எகிப்து தேசமெங்கும் வந்த வண்டுகள் swarms of flies allover in Egypt




எகிப்து தேசமெங்கும் வந்த வண்டுகள் swarms of flies allover in Egypt
யாத் 8:20-32


யாத் 8:20. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு.

யாத் 8:21. என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன்மேலும், உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.

யாத் 8:22. பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி,

யாத் 8:23. என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

யாத் 8:24. அப்படியே கர்த்தர் செய்தார்; மகா திரளான வண்டுஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப் போயிற்று.

யாத் 8:25. அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே ப-யிடுங்கள் என்றான்.

யாத் 8:26. அதற்கு மோசே: அப்படிச் செய்யத்தகாது; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியருடைய அருவருப்பைப் ப-யிடுகிறதாயிருக்குமே, எகிப்தியருடைய அருவருப்பை நாங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாகப் ப-யிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா?

யாத் 8:27. நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்கு ப-யிடுவோம் என்றான்.

யாத் 8:28. அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் ப-யிடும்படிக்கு, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.

யாத் 8:29. அதற்கு மோசே: நான் உம்மை விட்டுப்புறப்பட்ட பின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் ப-யிடுகிறதற்கு ஜனங்களைப் போக விடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்.

யாத் 8:30. மோசே பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்.

யாத் 8:31. அப்பொழுது கர்த்தர் மோசேயின் சொற்படி, வண்டு ஜாதிகள் பார்வோனையும் அவன் ஊழியக்காரரையும் அவன் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி செய்தார்; ஒன்றாகிலும் மீந்திருக்கவில்லை.

யாத் 8:32. பார்வோனோ, இந்த முறையும் தன் இருதயத்தை கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.

கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது வண்டுகளை வரப்பண்ணுகிறார். இது கர்த்தர் வரப்பண்ணுகிற நான்காவது வாதையாகும். கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது தவளைகளை வரப்பண்ணுவதற்கு முன்பாக, அவர் பார்வோனை எச்சரித்தார். அதுபோலவே, கர்த்தர் வண்டுகளை அனுப்புவதற்கு முன்பாக, பார்வோனை எச்சரிக்கிறார். பார்வோனுக்கு அதிகாலையிலே எச்சரிப்பின் வார்த்தைகள் சொல்லப்படுகிறது.

கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை மோசேக்கு சொல்லுகிறார். மோசே கர்த்தர் சொல்லுகிற வார்த்தைகளை பார்வோனுக்கு சொல்லவேண்டும். கர்த்தர் மோசேயை நோக்கி: ""நாளை அதிகாலமே நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு என்று கர்த்தர் சொல்லுகிறார்'' (யாத் 8:20) என்று சொல்லுகிறார். 

மோசே காலமே எழுந்திருக்கவேண்டும். பார்வோன் நதிக்கு புறப்பட்டு வரும்போது, மோசே அவனை சந்திக்கவேண்டும். பார்வோன் தன் இருதயத்தில் பெருமையுள்ளவனாயிருக்கிறான். அவனுடைய இருதயம் கடினப்பட்டிருக்கிறது. கர்த்தர் அவனை தாழ்த்தவேண்டும் என்று சித்தங்கொண்டிருக்கிறார். மோசே பார்வோனுக்கு முன்பாக நின்று, கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி இஸ்ரவேல் ஜனங்களை போகவிடவேண்டும் என்று கர்த்தருடைய நாமத்தினால் பேசவேண்டும்.  

பார்வோன் எப்போதும்போல தன் இருதயத்தை கடினப்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. கர்த்தரை ஆராதனை செய்யும்படி பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை போகவிடாமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. கர்த்தர் மோசேயின் மூலமாக பார்வோனுக்கு தம்முடைய எச்சரிப்பின் வார்த்தைகளை சொல்லுகிறார். 

மோசே பார்வோனை நோக்கி, ""என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன்மேலும், உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்'' (யாத் 8:21) என்று கர்த்தருடைய நாமத்தினால் சொல்லவேண்டும்.

வண்டுகள் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியும். பார்வோனும் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியவேண்டும். அவன் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லையென்றால், வண்டுகள் அவனுக்கு விரோதமாக எழும்பும். எகிப்து தேசம் முழுவதும் வண்டுகளால் நிறையும்.  

