அவரைத் தூஷித்ததையும், அவரைத் துன்பப்படுத்தியதையும், ஒடுக்கியதையும், நெருக்கியதையும் விரிவாகச் சொல்லுகிறார். 

இதுவரையிலும் தன்னுடைய சத்துருக்கள் மூலமாய் தனக்கு உண்டான பிரச்சனைகளைப்பற்றி சொன்ன தாவீது, இந்த சங்கீதத்தில் அந்தப் பிரச்சனைகளின் மூலகாரணத்தைப்பற்றிச் சொல்லுகிறார். அவர்களுடைய சுபாவம் கேடுள்ளதாயிருக்கிறது. ஆகையினால் அவர்கள் கேடானதை சிந்தித்து, கேடானதை செய்கிறார்கள். தாவீதின் சத்துருக்கள் மாத்திரமல்ல, மனுபுத்திரர் எல்லோருமே ஏகமாய்க் கெட்டுப்போயிருக்கிறார்கள். 

துன்மார்க்கமான இந்த உலகத்திற்கு விரோதமாக தாவீது கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். மனுஷருடைய அருவருப்பான கிரியைகளைப்பற்றி தாவீது கர்த்தரிடத்தில் சொல்லுகிறார் (சங் 14:1). தாவீது மனுஷர்மீது தான் சொல்லுகிற குற்றச்சாட்டிற்கு ஆதாரமும் கொடுக்கிறார் (சங் 14:2,3). அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லை. பிறரைத் துன்பப்படுத்துகிறவர்கள் துன்மார்க்கராயிருக்கிறார்கள். ஏழை எளியவர்களின் ஆலோசனைகளை அவர்கள் அலட்சியம்பண்ணுகிறார்கள் (சங் 14:4-6). இஸ்ரவேலின் இரட்சிப்புக்காக தாவீது விசுவாசத்தோடு ஜெபம்பண்ணுகிறார். கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்புவார் என்று தாவீது விசுவாசத்தோடும் சந்தோஷத்தோடும் சொல்லுகிறார் (சங் 14:7).  

மனுபுத்திரரின் பாவம் சங் 14 : 1-3 

தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லுகிறான் 

 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்-க் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை (சங் 14:1). 

பாவம் மனுக்குலத்திலே ஒரு நோயைப்போல வந்திருக்கிறது. சாதாரணமாகயிருந்த நோய் இப்போது கொள்ளைநோயாக மனுக்குலம் முழுவதற்கும் பரவியிருக்கிறது. இதனால் மனுபுத்திரர் தங்களைக் கெடுத்துக்கொள்கிறார்கள். மனுஷரின் பாவத்தினால் இரண்டு தீயவிளைவுகள் உண்டாகிறது. அவையாவன : 1. மனுஷர் அருவருப்பான கிரியைகளைச் செய்து தேவனுடைய மகிமையை அவமானப்படுத்துகிறார்கள். 2. தேவன் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லி மதிகெட்டவர்களாகிறார்கள். 

பாவிகளெல்லோருமே மதிகெட்டவர்கள். இவர்களிடத்தில் தெய்வபயமில்லை. இவர்கள் துணிகரமாக ""தேவன் இல்லை'' என்று தங்கள் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறார்கள். தங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிக்கொள்வதில் இவர்கள் பெருமைப்படுகிறார்கள். எல்லா பாவத்திற்கும் நாஸ்திகமும் ஒரு காரணம். இவர்களுடைய இருதயத்தில் தேவனைப்பற்றிய சிந்தனையே இல்லை. தேவன் இல்லையென்பதுதான் இவர்களுடைய நம்பிக்கை. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். இவர்களோ தேவன் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லி மதிகெட்டவர்களாயிருக்கிறார்கள். 

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் இந்த உலகத்து ஜனங்களை நோக்கிப் பார்த்து மிகவும் ஆச்சரியப்படுகிறோம். நம்முடைய சந்ததியாரில் அநேகர் நாஸ்திகராயிருப்பதைப் பார்த்து, நாஸ்திகம் அதிகமாய் வளர்ந்து விட்டது என்று சொல்லுகிறோம். நம்முடைய காலத்தில் மாத்திரமல்ல, தாவீதின் காலத்திலும் நாஸ்திகமும், அருவருப்பான கிரியைகளும் அதிகமாயிருந்தது. முந்தின நாட்கள் எவ்விதத்திலும் நம்முடைய நாட்களைவிட மேன்மையான நாட்களாயில்லை.  

