உன்னத பாட்டு ஒரு கண்ணோட்டம்




உன்னதப்பாட்டு புத்தகம் ஒரு கண்ணோட்டம் 

சாலொமோனின் உன்னதப்பாட்டு  ஆவிக்குரிய சத்தியங்களை தெளிவுபடுத்துகிறது.  கிறிஸ்து சபைக்குத் தலையாகயிருக்கிறார். கிறிஸ்துவுக்கும் விசுவாசிகளுக்கும் இடையேயுள்ள நெருங்கிய ஐக்கியத்தை  உன்னதப்பாட்டு புஸ்தகம் விரிவாக விவரிக்கிறது. சாலொமோனுடைய தகப்பனாராகிய தாவீது ராஜாவும் அநேகப் பாடல்களை இயற்றியிருக்கிறார். ஆனாலும்  சாலொமோனின் பாடலுக்கும், தாவீது ராஜாவின் பாடலுக்கும் வித்தியாசமிருக்கிறது.

சாலொமோனின் உன்னதப்பாட்டு புஸ்தகத்தில் தேவனுடைய பெயர் ஒரு தடவைகூட குறிப்பிடப்படவில்லை.  புதிய ஏற்பாட்டு புஸ்தகங்களில், உன்னதப்பாட்டிலுள்ள வசனங்களில் ஒன்றுகூட மேற்கோளாகச் சொல்லப்படவில்லை. உன்னதப்பாட்டில்  ஆவிக்குரிய தியானமுமில்லை. இதிலுள்ள வசனங்கள் தேவனுடைய வெளிப்பாட்டை நேரடியாகச் சொல்லவுமில்லை. உன்னதப்பாட்டு புஸ்தகத்திலுள்ள  வசனங்களில் தேவனுடைய சத்தியம் மறைபொருளாயிருக்கிறது. 

உன்னதப்பாட்டிலுள்ள வசனங்களை கவனமாய்த் தியானிக்கவேண்டும்.  அப்போதுதான் இந்த வசனங்கள் நம்முடைய ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகயிருக்கும்.  உன்னதப்பாட்டு வசனங்களை ஆவிக்குரிய சிந்தையோடு தியானிக்கவேண்டும். வாசிக்கும்போது  நம்முடைய இருதயம் சுத்தமாயிருக்கவேண்டும். உலகப்பிரகாரமான சிந்தையோடு உன்னதப்பாட்டின் வசனங்களை வாசித்தால்,  இவை நமக்கு மரணத்திற்கேதுவான மரணவாசனையாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. 

உன்னதப்பாட்டில்  மரணவாசனையும் ஜீவவாசனையும்  வெளிப்படுவதற்கு வாய்ப்புள்ளதினால், யூதமார்க்கத்து ரபீமார்கள்   இந்தப் புஸ்தகத்தை முப்பது வயதிற்குட்பட்ட வாலிபர்கள் வாசிப்பதை ஆதரிப்பதில்லை.  வசனங்கள் பரிசுத்தமாகவும் பக்திவிருத்திக்கேதுவானதாகவும் இருக்கிறது. ஆனால் வாலிபர்கள்  அதன் பரிசுத்தத்தைப் புரிந்துகொள்ளாமல், தங்கள் ஜீவியத்தை கறைப்படுத்திக்கொள்வதற்கும் வாய்ப்புள்ளது.  வாசிக்கும்போது அவர்களுடைய மாம்ச இச்சைகள் தூண்டப்படலாம். இப்படிப்பட்ட ஆபத்துக்கள் இருப்பதினால், யூதமார்க்கத்து ரபீமார்கள்  சாலொமோனின் உன்னதப்பாட்டு புஸ்தகத்தை வாலிபர்களிடம் வாசிக்கக் கொடுப்பதில்லை.

உன்னதப்பாட்டு புஸ்தகத்தில்  ஆவிக்குரிய சத்தியங்கள் புதைந்திருக்கிறது.  அவையெல்லாமே மறைவாயிருக்கிற பொக்கிஷங்களைப் போன்றவை. தேவனோடு  ஐக்கியமாயிருப்பதற்கு இந்த வசனங்கள் நமக்கு உதவியாயிருக்கும். இந்த வசனங்களிலிருந்து  நம்மால் வசனத்தின் அர்த்தத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியாது. இவை உருவக நடையிலும்,  உவமை நடையிலும் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையினால் வசனங்களின் அர்த்தம் மறைபொருளாயுள்ளது. சத்திய வசனங்களை நேசிக்காதவர்களால்  இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. பயபக்தியோடு வாசித்தால் மாத்திரமே, வசனங்களைப் புரிந்துகொள்வதற்கு, பரிசுத்த ஆவியானவரின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.  

