1 தெசலோனிக்கேயர் ஒரு கண்ணோட்டம்




1தெசலோனிக்கேயர்
முன்னுரை 

தெசலோனிக்கே பட்டணம் பழங்காலத்தில்  மக்கெதோனியா தேசத்தில் பிரசித்தி பெற்ற பட்டணமாக விளங்கிற்று. அப்போஸ்தலர் பவுலுக்கு மக்கெதோனியாவில்போய் சுவிசேஷ ஊழியம் செய்யுமாறு விசேஷித்த அழைப்பு உண்டாயிற்று (அப் 16:9,10). தேவனுடைய தெய்வீக அழைப்பை ஏற்று அப்போஸ்தலர் பவுல் துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே  தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்திற்கும் நேராய் ஓடி, அங்கேயிருந்து  மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றுக்கு தலையானதும், ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்திற்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சில நாள் தங்கியிருந்தார்.  பிலிப்பி பட்டணத்தில் அப்போஸ்தலர் பவுலின் ஊழியம் மிகவும் ஆசீர்வாதமாக நடைபெற்றது. 

பிலிப்பி பட்டணத்தில் பவுலுக்கு ஆசீர்வாதத்தோடு சேர்ந்து உபத்திரவமும் உண்டாயிற்று. அந்தப் பட்டணத்தில் பவுலையும் சீலாவையும் சிறைச்சாலையில் அடைத்தார்கள். தேவன் அவர்களை அற்புதமாய் சிறைச்சாலையிலிருந்து விடுவித்தார். அங்குள்ள சகோதரர்கள் பவுலுக்கு ஆதரவாயிருந்தார்கள். அதன்பின்பு பவுல்  பிலிப்பி பட்டணத்திலிருந்து மற்ற இடங்களுக்கு ஊழியம் செய்ய புறப்பட்டுப்போனார். 

பிலிப்பி பட்டணத்திலிருந்து அம்பிபோலியா, அப்பொல்லோனியா ஆகியவற்றின் வழியாய்ப் பிரயாணம் செய்து, பவுலும் அவருடைய உடன்ஊழியரும் தெசலோனிக்கே பட்டணத்திற்கு வந்தார்கள்.  அப்போஸ்தலர் பவுல் அந்தப் பட்டணத்தில் ஒரு சபையை ஸ்தாபித்தார். பவுலும் சீலாவும் அங்கு ஊழியம் செய்கையில், அந்தப் பட்டணத்தார்  இவர்களுக்கு விரோதமாகக் கலகம் செய்தார்கள். அங்குள்ள விசுவாசிகள் பவுலையும் சீலாவையும் பத்திரமாகப் பாதுகாத்து,  பெரேயாவுக்கு அனுப்பினார்கள். 

பவுல் அங்கு  தீமோத்தேயுவையும் சீலாவையும் விட்டுவிட்டு, அங்கிருந்து அத்தேனே பட்டணத்திற்குப் புறப்பட்டுப்  போனார்.  சீலாவும்  தீமோத்தேயுவும் அத்தேனே  பட்டணத்திற்கு வந்தபோது, பவுல் தீமோத்தேயுவை தெசலோனிக்கே பட்டணத்திற்கு அனுப்பினார்.  அவர்களுடைய சுகசெய்தியை விசாரிக்கவும்,  விசுவாசத்தில் அவர்களை உறுதிபண்ணவும் பவுல் தீமோத்தேயுவை அங்கு அனுப்பினார்        (1தெச 3:2). 

பவுல் மறுபடியும் தீமோத்தேயுவை தெசலோனிக்கே பட்டணத்திற்கு அனுப்பினார்.  இந்தமுறை தீமோத்தேயுவோடுகூட சீலாவையும் சேர்த்து அனுப்பினார்.  அவர்கள் இருவரும்  மக்கெதோனியா தேசத்திலுள்ள சபைகளை விசாரிப்பதற்காகப் புறப்பட்டுப்போனார்கள். பவுலோ அத்தேனே பட்டணத்தில் தனித்திருந்தார் (1தெச 3:1). பவுல் அத்தேனே பட்டணத்திலிருந்து கொரிந்து பட்டணத்திற்குப் பிரயாணம் செய்தார்.  அங்கு அவர் ஒரு வருஷமும் ஆறுமாதமும் தங்கியிருந்து ஊழியம் செய்தார். பவுல் கொரிந்து பட்டணத்தில் தங்கியிருந்த சமயத்தில் தெசலோனிக்கே பட்டணத்திலுள்ள சபையாருக்கு இந்த நிருபத்தை எழுதினார். புதிய ஏற்பாட்டில் பவுல் எழுதிய இந்த நிருபம், கொலோசேயர் நிருபத்திற்குப் பின்பு சேர்க்கப்பட்டிருக்கிறது.  ஆனால் கால அட்டவணையைப் பார்க்கும்போது, பவுல் தெசலோனிகேயருக்கு எழுதின இந்த   நிருபமே அவர் எழுதின முதலாவது நிருபமாயிருக்கிறது. 

கி.பி. 54 ஆம் ஆண்டு பவுல் இந்த நிருபத்தை கொரிந்துவிலிருந்து எழுதினார். பவுல் எழுதிய 14 நிருபங்களில் இதுவே முதலாவது எழுதப்பட்ட நிருபமாகும்.

