கல்மழை Heavy hail




கல்மழை Heavy hail
யாத் 9:13-21

யாத் 9:13. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

யாத் 9:14. விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப்போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர்மேலும் உன் ஜனங்கள்மேலும் அனுப்புவேன்.

யாத் 9:15. நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்.

யாத் 9:16. என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.

யாத் 9:17. நீ என் ஜனங்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா?

யாத் 9:18. எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப்பண்ணுவேன்.

யாத் 9:19. இப்பொழுதே ஆள் அனுப்பி, உன் மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியி-ருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகத்தக்கதாய் அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல் என்றார்.

யாத் 9:20. பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப்பண்ணினான்.

யாத் 9:21. எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற்போனானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.

பார்வோன் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் எதிர்த்து நிற்கிறான். இதனால் கர்த்தருடைய கோபம் அவன்மீது வருகிறது. கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறார். அவன் இஸ்ரவேல் புத்திரரை அனுப்ப மறுக்கிறான். மோசேயும் ஆரோனும் பார்வோனுக்கு கர்த்தருடைய வார்த்தைகளை சொல்லுகிறார்கள். ஆனால் பார்வோனோ அவர்களுக்கு செவிகொடுக்கவில்லை. பார்வோன் கர்த்தருக்கு கீழ்ப்படியாவிட்டாலும், மோசேயும் ஆரோனும் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, கர்த்தர் தங்களுக்கு சொன்னதையெல்லாம் அவனுக்கு சொல்லுகிறார்கள்.

கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவர். பாவிகள் இரட்சிக்கப்படவேண்டும் என்பது கர்த்தருடைய விருப்பம். பாவிகளும் துன்மார்க்கரும் தேவனுடைய கிருபைகளை பெற்றுக்கொண்டு, தங்கள் பாவங்களுக்கும் அக்கிரமங்களும் மனந்திரும்பவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆனால் பாவிகளில் அநேகர் கர்த்தருடைய கிருபைகளையும் இரக்கங்களையும் அசட்டைபண்ணி, தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்ப மறுக்கிறார்கள்.  

பாவிகள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பாமல் போனாலும் கர்த்தர் அவர்களை உடனே தண்டித்து சங்காரம்பண்ணிவிடுவதில்லை. அவர்கள் எப்படியாவது மனந்திரும்புவார்கள் என்று கர்த்தர் நீடியபொறுமையோடு காத்திருக்கிறார். பாவிகளை அழித்துப்போடவேண்டும் என்பது கர்த்தருடைய விருப்பமல்ல. பாவிகள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பி ஜீவனைப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கர்த்தருடைய விருப்பம். 

கர்த்தர் இதுவரையிலும் ஆறுதடவை மோசேயை பார்வோனுக்கு முன்பாக அனுப்பினார். மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் கர்த்தருடைய வார்த்தையை இதுவரையிலும் ஆறுதடவை சொல்லியிருக்கிறார்கள். பார்வோனோ அந்த ஆறுதடவையும் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனான். கர்த்தரோ தமது கிருபையினால், ஏழாவது தடவையாக, மோசேயை பார்வோனிடத்திற்கு அனுப்புகிறார். 

கர்த்தர் மோசேயை நோக்கி: ""நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு'' (யாத் 9:13) என்று சொல்லச் சொல்லுகிறார். 

மோசே கர்த்தருடைய எச்சரிப்பின் வார்த்தைகளை பார்வோனிடத்தில் சொல்லுகிறார். பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை அனுப்பாவிட்டால் அவனுக்கு எப்படிப்பட்ட தண்டனைகள் வரும் என்று கர்த்தர் மோசே மூலமாக தெளிவாகச் சொல்லுகிறார். 

""விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப்போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர்மேலும் உன் ஜனங்கள்மேலும் அனுப்புவேன். நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்'' (யாத் 9:14,15) என்று கர்த்தர் பார்வோனுக்கு, மோசே மூலமாக தம்முடைய எச்சரிப்பின் வார்த்தைகளை சொல்லுகிறார். 

பார்வோன் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லையென்றால், அவன் பூமியிலிராமல் நாசமாய்ப்போவான். கர்த்தர் பார்வோனையும் அவனுடைய ஜனங்களையும் கொள்ளை நோயால் வாதிப்பார். கர்த்தர் இப்போது பார்வோனுக்கு விரோதமாக கோபமான வார்த்தைகளை சொல்லுகிறார். 

