வெட்டுக்கிளிகள் உண்டாக்கிய வாதை Locust infestation யாத் 10:1-11
யாத் 10:1. பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ, அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும்.
யாத் 10:2. நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.
யாத் 10:3. அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை போகவிடு.
யாத் 10:4. நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன்.
யாத் 10:5. தரை காணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும்.
யாத் 10:6. உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன் பிதாக்களும் உன் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றின நாள்முதல் இந்நாள் வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்-, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
யாத் 10:7. அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனைசெய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.
யாத் 10:8. அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்-; யாரார் போகிறார்கள் என்று கேட்டான்.
யாத் 10:9. அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.
யாத் 10:10. அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்;
யாத் 10:11. அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்திவிடப்பட்டார்கள்.
கர்த்தர் மோசேக்கு தம்முடைய வார்த்தைகளை சொல்லுகிறார். கர்த்தருடைய கிரியைகளெல்லாமே நீதியும் நியாயமுமுள்ளவை. அவை அற்புதமானவை. கர்த்தர் செய்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு தெய்வீக நோக்கம் இருக்கும். கர்த்தர் எகிப்து தேசத்திலே வாதைகளை வரப்பண்ணுகிறார். இந்த வாதைகள் எகிப்து தேசத்தின்மீது வருவதற்கான காரணத்தையும் கர்த்தர் மோசேக்கு வெளிப்படுத்துகிறார்.
கர்த்தருடைய அற்புதங்களெல்லாம் அவருடைய மகிமைக்கு அடையாளங்களாயிருக்கிறது. கர்த்தர் நடப்பிக்கிற பலத்த கிரியைகள் அவருடைய ஜனத்திற்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. மனுஷர் கர்த்தருக்கு விரோதமாக யுத்தம்பண்ணக்கூடாது. கர்த்தருடைய ஆவி மனுஷரோடு எப்போதும் போராடுவதில்லை. மனுஷர் தங்கள் பாவத்தினால் கர்த்தருக்கு கோபத்தை உண்டுபண்ணக்கூடாது.
கர்த்தர் மோசேயை நோக்கி, ""நீ பார்வோனிடத்தில் போ, அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும். நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன்'' (யாத் 10:1,2) என்று சொல்லுகிறார்.
கர்த்தர் எகிப்து தேசத்திலே நடப்பிக்கிற அற்புதங்களெல்லாம், அவருடைய மகிமைக்கும், வல்லமைக்கும் அடையாளங்களாயிருக்கிறது. இஸ்ரவேல் புத்திரருடைய பின்சந்ததியார், கர்த்தர் எகிப்து தேசத்திலே நடப்பித்த அற்புதமான காரியங்களையெல்லாம் கேள்விப்படவேண்டும். அவர்களுடைய முற்பிதாக்கள், தங்கள் பின்சந்ததியாருக்கு, கர்த்தர் நடப்பித்த ஒவ்வொரு காரியத்தையும் விவரித்து சொல்லவேண்டும்.
மோசேயும் ஆரோனும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து பார்வோனிடத்தில் வருகிறார்கள். அவர்கள் பார்வோனை கர்த்தருடைய நாமத்தினால் கடிந்துகொள்கிறார்கள். அவர்கள் இருவரும் பார்வோனை நோக்கி, ""உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை போகவிடு'' (யாத் 10:3) என்று சொல்லுகிறார்கள்.
எகிப்து தேசத்திலே எபிரெயர்கள் அதிகமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் பார்வோனோ இஸ்ரவேல் புத்திரரை விடுதலைபண்ண மனதில்லாமலிருக்கிறான். அவன் கர்த்தருக்கு முன்பாக தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறான். யாரெல்லாம் கர்த்தருக்கு முன்பாக தங்களுடைய இருதயங்களை கடினப்படுத்துவார்களோ, அவர்களை கர்த்தர் தாழ்த்துவார். கர்த்தர் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். அவர் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிறார்.
பார்வோன் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, இஸ்ரவேல் புத்திரரை கர்த்தருக்கு ஆராதனை செய்ய போகவிடாவிட்டால், எகிப்து தேசத்திலே கர்த்தர் எப்படிப்பட்ட தண்டனையை வரப்பண்ணுவார் என்பதை மோசேயும் ஆரோனும் பார்வோனுக்கு சொல்லுகிறார்கள்.
