எபிரேயர் ஒரு கண்ணோட்டம்




எபிரெயர்
முன்னுரை

எபிரெயருக்கு எழுதின நிருபத்தை வேதபண்டிதர்கள் வெகுவாய் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். வேதவாக்கியங்களெல்லாம் வேதஆவியினாலே அருளப்பட்டிருக்கிறது. தெய்வீக அதிகாரத்தினாலேயே வேதவாக்கியங்கள் எழுதப்பட்டிருக்கிறது.  ஆனாலும் எபிரெயருக்கு எழுதின நிருபத்தின் தெய்வீக அதிகாரத்தை ஒரு சிலர் நம்புவதில்லை. இந்த நிருபம் தெய்வீக அதிகாரத்தோடு  எழுதப்படவில்லையென்று அவர்கள்  விவாதம்பண்ணுகிறார்கள். 

வேதாகமத்திலுள்ள எல்லா நிருபங்களும் தேவஆவியினாலேயே எழுதப்பட்டிருக்கிறது.  எல்லா நிருபங்களுக்கும் தெய்வீக அதிகாரமுண்டு.  எபிரெயருக்கு  எழுதின நிருபத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரையிலும்  தெய்வீக வெளிப்பாடு காணப்படுகிறது. ஆதித்திருச்சபையின் காலத்திலிருந்து,   இக்காலம் வரையிலும், கிறிஸ்துவின் சபையார் எபிரெயருக்கு எழுதின நிருபத்தை, வேதாகமத்தில் ஒரு பகுதியாக அங்கீகரித்திருக்கிறார்கள். இதன் தெய்வீக அதிகாரத்திற்கு  இதுவே பிரதான சான்று. 

எபிரெயருக்கு எழுதின நிருபத்தின் ஆசிரியர் யார் என்று தெளிவாகத் தெரியவில்லை.  மற்ற நிருபங்களில் உள்ளதுபோல, இந்த நிருபத்தின் ஆரம்பத்தில்,  இந்த நிருபத்தை எழுதிய ஆசிரியரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆகையினால் இந்த நிருபத்தின் ஆசிரியர் யாராகயிருக்கலாம் என்று வேதபண்டிதர்களுக்குள் கருத்து வேறுபாடுள்ளது.  அப்போஸ்தலர் பவுலே இந்த நிருபத்தின் ஆசிரியர் என்பது பொதுவான கருத்து.  இது அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆதித்திருச்சபையின் காலத்தில், அப்போஸ்தலர் பவுலே இந்த நிருபத்தை எழுதினாரென்று நம்பினார்கள். 

ஆதித்திருச்சபையில் யூதமார்க்கத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் ஏராளமானோர் இருந்தார்கள். அது வரையிலும் யூதமார்க்கத்திற்கும், கிறிஸ்தவ மார்க்கத்திற்கும் அதிக வித்தியாசம் காண்பிக்கப்படவில்லை.  யூதமார்க்கத்திலிருந்து கிறிஸ்தவ மார்க்கத்தை  தனியாகப் பிரித்து  உபதேசம் பண்ண வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.  யூதர்கள்  நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். கிறிஸ்துவின் விசுவாசிகளோ சுவிசேஷத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தைவிட கிறிஸ்துவின் சுவிசேஷமே மேன்மையானது என்பதை  எபிரெயருக்கு எழுதின நிருபம் தெளிவுபடுத்துகிறது. 

இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற யூதர்கள், கிறிஸ்தவ விசுவாசத்திற்குள் வரவேண்டும். கிறிஸ்துவின் உபதேசத்தைப் பின்பற்றவேண்டும். விசுவாசிகளுக்கு பாடுகளும், உபத்திரவங்களும் வந்தாலும், கிறிஸ்துவுக்குச் சாட்சியாக ஜீவிக்கவேண்டும்.   
எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் பல சத்தியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாகயிருக்கிறது.  பரிசுத்த ஆவியானவரின்  உதவியினால் கடினமான சத்தியங்களையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.  ஆவியானவர் நம்மை  சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறவர்.  கடினமான சத்தியங்களைப் புரிந்துகொள்ளும்போது, அது நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு மிகுந்த ஆசீர்வாதமாகயிருக்கும். 

