சங்கீதம் 22 விளக்கம்

 









  சங்கீதம் 22 விளக்கம்


(அகிலேத் ஷகார் என்னும் இராகத்தில் பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

மேசியாவைப் பற்றிய ஐந்தாவது சங்கீதம்


பொருளடக்கம்


    1. மேசியாவின் இருபத்தேழு விதமான பாடுகள் - (22:1-18) 

    2.  மேசியாவின் ஜெபத்தின் ஐந்து அம்சங்கள் - (22:19-21)        

    3.  மேசியாவின் மகிமையும் உயர்த்தப்படுவதும் பற்றிய இருபது அம்சங்கள் - (22:22-31) 


கிறிஸ்துவின் ஆவியானவர் தீர்க்கதரிசிகளிடத்தில் வாசம்பண்ணுகிறார்.  பரிசுத்த ஆவியானவர் ஏவுகிற பிரகாரமாக தீர்க்கதரிசிகள் கர்த்தருடைய வார்த்தைகளை முன்னறிவிக்கிறார்கள். பழைய ஏற்பாட்டிலே கர்த்தருடைய பரிசுத்தவான்கள் இயேசுகிறிஸ்துவைப்பற்றி அநேக சத்தியங்களை முன்னறிவித்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இருபத்து இரண்டாவது சங்கீதத்தில் அதிகமாய்  முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சங்கீதத்தில் இயேசுகிறிஸ்துவின் பாடுகளும், இதன் பின்பு அவர் பெற்றுக்கொண்ட மகிமையும் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது.  


""தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்''        (1பேது 1:11). 


தாவீது இருபத்திரண்டாவது சங்கீதத்தில் தன்னைப்பற்றியோ அல்லது வேறு மனுஷரைப்பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை.  அவர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றியே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறார். தாவீது இயேசுகிறிஸ்துவைக்குறித்து இந்த சங்கீதத்தில் சொல்லியிருக்கிற தீர்க்கதரிசனங்களில் பல, புதிய ஏற்பாட்டிலே இயேசுகிறிஸ்துவின் ஜீவியத்தில்  பிரத்தியட்சமாய் சம்பவித்தது. 


இயேசுகிறிஸ்துவின் தாழ்மை (சங் 22:1-21). தாவீது கர்த்தரிடத்தில்    முறையிடுகிறார். அவர் முறையிடும்போது அவருடைய வார்த்தையில் ஆறுதலும் நிரம்பியிருக்கிறது (சங் 22:1,2). தாவீது தனக்கு மறுபடியும் ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லுகிறார்  (சங் 22:3-5). தாவீது மறுபடியும் கர்த்தரிடத்தில் முறையிடுகிறார் (சங் 22:6-8). அவர் மறுபடியும் தன்னை ஆறுதலான வார்த்தைகளினால் தேற்றிக்கொள்கிறார் (சங் 22:9,10). 


தாவீது கர்த்தரிடத்தில் ஜெபத்தோடு முறையிடுகிறார். தன்னுடைய சத்துருக்களின் சதிஆலோசனைகளைப்பற்றியும், அவர்களுடைய பெலத்தைப்பற்றியும் தாவீது கர்த்தரிடத்தில் சொல்லுகிறார்               (சங் 22:12,13,16,18). தாவீதின் சரீரம் பலவீனமாயிற்று (சங் 22:14,15,17). கர்த்தர் தன்னைவிட்டு தூரமாயிருக்கக்கூடாது என்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார் (சங் 22:11,19). கர்த்தர்தாமே தன்னை இரட்சிக்கவேண்டுமென்று தாவீது ஜெபிக்கிறார் (சங் 22:19-21).


தாவீது கர்த்தரைத் துதிக்கிறார். அவரை மகிமைப்படுத்துகிறார்                 (சங் 22:22-25). கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இரட்சிப்பும் சந்தோஷமும் (சங் 22:26-29). தாவீதின் ராஜ்யம் நிலைத்திருக்கும் (சங் 22:30,31). 


தாவீதின் முறையீடு சங் 22 : 1-10 


என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்...


என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? என் தேவனே, நான் பக-லே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு  அமைத-ல்லை (சங் 22:1,2).  


கர்த்தருடைய சமுகம் நம்மோடு எப்போதும் கூடவே இருக்கவேண்டும். இதுவே நமக்கு மெய்யான ஆசீர்வாதம். கர்த்தருடைய சமுகம்  நம்மைவிட்டு விலகிப்போய்விட்டால் நமக்கு துக்கமும் வருத்தமும் அதிகரிக்கும். தாவீதுகர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். ஆனால் கர்த்தரோ  தன்னைவிட்டு தூரமாயிருப்பதுபோல அவருக்குள் ஓர் உணர்வு உண்டாயிற்று. கர்த்தர் தன்னை கைவிட்டுவிட்டாரோ என்று தாவீது வருத்தப்படுகிறார்.  


தாவீது கர்த்தரிடத்தில், ""என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்''  என்று கேட்கிறார். இந்த வார்த்தையை தாவீது கேட்பதுபோல கர்த்தருடைய பிள்ளைகளாகிய  நாமும் கேட்கலாம். கர்த்தர் நம்முடைய ஜெபத்திற்கு பதில்கொடுக்காதபோது, கர்த்தருடைய சமுகம் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது, நாமும் தாவீதைப்போல  இப்படி ஜெபிக்கலாம். 


கர்த்தர் தன்னை கைவிட்டுவிட்டார் என்றும், தன்னுடைய வார்த்தைகளைக் கேளாமல் அவர் தூரயிருக்கிறார் என்றும் தாவீது சொன்னாலும், திரும்பத் திரும்ப ""என் தேவனே, என் தேவனே''  என்று கர்த்தரை அழைக்கிறார். கர்த்தர் தாவீதோடு கூடயிருந்தாலும், அவரைக் கைவிட்டுவிட்டாலும், கர்த்தரே தாவீதுக்கு தேவனாயிருக்கிறார் இந்த ஐக்கியத்தில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. 


தாவீது கர்த்தருடைய சமுகத்தில், ""என் தேவனே'' என்று இரவும் பகலும் கதறுகிறார். தன்னுடைய ஜெபவார்த்தைகளை சாதாரணமாகச் சொல்லாமல் கதறிச் சொல்லுகிறார். கர்த்தர்                தன்னிடத்திலே தமது கிருபையினால் திரும்பி வரவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தருடைய சமுகம் நம்மைவிட்டு விலகிப்போய்விட்டால் அது நமக்கு மிகுந்த துக்கமாயிருக்கும். கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு இதுவே மிகுந்த வேதனையை கொடுக்கும். ஆவிக்குரிய வறட்சி கர்த்தருடைய பிள்ளைகளால் தாங்கிக்கொள்ள முடியாத துக்கமாயிருக்கும்.  


ஒரு சிலர் கர்த்தருடைய சமுகத்தில்,  ""என் தேவனே, நான் ஏன் வியாதியாயிருக்கிறேன்'', அல்லது ""என் தேவனே  நான் ஏன் வறுமையிலிருக்கிறேன்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார்கள். இவர்கள் ஆவிக்குரிய காரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உலகப்பிரகாரமான காரியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  இவர்களுக்கு கர்த்தருடைய பிரசன்னத்தைவிட, தங்களுடைய சரீர ஆரோக்கியமும், பொருளாதார ஆசீர்வாதங்களும் முக்கியமானவையாயிருக்கிறது. 


தாவீதோ கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய மாம்சப்பிரகாரமான காரியங்களுக்காக கெஞ்சி மன்றாடவில்லை.  தன்னுடைய சரீர ஆரோக்கியத்திற்காக அவர் கர்த்தரிடத்தில் தன்னுடைய ஜெபவார்த்தைகளை கதறிச் சொல்லவில்லை. தாவீதுக்கு உலகப்பிரகாரமான காரியத்தைவிட, ஆவிக்குரிய காரியமே முக்கியமானதாயிருக்கிறது. ஆகையினால், ""என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார். 


தாவீதின் வார்த்தைகள் அவருடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து புறப்பட்டு வருகிறது. கர்த்தருடைய கிருபையும், அவருடைய பிரசன்னமும் நம்மோடு கூடயிருந்தால்தான்  நமக்கு மெய்யான சந்தோஷம் இருக்கும். நம்முடைய விசுவாசம் உறுதிப்பட வேண்டுமென்றால், கர்த்தருடைய சமுகம் நம்மோடு கூடயிருக்கிறது என்னும் உறுதி நமக்குள் இருக்கவேண்டும்.  கர்த்தருடைய பிரசன்னத்தை நாம் விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். 


""கர்த்தர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்''  (யோபு 13:15) என்று யோபு பயபக்தியோடு சொல்லுகிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் யோபுவைப்போல கர்த்தரைப்பற்றிக்கொள்ளவேண்டும்.  எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரே நம்முடைய ஆண்டவராகவும், தேவனாகவும் இருக்கவேண்டும். நம்முடைய வாழ்க்கையில் ஆசீர்வாதங்களும் செழிப்பும் இருந்தாலும்,  ஒருவேளை வறுமையும் கஷ்டமும் இருந்தாலும், நாம் கர்த்தர்மேல் எப்போதும் நம்பிக்கையாயிருக்கவேண்டும்.  


தாவீது பகலிலும் இரவிலும் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார். ஆனால்  அவருக்கு கர்த்தரிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. அவர் கதறிச் சொல்லும் வார்த்தைகளை கர்த்தர் கேளாமல் தூரமாயிருப்பதுபோல நினைத்து தாவீது வேதனைப்படுகிறார்.  இதனால் அவருடைய ஆத்துமாவில் அமைதியில்லாமற்போயிற்று. ""என் தேவனே நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவு கொடீர்'' என்று வருத்தத்தோடு சொல்லுகிறார். பகலில் உத்தரவு கொடுக்காத தேவன், ஒருவேளை இரவில் உத்தரவு கொடுப்பார் என்று எதிர்பார்த்து, தாவீது  கர்த்தரை இரவிலும் கூப்பிடுகிறார். அப்போதும் கர்த்தர் அவருக்கு உத்தரவு கொடுக்கவில்லை. இதனால் தாவீதுக்கு அமைதலில்லை. 