உன்னதப்பாட்டு ஒரு  நேசப்பாடலாகும். எபிரெய மொழியில் இதை ""எப்பிதலமியம்'' என்று சொல்லுகிறார்கள். மணவாளனுக்கும், அவருடைய மணவாட்டிக்கும்  இடையேயுள்ள அன்பும் நேசமும் இந்தப் பாடலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. தேவனுக்கும் தேவனுடைய ஜனத்திற்கும் இடையேயுள்ள நேசத்தை  இதன் மூலமாக நாம் புரிந்துகொள்ளலாம்.  

சாலொமோனின்  உன்னதப்பாட்டு புஸ்தகம் ஒரு போதக ஆகமமாகவும் இருக்கிறது.  மணவாளன் நல்ல மேய்ப்பராக சொல்லப்பட்டிருக்கிறார். யூதருடைய ஜெபாலயங்களில்  உன்னதப்பாட்டு புஸ்தகத்தின் ஆவிக்குரிய அர்த்தத்தை விளக்கிச் சொல்லுகிறார்கள். ஆதியிலே  இந்தப் புஸ்தகம் யூதருடைய சபையாருக்காகவே இயற்றப்பட்டது. தேவன் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜனங்களை,  தமக்காகத் தெரிந்துகொண்டார். அவர்களைத் தம்முடைய மணவாட்டியாக நிச்சயம் செய்து கொண்டார். 

தேவன் இஸ்ரவேல் ஜனங்களோடு  உடன்படிக்கை செய்திருக்கிறார். இந்த உடன்படிக்கை  ஒரு விவாக உடன்படிக்கையாகும். தேவன் இஸ்ரவேல் ஜனத்தார்மீது  அன்பாகயிருப்பதை நிரூபிப்பதற்கு அநேக எடுத்துக்காட்டுக்களையும்,  சம்பவங்களையும் சாலொமோன் விரிவாகச் சொல்லுகிறார். தேவன் தம்முடைய ஜனங்கள்மீது அன்பாகயிருக்கும்போது, அவர்களும்  தங்கள் தேவன்மீது அன்பாகயிருக்கவேண்டும். அவரை முழுஇருதயத்தோடும், முழுஆத்துமாவோடும் நேசிக்கவேண்டும். 

விக்கிரகாராதனை ஆவிக்குரிய விபசாரத்திற்கு  ஒப்புமையாகச் சொல்லப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளிடத்தில்  விக்கிரகாராதனை இருக்கக்கூடாது. உன்னதப்பாட்டு புஸ்தகத்தில் கர்த்தருடைய ஜனங்கள், கர்த்தரை மாத்திரமே நேசிக்கவேண்டும் என்றும்,  அவர்களுடைய நேசம் வேறு யார்மீதும் இருக்கக்கூடாது என்றும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 

மணவாட்டி என்னும் வார்த்தை  கிறிஸ்துவின் சபையைக் குறிக்கிற வார்த்தை.  இதுவே உன்னதப்பாட்டு புஸ்தகத்தின் ஆவிக்குரிய வியாக்கியானம்.  தேவனே தம்முடைய மணவாட்டியாகிய சபைக்கு மணவாளனாகயிருக்கிறார். தேவன் தம்முடைய தெய்வீக அன்பை  தம்முடைய சபையாருக்கு வெளிப்படுத்துகிறார். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் கீழிருந்தபோது  அநேக கட்டுப்பாடுகளுக்குட்பட்டிருந்தார்கள். ஆனால் இப்போதோ கர்த்தருடைய பிள்ளைகள் சுவிசேஷத்தின் கீழிருக்கிறார்கள்.  நமக்கு சுவிசேஷத்தின் மூலமாய் தேவனிடத்தில் தைரியமாய்க் கிட்டிச் சேரும் சிலாக்கியம் உண்டாயிருக்கிறது.

தேவன்  தம்மைப்பற்றி வெளிப்படுத்தும்போது, தம்மை  யூதருடைய சபையின் மணவாளராக பலவசனங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.  

""உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவே-ன் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்'' (ஏசா 54:5). 

""அக்காலத்தில் நீ என்னை இனி பாகா- என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்'' (ஓசி 2:16,19). 

கர்த்தர்  தம்முடைய மணவாட்டியிடம் பிரியமாயிருக்கிறார். ""நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும். வா-பன் கன்னிகையை விவாகம் பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம் பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்'' (ஏசா 62:4,5). 

 கிறிஸ்துவானவர் தம்முடைய சபையின்  மணவாளராகயிருக்கிறார். ""அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்'' (மத் 25:1). 

""அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரி-ருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி,      தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்'' (ரோம 7:4). 

""நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்'' (2கொரி 11:2). 

""இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப் பற்றியும் சபையைப்பற்றியும் சொல்கிறேன்'' (எபே 5:32). 

சபையானது  கிறிஸ்துவின் மணவாட்டியாகயிருக்கிறது.  சபையின் விசுவாசிகள்ஆட்டுக்குட்டியானவருடைய மணவாட்டியாக இருக்கிறார்கள். 

""நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய க-யாணம் வந்தது,'' (வெளி 19:7).

""யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது''.  "" பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன்''            (வெளி 21:2,9). 

சாலொமோனின்  உன்னதப்பாட்டு புஸ்தகத்திற்கு 45-ஆவது சங்கீதம்  ஆதாரமாயிருக்கிறது. இந்த சங்கீதத்தில் புதிய ஏற்பாட்டு சபைக்கும் கிறிஸ்துவுக்கும் இடையேயுள்ள ஐக்கியமும்  உறவும் விவரிக்கப்பட்டிருக்கிறது.  

உன்னதப்பாட்டு புஸ்தகத்தின் வசனங்களைப் புரிந்துகொள்ளவும்,  அதன் அர்த்தத்தைத் தியானிக்கவும் நமக்கு பரிசுத்த ஆவியானவரின்  உதவியும் ஒத்தாசையும் தேவை. தாவீதின் சங்கீதங்கள் சாதாரண ஜனங்களுக்கும் எளிமையாகப் புரியும்.  சாலொமோனுடைய உன்னதப்பாட்டு புஸ்தகமமோ கற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கிற அறிஞர்களுக்கும் புரிந்துகொள்ள கடினமாயிருக்கும். சாலொமோன்  இந்தப் புஸ்தகத்தில் ஆவிக்குரிய சத்தியங்களை புதைந்திருக்கிற பொக்கிஷங்களைப்போல எழுதியிருக்கிறார். கர்த்தருடைய கிருபையினாலும், பரிசுத்த     ஆவியானவருடைய உதவியினாலும், கர்த்தருடைய பிள்ளைகள் இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைத் தியானித்து, அதன் அர்த்தத்தையும், தாற்பரியத்தையும் புரிந்துகொண்டு, தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

சாலொமோனின் உன்னதப்பாட்டு புஸ்தகம் கி.மு. 1000 ஆம் வருஷத்தில் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது. சாலொமோன் உன்னதப்பாட்டு புஸ்தகத்தின் ஆசிரியர் ஆவார். 

சாலொமோன் ராஜா தன்னுடைய தேசத்தின் வடக்குப் பகுதிக்குப் போனபோது நடைபெற்ற சம்பவம் இந்தப் புஸ்தகத்தில் பாடலாக எழுதப்பட்டிருக்கிறது. சூனேம் தேசத்தில் சாலொமோன் ஆடுகளை மேய்க்கும் ஓர் அழகிய ஸ்திரீயைக் கண்டார். அவளுடைய அழகை விரும்பி அவளைத் தன்னுடைய பட்டத்து ராஜாத்தியாக ஆக்குவதற்கு அவளை எருசலேமிற்கு அழைத்து வந்திருக்கிறார்.  ஆனால் அவளோ சாலொமோன்மீது பிரியம் வைக்காமல் தன்னுடைய இனத்தில் ஆடுகளை மேய்க்கும் வேறொரு வாலிபனை விரும்புகிறாள். இறுதியில் ராஜாவின் அனுமதியோடும், அவளுடைய குடும்பத்தாரின் அனுமதியோடும் அவள் நேசித்த வாலிபனையே திருமணம் செய்து கொள்கிறாள்.