 கி.பி. 68 ஆம் ஆண்டில் பவுல் இந்த நிருபத்தை ரோமாபுரியிலிருந்து எழுதினார். கலாத்தியர், 2தீமோத்தேயு ஆகிய நிருபங்களோடு பவுல் இந்த நிருபத்தையும் அங்கிருந்து எழுதினார்.

இந்நிருபத்தின் ஆசிரியர் பவுல் என்று ஒரு சிலரும், பவுலைத் தவிர வேறொருவர் இதை எழுதியிருக்கிறார் என்று வேறுசிலரும் கூறியிருக்கிறார்கள். இந்த நிருபத்தின் ஆசிரியர் பவுல் என்று கூறுவதே சிறப்பாக இருக்கும். அதற்கான காரணங்கள்

1. இந்த நிருபத்தில் காணப்படும் சிந்தனைகளும், கருத்துக்களும் பவுலுடையவை. மொழிநடையில் இந்த நிருபம் மற்ற நிருபங்களைவிட மாறுபட்டு இருக்கிறது. பவுல் இந்த நிருபத்தை யூதருக்கு எழுதின படியினால் யூதரைப்போன்று யூத மொழிநடையில் இதை எழுதியிருக்கிறார். பவுலின் மற்ற நிருபங்கள் புறஜாதி சபையாருக்கு எழுதப்பட்டவை. மேலும் இந்த நிருபத்தை லூக்கா கிரேக்க மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார். இதனால் இதன் மொழிநடையில் சில மாற்றங்கள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

2. பவுல் இந்த நிருபத்தை யூதருக்கு எழுதியிருப்பதாக பேதுரு உறுதி பண்ணுகிறார்.  (2பேதுரு 3:15-16).

3. கி.பி. 70 ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 73 ஆம் ஆண்டு வரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால ஆசிரியர்கள் எபிரெயருக்கு எழுதின நிருபத்தைப் பவுல் எழுதியதாகவே கூறியிருக்கிறார்கள். இவர்கள் கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளில் பல இலக்கியங்களை எழுதியவர்கள்.

4. எபிரெயருக்கு எழுதின நிருபத்தை பவுல் எழுதியதாக லவோதிக்கேயா சங்கத்தார்   கி.பி. 363 ஆம் ஆண்டில் அங்கிகரித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து கி.பி. 397-இல் கார்த்தேஜ் சங்கத்தாரும், கி.பி. 370-இல் சீரியர் சபையாரும்  எபிரெய நிருப ஆசிரியர் பவுல் என்று அங்கிகரித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர ஆதிதிருச்சபையாரும் கிரேக்க திருச்சபையாரும் கிழக்கு தேசத்து திருச்சபையாரும்  எபிரெய நிருப ஆசிரியர் பவுல் என்று அங்கிகரித்திருக்கிறார்கள்.

5. கி.பி. 500 ஆம் ஆண்டு எழுதப்பட்ட அலெக்சந்திரிய சுவடிகளின்  எபிரெய நிருபத்தின் ஆசிரியர் பவுல் என்றே கூறப்பட்டிருக்கிறது.

6. லத்தீன் திருச்சபையாரில் சிலர் இந்த நிருபத்தின் ஆசிரியராகப் பவுலை அங்கிகரிக்க வில்லை. நிருபத்தின் முன்னுரையில் பவுலின் பெயர் காணப்படாமல் இருப்பதே இதற்குக் காரணம். பவுலின் மற்ற நிருபங்கள் அனைத்திலும் முன்னுரையில் பவுலின் பெயர் எழுதப்பட்டிருக்கும். இந்த நிருபத்தில் பவுலின் பெயர் குறிப்பிடப் படாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவையாவன:

(1) பவுல் இந்த நிருபத்தை எபிரெய பாஷையில் எழுதினார். யூதமார்க்கத்தாரோ பவுலை அங்கிகரிக்காமல் வெறுத்தார்கள். பவுல் கூறும் எதையும் அவர்கள் செவிகொடுக்க கேட்க மறுத்தார்கள். ஆகையினால் பவுல் இந்த நிருபத்தில் தனது பெயரைக் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம் என்று ஏசோபியஸ்   என்ற திருச்சபை வரலாற்று ஆசிரியர் விளக்குகிறார். பவுல் எபிரெய பாஷையில் எழுதிய இந்த நிருபத்தில் லூக்கா கிரேக்கு பாஷையில் மொழிபெயர்த்தார். ஆகையினால் இந்த நிருபத்தின் மொழிநடையும் அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்தின் மொழிநடையும் ஒன்றுபோல் உள்ளன.

