எசேக்கியேல் புத்தகம் ஒரு கண்ணோட்டம்




எசேக்கியேல் புத்தகம் ஒரு கண்ணோட்டம்

முன்னுரை 

தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்களில் இனிமேல்  சம்பவிக்க வேண்டியவைகள்  எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர்  யோவானை அழைத்து ""இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன்'' (வெளி 4:1)  என்று சொன்னார்.  எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கும் இதுபோன்ற அழைப்பே கொடுக்கப்பட்டது. 

கர்த்தர் யோவானிடத்தில் ""இங்கே ஏறி வா'' என்று சொன்னார். அவர்  எசேக்கியேலை நோக்கி ""மனுபுத்திரனே,  உன் காலூன்றி நில், உன்னுடனே பேசுவேன்'' (எசே 2:1) என்று சொன்னார். யூதாவின் மனுஷர்  பாபிலோன் தேசத்து  சிறையிருப்பிலிருந்தபோது,  எசேக்கியேல் தீர்க்கதரிசி கர்த்தருடைய வார்த்தைகளை தீர்க்கதரிசனமாய்ச் சொன்னார்.  எரேமியா தீர்க்கதரிசியோ,  எசேக்கியேலுக்கு முன்பாக  கர்த்தருடைய வார்த்தைகளை  தீர்க்கதரிசனமாய் அறிவித்தார்.   

எரேமியா யூதாதேசத்திலிருந்து, பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருக்கிற  யூதர்களுக்கு,   கர்த்தருடைய ஆறுதலான வார்த்தைகளைச் சொன்னார். எசேக்கியேல் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்து,   யூதாதேசத்தில் தங்கியிருக்கிற யூதர்களுக்கு, கர்த்தருடைய எச்சரிப்பின் வார்த்தைகளைச் சொன்னார்.

எசேக்கியேல் என்னும் பெயருக்கு, ""தேவனுடைய பெலன்'' என்று பொருள்.  கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்கு,  எசேக்கியேல்  தன்னுடைய மனதை கச்சையால் இடைக்கட்டி  பெலனுள்ளவராயிருந்தார்.  கர்த்தர் தம்முடைய ஊழியத்தை செய்வதற்கு எசேக்கியேலை பலப்படுத்தினார். 

""இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன்''        (எசே 3:8) என்று கர்த்தர் எசேக்கியேலுக்கு சொன்னார்.

எசேக்கியேல் கர்த்தருடைய வார்த்தைகளை மனுஷருக்கு பயப்படாமலும்,  கலங்காமலும் தைரியமாய்ச் சொன்னார்.   பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்த யூதர்களே எசேக்கியேலைக் கொன்றுபோட்டார்கள் என்று  யூதர்களுடைய  பாரம்பரிய  வரலாறு  சொல்லுகிறது. சிறையிருப்பிலிருந்த யூதர்கள்  எசேக்கியேலின்  தலையை  கருங்கல்லின்மேல்   மோதி உடைத்துப்போட்டார்கள் என்றும்,  அவருடைய  தலையிலிருந்த மூளை சிதறிப்போயிற்று என்றும்  யூதருடைய பாரம்பரியம் சொல்லுகிறது. 

அரபு தேசத்து  வரலாற்று ஆசிரியர் ஒருவர்  எசேக்கியேலின்  சரித்திரத்தை  ஆராய்ச்சி செய்தார். எசேக்கியேல்  மரித்த பின்பு  அவருடைய சரீரத்தை நோவாவின் குமாரனாகிய  சேமின்  கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள் என்று அரபு தேசத்து ஆசிரியர் சொல்லுகிறார்.

கர்த்தருடைய இஸ்ரவேல் ஜனங்கள்  பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்த காலத்தில், எசேக்கியேல் கர்த்தருடைய வார்த்தைகளை  தீர்க்கதரிசனமாய்ச் சொன்னார்.  எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகம் பாபிலோன் தேசத்து சிறையிருப்பில்  எழுதப்பட்டது.  

யூதர்கள்  பாபிலோன் தேசத்தில்  எழுபது வருஷங்களாக சிறையிருப்பிலிருந்தார்கள். அவர்களுடைய சிறையிருப்பின் ஆரம்பகாலத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசன ஊழியம் செய்தார்.  பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலே யூதர்கள் அதிக வேதனைகளையும்,  பாடுகளையும்,  துன்பங்களையும் அனுபவித்தார்கள். அவர்களுக்கு தம்முடைய ஆறுதலான செய்திகளை சொல்லுவதற்கு, கர்த்தர்  எசேக்கியேலைப்போன்ற தீர்க்கதரிசிகளை பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலேயே எழுப்பினார். 

கர்த்தருடைய  சித்தம்,  கர்த்தருடைய ஜனங்கள் பாடுகளை அனுபவிப்பதற்கான காரணங்கள்,  கர்த்தர் அவர்களை  பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்போவது ஆகிய செய்திகளை  தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு சொன்னார்கள்.

யூதர்கள் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்த ஆரம்பகாலத்தில்,  கர்த்தருக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தவில்லை.  அவர்கள் தங்கள் ஆவியில் சோர்ந்துபோயிருந்தார்கள். கர்த்தரிடத்தில்  நம்பிக்கையில்லாதிருந்தார்கள்.  அவர்கள் மத்தியில்  எசேக்கியேல்  கர்த்தருடைய ஆறுதலான வார்த்தைகளைச் சொன்னார்.   கர்த்தருடைய  சித்தத்தையும்,  திட்டத்தையும் அவர்களுக்கு தெளிவுபடுத்தினார். 

எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசன வாக்கியங்களை  புரிந்துகொள்வது  சற்று கடினமாக உள்ளது.  இந்த தீர்க்கதரிசன புஸ்தகத்தின்  ஆரம்ப பகுதியையும்,  இதன்  பின்பகுதியையும்  புரிந்துகொள்ளுவது கடினம்.  இந்தப் புஸ்தகத்தில்,  எசேக்கியேல் ஆவிக்குரிய செய்திகளை நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.

எசேக்கியேல்  தீர்க்கதரிசியின் வார்த்தைகள்  புரிந்துகொள்வதற்கு கடினம். ஆகையினால்  இந்தப்  புஸ்தகத்தை, தங்கள் பிள்ளைகள் வாசிக்கக்கூடாது என்று, யூதர்கள் தடைபண்ணியிருந்தார்கள். அவர்களுக்கு முப்பது வயது ஆனபின்பே,  இந்தப் புஸ்தகத்தை வாசிப்பதற்கு அனுமதி கொடுத்தார்கள். வேதபுஸ்தகத்தை வாசிக்கும்போது,  அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது அவர்களுக்கு  மிகவும் கடினமாயிருந்தால்,  அவர்களுக்கு  வேதபுஸ்தகத்தின்மீது வெறுப்பு வந்துவிடும் என்று  நினைத்து  யூதர்கள்  தங்கள் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தார்கள். 

