Type Here to Get Search Results !

சங்கீதம் 19 விளக்கம்



 சங்கீதம் 19 விளக்கம்

(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

துதித்து ஜெபிக்கும் இரண்டாவது சங்கீதம் 

பொருளடக்கம்

    1. வானங்கள் - ஆறு ஆசீர்வாதங்கள் - (19:1-6)  

    2. வார்த்தை - ஆறு தலைப்புக்களும் ஆறு ஆசீர்வாதங்களும் - (19:7-11) 

    3. ஜெபம் - ஐந்து விண்ணப்பங்களும் ஆறு ஆசீர்வாதங்களும் - (19:12-14)

கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு உபதேசிப்பதற்காகவும், அவர்களுடைய பக்திவிருத்திக்காகவும் இரண்டு ஆகமங்களைக் கொடுத்திருக்கிறார். அவையாவன : 1. சிருஷ்டிகளின் ஆகமம்                             2. வேதவாக்கியங்களின் ஆகமம். பத்தொன்பதாவது சங்கீதத்தில் தேவனுடைய இவ்விரண்டு ஆகமங்களின் செய்திகளும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த சங்கீதத்தைத் தியானிக்கும்போது தேவனுடைய சிருஷ்டிகளைப்பற்றியும், அவற்றின் மூலமாய் தேவனுடைய மகிமை வெளிப்படுவது பற்றியும்,  தேவனுடைய வாக்கியங்களைப்பற்றியும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். 

கர்த்தரே சர்வசிருஷ்டிகர். அவரே சிருஷ்டி கர்த்தர்.  எல்லா சிருஷ்டிகளுக்கும் கர்த்தரே தலையாகயிருக்கிறார்.  தேவன் தம்முடைய சிருஷ்டிப்பின் வல்லமையினால் சர்வத்தையும் சிருஷ்டித்தார்.  சிருஷ்டிகளின் ஆகமத்தில் தேவனுடைய சர்வவல்லமை எழுதப்பட்டிருக்கிறது (சங் 19:1-6). இந்த சங்கீதத்தின் இரண்டாவது பகுதி வேதவாக்கியங்களின் ஆகமமாகும். நம்மைக் குறித்தும், நம்முடைய கடமைகளைக் குறித்தும் தேவனுடைய சித்தம் என்ன என்பதை  அறிந்துகொள்வதற்கு இந்த ஆகமம் உதவிபுரிகிறது. தேவனுடைய வார்த்தை மேன்மையானது. அது சர்வவல்லமையுள்ளது (சங் 19:7-11). கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற கடமைகளில் நாம் முன்னேறிச் செல்லவேண்டும். நம்முடைய ஊழியங்களை நேர்த்தியாய்ச் செய்து நிறைவேற்றவேண்டும் (சங் 19:12-14). 

சிருஷ்டிகளின் ஆகமம் சங் 19 : 1-6

வானங்கள், ஆகாயவிரிவு

வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது (சங் 19:1).

      நாம் இந்தப் பிரபஞ்சத்திலே ஒவ்வொரு நாளும் ஏராளமான காரியங்களைப் பார்க்கிறோம். நம்முடைய கண்களினால் அவற்றை பிரத்தியட்சமாய்க் காண்கிறோம். நம்மைப்போலவே தாவீதும் இந்தப் பூமியிலுள்ள  சிருஷ்டிகளையும், வானத்திலுள்ள நட்சத்திரங்களையும் நோக்கிப் பார்க்கிறார். பிரத்தியட்சமாய்த் தெரிகிற அவற்றை தாவீது பார்க்கும்போது, தேவனுடைய அதரிசனமான காரியங்களையும் பார்க்கிறார். உலகத்திலுள்ள சிருஷ்டிகள் மூலமாய்  தேவனுடைய மகிமை வெளிப்படுகிறது. வானம் நமக்கு பிரத்தியட்சமாய்த் தெரிகிறது. நாம் வானத்தைப் பார்க்கும்போது, அதை மாத்திரம் பார்க்காமல், அதை தம்முடைய வல்லமையினால் சிருஷ்டித்த தேவனுடைய மகிமையையும் பார்க்கவேண்டும். 

கர்த்தர் எல்லாவற்றையும் ஒழுங்கும் கிரமமுமாக சிருஷ்டித்திருக்கிறார். தேவன் ஒவ்வொன்றையும் சிருஷ்டித்து அது நல்லது என்று கண்டார். தேவனுடைய சிருஷ்டிகள் எல்லாமே அழகுள்ளது. இவையெல்லாம் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. நாம் சிருஷ்டிகளைப் பார்க்கும்போது, அவற்றின் மூலமாய் தேவனுடைய வல்லமையையும் பார்க்க பழகிக்கொள்ளவேண்டும்.

""தேவன் இல்லை'' என்று  நாஸ்திகர்கள் சொல்லுகிறார்கள். நாம் காண்கிற எதையும்  யாரும் சிருஷ்டிக்கவில்லை என்பது நாஸ்திகருடைய விவாதம். எல்லாம் தானாய்த் தோன்றிற்று என்று இவர்கள் சொல்லுகிறார்கள். இவர்களுடைய கற்பனை மாயையாயிருக்கிறது.  இவர்கள் மாயையான விக்கிரகங்களை ஆராதிக்கிறார்கள். விக்கிரகங்கள் மனுஷருடைய கிரியைகள். இவர்கள் எல்லாவற்றையும் தங்கள் சரீரப்பிரகாரமான கண்களால் பார்க்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கண்களால் பார்ப்பதை மாத்திரமே இவர்கள் நம்புவார்கள்.  கண்களால் பார்த்தாலும் இவர்கள் எல்லாவற்றையும் நம்புவதில்லை. அதைக் குறித்தும் விவாதிப்பார்கள்.  

தேவனுடைய மகிமையை நம்முடைய மனக்கண்களால் மாத்திரமே பார்க்கமுடியும். நம்முடைய மனக்கண்கள் பிரகாசமாயிருக்கவேண்டும். நாஸ்திகரின் மனக்கண்கள் மங்கிப்போயிருக்கிறது. அதனால்  தேவனுடைய மகிமையை அவர்களால் காணமுடியவில்லை. வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. நாஸ்திகர்களுக்கோ வானங்களும், ஆகாயவிரிவும் மாத்திரமே தெரிகிறது. தேவனுடைய மகிமையும், அவருடைய கரங்களின் கிரியையும் அவர்களுக்குத் தெரியவில்லை. 

வானங்களின் வெளிச்சத்தினால் நாம் தேவனுடைய மகிமையைக் காணலாம். நம்முடைய கர்த்தரே ஜோதிகளின் பிதாவாகயிருக்கிறவர்.  அவரால் மாத்திரமே இந்த உலகத்திற்கு வெளிச்சத்தைக் கொடுக்க முடியும். கர்த்தரே நமக்கு ஒளியாகயிருக்கிறார். அவரே நமக்கு வெளிச்சமாகவும் இருக்கிறார். அவரை நோக்கிப் பார்க்கும்போதுதான் அவருடைய மகிமையையும், வல்லமையையும், நம்முடைய மனக்கண்களால் பார்க்கமுடியும்.    