(2) புதிய ஏற்பாட்டின் பழைய சுவடிகளில் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தின் பின்பகுதியில் “”எபிரெயருக்கு’’ என்னும் தலைப்பு காணப்படுகிறது. ஆகையினால் எபிரெயர் நிருபம் கலாத்தியர் நிருபத்தின் ஒரு பகுதி என்று ஒருசிலர் கூறுகிறார்கள். அவ்வாறாயின், கலாத்தியர் 1:1 ஆவது வசனத்தில் பவுல் நிருப ஆசிரியராகக் கூறப்பட்டிருப்பது எபிரெய நிருபத்திற்கும் பொருந்தும். கலாத்தியர் நிருபத்தில் பவுல் “”என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேன் என்று பாருங்கள்’’  என்றும் “”தேவனுடைய இஸ்ரவேலர்’   என்று எழுதியிருக்கிறார். இவை எபிரெயர் நிருபத்திற்கு நல்ல முன்னுரையாக உள்ளது.

7. எபிரெய நிருபத்தில் இந்த நிருபத்தைப் பவுல் எழுதவில்லையென்று எந்தக் கருத்தும் காணப்படவில்லை. இந்த நிருபத்தில் காணப்படும் மையக் கருத்துக்கள் பவுல் இந்த நிருபத்தை எழுதினார் என்பதற்கு ஆதரவாகவே உள்ளன. அவையாவன:

(1) கலாத்தியர் நிருபமும், எபிரெயர் நிருபமும் பழைய பிரமாணம் ஒழிக்கப்பட்டதை விரிவாக எடுத்துக் கூறுகிறது.

(2) இவ்விரண்டு நிருபங்களிலும் ஆசிரியர் அவர்களை வந்து பார்க்க விரும்புவதைப்பற்றி கூறப்பட்டிருக்கிறது. (கலா 4:20; எபி 13:19).

(3) புதிய ஏற்பாட்டு நூலாசிரியர்களில் பவுல் மட்டுமே தனக்காக ஜெபிக்குமாறு விசுவாசிகளைக் கேட்டுக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.   (எபி 13:18, 2தெச 3:1).

(4) எபிரெயர் நிருபத்தில் காணப்படும் ஆவிக்குரிய ஆலோசனைகளும், புத்திமதிகளும் பவுலின் மற்ற நிருபங்களில் காணப்படும் ஆவிக்குரிய ஆலோசனைகளுக்கும், புத்திமதிகளுக்கும் ஒத்திருக்கின்றன.            (எபி 12:3=கலா 6:9; எபி 12:14=ரோமர் 12:18) 

(5) கலாத்தியர் நிருபமும், எபிரெயர் நிருபமும் இத்தாலியா தேசத்திலிருந்து எழுதப் பட்டவையாகும்.

(6) புதிய ஏற்பாட்டு நூலாசிரியர்களில் பவுல் மட்டுமே சிறைச்சாலையிலிருந்து நிருபம் எழுதியவர். தன்னுடைய விடுதலையை எதிர்பார்த்தவர். (எபி 13:19,23= பிலி 1:7-8,13,26;                 பிலி 2:23-24)

(7) பவுலைத் தவிர வேறு யாரும் தீமோத்தேயுவின் பெயரைக் குறிப்பிடவில்லை. பவுல் தன்னுடைய நிருபங்களில் 20 தடவை தீமோத்தேயுவின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். (எபி 13:23) பவுல் தீமோத்தேயுவைப் பற்றி மற்றொரு இடத்தில் குறிப்பிடும்போது அவனைத் தன்னுடைய சகோதரனாகக் குறிப்பிட்டிருக்கிறார். (2கொரி 1:1; கொலோ 1:1; 1தெச 3:2)

(8) பவுல் தன்னுடைய நிருபங்களில் எப்படி முடிவுரை எழுதுவாறோ அதுபோன்ற முடிவுரையே எபிரெயர் நிருபத்தில் காணப்படுகின்றது.

மையக்கருத்து

1. இயேசு கிறிஸ்து தேவனாக இருக்கிறார்.