தேவன் இல்லையென்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்கிறவன் ஒரு நாஸ்திகன். தேவன் ஒருவர் இருக்கிறாரா என்னும் நிச்சயம் இவனுக்கு இல்லை. தனக்கு நிச்சயமாக தெரியவில்லை என்பதற்காக, தேவன் இல்லை என்றே நாஸ்திகன் சொல்லிவிடுகிறான். தனக்குத் தெரியாததை தெரிந்துகொள்வதற்கு நாஸ்திகன் முயற்சி பண்ணுவதில்லை. தனக்குத் தெரியாதது இந்த உலகத்தில் இல்லை என்று மதிகேடாய் நினைத்து, தேவன் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான். 

நாஸ்திகன் மதிகெட்டவன். இவனிடத்தில் மெய்யான ஞானமில்லை. இவனுடைய மதிகேட்டிற்கு சான்றுகளும் உள்ளது. தேவன் இல்லையென்று சொல்லுகிறவன் பரிசுத்தமாய் ஜீவிப்பதில்லை. அவன் தன்னையே கெடுத்துக்கொள்கிறான். அருவருப்பான கிரியைகளை செய்து வருகிறான். யாருக்கும் நன்மை செய்யாமல் எல்லோருக்கும் தீங்குசெய்கிறான். தன்னை விசாரிப்பதற்கு ""தேவன் இல்லை'' என்னும் சிந்தனைதான் இவனுடைய பாவத்திற்குக் காரணம். துணிகரமாய்ப் பாவம் செய்வதற்கு இவன் நாஸ்திகத்தை தனக்கு கேடகமாக பயன்படுத்துகிறான். தேவன் இல்லையென்று சொல்லுகிற நாஸ்திக சிந்தனையே எல்லா மதிகேடுகளுக்கும், அருவருப்பான கிரியைகளுக்கும் காரணம். 

மனுஷன் பாவம் செய்து தன்னுடைய நல்ல சுபாவத்தையே கெடுத்துப்போடுகிறான். கர்த்தர் மனுஷனை நல்லவனாகத்தான் உண்டுபண்ணினார். ஆனால் மனுஷனோ பாவம் செய்து தன்னைத்தானே கெடுத்துப்போட்டிருக்கிறான். கர்த்தர் மனுஷனை தேவசாயலாக சிருஷ்டித்தார். மனுஷனுடைய பாவத்தினால், மனுஷனிடத்தில் காணப்பட்ட தேவசாயல் மங்கிப்போயிற்று. மனுஷனுடைய நற்குணம் சீரழிந்துபோயிற்று. பாவி தன்னைத்தானே கெடுத்து அருவருப்பான கிரியைகளைச் செய்கிறான். 

பாவிகள் தேவனை சேவிப்பதில்லை. அவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்வதில்லை. தங்களுடைய பேச்சினாலும், கிரியைகளினாலும் அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதுமில்லை. மனுபுத்திரர் எல்லோரும் வழிவிலகி ஏகமாய்க் கெட்டுப்போய்விட்டார்கள். பாவிகள் தங்களுக்கும் நன்மை செய்வதில்லை. பிறருக்கும் நன்மை செய்வதில்லை. பாவிகளால் அவர்களுக்கும் எந்தப் பிரயோஜனமுமில்லை. மற்றவர்களுக்கும் எந்தப் பிரயோஜனமுமில்லை. பாவிகளிடத்தில் மெய்யான அன்பு இல்லை. நற்குணம் இல்லை. ஆவியின் கனி இல்லை. தெய்வபயம் இல்லை. பயபக்தியும் இல்லை. பாவிகளிடத்தில் வீண்பெருமையும், ஆணவமும், அகந்தையும், துர்க்குணமும், தேவன் இல்லை என்று சொல்லுகிற நாஸ்திக குணமுமே இருக்கிறது. 