கர்த்தர் பார்வோனுக்கு, ""என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன். நீ என் ஜனங்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா?'' (யாத் 9:16,17) என்று சொல்லச் சொல்லுகிறார். 

பவுல் இந்த வாக்கியத்தை இவ்வாறு மேற்கோளாகக் கூறுகிறார். ""மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது'' (ரோமர் 9:14-21) யாத் 9:16 ஆவது வசனம் இங்கு மேற்கோளாகக் கூறப்பட்டிருக்கிறது. துன்மார்க்கமான பார்வோன் இராஜா தேவனுக்கு எதிர்த்து நிற்பதைக் குறித்து நாம் இந்த வேதவசனப்பகுதியில் வாசிக்கிறோம். தேவன் பார்வோனிடத்தில் பலகிரியைகளைச் செய்திருக்கிறார். 

பார்வோன் அந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, தன்னுடைய துர்க்கிரியைகளுக்காக மனம்வருந்தி, தேவனிடத்தில் தன்னை ஒப்புக்கொடுத்து, தன்னுடைய தண்டனையிலிருந்து தப்பித்திருக்கலாம். ஆனால் அவனோ தன்னுடைய இருதயத்தில் கடினம் உள்ளவனாக இருந்து, தேவனுக்கு எதிராகத் தொடர்ந்து கலகம் பண்ணுகிறான். பார்வோனின் பாவத்திற்காகவும், அவனுடைய கீழ்ப்படியாமைக்காகவும், அவனுடைய கடின இருதயத்திற்காகவும் தேவன் தமது நீதியான நியாயத்தின் பிரகாரம் அவனைத் தண்டிக்கிறார்.

சுவிசேஷம் எல்லோருக்கும் பொதுவாக அறிவிக்கப்படுகிறது. அதை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாமல் போவதும் தனி மனுஷருடைய சொந்தத் தீர்மானமாகும். (மாற்கு 16:16; யோவான் 3:16; 2கொரி 2:15-16). தேவன் பார்வோனைக் கட்டாயப்படுத்தவில்லை. சுயாதீனமாகத் தெரிந்தெடுக்கும் உரிமையைத் தேவன் பார்வோனுக்குக் கொடுத்திருக்கிறார். தேவனுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக அவருக்கு எதிர்த்து நிற்க வேண்டுமென்று பார்வோன் தீர்மானம் பண்ணி, அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறான். இஸ்ரவேல் ஜனத்தாரைப் பார்வோன் விடுதலை பண்ணி அனுப்பிவிட மறுத்துவிடுகிறான். இதனால் அவன் இஸ்ரவேலரை அனுப்பும் வரையிலும் தேவன் அவன்மேலும், அவன் தேசத்தார்மேலும் தமது நியாயத்தீர்ப்புக்களைத் தொடர்ந்து அனுப்புகிறார் (யாத் 9:17).

கர்த்தர் இந்த முறை அனுப்பும் வாதை பார்வோனுடைய சரீரத்தின்மீது மாத்திரமல்ல, அவனுடைய இருதயத்தின்மீதும் வரும். கர்த்தர் பார்வோனை கொள்ளை நோயினால் வாதிப்பார். இது தற்காலிகமான வாதையாயிராது. இந்த வாதை அவனுடைய இருதயத்தை வாதிக்கும் ஆவிக்குரிய வாதையாயிருக்கும். கர்த்தர் அனுப்பும் ஆவிக்குரிய வாதை, பார்வோனுடைய ஆத்துமாவுக்கும் வாதையாயிருக்கும்.

பார்வோன் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியவில்லையென்றால், இந்த உலகத்தின் சரித்திரத்தில், கீழ்ப்படியாதவர்களுக்கு அவன் அடையாளமாக சொல்லப்படுவான். கீழ்ப்படியாதவர்கள்மீது கர்த்தர் அனுப்பும் வாதைகளுக்கு, பார்வோனுக்கு வரும் வாதைகள் அடையாளமாயிருக்கும். இந்தப் பூமியெங்கும் கர்த்தரைப்போல நீதியான தேவன் வேறு ஒருவருமில்லை. இந்தப் பிரபஞ்சத்தின் ஜனங்கள் இந்த சத்தியத்தை அறியும்போது, இந்தப் பூமியெங்கும் பார்வோனைப்போல மோசமான மனுஷன் ஒருவனுமில்லை என்பதையும் அறிந்துகொள்வார்கள்.  