நாம் வேதவாக்கியங்களைப் படிக்கும்போது, வசனத்தின் அர்த்தங்கள்   நமக்கு புரியாமல் கடினமாயிருந்தாலும், நாம்  மனத்தாழ்மையோடும் பயபக்தியோடும் அதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். வேதத்தில் புதைந்திருக்கும்   இரகசியங்களை  கருத்தாய் தேடவேண்டும்.  ஒரே வேளையில்  நம்மால்  எல்லா வசனங்களுக்கும்  அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.  

ஆனாலும்  நாம் வேதவசனங்களை  தொடர்ந்து வாசிக்கும்போது,  பரிசுத்த ஆவியானவர்,  அதன் இரகசியங்களை நமக்குப் போதிப்பார். கர்த்தர் தம்முடைய வார்த்தைகள் மூலமாய் நம்மை உற்சாகப்படுத்துவார்.   கர்த்தர்மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம் உறுதிப்படும். 

எசேக்கியேலின் தரிசனங்கள் புரிந்துகொள்ள முடியாமல்  குழப்பமாயிருக்கிறது.  ஆனாலும்  அவருடைய பிரசங்கச் செய்தி மிகவும் தெளிவாகயிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளின்  மீறுதல்களை  அவர்களுக்கு  எடுத்து சொல்லுவதே எசேக்கியேலின் நோக்கம். அவர்கள்  சிறையிருப்பிலிருக்கும்போது, தங்களுடைய பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும். தங்களைத் தாழ்த்தவேண்டும்.   தங்களுடைய பாடுகளை நினைத்து  கர்த்தரிடத்தில் விவாதம்பண்ணக்கூடாது.  

யூதர்கள்  பாபிலோன் தேசத்து சிறையிருப்பில் ஒடுக்கப்பட்டாலும்,  கர்த்தருடைய வார்த்தைகளை  அவர்களுக்கு  வெளிப்படுத்தி சொல்ல, தீர்க்கதரிசிகளும் அவர்களோடு கூடயிருந்தார்கள்.  யூதர்கள்  சிறைப்பட்டதினால்   புறஜாதியார்கள் இஸ்ரவேல் ஜனங்களையும், இஸ்ரவேலின் தேவனையும் ஏளனம்பண்ணினார்கள்.  இவற்றிற்கு மத்தியில் கர்த்தருடைய தீர்க்கதரிசிகள், அவருடைய ஜனத்திற்கு கர்த்தருடைய வார்த்தைகளை தீர்க்கதரிசனமாய்ச் சொல்லி, அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் கர்த்தருக்கு சாட்சியாய் ஜீவித்தார்கள். 

எசேக்கியேல்  கர்த்தருடைய  கடிந்து சொல்லும் வார்த்தைகளை  யூதாவின் மனுஷருக்கு  தைரியமாய்ச் சொன்னார்.  அவரிடத்தில் கலக்கமில்லை. பயமுமில்லை. ஆனாலும் எசேக்கியேல் தன்னுடைய    புஸ்தகத்தின்  இறுதிப் பகுதியில், யூதர்களுக்கு  ஆறுதலான வார்த்தைகளை  சொல்லுகிறார். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை அவர்களுக்கு உறுதிபண்ணுகிறார்.  கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மீது கிருபையாகவும், இரக்கமாகவும் இருக்கிறார் என்பதை  சிறையிருப்பிலுள்ள யூதர்களுக்கு தெளிவுபடுத்துகிறார்.  

எசேக்கியேல்  தீர்க்கதரிசன புஸ்தகத்தின்  முதல் மூன்று அதிகாரங்களில், யூதாஜனங்களுடைய பாவங்களினிமித்தம், எசேக்கியேல் அவர்களைக் கடிந்துகொள்கிறார். தேவனுடைய  நீதியான நியாயத்தீர்ப்பு அவர்கள்மீது  இன்னும் அதிகமாய் வரும் என்று எச்சரிக்கிறார்.

எசேக்கியேல் 4-24 ஆகிய அதிகாரங்களில், எசேக்கியேல் யூதர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லுகிறார்.   எசேக்கியேல் 25-35 ஆகிய அதிகாரங்களில், இஸ்ரவேல் தேசத்தை  சுற்றிலுமிருக்கிற அண்டை தேசத்தாருக்கும்  கர்த்தருடைய வார்த்தை அறிவிக்கப்படுகிறது.  கர்த்தர்  புறஜாதியாரின் அழிவை  எசேக்கியேல்  மூலமாய் வெளிப்படுத்துகிறார். 

எசேக்கியேல் 36-48 ஆகிய அதிகாரங்களில் கர்த்தருடைய இஸ்ரவேல் ஜனங்கள் மறுபடியுமாக மீட்டுக்கொள்ளப்படுவார்கள் என்றும்,  எருசலேம் நகரமும்,  தேவாலயமும்  திரும்பவும் கட்டப்படும் என்றும் எசேக்கியேல் கர்த்தருடைய வார்த்தைகளை தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார். 

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகம் கி.மு. 622 - 600 ஆம் வருஷத்தில் பாபிலோன் தேசத்தில் எழுதப்பட்டது.

இதை எசேக்கியேல் தீர்க்கதரிசி எழுதினார் என்பதற்கு இந்தப் புஸ்தகத்திலேயே ஆதாரங்கள் உள்ளன. (எசே 1:3; எசே 24:24).

சிறையிருப்பிலுள்ள இஸ்ரவேல் புத்திரர்கள் பல பாவங்களைச் செய்கிறார்கள். அவர்களைக் கடிந்து கூறுமாறு கர்த்தர் எசேக்கியேலுக்குக் கூறுகிறார். இஸ்ரவேல் புத்திரர்கள் கர்த்தருக்கு எதிராகத் தொடர்ந்து கடின இருதயத்தோடு இருக்கிறார்கள். கர்த்தருடைய வார்த்தைக்கு எதிராகக் கலகம் பண்ணுகிறார்கள். ஆகையினால் கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்கு எதிராக எசேக்கியேல் மூலமாக வருகிறது. 

பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வார்த்தைகளைக் கூறுமாறு எசேக்கியேலை ஏவினார். எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்கள் பலவற்றை அவர் ஊமைக்கூத்து வடிவில் உபமான அடையாளங்களாக நடித்துக் காண்பிக்கிறார். 

எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்களை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவையாவன:

1. இஸ்ரவேலின் சிறையிருப்பும், எருசலேமின் பூரண அழிவும், அதற்கான காரணங்களும். (எசே 1-24) 

2. இஸ்ரவேலுக்கு எதிராக மற்ற தேசத்தார் பாவம் செய்ததற்காகவும், கலகம் பண்ணியதற்காகவும் அவர்கள்மீது நியாயத் தீர்ப்பு.            (எசே 25-32).

3. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போதும், அர்மெகதோன் யுத்தத்தின் போதும், இவற்றிற்கு முன்பாகவும் இஸ்ரவேலுக்கு நேரிடப் போவதாகக் கூறப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனங்கள். இத்துடன் பாபிலோன்மீது வரும் நியாயத்தீர்ப்புகளும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. (எசே 33-39) 

4. ஆயிரம் வருஷ அரசாட்சியின் தேவாலயம், இஸ்ரவேல்மீது மேசியாவின் நித்திய ஆளுகை ஆகியவற்றைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள். இந்தப் பகுதியில் ஆயிரம் வருஷத்துக்கு முந்திய காலத்தைப் பற்றி எந்தத் தீர்க்கதரிசனமும் கூறப்படவில்லை.            (எசே 40-48).

எசேக்கியேல் தீர்க்கதரிசி புஸ்தகத்தில் கூறப்பட்டுள்ள மூன்றாம், நான்காம் பகுதியிலுள்ள தீர்க்கதரிசனங்களின் விவரம்.

1. இஸ்ரவேல் தேசத்தார் இரண்டாம் முறையாகவும், இறுதியாகவும் பாலஸ்தீனத்தில் ஒரு தேசமாகக் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். பரலோகத்திலிருந்து மேசியா வரும்பொழுது அவருடைய வருகைக்காக இவர்கள் காத்திருப்பார்கள். தேவன் இஸ்ரவேல் ஜனத்தாரை மீட்டுத் திரும்பவும் ஒரு தேசமாக ஸ்தாபிப்பார்.          (எசே 34:11-31; எசே 36:1-15,23-38;  எசே 37:1-28)

2. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது நடைபெறும் அர்மெகதோன் யுத்தம். (எசே 38:1-39:20)

3. ஆயிரம் வருஷத்து ஆராதனைக்காகவும், நித்திய ஆராதனைக்காகவும் மேசியா தேவாலயத்தை மறுபடியும் கட்டுவார். இது கிறிஸ்துவின் தலைநகரமாக இருக்கும். பூமியில் நித்திய காலமாக அவர் ஆட்சி புரியும் ஸ்தலமாகவும் அது இருக்கும்.   (எசே 40:5-43:12)

4. பூமியிலுள்ள லேவியர், ஆசாரியர்கள் ஆகியோரின்கீழ் இஸ்ரவேல் புத்திரர் செலுத்தும் பலிகளும், காணிக்கைகளும், ஆசரிக்கும் பண்டிகைகளும். (எசே 43:13-44:31; எசே 45:9-25; எசே 46:1-24)

5. பரிசுத்த பங்கு அல்லது தேசத்தில் கர்த்தருடைய பங்கு.           (எசே 45:1-8)

6. தேவாலயத்திலிருந்து புறப்பட்டு வரும் ஆயிரம் வருஷத்து நதியும், நித்திய நதியும். (எசே 47:1-12)

7. இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு ஆயிரம் வருஷத்து அரசாட்சியிலும், நித்திய காலத்திலும் தேசம் பங்கு பிரித்துக் கொடுக்கப்படுவது. (எசே 47:13-48:29)

8.  ஆயிரம் வருஷத்து புதிய எருசலேமும், பூமியிலுள்ள நித்திய எருசலேமும் (எசே 48:30-35)

எசேக்கியேல் தீர்க்கதரிசி புஸ்தகத்தின் நோக்கம்:

1. எசேக்கியேலின் காலத்திலிருந்த பக்தியற்ற யூதர்களுக்கு கர்த்தருடைய நியாயத் தீர்ப்பைக் கூறி அவர்களை எச்சரித்து, கர்த்தரிடத்தில் அவர்களை வழிநடத்துவது.

2. கர்த்தரிடத்தில் பக்தியாக இருப்பவர்களைத் தொடர்ந்து கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஜீவிக்குமாறு உற்சாகப்படுத்துவது.

3. இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாகக் கலகம் பண்ணிய தேசத்தார்மீது கர்த்தருடைய தண்டனையை அறிவிப்பது.

4. வருங்காலத்தில் இஸ்ரவேல் தேசம் மறுபடியும் ஸ்தாபிக்கப்படுவதையும், பூமியின்மீது மேசியாவின் ஆளுகை நித்தியமாக இருக்கும் என்பதையும் அறிவிப்பது.

பொருளடக்கம்

 ஒ. தரிசனமும் ஊழியமும்  

1. தலைப்பு, ஆசிரியர், பொருள், வரலாற்றுப் பின்னணி (1:1-3)

2. தேவனுடைய மகிமையைப் பற்றிய முதலாவது தரிசனம்  

(1) மேகத்தின் ஐந்து அம்ச தரிசனம் (1:4)

(2) கேருபீனைப் பற்றி நாற்பத்திரண்டு அம்ச விளக்கம் (1:5-21)

(3) மண்டலம் (1:22)

(4) கேருபீனைப் பற்றி நான்கு அம்ச விளக்கம்    (1:23-25)

(5) தேவனைப் பற்றி ஐந்து அம்ச விளக்கம்  (1:26-28)

3. எசேக்கியேலின் ஊழியம்  

(1) எசேக்கியேல் சாஷ்டாங்கமாக விழுகிறான் - ஆவியானவர் காலூன்றி நிற்கச் சொல்லுகிறார் (2:1)

(2) ஆவியானவரால் நிரப்பப்படுகிறார் (2:2)

(3) முதலாவது ஊழியம் - ஜனங்களின் ஐந்து அம்ச சுபாவம் (2:3-5)

(4) எசேக்கியேல் உற்சாகப் படுத்தப்படுகிறார் (2:6-7)

(5) புஸ்தகச்சுருள் (2:8-3:3)

(6) இரண்டாம் ஊழியம் - ஜனங்களின் ஐந்து அம்ச சுபாவம் (3:4-7)

(7) எசேக்கியேல் உற்சாகப்படுத்தப் படுகிறார் (3:8-9)

(8) மூன்றாவது ஊழியம் - ஜனங்கள் (3:10-11)

(9) மகிமையைப் பற்றிய இரண்டாவது தரிசனம் - கீழ்ப்படிதல், உயர எடுத்துக்கொள்ளப்படுதல் (3:12-14)

(10) வருகை - ஏழு நாள் பிரமிப்பு (3:15-16)

(11) நான்காவது ஊழியம் - இஸ்ரவேல் வம்சத்தாருக்கு காவலாளனாக வைக்கப்பட்டான் (3:17-21)

(12) மகிமையைப் பற்றிய மூன்றாவது தரிசனம் - கீழ்ப்படிதல், பிரயாணம் (3:22-23)