பாவிகளின் கிரியைகள் அவர்களையும் பாதிக்கிறது. மற்றவர்களையும் பாதிக்கிறது. தங்களுடைய பாவத்தினால் அவர்கள் தங்களையும் கெடுத்துப்போடுகிறார்கள். மற்றவர்களையும் கெடுத்துப்போடுகிறார்கள். பாவிகள் அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள். பாவத்தின் கிரியைகள் எல்லாமே அருவருப்பானவை. இவர்கள் தங்களுடைய இருதயத்தில், ""தேவன் இல்லை'' என்று சொல்லிக்கொள்வதினால், தெய்வபயமில்லாமல் துணிகரமாய்ப் பாவம் செய்கிறார்கள். 

ஒரு சிலர் தங்களுக்கு தேவனைத் தெரியும் என்று சொல்லுகிறார்கள். ஆனாலும் இவர்கள் தங்கள் கிரியைகளினால் தேவனை மறுதலித்துவிடுகிறார்கள். அருவருப்பான கிரியைகளைச் செய்து, தங்கள் இருதயத்தில், ""தேவன் இல்லை'' என்று சொல்லிக்கொள்கிறார்கள். பக்தியின் வேஷத்தைத் தரித்திருக்கிறார்கள். இவர்களிடத்தில் நன்மையான கிரியை எதுவும் காணப்படுவதில்லை. பாவிகளில் நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை. 

அப்போஸ்தலர் பவுல் தீத்துவுக்கு எழுதின நிருபத்தில் இப்படிப்பட்டவர்களைப்பற்றி இவ்வாறு சொல்லுகிறார். ""அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுத-க்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்'' (தீத் 1:16).

மதிகெட்டவன் கூறும் காரியங்கள்

 1. தேவன் இல்லை (சங் 14:1; சங் 53:1)
 2. இளைப்பாறு, புசித்துக்குடி, பூரிப்பாயிரு (லூக்கா 12:18-19)

மதிகெட்டவனின் சுபாவங்கள்

 1. தேவன் இல்லை என்கிறான்
 2. துன்மார்க்கமாக ஜீவிக்கிறான்
 3. அருவருப்பான கிரியைகளைச் செய்கிறான்
 4. தேவனை அறியவில்லை (சங் 14:2)  
 5. தேவனைத் தேடுகிற உணர்வு இல்லை
 6. நன்மை செய்யவில்லை (சங் 14:1,3)
 7. தேவனை விட்டு விலகிப் போனவன் (சங் 14:3)
 8. ஜீவியத்தில் கெட்டுப் போனவன்
 9. தேவனைப் பற்றிய அறிவு இல்லை (சங் 14:4)
 10. தேவ ஜனத்தைப் பட்சிக்கிறான்
 11. கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறதில்லை
 12. ஏழைகளை ஒடுக்குகிறான் (சங் 14:5) 

கர்த்தர் மனுபுத்திரரை கண்ணோக்கினார்

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்தி-ருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார் (சங் 14:2). 

துன்மார்க்கருடைய பாவமும், மதிகேடும், அருவருப்பான கிரியைகளும் உலகமெங்குமுள்ள மனுஷர்மீது ஒரு கொள்ளை நோயைப்போல பரவியிருக்கிறது. இந்த நோய் உலகத்தின் எல்லா பாகங்களிலுமுள்ள எல்லா பாஷைக்காரர்மீதும், எல்லா ஜாதிகள்மீதும், எல்லா இனத்தார்மீதும் பரவியிருக்கிறது. இவர்களுடைய பாவத்திற்கு தேவன் தாமே சாட்சியாயிருக்கிறார். 

மனுஷனிடத்தில் தேவனைத் தேடுகிற உணர்வு காணப்படவேண்டும். அவனே பக்தியுள்ளவன். மற்றவர்கள் தங்கள் இருதயத்தில் ""தேவன் இல்லை'' என்று சொல்லிக்கொள்கிற மதிகேடர்கள். தேவன் பரலோகத்திலிருந்து இந்தப் பூமியை பார்க்கிறார். பூமியிலுள்ள மனுபுத்திரர் எல்லோரையும் கண்ணோக்கி பார்க்கிறார். பூமியிலுள்ள மனுஷர் மத்தியிலே தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் ஒருவனாகிலும் இருக்கிறானா என்று கண்ணோக்கி பார்க்கிறார். அப்படிப்பட்டவன் ஒருவனையும் தேவனால் பார்க்க முடியவில்லை. தேவனைத் தேடுகிற உணர்வு ஒருவனிடத்திலும் இல்லை. 

