சகரியா புத்தகம் ஒரு கண்ணோட்டம்




சகரியா முன்னுரை 

சகரியா தீர்க்கதரிசியும், ஆகாய் தீர்க்கதரிசியும் கர்த்தருடைய ஊழியத்தை    ஒரே காலத்தில் செய்தவர்கள். யூதர்கள் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பின்பு, எருசலேமிலே தேவாலயத்தை  எடுத்துப்பித்துக் கட்டுகிறார்கள்.  இந்த பிந்தின ஆலயத்தின் கட்டுமான வேலைகளைச் செய்வதற்கு, இவ்விரண்டு தீர்க்கதரிசிகளும்  யூதர்களை  உற்சாகப்படுத்துகிறார்கள்.  

“”அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்’’ (எஸ்றா 5:1). 

ஆகாய் தீர்க்கதரிசிக்கு பின்பு சகரியா தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பிக்கிறார். ஆனாலும் ஆகாய் தீர்க்கதரிசியைவிட,    சகரியா தீர்க்கதரிசியே அதிககாலத்திற்கு தீர்க்கதரிசனம் சொல்லி கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறார். கர்த்தருடைய தரிசனங்களும், வெளிப்பாடுகளும் சகரியாவுக்கு அதிகமாய்க் கொடுக்கப்பட்டது. ஆகாய் தீர்க்கதரிசியைவிட, சகரியாவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றி அதிகமாய்  தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார். 

சகரியாவின்  தீர்க்கதரிசனம்  ஆரம்பத்திலே ஒரு பிரசங்கச் செய்தியைப்போல எழுதப்பட்டிருக்கிறது. சகரியா புஸ்தகத்தில்,  முதலாவது அதிகாரத்தின், முதல் ஐந்து வசனங்களில்  அவருடைய  தீர்க்கதரிசனத்தின் மையச்செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. 

அதன் பின்பு, ஆறாம் அதிகாரம் வரையிலும், சகரியா தான் கண்ட தரிசனங்களுக்கு விளக்கம் சொல்லுகிறார்.  தரிசனங்கள் மூலமாக சகரியாவுக்கு  பரலோகத்திலிருந்து  செய்திகள் வெளிப்படுத்தப்படுகிறது. 

யூதர்கள்  சகரியாவினிடத்தில்  உபவாசத்தைப்பற்றிக் கேட்கிறார்கள்.  ஏழாவது அதிகாரத்தில், யூதர்களுடைய ஆவிக்குரிய கடமைகளை சகரியா அவர்களுக்கு விரிவாகச் சொல்லுகிறார். அவர்கள்  கர்த்தருடைய கிருபைக்காக நம்பிக்கையோடு காத்திருக்கவேண்டும் என்று சகரியா  அவர்களுக்குப் போதிக்கிறார். 

இதன் பின்பு சகரியாவின் இரண்டு பிரசங்கச்செய்திகள் எழுதப்பட்டிருக்கிறது. இவை கர்த்தருடைய வார்த்தையின் பாரங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பிரசங்கச் செய்தி ஒன்பதாவது அதிகாரத்திலும்,  மற்றொரு செய்தி பன்னிரண்டாவது அதிகாரத்திலும் ஆரம்பமாகிறது. பாவத்தை கடிந்துகொள்வதும், மனந்திரும்பாத  பாவிகள்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் வரும் என்று எச்சரிப்பதும் சகரியாவினுடைய பிரசங்கத்தின் முக்கியமான நோக்கமாகும். 

சகரியா பாவிகளை எச்சரிக்கும்போது, கர்த்தருக்கு பயந்து ஜீவிக்கிறவர்களை உற்சாகப்படுத்துகிறார்.  அவர்களுக்கு  தேவனுடைய கிருபையும் இரக்கமும் தாராளமாய்க் கிடைக்கும் என்று ஆறுதலான வார்த்தைகளையும் சொல்லுகிறார். மேசியாவின் வருகையைப்பற்றியும், இந்தப் பூமியிலே மேசியாவின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவது பற்றியும் சகரியா தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார். 

கி.மு. 557-525 ஆம் வருஷத்தில் சகரியாவின் புஸ்தகம் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது. இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் சகரியா தீர்க்கதரிசி ஆவார். சிறையிருப்புக்குப் பின்பு ஆகாய், சகரியா, மல்கியா ஆகிய மூவரும் தீர்க்கதரிசன ஊழியம் செய்து வந்தார்கள். (சக 1:1,7; சக 4:8; சக 6:9; சக7:8).

மையக்கருத்து

1. இஸ்ரவேல் உடனடியாகவும், வருங்காலத்திலும்  பாலஸ்தீனத்தில் மறுபடியும் ஒரு தேசமாக ஸ்தாபிக்கப்படும். 