""தேவன் இல்லை'' என்று சொல்லுகிறவர்கள் தங்களுடைய  மனக்கண்களை மூடிக்கொண்டு பார்க்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் எல்லாம் இருளாகத்தான் இருக்கும்.  அவர்களுடைய கண்களுக்கு ஒன்றும் தெரியாது. இவர்கள் தேவனுடைய மகிமையை காணவேண்டுமென்றால் அவர்களுக்கு கர்த்தர் கொடுக்கிற வெளிச்சம் தேவை.  இருளின் பிள்ளைகள் இருளில்தான் நடப்பார்கள். கர்த்தரை விசுவாசிக்கிறவர்களோ வெளிச்சத்தின் பிள்ளைகள். அவர்கள் தேவனுடைய வெளிச்சத்தில் நடப்பார்கள். அவர்கள் மாத்திரமே தேவனுடைய மகிமையை  பிரத்தியட்சமாய்த் தரிசிப்பார்கள். 

கர்த்தர் தாமே சர்வத்தையும் சிருஷ்டித்திருக்கிறார். இவையெல்லாமே தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது.  தேவனுடைய சிருஷ்டிகள் நமக்குப் பிரயோஜனமுள்ளவையாயிருக்கிறது. இவை நமக்கு உதவிபுரிகிறது. சேவை செய்கிறது. இவையெல்லாவற்றையும்விட,  தேவனுடைய சிருஷ்டிகள் அவருடைய மகிமையை வெளிப்படுத்துகி றது. தேவன் ஆகாயவிரிவின் மூலமாய் தம்முடைய கரங்களின் கிரியையை நமக்கு அறிவிக்கிறார். 

சர்வசிருஷ்டிகளும் சிருஷ்டிகருடைய கரங்களின் கிரியைகளை நமக்குச் சொல்லுகிறது. அவற்றின் இயக்கங்களெல்லாம்  தேவனுடைய மகிமையை நமக்கு வெளிப்படுத்துகிறது. சிருஷ்டிகள் எதுவும் தானாய் தோன்றவில்லை. இவையெல்லாமே தேவனால் உண்டாக்கப்பட்டவை.  சர்வசிருஷ்டிக்கும் ஒரு ஆரம்பம் உண்டு. தேவன் இவற்றை சிருஷ்டித்த நாளே, இவற்றின் ஆரம்ப நாள். சிருஷ்டிகள் எதுவும் தங்களைத் தாங்களே  உண்டாக்கிக்கொள்ள முடியாது. 

ஒரு அணு எதேச்சையாக வெடித்து எல்லாம் உண்டாயிற்று என்னும் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.  இது தனக்குத்தானே முரண்பாடுள்ளது. நாஸ்திகர்கள் இந்தக் கொள்கையை தங்களுக்குச் சாதகமாகச் சொல்லுகிறார்கள். இதில் உண்மையிருப்பதற்கு வாய்ப்பில்லை. தேவனுடைய கிருபையினால்தான் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறதே தவிர, எதுவும் தானாக உண்டாகிவிடவில்லை.  சிருஷ்டிகர் சிருஷ்டியாமல் ஒரு சிருஷ்டியும் இல்லை. ஆகையினால்தான் கர்த்தரே சர்வசிருஷ்டிகளுக்கும் சிருஷ்டி கர்த்தாவாக இருக்கிறார்.

எந்த ஒரு பொருளும் தானாக உண்டாகவில்லையென்றால், அதை உண்டாக்கியவர் ஒருவர் இருக்கவேண்டும். அவருக்கு  ஒவ்வொன்றையும் நேர்த்தியாக உண்டாக்குவதற்குத் தேவையான ஞானம் இருக்கவேண்டும். வல்லமை இருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஞானமும், வல்லமைமையும் எந்த சிருஷ்டிகளிடத்திலும் இல்லை. தேவனே  சர்வஞானமுள்ளவர். அவரே சர்வவல்லமையுமுள்ளவர். அவரே நித்தியமானவர். அவரே சர்வத்தையும் நேர்த்தியாய் சிருஷ்டித்திருக்கிறவர். தாவீது இதையெல்லாம் தியானித்துப் பார்த்து, ""வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய  கரங்களின் கிரியையை அறிவிக்கிறது'' என்று பயபக்தியோடு சொல்லுகிறார். 

கர்த்தர்  ஒவ்வொரு சிருஷ்டியையும், தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாய்,  நேர்த்தியாய் சிருஷ்டித்திருக்கிறார். ஒவ்வொரு சிருஷ்டியிலும் தேவனுடைய கரங்களின் கிரியை  வெளிப்படுகிறது. வானம் பிரகாசமாகயிருக்கிறது. இந்தப் பிரகாசத்தைப் பார்க்கும்போது தேவனுடைய மகிமைப் பிரகாசம் வெளிப்படுகிறது. தேவன் ஒளியாயிருக்கிறார். இதனால் அவருடைய சிருஷ்டிகளும் ஒளியைக் கொடுக்கிறது. ஆகாயவிரிவு பரந்து விரிந்திருக்கிறது. அதன் விஸ்தாரத்தை மனுஷருடைய ஞானத்தினால் அளக்க முடியாது.  ஆகாயவிரிவிலுள்ள சகலவற்றையும் கர்த்தர் சிருஷ்டித்திருக்கிறார். இது அவருடைய சர்வஞானத்தையும், அளவிடமுடியாத சர்வவல்லமையையும் வெளிப்படுத்துகிறது. 

 தேவன் ஒவ்வொன்றையும் சிருஷ்டித்து, அவற்றை தம்முடைய தெய்வீக சித்தத்தின் பிரகாரமாய் ஆளுகை செய்கிறார்.  ஒவ்வொரு சிருஷ்டியும் தேவனுடைய கட்டளையின் பிரகாரம் இயங்குகிறது. வானத்திலுள்ள சந்திரனும், சூரியனும், நட்சத்திரங்களும் தேவனுடைய சித்தத்தின் பிரகாரமாய் இயங்குகிறது.  உலகம் முழுவதற்கும் இவை பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது. இதற்காகவே தேவன் இவற்றை சிருஷ்டித்திருக்கிறார். தாம் சிருஷ்டித்த ஒவ்வொன்றையும் தேவன் தம்முடைய கிருபையினால் பராமரிக்கிறார்.  வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துவதுபோல, அவருடைய தெய்வீக பராமரிப்பையும் வெளிப்படுத்துகிறது. இவையெல்லாமே கர்த்தருடைய சர்வவல்லமையை வெளிப்படுத்துகிறது. 