மனுஷர் தங்களுக்கு நியமிக்கப்பட்ட கடமைகளைச் செய்கிறார்களா, அவர்கள் தேவனைத் தேடிப்பார்க்கிறார்களா, தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்துகிறார்களா, அவர்களுடைய இருதயங்களில் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் இருக்கிறதா என்பதையெல்லாம் பார்ப்பதற்காக கர்த்தர் மனுஷனை நோக்கிப் பார்க்கிறார். ஆனால் கர்த்தரால் இந்தப் பூமியிலே நன்மை செய்கிற மனுஷன் ஒருவனையும் பார்க்க முடியவில்லை. எல்லாரும் வழிவிலகிப்போயிருக்கிறார்கள். எல்லாரும் ஏகமாய்க் கெட்டுப்போயிருக்கிறார்கள். நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை. 

எல்லாரும் கெட்டுப்போனார்கள்

எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை (சங் 14:3). 

கர்த்தர் பரலோகத்திலிருந்து பூமியிலுள்ள மனுபுத்திரை கண்ணோக்கி பார்க்கிறார். தேவனைத் தேடுகிற உணர்வுள்ள மனுஷன் ஒருவனாகிலும் இருக்கிறானா என்று இந்தப் பூமி முழுவதும் தேடிப்பார்க்கிறார். அவரால் ஒருவனையும் பார்க்க முடியவில்லை. இந்தப் பூமியிலே தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் ஒருவனுமில்லை. கர்த்தருடைய பார்வையில் எல்லோரும் வழிவிலகிப் போனவர்களாகவும், ஏகமாய்க் கெட்டுப்போனவர்களாகவும் காணப்படுகிறார்கள். 

இந்தப் பூமியிலே ஒரு குறிப்பிட்ட பகுதியில் மாத்திரம் ஜனங்கள் பாவிகளாகயிருக்கிறார்கள் என்று தீர்மானம் பண்ண முடியவில்லை. இந்த உலகத்திலுள்ள எல்லோருமே கர்த்தருடைய பார்வையில் பாவிகளாயிருக்கிறார்கள். எல்லா பாஷைக்காரரும், எல்லா தேசத்தாரும், எல்லா ஜாதியாரும், எல்லா இனத்தாரும் கர்த்தருடைய பார்வையில் பாவிகளாயிருக்கிறார்கள். பூமியிலுள்ள எல்லா மனுஷரும் வழிவிலகிப்போய் ஏகமாய்க் கெட்டுப்போயிருக்கிறார்கள்.  

தேவனுடைய கிருபை மனுஷர் மத்தியிலே வல்லமையாய் வெளிப்படும்போதுதான் அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். தேவன் மனுஷர் மத்தியிலே பலத்த கிரியைகளை செய்யும்போதுதான் அவர்கள் மனந்திரும்புவார்கள். அவர்களுடைய இருதயத்தில் மாற்றமுண்டாகும். அருவருப்பான கிரியைகளைச் செய்கிறவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். தேவன் கிரியை நடப்பிக்கும்போதுதான், ""தேவன் இல்லை'' என்று தங்கள் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறவர்கள், ""தேவன் இருக்கிறார்'' என்று தங்கள் இருதயத்திலும் சொல்லுவார்கள், ஜனங்கள் மத்தியிலே வெளிப்படையாகவும் அறிக்கை செய்வார்கள். 

தேவன் இந்த உலகத்தை சிருஷ்டித்தபோது, தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார். அது மிகவும் நன்றாயிருந்தது (ஆதி 1:31). சில காலத்திற்குப் பின்பு தேவன் மறுபடியும் மனுஷனுடைய கிரியைகளைப் பார்த்தார். மனுஷனுடைய அக்கிரமம் அப்போது பூமியிலே பெருகியிருந்தது. தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்திற்கு விசனமாயிருந்தது (ஆதி 6:5). கர்த்தர் தம்முடைய சாயலாகத்தான் மனுஷனை சிருஷ்டித்தார். மனுஷனோ தன்னுடைய பாவத்தினால் தன்னையே கெடுத்துப்போட்டான். தன்னை உண்டாக்கின கர்த்தரையே மனஸ்தாபப்பட வைத்துவிட்டான். தேவனுடைய இருதயத்தை விசனப்படுத்திவிட்டான். 