2. இயேசு கிறிஸ்து எல்லா மனுஷரையும், தேவதூதரையும்விட மேன்மையானவர்.

3. யூதமார்க்கமும், நியாயப்பிரமாணமும் முடிவு பெற்று விட்டது.

4. யூதமார்க்கத்தமைந்த கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் உறுதி பண்ணப் படுகிறார்கள்.

5. எல்லா ஜனங்களுக்கும் புதிய உடன்படிக்கையின் உபதேசங்கள் கூறப்பட்டிருக்கிறது.

பொருளடக்கம்

  ஒ.  கிறிஸ்து தீர்க்கதரிசிகளைப் பார்க்கிலும் விசேஷித்தவர் - எட்டு காரணம் (1:1-3)  

  ஒஒ. கிறிஸ்து தேவதூதரைப் பார்க்கிலும் விசேஷித்தவர்  

1. கிறிஸ்துவின் குமாரத்துவமும் சுதந்திரமும் (1:4-7)  

2. கிறிஸ்துவின் தெய்வத்துவமும், இராஜரீகமும், சுபாவமும், சிருஷ்டிக்கும் வல்லமையும், நித்தியமும் (1:8-12)  

3. கிறிஸ்து உயர்ந்தவர்  (1:13-14) 

4. கிறிஸ்துவின் உடன்படிக்கையின் சாட்சி (2:1-4)  

5. கிறிஸ்துவின் யுத்தமும் தேவனுக்கு எதிராக கலகம் பண்ணுவோர்மீது இறுதியில் வெற்றியும் (2:5-8)  

6. கிறிஸ்துவின் மீட்கும் கிரியை (2:9-13)  

7. மரணம், பாதாளம் ஆகியவற்றின்மீது கிறிஸ்துவின் வெற்றியும் அடிமைத்தனத்திற்குள்ளான நீதிமான்கள் யாவரையும் கிறிஸ்து விடுதலை பண்ணுவதும் (2:14-15)  

8. சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய கிறிஸ்து வல்லவராக இருக்கிறார் (2:16-18)  

 ஒஒஒ. கிறிஸ்து மோசேயைப் பார்க்கிலும் விசேஷித்தவர்  

1. கிறிஸ்துவின் பரம அழைப்பு (3:1-2)  

2. கிறிஸ்து சிருஷ்டிகர் (3:3-4)

3. கிறிஸ்துவின் தெய்வீக குமாரத்துவம் (3:5-6)  

  ஒய. எச்சரிப்புக்களும் புத்திமதிகளும்  

1. இஸ்ரவேல் ஏன் விழுந்துபோயிற்று (3:7-9)  

2. இஸ்ரவேலின்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு (3:10-11) 

3. பரிசுத்த சகோதரருக்கு எச்சரிப்புக்கள் - தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் (3:12-13) 

4. கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாக இருப்பதற்கு நிபந்தனை (3:14)  

5. இஸ்ரவேலின் தோல்வியை நினைத்துப் பார்த்து கிறிஸ்தவர்கள் எச்சரிப்புடன் இருக்குமாறு ஆலோசனை (3:15-19)  

6. இஸ்ரவேலைப் போல பின்வாங்கிப்போய் விடாதவாறு நாம் பயந்திருக்கக்கடவோம் (4:1-2)  

7. விசுவாசம் இளைப்பாறுதலைத் தரும் (4:3)  

8. தேவனுடைய இளைப்பாறுதலின் அம்சங்கள் (4:4) 

9. இளைப்பாறுதலின் நிபந்தனை - விசுவாசத்தினால் கிறிஸ்துவில் இளைப்பாறுதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் (4:5-7)  

  ய. கிறிஸ்து யோசுவாவைப் பார்க்கிலும் விசேஷித்தவர்  

1. கிறிஸ்துவைப் போல யோசுவாவால் உண்மையான இளைப்பாறுதலைத் தரமுடியாது (4:8-10)  

2. விசுவாசத்தினால் மாத்திரமே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியும் (4:11-13)  

  யஒ. கிறிஸ்து ஆசாரியரைப் பார்க்கிலும் விசேஷித்தவர்  

1. கிறிஸ்து பாவமில்லாத இரட்சிக்கக்கூடிய பிரதான ஆசாரியர் (4:14-16)  