எகிப்து தேசத்திலே இஸ்ரவேல் புத்திரரும் வாசம்பண்ணுகிறார்கள். அவர்கள் கோசேன் நாட்டிலே இருக்கிறார்கள். கர்த்தரிடத்தில் பட்சபாதமில்லை. ஆனாலும் கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது, வண்டுகளை அனுப்பும்போது, அவர் எகிப்தியரையும் எபிரெயரையும் தனித்தனியாகப் பிரிக்கிறார். கர்த்தர் அனுப்புகிற வாதை எகிப்தியர்மீது மாத்திரம் வரும். அந்த வாதைக்கு எபிரெயர்கள் தப்பித்துக்கொள்வார்கள்.

பூமியின் நடுவிலே, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே மெய்யான தேவன் என்பதை பார்வோன் அறிந்துகொள்ள வேண்டும். இதற்காக கர்த்தர் தம்முடைய ஜனங்களிருக்கிற கோசேன் நாட்டை வேறு பிரிக்கிறார். அதை விசேஷப்படுத்துகிறார். கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது வண்டுகளை அனுப்பும் அந்த நாளிலே, அந்த வண்டுகள் கோசேன் நாட்டிலே வராது. கர்த்தர் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும், பார்வோனுடைய ஜனமாகிய எகிப்தியருக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்கிறார். ""இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்'' (யாத் 8:22,23) என்று கர்த்தர் மோசேயை பார்வோனுக்கு சொல்லச் சொல்லுகிறார். 

""என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்'' என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த வாக்கியத்தில் ""வித்தியாசம் உண்டாக்குதல்'' என்பதற்கான எபிரெய வார்த்தை ""பெடூத்'' என்பதாகும். இதற்கு இரட்சிப்பு அல்லது மீட்பு என்று சங் 111:9; சங் 130:7 ஆகிய வசனங்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எகிப்துக்கு அனுப்பப்பட்ட வாதைகளிலிருந்து தேவன் தம்முடைய ஜனங்களை விடுவிப்பார். இதைப் பார்வோன் அறிந்து கொள்ள வேண்டும். கோசேனிலுள்ள இஸ்ரவேலர்கள் பாதுகாக்கப்படுவார்கள். எகிப்தியர்கள் அழிந்துபோவார்கள்.

கர்த்தர் தம்முடையவர்களை அறிந்திருக்கிறார். கர்த்தருக்கு சொந்தமானவர்கள் அவருடைய செட்டைகளின் மறைவிலே பாதுகாப்பாயிருப்பார்கள். தீங்கு அவர்களை அணுகாது. ஒருவேளை இந்தப் பிரபஞ்சத்தில் விசுவாசிகளாகிய நமக்கும், உலகப்பிரகாரமான ஜனங்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றாலும், கர்த்தர் தம்முடைய கிருபையினால் நம்மை உலகத்தார் மத்தியிலிருந்து விசேஷப்படுத்தி வேறுபிரித்திருக்கிற வித்தியாசம் மெய்யாகவே இருக்கிறது.

இந்தப் பிரபஞ்சத்தில் விசுவாசிகளும் அவிசுவாசிகளும் கலந்திருக்கிறார்கள். இங்கே நீதிமான்களும் துன்மார்க்கரும் ஒன்றாயிருக்கிறார்கள். மந்தையிலே வெள்ளாடுகளும் செம்மறியாடுகளும் கலந்திருப்பதுபோல, எல்லாவிதமான ஜனங்களும் இந்தப் பூமியிலே கலந்திருக்கிறார்கள். கர்த்தரோ தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாக, தமக்கு சொந்தமானவர்களை விசேஷப்படுத்தி வேறுபிரிப்பார். அவர்களுக்கு விசேஷித்த ஆசீர்வாதங்களையும், தெய்வீக கிருபைகளையும் கொடுப்பார். 

""அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்'' (மல் 3:18).

""அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரிப்பார்'' (மத் 25:32). 

""என் மந்தையே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்'' (எசே 34:17).

கர்த்தர் தாம் சொன்ன பிரகாரமாகவே செய்கிறார். மகா திரளான வண்டுஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வருகிறது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப் போயிற்று (யாத் 8:24).

எகிப்து தேசத்திலே வண்டுகள் மூலமாக வந்த வாதைகள் பெரிதாயிருக்கிறது. பார்வோனால் வண்டுகளின் திரள்கூட்டத்தை தாங்கமுடியவில்லை. எகிப்தியருக்கு வேதனைகள் அதிகரிக்கிறது. எகிப்து தேசம் முழுவதிலும் வண்டுகள் நிரம்பியிருக்கிறது. எபிரெயர் தங்கியிருக்கிற கோசேன் நாட்டிலோ ஒரு வண்டுகூட இல்லை. 