"தேவன் இருக்கிறார்'' என்னும் சத்தியத்தை உறுதிபண்ணும் காரியங்கள்

    1. ""வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது'' -     (சங் 19:1; சங் 75:1; யோபு 12:8)

    2. ""ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது'' -  (சங் 19:1; சங் 111:6; மீகா 6:8)

    3. ""பகல் வார்த்தைகளைப் பொழிகிறது'' - (சங் 19:2; சங் 78:2;     சங் 145:7)

    4. ""இரவு அறிவைத் தெரிவிக்கிறது'' - (சங் 19:2; யோபு 15:17;    யோபு 32:6,10,17; யோபு 36:2) 

பகலுக்குப் பகல்

பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது  (சங் 19:2). 

வானங்களும், ஆகாயவிரிவும் தேவனுடைய அற்புதமான சிருஷ்டிப்பு. வானங்களில் ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. சந்திரனும் சூரியனும் ஆகாயவிரிவில் உள்ளது.  இவையெல்லாமே தேவனுடைய அற்புதமான சிருஷ்டிகள். இவற்றை நம்முடைய கண்களினால் பிரத்தியட்சமாய்க் காணும் சிலாக்கியத்தை கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிறார். 

மனுஷன் மிருகங்களைவிட மேலானவன். கர்த்தர் மனுஷனுக்கு மிருகங்களைவிட  விசேஷித்த சிலாக்கியங்களைக் கொடுத்திருக்கிறார். மனுஷனுடைய சரீரத்தின் அமைப்பு, மிருகங்களுடைய சரீர அமைப்புகளைவிட  மேன்மையானது. மிருகங்கள் எப்போதுமே தரையைப் பார்த்துக்கொண்டே நடக்கும். கீழே பார்த்துக் கொண்டு நடப்பதுதான் அவற்றின் சுபாவம். மனுஷனோ வானத்தை நோக்கிப் பார்க்கக்கூடியவன். மனுஷனுடைய ஆவி வானங்களிலுள்ள தேவனை நோக்கிப் பார்க்கவேண்டும். நம்முடைய இருதயத்தின் நினைவுகளும் வானத்திலுள்ள கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும். கர்த்தரைப் பற்றித் தியானிக்கவேண்டும்.

ஒவ்வொரு நாளும் பகலும் இரவும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இது ஒருபோதும் மாறுவதில்லை.  பகலுக்குப் பின்பு இரவும், இரவுக்குப் பின்பு பகலும் தொடர்ச்சியாக, எவ்வித மாற்றமுமில்லாமல் வந்துகொண்டே இருக்கும். பகலுக்குப் பகலும், இரவுக்கு இரவும் தேவனுடைய மகிமையைப்பற்றிப் பேசுகிறது. தேவன் தாமே  வெளிச்சத்தையும் இரவையும் வெவ்வேறாகப் பிரித்தார். இதனிமித்தமாய் பகலுக்குப் பகல் தேவனுடைய வார்த்தைகளைப் பொழிகிறது. இரவுக்கு இரவு தேவனுடைய தெய்வீக அறிவைத் தெரிவிக்கிறது.

பூமியிலே பகலும் இரவும் உண்டாவதினால்  தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது. அது மாத்திரமல்ல, இந்த மாற்றத்தின் மூலமாய்  நமக்கு அநேக ஆசீர்வாதங்களும் உண்டாகிறது. பகலும் இரவும் மாறி மாறி வருவதினால் நமக்கு ஏராளமான அனுகூலங்கள் உண்டு. பகலிலே வெளிச்சம் இருப்பதினால் நம்முடைய அன்றாட வேலைகளை வெளிச்சத்திலே செய்ய முடிகிறது.  பகலின் வெளிச்சம் நமக்கு மிகுந்த அனுகூலமாயிருக்கிறது. இரவிலே இருள் இருப்பதும் நமக்கு நன்மையாகவே இருக்கிறது. இரவு வேளையிலே நம்முடைய சரீரம் ஓய்வெடுப்பதற்கு இது அனுகூலமாயிருக்கிறது.  

ஒவ்வொரு நாள் பகலும், ஒவ்வொரு நாள் இரவும் தேவனுடைய நன்மையைப்பற்றிப் பேசுகிறது. தேவனைப்பற்றிச் சாட்சியாய் அறிவிக்கிறது.  பகலும் இரவும் தன்னுடைய சாட்சியை அறிவித்த பின்பு, இன்னும் அறிவிக்க வேண்டிய சாட்சியை அடுத்த நாளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு கடந்துபோய்விடுகிறது.  அடுத்த நாளிலும் இது போன்ற சம்பவமே தொடர்ந்து நடைபெறுகிறது. இது தேவனுடைய மாறாத கிருபை. அவருடைய மாறாத திட்டம். தேவனுடைய தெய்வீக திட்டத்தின் படியாய், பகலும் இரவும், தொடர்ச்சியாய், எந்தவித மாற்றமுமில்லாமல், மாறி மாறி வந்துகொண்டே இருக்கிறது. 

பகலிலே சூரியன் வெளிச்சத்தைத் தருகிறது. சூரியவெளிச்சம் தேவனுடைய மகிமையை விசேஷித்த வழியில் வெளிப்படுத்துகிறது. சூரியவெளிச்சம் பூமியிலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது. வானத்திலுள்ள நட்சத்திரங்களெல்லாமே பூமியிலுள்ள ஜீவராசிகளுக்குப் பிரயோஜனமுள்ளவை.  நமக்கு சந்திரனும் சூரியனும் இல்லையென்றால் மிகவும் கஷ்டமாயிருக்கும். இந்தப் பூமிக்கு சூரிய வெளிச்சம் கிடைக்கவில்லையென்றால், இந்தப் பூமியிலுள்ள அனைத்தும் குப்பையாகவும், இந்தப் பூமி முழுவதும் வனாந்தரமாகவும் இருக்கும். 

சூரியன் 

அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது;  அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். (சங் 19:3,4). 

சந்திரனும் சூரியனும் கர்த்தர் நியமித்த பிரகாரம், எந்தவிதமான மாற்றமுமில்லாமல், சுற்றி ஓடுவதினால், நமக்கு காலத்தையும் நேரத்தையும் நிர்ணயம் பண்ண முடிகிறது. காலையில் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும் என்பதை நம்மால் கணக்கிட முடிகிறது.  மாலை வேளை எப்பொழுது வரும் என்று நம்மால் சொல்ல முடிகிறது. நாம் பகலில் செய்ய வேண்டிய வேலைகளை பகலிலும், இரவில் செய்ய வேண்டிய வேலைகளை இரவிலும் செய்து முடிக்கிறோம். காலத்தையும், நேரத்தையும், நாம் நிர்ணயம்பண்ணுகிறோம்.