இவ்விரண்டு வசனங்களையும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு தொடர்புபடுத்தியும் வியாக்கியானம் பண்ணலாம்.  முதலாவது வசனம் கர்த்தரிடத்தில் முறையிடுகிற ஜெபமாகும். இயேசுகிறிஸ்து சிலுவையிலே அறையப்பட்டபோது, அவர் தம்முடைய ஆத்துமாவை தேவனுடைய சமுகத்திலே ஊற்றினார். ""ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்'' (மத் 27:46).


இயேசுகிறிஸ்து பகலிலே பிதாவினிடத்தில் விண்ணப்பம்பண்ணினார். கிறிஸ்துவானவர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த வேளை பகல்வேளையாகும். அவர் இரவிலும் பிதாவினிடத்தில் விண்ணப்பம்பண்ணினார்.  கெத்சமனே தோட்டத்தில் இயேசுகிறிஸ்து இரவு வேளையிலே ƒவியாகுலத்தோடு ஜெபம்பண்ணினார். இயேசுகிறிஸ்து ஒரு பாவமும் செய்யவில்லை. ஒரு பாவமும் அறியாத அவர், நமக்காக பாவமானார். 


பாவத்திற்கு விரோதமாய் தேவனுடைய கோபம் வந்தது. இயேசுகிறிஸ்து நமக்காக பாவமானபடியினால் கர்த்தர் அவரை நொறுக்க  சித்தமானார். ஏசாயா தீர்க்கதரிசி இயேசுகிறிஸ்துவின் பாடுகளை இவ்வாறு தீர்க்கதரிசனமாக முன்னறிவித்துச் சொல்லியிருக்கிறார். 


""துன்மார்க்கரோடே அவருடைய பிரதேக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.  கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி: அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணப-யாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.  அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசானாகிய நீதிபரர் தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்'' (ஏசா 53:9-12). 


""என் தேவனே, நான் பக-லே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைத-ல்லை'' என்று தாவீது சொல்லுகிறார்.  சங் 22:2-5 - ஆகியவை தாவீதின் அனுபவங்கள். மேசியாவின் அனுபவமல்ல. கர்த்தர் தாவீதுக்கு உத்தரவு கொடாவிட்டாலும், மேசியாவின் ஜெபத்திற்கு எப்போதும் உத்தரவு கொடுப்பார் (யோவான் 11:42). 


தேவரீரே பரிசுத்தர்...


இஸ்ரவே-ன் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர். எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்           (சங் 22:3-5). 


கர்த்தர் பரிசுத்தர். அவர் நீதியும் உண்மையுமுள்ளவர். எக்காலத்திலும்  அவர் தம்முடைய சுபாவத்தை மாற்றிக்கொள்வதில்லை. தேவனுடைய நீதியும், அவருடைய நியாயமும் மாறாதவை. தாவீது கர்த்தரிடத்திலே, ""என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்'' என்று கேட்டாலும், ""தேவரீரே பரிசுத்தர்'' என்றும் சொல்லுகிறார். கர்த்தர் இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிறவர். 


கர்த்தருடைய பிள்ளைகளுக்கு  பாடுகளும், நெருக்கங்களும், உபத்திரவங்களும் உண்டாகலாம். அவர்கள் கர்த்தரை நோக்கி  ஜெபம்பண்ணும்போது, கர்த்தருடைய சமுகத்திலிருந்து அவர்களுக்கு உடனடியாக உத்தரவு கிடைக்காமலும் போகலாம். இந்த சூழ்நிலையிலும் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளிடத்தில் மெய்யாகவே அன்புகூருகிறார். கர்த்தருடைய அன்பு மெய்யானது. அது மாறாதது. கர்த்தர் தம்முடைய  பிள்ளைகளோடு உடன்படிக்கை செய்து, அவர் தம்முடைய உடன்படிக்கையில் உண்மையுள்ளவராயிருக்கிறார். 


கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைத் துன்பப்படுத்துகிறவர்களைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்துவிடமாட்டார்.  ஆபகூக் தீர்க்கதரிசி கர்த்தருடைய குணாதிசயத்தை இவ்வாறு சொல்லுகிறார். ""தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?'' (ஆப 1:13). 


கர்த்தர் இஸ்ரவேலின் துதிகளுக்குள்ளே  வாசமாயிருக்கிறார். கர்த்தர் தம்முடைய மகிமையையும், இரக்கத்தையும், கிருபையையும் வெளிப்படுத்துவதில் மிகவும் சந்தோஷப்படுகிறார்.  கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்திலே, அவருடைய விசேஷித்த பிரசன்னம், அவருடைய பிள்ளைகள் மத்தியில் வெளிப்படுகிறது. அங்கு கர்த்தருடைய பரிசுத்தவான்கள் கர்த்தரை துதித்து, ஸ்தோத்திரம்பண்ணுகிறார்கள். கர்த்தர் துதிகளின் மத்தியிலே வாசம்பண்ணுகிறவர். 


நாம் கர்த்தரைத் துதிக்கும்போது, கர்த்தர் நம்முடைய துதிகளையும் ஸ்தோத்திரங்களையும்  சந்தோஷமாய் அங்கீகரிக்கிறார். கர்த்தர் தம்முடைய கூடாரத்திலே தம்முடைய பிள்ளைகளை சந்திக்கிறார்.  கர்த்தருடைய பிள்ளைகளும் அவருடைய கூடாரத்திற்கு வந்து, அவரை பயபக்தியோடு துதிக்கிறார்கள். கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஸ்தலத்திலே நித்தியமாய் வாசம்பண்ணுகிறார்.  நம்முடைய விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் கேட்டு, தாமதமில்லாமல் நமக்கு உத்தரவு கொடுக்கிறார். 


சில சமயங்களில் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் ஜெபத்திற்கு உடனடியாக பதில் கொடுக்காததுபோல தெரியும்.  நாம் கதறிச் சொல்லும் வார்த்தைகளை அவர் கேளாமல் தூரத்திலிருப்பதுபோல நமக்குள் சில எண்ணங்கள் உண்டாகும்.  கர்த்தர் நம்முடைய விண்ணப்பங்களுக்கு தம்முடைய செவியை அடைத்துக்கொண்டது போல தெரியும். ஆனாலும் அவர் நம்முடைய துதிகளுக்குள்ளே  வாசமாயிருக்கப் பிரியப்படுகிறார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் ஜெபத்திற்கு உடனே உத்தரவு கொடுத்தாலும், உத்தரவை தாமதப்படுத்தினாலும், கர்த்தர் துதிகளுக்குள்ளே வாசமாயிருக்கிற பரிசுத்தர்.


கர்த்தர் ஏற்றவேளையில் தம்முடைய பிள்ளைகளின் ஜெபங்களுக்கு உத்தரவு கொடுப்பார். அந்த வேளையே கர்த்தருக்கு சித்தமான வேளையாகவும், பிரியமான வேளையாகவும் இருக்கும். தாவீது கர்த்தருடைய சுபாவத்தை அறிந்திருக்கிறார். ஆகையினால் ""என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்'' என்று வருத்தத்தோடு கேட்டாலும்,  அவரே இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிறவர் என்றும், தேவரீரே பரிசுத்தர் என்றும் பயபக்தியோடு சொல்லுகிறார். 


தாவீது கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்.  கர்த்தரை நன்றியோடு துதிக்கிறார். தனக்கு முன்னால் இருந்த முற்பிதாக்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்ததையும், நம்பின அவர்களை கர்த்தர்  விடுவித்ததையும் தாவீது நினைவுகூருகிறார். முன்னோர்களின் ஆவிக்குரிய அனுபவம் தாவீதின் இருதயத்திற்கு ஆறுதலாயிருக்கிறது. அவர்கள் விசுவாசத்தினாலும், ஜெபத்தினாலும் கர்த்தரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்தபடியினால்,  கர்த்தர் அவர்களை வெட்கப்படுத்தாமல், ஏற்ற வேளையிலே அவர்களுடைய சத்துருக்களின் கைகளிலிருந்து விடுவித்தார்.


இஸ்ரவேலின் பிதாக்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்ததுபோல, தாவீதும் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்.  தம்மை நம்பின அவர்களை கர்த்தர் விடுவித்ததுபோல, தன்னையும் விடுவிப்பார் என்று தாவீது கர்த்தருக்குள் விசுவாசத்தோடிருக்கிறார்.  முற்பிதாக்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு தப்பினார்கள். கர்த்தரே அவர்களை விடுவித்தார். அவர்கள் கர்த்தரை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள். அவர்களைப்போலவே தாவீது இப்போது கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்.  கர்த்தர் தன்னை விடுவிப்பார் என்று தாவீது நம்புகிறார். தான் கர்த்தரை நம்பி வெட்கப்பட்டுப் போவதில்லை என்று விசுவாசத்தோடு அறிக்கை செய்கிறார். 


கர்த்தர் ஜெபத்திற்கு உத்தரவு கொடாவிட்டாலும் அவரே பரிசுத்தர். இதுவே ஜெபத்தின் நல்ல மனப்பாங்கு. ஜெபத்திற்கு உத்தரவு கிடைக்கவில்லை என்றால், அதற்காக யாரையும் குறை கூறக்கூடாது (சங் 66:18; மத் 17:20;  யாக் 1:5-8).


""எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்'' என்பவை கடந்த காலத்தில் ஏற்பட்ட காரியங்கள்.  தனது ஜெபத்திற்கு கடந்த கால உத்தரவுகளை தாவீது ஆதாரமாகப் பயன்படுத்துகிறார் (சங் 22:4-5). 


மனுஷரால் நிந்தனை...


நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி:கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள் (சங் 22:6-8). 


தாவீது கர்த்தரிடத்தில் மறுபடியுமாக முறையிடுகிறார்.  ஆரம்பத்தில் தேவன் தன்னை கைவிட்டுவிட்டதாகவும், தன்னுடைய வார்த்தைகளை அவர் கேளாமலிருப்பதாகவும் தாவீது முறையிட்டார். இப்போதோ  மனுஷர் மூலமாய் தனக்கு வரும் நிந்தைகளையும், அவமானங்களையும் கர்த்தரிடத்தில் முறையிடுகிறார். மனுஷர் மூலமாய் நமக்கு நிந்தைகள் வந்தாலும், கர்த்தர் நம்மை கைவிட்டுவிடுவதுதான் நமக்கு அதைவிட மிகப்பெரிய  துக்கமாயிருக்கும். 