  ஒஒ. அடையாளங்கள் - பாபிலோனிய சிறையிருப்பைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்  

1. பரிசுத்த ஆவியானவர் எசேக்கியேலை மறுபடியும் நிரப்புகிறார் (3:24)

2. ஊமையின் அடையாளம் - தேவன் பேசும்வரையிலும் கடிந்து கொள்ளக் கூடாது (3:25-27)

3. செங்கலின் அடையாளம் - எருசலேம் முற்றுகையிடப்படப் போவதன் விளக்கம் (4:1-2)

4. இருப்புச்சட்டியின் அடையாளம் - எருசலேமின்மீது முற்றுகை அதிகரிக்கும் (4:3)

5. முன்னூற்றுத் தொன்னூறு நாட்கள் இடதுபக்கமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும் - இஸ்ரவேல் தண்டிக்கப் படுவதற்கு அடையாளம் (4:4-5)

6. நாற்பது நாட்கள் வலதுபக்கமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும் - யூதா தண்டிக்கப்படுவதற்கு அடையாளம் (4:6)

7. அடையாளம் - திறந்த புயம் - தனக்கு வரும் அழிவைத் தவிர்ப்பதற்கு எருசலேமிற்கு உதவுவார் யாருமில்லை (4:7-8)

8. அடையாம் - தீட்டான உணவு - சிறையிருப்பில் இஸ்ரவேல் அசுத்தமான அப்பத்தைச் சாப்பிடுவார்கள் (4:9-13)

9. அடையாளம் - அசுத்தமான உணவை அளவோடு சாப்பிடுவார்கள் - எருசலேமில் உண்டாகப்போகும் பஞ்சத்திற்கு அடையாளம் (4:14-17)

10. அடையாளம் - சவரகன் கத்தி  

(1) யூதாவின் அழிவு (5:1-4)

(2) நியாயத்தீர்ப்பிற்குக் காரணம் - பாவங்கள்  (5:5-7)

(3) நீதியான தண்டனைகள் (5:8-11)

(4) மூன்று வழிகளில் அழிவு - அக்கினி, பட்டயம், சிறையிருப்பு (5:12)

(5) மொத்த அழிவு (5:13-17)

11. அடையாளம்  

(1) இஸ்ரவேலின் பர்வதங்களுக்குத் தீர்க்கதரிசனம் - பத்து அம்ச நியாயத்தீர்ப்பு (6:1-7)

(2) மீதமாக இருப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் (6:8-10)

12. அடையாளம் - அடிக்கும் கைகளும் தட்டும் கால்களும் - யூதாவிற்கு நியாயத்தீர்ப்பு வரும் (6:11-14)

13. இஸ்ரவேல் தேசத்திற்கு தீர்க்கதரிசனம்  

(1) ஐந்து அம்ச நியாயத்தீர்ப்பு இரண்டு முறை திரும்பக் கூறப்படுகிறது (7:1-9)

(2) மூன்று வழிகளில் நியாயத்தீர்ப்பு - பட்டயம், கொள்ளைநோய், பஞ்சம் (7:10-15)

(3) மீதியாக இருப்பவர்கள் இரட்சிக்கப் படுவார்கள் (7:16-22)

14. சங்கிலியின் அடையாளம் சிறையிருப்பைக் குறிக்கும் - பதினைந்து அம்ச நியாயத் தீர்ப்பு (7:23-27)

 ஒஒஒ. தரிசனங்கள் - மீட்பின் தரிசனம்  

1. மகிமையைப் பற்றிய நான்காவது தரிசனம் - யூதாவின் பாவங்களைப் பார்ப்பதற்கு தரிசனத்தில் எருசலேமிற்கு எடுத்துச் செல்லப்பட்டான் (8:1-4)

2. தேவாலயத்தில் தீட்டுக்கள்  

(1) எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகங்கள் (8:5)

(2) அறிவிப்பு - பெரிய பாவங்கள் (8:6-7)

(3) விக்கிரகத்தின் அறை (8:8-11)

(4) அறிவிப்பு - பெரிய பாவங்கள் (8:12-13)

(5) தம்மூத்திற்காக அழும் ஸ்திரீகள் (8:14)

(6) அறிவிப்பு - பெரிய பாவங்கள் (8:15)

(7) சூரியனை நமஸ்கரிப்பவர்கள் (8:16)

(8) எல்லாவற்றையும்விட பெரிய பாவம் - திராட்சைக் கிளை (8:17)

3. இந்த பாவங்களுக்கு நியாயத்தீர்ப்புக்கள்  

(1) அறிவிக்கப்படுகிறது (8:18)

(2) நியாயத்தீர்ப்பு கட்டளையிடப்படுகிறது - மீட்கப்படுவதற்காக நீதிமான்களுக்கு அடையாளம் போடுகிறார்கள் (9:1-6)

(3) நியாயத்தீர்ப்பு நிறைவேறுகிறது - யூதாவை அகற்ற பாபிலோனுக்கு தூதர்களின் உதவி கிடைக்கிறது (9:7-11)

(4) மகிமையும் ஐந்தாவது தரிசனமும் - எருசலேமின்மீது பலிபீடத்து அக்கினித்தழல் (10:1-7)

5. கேருபீனைப் பற்றி முப்பது அம்ச விளக்கம் (10:8-22)

6. பிரபுக்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்  

(1) துராலோசனை சொல்லும் இருபத்தைந்து மனுஷர்கள் (11:1-3)

(2) ஐந்து அம்ச நியாயத்தீர்ப்பு (11:4-13)

(3) •தூரமாய் போகும்போது உண்மையான பாதுகாப்பு ((11:14-16)

(4) மீதியாக இருப்பவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள் (11:17-21)

(5) ஆயிர வருஷ ஆட்சி வரையிலும் எருசலேமிலிருந்து மகிமை அகன்று சென்றது (11:22-25)

 ஒய. அடையாளங்கள் - பாபிலோனிய சிறையிருப்பைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்  

1. அடையாளம்  

(1) பரதேசத்திற்கு பிரயாணப்படுதல் (12:1-7)

(2) முக்கியத்துவம் - சிறையிருப்பு (12:8-15)

(3) மீதியாக இருப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் (12:16)

2. அடையாளம்  

(1) புசிப்பதும், குடிப்பதும் (12:17-18)

(2) முக்கியத்துவம் - பாழாதல் (12:19-20)

3. பழமொழி - நியாயத்தீர்ப்பு விரைவாக நிறைவேறும் (12:21-25)

4. உரைத்தல் - தீர்க்கதரிசனம் விரைவாக நிறைவேறும் (12:26-28)

5. தீர்ககதரிசிகளுக்கும் தீர்க்க தரிசினிகளுக்கும் எதிரான தீர்க்கதரிசனம்  

(1) தீர்க்கதரிசிகளின் பாவங்கள் (13:1-7)

