கொலோசெயர்
முன்னுரை
கொலோசெ பட்டணம் பிரிகியா மாகாணத்திலுள்ளது. இது லவோதிக்கேயா, எராப்போலி ஆகிய பட்டணங்களுக்கு அருகாமையிலுள்ளது. இவ்விரண்டு பட்டணங்களும் கொலோ 4:13-ஆவது வசனத்தில் சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இப்பொழுது இந்தப் பட்டணங்களெல்லாம் அழிந்து தரைமட்டமாயிற்று. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பூமியில் புதைந்திருக்கிற இந்தப் பட்டணத்தை ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்தப் பட்டணத்தைப்பற்றிய செய்திகள், பசுமையான நினைவுகள் ஆகியவையெல்லாம் அப்போஸ்தலர் பவுல் கொலேசெயருக்கு எழுதின நிருபத்தில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
கொலோசெ பட்டணத்தார் மத்தியில் யூதமார்க்கத்தைச் சேர்ந்த கள்ளப்போதகர்கள் சத்தியத்தைப் புரட்டுகிறார்கள். இவர்கள் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கிறிஸ்துவின் கிருபையை மறுதலிக்கிறார்கள். இவர்களைக் குறித்து கொலோசெயர்கள் எச்சரிப்போடிருக்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு பவுல் இந்த நிருபத்தை அவர்களுக்கு எழுதுகிறார்.
கொலோசெயர்கள் தங்கள் விசுவாசத்தில் உறுதியாய்த் தரித்திருக்கிறார்கள். பவுல் இந்த நிருபத்தை எழுதும்போது அவர் ரோமாபுரியிலுள்ள சிறைச்சாலையில் கட்டப்பட்டிருக்கிறார். அவருடைய சரீரம்தான் கட்டப்பட்டிருக்கிறது. தேவனுடைய வார்த்தையை சிறைச்சாலையால் கட்டி வைக்க முடியவில்லை. பவுல் சிறைச்சாலையில் கட்டப்பட்டிருந்தாலும் அங்கு அவர் சும்மாயிருக்கவில்லை. விசுவாசிகளுக்கு நிருபங்களை எழுதி கிறிஸ்துவின் ஊழியத்தைத் தொடர்ந்து செய்கிறார்.
பவுல் இதுவரையிலும் கொலேசெ பட்டணத்திற்குப் போனதில்லை. கொலேசெ சபையிலுள்ள விசுவாசிகளை பவுல் இன்னும் பார்த்ததில்லை. ஆனாலும் பவுல் அவர்களுக்கு நிருபம் எழுதுகிறார். இந்த நிருபத்தைப்போலவே, பவுல் ரோமாபுரியாரைப் பார்க்கமலேயே, அவர்களுக்கும் நிருபம் எழுதியிருக்கிறார்.
கொலேசெ பட்டணத்தில் ஒரு சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. பவுலுடைய ஊழியத்தின் மூலமாய் இந்தச் சபை ஸ்தாபிக்கப்படவில்லை. எப்பாப்பிராவினுடைய ஊழியத்தின் மூலமாய் இங்கு சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது (கொலோ 1:7). புறஜாதியார் மத்தியில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்குமாறு பவுல் எப்பாப்பிராவை அனுப்பியிருந்தார்.
கொலேசெ பட்டணத்திலுள்ள சபை வளர்ச்சி பெற்றிருக்கிறது. அக்காலத்திலிருந்த மற்ற சபைகளைவிட கொலோசெ சபை விசுவாசிகளுடைய எண்ணிக்கையில் அதிகரித்திருந்தது. பவுலைப்போல எப்பாப்பிரா பிரசித்திப் பெற்ற ஊழியரல்ல. சாதாரண ஊழியர்தான். அதிகமாக விளம்பரமில்லாதவர். என்றாலும் சாதாரண ஊழியக்காரராகிய எப்பாப்பிராவைக்கொண்டு, ஒரு பெரிய சபையை ஸ்தாபித்தது கர்த்தருக்குச் சித்தமாயிற்று. கர்த்தர் தம்முடைய சித்தத்தின் பிரகாரம் தம்முடைய ஊழியக்காரர்களைப் பயன்படுத்துகிறார். கர்த்தருடைய கிருபையையும், கிரியையையும் நம்மால் ஆளுகை செய்யமுடியாது. அவர் தம்முடைய சித்தத்தின் பிரகாரமும், விருப்பத்தின் பிரகாரமும் கிரியை நடப்பிக்கிறார்.
கொலேசெ பட்டணத்திலுள்ள சபையை பவுல் ஸ்தாபிக்கவில்லை. இது எப்பாப்பிரா ஸ்தாபித்த சபை. அதற்காக பவுல் அந்தச் சபையாரைப் புறக்கணித்துவிடவில்லை. அந்தச் சபையை பவுல் ஸ்தாபிக்காவிட்டாலும், அந்தச் சபையார்மீது பவுல் மிகுந்த அன்போடிருக்கிறார். பிலிப்பியரைப்போலவே, கொலோசெயரும் பவுல்மீது அன்பாயிருக்கிறார்கள். பவுல் பல இடங்களில் ஊழியம் செய்திருக்கிறார். சபைகளை ஸ்தாபித்திருக்கிறார். அங்குள்ள விசுவாசிகளெல்லாம் பவுல்மீது பிரியமாயிருக்கிறார்கள். அவர்களைப்போலவே கொலோசெயரும் பவுல்மீது பிரியமாயிருக்கிறார்கள்.