தாவீதின் ஆத்துமா கிருபை நிறைந்தது. மற்றவர்கள்மீது அவருடைய ஆத்துமா எப்போதும் கரிசனையோடிருக்கும்.  ஆனால் மனுஷர்கள் தாவீதை நிந்திக்கிறார்கள். தாவீதின் மென்மையான ஆத்துமா அவர்களுடைய நிந்தனையினால் வேதனைப்படுகிறது. மனுஷர் சாதாரண  புழுவைப்போல இருக்கிறார்கள். தாவீதின் சத்துருக்களோ அவரை மனுஷராகப் பாவிக்காமல், ஒரு புழுவாகப் பாவிக்கிறார்கள்.  


புழுவின் வர்ணனை...


    1. உணவில் உள்ள பூச்சி (யாத் 16:20; உபா 28:39; யோவான் 4:7) 

    2. மனுஷனுடைய பாவம் (யோபு  25:6; ஏசா 41:14) 

    3. நரகத்தில் மனுஷனுடைய ஆத்துமா (ஏசா 14:11; ஏசா 66:24)

   4. கிறிஸ்து மனுஷர் மத்தியில் தாழ்மையான ஸ்தானத்தைத் தெரிந்தெடுத்தார் (சங்  22:6; பிலி 2:5-8; 1பேதுரு 2:24)  


தாவீதின் சத்துருக்கள் அவரை நிந்திக்கிறார்கள்.  அவரை துஷ்டன் என்று சொல்லுகிறார்கள். இயேசுகிறிஸ்துவையும் சத்துருக்கள் நிந்தித்தார்கள். அவர் ஓய்வுநாளை ஆசரிக்காதவர் என்றும், மதுபானப்பிரியர் என்றும், கள்ளத்தீர்க்கதரிசி என்றும், இராயனுக்கு விரோதியானவர் என்றும், பிசாசுகளின் தலைவன் என்றும் தூஷணமாய்க் குற்றம் சொன்னார்கள். 


மனுஷர் இயேசுகிறிஸ்துவை ஆகாதவர் என்று தள்ளிவிட்டார்கள்.  கிறிஸ்துவானவர் தமக்கு சொந்தமானவர்கள் மத்தியிலே வந்தார். ஆனால் அவர்களோ இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை.  யூதர்கள் இயேசுகிறிஸ்துவின்மீது தூஷணமான வார்த்தைகளைச் சொன்னார்கள். அவரை அவமதித்தார்கள். நிந்தித்தார்கள். இயேசுகிறிஸ்து ஒரு சாதாரண மனுஷர் என்று நினைத்து, அவருடைய வார்த்தைக்குச் செவிகொடுக்க மறுத்துவிட்டார்கள்.  அவர் சாதாரண தச்சருடைய குடும்பத்தில் பிறந்தவர் என்பதினால் அவருடைய சொந்த ஊராரே அவரை விசுவாசியாமல் அசட்டை பண்ணினார்கள்.  


இயேசுகிறிஸ்துவின் சீஷர்களெல்லோரும் சமுதாயத்தில் சாதாரண அந்தஸ்துள்ளவர்கள் தான். அவர்களில் ஐசுவரியவான்கள் யாருமில்லை. பெரிய அதிகாரத்திலுள்ளவர்கள் யாரும் இயேசுவைப் பின்பற்றவில்லை.  யூதமார்க்கத்தின் தலைவர்களாகயிருந்த பரிசேயரும், சதுசேயரும் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்திற்குச் செவிகொடுக்கவில்லை. அவரோடு எப்போதும் தர்க்கம்பண்ணிக்கொண்டே இருந்தார்கள். சாதாரண பாமர ஜனங்களே இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றினார்கள்.


இயேசுகிறிஸ்துவைப் பார்க்கிறவர்களெல்லோரும் அவரை பரியாசம்பண்ணினார்கள்.  அவர் மற்றவர்களை வஞ்சிக்கிறார் என்றும், தம்மைத்தாமே வஞ்சித்துக்கொள்கிறார் என்றும் அவர்மீது       குற்றம் சொன்னார்கள். இயேசுகிறிஸ்து சிலுவையிலே தொங்கிக்கொண்டிருந்தபோது, அவரைப் பார்த்தவர்கள் பரியாசம்பண்ணி,   ""உதட்டை பிதுக்கி தலையைத் துலுக்கி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும்''  என்று சொன்னார்கள். கிறிஸ்துவானவர் பிதாவினிடத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். ஜனங்களோ அவருடைய நம்பிக்கையை பரியாசம்பண்ணினார்கள். 


தாவீதும் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறார். அவரைப் பார்க்கிறவர்களெல்லோரும், அவர் கர்த்தரிடத்தில் நம்பிக்கை வைத்திருப்பதன் நிமித்தமாய், அவரைப் பரியாசம்பண்ணுகிறார்கள். தாவீது பரிசுத்த ஆவியானவரால் இந்த வாக்கியங்களை தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறார்.  இவையெல்லாம் இயேசுகிறிஸ்துவின் ஜீவியத்தில் பிரத்தியட்சமாய் நிறைவேறிற்று. ""கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்'' என்று பரியாசக்காரர்கள் தாவீதைப் பார்த்து சொன்னார்கள். இயேசுகிறிஸ்துவைப் பார்த்தவர்களும், இதே வார்த்தைகளைச் சொல்லி, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.  


நீர் என்  தேவனாயிருக்கிறீர்...


நீரே என்னைக் கர்ப்பத்தி-ருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடைய பேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர். கர்ப்பத்தி-ருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன் நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்  (சங் 22:9,10).


மனுஷர் தாவீதுக்கு விரோதமாய் கிரியை செய்கிறார்கள். அவரை பரியாசம்பண்ணுகிறார்கள். தாவீதைக்குறித்து ஏளனமாகப் பேசுகிறார்கள். ஆனால் கர்த்தரோ தன்னை கர்ப்பத்திலிருந்து எடுத்திருக்கிறார் என்று சொல்லி தாவீது தன்னுடைய இருதயத்தில் மிகுந்த             ஆறுதல் அடைந்திருக்கிறார். தாவீதைப்போலவே கர்த்தருடைய பிள்ளைகளெல்லோரும் இந்த சத்தியத்தை நினைவுகூர்ந்து தங்களுக்குள் ஆறுதலடையவேண்டும். கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கவேண்டும். 


கர்த்தர் நம்முடைய முற்பிதாக்களின் தேவன் மாத்திரமல்ல. அவர் நம்மை கர்ப்பத்திலிருந்து எடுத்த தேவனாகவும் இருக்கிறார்.  நாம் நம்முடைய தாயின் கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பாகவே கர்த்தர் நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நம்மைப் பாதுகாத்து பராமரித்து வந்திருக்கிறார். நம்முடைய சிறுபிள்ளைப் பிராயத்திலே நம்மை கர்த்தர் பேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணியிருக்கிறார்.  நாம் சிறுபிள்ளையாக இருக்கும்போதே நம்மைத் தெரிந்தெடுத்தவர், நம்மை ஒருபோதும் தள்ளிவிடமாட்டார். 


நம்முடைய தாயின் கர்ப்பத்தில் நாம் பிறந்தபோது, நம்மால்  மற்றவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. நாம் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவர்களாக இருந்திருப்போம்.  அப்படிப்பட்ட நம்மை, கர்த்தர், நம்முடைய தாயின் கர்ப்பத்திலிருந்து எடுத்து, நம்மை ஆதரித்திருக்கிறார். கர்த்தருக்கு  ஊழியம் செய்யும் வண்ணமாக நம்மை வளர்த்திருக்கிறார். நாம் சிறுபிள்ளையாக, நம்முடைய தாயின் மடியிலிருந்த காலத்திலேயே, கர்த்தர் பேரில்  நம்மை நம்பிக்கையாயிருக்கப்பண்ணியிருக்கிறார்.  


கர்த்தர் நம்மை, நம்முடைய தாயின் கர்ப்பத்திலிருந்து எடுத்திருக்கவில்லையென்றால், நாம் அங்கேயே மரித்துப்போயிருந்திருப்போம்.  நாம் சிறுபிள்ளையாகயிருக்கும்போதே, கர்த்தர் பேரில் நம்மை நம்பிக்கையாயிருக்கப் பண்ணியிராவிட்டால், கர்த்தரைப்பற்றும் விசுவாசம் நமக்குள் வந்திருக்காது. நாம் பிறந்த காலத்திலிருந்து நமக்கு பல ஆபத்துக்கள் வந்திருக்கலாம்.  அவையெல்லாவற்றிலிருந்தும் கர்த்தர் நம்மை பாதுகாத்து பராமரித்து வந்திருக்கிறார். தாவீது தன்னுடைய பிறப்பின் நாளை நினைவுகூர்ந்து கர்த்தரைத் துதிக்கிறார். கர்த்தர் தனக்கு ஆரம்பத்திலிருந்து செய்த நன்மைகளையெல்லாம் நினைத்துப் பார்த்து,  கர்த்தரைப்பற்றும் விசுவாசத்தில் வளர்ச்சி பெறுகிறார். 


சிறுபிள்ளைகளுக்கு அவர்களுடைய  தாயின் பாலை பருகிய காலம் மிகவும் ஆசீர்வாதமான காலமாகும்.  இதுவே சிறுபிள்ளைகள் தங்கள் தாயின் கர்ப்பத்திலிருந்த காலத்தின் பிரதான காலமாக கருதப்படுகிறது. சிறுபிள்ளைகள் தங்களுக்குத் தேவையான சத்தான அனைத்து ஆகாரத்தையும் தங்களுடைய தாயின் பாலிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை ஒருபோதும் பட்டினி போடமாட்டார்கள். 


சிறுபிள்ளைகள் தங்கள் தாயின் கர்ப்பத்தில் பாதுகாக்கப்படுவதும், சரீர வளர்ச்சி பெறுவதும் கர்த்தருடைய பெரிதான அற்புதம்.  சிறுபிள்ளைகளை ஏந்திக்கொள்ள மடியும், பாலுண்ண ஸ்தனங்களும் கர்த்தருடைய கிருபையினால் உண்டாயிருக்கிறது. யோபு இதை நினைவுகூர்ந்து ""நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே. நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும்,        கர்ப்பத்தி-ருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?'' (யோபு 3:11,12) என்று சொல்லுகிறார். 