(2) அவர்களுடைய ஆறு அம்ச நியாயத்தீர்ப்பு (13:8-9)

(3) அவர்களுடைய அடையாளச் சுவர் - பலவீனமானது  விழுந்து போகும் நிலையில் உள்ளது (13:10-16)

(4) தீர்க்கதரிசினிகளின் பத்து பாவங்கள் (13:17-19)

(5) அவர்களுடைய ஐந்து அம்ச நியாயத்தீர்ப்பு (13:20-23)

6. மூப்பர்களுக்கு தீர்க்கதரிசனம்  

(1) அவர்கள் தேவனிடம் விசாரித்தார்கள் (14:1-3)

(2) தேவனுடைய பதிலுரை  

(அ) அவர்களுடைய விக்கிரகாராதனை வெளிப்படுத்தப்படுகிறது (14:4-7)

(ஆ) விக்கிரகாராதனைக்காரருக்கு நியாயத்தீர்ப்பு (14:8)

(இ) தீர்க்கதரிசிகள்மீது நியாயத்தீர்ப்பு (14:9-11)

7. நான்கு நியாயத்தீர்ப்புக்கள்  

(1) பஞ்சம் - காரணம் - இரக்கமில்லை (14:12-14)

(2) துஷ்ட மிருகம் - இரக்கமில்லை (14:15-16)

(3) பட்டயம் - இரக்கமில்லை (14:17-18)

(4) கொள்ளைநோய் - இரக்கமில்லை (14:19-20)

(5) ஒருவாதையில் இரக்கமில்லை என்றால் நான்கு வாதைகளில் இரக்கமேயிராது (14:21)

(6) மீதியாக இருப்பவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் (14:22-23)

8. அடையாளம்  

(1) எரிந்துபோன திராட்சைச் செடி (15:1-5)

(2) முக்கியத்துவம் - நியாயத்தீர்ப்பு (15:6-8)

9. குழந்தையின் அடையாளம்  

(1) பிறப்பு (16:1-6)

(2) வளர்ந்து பெரியவளாகிறாள் (16:7)

(3) திருமணம் (16:8)

(4) ஐசுவரியம், அழகு, புகழ் (16:9-14)

(5) யூதாவின் இருபத்தைந்து பாவங்கள் (16:15-34)

(6) இருபத்தினான்கு அம்ச நியாயத்தீர்ப்பு (16:35-43)

(7) பழமொழி - யூதாவின் பாவம் (16:44-46)

(8) யூதாவின் பத்து அம்ச பாவம் (16:47-52)

(9) இஸ்ரவேலை மறுபடியும் கூட்டிச் சேர்த்தல் (16:53-55)

(10) யூதாவின் பாவங்கள் (16:56-59)

(11) இஸ்ரவேலின் மீட்பு - புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்படுகிறது (16:60-63)

10. இரண்டு கழுகுகளைப் பற்றிய உவமை  

(1) முதலாவது கழுகு - நேபுகாத்நேச்சார் (17:1-6)

(2) இரண்டாவது கழுகு - பார்வோன் (17:7-8)

(3) இது செழிக்குமா? - சிதேக்கியாவின் கலகம் (17:9-10)

(4) முக்கியத்துவம்  

(அ) யோயாக்கீனின் சிறையிருப்பு (17:11-14)

(ஆ) சிதேக்கியாவின் கலகம் - தன் நம்பிக்கையை எகிப்தின்மீது வைக்கிறான் (17:15-21)

(இ) மேசியாவின்கீழ் தாவீதின் இராஜ்ஜியம் மறுபடியும் ஸ்தாபிக்கப்படுகிறது (17:22-24)

 ய.   பிரசங்கங்கள் - மீட்பைப் பற்றிய தீர்க்கதரிசனம்  

1. தனி நபர் பொறுப்பைப் பற்றிய பிரசங்கம்  
(1) வசனங்கள் - இஸ்ரவேலில் பழமொழி (18:1-2)

(2) எல்லா மனுஷரும் சமம் (18:3-4)

(3) நீதிமானான தந்தை - நீதிமானின் பதினாறு அம்ச நீதி - அவன் பிழைப்பான் (18:5-9)

(4) நீதிமானான தந்தையின் துன்மார்க்கனான குமாரன் - அவனுடைய பன்னிரெண்டு பாவங்கள் - அவன் மரிப்பான் (18:10-13)

(5) துன்மார்க்கனான தந்தையின் நீதிமானான குமாரன் - அவனுடைய பன்னிரெண்டு அம்ச நீதி - அவன் பிழைப்பான் (18:14-17)

(6) அவனுடைய துன்மார்க்கமான தந்தை - தன்னுடைய பாவங்களுக்காக அவன் மரிப்பான் (18:18)

(7) மனந்திரும்புவதிலும் பின்மாற்றத்திலும் தனிநபர் பொறுப்பு (18:19-24)

(8) எல்லா மனுஷரும் சமம் (18:25-28)

(9) நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்படுகிறது (18:29-30)

(10) முடிவுரை - அழைப்பு (18:31-32)

2. இஸ்ரவேலின் பிரபுக்களுக்காக புலம்பல்  

(1) தாய் (19:1-2)

(2) யோவாகாஸ் (19:3-4)

(3) யோயாக்கீம் (19:5-9)

(4) தாயும் கொப்புகளும் சிறைப்பிடித்துச் செல்லப்படுகிறார்கள் (19:10-12)

(5) சிதேக்கியா (19:13-14)

3. மூப்பர்களுக்கு தீர்க்கதரிசனம்  

(1) அவர்கள் தேவனிடம் விசாரித்தார்கள் (20:1)

(2) தேவனுடைய பதிலுரை - இஸ்ரவேலின் தோல்விகள்  

(அ) தேவனுடைய ஆசீர்வாதங்கள் - எகிப்தில் கலகம் (20:2-8)

(ஆ) தேவனுடைய ஆசீர்வாதங்கள் - வனாந்தரத்தில் கலகம் (20:9-13)

(இ) தேவனுடைய ஆசீர்வாதங்கள் - புதிய சந்ததியாரின் கலகம் (20:14-26)

(ஈ) தேவனுடைய ஆசீர்வாதங்கள் - கானானில் அவர்களுடைய பிதாக்களின் கலகம் (20:27-29)

(உ) அவர்களுடைய கலகம் (20:30-33)

(ஊ) வருங்காலத்தில் கூட்டிச்சேர்க்கப் படுவதும் நியாயத்தீர்ப்பும் (20:34-38)

(எ) குற்றச்சாட்டு (20:39)

(ஏ) வருங்கால மீட்பு (20:40-44)

 யஒ. அடையாளங்கள் - பாபிலோனிய சிறையிருப்பைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்  