2. பூமியின் ஆசாரியர்கள் பாவமுடையவர்கள் - மனுஷரை இவர்களால் இரட்சிக்க முடியாது (5:1-3)  

3. ஆரோனின் ஆசாரிய முறைமையைவிட கிறிஸ்துவின் ஆசாரிய முறைமை மேன்மையானது - தேவன் கிறிஸ்துவை உயர்த்தினார் (5:3-6) 

4. கிறிஸ்து பரிபூரணமானவர், மனுஷரை இரட்சிக்கக்கூடியவர் - மற்ற ஆசாரியர்களால் மனுஷரை இரட்சிக்க முடியாது (5:7-10)  

  யஒஒ. எச்சரிப்புக்களும் புத்திமதிகளும்  

1. எபிரெய கிறிஸ்தவரின் ஆவிக்குரிய நிலைமை (5:11-14)  

2. மறுதலித்துப் போகக்கூடாது என்று கிறிஸ்தவருக்கு எட்டு அம்ச கட்டளை (6:1-3)  

3. மறுதலித்துப்போனவர்களின் பழைய ஆசீர்வாதங்கள் (6:4-5)  

4. கிறிஸ்தவர்கள் ஏன் மறுதலித்துப் போகக்கூடாது என்பதற்கு காரணம் (6:6)  

5. கிறிஸ்தவரும் மறுதலித்துப்போனவரும் - விளக்கம் (6:7-9)             

6. அசதியாயிராமல் முடிவு வரையும் நீடிய பொறுமையுடன் இருக்க வேண்டும் (6:10-12) 

7. வாக்குத்தத்தங்களின் ஆசீர்வாதங்களை ஆபிரகாம் சுதந்தரித்துக் கொண்ட விதம் (6:13-15)  

8. தேவன் வாக்குத்தத்தம் பண்ணப் பட்டவர்களில் உண்மையுள்ளவராயிருக்கிறார் (6:16-18)  

 யஒஒஒ.  மெல்கிசேதேக்கு, ஆபிரகாம், லேவி ஆகியோரைப் பார்க்கிலும் கிறிஸ்து விசேஷித்தவர்  

1. கிறிஸ்து நமது நம்பிக்கையும் முன்னோடியுமானவர் (6:19-20)  

2. சாலேமின் இராஜாவும் ஆசாரியனுமான மெல்கிசேதேக்கு (7:1-2) 

3. மெல்கிசேதேக்கு தகப்பனும் தாயும் வம்ச வரலாறும் இல்லாதவன் (7:3)  

4. மெல்கிசேதேக்கு ஒரு சாதாரண மனுஷன் - கிறிஸ்து தேவனுடைய குமாரன் (7:4)  

5. ஆபிரகாம், லேவி ஆகியோரைப் பார்க்கிலும் மெல்கிசேதேக்கு விசேஷித்தவன் (7:5-7)  

6. ஆபிரகாமும் லேவியும் மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் செலுத்தினார்கள் (7:8-10)  

 ஒல. கிறிஸ்துவின் ஆசாரியத்துவம் ஆரோனின் ஆசாரியத்துவத்தைப் பார்க்கிலும் விசேஷமானது  

1. கிறிஸ்துவின் பிரமாணமும் ஆசாரியத்துவமும் மாறாதவை (7:11-12)  

2. தேவனுடைய தெரிந்தெடுப்பு - யூதா கோத்திரம் (7:13-14)  

3. கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல் அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார் (7:15-17)  

4. கிறிஸ்துவின் விசேஷித்த நம்பிக்கை (7:18-19) 

5. கிறிஸ்துவின் விசேஷித்த பிரதிஷ்டை (7:20-21)  

6. கிறிஸ்துவின் விசேஷித்த உடன்படிக்கை (7:22)  

7. கிறிஸ்து மாறிப்போகாத ஆசாரியத்துவம் உள்ளவர் (7:23-24)  

8. கிறிஸ்து முற்றுமுடிய இரட்சிக்க வல்லவர் (7:25)  

9. கிறிஸ்துவின் விசேஷித்த தன்மையும் சுபாவமும் (7:26)  

10. கிறிஸ்துவின் செய்து முடிக்கப்பட்ட மீட்பு (7:27)  

11. கிறிஸ்து பரிபூரண குமாரன் (7:28)  