தன்னுடைய தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே கர்த்தருடைய சார்பில் விழுந்தேன் என்று தாவீது சொல்லுகிறார். யூதர்கள் தங்களுடைய ஆண்பிள்ளைகளுக்கு எட்டாவது நாளில் விருத்தசேதனம்பண்ணுவது வழக்கம். இந்த வாக்கியம் விருத்தசேதனத்தைக் குறிப்பதாக வேதபண்டிதர்கள் வியாக்கியானம் சொல்லுகிறார்கள். பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணும்போது பெற்றோர் அந்தப் பிள்ளையை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்கிறார்கள். விருத்தசேதனம் பண்ணப்பட்ட பிள்ளைக்கு கர்த்தரே உடன்படிக்கையின் தேவனாகயிருக்கிறார். விருத்தசேதனம் உடன்படிக்கையின் முத்திரையாயிருக்கிறது. விருத்தசேதனம் பெற்ற பிள்ளைகள் கர்த்தரைப்பற்றும் விசுவாசத்தில் உற்சாகமாய் வளர்ச்சி பெறுவார்கள் என்று பெற்றோர் நம்புகிறார்கள்.


கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு அவர் ஆரம்ப முதலே  அநேக நன்மைகளைச் செய்திருக்கிறார். நம்மை நீண்டகாலமாக இடைவெளியில்லாமல் பாதுகாத்து பராமரித்து வந்திருக்கிறார்.  நம்முடைய கர்த்தர் நம்மைப் பட்டினி போடாமல் தாயைப்போல நமக்குப் போஜனம் கொடுத்து வந்திருக்கிறார். தாவீது கர்த்தருடைய நன்மைகளை நினைவுகூர்ந்து, ""நீர் என் தேவனாயிருக்கிறீர்'' என்று சொல்லுகிறார். 


நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைப் போஷித்துப் பராமரிக்கிறார்.  நமக்கு நன்மையான ஈவுகளைக் கொடுக்கிறார். நாம் கர்த்தருடைய நன்மைகளை பெற்றுக்கொள்ளுமாறு நம்மை கவனித்துக் கொண்டேயிருக்கிறார். கர்த்தரே நம்மை கர்ப்பத்திலிருந்து எடுத்தவர். தாவீது  இந்த சத்தியத்தை நினைவுகூர்ந்து, ""நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்'' என்று சொல்லுகிறார். தாவீது இந்த உலகத்தில் பிறந்த நாளிலிருந்து இந்த நாள் வரையிலும் கர்த்தரே தாவீதின் தேவனாகயிருக்கிறார் என்பது  இந்த வாக்கியத்தின் அர்த்தமாகும். 


தாவீது சொல்லுகிற இந்த வாக்கியம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும்  பொருந்துவதாயிருக்கிறது. தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலே மனுஷனாக அவதரித்தார்.  அவருடைய பிறப்பின்போது அவருக்கு தெய்வீக பராமரிப்பு தேவைப்பட்டது. இயேசுகிறிஸ்து கன்னிகையின் வயிற்றில் உற்பத்தியான நேரம் முதல், பிதாவின் பாதுகாப்பும் பராமரிப்பும் அவருக்கு தொடர்ந்து கிடைத்தது.  கிறிஸ்துவுக்கு விசேஷித்த பராமரிப்பு தேவைப்பட்டது. இயேசுகிறிஸ்து பிறக்கும்போது அவருக்கு சத்திரத்தில் இடமில்லை. அவர் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தாலும் தேவனுடைய விசேஷித்த பராமரிப்பு அவருக்கு அங்கும் கிடைத்தது. 


கிறிஸ்துவானவர் சிறுபிள்ளையாகயிருக்கும்போது ஏரோது ராஜாவின் மூலமாய் அவருடைய ஜீவனுக்கு ஆபத்து உண்டாயிற்று. இதனால்  இயேசுகிறிஸ்துவின் பெற்றோர் அவரைத் தூக்கிக்கொண்டு எகிப்து தேசத்திற்கு ஓடிப்போனார்கள். தேவனுடைய விசேஷித்த கிருபையே அந்தக் காலத்தில் இயேசுகிறிஸ்துவைப் பாதுகாத்து பராமரித்து வழிநடத்திற்று. 


கிறிஸ்துவின் பாடுகள் சங் 22 : 11-21


ஆபத்து கிட்டியிருக்கிறது...


என்னைவிட்டுத் தூரமாகாதேயும் ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை  (சங் 22:11). 


இயேசுகிறிஸ்துவின் பாடுகளை தாவீது இங்கு தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறார். தாவீதுக்கும் பல சமயங்களில் பிரச்சனைகளும் ஆபத்துக்களும் உண்டாயிற்று. சத்துருக்கள் அவரை எல்லா திசைகளிலிருந்தும் நெருக்கினார்கள். ஆனாலும் தாவீது இந்த வசனப்பகுதியில் சொல்லுகிற பாடுகளில் பல அவருக்கு உண்டாகவில்லை. இவையெல்லாம்  இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே மனுஷராக அவதரித்தபோது அவருக்கு உண்டான பாடுகளாகும். கிறிஸ்துவானவர் தேவகுமாரனாகயிருந்தாலும், தம்மையே தாழ்த்தி, இந்தப் பூமியிலே மனுஷகுமாரனாக அவதரித்தார்.


இயேசுகிறிஸ்துவுக்கு உபத்திரவங்களும் பாடுகளும் வந்தபோது, அவருடைய சீஷர்களும் அவரை விட்டு ஓடிப்போய்விட்டார்கள். அவருக்கு உதவிசெய்ய ஒரு சகாயரும் இல்லை.  ஆபத்து அவரை கிட்டி வந்தது. இயேசுகிறிஸ்துவுக்காக அவருடைய சீஷர்கள் அவரோடு கூடயிருந்து விழித்திருந்து ஜெபிக்கவில்லை. திராட்சரச ஆலையை ஒருவராகவே மிதிப்பதுபோல, இயேசுகிறிஸ்து எல்லா பாடுகளையும் தம்மீது  ஏற்றுக்கொண்டார். 


பாசான் தேசத்து பலத்த எருதுகள்...


அநேகம் காளைகள் என்னை சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது. பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள் (சங் 22:12,13). 


இயேசுகிறிஸ்துவைச் சுற்றிலும் சத்துருக்கள் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவைப் பரியாசம்பண்ணுகிறார்கள்.                  கிறிஸ்து தனியாகயிருக்கிறார். அவருடைய சத்துருக்களோ திரள்கூட்டமாயிருக்கிறார்கள். அவர்களிடத்தில் உலகப்பிரகாரமான பெலன் இருக்கிறது. தாவீது அவர்களுடைய பெலத்தை பாசான் தேசத்து பலத்த எருதுகளுக்கு  ஒப்பிட்டுச் சொல்லுகிறார். பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பரும், வேதபாரகரும், பரிசேயரும் இயேசுகிறிஸ்துவைத் துன்பப்படுத்தினார்கள். இவர்கள் பாசான் தேசத்து பலத்த எருதுகளைப்போல இயேசுகிறிஸ்துவை வளைந்துகொண்டார்கள்.   அநேகம் காளைகள் இயேசுகிறிஸ்துவை சூழ்ந்துகொள்வதுபோல, இவர்கள் இயேசுவை சூழ்ந்துகொண்டார்கள். 


இயேசுகிறிஸ்துவை சூழ்ந்திருக்கிற சத்துருக்களில் சிலர் நாய்களைப்போன்ற சுபாவமுள்ளவர்கள். அவர்கள் பொல்லாதவர்களின் கூட்டத்தாராயிருக்கிறார்கள்.  நாய்கள் வெறியோடிருப்பதுபோல பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பரும் இயேசுகிறிஸ்துவைக் கொலைபண்ணவேண்டுமென்று கொலைவெறியோடிருந்தார்கள். கிறிஸ்துவுக்கு விரோதமாக இவர்கள் சதிஆலோசனை பண்ணினார்கள். பொல்லாதவர்களின் கூட்டத்தார்  கிறிஸ்துவுக்கு விரோதமாக பொல்லாத சிந்தனையுடையவர்களாய் இருந்தார்கள். 


யூதருடைய ஆலோசனைச்சங்கத்திற்கு  பிரதான ஆசாரியரே தலைவராகயிருக்கிறார்.  ஜனத்தின் மூப்பர்கள் ஆலோசனைச்சங்கத்தில் அங்கத்தினராயிருக்கிறார்கள். அவர்களிடத்தில் நீதியுமில்லை, நியாயமுமில்லை, உண்மையுமில்லை. நீதிக்கு மதிப்புக்கொடுக்காத பிரதான ஆசாரியன், நியாயாசனத்தில் உட்கார்ந்து  இயேசுகிறிஸ்துவை நியாயம் விசாரிக்கிறான். ஆலோசனைச்சங்கத்தார் வழக்கை விசாரணை செய்வதற்குப் பதிலாக, இயேசுகிறிஸ்துவை எவ்வாறு கொலைசெய்வது என்று சதிஆலோசனை பண்ணுகிறார்கள். பொல்லாதவர்களின் கூட்டம் இயேசுகிறிஸ்துவைப் வளைந்துகொண்டது.


 இயேசுகிறிஸ்து ஆலோசனைச்சங்கத்திற்கு முன்பாக நிற்கிறார்.  அவர்களோ பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல, இயேசுவின்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை விழுங்கிவிடுவதுபோல தங்கள் வாயை விரிவாய்த் திறக்கிறார்கள்.  இயேசுகிறிஸ்துவோ அவர்களுக்கு முன்பாக அடிக்கப்படுகிற ஆட்டுக்குட்டியைப்போல தம்முடைய வாயைத் திறவாதிருக்கிறார். 


தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்...


தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்  (சங் 22:14,15). 


இயேசுகிறிஸ்துவை சிலுவையிலே அறைகிறார்கள். கிறிஸ்துவானவர் வேதனையோடு சிலுவையிலே தொங்கிக்கொண்டிருக்கிறார்.  அவருக்கு மரணவேதனை உண்டாயிற்று. இயேசுகிறிஸ்துவிடம் ஒரு பாவமுமில்லை. ஆனாலும் நம்முடைய பாவத்தினிமித்தமாய் அவர் நமக்காகப் பாவமானார்.  பாவநிவாரண பலியாக அவர் கல்வாரி சிலுவையிலே தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். தம்முடைய சொந்த இரத்தத்தை நம்மை மீட்கும் மீட்பின் கிரயமாகச் செலுத்தினார்.  அப்போது அவர் தண்ணீரைப்போல ஊற்றுண்டார். அவருடைய பெலன் ஓட்டைப்போல காய்ந்தது. அவருடைய நாவு மேல் வாயோடே ஒட்டிக்கொண்டது. 