2. மேசியாவின்கீழ் இஸ்ரவேல் நித்திய தேசமாக ஸ்தாபிக்கப்படும்.

3. சகரியாவின் புஸ்தகத்தில் மேசியாவைப் பற்றிய செய்தி பிரதானமாகக் கூறப் பட்டிருக்கிறது.

4. தீர்க்கதரிசியின் தரிசனத்திற்கும், அதன் தெளிவான சிந்தனைகளுக்கும் இந்தப் புஸ்தகத்தில் முன்னுரிமை கொடுக்கப் பட்டிருக்கிறது.

5. இந்தப் புஸ்தகத்தின் ஆரம்பத்தில் பத்து தரிசனங்களைப் பற்றிக் கூறப் பட்டிருக்கிறது. (சக 1:7-6:8)

6. மறுபடியும் ஒரு தேசமாக ஸ்தாபிக்கப்பட்ட யூதாவிற்குத் தீர்க்கதரிசனங்களும், உற்சாகப்படுத்தும் செய்திகளும் கூறப்பட்டிருக்கிறது. (சக 6:9-8:23).

7. சக 9-11 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் 

(1) எல்லா சத்துருக்களிடமிருந்தும் யூதா மீட்கப்படும்.
(2) மேசியாவின் முதலாம் வருகையும், இரண்டாம் வருகையும்
(3) அந்திக்கிறிஸ்துவின்கீழ் கிரேக்கப் பேரரசு
(4) பூமிக்குரிய மழையும், ஆவிக்குரிய மழையும்.
(5) இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது நடைபெறும் அர்மெகதோன் யுத்தம்.
(6) கிறிஸ்துவின் முதலாம் வருகையின்போது அவர் மறுதலிக்கப்படுவது.
(7) கடைசி நாட்களில் இஸ்ரவேல் சிதறிப் போவதும், அவர்கள் மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்படுவதும்.

8. சக 12-14 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள்

(1) அந்திக்கிறிஸ்து எருசலேமை முற்றிக்கையிடுவது.
(2) மேசியாவின் இரண்டாம் வருகை
(3) அர்மெகதோன் யுத்தத்தில் யூதாவின் பங்கு
(4) இஸ்ரவேல் மனந்திருந்துவதும், அதன் மனமாற்றமும்.
(5) எல்லா தேசங்களின்மீதும் மேசியாவின் ஆயிரம் வருஷ அரசாட்சியும், நித்திய அரசாட்சியும்.

சகரியா புஸ்தகம் எழுதப்பட்டதற்கான நோக்கம் வருமாறு:

1. பாபிலோனிய சிறையிருப்புக்குப் பின்பு யூதா தேசம் மறுபடியும் ஸ்தாபிக்கப்படும்போது அதை உற்சாகப்படுத்துவது.

2. தங்களுடைய முற்பிதாக்களோடு கர்த்தர் செய்துகொண்ட உடன்படிக்கை வருங்காலத்தில் நிறைவேறும் என்றும், கர்த்தர் அவர்களைத் தற்காலத்திலும், வருங்காலத்திலும் ஆசீர்வதிப்பார் என்றும் உறுதி கூறுவது. 

  ஆகாய் தீர்க்கதரிசி ஊழியம் செய்துவந்த நாட்களில் சகரியா தீர்க்கதரிசனம் உரைத்துவந்தார்.  இவர் தீர்க்கதரிசியாகிய இத்தோவின் பேரன் (1:1). இவர் சிறையிருப்பில் இருந்து எருசலேமிற்கு வந்தவர்களுள் முதலாவதாக வந்திருக்கவேண்டும் (நெகேமியா 12:4,16;). இவருடைய எழுத்துக்கள் கீழ்க்கண்ட காலத்தைக் குறிக்கும்:

1. எட்டாம் மாதம் (1:1) தரியுவின் இரண்டாம் வருஷம் 

2. பதினொன்றாம் மாதம் 24-ம் நாள் (1:7) தரியுவின் இரண்டாம் வருஷம் 

3. மூன்றாம் மாதம் நான்காம் நாள் (7:1) தரியுவின் நான்காம் வருஷம்

  சகரியாவின் பிற்கால வாழ்க்கையில் 9-14 ஆகிய அதிகாரங்கள் எழுதப்பட்டிருக்கும் என்று சிலர் நம்புகின்றனர். வரப்போகிற மேசியாவைப் பற்றியும் இஸ்ரவே-ன் வருங்கால நம்பிக்கையைப் பற்றியும் இந்த அதிகாரங்களில் தீர்க்கதரிசனங்கள் தெளிவாக உரைக்கப்பட்டுள்ளன. 

