யாக்கோபு ஒரு கண்ணோட்டம்




யாக்கோபு
முன்னுரை
அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதின நிருபம் பொதுவான நிருபங்களில் ஒன்றாகும். இந்த நிருபத்தின் ஆசிரியரான யாக்கோபு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சகோதரர். ஆனாலும் யாக்கோபு தன்னை இயேசுகிறிஸ்துவின் சகோதரர் என்று சொல்லி பெருமைப்படவில்லை. தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் யாக்கோபு தன்னை ஒரு ஊழியக்காரராகவே வெளிப்படுத்துகிறார் (யாக் 1:1).
வேதாகமத்தில் செபதேயுக்கு யாக்கோபு என்னும் பெயரில் ஒரு குமாரன் இருக்கிறார். இந்த யாக்கோபு இந்த நிருபத்தை எழுதவில்லை. ஏரோது ராஜா செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபை கொன்றுபோட்டார் (அப் 12).
இந்த நிருபம் ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட சபைக்கோ எழுதப்படவில்லை. ஆகையினால் இந்த நிருபத்தை வேதபண்டிதர்கள் பொதுவான நிருபம் என்று அழைக்கிறார்கள். இந்த நிருபம் சுற்றறிக்கை நிருபம் போல எல்லா சபைகளுக்கும் அனுப்பப்பட்டு, அங்கு வாசிக்கப்பட்டது.
யாக்கோபு இந்த நிருபத்தை எந்தக் காலத்தில் எழுதினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த நிருபம் எழுதப்பட்ட காலத்தில் ஏராளமான விசுவாசிகள் தங்கள் விசுவாசத்திலிருந்து வழிவிலகிச் சென்றிருந்தார்கள். அவர்களுடைய சுபாவங்களில் பக்திவிருத்திக்கேதுவான காரியங்கள் காணப்படவில்லை. அவர்களைக் கடிந்துகொள்வதற்காகவும், அவர்களுக்கு ஆவிக்குரிய ஆலோசனைகளைச் சொல்லுவதற்காகவும் யாக்கோபு இந்த நிருபத்தை எழுதியிருக்கிறார்.
யூததேசத்தார் வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் குறித்து கவலைப்படாமலிருக்கிறார்கள். தங்களுக்கு நியாயத்தீர்ப்பு வரும் என்பதையே மறந்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் அனலில்லாமல் குளிராயிருக்கிறார்கள். ஆவிக்குரிய உறக்கத்திலிருக்கிறார்கள். இவர்களை ஆவிக்குரிய தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டு, வரப்போகிற நியாயத்தீர்ப்பைபற்றி யாக்கோபு அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறார்.
ஒவ்வொரு விசுவாசிக்கும் கர்த்தர் ஆவிக்குரிய கடமைகளை வைத்திருக்கிறார். நம்முடைய கடமைகளை நாம் பயபக்தியாய் நிறைவேற்றவேண்டும். நம்முடைய ஜீவியத்தில் நாம் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும். நமக்கு பாடுகளும், உபத்திரவங்களும் வந்தாலும், விசுவாசத்தைவிட்டு பின்வாங்கிப்போய்விடக்கூடாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை மறுதலித்துவிடக்கூடாது. விசுவாசத்தோடு நாம் நற்கிரியைகளைச் செய்யவேண்டும்.
கி.பி. 45 ஆம் ஆண்டில் முதலாம் கிறிஸ்தவ ஆலோசனைச் சங்கத்திற்கு (கி.பி. 51) முன்பாக எருசலேமிலிருந்து இந்த நிருபம் எழுதப்பட்டது.
மையக்கருத்து
1. யூதமார்க்கத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகளாகி சிதறிப்போனவர்கள் ஆதித்திருச்சபையை ஆரம்பித்தார்கள். அவர்களுக்காக எழுதப்பட்டிருக்கும் கிறிஸ்தவ உபதேசம். (யாக் 1:1; அப் 2:5-11)
2. யாக்கோபு எழுதின நிருபம் யூதமார்க்கத்தாருக்கே விசேஷமாக எழுதப்பட்டிருக்கிறது. மத்தேயு எழுதின சுவிசேஷம் யூதருடைய சுவிசேஷம் என்று அழைக்கப்பட்ட போதிலும் யாக்கோபு நிருபமே யூதமார்க்கத்தாருக்கு விசேஷித்த செய்திகளைச் சுமந்து செல்கிறது. யூதா எழுதின நிருபம், வெளிப்படுத்தின விசேஷம், எபிரெயருக்கு எழுதின நிருபம் ஆகிய புஸ்தகங்களைவிட யாக்கோபு எழுதின நிருபம் யூதமார்க்கத்தாருக்கு விசேஷமாக எழுதப்பட்டதாகும்.
3. இயேசு கிறிஸ்துவைப் பற்றி இந்த நிருபத்தில் இரண்டு குறிப்புக்கள் மட்டுமே உள்ளன. (யாக் 1:1; யாக் 2:1)
4. யாக்கோபு எழுதின நிருபத்தை உபதேசத்தின் பிரகாரம் பழைய ஏற்பாட்டில் ஒரு புஸ்தகமாகச் சேர்க்கலாம்.