சாலொமோனின் உன்னதப்பாட்டு புஸ்தகத்தில் கிறிஸ்துவிற்கும், அவருடைய சபைக்கும் இடையிலுள்ள தொடர்பு விளக்கப்பட்டிருப்பதாக ஒருசிலர் கருத்துக் கூறுகிறார்கள். வேறுசிலரோ தூய்மையான அன்பைக் குறித்து இந்தப் புஸ்தகம் விளக்குவதாகக் கூறுகிறார்கள்.  

பொருளடக்கம்

 சூலமித்தியை அவளுடைய நேசரிடமிருந்து சாலொமோன் பிரித்து தன்னுடைய இராஜ அறைக்கு அழைத்துச் செல்கிறான் 

    1. தன்னுடைய பிரியமான நேசரைப் பற்றி சூலமித்தி தனியாக பேசுகிறாள் (1:1-4)

    2. தன்னை அவமதித்த எருசலேமின் குமாரத்திகளுக்கு சூலமித்தி பதில் கூறுகிறாள் (1:5-6)

    3. தன்னுடைய மேய்ப்பனான நேசரைப் பற்றி சூலமித்தி தனியாக பேசுகிறாள் (1:7)

    4. எருசலேமின் குமாரத்திகளுடைய பதிலுரை (1:8)

    5. சாலொமோன் சூலமித்தியை புகழ்ந்து பாராட்டுகிறான் (1:9-11)

  சூலமித்தியும் அவளுடைய மேய்ப்பனான நேசரும்  

    1. சூலமித்தி பேசுகிறாள் (1:12-14)

    2. மேய்ப்பன் பேசுகிறான் (1:15)

    3. சூலமித்தி பேசுகிறாள் (1:16-17)

    4. மேய்ப்பன் பேசுகிறான் (2:2)

    5. சூலமித்தி பேசுகிறாள் (2:3-6)

   சூலமித்தி தன்னுடைய நேசரிடமிருந்து பிரிக்கப்பட்டு இராஜ அறையில் வைக்கப்பட்டிருக்கும்போது தன்னுடைய நேசத்தைப் பற்றி எருசலேமின் குமாரத்திகளிடம் பேசுகிறாள் 

    1. தனக்கு சாலொமோன்மீது மனமாகும் மட்டும் தன்னை எழுப்பாமல் இருக்கும்படி சூலமித்தி கட்டளையிடுகிறாள்(2:7)

    2. தன்னுடைய மேய்ப்பனான நேசரோடு வெளியே போவதற்கு தனக்கு கிடைத்த முதலாவது அழைப்பை பற்றி சூலமித்தி கூறுகிறாள் (2:8-14)

    3. அவளுடைய சகோதரர்கள் அவளுக்கு திராட்சைத் தோட்டத்தில்வேலையைக் கொடுத்து அவளை வெளியே போகவிடாதவாறு தடுத்துவிடுகிறார்கள் (2:15)

    4. மாலை வேளையில் தன்னுடைய நேசர் மறுபடியும் வருவார் என்று தான் காத்திருந்ததைப் பற்றி சூலமித்தி கூறுகிறாள் (2:16-17)

    5. தன்னுடைய நேசரை அவள் தேடியதையும் காவலாளரிடம் தன் நேசரைப் பற்றி விசாரித்ததையும் சூலமித்தி கூறுகிறாள் (3:1-3)

    6. தன் நேசரை எவ்வாறு விரைவில் கண்டுபிடித்தாள் என்பதை சூலமித்தி விவரிக்கிறாள் (3:4)

    7. சாலொமோன்மீது தனக்கு மனதாகும் மட்டும் தன்னை எழுப்ப வேண்டாமென்று சூலமித்தி எருசலேமின் குமாரத்திகளிடம் மறுபடியும் கட்டளையிடுகிறாள் (3:5)

  சூலமித்தியும் அவளுடைய பிரியமான நேசரும் மறுபடியுமாக சேர்ந்து இருக்கிறார்கள் - எருசலேமில் சாலொமோனுடைய ஆடம்பரமான பவனி நடைபெறுகிறது  

    1. எருசலேமில் உள்ளவர்கள் இராஜபவனி வருவதைக் காண்பதும் அதைப் பற்றிக் கூறுவதும் (3:6-11)