12. கிறிஸ்துவின் மகத்துவமான ஸ்தானம் (8:1)  

13. கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்தில் கிறிஸ்து ஆசாரிய ஊழியம் செய்கிறார் (8:2-5)  

14. விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு கிறிஸ்து மத்தியஸ்தராயிருக்கிறார் (8:6)  

  ல. பழைய உடன்படிக்கையைப் பார்க்கிலும் கிறிஸ்துவின் உடன்படிக்கை விசேஷமானது  

1. கிறிஸ்துவின் உடன்படிக்கையின் பத்து அம்ச மேன்மை (8:7-13)           

2. பழைய உடன்படிக்கையின் ஆசரிப்புக் கூடாரம் - புதிய உடன்படிக்கையின் கூடாரத்திற்கு ஓர் அடையாளம் (9:1-5) 

3. பழைய உடன்படிக்கையின் பிரகாரம் தேவனுடைய சமுகத்தில் எல்லோரும் எப்போதும் பிரவேசிக்க முடியாது - புதிய உடன்படிக்கையின் பிரகாரம் நித்தமும் பிரவேசிக்கலாம் (9:6-7)  

4. பழைய உடன்படிக்கையின் காணிக்கைகளும் பலிகளும் ஊழியக் காரரை பூரணப்படுத்தக்கூடாதவைகளாம் (9:8-9)  

5. பழைய உடன்படிக்கையின் பலிகள் தற்காலிகமானவை - சரீரத்திற்கேற்ற சடங்குகள் மாத்திரமே (9:10)  

6. புதிய உடன்படிக்கையின் பலி நித்திய மீட்பை நமக்கு உண்டுபண்ணுகிறது (9:11-12) 

7. பழைய உடன்படிக்கையின் பலிகள் நமது பாவங்களை நீக்காது - புதிய உடன்படிக்கையின் பலியாகிய கிறிஸ்துவினுடைய இரத்தம் நமது மனச்சாட்சியை செத்த கிரியைகளற நிச்சயமாக சுத்திகரிக்கும் (9:13-15)  

8. புதிய உடன்படிக்கையை உண்டு பண்ணுவதற்கு கிறிஸ்துவின் மரணம் தேவையானது (9:16-17)  

9. பழைய உடன்படிக்கை மிருகங்களின் இரத்தத்தினால் ஏற்பட்டது (9:18-22)  

10. புதிய உடன்படிக்கை கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டானது (9:23-24)  

11. பழைய உடன்படிக்கையில் பல பலிகள் இருந்தன - புதிய உடன்படிக்கையில் கிறிஸ்து ஒரேதரம் பலியிடப்பட்டார் (9:25-28)  

12. நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல் அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறது  (10:1-4)  

13. கிறிஸ்து பழைய உடன்படிக்கையை அகற்றிப்போட்டார் (10:5-9)               

14. பழைய உடன்படிக்கை பெலனற்றது - புதிய உடன்படிக்கை நம்மை நித்திய ஜீவனுக்கு அழைத்துச் செல்லும் வல்லமையுடையது (10:10-18)  

  லஒ. எச்சரிப்புக்களும் புத்திமதிகளும்  

1. ஒவ்வொரு விசுவாசியும் ஆசாரியராயிருக்கிறார் - பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் (10:19-23)  

2. ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக் கடவோம் (10:24-25)  

3. மறுதலித்துப்போனவர்களின்மீது நித்திய ஆக்கினைத்தீர்ப்பு வரும் (10:26-31)  

4. பொறுமையுடன் போராட்டத்தைச் சகித்து விசுவாசத்தில் தொடர்ந்து ஜீவிக்க வேண்டும்  (10:32-37)  

5. பின்வாங்கிப்போவதற்கும் கெட்டுப் போவதற்கும் எதிரான எச்சரிப்பு (10:38-39)  

  லஒஒ. பழைய ஏற்பாட்டு விசுவாச வீரர்களைப் பார்க்கிலும் கிறிஸ்து விசேஷித்தவர்  

1. விசுவாசம் என்றால் என்ன?  (11:1-2) 

2. தேவனுடைய சிருஷ்டிக்கும் விசுவாசம் (11:3)  

3. ஆபேல் - பாவநிவாரண பலியும் காணிக்கைகளும்  (11:4) 