பிதாவானவர் தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை மரணத்தூளிலே போட்டிருக்கிறார். தம்முடைய சரீரத்தை  கல்லறையில் ஒப்புக்கொடுக்க இயேசுகிறிஸ்து ஆயத்தமாயிருக்கிறார். தேவனுடைய தெய்வீக நீதியை நிறைவேற்ற கிறிஸ்துவின் இரத்தமும் அவருடைய மரணமும் தேவைப்படுகிறது.  இது பிதாவின் சித்தம். பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்த நாம் நம்முடைய பாவங்களுக்காக மரிக்கவேண்டும். ஆனால் நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவோ, நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிப்பதற்காக, தம்முடைய சொந்த இரத்தத்தையே மீட்பின் கிரயமாகச் செலுத்தினார். 


ஏதேன் தோட்டத்திலே ஆதாம் பாவம் செய்தார்.  அவருடைய பாவத்திற்கு தண்டனை கிடைத்தது. மண்ணாகயிருந்த அவர்  மண்ணுக்குத் திரும்பவேண்டும் என்பது தேவனுடைய ஆக்கினைத் தீர்ப்பு.  கிறிஸ்துவானவர் தேவகுமாரனாகயிருந்தாலும் பிதாவின் சித்தத்திற்கு தம்மை ஒப்புக்கொடுத்து இந்தப் பூமியிலே மனுஷராக அவதரித்தார்.  எல்லா காரியங்களிலும் பிதாவுக்குக் கீழ்ப்படிந்தார். கிறிஸ்துவானவர் தம்முடைய மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தினார். கல்வாரி சிலுவையிலே நம்மை மீட்பதற்காக  தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார்.  


உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்...


நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போடுகிறார்கள்  (சங் 22:16-18).


இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தை தாவீது தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறார். தாவீது சொல்லுகிற இந்த சம்பவம் யூதருக்கு புதுமையானது. யூதருடைய முறைமையின் பிரகாரம் யாருக்கும் இதுபோல  மரணதண்டனை கொடுப்பதில்லை. ""என் கைகளையும் என் கால்களையும் உருவக்குத்தினார்கள்'' என்று தாவீது சொல்லுகிறார். இது இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தைக் குறிக்கிற வாக்கியம். தாவீதின் காலத்தில் ஒருவருடைய கைகளையும் கால்களையும்  உருவக்குத்தி கொல்லும் வழக்கம் இல்லாதிருந்தபோதிலும், பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினால், தாவீது இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தை தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறார். இயேசுகிறிஸ்துவின் கைகளையும் கால்களையும் சிலுவை மரத்திலே ஆணிகளால் அறைந்தார்கள். 


பாவத்தின் விளைவினால் நிர்வாணமும் அவமானமும் உண்டாயிற்று. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது தாங்கள் நிர்வாணிகளாயிருப்பதை அறிந்துகொண்டார்கள். இது பாவத்தின் விளைவினால் உண்டான சாபம். நம்முடைய பாவங்களுக்காக சிலுவையிலே மரித்த நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வஸ்திரங்களையும், அவரிடமிருந்து உறிந்துகொண்டார்கள். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, அவருடைய வஸ்திரங்களை போர்ச்சேவகர்கள் தங்களுக்குள்ளே பங்கிட்டார்கள்.  அவருடைய உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள். 


கிறிஸ்துவானவர் நமக்கு நீதியின் வஸ்திரத்தைக் கொடுப்பதற்காக, அவர் நம்முடைய நிர்வாணத்தின் அவமானத்தைத் தம்மீது ஏற்றுக்கொண்டார். இயேசுகிறிஸ்துவின் வஸ்திரங்களை போர்ச்சேவகர்கள் தங்களுக்குள்ளே பங்கிட்டு எடுத்துக்கொண்ட பின்பு, அவர் சிலுவையிலே  நிர்வாணமாய்த் தொங்குகிறார். தாவீது இந்த சம்பவத்தை தீர்க்கதரிசனமாகச் சொல்லும்போது ""என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்'' என்று சொல்லுகிறார். இயேசுகிறிஸ்துவின் சரீரத்திலிருந்து வஸ்திரம் கழட்டப்பட்ட பின்பு, அவருடைய சரீரத்தின் எலும்புகளெல்லாம் எல்லோருக்கும் தெரிகிறது.  அவருடைய சரீரம் எலும்பும் தோலுமாக இருக்கிறது. அவருடைய சரீரத்தின் எலும்புகளையெல்லாம் எண்ணும் அளவிற்கு அவருடைய சரீரம் மெல்லியதாயிருக்கிறது.


இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, அவ்வழியாகப் போவோரும் வருவோரும் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் எலும்புகளெல்லாம் எண்ணும்படியாக இருப்பதைப் பார்த்து  அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மெல்லிய சரீரத்தைப் பார்த்து அவர்கள் பரிதாபப்படவேண்டும். ஆனால் அவர்களோ இயேசுகிறிஸ்துவின் சரீரத்தையும், எண்ணக்கூடிய அவருடைய எலும்புகளையும் ஒரு காட்சிப்பொருளாகப் பார்க்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை ஒரு வேடிக்கைப் பொருளாக நினைக்கிறார்கள். 


போர்ச்சேவகர்கள் இயேசுகிறிஸ்துவின் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்கிறார்கள். அவருடைய உடை தையலில்லாமல் ஒரே வஸ்திரமாயிருக்கிறது. அதை சேவகர்கள் தங்களுக்குள்ளே கிழித்துப் பங்கிட்டுக்கொள்ளாமல், அவருடைய உடையின் பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.  தாவீது இந்த சம்பவத்தை தீர்க்கதரிசனமாகச் சொன்னாலும், இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது இந்த சம்பவம் பிரத்தியட்சமாய் நிறைவேறிற்று.  


""போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தைய-ல்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது. அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்'' (யோவா 19:23,24). 


மேசியாவின் பாடுகள்...


    1. தேவனால் கைவிடப்பட்டேன் (சங் 22:1)

    2. எனக்கு உதவி செய்யாமல் தூரமாயிருக்கிறார்

    3. நான்  கதறிச்சொல்லும்  வார்த்தைகளைக் கேளாமல் தூரமாயிருக்கிறார்

    4. நான் ஒரு புழு (சங் 22:6)

    5. நான் மனுஷனல்ல (சங் 22:6) 

    6. மனுஷரால் நிந்திக்கப்பட்டிருக்கிறேன்         

    7. ஜனங்களால் அவமதிக்கப்பட்டு இருக்கிறேன்

    8. என்னைப்  பார்க்கிறவர்களெல்லாரும்  என்னை இகழ்கிறார்கள் (சங் 22:7)

    9. கர்த்தர், இவனை மீட்டுவிடட்டும் என்று பரியாசம் பண்ணுகிறார்கள்             (சங் 22:7-8)

    10. என்னைக் கர்ப்பத்திலிருந்து பாதுகாத்தவர் (சங் 22:9)

    11. என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடைய பேரில் நம்பிக்கையாயிருக்கப் பண்ணினார்

    12. கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன் (சங் 22:10)

    13. நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்

    14. கர்த்தர் என்னை விட்டு தூரமாகவில்லை (சங் 22:11)

    15. ஆபத்து கிட்டியிருக்கிறது

    16. தேவனே, என் சகாயர்

    17. அநேகம்  துஷ்டமனுஷர்கள்  என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்       (சங் 22:12)

    18. பீறிக் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல், என்மேல் மனுஷர் வாயைத் திறக்கிறார்கள் (சங் 22:13)

    19. தண்ணீரைப் போல ஊற்றுண்டேன் (சங் 22:14; யோவான் 19:34)

    20. என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது

    21. என் இருதயம் மெழுகுபோலாகி என் குடல்களின் நடுவே உருகிற்று

    22. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது  (சங் 22:15)

    23. என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது

    24. என்னை மரணத்தூளிலே போடுகிறீர்

    25. புறஜாதியார் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள் (சங் 22:16)

    26. பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது

    27. என் கைகளையும் என் கால்களையும் உருவக்குத்தினார்கள்

    28. என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம். அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்  (சங் 22:17)

    29. என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு கொண்டார்கள் (சங் 22:18)

    30. என் உடையின் பேரில் சீட்டுப் போடுகிறார்கள்


கிறிஸ்துவின் ஜெபம்...


ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும். என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும். என்னைச் சிங்கத்தின் வாயி-ருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்  (சங் 22:19-21). 


இயேசுகிறிஸ்து தம்முடைய வியாகுலத்தில், பிதாவினிடத்தில் ஜெபம்பண்ணுகிறார். ""பிதாவே இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால், இதை நீங்கும்படி செய்யும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவின் ஜெபத்திற்கு முன்னடையாளமாக, தாவீதும் இங்கு கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணுகிறார். தாவீது  கர்த்தரைப்பற்றிச் சொல்லும்போது, ""என் பெலனே'' என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார். தாவீது ஏற்கெனவே கர்த்தரிடத்தில், ""என்னை விட்டு தூரமாகாதேயும்'' (சங் 22:11) என்று விண்ணப்பம்பண்ணினார். இப்போது மறுபடியுமாக, ""கர்த்தாவே நீர் எனக்கு தூரமாகாதேயும்'' (சங் 22:19) என்று விண்ணப்பம்பண்ணுகிறார். 