ஆகாயவிரிவிலுள்ள சூரியனும் சந்திரனும் தேவனுடைய மகிமையை முழுஉலகத்திற்கும் வெளிப்படுத்துகிறது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.  ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும் செல்லுகிறது. அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது. சூரியனும் சந்திரனும், தாங்கள் சுற்றி ஓடும் பாதைகளிலெல்லாம், தேவனுடைய மகிமையை வெளிப்படுத்திக்கொண்டே ஓடுகிறது. அவை தேவனுடைய சுபாவத்தை முழுஉலகத்திற்கும் அறிவிக்கிறது.  அவற்றிற்கு பேச்சு இல்லாவிட்டாலும், அவை சொல்லும் செய்தியை முழுஉலகமும் கேட்கிறது. 

சந்திரனும் சூரியனும் தேவனுடைய மகிமையை பிரசங்கம்பண்ணுகிற ஊழியக்காரர்களைப்போல இருக்கிறது. இவை தேவனுடைய கரங்களின் அற்புதமான கிரியைகளை அறிவிக்கிறது.  இவற்றால் பேசமுடியாது. ஆனாலும் இவை சர்வசிருஷ்டிகளும் புரிந்துகொள்ளும் விதத்தில் தேவனுடைய மகிமையை அறிவிக்கிறது. முழுஉலகத்திற்கும் அறிவிக்கிறது. இவற்றின்  காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை. 

அளவு நூலின் பயன்பாடுகள்

    1. அளப்பதற்குப் பயன்படும் (1இராஜா 7:23; 2நாளா 4:2; எரே 31:39;           எசே 47:3) 

    2. நியாயம் தீர்ப்பதற்குப் பயன்படும் (2இராஜா 21:13; ஏசா 28:17;     புல 2:8; சக 1:16)

    3. பூமியின் எல்லையைக் குறிப்பதற்குப் பயன்பட்டது (யோபு 38:5)

    4. தேவனுடைய வார்த்தையைக் கொடுப்பதற்குப் பயன்படும்           (ஏசா 28:10,13)

    5. உலகமெங்கும்  செல்லும் சத்தியத்தின் செய்தியைக் குறிக்கப் பயன்படும் - நற்செய்தி, நம்பிக்கை, அவர்களுடைய சப்தம்     (ரோமர் 10:18)

மணவாளன்

அது தன் மணவறையி-ருந்து புறப்படுகிற மணவாளனைப்போ-ருந்து, பராக்கிரமசா-யைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது  (சங் 19:5). 

 சூரியன் மிகவும் பிரகாசமான ஒளியைக் கொடுக்கிறது. அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருக்கிறது. மணவாளன் எல்லாவிதமான அலங்காரங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பார்.  அவர் பார்ப்பதற்கு அழகாயிருப்பார். உயர்ந்த வஸ்திரங்களைத் தரித்திருப்பார். ஆபரணங்களையெல்லாம் அணிந்திருப்பார். அவரும் அழகாயிருப்பார். அவருடைய அழகினால் அவரைச் சுற்றியிருக்கிறவர்களும் அழகாயிருப்பார்கள். மணவாளன் நிமித்தமாய் அவரோடு கூடயிருக்கிற எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.  

மணவாளன் மிகுந்த மகிழ்ச்சியோடிருப்பார். மகிழ்ச்சியாகவே நடப்பார். பராக்கிரமசாலி தன் பாதையில் மகிழ்ச்சியாய் ஓடுவார்.  சூரியனும் தனக்கு நியமிக்கப்பட்ட பாதையில் மகிழ்ச்சியாய் ஓடுகிற பராமக்கிரமசாலியைப் போலிருக்கிறது. சூரியன் மனுஷருக்கு அநேக நன்மைகளைக் கொடுக்கிறது. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து, மறுமுனை வரைக்கும்  சுற்றி ஓடுகிறது. 

சூரியனுடைய காந்தி

அது வானங்களின் ஒரு  முனையி-ருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை (சங் 19:6).

 தேவன் வானங்களிலே சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்திருக்கிறார். வானங்களிலுள்ள நட்சத்திரங்கள் வானமண்டலங்களின் லோகாதிபதிகள் என்று அழைக்கப்படுகிறது.  இவை வானத்திலே தங்குவதற்காக, இவற்றிற்கு கூடாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. ƒயுத்தவீரர்கள் பாளையங்களிலே கூடாரங்களில் தங்குவது வழக்கம். இவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றிவிட்டு, சிறிதுநேரம் கூடாரங்களில் இளைப்பாறுவார்கள்.  அதுபோலவே சூரியனும் தன்னுடைய கடமையை முடித்துவிட்டு, ஆகாயவிரிவில் தன்னுடைய கூடாரத்தில் தங்கியிருக்கும். கர்த்தரே சூரியனுக்கு இந்தக் கூடாரத்தை ஸ்தாபித்திருக்கிறார். 

சூரியனும் சந்திரனும் இயங்காமல் சும்மாயிருப்பதற்காக  சிருஷ்டிக்கப்படவில்லை. அது கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரம்  புறப்பட்டுப்போகவேண்டும். தனக்கு நியமிக்கப்பட்ட பாதையில் அது ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, மறுமுனை வரைக்கும் சுற்றி ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.  தனக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தை சுற்றி முடித்து, மறுபடியும் சுற்றி ஓடவேண்டும். அது எந்த இடத்திலிருந்து புறப்பட்டதோ அந்த இடத்திற்குத் திரும்பியும் வரும். கர்த்தர் அவற்றின் வேகத்தையும், பாதையையும் நியமித்திருக்கிறார். கர்த்தர் நியமித்திருக்கிற காரியங்களிலிருந்து அவை ஒருபோதும் பிசகுவதில்லை.

வானங்களிலிருந்து வரும் ஆசீர்வாதங்கள்

    1. தேவனுடைய மகிமையை வெளிப் படுத்துகிறது (சங் 19:1)

    2. தேவனுடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது

    3. வார்த்தைகளைப் பொழிகிறது (சங் 19:2)

    4. அறிவைத் தெரிவிக்கிறது

    5. அவற்றின் செய்திகள் பூமியெங்கும் செல்லுகிறது (சங் 19:3-4)

    6. பூமிக்கு ஜீவனைக் கொடுக்கிறது   (சங் 19:5-6)

சூரியனின் உஷ்ணம் (காந்தி). சூரியனின் விழிம்புப்பகுதி = 12 ஆயிரம் எ. சூரியனின் மையப்பகுதி = 4 கோடி எ

வேதவாக்கியங்களின் ஆகமம் சங் 19 : 7-14

கர்த்தருடைய வேதம்

கர்த்தருடைய வேதம்   குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள்  செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது (சங் 19:7-9).  

கர்த்தர் மனுஷருக்குச் செய்கிற நன்மையில் அவருடைய மகிமை வெளிப்படுகிறது. தேவனுடைய சிருஷ்டிப்பின் கிரியையில் அவருடைய மகிமை பூரணமாய்த் தெரிகிறது. தேவனைப்பற்றியும், அவருடைய  சிருஷ்டிகளைப்பற்றியும், அவருடைய மகிமையைப்பற்றியும் நாம் அறிந்துகொள்வதற்கு கர்த்தருடைய வேதத்தைத் தியானிக்கவேண்டும்.  