கி.பி. 64 ஆம் ஆண்டு பவுல் இந்த நிருபத்தை ரோமாபுரியிலிருந்து எழுதினார். தீகுக்கு மூலமாகப் பவுல் இந்த நிருபத்தை எபேசியருக்கும் பிலேமோனுக்கும் அனுப்பினார்.
மையக்கருத்து
1. நியாயப்பிரமாணம், மார்க்கச் சடங்குகள், லௌகிக ஞானம், மாயமான தந்திரங்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை.
2. ஜீவியத்திலும், நடத்தையிலும் இயேசு கிறிஸ்துவோடு மெய்யான பூரண ஐக்கியம்.
3. நாம் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்தவர்கள். கட்டளைகள், மார்க்கச் சடங்குகள், பண்டிகை நாட்கள், ஓய்வுநாட்கள் ஆகியவை மரித்தவருக்குப் பயனற்றவை.
4. தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதன் மூலமாக நமது பரிசுத்தம் வெளிப்படுகிறது. (கொலோ 1:23, 2:6-7; 3:1-17)
பொருளடக்கம்
ஒ. முன்னுரை
1. ஆசிரியரும் வாழ்த்துரையும் (1:1-2)
2. கொலோசேயிலுள்ள கிறிஸ்தவர்களுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம் (1:3-8)
3. கொலோசேயிலுள்ள கிறிஸ்தவர்களுக்காக ஜெபம் - கிருபையில் வளர்ச்சி பெற வேண்டும் (1:9-11)
4. தேவனுடைய கிரியையின் இரண்டு அம்சங்கள் (1:12-13)
ஒஒ. கிறிஸ்துவின் உபதேசம்
1. கிறிஸ்துவின் மீட்கும் ஊழியம் (1:14)
2. கிறிஸ்து அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமானவர் (1:15)
3. கிறிஸ்துவின் சிருஷ்டிக்கும் கிரியை (1:16)
4. கிறிஸ்து எல்லாவற்றிற்கும் முந்தினவர் (1:17)
5. கிறிஸ்து ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர் (1:18-19)
6. கிறிஸ்துவின் ஒப்புரவாக்கும் ஊழியம் (1:20-22)
ஒஒஒ. நடைமுறை உபதேசங்கள்
1. கிறிஸ்துவில் மீட்படைவதற்கு நிபந்தனை (1:23)
2. சபைக்காக பவுலின் ஊழியமும் பாடுகளும் (1:24-25)
3. உள்ளாக வாசம் செய்யும் கிறிஸ்துவின் இரகசியம் (1:26-27)
4. பவுலின் வல்லமையின் ஊழியம் (1:28-29)
5. சபைக்காக பவுலின் பாடுகளும் அதன் நோக்கமும் (2:1-3)
6. கிறிஸ்துவில் எவ்வாறு நிலைத்திருப்பது (2:4-7)
7. கிறிஸ்துவின் பரிபூரணத்தோடு லௌகிக ஞானத்தையும் மாயமான தந்திரத்தையும் சேர்க்கக் கூடாது (2:8-10)
8. தண்ணீருக்குள் ஞானஸ்நானமல்ல - கிறிஸ்துவிற்குள் ஞானஸ்நானம் - மீட்பின் இரகசியம் (2:11-13)
9. நியாயப்பிரமாணங்களையெல்லாம் கிறிஸ்து சிலுவையின்மேல் ஆணி அடித்து அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றி சிறந்தார் (2:14-17)
10. மாயமான காரியங்களுக்கும் பிசாசின் மார்க்கங்களுக்கும் எதிரான எச்சரிப்பு (2:18-19)
11. சத்தியத்திற்கு விரோதமாக இருக்கும் மார்க்க நடபடிகள் அனைத்திற்கும் விலகியிருக்க வேண்டும் (2:20-23)
12. எதை நாடவேண்டும் (3:1-3)
13. சபை எடுத்துக்கொள்ளப்படுதல் (3:4)
14. எதை அழித்துப்போட வேண்டும் (3:5-7)
15. எதைக் களைந்துபோட வேண்டும் (3:8-9)
16. எதைத் தரித்துக் கொள்ள வேண்டும் (3:10-14)
17. கிறிஸ்தவ ஜீவியத்திற்கும் ஆராதனைக்கும் ஏழு அம்ச புத்திமதி (3:15-17)
ஒய. விசுவாசிகளின் குடும்ப வாழ்வு
1. மனைவிகளின் கடமைகள் (3:18)
2. புருஷரின் கடமைகள் (3:19)
3. பிள்ளைகளின் கடமைகள் (3:20)
4. பிதாக்களின் கடமைகள் (3:21)
5. வேலைக்காரரின் கடமைகள் (3:22-25)
6. எஜமான்களின் கடமைகள் (4:1)
ய. கடைசி புத்திமதிகள்
1. ஜெபிக்க வேண்டுமென்றும் பரிசுத்தமாயிருக்க வேண்டுமென்றும் ஏழு அம்ச வேண்டுகோள் (4:2-6)
2. சுவிசேஷத்தில் ஐந்து உடன் ஊழியர்களைப் பற்றிய காரியங்கள் (4:7:11)
3. சகோதரரிடமிருந்து வாழ்த்துக்கள் (4:12-14)
4. முடிவுரை (4:15-17)
5. வாழ்த்துரையும் ஆசீர்வாதமும் (4:18)