தாவீது வேதனைகளையும், பாடுகளையும், நெருக்கங்களையும் அனுபவிக்கும்போது, இதுவரையிலும் அவரோடு கூடயிருந்தவர்கள், இப்போது அவரைவிட்டு தூரமாய் விலகிப்போய்விட்டார்கள்.  யார் தன்னைவிட்டு விலகிப்போனாலும், கர்த்தர் தன்னைவிட்டு விலகிப்போய்விடக்கூடாது என்று தாவீது கருத்தாய் விண்ணப்பம்பண்ணுகிறார். ""அவர் மாம்சத்தி-ருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்''  (எபி 5:7). தமக்கு நியமிக்கப்பட்ட பாடுகள் வழியாக கடந்து செல்வதற்கு பிதாவானவர் தாமே தம்மைப் பெலப்படுத்தவேண்டும் என்று இயேசுகிறிஸ்து ஜெபித்தார். தாவீது கர்த்தரிடத்தில், ""என் பெலனே, எனக்கு சகாயம்பண்ண தீவிரித்துக்கொள்ளும்'' என்று விண்ணப்பம்பண்ணுகிறார். கர்த்தர் தாமே தனக்கு உதவிபுரிய விரைந்து வருமாறு தாவீது ஜெபம்பண்ணுகிறார். 


சங்கீதக்காரர் தன்னுடைய ஆத்துமாவைப்பற்றிச் சொல்லும்போது ""அருமையானது'' என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ""என் ஆத்துமாவை பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்'' என்று தாவீது  கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார். தாவீதின் ஆத்துமா அவருக்கு அருமையானதாயிருக்கிறது. தாவீதுக்கு ஒரே ஒரு ஆத்துமா மாத்திரமே இருக்கிறது. அந்த ஆத்துமாவை அவர் காத்துக்கொள்ளவேண்டும். தன்னுடைய ஆத்துமாவைக் காத்துக்கொள்ளாமல் அசட்டையாயிருந்துவிட்டால் அது தாவீதுக்கு மிகப்பெரிய அவமானமாயிருக்கும். 


தாவீது  தன்னை பட்டயத்திற்கு  விலக்கிக் காத்துக்கொள்ளுமாறு விண்ணப்பம்பண்ணுகிறார். இந்தப் பட்டயம் மனுஷருடைய பட்டயமல்ல. இது கர்த்தருடைய பட்டயம். பாவத்திற்கு விரோதமாக கர்த்தருடைய பட்டயம் கொழுந்துவிட்டு எரியும். தேவனுடைய தெய்வீக கோபாக்கினைக்கு அடையாளமாக  இந்தப் பட்டயம் சொல்லப்படுகிறது. தன்னுடைய ஆத்துமாவை கர்த்தர் தாமே, தம்முடைய கோபாக்கினைக்கு தப்புவித்து காத்தருளுமாறு தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். தாவீதுக்கு தேவனுடைய அன்பு தேவைப்படுகிறது. அவர்மீது கோபப்படுவதற்கு ஏராளமான சத்துருக்கள் இருக்கிறார்கள். கர்த்தருடைய கோபாக்கினை தனக்கு வேண்டாம் என்று தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். 


தாவீது தன்னுடைய ஜீவனை இழந்தாலும், தேவனுடைய அன்பை இழக்கக்கூடாது என்று தீர்மானமாயிருக்கிறார். ஆகையினால் தன்னுடைய ஆத்துமாவை நாய்களின் துஷ்டத்தனத்திற்கு தப்புவிக்குமாறு  விண்ணப்பம்பண்ணுகிறார். ""அருமையானது'' என்னும் வார்த்தை ஆத்துமாவைக் குறிக்கிறது. ""நாய்களின் துஷ்டத்தனம்'' என்பது பிசாசின் கிரியைகளைக் குறிக்கிறது. பழைய பாம்பாகிய சாத்தானை தாவீது  ""நாய்'' என்று சொல்லுகிறார். சாத்தான் பழைய சத்துரு. 


தாவீதுக்கு ஏராளமான ஆபத்துக்கள் உண்டாயிருக்கிறது. பயங்கரமான ஆபத்துக்களிலிருந்து  கர்த்தர் தாமே தன்னைப் பாதுகாத்தருளுமாறு தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். ""நான் காண்டாமிருகத்தின் கொம்புகளிலிருக்கும்போது எனக்கு  செவிகொடுத்தருளினீர்'' என்று சொல்லுகிறார். காண்டாமிருகத்தின் கொம்புகளில் சிக்கிக்கொண்டால் அது நம்மைப் பீறிப்போடும். நம்முடைய சுயவலிமையினால் நம்மால் காண்டாமிருகத்திற்கு எதிர்த்து நிற்கமுடியாது.  கர்த்தருடைய கிருபையும் அநுக்கிரகமும் நமக்குத் தேவை. கர்த்தர் தாமே தம்முடைய சர்வவல்லமையினால் நம்மை காண்டாமிருகத்தின் கொம்புகளிலிருந்து தப்பிக்கச் செய்யவேண்டும். 


கர்த்தர் தாமே தன்னை சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சிக்குமாறு தாவீது விண்ணப்பம்பண்ணுகிறார். சிங்கத்தின் வாயில் நாம் சிக்கிக்கொண்டால் அது நம்மைப் பீறிப்போடும்.  நம்முடைய சரீரம் அழிந்துபோகும். இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் ஏறெடுத்த ஜெபத்திற்கு பிதாவானவர் உத்தரவு கொடுக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சரீரம் அழிவைக்காணாதிருக்குமாறு செய்கிறார். கிறிஸ்துவானவர் கல்வாரி சிலுவையிலே  மரித்தார். கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டார். மூன்றாம் நாளிலே பிதாவானவர் கிறிஸ்துவின் சரீரத்தை உயிரோடு எழும்பச் செய்தார். 


இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்துக்கொண்டிருக்கும்போது  பிதாவானவர் அவருடைய ஜீவனைக் காப்பாற்றவில்லை. இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிப்பது பிதாவின் சித்தமாயிற்று. கிறிஸ்துவானவர் சிலுவையின் பாடுகளை அனுபவிப்பதற்கு பிதாவானவர் அனுமதி கொடுத்தார்.  இயேசுகிறிஸ்து சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தியதினால் பிதாவானவர் அவரை உயர்த்தினார். மூன்றாம் நாளிலே அவரை உயிரோடு எழுப்பினார். இதுவே பிதாவானவர் இயேசுகிறிஸ்துவுக்குக் காண்பித்த மிகப்பெரிய கிருபை.  இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் அவரை நம்புகிற நாமும் உயிரோடு எழுந்திருப்போம் என்னும் நம்பிக்கை நமக்கு உண்டாயிருக்கிறது. இதுவே விசுவாசிகளின் சிலாக்கியம். 


கிறிஸ்துவின் ஜெயம் சங் 22 : 22-31


சபை நடுவில் உம்மைத் துதிப்பேன்...


உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதிப்பேன்  (சங் 22:22).  


இந்த சங்கீதத்தின் ஆரம்பத்தில், தாவீது    ""என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்'' (சங் 22:1) என்று முறையிடுகிறார்.  இந்த சங்கீதத்தின் முடிவிலோ தாவீது கர்த்தரைத் துதித்துப் பாடுகிறார். ""உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து சபை நடுவில்  உம்மைத் துதிப்பேன்'' என்று சொல்லுகிறார். தாவீதின் இந்த வார்த்தைகள் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளாக தீர்க்கதரிசனமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது.  இயேசுகிறிஸ்துவும் பாடுகளை அனுபவித்தார். சிலுவையிலே வெற்றி சிறந்தார்.  


எபிரெயருக்கு நிருபம் எழுதின ஆசரியர் இந்தச் சத்தியத்தை இவ்வாறு சொல்லுகிறார். ""எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்;  நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்-யிருக்கிறார்'' (எபி 2:11-13).


இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவித்தார். ஆனாலும் அவர் சிலுவையிலே வெற்றி சிறந்தார். தம்முடைய பாடுகளினிமித்தமாய் இயேசுகிறிஸ்து ஒரு போதும் வருத்தப்படவில்லை.  அவர் பிதாவின் சித்தத்திற்கு தம்மைப் பூரணமாய் ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்து சிலுவையிலே மரணபரியந்தம் தம்மைக் கீழ்ப்படுத்தினார். இதனால் பிதாவானவர் கிறிஸ்துவை உயர்த்தினார்.  இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவித்து வெற்றி பெற்றதினால், அவருடைய இருதயம் சந்தோஷத்தினால் பூரித்திருக்கிறது.  


கிறிஸ்துவானவருடைய சந்தோஷத்திற்கு சில காரணங்கள் உண்டு.  அவையாவன : 1. இயேசுகிறிஸ்துவுக்கு இந்தப் பூமியிலே ஒரு சபை உண்டாயிருக்கிறது. 2. கர்த்தருடைய சபையில் அவருக்குப் பயப்படுகிறவர்கள் அவரை துதிக்கிறார்கள். அவரை மகிமைப்படுத்துகிறார்கள். 3.சாந்தகுணமுள்ள  ஆத்துமாக்களெல்லாம் கர்த்தருக்குள் திருப்தியடைந்திருக்கும். அவை கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கும்.4. இயேசுகிறிஸ்துவின் சபை மனுஷர் மத்தியிலே ஸ்தாபிக்கப்படும். இதன் எல்லைகள் பூமியின் எல்லா பக்கங்களிலும் பரவி விரிந்திருக்கும். 5. கிறிஸ்துவின் சபை தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும். 


இயேசுகிறிஸ்து சிலுவையிலே பாடுகளை அனுபவித்ததினால், அவருக்கு இந்தப் பூமியிலே ஒரு சபை உண்டாயிருக்கும்.  கிறிஸ்துவானவர் தம்முடைய சந்ததியைக் கண்டு நீடித்த நாளாயிருப்பார் என்று ஏசாயா தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்.  ""கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி: அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணப-யாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்'' (ஏசா 53:10). 


தாவீது கர்த்தருடைய நாமத்தை தன்னுடைய சகோதரருக்கு அறிவிப்பார்.  அவர் சபை நடுவிலே கர்த்தரைத் துதிப்பார். இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் மனுஷர் மத்தியிலே தெளிவாகப் பிரசங்கிக்கப்படுகிறது.  கிறிஸ்துவின் சுவிசேஷம் மாசில்லாத சுத்த சுவிசேஷம். கிறிஸ்துவின் சுவிசேஷம் தேவனுடைய நாமத்தை அறிவிக்கிறது. கிறிஸ்துவின் சுவிசேஷம் ஜனங்களை அவரிடத்தில் அழைக்கிறது.  இயேசுகிறிஸ்துவின் மூலமாய் ஜனங்களுக்கு தேவனைக் கண்டடையும் சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. 


இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்று அவரிடத்தில் வருகிறவர்கள் அவரோடு நெருங்கிய ஐக்கியத்திலிருப்பார்கள்.  கிறிஸ்துவானவர் தம்மைப் பின்பற்றுகிறவர்களை ""சகோதரரே'' என்று அழைக்கிறார். நாம் கிறிஸ்துவுக்கு சிநேகிதராகவும் சகோதரராகவும் இருப்பது  நமக்குக் கிடைத்திருக்கிற பெரிய சிலாக்கியம். தேவனுடைய குடும்பத்தில் அவர் நம்மையும் அங்கீகரித்திருக்கிறார். இதுவரையிலும் யூதர்கள் மாத்திரமே கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாயிருந்தார்கள். அவர்கள் மாத்திரமே தேவனுக்கு உடன் சுதந்திரராயிருந்தார்கள். 


இயேசுகிறிஸ்துவின் மூலமாய் புறஜாதியாரும் தேவனுடைய சமுகத்தில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டுக்காலத்தில்  யூதர்களுக்கு மாத்திரம் கிடைத்த ஆசீர்வாதம், புதிய ஏற்பாட்டுக் காலத்தில், இயேசுகிறிஸ்துவின் மூலமாய் எல்லா ஜாதியாருக்கும் பொதுவானதாயிற்று. இயேசுகிறிஸ்து உலகஇரட்சகர். கிறிஸ்துவின் சரீரத்தில் யூதரும் புறஜாதியாரும் அங்கம் வகிக்கிறார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய பிள்ளைகளை சகோதரர் என்று சொல்ல வெட்கப்படுவதில்லை.  


கிறிஸ்துவானவர் தம்முடைய சகோதரர் எல்லோரையும் ஒரே பரிசுத்த சபையாக  கூட்டிச் சேர்க்கிறார். இந்த சபையை வேதபண்டிதர்கள் ""உலக சபை'' என்றும், ""பொதுவான சபை'' என்றும் சொல்லுகிறார்கள்.  இந்தப் பூமியிலே சபை பிரிவுகள் இருக்கலாம். ஏராளமான ஊழிய ஸ்தாபனங்கள் இருக்கலாம். சபைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கலாம். இயேசுகிறிஸ்துவே எல்லா சபைகளுக்கும் தலையாயிருக்கிறார்.  அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் எல்லோரையும் உலக சபையாக கூட்டிச் சேர்க்கிறார்.


இயேசுகிறிஸ்து யூதஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும்  மரித்தார் (யோவா 11:52). காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமித்தின்படி, பரலோகத்திலிருக்கிறவைகளும், பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய  சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படும் (எபே 1:10). நாம் இந்தப் பூமியிலே வெவ்வேறு சபைகளில் அங்கத்தினர்களாக இருந்தாலும், இயேசுகிறிஸ்துவின் மகாபெரிய பிரதான சபையிலும் அங்கத்தினர்களாக இருக்கிறோம்.  ஸ்தல சபைகளிலிருக்கிற நாம் இயேசுகிறிஸ்துவின் உலக சபையிலும் அங்கத்தினராயிருக்கிறோம். 


கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோரும் யாக்கோபின் சந்ததியாராயும், இஸ்ரவேல் ஜனமாயும் இருக்கிறார்கள். இவர்கள் யூதர்களாகவும் இருக்கலாம். புறஜாதியாராகவும் இருக்கலாம்.  இவர்களெல்லோருக்கும் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தில் பங்கு உண்டு. விசுவாசமார்க்கத்தார் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளாயிருக்கிறார்கள் (கலா 3:11). இயேசுகிறிஸ்துவின் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும் சமாதானமும் இரக்கமும் உண்டாயிருக்கும் (கலா 6:16). பவுல் சுவிசேஷ சபையை, ""தேவனுடைய இஸ்ரவேலர்'' என்று   சொல்லுகிறார்.  


கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள்...


கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவே-ன் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும்  அவர்பேரில் பயபக்தியாயிருங்கள். உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன் (சங் 22:23-25). 


கர்த்தருடைய சபையார் கர்த்தரை அதிகமாய்க் கனப்படுத்தவேண்டும். அவரை மகிமைப்படுத்தவேண்டும். ""மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்'' என்று தாவீது சொல்லுகிறார். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் அவருடைய சபையிலே கூடிவருகிறார்கள். கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்திலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள். சபையிலே கூடிவந்திருக்கிற பரிசுத்தவான்களுக்கு முன்பாக தாவீது தன்னுடைய பொருத்தனைகளை செலுத்துவாக வாக்குப்பண்ணுகிறார். 


கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சபையிலே அவரைத் துதிக்கவேண்டும். விசுவாசிகளெல்லோரும் யாக்கோபின் சந்ததியாராயும், இஸ்ரவேல் வம்சத்தாராயும் இருக்கிறார்கள். இவர்களெல்லாரும் கர்த்தரைக் கனம்பண்ணவேண்டும். கர்த்தர் பேரில் பயபக்தியாயிருக்கவேண்டும். 


""கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.  அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக'' (சங் 118:1-4). 


""இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். லேவி குடும்பத்தாரே,கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு          சீயோனி-ருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா'' (சங் 135:19-21). 


கர்த்தர் உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அற்பமாய் எண்ணமாட்டார். அவனை அருவருக்கவும் மாட்டார். தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்கவும் மாட்டார். தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில், அவனுடைய வேண்டுதலைக் கேட்டருளி, அவனுக்குக் கிருபையாய் உத்தரவு கொடுப்பார். கிறிஸ்துவானவரே  நம்முடைய ஆத்தும மீட்பராயிருக்கிறார். மீட்பரிலும், அவருடைய ஊழியத்திலும் தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது. நாம் கர்த்தருடைய மீட்பின் கிரியையை நினைவுகூர்ந்து அவரை நன்றியோடு துதிக்கவேண்டும். மகா சபையிலே நாம் கர்த்தரைத் துதிக்கவேண்டும். 


சாந்தகுணமுள்ளவர்கள்...


சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத்திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும் (சங் 22:26). 


சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் புசித்து திருப்தியடைவார்கள். அவர்களுடைய ஆத்துமாக்கள் தாழ்மையும் கிருபையும் நிரம்பியதாயிருக்கும். அவர்கள் கர்த்தருக்குள் திருப்தியடைவார்கள்.  சந்தோஷமாயிருப்பார்கள். கர்த்தருடைய சமுகத்தில் அதிகமாய் ஜெபிக்கிறவர்கள், அவரை அதிகமாய்த் துதிக்கவும் செய்வார்கள். கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள். இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நாம் கர்த்தரைத் தேடும்போது, நிச்சயமாகவே அவரைக் கண்டடைவோம். இந்த நம்பிக்கையோடு கர்த்தரைத் தேடுகிறவர்களெல்லோரும் அவரைத் துதிக்கவேண்டும். 


கர்த்தரிடத்தில் அற்பணிக்கப்பட்டுள்ள ஆத்துமாக்கள் அவரில் சந்தோஷமாயிருக்கும். கர்த்தர் நமக்குக் கொடுக்கிற சந்தோஷம் நித்திய சந்தோஷமாயிருக்கும். நம்முடைய ஆத்துமா கர்த்தருடைய சமுகத்தில் எப்போதும் களிகூரும்.  கர்த்தரைத் துதிக்கிறவர்களின் இருதயம் என்றென்றைக்கும் வாழும். 


பூமியின் எல்லைகள்...


பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும் (சங் 22:27). 


இயேசுகிறிஸ்துவின் சபை இந்தப்பூமியிலே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. மனுஷர் மத்தியிலே  தேவனுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் இந்தப் பூமியின் எல்லா திசைகளிலும் பரவி விரிந்திருக்கும். தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகளாக, பூமியின் எல்லைகளே, எல்லைகளாக நியமிக்கப்பட்டிருக்கிறது. நீண்டகாலமாக யூதர்கள் மாத்திரமே தேவனுடைய ஜனமாயிருந்தார்கள். அவர்கள் மாத்திரமே கர்த்தரைத் தேடி அவரைத் துதித்தார்கள். இப்போதோ தேவனுடைய ஜனங்கள்  உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள். 


கர்த்தருடைய சபை எல்லா தேசங்களிலும், எல்லா ஜாதியார் மத்தியிலும், எல்லா பாஷைக்காரர் மத்தியிலும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.  இவர்களெல்லோருமே கர்த்தருடைய ஜனங்கள். இவர்கள் கர்த்தரைத் தேடுகிறார்கள். கர்த்தரைத் துதிக்கிறார்கள். இதுவரையிலும் யூதர்கள் மாத்திரமே தேவனுடைய ஜனமாகயிருந்த நிலமையில் மாற்றமுண்டாயிற்று. இப்போது புறஜாதியாரும் தேவனுடைய ஜனமாக அவருடைய சபையிலே சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். யூதரையும் புறஜாதியாரையும் இரண்டாகப் பிரித்த  நடுச்சுவர் தகர்க்கப்பட்டுவிட்டது. தேவனுடைய பரிசுத்த சமுகத்தில் இப்போது யூதரைப்போலவே, புறஜாதியாரும் பிரவேசிக்கலாம். 


உலகமெங்குமுள்ள எல்லா ஜாதியாரும் கர்த்தரிடத்தில் திரும்புவார்கள் என்றும்,  அவர்கள் கர்த்தரைத் துதிப்பார்கள் என்றும் தாவீது தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறார். ""பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்''. நம்முடைய இரட்சிப்பின் அனுபவத்தில் நாம் முதலாவதாக கர்த்தரிடத்தில் திரும்பவேண்டும்.  இதுவே மெய்யான மனமாற்றத்திற்கு ஆரம்பம். 


நாம் இரட்சிக்கப்படுவதற்கு, முதலாவதாக நாம் நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.  அதன்பின்பு கர்த்தரிடத்தில் திரும்பவேண்டும். கெட்ட குமாரன் முதலாவது தன்னுடைய நிலமையை ஆராய்ந்து பார்த்தான்.  அவனுக்குப் புத்தி தெளிந்தது. அதன்பின்புதான் அவன் தன்னுடைய தகப்பனிடத்திற்கு வந்தான். நாம் இரட்சிக்கப்படவேண்டுமென்றால் முதலாவதாக நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்க்கவேண்டும். நம்முடைய புத்திதெளிந்து நாம் கர்த்தரிடத்தில் திரும்பவேண்டும்.  