நம்முடைய கர்த்தராகிய தேவன் நமக்குச் சில கடமைகளை நியமித்திருக்கிறார். நாம் தேவனிடமிருந்து  என்னென்ன காரியங்களை எதிர்பார்க்கலாம் என்பதையும், அவர் நம்மிடமிருந்து என்னென்ன காரியங்களையெல்லாம் எதிர்பார்க்கிறார் என்பதையும் கர்த்தருடைய வேதத்தின் மூலமாகவே நாம் அறிந்துகொள்ள முடியும். 

பகலும் இரவும் நமக்குப் பிரயோஜனமாயுள்ளது.  நம்முடைய சுவாசத்திற்குக் காற்று தேவை. நாம் இந்தப் பூமியில் ஆரோக்கியமாய் ஜீவிப்பதற்கு  சூரியவெளிச்சம் தேவை. இவையெல்லாவற்றையும்விட நம்முடைய ஆத்துமா ஜீவனோடிருப்பதற்கு நமக்கு கர்த்தருடைய வேதம் தேவை. கர்த்தருடைய வேதம் நமக்கு இல்லையென்றால், நம்மால்  நம்மைப்பற்றியும் தெரிந்துகொள்ள முடியாது, நம்முடைய கர்த்தரைப்பற்றியும் தெரிந்துகொள்ள முடியாது. 

கர்த்தருடைய வேதத்தைப்பற்றி தாவீது இங்கு விவரித்துச் சொல்லுகிறார்.  தேவனுடைய வார்த்தையின் தன்மை, அதனால் நமக்கு உண்டாயிருக்கிற பிரயோஜனம் ஆகியவற்றையெல்லாம் தாவீது விரிவாக எடுத்துச்சொல்லுகிறார். தாவீது வேதவசனத்தைப்பற்றிச் சொல்லும்போது, ""கர்த்தருடைய வேதம், கர்த்தருடைய சாட்சி, கர்த்தருடைய நியாயங்கள்,  கர்த்தருடைய கற்பனை'' ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் கர்த்தர் அதாவது ""யெகோவா'' என்னும் பெயரை தாவீது பயன்படுத்துகிறார். 

தேவனுடைய வெளிப்பாடு முழுவதும் அவருடைய வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  தாவீது தேவனுடைய வேதத்திற்கு ஆறுவிதமான பெயர்களைச் சொல்லுகிறார். தேவனுடைய வார்த்தை  வெளிப்படுத்துகிற சத்தியங்களை, இந்தப் பெயர்களே நமக்குத் தெளிவுபடுத்தும். கர்த்தருடைய வேதத்திற்கு தாவீது சொல்லுகிற  ஆறுபெயர்களின் விவரம் வருமாறு : 

1. கர்த்தருடைய வேதம் குறைவற்றது. கர்த்தருடைய வேதத்தில்  தப்பிதமோ, குழப்பமோ எதுவுமில்லை. கர்த்தருடைய வேதம் எல்லாவிதமான  நன்மைகளினாலும் நிரம்பியிருக்கிறது. கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை எந்த நோக்கத்திற்காகக் கொடுத்திருக்கிறாரோ, அந்த நோக்கத்தை  அவை நிறைவேற்றும். அப்போஸ்தலர் பவுல் வேதவாக்கியத்தைப்பற்றி இவ்வாறு சொல்லுகிறார். 

""வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது''  (2தீமோ 3:16,17). 

கர்த்தருடைய வேதம் குறைவற்றதாயிருக்கிறது. ஆகையினால் இது பரிபூரணமுள்ளது.  இதோடு எதையும் கூட்டவும் வேண்டியதில்லை. குறைக்கவும் வேண்டியதில்லை. கர்த்தருடைய வேதம் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது.  தேவனை விட்டுப் பிரிந்து விலகிப்போயிருக்கிற நம்மை, கர்த்தருடைய வேதம் மறுபடியும் தேவனிடத்திற்கு கொண்டு வருகிறது. கர்த்தருடைய வேதத்தைத் தியானித்து, நாம் கர்த்தரோடு ஐக்கியமாயிருக்கவேண்டும்.  இது நம்முடைய கடமை.

2. கர்த்தருடைய சாட்சி சத்தியமாயிருக்கிறது. கர்த்தருடைய வார்த்தையே  நம்முடைய ஜீவியத்திற்கு ஆதாரம். வேதவாக்கியத்தின் மூலமாகவே நமக்கு மெய்யான நம்பிக்கை உண்டாயிருக்கிறது.  மெய்யான சமாதானத்தையும், மெய்யான ஆறுதலையும் நாம் வேதவாக்கியத்தின் மூலமாக மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.  வேதவாக்கியம் கொடுக்கிற நம்பிக்கை நித்தியமானது. கர்த்தருடைய வேதம் பேதையை ஞானியாக்குகிறது. 

நமக்கு உலகப்பிரகாரமான ஞானம் குறைவாகயிருந்தாலும், ஆவிக்குரிய ஞானம் நமக்குத் தேவைப்படுகிறது. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். நாம் உலகக்காரியங்களில் பேதைகளாகயிருக்கலாம். கர்த்தருடைய வேதமோ நம்மை ஆவிக்குரிய காரியங்களில்  ஞானியாக்குகிறது. நம்முடைய ஆத்துமாக்களைக் குறித்தும், நித்திய ஜீவனைக் குறித்தும் கர்த்தருடைய வேதம் நமக்கு உபதேசம்பண்ணுகிறது. 

தாழ்மையுள்ளவர்கள் எளிமையுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.  அவர்கள் தங்களுடைய குறைகளை அறிந்து அங்கீகரிப்பார்கள். ஆவியில் எளிமையுள்ளவர்களிடத்தில்  கற்றுக்கொள்ளுகிற ஆவியும் இருக்கும். கற்றுக்கொள்ளும் ஆர்வமும் இருக்கும். தேவனுடைய வார்த்தையினால் இவர்கள் ஞானிகளாவார்கள். ""கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்கு  தமது வழியைப் போதிக்கிறார்'' (சங் 25:9). 

3. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையாயிருக்கிறது. தேவனுடைய நித்திய நியாயத்தை கர்த்தருடைய வேதம் அங்கீகரிக்கிறது.  கர்த்தருடைய வேதம் நன்மை தீமை இன்னதென்று மனுஷருக்கு தெளிவுபடுத்திக் காண்பிக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையானதாயிருப்பதினால், அவை நம்முடைய இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறது. 