5. சுவிசேஷம், இயேசு கிறிஸ்து மனுஷ ரூபம் எடுத்தது, அவருடைய ஜீவியம், மரணம், உயிர்த்தெழுதல் ஆகிய எந்த நிகழ்ச்சியும் இந்த நிருபத்தில் காணப்படவில்லை.
6. மேசியா வருவார் என்னும் சத்தியமோ அல்லது அவர் மூலமாக வரும் இரட்சிப்பு பற்றிய சத்தியமோ இந்த நிருபத்தில் காணப்படவில்லை.
7. ஆதித்திருச்சபையில் காணப்பட்ட உபதேச முரண்பாடுகளைப் பற்றிய எந்தக் குறிப்பும் இந்த நிருபத்தில் காணப்படவில்லை.
8. யாக்கோபு தான் எழுதின நிருபத்தில் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களைப் பல இடங்களில் தழுவி எழுதியிருக்கிறார். (யாக் 1:4=மத் 5:48; யாக் 1:5=மத் 7:7; யாக் 1:6= மாற்கு 11:23)
பொருளடக்கம்
  ஒ. ஆசிரியரும் வாழ்த்துரையும் (1
  ஒஒ. கிறிஸ்தவ பரீட்சைகள்
1. பரீட்சையின் நோக்கம் (1:2-4)
2. விசுவாசத்தின் பரீட்சை - ஜெபத்திற்கு பதில்பெறுவதன் இரகசியம் (1:5-8)
3. தாழ்மையின் பரீட்சை (1:9-11)
4. சகிக்கிறதின் பரீட்சை (1:12)
5. சோதிக்கப்படுவதின் பரீட்சை (1:13-16)
6. நன்றி கூறுவதன் பரீட்சை - எல்லா நல்ல ஈவுகளின் ஆதாரம் (1:17)
7. கிறிஸ்தவ அனுபவத்தின் பரீட்சை - புதிய பிறப்பு (1:18)
8. கிறிஸ்தவ ஜீவியத்தின் பரீட்சை (1:19-21)
9. கீழ்ப்படிதலின் பரீட்சை (1:22-25)
10. மாசில்லாத சுத்தமான பக்தியின் பரீட்சை (1:26-27)
11. சகோதர சிநேகத்தின் பரீட்சை (2:1-9)
12. பரிபூரணத்தின் பரீட்சை (2:10-13)
13. விசுவாசத்தின் பரீட்சை (2:14-19)
14. விசுவாசமும் கிரியைகளும் - இரண்டு விளக்கங்கள் (2:20-26)
  ஒஒஒ. கிறிஸ்தவரும் நாவும்
1. பரிபூரணத்தின் அடையாளம் (3:1-2)
2. நாவின் சுபாவம் (3:3-6)
3. நாவை அடக்க முடியாது (3:7-8)
4. தேவபக்தியற்ற காரியங்களில் நாவை பயன்படுத்துதல் (3:9-12)
5. கிறிஸ்தவர்களால் நாவை அடக்க முடியும் (3:13)
6. மானிட ஞானத்தின் நான்கு அடையாளங்கள் (3:14-16)
7. தெய்வீக ஞானத்தின் ஒன்பது அடையாளங்கள் (3:17-18)
  ஒய. கடிந்துரைகளும் கட்டளைகளும்
1. பிரிவினைக்கு காரணம் (4:1)
2. பின்வாங்கிப்போனவர்களின் ஜெபங்களுக்கு பதில் கிடைக்காமல் இருப்பதற்கு ஐந்து காரணங்கள் (4:2-3)
3. உலகத்திற்கு சிநேகிதனாய் இருக்க விரும்புகிறவன் தேவனுக்கு பகைஞனாயிருக்கிறான் (4:4-6)
4. ஜெபத்திற்கு பதில் கிடைப்பதற்கு பதினொறு நிபந்தனைகள் (4:7-10)
5. தன்னைத்தான் நியாயாதிபதியாக்கிக் கொள்கிறவன்மீது கடிந்துரை (4:11-12)
6. மனுஷ சித்தமும் ஆண்டவருடைய சித்தமும் (4:13-16)
7. நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் அதைச் செய்யாமல் போனால் அது அவனுக்கு பாவமாயிருக்கும் (4:17)
8. துன்மார்க்கமான ஐசுவரியவான்கள்மீது கடிந்துரை - ஏழு பாவங்களுக்கு ஏழு அம்ச நியாயத்தீர்ப்பு (5:1-6)
9. கர்த்தரின் வருகையைக் குறித்த ஆலோசனை (5:7-9)
10. யோபின் பொறுமை (5:10-11)
11. சத்தியம் பண்ணுதல் (5:12)
12. துன்பப்படுகிறவனும் வியாதிப்பட்டவனும் செய்ய வேண்டிய காரியம் (5:13-14)
13. விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும் (5:15-16)
14. ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் (5:17-18)
15. சத்தியத்தை விட்டு விலகி மோசம்போவதும் இரட்சிக்கப்படுவதும் (5:19-20)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.