1. தென்திசைக் காட்டில் அக்கினியின் அடையாளம் - நியாயத்தீர்ப்பு (20:45-49)

2. உருவின பட்டயத்தின் அடையாளம் - மொத்த அழிவு (21:1-5)

3. பெருமூச்சின் அடையாளம் - பாடுகள் (21:6-7)

4. கூர்மையான பட்டயத்தின் அடையாளம் - மொத்த அழிவு (21:8-11)

5. அலறுதல், அடித்தல் ஆகியவற்றின் அடையாளம் - ஆளுகிறவர்கள் அழிக்கப் படுவார்கள் (21:12-13)

6. கையோடே கைகொட்டுவதன் அடையாளம் - பெரிய பாதாளம் (21:14-17)

7. யூதாவின்மீது நியாயம் தீர்ப்பதற்கு பாபிலோன் தேவனுடைய பட்டயமாக இருக்கிறது  

(1) வழிப்பிரிவில் பட்டயம் (21:18-23)

(2) யூதாவின்மீது நியாயத்தீர்ப்பு - மேசியா வரையிலும் இராஜா ஒருவருமில்லை (21:24-27)

(3) அம்மோன்மீது நியாயத்தீர்ப்பு (21:28-32)

8. இஸ்ரவேலுக்கு எதிராக நியாயத்தீர்ப்பு  

(1) அவளுடைய இருபது பாவங்கள் (22:1-12)

(2) ஐந்து அம்ச நியாயத்தீர்ப்பு (22:13-16)

9. களிம்பின் அடையாளம் - பாவத்திற்குத் தண்டனை (22:17-22)

10. இஸ்ரவேலுக்கு எதிரான தீர்க்கதரிசனம்  

(1) நான்கு வகுப்புக்களின் இருபது பாவங்கள் (22:23-29)

(2) பரிந்து பேசுபவர் ஒருவருமில்லை - நியாயத்தீர்ப்பு (22:30-31)

11. அகோலாள், அகோலிபாள் ஆகியோரைப் பற்றிய உவமை  

(1) எகிப்தில் இருவரும் செய்த வேசித்தனம்      (23:1-4)

(2) அசீரியாவோடு சமாரியாவின் வேசித்தனம் - சிறையிருப்பு (23:5-10)

(3) அசீரியாவோடு யூதாவின் வேசித்தனம் (23:11-12)

(4) அசீரியா, பாபிலோன் ஆகியவற்றோடு யூதாவின் வேசித்தனம் (23:13-21)

(5) முப்பத்திரண்டு அம்ச நியாயத்தீர்ப்பு (23:22-35)

(6) அகோலாள், அகோலிபாள் ஆகியோரின் எட்டு பாவங்கள் (23:36-49)

12. யூதாவிற்கு எதிரான தீர்க்கதரிசனம்  

(1) கொதிக்கும் கொப்பரையின் உவமை (24:1-5)

(2) முக்கியத்துவம் - நியாயத்தீர்ப்பு (24:6-14)

13. அடையாளம்  

(1) புலம்ப வேண்டாம் (24:15-19)

(2) முக்கியத்துவம் நியாயத்தீர்ப்பு (24:20-27)

 யஒஒ. ஏழு புறஜாதி வல்லமைகளுக்கு எதிராக தீர்க்கதரிசனங்கள்  

1. அம்மோனுக்கு எதிராக (25:1-7)

2. மோவாபிற்கு எதிராக (25:8-11)

3. ஏதோமிற்கு எதிராக (25:12-14)

4. பெலிஸ்தியாவிற்கு எதிராக (25:15-17)

5. தீருவிற்கு எதிராக  

(1) தீருவின் அழிவு 

(அ) நியாயத்தீர்ப்பிற்குக் காரணம் (26:1-2)

(ஆ) நேபுகாத்நேச்சார் மூலமாக அழிவு      (26:3-11)

(இ) அலெக்ஸôண்டர் மூலமாக அழிவு (26:12-14)

(ஈ) தீருவின் வீழ்ச்சிக்காக தேசங்கள் புலம்புகிறது (26:15-21)

(2) தீருவிற்காக புலம்பல்  

(அ) பெருமையும் தீருவின் இருப்பிடமும் (27:1-4)

(ஆ) தீருவின் கப்பற்படை (27:5-9)

(இ) தீருவின் இராணுவம் (27:10-11)

(ஈ) தீருவின் வியாபாரிகள் (27:12-25)

(உ) தீருவின் அழிவு (27:26-27)

(ஊ) தீருவிற்காக புலம்பல் (27:28-36)

(3) தீருவின் பிரபுவின்மீது நியாயத்தீர்ப்பு - இரண்டாம் இத்தோபாலாஸ்  

(அ) அவனுடைய பெருமை (28:1-6)

(ஆ) பாபிலோன் மூலமாக அவனுடைய நியாயத்தீர்ப்பு (28:7-10)

(4) தீருவின் இராஜாவிற்காக புலம்பல் - சாத்தான் (28:11-19)

6. சீதோனுக்கு எதிராக 

(1) நியாயத்தீர்ப்பும் காரணமும் (28:20-24)

(2) இஸ்ரவேலின் மீட்பு (28:25-26)

7. எகிப்திற்கு எதிராக 

(1) உடனடி நியாயத்தீர்ப்பு (29:1-5)

(2) நியாயத்தீர்ப்பின் காரணம் (29:6-9)

(3) நாற்பது ஆண்டு கால அழிவு (29:10-12)

(4) நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பு மீட்பு - இது மறுபடியும் இஸ்ரவேலுக்கு நம்பிக்கையாக இராது (29:13-16)

(5) எகிப்து நேபுகாத்நேச்சாரிடம் ஒப்புக் கொடுக்கப்படும் (29:17-21)

(6) கர்த்தருடைய நாளில் (30:1-9)

(7) பாபிலோன் மூலமாக உடனடி நியாயத்தீர்ப்பு (30:10-19)

(8) எகிப்து பாபிலோனோடு செய்த யுத்தத்தில் தேவன் எகிப்திற்கு எதிராக இருக்கிறார் (30:20-26)

(9) பார்வோனுக்கு எதிராக தீர்க்கதரிசனம்      

(அ) கேள்வி - யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்   (31:1-2)

(ஆ) அசீரியரின் உயர்வு (31:3-9)

(இ) அசீரியரின் தாழ்வு - அழிவு (31:10-14)

(ஈ) அசீரியருக்காக புலம்பல் (31:15-17)

(உ) கேள்வி - அசீரியரின் தாழ்வு, அழிவைப் போன்ற நியாயத்தீர்ப்பு (31:18)

(10) பார்வோனுக்காக புலம்பல்  

(அ) பாலசிங்கத்திற்கு ஒப்பானவன் (32:1-2)

(ஆ) வலை - பாபிலோன் மூலமாக நியாயத்தீர்ப்பு (32:3-16)