கர்த்தருடைய ஜனம் சங் 14 : 4-7

அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லை

அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை (சங் 14:4). 

துன்மார்க்கர் பாவமான வழியில் செல்லுகிறார்கள். பாவமான வழி அவர்களுடைய ஜீவியத்திற்கும் ஆத்துமாவிற்கும் ஆபத்தான வழியாகவும் இருக்கிறது. தங்களுடைய துன்மார்க்கமான வழியே தங்களுக்கு பாதுகாப்பானது என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் அவர்களுடைய எண்ணம் தப்பிதமானது. அவர்கள் பாதுகாப்பு என்று சொல்வதுதான் அவர்களுக்கு ஆபத்தாக முடியும். 

துன்மார்க்கர் பாவவழியில் செல்லும்போது, தங்களுடைய துன்மார்க்கத்தையோ தங்கள் மதிகேட்டையோ, தங்கள் ஆபத்தையோ அவர்கள் நோக்கிப் பார்ப்பதில்லை. தங்களுடைய துன்மார்க்கமான வழியில் தங்களுக்கு ஆபத்து இருக்கிறது என்னும் உணர்வுகூட அவர்களிடத்தில் இல்லை. 

அக்கிரமக்காரர் துன்மார்க்கமான கிரியைகளை நடப்பிக்கிறார்கள். தங்களுடைய பாவகிரியைகளில் சந்தோஷப்படுகிறார்கள். ஒருவன் தன்னுடைய கடமையை நேர்த்தியாய்ச் செய்வதுபோல, அக்கிரமக்காரன் துன்மார்க்கமான கிரியை நேர்த்தியாய்ச் செய்கிறான். பாவத்திற்குப் பலன் உண்டு. பாவத்தின் சம்பளம் மரணம். பாவிகளுக்கு ஆத்தும மரணம் சம்பளமாகக் கொடுக்கப்படும்.  

அக்கிரமக்காரர் தேவனுடைய ஜனங்களை பட்சிக்கிறார்கள். அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல அவர்கள் தேவனுடைய ஜனங்களை பட்சிக்கிறார்கள். அப்பத்தை பசி வெறியோடு பட்சிப்பதுபோல அவர்கள் தேவனுடைய ஜனங்களை வெறியோடு பட்சிக்கிறார்கள். அவர்கள் தேவனையும், அவருடைய ஜனங்களையும் விரோதிப்பதுதான் அவர்கள் பட்சிப்பதற்கு மெய்யான காரணம். அக்கிரமக்காரர் தேவனுக்கும், தேவனுடைய ஜனங்களுக்கும் சத்துருக்களாயிருக்கிறார்கள். அக்கிரமமான கிரியைகளைச் செய்வது, அக்கிரமக்காரருக்கு அப்பம் புசிப்பதுபோலவும், திராட்சரசம் பானம்பண்ணுவதுபோலவும் இருக்கிறது. அக்கிரம செய்கையே அக்கிரமக்காரரின் போஜனம். துன்மார்க்கமான கிரியைகளே அவர்களுடைய பானம். 

அக்கிரமக்காரர் கர்த்தரைத் தொழுதுகொள்கிறதில்லை. ஜெபம் இல்லையென்றால் ஜெயமில்லை. ஜெபிக்காதவர்களிடத்தில் நன்மையான காரியங்களை எதிர்பார்க்க முடியாது. நாம் நன்மை செய்யவேண்டுமென்றால், ஒவ்வொரு நாளும் நாம் கர்த்தரைத் தொழுதுகொள்ளவேண்டும். துதி பெருகும்போது தேவனுடைய கிருபை நமக்குள் பெருகும். அக்கிரமக்காரரோ கர்த்தரைத் தொழுதுகொள்ளாததினால், அவர்களுக்கு தேவனுடைய கிருபை கொடுக்கப்படுவதில்லை.  