பார்வோன் வண்டுகள் மூலமாக வந்த வேதனைகளை தாங்க முடியாமல், மோசேயோடும் ஆரோனோடும் உடன்படிக்கை பண்ண முன்வருகிறான். அவன் மோசேயையும் ஆரோனையும் தன்னிடத்தில் அழைப்பிக்கிறான். பார்வோன் அவர்களை நோக்கி, ""நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்தில்தானே பலியிடுங்கள்'' (யாத் 8:25) என்று சொல்லுகிறான். 

எகிப்தியர்கள் மிருகங்களைப் பலியிட மாட்டார்கள். அது அவர்களுக்கு அருவருப்பான காரியம். இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்தில் தொடர்ந்து அடிமையாகத் தங்க வைப்பதற்குப் பார்வோன் அவர்களுடைய பலிசெலுத்தும் முறைமைகளையும் சகித்துக் கொள்கிறான். அந்தப் பலியை எகிப்தில் தேசத்தில் செலுத்துமாறு கூறுகிறான். பார்வோனின் இந்த யோசனையை மோசே நிராகரித்து விடுகிறார். எகிப்தியர்கள் தங்களைக் கல்லெறிவார்கள் என்று முறையிடுகிறார். (யாத் 8:26). ஆகையினால் ""நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்கு ப-யிடுவோம்'' என்று மோசே பார்வோனிடம் வலியுறுத்திக் கூறுகிறார் (யாத் 8:27).

மோசே தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்திலே பலியிடவேண்டும் என்று விரும்புகிறார். அதுவே கர்த்தருடைய சித்தம். கர்த்தருக்கு வனாந்தரத்திலே ஆராதனை செய்யும்படி இஸ்ரவேல் ஜனங்களை போகவிடவேண்டும் என்று மோசே சொல்லுகிறார். ஆனால் பார்வோனோ இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனுக்கு எகிப்து தேசத்திலே பலியிடட்டும் என்று சொல்லுகிறான்.

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பலியிடுவதை பார்வோன் தடைபண்ணவில்லை. ஆனால் அவர்கள் எகிப்து தேசத்தைவிட்டு, வனாந்தரத்திலே மூன்று நாள் பிரயாணம் செய்து, அங்கே கர்த்தருக்கு பலியிடுவதை பார்வோன் விரும்பவில்லை. அவர்கள் எகிப்து தேசத்திலேயே பலியிடட்டும் என்று பார்வோன் சொல்லுகிறான். மோசேயோ பார்வோனுடைய யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. 

மோசே பார்வோனை நோக்கி, ""அப்படிச் செய்யத்தகாது; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியருடைய அருவருப்பைப் ப-யிடுகிறதாயிருக்குமே, எகிப்தியருடைய அருவருப்பை நாங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாகப் ப-யிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா? நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்கு ப-யிடுவோம்'' (யாத் 8:26,27) என்று சொல்லுகிறார்.

மோசே கர்த்தருக்கு பலிசெலுத்தும்போது, அந்தப் பலியை கர்த்தர் அங்கீகரிக்கவேண்டும் என்று விரும்புகிறார். இந்தப் பிரபஞ்சத்தின் ஆசாபாசங்களுக்கு விலகி, வனாந்தரத்திலே மூன்று நாள் பிரயாணம்போய், அங்கே தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பலியிடவேண்டும் என்பது மோசேயின் விருப்பம். எகிப்து தேசத்திலே இறைச்சி பாத்திரங்களுக்கு மத்தியிலே, மோசே கர்த்தருக்கு பலியிட விரும்பவில்லை. எகிப்து தேசத்திலுள்ள செங்கல் சூளைகளுக்கு நடுவிலும் அவர் கர்த்தருக்கு பலியிட விரும்பவில்லை. 

இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலே பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை ஆராதிக்கும் விஷயத்திலும், அவருக்கு பலிசெலுத்தும் விஷயத்திலும், அவர்கள் யாருக்கும் அடிமையாயிருக்க விரும்பவில்லை. அவர்கள் கர்த்தருடைய கட்டளைக்கு மாத்திரமே கீழ்ப்படிய விரும்புகிறார்கள்.கர்த்தருக்கு பலியிடும் விஷயத்தில் இஸ்ரவேல் புத்திரர், பார்வோனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல், கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியவேண்டும் என்று தீர்மானமாயிருக்கிறார்கள்.

பார்வோன் மோசேயின் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான். பார்வோன் மோசேயை நோக்கி, ""நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் ப-யிடும்படிக்கு, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள்'' (யாத் 8:28) என்று சொல்லுகிறான். 