இதற்காகவே கர்த்தர் பார்வோனை நிலை நிறுத்தியிருக்கிறார். கர்த்தர் தம்முடைய வல்லமையை பார்வோனிடத்தில் காண்பிக்கும் படியாகவும், தம்முடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் பார்வோனை நிலைநிறுத்தியிருக்கிறார். பார்வோனோ தனக்கு வரும் தண்டனைகளை அறிந்துகொள்ளாமல், தன்னை வீணாய் உயர்த்துகிறான். அவன் கர்த்தருக்கு கீழ்ப்படிய மறுக்கிறான். 

கர்த்தர் தம்முடைய சித்தத்தை நிறைவேறுவதற்காகவே பார்வோனை எகிப்து தேசத்தின் ராஜாவாக சிங்காசனத்திலே அமரச் செய்திருக்கிறார். தம்முடைய சித்தத்தை நிறைவேறுவதற்காகவே கர்த்தர் பார்வோனை நிலை நிறுத்தியிருக்கிறார். கர்த்தருடைய வல்லமையை பார்வோனிடத்தில் காண்பிக்கவேண்டும் என்பதே கர்த்தருடைய சித்தமாயிருக்கிறது.  

கர்த்தருடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகவேண்டும் என்பது கர்த்தருடைய சித்தம். அவருடைய நாமம் பிரஸ்தாபமாகும்போது, அவருடைய சர்வவல்லமையும், சர்வஆளுகையும், அவருடைய நீதியும் நியாயமும் இந்தப் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும். பார்வோனுடைய காலத்தில் மாத்திரமல்ல, சரித்திரத்தின் எல்லா காலங்களிலும், கர்த்தருடைய நாமம் பிரஸ்தாபமாகும்.  

எகிப்து தேசத்திலே பார்வோன் மிகப்பெரிய ராஜாவாயிருக்கிறான். இஸ்ரவேல் ஜனங்களோ அந்த தேசத்தில் ஆடுகளை மேய்க்கிற சாதாரண ஜனங்களாயிருக்கிறார்கள். அவர்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிருக்கிறார்கள். ஆனால் பார்வோனோ அவர்களுக்கு விரோதமாக தன்னை உயர்த்துகிறான். தனக்கு அழிவு உண்டாவதற்காகவே பார்வோன் தன்னை உயர்த்துகிறான்.  

எகிப்தின் ராஜாவாகிய பார்வோன், தன்னுடைய தேசத்திலே அடிமைகளாகயிருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாய் தன்னை உயர்த்துவதாக நினைக்கிறான். ஆனால் பார்வோன் மெய்யாகவே தன்னை தேவனுக்கு விரோதமாக உயர்த்துகிறான். தேவனுக்கு விரோதமாக தங்களை உயர்த்துகிறவர்கள் சீரழிந்துபோவார்கள். கர்த்தர் பார்வோனை நோக்கி, ""நீ பூமியிலிராமல் நாசமாய்ப்போகும்படி நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டுவேன்'' என்று சொல்லுகிறார். 

இந்தப் பூமியில் இதற்கு முன்பு கல்மழை பெய்திருக்கிறது. அது இயற்கையின் பிரமாணத்தினால் பெய்கிற கல்மழை. இப்போது எகிப்து தேசத்தின்மேல் பெய்யப்போகிற கல்மழையோ, கர்த்தருடைய நியாயத்தீர்ப்பினால் பெய்கிற கன்மழையாயிருக்கும். கர்த்தர் இந்தக் கல்மழையைப்பற்றிச் சொல்லும்போது, ""எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழை'' (யாத் 9:18) என்று சொல்லுகிறார். 

தேவன் தம்முடைய செயலுக்கு மறுபடியும் ஒரு காலத்தை நிர்ணயம் பண்ணுகிறார். (யாத் 8:10,23,29; யாத் 9:5) இதுவரையிலும் ""நாளைக்கு'' என்று பொதுவாகக்கூறியவர் இப்பொழுது ""நாளை இந்நேரம்'' என்று நேரத்தை மிகவும் துல்லியமாகக் குறித்து விடுகிறார். (யாத் 9:5) வானத்திலிருந்து மழைத்துளிகள் பூமிக்குக் கீழே இறங்கி வரும்போது, அவை குளிர்ந்த மண்டலப் பகுதியின் வழியாக வரும்போது, மழைத்துளிகள் ஆலங்கட்டிகளாகும். (சங் 78:47) இந்தக் கல்மழை வெளியின் பயிர் வகைகளை அழித்துப்போட்டு, மரங்களை முறித்துப் போடுகிறது (யாத் 9:25).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.