அக்கிரமக்காரர் ஏழைகளுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணுகிறார்கள். ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கர்த்தரே அடைக்கலமாயிருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகள் அவரையே நம்பியிருக்கிறார்கள் (சங் 11:1). துன்மார்க்கரோ கர்த்தருடைய பிள்ளைகளைத் தூஷிக்கிறார்கள். நீதிமான்களின் ஆலோசனைகளை அக்கிரமக்காரர் அலட்சியம் பண்ணுகிறார்கள். தங்களுடைய அக்கிரமமான துர்ஆலோசனைகளில் பிரியப்படுகிறார்கள்.  

கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்புவார்

அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே. சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்-, நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.சீயோனி-ருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும் (சங் 14:5-7). 

அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லை. அவர்கள் துணிகரமாய்ப் பாவம் செய்கிறார்கள். பாவம் செய்யும்போது சந்தோஷப்படுகிறார்கள். அதே வேளையில் அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். சிலர் அக்கிரமமான காரியங்களை செய்துவிட்டு துன்மார்க்கர் பெருமைப்படுவதும் உண்டு. அதே வேளையில் தங்கள் அக்கிரம கிரியைகளை நினைத்து அவர்கள் பயப்படுவதும் உண்டு. அவர்கள் ஆசையாய் நிறைவேற்றிய பாவங்களே அவர்களுக்கு ஆபத்தாய் வந்துவிடுகிறது. சந்தோஷத்தோடு பாவம் செய்தவர்கள் இப்போது தங்கள் பாவத்தின் விளைவுகளை நினைத்து பயந்து நடுங்குகிறார்கள். பட்டயத்தை எடுக்கிறவன் பட்டயத்தினால் அழிந்துபோவான்.  

கர்த்தர் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறார். இதுவே தேவனுடைய பிள்ளைகளுக்கு மிகப்பெரிய ஆறுதல். சிறுமைப்பட்டவனுக்கு கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார். அப்சலோம் தாவீதைத் துரத்திவிடுகிறான். தாவீதின் சத்துருக்கள் அவரைப் பிடிப்பதற்கு துரத்தி வருகிறார்கள். தாவீது தன்னுடைய ஆபத்தான வேளையிலும் கர்த்தர் தன்னோடு கூடயிருக்கிறார் என்று ஆறுதலாகயிருக்கிறார். கர்த்தரே தனக்கு அடைக்கலமானவர் என்று நம்பிக்கையோடிருக்கிறார். அப்சலோமுக்கு பயந்து ஓடிப்போகும்போது, கர்த்தர் தன்னுடைய சிறையிருப்பைத் திருப்புவார் என்று தாவீது நம்பிக்கையோடிருக்கிறார். 

தாவீதின் இருதயத்தில் கர்த்தரைப்பற்றிய சிந்ததையே நிரம்பியிருக்கிறது. அவர் கர்த்தருடைய கிருபையையும், நீதியையும், இரக்கத்தையும் எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார். இந்த சங்கீதத்தின் ஆரம்பத்தில் மனுபுத்திரரின் அருவருப்பான கிரியைகளை நினைத்து தாவீது கர்த்தருடைய சமுகத்தில் கவலையோடு வேண்டுதல் செய்கிறார். எல்லோரும் வழிவிலகி ஏகமாய்க் கெட்டுப்போயிருக்கிறார்கள் என்பதை கர்த்தர் பார்ப்பதுபோலவே தாவீதும் பார்க்கிறார். 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் மனுக்குலத்திற்கு இரட்சிப்பு வரப்போகிறது. காலம் நிறைவேறும்போது சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வரும். கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்புவார். மனுஷருடைய பாவங்களிலிருந்து அவர்களுக்கு இரட்சிப்பு உண்டாகும்.  

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உலக இரட்சகராக இருக்கிறார். தம்மிடத்தில் வருகிற யாரையும் இயேசுகிறிஸ்து புறம்பே தள்ளுவதில்லை. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிற எல்லோரையும் இயேசுகிறிஸ்து தம்மிடத்தில் வருமாறு அன்போடு அழைக்கிறார். இயேசுகிறிஸ்துவை விசுவாசத்தோடு பற்றிக்கொள்கிறவர்களுக்கு ஆத்தும இரட்சிப்பு உண்டு. மனுஷர் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி இரட்சிக்கப்படும்போது அவர்களுக்கு களிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். 

கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது யாக்கோபுக்கு களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார். கர்த்தர் அவர்களுடைய பாவங்களை நீக்குவார் (ரோம 11:26,27).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.