மையக்கருத்து

1. பவுல் ஏற்கெனவே புதிய விசுவாசிகளுக்கு உபதேசம் பண்ணியிருந்த அடிப்படை சத்தியங்களை உறுதிபண்ணுகிறார்.

2. பரிசுத்தத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமென்று புத்தி கூறுகிறார்.

3. கிறிஸ்துவிற்குள் ஏற்கெனவே நித்திரையடைந்திருக்கிறவர்களைக் குறித்து ஆறுதல் கூறுகிறார்.

4. இந்த நிருபத்தில் கூறப்பட்டிருக்கும் சத்தியங்கள் சுமார் ஒரு மாதக்காலத்தில் உபதேசம் பண்ணப்பட்டவையாகும். (அப் 17:1-9)

5. பவுலின் ஊழியத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் புறஜாதி மார்க்கத்திலிருந்து வந்தவர்கள். பவுல் எல்லோருக்கும் தேவனுடைய வல்லமையை உபதேசம் பண்ணினார். புதிய விசுவாசிகள் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்தினார்கள்.  

6. இந்த நிருபத்தின் எல்லா அதிகாரத்திலும் கர்த்தருடைய வருகையைப் பற்றி பவுல் கூறியிருக்கிறார்.  

பொருளடக்கம்
 ஒ.  முன்னுரை 

1. ஆசிரியரும் வாழ்த்துரையும் (1:1)  

2. ஜெபமும் ஸ்தோத்திரமும் (1:2)  

 ஒஒ. முன்மாதிரியான சபை - சபையின் நான்கு அம்ச ஆசீர்வாத நிலைமை (1:3-4)  

 ஒஒஒ. முன்மாதிரியான சுவிசேஷகர் - பிரசங்கம் பண்ணியதை உறுதி பண்ணுகிறார் (1:5)  

 ஒய. முன்மாதிரியான விசுவாசிகள் - சுவிசேஷத்தை ஏற்றுக் கொண்டு அதை மற்றவர்களுக்கும் அறிவிக்கிறார்கள் (1:6-10)  

 ய.  முன்மாதிரியான ஊழியக்காரர்  

1. தைரியமும் உபத்திரவமும் (2:1-2)  

2. கண்ணியமும் பரிசுத்தமும் (2:3)  

3. நம்பிக்கையும் விசுவாசமும் (2:4)  

4. வார்த்தையில் எளிமையும் சுயநலமின்மையும் (2:5) 

5. தாழ்மையும் மற்றவரைக் குறித்த கரிசனையும் (2:6)  

6. பட்சமும் அன்பும் (2:7-8)  

7. சுயதியாகம் (2:9)  

8. பிழையில்லாத நடத்தை (2:10)  

9. பெற்றோரின் பராமரிப்பும் பயிற்சியும் (2:11-12)  

10. சுவிசேஷத்தின் வல்லமை அதை விசுவாசிக்கிற யாவருக்குள்ளும் பெலன் செய்கிறது (2:13)  

11. சத்தியத்தை எதிர்க்கும் சாத்தானோடும் துன்மார்க்கரோடும் போராட்டம் (2:14-18)  

12. பிரயாசத்திற்கு வெகுமதிகள் (2:19-20)  

 யஒ. சபையைக் குறித்து பவுலின் கரிசனை  

1. தீமோத்தேயுவின் ஊழியம் (3:1-5)  

2. தீமோத்தேயு பவுலிடம் அறிவித்தது (3:6)  

3. பவுலின் ஜெபமும் அவர்கள் விசுவாசத்தில் பரிபூரணம் அடையவேண்டும் என்னும் வாஞ்சையும் (3:7-13)  

  யஒஒ. விசுவாசிகள் நடக்க வேண்டிய விதமும் ஆனந்தபாக்கிய நம்பிக்கையும்  

1. தேவனைப் பிரியப்படுத்தி பக்தியுடன் நடக்க வேண்டும் என்னும் புத்திமதி (4:1-2)  

2. உண்மையான பரிசுத்தமாதல் (4:3-7)  

3. அன்பில் பெருக வேண்டும் என்னும் கட்டளை (4:8-10)  

4. யோக்கியமாய் நடந்து உலகத்தில் முன்மாதிரியாக ஜீவிக்க வேண்டும் (4:11-12)  

5. சபை எடுத்துக்கொள்ளப்படும் விதமும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் (4:13-18)  

 யஒஒஒ.  கர்த்தருடைய நாள்  

1. கர்த்தருடைய நாளை எவ்வாறு தெரிந்து கொள்வது (5:1-3)  

2. கர்த்தருடைய நாள் விசுவாசிகளை திருடனைப்போல பிடித்துக் கொள்ளக்கூடாது (5:4-5)   

3. கர்த்தருடைய நாளைக் குறித்து விசுவாசிகள் செய்ய வேண்டிய காரியம் (3:6-8)  

4. கர்த்தருடைய நாளுக்கு முன்பாக விசுவாசிகள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் (5:9-11)  

 ஒல. நடைமுறை உபதேசங்கள்  

1. ஊழியக்காரரை மதிக்க வேண்டும் (5:12-13)  

2. கிறிஸ்துவின் வருகையின் நிமித்தம் கிறிஸ்தவருக்கு பதினான்கு கட்டளைகள் (5:14-22)  

3. சபை எடுத்துக் கொள்ளப்படும்போது நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவை குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படவேண்டும் (5:23-24)  

  ல. முடிவுரையும் ஆசீர்வாதமும் (5:25-28)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.