அவர்கள் பார்வோனை நோக்கி, ""நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன். தரை காணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும்'' என்றும்,
""உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன் பிதாக்களும் உன் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றின நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்'' (யாத் 10:4#6) என்றும் சொல்லுகிறார்கள்.
வெட்டுக்கிளிகள் சீக்கிரமாக இனவிருத்தி செய்யக்கூடியவை. வேதாகமத்தில் வெட்டுக்கிளிகள் சேனைகளுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது (நியா 6:5; நியா 7:12; சங் 105:34; எரே 46:23; எரே 51:14; யோவே 1:4; நாகூம் 3:15).
வெட்டுக்கிளிகளினால் தாவர வகைகளுக்கு காட்டுத்தீயை விட அதிக சேதம் உண்டாகும். காட்டுத்தீயைவிட வெட்டுக்கிளிகள் பயிர் வகைகளை விரைவில் அழித்துப்போடும். சங் 78:46 ஆவது வசனத்தில் இந்த வாதையைப் பற்றி இவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது. ""அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்''.
ஆதாமின் காலத்திலிருந்து இப்படிப்பட்ட அழிவு வெட்டுக்கிளிகளினால் இதுவரையும் ஏற்பட்டதில்லை. இது இயற்கையான அழிவல்ல. இது தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் உண்டான வாதை.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ""எபிரெயரின் தேவனாகிய கர்த்தர்'' என்று அழைக்கப்படுகிறார். யாத்திராகமம் புஸ்தகத்தில் இந்த வாக்கியம் ஐந்து தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (யாத் 3:18; யாத் 7:16; யாத் 9:1,13; யாத் 10:3). இதற்கு நித்தியமானவர், வாக்குத்தத்தத்தைக் கடைப்பிடிக்கிறவர், பாதுகாக்கிறவர், ஆதரிக்கிறவர், எபிரெயரின் சிருஷ்டிகர் என்று பொருள். யாத் 5:3 ஆவது வசனத்தில் ""எபிரெயடைய தேவன்'' என்னும் வாக்கியம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மோசேயும் ஆரோனும், இந்த வார்த்தைகளை கர்த்தருடைய நாமத்தினால் சொல்லியபின்பு, அவர்கள் திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்படுகிறார்கள்.
கர்த்தர் ஏற்கெனவே எகிப்து தேசத்தின்மீது கல்மழையை அனுப்பினார். ""அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று. கோதுமையும் கம்பும் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை'' (யாத் 9:31,32).
கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவார். அந்த வெட்டுக்கிளிகள் கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும்.
மோசே பார்வோனிடத்தில் கர்த்தருடைய வார்த்தையை சொன்ன பின்பு, அவர் பார்வோனுடைய பதிலுக்காக அங்கே காத்திருக்கவில்லை. இதற்கு முன்பு மோசே பார்வோனிடத்தில் பேசிய பின்பு, அவர் அவனுடைய வார்த்தைக்காக காத்திருப்பது வழக்கம். ஆனால் இப்போதோ மோசே பார்வோனுக்கு கர்த்தருடைய வார்த்தையை சொன்ன பின்பு, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டு புறப்பட்டுப்போய்விடுகிறார்.
புதிய ஏற்பாட்டுக்காலத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பல இடங்களுக்கும், ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் சுற்றி அலைந்து தம்முடைய சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணினார். கிறிஸ்துவானவர் தம்முடைய சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணுமாறு, அவருடைய சீஷர்களுக்கும் கட்டளை கொடுத்தார். சீஷர்களை யாராவது ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை தட்டிவிட்டு, அந்த ஊரை விட்டு புறப்பட்டுப்போய்விடவேண்டும். இதுவே கிறிஸ்துவானவர் தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்திருக்கிற கட்டளை.
""எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்'' (மத் 10:14).
மோசேயின் விண்ணப்பத்திற்கு செவிகொடுத்து, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அனுப்பிவிடுமாறு, பார்வோனுடைய ஊழியக்காரரும், அவனிடத்தில் மோசேக்காக பரிந்து பேசுகிறார்கள்.
பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி, ""எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனைசெய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா'' (யாத் 10:7) என்று சொல்லுகிறார்கள்.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்தியருக்கு பாரமாயிருக்கிறார்கள். பார்வோன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, இஸ்ரவேல் புத்திரரை போகவிடவில்லையென்றால், எகிப்து தேசமே அழிந்துபோகும் என்று பார்வோனுடைய ஊழியக்காரர் பயப்படுகிறார்கள். ஆகையினால் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து எப்படியாவது அனுப்பிவிட்டால், அதுவே தங்களுக்கு நல்லது என்று எகிப்தியரின் பிரபுக்கள் நினைக்கிறார்கள்.
அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள் (சக 12:3).
பார்வோன் தன்னுடைய ஊழியக்காரரின் பரிந்து பேசும் வார்த்தைகளுக்கு செவிகொடுக்கிறான். அவன் மோசேயோடும், ஆரோனோடும் புதிதாய் உடன்படிக்கை பண்ணிக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறான்.
அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்படுகிறார்கள். பார்வோன் அவர்களை நோக்கி, ""நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்'' என்று சொல்லுகிறான். மேலும் பார்வோன் அவர்களை நோக்கி, ""யாரார் போகிறார்கள்'' (யாத் 10:8) என்றும் கேட்கிறான்.
இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்திற்குப்போய் கர்த்தருக்கு பலி செலுத்துவதில் பார்வோனுக்கு ஒரு பிரச்சனையுமில்லை. பார்வோன் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான். ஆனால் வனாந்தரத்திற்கு இஸ்ரவேல் புத்திரரில் யாரெல்லாம் போவார்கள் என்னும் விஷயத்தில் அவர்களுக்குள் கருத்து உடன்பாடு ஏற்படவில்லை. பார்வோன் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, ""யாரார் போகிறார்கள்'' என்று கேட்கிறான்.
அதற்கு மோசே, ""எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும்'' (யாத் 10:9) என்று சொல்லுகிறார்.
பார்வோன் மோசேயையும், ஆரோனையும் நோக்கி ""நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்'' என்று கூறுகிறான். அதன் பின்பு, ""யாரார் போகிறார்கள்'' என்னும் கேள்வியையும் பார்வோன் கேட்கிறான். அதற்கு மோசே ""எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டு போவோம்'' என்று பார்வோனிடம் பதில் கூறுகிறார்.
பலியிடுவதற்கு ஆடுமாடுகள் தேவை. கர்த்தருக்கு பண்டிகை கொண்டாடுவதால் இளைஞர், முதியவர், ஆண்பெண், எல்லோரும் போக வேண்டும். எகிப்தியர் தங்கள் தெய்வங்களுக்கு ஆறு விசேஷித்த பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆகையினால் அவர்களுக்குப் பண்டிகை கொண்டாடுவதைப் பற்றி நன்றாகத் தெரியும். எபிரெயரோ வனாந்தரத்தில் ஒரே ஒரு பண்டிகை மட்டுமே கொண்டாட வேண்டுமென்று கேட்கிறார்கள்.
அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, எபிரெயரைப் பண்டிகை கொண்டாட அனுப்புவதுதான் நியாயமானது. ஆனால் எபிரெயரிடத்திலோ வனாந்தரத்தில் பண்டிகை கொண்டாடிவிட்டு, எகிப்துக்குத் திரும்பி வரும் எண்ணமோ, திட்டமோ இல்லை. தங்களைக் குறித்த தேவனுடைய திட்டம் எபிரெயருக்கு நன்றாகத் தெரியும். எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டு, தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கும் கானான் தேசத்திற்குள் இஸ்ரவேலர் பிரவேசிக்க வேண்டும். இதுவே தேவனுடைய திட்டம். (ஆதி 15, ஆதி 17).
இஸ்ரவேல் புத்திரர் எல்லோருமே, தங்கள் முழுக்குடும்பத்தோடும் வனாந்தரத்திற்குப் போய், கர்த்தருக்கு பலிசெலுத்தவேண்டும் என்றும், அங்கே இஸ்ரவேல் புத்திரரின் குடும்பத்தார் எல்லோரும் கர்த்தருக்கு பண்டிகை கொண்டாடவேண்டும் என்றும் மோசே சொல்லுகிறார். ஆனால் மோசேயின் கோரிக்கையை பார்வோன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறான்.