(11) எகிப்திற்காக புலம்பல்  

(அ) எகிப்து பாதாளத்திற்கு இறங்கும் (32:17-21)

(ஆ) பாதாளத்தில் அசீரியர்கள் (32:22-23)

(இ) பாதாளத்தில் ஏலாமியர்கள் (32:24-25)

(ஈ) பாதாளத்தில் மோசேக்கும் தூபாலும் (32:26-28)

(உ) பாதாளத்தில் ஏதோமியர்கள் (32:29)

(ஊ) பாதாளத்தில் சீதோனியர் (32:30)

(எ) பார்வோனும் எகிப்தும் மற்றவர்களோடு சேர்ந்து பாதாளத்திற்குப் போகும் (32:31-32)

 யஒஒஒ.  பிரசங்கங்கள் - மீட்பைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்  

1. காவற்காரனைப் பற்றிய பிரசங்கம்  

(1) காவற்காரன் தெரிந்தெடுக்கப்பட்டான் (33:1-2) 

(2) அவனுடைய பொறுப்பு (33:3-6)

(3) எசேக்கியேல் தேவனுடைய காவற்காரன் (33:7)

(4) அவனுடைய பொறுப்பு (33:8-9)

(5) இஸ்ரவேலுக்கு பொருந்தும் (33:10-16)

(6) கர்த்தருடைய வழி (33:17-20)

2. எருசலேம் பிடிக்கப்பட்டது (33:21-22)

3. மீதியாக இருப்பவர்களுக்கு தீர்க்கதரிசனம்  

(1) அவர்களுடைய ஆறு பாவங்கள் (33:23-26)

(2) அவர்களுடைய ஆறு அம்ச நியாயத்தீர்ப்பு (33:27-29)

4. பின்வாங்கிப்போன யூதாவினால் எசேக்கியேல் விளையாட்டுப்பொருளாக ஆக்கப்பட்டான் (33:30-33)

5. மேய்ப்பர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்  

(1) அவர்களுடைய பதினாறு பாவங்கள் (34:1-6)

(2) அவர்களுடைய ஆறு அம்ச நியாயத்தீர்ப்பு (34:7-10)

(3) மந்தையின் இருபது அம்ச மீட்பு (34:11-16)

(4) மந்தையிலிருந்து கள்ள மேய்ப்பர்கள் பிரிக்கப்படுகிறார்கள் (34:17-22)

  (5) இருபது அம்ச மீட்பு - தாவீதின் இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படுகிறது (34:23-31)

6. ஏதோமிற்கு எதிரான தீர்க்கதரிசனம்  

(1) அவளுடைய ஐந்து அம்ச நியாயத்தீர்ப்பு (35:1-4)

(2) நியாயத்தீர்ப்பிற்குக் காரணம் (35:5)

(3) அவளுடைய பத்து அம்ச நியாயத்தீர்ப்பு (35:6-9)

(4) நியாயத்தீர்ப்பிற்குக் காரணம் (35:10)

(5) அவளுடைய ஐந்து அம்ச நியாயத்தீர்ப்பு (35:11-15)

7. இஸ்ரவேலின் மலைகளுக்கு தீர்க்கதரிசனம்  

(1) விரோதியின் பழித்துரை (36:1-3)

(2) தேவனுடைய பதிலுரை - தேசத்தின் இருபது அம்ச மீட்பு (36:4-12)

(3) விரோதியின் பழித்துரை (36:13)

(4) தேவனுடைய பதிலுரை - தேசத்தின் ஐந்து அம்ச மீட்பு (36:14-15)

8. இஸ்ரவேலுக்கு தீர்க்கதரிசனம்  

(1) அவளுடைய கடந்த காலப் பாவங்களும் நியாயத்தீர்ப்புக்களும் (36:16-21)

(2) கூட்டிச்சேர்க்கப்படுவதன் நான்கு அம்சங்கள் (36:22-24)

(3) பதினான்கு அம்ச மனந்திரும்புதல் (36:25-28)

(4) இஸ்ரவேல் தேசத்தின் ஆறு அம்ச மீட்பு (36:29-30)

(5) இஸ்ரவேலின் சஞ்சலம் (36:31-32)

(6) இஸ்ரவேல் தேசத்தின் ஆறு அம்ச மீட்பு (36:33-36)

(7) இஸ்ரவேலின் பெருக்கம் (36:37-38)

9. உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கு  

(1) தரிசனம் (37:1-2)

(2) கேள்வி - பதில் (37:3)

(3) கட்டளை - எட்டு அம்ச தீர்க்கதரிசனம்    (37:4-6)

(4) கீழ்ப்படிதல் - ஆறு அம்ச விளைவு (37:7-8)

(5) கட்டளை - நான்கு அம்ச தீர்க்கதரிசனம்    (37:9)

(6) கீழ்ப்படிதல் - நான்கு அம்ச விளைவு   (37:10)

(7) முக்கியத்துவம் - இஸ்ரவேலின் முழு குடும்பத்தாரும் மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் (37:11-14)

10. அடையாளம்  

(1) இரண்டு கோல்கள் ஒரே கோலாகும்படி இசைக்கப்படுகிறது (37:15-18)

(2) முக்கியத்துவம்  

(அ) மேசியா, தாவீது ஆகியோரின்கீழ் இஸ்ரவேலும் யூதாவும் மீட்கப்படுவதன் இருபத்தினான்கு அம்சங்கள் (37:19-25)

(ஆ) புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப் பட்டது - பத்து அம்ச வாக்குத்தத்தம் (37:26-28)

ஒல. அர்மகெதோனில் புறஜாதி வல்லமைகளுக்கு எதிரான தீர்க்கதரிசனம்  

1. கோகு தோற்கடிக்கப்படும் (38:1-7)

2. கடைசி நாட்களில் மீட்கப்பட்ட பாபிலோன் மீது கோகு படையெடுக்கும் (38:8-9)

3. கோகின் நோக்கம் (38:10-13)

4. படையெடுப்பில் தேவனுடைய நோக்கம் (38:14-16)

5. அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும் (38:17)

6. அர்மகெதோனில் கோகின் இருபத்திரண்டு அம்ச அழிவு (38:18-39:7)

7. கொள்ளைப்பொருள் - ஏழு வருஷங்களுக்கு எரிபொருள் (39:8-10)

8. அர்மகெதோனுக்குப் பின்பு இறந்த சடலங்களை அடக்கம்பண்ணுவதற்கு ஏழு மாதங்கள் ஆகும் (39:11-16)

9. தேவனுடைய விருந்து (39:17-21)

10. தேவனுடைய நோக்கம் (39:22-24)

11. இஸ்ரவேல் மறுபடியும் கூட்டிச்சேர்க்கப்பட்டு மனந்திருந்தும் (39:25-29)