4. ஏனோக்கு - எடுத்துக் கொள்ளப்படும் விசுவாசம்  (11:5) 

5. விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் (11:6) 

6. நோவா - உண்டுபண்ணும் விசுவாசம் (11:7) 

7. ஆபிரகாம் - கீழ்ப்படியும் விசுவாசம் (11:8-10) 

8. சாராள் - ஜீவனைக் கொடுக்கும் விசுவாசம் (11:11-12) 

9. ஆபேலிலிருந்து ஆபிரகாம், சாராள் வரையிலும் - பொறுமையும் நம்பிக்கையுமுள்ள விசுவாசம் (11:13-16) 

10. ஆபிரகாம் - சோதிக்கப்பட்ட விசுவாசம் (11:17-19)  

11. ஈசாக்கு - வருங்காரியங்களைக் குறித்த விசுவாசம் (11:20) 

12. யாக்கோபு - தீர்க்கதரிசன விசுவாசம் (11:21)  

13. யோசேப்பு - கட்டளைக் கொடுக்கும் விசுவாசம் (11:22) 

14. அம்ராம், யோகெபேத் - பயமில்லாத விசுவாசம் (11:23) 

15. மோசே - தியாகமுள்ள பாடுகளை அனுபவித்து நீடிய பொறுமையோடு இருக்கும் விசுவாசம் (11:24-27)  

16. மோசேயும் இஸ்ரவேலும் - பாதுகாக்கும் விசுவாசம் (11:28-29)  

17. யோசுவாவும் இஸ்ரவேலும் - வெற்றி பெறும் விசுவாசம் (11:30) 

18. ராகாப் - விடுதலை பண்ணும் விசுவாசம் (11:31)  

19. விசுவாசத்தினாலே பழைய ஏற்பாட்டு வீரர்கள் செய்த காரியங்கள் (11:32-38)  

20. எல்லா பரிசுத்தவான்களும் பூரணராக்கப் படவேண்டும் (11:39-40)  

21. கிறிஸ்து நமது விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார் (12:1-4)  

  லஒஒஒ. எச்சரிப்புக்களும் புத்திமதிகளும்  

1. தகப்பனுடைய சிட்சை - கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணக்கூடாது (12:5-6) 

2. தகப்பன் சிட்சிக்கும்போது நாம் புத்திரர் என்பது உறுதியாயிருக்கிறது (12:7-8)  

3. தேவனுக்கு கீழ்ப்படிவதின் ஞானம் (12:9)  

4. தற்காலத்திலும் பிற்காலத்திலும் சிட்சையினால் ஏற்படும் விளைவு (12:10-11) 

5. தேவனை விட்டு விலகுவதால் ஏற்படும் மாற்றங்கள் (12:12-15) 

6. ஏசாவைக் குறித்த எச்சரிப்பு (12:16-17)  

7. விசுவாசிகள் சீனாய்மலைக்கும் அடிமைப் பிரமாணத்திற்கும் வந்து சேரவில்லை (12:18-21)  

8. விசுவாசிகள் தேவனுடைய கிருபையினிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறார்கள் (12:22-24)  

9. கலகம் பண்ணுவதற்கெதிரான எச்சரிப்பு (12:25)   

10. வானங்களும் பூமியும் வருங்காலத்தில் புதுப்பிக்கப்படும் (12:26-29)         

11. கிறிஸ்தவ ஜீவியத்தைக் குறித்து ஏழு கட்டளைகள் (13:1-6)  

12. ஊழியக்காரர்களை மதிக்க வேண்டும் (13:7) 

13. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் (13:8) 

14. கள்ள உபதேசங்களுக்கு எதிரான எச்சரிப்பு  (13:9)

15. இரண்டு பலிபீடங்கள் (13:10-13) 

16. நமது வருங்கால வீடு (13:14) 

17. விசுவாசியின் ஸ்தோத்திரபலி (13:15-16)  

18. ஊழியக்காரர்களுக்குக் கீழ்ப்படியுங்கள் (13:17)  

19. ஜெபத்திற்காக வேண்டுதல்கள் (13:18-19) 

20. அப்போஸ்தல ஆசீர்வாதம் (13:20-21)  

21. ஆலோசனையும் ஆசீர்வாதமும் (13:22-25) 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.