இஸ்ரவேல் புத்திரரில் புருஷர் மாத்திரம் வனாந்தரத்திற்குப்போய் கர்த்தருக்கு பலிசெலுத்தினால் போதுமானது என்று பார்வோன் நினைக்கிறான். இஸ்ரவேல் புத்திரருடைய ஸ்திரீகளையும் பிள்ளைகளையும், பார்வோன் எகிப்து தேசத்திலே பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்ள திட்டமிடுகிறான்.
இஸ்ரவேல் புத்திரர் எல்லோரும் தங்கள் முழுக்குடும்பத்தோடு எகிப்து தேசத்தைவிட்டு வனாந்தரத்திற்குப்போனால், அவர்கள் மறுபடியும் திரும்பி எகிப்து தேசத்திற்கு வரமாட்டார்கள் என்று பார்வோன் அவர்கள்மீது சந்தேகப்படுகிறான். எகிப்தியருக்கு இஸ்ரவேல் புத்திரர் தேவைப்படுகிறார்கள். இஸ்ரவேல் ஜனத்தார் எகிப்தியருக்கு எல்லாவிதமான அடிமை வேலைகளையும் செய்கிறார்கள். ஆகையினால் இஸ்ரவேல் புத்திரரை மொத்தமாய் அனுப்பிவிட பார்வோனுக்கு மனதில்லை.
பார்வோன் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, ""நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்; அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது'' (யாத் 10:10,11) என்று சொல்லுகிறான்.
மோசேயின் கோரிக்கையில் பார்வோனுக்கு சம்மதமில்லை. எபிரெயருடைய புருஷர் மட்டும் போய் கர்த்தருக்கு ஆராதனை செய்யலாம் என்று பார்வோன் கூறுகிறான். இந்த வாக்கியம் மூலஎபிரெய பாஷையில் இவ்வாறு பொருள்படுமாறு எழுதப்பட்டிருக்கிறது. ""உங்கள் குழந்தைகளோடு உங்களை அனுப்பினால் கர்த்தர் உங்களோடு இருப்பார்''. ஆனால், முழு குடும்பத்தையும் எபிரெயர்கள் அழைத்துச் சென்றால் அவர்களுக்குப் பொல்லாப்பு நேரிடும் என்று பார்வோன் எச்சரிக்கிறான்.
பார்வோன் இஸ்ரவேல் புத்திரரின் குழந்தைகளை எகிப்து தேசத்திலே பிணைக்கைதிகளைப்போல பிடித்துக்கொள்வது பற்றி இதுவரையிலும் ஒன்றும் சொல்லவில்லை. இப்போதோ அவன் இஸ்ரவேல் புத்திரரின் குழந்தைகளைப்பற்றிப் பேசுகிறான்.
மோசேயோ பார்வோனை நோக்கி, ""எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும்'' என்று சொல்லுகிறார். பார்வோன் மோசேயின் வார்த்தைகளைக் கேட்டு கோபமடைகிறான். பார்வோனுடைய ஊழியக்காரர்கள் மோசேயையும் ஆரோனையும் அவனுடைய சமுகத்திலிருந்து துரத்திவிடுகிறார்கள்.
எபிரெயர் தங்களுடைய குடும்பத்திலுள்ள எல்லோரையும் கூட்டிக் கொண்டு வனாந்தரத்திற்குப் போனால் அவர்கள் திரும்பி வரமாட்டார்கள். ஆகையினால் புருஷர்கள் மட்டும் போகட்டும். ஸ்திரீகளும், ஆடுமாடுகளும், எகிப்திலேயே இருக்கட்டும் என்று பார்வோன் கூறுகிறான். ஸ்திரீகளும், பிள்ளைகளும் எகிப்தில் இருந்தால், வனாந்தரத்திற்குப் போகும் எபிரெய புருஷர்கள் இவர்களுக்காகத் திரும்பி வந்துவிடுவார்கள் என்பது பார்வோனின் திட்டம். பார்வோனுடைய விருப்பத்திற்கு விரோதமாக மோசேயும், ஆரோனும் கேட்டதினால் பார்வோனின் வேலையாட்கள் அவர்களைப் பார்வோனுடைய சமுகத்திலிருந்து துரத்திவிடுகிறார்கள்.