கர்த்தருடைய நியாயங்கள் இயேசுகிறிஸ்துவின் கரத்திலிருந்தது. இயேசுகிறிஸ்து தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து சந்தோஷமாயிருந்தார்.  கிறிஸ்துவானவர் பிதாவின் சித்தத்திற்கு தம்மைப் பூரணமாய் ஒப்புக்கொடுத்து மரணபரியந்தம் கீழ்ப்படிந்தார். இயேசுகிறிஸ்துவின் ஒவ்வொரு கீழ்ப்படிதலிலும் அவருடைய சந்தோஷமும், பரிபூரணமும் வெளிப்பட்டது.  

கர்த்தருடைய வேதம் நம்முடைய இருதயங்களில் எழுதப்படவேண்டும். அப்போதுதான் நமக்கு மெய்யான சந்தோஷம் உண்டாகும்.  நம்முடைய சந்தோஷம் நித்திய சந்தோஷமாய் நிலைத்திருக்கும். நம்முடைய மனது குழப்பமில்லாமல் தெளிவாயிருக்கும். நம்முடைய சிந்தையை  கர்த்தருடைய வேதம் ஆளுகை செய்யும்போது, நாம் தெளிந்த சிந்தையுள்ளவர்களாயிருப்போம். நம்முடைய சிந்தையை கர்த்தருடைய வேதம் புதுப்பிக்கும். 

4. கர்த்தருடைய கற்பனை தூய்மையாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர்  நம்முடைய கண்களைத் தெளிவாக்குகிறார். நம்முடைய மனக்கண்களை ஆவியானவரே  பிரகாசமுள்ளதாக்குகிறார். நம்முடைய மனக்கண்கள் மங்கலாயிருக்கும்போது நம்மால் ஆவிக்குரிய காரியங்களைத் தெளிவாய்ப் பார்க்க முடியாது.  நம்முடைய பார்வை சுத்தமாயிருந்தால்தான், நம்மிடத்திலுள்ள அசுத்தத்தையும், பாவத்தையும் அது நமக்கு உணர்த்தும். செம்மையான வழியில் நாம் நடப்பதற்கு கர்த்தருடைய வேதம் நம்மை வழிநடத்தும். நம்முடைய மனக்கண்கள் தெளிவாயில்லையென்றால், நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில்  நம்மால் சீராய் நடக்க முடியாது. 

5. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமுள்ளது.  இந்த பயமே என்றைக்கும் நிலைத்திருக்கும். கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் நம்முடைய பாதைகளைச் சுத்திகரிக்கும். ""வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னை காத்துக்கொள்கிறதினால்தானே'' என்று  சங்கீதக்காரர் சொல்லுகிறார் (சங் 119:9). 

பழைய ஏற்பாட்டுக்காலத்து சடங்காச்சார பிரமாணம் நித்தியமானதல்ல. அது நிலைத்து நிற்கவில்லை. கர்த்தருக்குப் பயப்படுகிற பயமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது.  நன்மை தீமை என்னும் பிரமாணம் ஒருபோதும் மாறிப்போவதில்லை. இந்தப் பிரமாணத்தை காலத்தினால் மாற்ற முடியாது. பழைய ஏற்பாட்டுக்காலத்தில் நன்மையாகவும் தீமையாகவும் இருந்தது, புதிய ஏற்பாட்டுக்காலத்திலும் நன்மையாகவும் தீமையாகவுமே இருக்கிறது.

6. கர்த்தருடைய நியாயங்கள் உண்மையாயிருக்கிறது.  அவைகள் அனைத்தும் நீதியாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்களை  பிரிக்க முடியாது. அவையெல்லாமே கர்த்தருடைய வேதத்தில் ஒரே கோர்வையாக இணைக்கப்பட்டிருக்கிறது.  ஆகையினால் கர்த்தருடைய வேதம் தேனிலும் மதுரமாயிருக்கிறது என்று தாவீது சொல்லுகிறார். 

பரிசுத்த வேதாகமத்தின் பெயர்கள்

    1. கர்த்தருடைய வேதம் (சங் 19:7)

    2. கர்த்தருடைய சாட்சி

    3. கர்த்தருடைய செம்மையான நியாயங்கள்   (சங் 19:8)

    4. கர்த்தருடைய கற்பனை

    5. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் (சங் 19:9)

    6. கர்த்தருடைய உண்மையான நியாயங்கள்

கர்த்தருடைய வேதத்தின் பண்புகள்

    1. குறைவற்றது (சங் 19:7)

    2. நிச்சயமானது

    3. செம்மையானது (சங் 19:8)

    4. தூய்மையானது

    5. சுத்தமானது (சங் 19:9)

    6. நித்தியமானது

    7. உண்மையானது

    8. அனைத்தும் நீதியானது

    9. தேனிலும், தேன் கூட்டிலிருந்து ஒழுகும்  தெளிதேனிலும் மதுரமுள்ளது (சங் 19:10)

கர்த்தருடைய வேதத்தின் ஆசீர்வாதங்கள்

    1. தேவனிடம் திரும்பி வரும் ஆத்துமாக்களை இரட்சிக்கிறது         (சங் 19:7)

    2. பேதையை ஞானியாக்குகிறது

    3. இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறது (சங் 19:8)

    4. கண்களைத் தெளிவிக்கிறது

    5. பரிசுத்தவான்களை எச்சரிக்கிறது  (சங் 19:11)

    6. வசனங்களுக்கு   கீழ்ப்படிந்து அவைகளைக் கைக்கொள்ளுகிறவளுக்கு மிகுந்த பலன் தருகிறது.

தெளிதேனிலும் மதுரமுள்ளது

அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டி-ருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய்       இருக்கிறது. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு (சங் 19:10,11). 

கர்த்தருடைய வேதம் அதிக மதிப்புள்ளது.  தாவீதுக்கு தேவனுடைய வார்த்தையினால் அதிக பிரயோஜனம் உண்டாயிருக்கிறது.   இதனால் தனக்கு இன்னும் அதிகமான ஆசீர்வாதம் உண்டாகும் என்று தாவீது விசுவாசிக்கிறார். இந்த உலகத்தில் ஏராளமான  ஐசுவரியங்கள் உண்டு. பொன், பசும்பொன் ஆகியவை எல்லோரும் விரும்புகிற ஐசுவரியங்களாகும். ஆனாலும் கர்த்தருடைய வேதம் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கது என்று தாவீது அறிக்கை செய்கிறார். இந்த உலகத்தின் எல்லா சம்பத்துக்களுக்கும் முன்பாக  தேவனுடைய கற்பனைகளே அதிகமாய் விலையேறப்பெற்றது.  