தம்மிடத்தில் வருகிறவர்களை  கர்த்தர் புறம்பே தள்ளிவிடமாட்டார்.  நாம் கர்த்தரிடத்தில் மனந்திரும்பி வரும்போது, அவர் நம்மை தம்முடைய சமுகத்தில் ஏற்றுக்கொள்வார். நம்மோடு ஐக்கியமாயிருப்பார். கர்த்தருடைய சபையிலே நம்மைச் சேர்த்துக்கொள்வார். சபையிலே  மற்ற பரிசுத்தவான்களோடு சேர்ந்து நாமும் கர்த்தரைத் துதிக்கலாம்.


""சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்''    (மல் 1:11). ""நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்'' (ஏசா 66:22,23). 


ராஜ்யம் கர்த்தருடையது...


ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர் (சங் 22:28). 


தேவனுடைய ராஜ்யம் கர்த்தருடையது. கர்த்தரே ஜாதிகளை ஆளுகிறவர்.  தேவனுடைய பராமரிப்பும், ஆளுகையும் ஜாதிகளை நீதியாய் ஆளுகை செய்யும். கர்த்தருடைய ராஜ்யம் கிருபையின் ராஜ்யமாகும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே தேவனுக்கும் மனுஷருக்கும் நடுவே மத்தியஸ்தராயிருக்கிறார். பிதாவாகிய தேவன், தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஜாதிகளை ஆளுகை செய்கிற அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்.


கிறிஸ்துவானவரே சபைக்குத் தலையாகயிருக்கிறார். சபையிலே  ஐசுவரியவான்களும் தரித்திரரும் இருப்பார்கள். எஜமான்களும் அடிமைகளும் இருப்பார்கள். சமுதாயத்திலே உயர்ந்த அந்தஸ்துள்ளவர்களும் இருப்பார்கள். தாழ்ந்த அந்தஸ்துள்ளவர்களும் இருப்பார்கள். இவர்களெல்லோருமே கர்த்தருடைய சபையிலே  இயேசுகிறிஸ்துவில் ஐக்கியமாயிருக்கிறார்கள். சபையிலுள்ள எல்லா பரிசுத்தவான்களுக்கும் கர்த்தரே தலைவராயிருக்கிறார். 


பூமியின் செல்வவான்கள்...


பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள்; ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே  (சங் 22:29).


தரித்திரருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படுகிறது. பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள். புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் கர்த்தருக்கு முன்பாக வணங்குவார்கள். ""அவர் சிறியவனைப் புழுதியி-ருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையி-ருந்து உயர்த்துகிறார்'' (சங் 113:7). புழுதியில் இறங்குகிறவர்கள் மரிக்கும் தருவாயிலிருக்கிறார்கள். அவர்களுடைய சரீரமும் ஆத்துமாவும் பிரியும் காலம் மிகவும் சமீபமாயிற்று. அவர்களால் தங்கள் ஆத்துமாவை அழியாதபடி காத்துக்கொள்ள முடியவில்லை.  


தாவீது இதைப்பற்றிச் சொல்லும்போது, ""ஒருவனும்  தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே'' என்று சொல்லுகிறார்.  நம்முடைய சரீரத்திலிருந்து ஆவி பிரிந்துபோவதே நம்முடைய சரீரமரணம். அதன்பின்பு நம்முடைய சரீரத்தை புழுதியில் இறக்குவார்கள்.  நாம் புழுதியில் இறங்குவதற்கு முன்பாக, நம்முடைய சரீரம் மரித்துப்போவதற்கு முன்பாக, நாம் கர்த்தரைத் துதிக்கவேண்டும். அவருக்கு முன்பாக வணங்கவேண்டும்.  


""சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள். கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்'' (சங் 72:11-13). கர்த்தரை ராஜாக்களும் பணிந்துகொள்வார்கள். எளியவர்களும் பணிந்துகொள்வார்கள். 


நம்முடைய ஆத்துமா அழியாதபடி அதை நம்மால் காத்துக்கொள்ள முடியாது. நம்மால் முடியாத காரியத்தை  கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். கர்த்தருடைய சமுகத்தில் விசுவாசத்தோடும் கீழ்ப்படிதலோடும் வந்து, நம்முடைய ஆத்துமாவை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுக்கவேண்டும்.  அவரே ஆத்துமா இரட்சகர். அவரால் மாத்திரமே நம்முடைய ஆத்துமாவை இரட்சிக்க முடியும். நம்முடைய ஆத்துமாவுக்கு அவரால் மாத்திரமே நித்திய ஜீவனைக் கொடுக்க முடியும். 


ஒரு சந்ததி அவரை சேவிக்கும்...


ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும். அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள் (சங் 22:30,31). 


கிறிஸ்துவின் சபை மனுஷர் மத்தியிலே தேவனுடைய ராஜ்யமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் சபையானது எல்லா காலங்களின் வழியாகவும் கடந்து வரும். சபை அழிந்துபோகாது. ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்.  கர்த்தருக்கு மீதமானவர்கள் எல்லா ஜாதியார் மத்தியிலும், எல்லா காலங்களிலும் கர்த்தரால் பாதுகாக்கப்படுவார்கள். அந்த சந்ததி தலைமுறை தலைமுறையாக ஆண்டவருடைய சந்ததி என்று அழைக்கப்படும்.  


கர்த்தர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். நம்முடைய முற்பிதாக்களுக்கு கர்த்தர் எப்படி கிருபை காண்பித்தாரோ, அப்படியே நமக்கும் காண்பிப்பார். அப்படியே நம்முடைய சந்ததியாருக்கும் காண்பிப்பார்.  


ஆண்டவருடைய சந்ததி என்று அழைக்கப்படுகிறவர்கள் அவர்களுடைய காலத்தில் வருவார்கள். கர்த்தர் தங்கள் முன்னோருக்குக் காண்பித்த  கிருபைகளைப்பற்றி அவர்களுக்கு தெரியும். கர்த்தர் தங்களுக்கும் கிருபை காண்பிப்பார் என்று அவர்கள் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருப்பார்கள்.  ""கர்த்தரே இவைகளைச் செய்தார்'' என்று இனிமேல் பிறக்கப்போகிற ஜனங்களுக்கு கர்த்தருடைய நீதியை அறிவிப்பார்கள். இவர்கள் மூலமாய் ள்கிறிஸ்துவின் சுவிசேஷம் ஒவ்வொரு சந்ததியாக கடந்துவரும்.  இவர்கள் தங்கள் காலத்திலுள்ள ஆத்துமாக்களின் நன்மைகளுக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் ஊழியம் செய்வார்கள். 


நாம் இந்த சங்கீதத்தைப் பாடும்போது இயேசுகிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துகிறோம். அவருக்குள் மகிழ்ந்து களிகூருகிறோம்.  கர்த்தருடைய பரிசுத்தவான்கள் இயேசுகிறிஸ்துவைத் துதிப்பதையும், கனம்பண்ணுவதையும் பார்த்து நமக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும்.  பூமியிலும் வானத்திலும் கர்த்தரைத் துதிக்கிற பரிசுத்தவான்களின் கூட்டம் இருக்கும். கர்த்தர் நம்மையும் அந்தக் கூட்டத்தில் ஒருவராகச் சேர்த்திருப்பது  நமக்குக் கிடைத்திருக்கிற பெரிய சிலாக்கியம்.  


ஆயிர வருஷ அரசாட்சியின் ஆசீர்வாதங்கள்...


    1. உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவே உம்மைத் துதிப்பேன்  (சங் 22:22; எபி 2:12)

    2. புறஜாதியார் கர்த்தரைத் துதிப்பார்கள், அவரைத் துதியுங்கள்            (சங் 22:23)          

    3. இஸ்ரவேலின் வம்சத்தார், அவர்பேரில் பயபக்தியாயிருப்பார்கள்

    4. உபத்திரவப்பட்டவனை அற்பமென்று அருவருக்கமாட்டார்கள்            (சங் 22:24) 

    5. உபத்திரவப்பட்டவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்

    6. மகா  சபையிலே மேசியா கர்த்தரைத் துதிப்பார் (சங் 22:25;            சக 14:16-21; வெளி 11:15)

    7. அவருக்குப்  பயப்படுகிறவர்களுக்கு  மேசியா தம் பொருத்தனைகளைச் செலுத்துவார்

    8. சாந்த குணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்                (சங் 22:26; சங் 37:11; ஏசா 11:4; மத் 5:5)

    9. கர்த்தரைத் தேடுகிறவர்கள் எல்லோரும், எங்கும் அவரைத் துதிப்பார்கள் (சங் 22:26; மல் 1:11)

    10. உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும் (சங் 22:26; ஏசா 65:20-25; மத் 25:46; வெளி 21:3-7)

    11. பூமியின் எல்லைகளெல்லாம் நினைவு கூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்  (சங் 22:27; யோவே 2:28-31)             

    12. ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமூகத்தில் தொழுது கொள்ளும் (சங் 22:27; ஏசா 2:2-4; சக 14:16-21)

    13. ராஜ்யம் கர்த்தருடையது.அவர் ஜாதிகளை ஆளுகிறவர் (சங் 22:28)  

    14. உலகத்தின்  ராஜ்யங்களை, சதா  காலங்களிலும் கிறிஸ்து ராஜ்யபாரம் பண்ணுவார் (ஏசா 9:6-7; தானி 7:13-14)  

    15. பூமியின் செல்வவான்கள் யாவரும் தேவனைப் பணிந்து கொள்வார்கள்       (சங் 22:29)

    16. சத்துருக்கள்  யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள்            (சங் 22:29; சங் 72:9; ஏசா 2:12-21; ஏசா 11:4-5)

    17. தேவனே எல்லோருக்கும் நித்திய ஜீவனின் ஆதாரமாயிருப்பார்

    18. ஒரு சந்ததி மேசியாவைச் சேவிக்கும், தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி எனப்படும் (சங் 22:30;              ஏசா 59:20-21)

    19. மேசியாவின் சந்ததி நித்திய சந்ததியாக இருக்கும் (சங் 22:26,30; ஏசா 59:20-21; தானி 2:44-45; தானி 7:13-14) 

  20. ""அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்'' - (சங் 22:31; ஆதி 8:22; ஆதி 9:12; ஏசா 9:6-7)  


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.