 ல. ஆயிர வருஷ வாசஸ்தலமும் பங்கும்  

1. மீட்பைக் காண்பதற்குத் தரிசனத்தில் பாலஸ்தீனாவிற்கு புறப்பட்டுப்போதல் (40:1)

2. வருங்கால எருசலேமைப் பற்றிய தரிசனம் (40:2)

3. சணற்கயிறும் அளவுகோலும் பிடித்திருக்கும் புருஷனைப் பற்றிய தரிசனம் (40:3-4)

4. ஆலயத்தின் வெளி மதில் (40:5)

5. கிழக்குமுக வாசல் (40:6-16)

6. வெளிப்பிரகாரம் (40:17-19)

7. வடதிசை வெளிவாசல் (40:20-22)

8. வடகிழக்கு உள்வாசல் (40:23)

9. தென்திசை வெளிவாசல் (40:24-26)

10. தென்திசை உள்வாசல் (40:27)

11. தென்திசை உள்வாசல் பிரகாரம் (40:28-31)

12. கீழ்திசை வாசலும் பிரகாரமும் (40:32-34)

13. வடதிசை உள்வாயிலும் பிரகாரமும் (40:35-43)

14. சங்கீதக்காரரின் அறைவீடுகள் (40:44)

15. ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களின் அறை   (40:45)

16. பலிபீடத்தின் காவலைக் காக்கிற ஆசாரியர்களின் அறை (40:46)

17. பலிபீடத்தின் பிரகாரம் (40:47)

18. மண்டபத்தின் தூண் ஆதாரம் (40:48-49)

19. தேவாலய அறைகளும் வாசல் நடைகளும் (41:1-15)

20. தேவாலய நுழைவாயில்கள் (41:16-26)

21. வடதிசை வெளிப்பிரகாரம் (42:1-8)

22. வெளிப்பிரகாரம் - கிழக்கு நுழைவாயில் (42:9-12)

23. ஆசாரியர்களின் அறைவீடுகள் (42:13-14)

24. வெளிப்பிரகாரம் (42:15-20)

25. கீழ்திசை வெளிவாயில் - தேவாலயத்திற்கு மேசியா செல்லும் நுழைவாயில் - மகிமையைப் பற்றிய ஆறாவது தரிசனம் (43:1-5)

26. நித்திய இராஜ்ஜியத்தினுடைய சிங்காசனத்தின் இடம் (43:6-7)

27. இஸ்ரவேலுக்குப் புத்திமதி (43:8-12)

28. பலிபீடம் (43:13-17)

29. பலிபீடத்தைப் பற்றிய கட்டளைகள்  

(1) பாவநிவாரணபலி (43:18-22)

(2) சர்வாங்க தகனபலிகள் (43:23-24)

(3) பலிபீடத்தின் சுத்திகரிப்பும் ஆசாரியர்களின் பிரதிஷ்டையும் (43:25-26)

(4) தொடர்ந்து பலிகள் (43:27)

30. பூட்டப்பட்டிருக்கும் கிழக்கு வெளிவாயில் (44:1-3)

31. எசேக்கியேல் வடக்குவாயில் வழியாக நுழைகிறான் - மகிமையின் ஏழாவது தரிசனம் (44:4)

32. ஆலயத்தைப் பற்றிய கட்டளைகள்  

(1) மனதிலே கவனி (44:5)

(2) இஸ்ரவேலுக்குக் கடைசி கடிந்துரை (44:6-8)

(3) லேவியர்கள் - கலகக்காரர்களின் சந்ததியார் - தடைகள் - காரணங்கள் (44:9-14)

(4) ஆசாரியர்கள் - உண்மையுள்ளவர்களின் சந்ததியார்  

(அ) ஊழியம் (44:15-16)

(ஆ) வஸ்திரங்கள் (44:17-19)

(இ) தடைகளும் பணிவிடைகளும் (44:20-27)

(ஈ) அவர்களுடைய சுதந்தரம் (44:28-31)

33. பரிசுத்த பங்கு    

(1) ஆசாரியர்களுக்கும் ஆலயத்திற்கும் (45:1-4)

(2) லேவியர்களுக்கு (45:5)

(3) நகரத்திற்கும் கிராமங்களுக்கும் (45:6)

(4) கிழக்கு, மேற்கு மூலைகள் (45:7)

(5) மீதமுள்ள தேசம் பன்னிரெண்டு கோத்திரங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் (45:8)

34. மோசேயின் பிரமாணங்கள் கடைப் பிடிக்கப்படும்  

(1) ஆளுகிறவர்கள் நீதிமானாக இருப்பார்கள் (45:9)

(2) சுமித்திரையான படிக்கற்கள் (45:10-12)

(3) காணிக்கைகள் (45:13-15)

(4) ஆயிர வருஷ ஆராதனையும் நித்திய ஆராதனையும் (45:16-17)

(5) பலிகளும் அவைகளைச் செலுத்தும் காலமும் (45:18-25)

(6) பிரபுக்களும் ஜனங்களும் செய்த ஆராதனை - ஓய்வுநாட்களும் மாதப்பிறப்புகளும் (46:1-7)

(7) பண்டிகைகளில் பிரபுக்களுக்கும் ஜனங்களுக்கும் நுழைவாயில்கள் (46:8-10)

(8) பல்வேறு பலிகள் பற்றிய பிரமாணங்கள் (46:11-15)

(9) சுதந்தரிப்புக்கள் (46:16-18)

(10) ஆசாரியர்கள் பலிகளை ஆதாயம் செய்யும் இடம் (46:19-20)

(11) வெளிப்பிரகாரத்தின் நான்கு முற்றங்கள் - ஜனங்களிடும் பலிகளைச் சமைக்கிற வீடுகள் (46:21-24)

35. ஆலயத்தில் நதி (47:1-12)

36. தேசத்தின் எல்லைகள் (47:13-23)

37. தேசத்தின் பிரிவு  

(1) பரிசுத்தப் படைப்பின் வடதிசையில் ஏழு கோத்திரத்தார்களுக்கு ஏழு பங்குகள் (48:1-7)

38. ஆசாரியர்களுக்கும் ஆலயத்திற்கும் பங்கு (48:8-12)

39. லேவியருக்குப் பங்கு (48:13-14)

40. நகரத்திற்குப் பங்கு (48:15-19)

41. பரிசுத்த பங்கு (48:20)

42. பிரபுவுக்குப் பங்கு (48:21-22)

43. பரிசுத்த படைப்பின் தென்திசையில் ஐந்து கோத்திரத்தார்களுக்கு ஐந்து பங்குகள் (48:23-29)

44. பரலோகத்திலுள்ள எருசலேமைப் போன்று பூலோகத்திலுள்ள எருசலேம் நாற்சதுரமாயிருக்கும் (48:30-35)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.