பொன் இந்தப் பூமிக்குரியது.  இது உலகப்பிரகாரமான ஐசுவரியம்.  தேவனுடைய கிருபையோ பரலோகத்திற்குரியது. இது ஆவிக்குரிய ஐசுவரியம்.  இதுவே உண்மையான ஐசுவரியம். இந்த ஐசுவரியமே நிலைத்து நிற்கும். பொன் சரீரத்திற்கு மாத்திரமே பிரயோஜனமாயிருக்கும்.  பொன் நித்தியகாலமாய் நிலைத்திருப்பதில்லை. அது அழிந்துபோகும். அதிகமாய்ப் பயன்படுத்தினால் பொன்னும் தேய்ந்து போகும். ஒரு குறிப்பிட்ட காலம் மாத்திரமே பொன்னை சரீரத்திற்குப் பயன்படுத்த முடியும்.  கிருபையோ ஆத்துமாவை நித்தியகாலமாய் அலங்கரிக்கிறது. தேவகிருபை ஆத்துமாவுக்கு நித்திய பிரயோஜனமுள்ளதாயிருக்கும்.  

தேவனுடைய வார்த்தையை நாம் விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டும்.  இது நம்முடைய ஆத்துமாவுக்கு மதுரமானது. இந்தப் பூமியில் தேனும், தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனும் மதுரமுள்ளதாகும். கர்த்தருடைய வேதமோ இவற்றைவிட அதிக மதுரமுள்ளது.  தேனைப் பருகும்போது அது நாவுக்கு ருசியாயிருக்கும். அது மாம்சப்பிரகாரமாக நமக்கு சிறிது நேரம் சந்தோஷமாயிருக்கும். மாம்சத்தின் சந்தோஷம் நம்மை ஏமாற்றும். இந்த சந்தோஷம் ஒருபோதும் நிலைத்து நிற்பதில்லை.  இது சீக்கிரத்தில் அழிந்துபோகும். மாம்ச சந்தோஷம் நமக்கு பூரண திருப்தியை தராது. 

கர்த்தருடைய வேதமோ நமக்கு  மெய்யான சந்தோஷத்தைத்தரும். இந்த சந்தோஷமே பூரண திருப்தியைத் தரும்.  இந்த சந்தோஷமும் திருப்தியும் நித்தியகாலமாய் நிலைத்திருக்கும். மாம்சத்தின் சந்தோஷம்  புறம்பானது. அது அற்ப பிரயோஜனமுள்ளது. ஆத்தும சந்தோஷமோ நம்முடைய ஆவிக்குரியது. இதுவே அதிக பிரயோஜனமுள்ளது. 

தேனை அதிகமாகப் பருகினால் நம்முடைய சரீர ஆரோக்கியத்திற்கு கேடுண்டாகும்.  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும். ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் தேனைப் பருகமுடியாது. அது திகட்டிப்போகும்.  கர்த்தருடைய வேதத்தையோ அளவில்லாமல் பருகலாம். அது ஒருபோதும் திகட்டாது. கர்த்தருடைய வார்த்தையை அதிகமாய்த் தியானிப்பதினால் நமக்கு ஒரு கேடும் உண்டாகாது. கர்த்தருடைய வேதத்தினால் நம்முடைய ஆத்துமாவுக்கு நன்மை மாத்திரமே உண்டாகுமேயல்லாமல் ஒரு போதும் கேடுண்டாகப்போவதில்லை. 

தேவனுடைய வார்த்தை மனுபுத்திரருக்கு எச்சரிப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  நாம் நிறைவேற்ற வேண்டி கடமைகளைக் குறித்து கர்த்தருடைய வார்த்தை நமக்கு எச்சரித்துப் புத்திசொல்லும். நாம் செய்யக்கூடாத காரியங்களையும் தேவனுடைய வார்த்தை நம்மை எச்சரிக்கும்.  நாம் விட்டு விலகவேண்டிய காரியங்கள், நாம் ஒதுக்க வேண்டிய காரியங்கள் ஆகியவற்றையெல்லாம் கர்த்தருடைய வேதம் நமக்கு எச்சரிப்பாய்ச் சொல்லுகிறது. 

கர்த்தருடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிறதினால் நமக்கு மிகுந்த பலனுண்டு. வார்த்தைகளை கைக்கொண்ட  பின்பு மாத்திரம் அல்ல, அவற்றைக் கைக்கொள்ளும்போதே, நாம் கீழ்ப்படிதலுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம்.  கர்த்தருடைய வார்த்தைக்கும், அவருடைய கற்பனைகளுக்கும் கீழ்ப்படிவதே நமக்கு மிகுந்த ஆசீர்வாதம். கீழ்ப்படிதலின் பிள்ளைகள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.  

மறைவான குற்றங்கள்

தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்  (சங் 19:12). 

தாவீது தன்னுடைய பாவங்களை கர்த்தருடைய சமுகத்தில்  பயபக்தியோடு அறிக்கை செய்கிறார். தன்னுடைய பாவங்களுக்காக மனந்திரும்புகிறார்.  நியாயப்பிரமாணத்தினால் பாவத்தைப்பற்றிய அறிவு வருகிறது. தேவனுடைய பிரமாணத்தின் மூலமாய், தான் செய்தது தவறா அல்லது சரியா என்பதை தாவீது அறிந்துகொள்கிறார்.  தேவனுடைய பிரமாணத்தின் மூலமாகவே எது பாவம் என்பதையும், எது பாவமல்லாதது என்பதையும் நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.

தேவனுடைய கற்பனைகளை மீறுவது எல்லாமே பாவம்தான். தேவன் நமக்கு நியமித்திருக்கிற கடமைகளை செய்யாதிருப்பதும் பாவம்தான்.  தேவன் நமக்குத் தடைபண்ணியிருக்கிற காரியங்களை செய்வதும் பாவம் தான். நம்முடைய பாவங்களைப்பற்றி நாம் அறிந்திருப்பதைவிட, தேவன் நம்மைப்பற்றி  நன்றாகவே அறிந்திருக்கிறார். அவருக்கு மறைவான இரகசியம் எதுவுமில்லை. அவர் நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து அறிகிறார். தாவீது இதை உணர்ந்து, ""தன் பிழைகளை  உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்'' என்று பயபக்தியாய் விண்ணப்பம்பண்ணுகிறார். 

தாவீது தன்னுடைய பாவத்திற்கு விரோதமாக கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். தன்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றையும் தாவீதால் சொல்லமுடியவில்லை.  அவருடைய பிழைகள் அதிகமாயிருக்கிறது. அவருடைய பிழைகளில் அநேகவற்றை தாவீது இன்னும் உணராதிருக்கிறார். தாவீதின் குற்றங்கள் பல இரகசிய பாவமாயிருக்கிறது. 