இஸ்ரவேலர் கர்த்தருக்குப் பலியிடுவதற்காகப் போவதைப் பார்வோன் அனுமதிக்கிறான். ஆனால் அவர்கள் அதிக தூரம் போகக்கூடாது. தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுதலை பண்ணி, கானான் தேசத்திற்கு அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்று விரும்புகிறார். ஆனால் பார்வோனோ இஸ்ரவேலரை எகிப்து தேசத்தில் அடிமைகளாக வைத்துக் கொள்ளவேண்டுமென்று திட்டமிடுகிறான்.

இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் பலியிடுவதற்கு பார்வோன் சம்மதிக்கிறான். ஆனாலும் அவர்கள் அதிக தூரம் போகக்கூடாது என்றும் சொல்லுகிறான். பார்வோனுடைய மனதிலே பாவத்தைக் குறித்து குற்றவுணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதே வேளையில் பார்வோனுடைய இருதயம் திருக்குள்ளதாகவும், கேடுள்ளதாகவும் இருக்கிறது.   

பார்வோனுடைய குத்தப்பட்ட இருதயம் ""நான் உங்களைப் போகவிடுவேன்'' என்று சொல்லுகிறது. அவனுடைய கேடுள்ள இருதயமோ ""நீங்கள் அதிக தூரமாய் போகவேண்டாம்'' என்று சொல்லுகிறது. பார்வோனுடைய இருதயத்தில் உண்மையான மனந்திரும்புதல் காணப்படவில்லை. அவனுடைய பாவம் அவனை மேற்கொள்கிறது. பார்வோனுடைய அக்கிரமமே அவனுடைய அழிவுக்கு காரணமாயிற்று. 

தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்புகிறவர்கள், முழுவதுமாக மனந்திரும்பவேண்டும். அவர்கள் முற்றிலுமாய் இரட்சிக்கப்படவேண்டும். அறைகுறையாக மனந்திரும்புவது எப்போதுமே ஆபத்தானது. அவர்களுக்கு இரட்சிப்பின் சந்தோஷம் பூரணமாய்க் கிடைக்காது. 

இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் அதிக தூரமாய்ப் போகவேண்டாம் என்றும் ஆனாலும் அவர்கள் கர்த்தருக்கு பலியிட புறப்பட்டுப்போகலாம் என்றும் பார்வோன் சொன்னதை மோசே ஏற்றுக்கொள்கிறார். பார்வோன் மோசேயிடத்தில், ""எனக்காக வேண்டுதல் செய்யுங்கள்'' என்று கேட்டுக் கொள்கிறான். மோசேயும் பார்வோனுடைய வார்த்தைகளை நம்பி, அவனுக்காக வேண்டுதல் செய்ய சம்மதிக்கிறார். 

மோசே பார்வோனை நோக்கி, ""நான் உம்மை விட்டுப்புறப்பட்டபின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் ப-யிடுகிறதற்கு ஜனங்களைப் போக விடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக'' (யாத் 8:29) என்று சொல்லுகிறார். 

பார்வோன் கேட்டுக்கொண்ட பிரகாரம், மோசே பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்கிறார். அப்பொழுது கர்த்தர் மோசேயின் சொற்படி, வண்டு ஜாதிகள் பார்வோனையும் அவன் ஊழியக்காரரையும் அவன் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி செய்கிறார்; ஒன்றாகிலும் மீந்திருக்கவில்லை (யாத் 8:30,31).

எகிப்து தேசத்திலிருந்து வண்டுகள் நீங்கினவுடனே பார்வோனுடைய இருதயம் மறுபடியும் கடினப்படுகிறது. ஒரு நாளுக்கு முன்பு, ""நான் உங்களை போகவிடுவேன்'' என்று பார்வோன் சொன்னான். இப்போதோ இந்த முறையும் பார்வோன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, இஸ்ரவேல் ஜனங்களை போகவிடாதிருக்கிறான் (யாத் 8:32).

இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலே அடிமைகளாயிருக்கிறார்கள். அவர்கள் எகிப்தியருக்காக கடினமான வேலைகளை செய்கிறார்கள். அவர்கள் மூலமாக பார்வோனுக்கு மிகுந்த ஆதாயமுண்டாயிருக்கிறது. பார்வோன் தன்னுடைய ஆதாயத்தை இழந்துபோக விரும்பவில்லை. இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தை விட்டுப் புறப்பட்டுப்போய்விட்டால், தன்னுடைய வருமானமும், ஆதாயமும் தன்னைவிட்டுப்போய்விடும் என்று நினைத்து பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்தைவிட்டு போகவிடாதிருக்கிறான் (யாத் 8:32).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.