    2. சூலமித்தியின் பிரியமான நேசர் இராஜஅறைக்கு வந்து அவளை விடுவிக்க வருகிறான் - சூலமித்தியின் மீது தனக்கு இருக்கும் பிரியத்தை வெளிப்படுத்துகிறான்(4:1-5)

    3. சூலமித்தி திரும்பி வருவதாக கூறுகிறாள் (4:6)

    4. சூலமித்தியின் நேசர் உடனடியாக அவளுக்கு உதவி புரிகிறான் - அவளுடைய அழகை வர்ணித்தான் (4:7-15)

    5.  தன்னிடம் இருப்பது தன்னுடைய நேசரின் மகிழ்ச்சிக்காகவே என்று சூலமித்தி கூறுகிறாள் (4:16)

    6. நான் வந்தேன் என்று மேய்ப்பனான நேசர் பதில் கூறுகிறான் (5:1)

  சூலமித்தியும் அவளுடைய பிரியமான நேசரும் பிரிந்து இருக்கிறார்கள்  

    1. எருசலேமின் குமாரத்திகளோடு சூலமித்தி பேசுகிறாள்  

        (1) தன் நேசரைப் பற்றி ஒரு சமயம் தான் கண்ட கனவை சூலமித்தி எருசலேமின் குமாரத்திகளிடம் கூறுகிறாள் (5:2-8)

        (2) எருசலேமின் குமாரத்திகள் அவளுடைய நேசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு ""மற்ற நேசரைப் பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்'' என்று சூலமித்தியிடம் கேட்கிறார்கள் (5:9)

        (3) என் நேசர் இப்படிப்பட்டவர் என்று சூலமித்தி தன் நேசரைப் பற்றி விவரிக்கிறாள் (5:10-16)

        (4) எருசலேமின் குமாரத்திகள் அப்பேர்ப்பட்ட நேசரை பார்க்க வேண்டுமென்று விரும்பி அவர் எங்கே இருக்கிறார் அவரை எங்கே காணலாம் என்று சூலமித்தியிடம் கேட்கிறார்கள் (6:1)

        (5) அவர்களுடைய எண்ணத்தை சந்தேகப்படும் சூலமித்தி அவர்களுடைய கேள்விக்கு பதில்கூறாமல் தவிர்த்து விடுகிறாள் (6:2-3)

    2. சூலமித்தி சாலொமோனிடம் பேசுகிறாள்  

        (1) சாலொமோன் ஆசை வார்த்தைகளைக் கூறி சூலமித்தியிடம் வருகிறான் (6:4-10)

        (2) சூலமித்தி அவனை சந்திக்க விரும்பாததை வெளிப்படுத்துகிறாள் (6:11-12)

        (3) சாலொமோன் சூலமித்தியிடம் தொடர்ந்து ஆசை வார்த்தைகளைப் பேசுகிறான் (6:13-7:9)

        (4) சூலமித்தி சாலொமோனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறாள் -  தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்கிறாள் - எருசலேமின் குமாரத்திகளிடம் உன் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம் என்று கூறுகிறாள் (7:10-8:3)

  முடிவுரை -

 சூலமித்தி மீட்கப்படுகிறாள் - சாலொமோனிடமிருந்து பிரிந்து தன் நேசரிடம் திரும்பி வருகிறாள் - அவளுடைய சகோதரர்கள் அவள் வருவதைக் காண்கிறார்கள்  

    1. மேய்ப்பனோடு இருப்பவர்கள் அவர்கள் வருவதைக் காண்கிறார்கள் (8:5)

    2. சூலமித்தியும் அவளுடைய நேசரும் தாங்கள் முதலாவது உறுதிமொழி எடுத்துக்கொண்ட இடத்திற்கு வருகிறார்கள் - தங்களுடைய பொருத்தனைகளைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள் (8:6-7)

    3. சூலமித்தியின் சகோதரர்கள் - தங்கள் சகோதரிக்கு வெகுமதி கொடுக்கிறார்கள் (8:8-9)

    4. சூலமித்தி தான் மதில் என்றும் கதவு அல்ல என்றும் கூறுகிறாள் (8:10-12)

    5. சூலமித்தியின் வரலாறை கூறுமாறு அவளுடைய பிரியமான நேசர் கேட்கிறார் (8:13)

    6. சூலமித்தியும் அவளுடைய நேசரும் மறுபடியும் இணைகிறார்கள் (8:14)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.