தாவீது செய்த பாவங்கள் இந்த உலகத்திற்கு மறைவாகயிருக்கலாம்.  ஆனால் கர்த்தருக்கு மறைவானது ஒன்றுமில்லை. தாவீது இதை உணர்ந்து ""மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்'' என்று  பணிவோடு விண்ணப்பம்பண்ணுகிறார். பல சமயங்களில் நம்மிடத்திலுள்ள பிழைகளும், குற்றங்களும் நமக்கே தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை இவற்றை நாம்  உணராதிருக்கலாம். கர்த்தரோ எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். கர்த்தருடைய சமுகத்தில் நம்முடைய சுயபரிசுத்தத்தையோ, சுயபுத்தியையோ, சுயகிரியையோ சார்ந்திராமல், அவருடைய கிருபையை மாத்திரமே நாம் சார்ந்திருக்க வேண்டும். மனத்தாழ்மையோடிருக்கவேண்டும். தன்னைத் தாழ்த்துகிறவனுக்கு கர்த்தர் கிருபை கொடுக்கிறார்.  இருதயத்தில் பெருமையுள்ளவனையோ கர்த்தர் வெறுக்கிறார். 

நீதிமானின் வாஞ்சைகள்

    1. மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்

    2. துணிகரமான பாவங்களுக்கு விலக்கிக் காரும் (சங் 19:13)

    3. பாவம் என்னை ஆண்டு கொள்ள ஒட்டாதிரும்

    4. வாயின் வார்த்தைகள் தேவனுக்கு பிரீதியாயிருப்பதாக (சங் 19:14).

    5. இருதயத்தின் தியானம் தேவனுக்கு பிரீதியாயிருப்பதாக

துணிகரமான பாவங்கள்

துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன் (சங் 19:13). 

தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய மறைவான குற்றங்களுக்காக முதலில் ஜெபம்பண்ணுகிறார்.  தன்னுடைய மறைவான பாவங்கள் முதலாவதாக மன்னிக்கப்படவேண்டுமென்பது தாவீதின் ஜெபம். தாவீதினிடத்தில் மறைவான குற்றங்களும் உள்ளது. துணிகரமான பாவங்களும் உள்ளது. 

நம்முடைய சுயமுயற்சியினால்  துணிகரமான பாவங்களுக்கு நம்மை நாமே  விலக்கிக் காத்துக்கொள்ள முடியாது. கர்த்தருடைய கிருபையும், அநுக்கிரகமும் இருந்தால் மாத்திரமே, துணிகரமான பாவங்களிலிருந்து நம்மால் விலகியிருக்க முடியும். தாவீது இதை உணர்ந்தவராக, ""துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக் காரும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார்.  

துணிகரமான பாவங்களை நாம் கவனியாமல் விட்டுவிட்டால், அவை நம்மை  ஆளுகை செய்யும். நாம் அவற்றிற்கு அடிமையாகிவிடுவோம். தாவீது இதை உணர்ந்து, ""துணிகரமான பாவங்கள் என்னை  ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்'' என்று கர்த்தரிடத்தில் பயபக்தியோடு விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தர் தாவீதை துணிகரமான பாவங்களுக்கு விலக்கிக் காத்துக்கொள்ளும்போது, தாவீது பெரும்பாதகத்திற்கு நீங்கலாயிருப்பார்.  அவர் உத்தமனாயிருப்பார். 

அறியாமையினால் செய்த பாவத்திற்காக,    கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்போது, அது அவனுக்கு மன்னிக்கப்படும்.  துணிகரமாகப் பாவம் செய்தவனோ கர்த்தரை நிந்திக்கிறான். துணிகரமாகச் செய்த பாவத்திற்கு பாவநிவிர்த்தியில்லை.  துணிகரமாகப் பாவம் செய்தவனுடைய அக்கிரமம் அவன்மேலிருக்கும். எண்ணாகமம் புஸ்தகத்தில் துணிகரமான பாவத்தைப்பற்றி இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.  

            ""அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.  இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும். அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.  அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும்'' (எண் 15:28-31). 

துணிகரமாகப் பாவம் செய்தவர்கள்

    1. லூசிபர் (ஏசா 14:12-14; எசே 28:16)

    2. பார்வோன் (யாத் 5:2)

    3. மோசே (எண் 11:11-15,22)

    4. இஸ்ரவேல் (யாத் 14:11-12; யாத் 17:7; எண் 16:41; 1கொரி 10:9-12)

    5. சீரியர் (1இராஜா 20:28)

    6.    யூதாவின் இராஜாக்கள் (ஏசா 28:14-22)

    7. சவுல் (1சாமு 13:8-14; 1சாமு 15:3-23)

    8.    ஐசுவரியமுள்ள மதிகேடன் (லூக்கா  12:18-20)

    9. பரிசேயர்  (லூக்கா 18:11-14)

    10.    அசுத்த இச்சைக்காரர் (2பேதுரு 2:10-11)

பிரீதியாயிருப்பதாக 

என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக (சங் 19:14). 

கர்த்தர் தம்முடைய பெரிதான கிருபையினால் தன்னை அங்கீகரிக்குமாறு  தாவீது தேவனுடைய சமுகத்தில் பணிவோடு விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தர் தாமே தன்னுடைய வாயின் வார்த்தைகளையும், தன்னுடைய இருதயத்தின் தியானத்தையும் அங்கீகரிக்கவேண்டுமென்றும், அவை கர்த்தருடைய சமுகத்தில்  பிரீதியாயிருக்கவேண்டுமென்றும் தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். தாவீது தன்னுடைய இருதயத்தின் தியானத்தை கர்த்தருடைய சமுகத்தில் சமர்ப்பிக்கிறார். 

கர்த்தருக்குச் சித்தமான வார்த்தைகளை மாத்திரமே நாம் பேசவேண்டும். நம்முடைய வாயின் வார்த்தைகளை கர்த்தர் அங்கீகரிக்கவேண்டும். நம்முடைய இருதயத்தின் சிந்தனைகளையும் கர்த்தர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.  கர்த்தருடைய சிந்தையே நம்முடைய இருதயத்திலும் நிரம்பியிருக்கவேண்டும். கர்த்தருக்குச் சித்தமானதை மாத்திரமே நாம் சிந்திக்கவேண்டும். கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கவேண்டுமென்றால் அவர் நம்மை ஏற்றுக்கொள்ளவேண்டும். நம்முடைய வாயின் வார்த்தைகளையும், இருதயத்தின் சிந்தனைகளையும் கர்த்தர்  அங்கீகரிக்கவேண்டும். 

நாம் கர்த்தருக்குப் பிரியமானவர்களாயும் இருக்கவேண்டும். அவருக்குப் பிரயோஜனமுள்ளவர்களாயும் இருக்கவேண்டும்.  நாம் கர்த்தருக்காக எவ்வளவு ஊழியம் செய்தாலும், அந்த ஊழியங்களை கர்த்தர் அங்கீகரிக்கவேண்டும். கர்த்தர் அங்கீகரியாத காரியங்களை நாம் எவ்வளவுதான் செய்தாலும்  அதனால் ஒரு பிரயோஜனமுமில்லை. தாவீது இந்த சத்தியத்தை உணர்ந்தவராக, ""கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக'' என்று பயபக்தியாய் ஜெபம்பண்ணுகிறார்.



Post a Comment

0 Comments