சகரியாவின் தரிசனங்கள் (அதிகாரங்கள் 1-8)

1. சிவப்பு, வெள்ளை, மங்கின நிறமுள்ள குதிரைகள், நாலு கொம்புகள், தொழிலாளிகள் (அதிகாரம் 1)

2. ஒரு தூதன் எருசலேமை அளவிடுதல் (அதிகாரம் 2)

3. பிரதான ஆசாரியனாகிய யோசுவாவைச் சாத்தான் குற்றப்படுத்துதல் (அதிகாரம் 3)

4. விளக்குத் தண்டைக் குறித்த தரிசனம் (அதிகாரம் 4)

5. பறக்கிற சுருள், எப்பா, வானத்துக்கு நடுவாய் தூக்கிக்கொண்டு போகப்பட்ட இரண்டு ஸ்திரீகள் ஆகியவற்றைப்பற்றிய தரிசனம் (அதிகாரம் 5)

6. நான்கு இரதங்களும், குதிரைகளும் பற்றிய தரிசனம் (அதிகாரம் 6)

7. மாயையான உபவாசங்கள் (அதிகாரம் 7)

8. எருசலேமைப் புதுப்பித்துக் கொண்டு  வருதல் (அதிகாரம் 8) 

வருங்கால மேசியாவும் யூதாவை மறுபடியும் கொண்டு வருவதும் (அதிகாரங்கள் 9-14)

1. வரப்போகும் ராஜாவைக் குறித்த சந்தோஷமும் அவருடைய மீட்பும் (அதிகாரம் 9)

2. தமது ஜனத்தின்மீது தேவனுடைய அன்பும் பராமரிப்பும் (அதிகாரம் 10)

3. மந்தைகள் மேய்க்கப்படுவதும் மேய்ப்பர் தள்ளப்படுவதும் (அதிகாரம் 11)

4. யூதாவின் மீட்பு (அதிகாரம் 12)

5. மேய்ப்பரின் மரணமும் ஆடுகள் சிதறடிக்கப்படுவதும் (அதிகாரம் 13) 

6. கர்த்தருடைய ஆளுகை (அதிகாரம் 14)

பொருளடக்கம்

 ஒ. மீட்கப்பட்ட யூதாவிற்கு செய்தி 

1. தலைப்பு, ஆசிரியர், வரலாற்றுப் பின்னணி (1:1)

2. தேவனிடத்தில் திரும்புமாறு புத்திமதி (1:2-6) 

 ஒஒ. பத்து தரிசனங்கள்

1. முதலாவது தரிசனம்

(1) குதிரைகள் (1:7-8)
(2) தேவனுடைய தூதர்கள் (1:9-11)
(3) யூதாவின் விரோதிகள்மீது நியாயத்தீர்ப்பு (1:12-15)
(4) யூதா இன்னும் மீட்கப்படவேண்டும் (1:16-17)

2. இரண்டாவது தரிசனம் - நான்கு கொம்புகள் (1:18-19)

3. மூன்றாவது தரிசனம் - நான்கு தொழிலாளிகள் (1:20-21)

4. நான்காவது தரிசனம்

(1) அளவு நூலைப் பிடித்திருக்கும் மனுஷன் (2:1-3)
(2) மேசியாவின்கீழ் எருசலேம் (2:4-5)
(3) இஸ்ரவேல் மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்படுகிறது (2:6-9)
(4) மேசியா சீயோனில் ஆளுகை செய்கிறார் (2:10)
(5) எல்லா தேசங்களின் மனந்திரும்புதல் (2:11-12)

5. ஐந்தாவது தரிசனம்

(1) பிரதான ஆசாரியனாகிய யோசுவாவும் சாத்தானும் (3:1-2)
(2) ஆசாரியத்துவம் புதுப்பிக்கப்படுகிறது (3:3-5)
(3) யோசுவாவிற்குக் கட்டளை (3:6-7)

6. ஆறாவது தரிசனம்

(1) தேவனுடைய தாசன் - கிளை (3:8)
(2) அவருடைய அபிஷேகம் (3:9)
(3) உலகத்தின் செழுமை (3:10)

7. ஏழாவது தரிசனம்

(1) பொன் குத்துவிளக்கும் இரண்டு ஒலிவ மரங்களும் (4:1-4)
(2) ஆவியினாலும் வல்லமையினாலும் செருபாபேல் அபிஷேகம் பண்ணப் படுகிறான் (4:5-7)
(3) தேவாலயம் செப்பனிடும் வேலையைச் செருபாபேல் நிறைவு செய்ய வேண்டும் (4:8-10)
(4) ஒலிவ மரங்களின் விளக்கம் (4:11-14)

8. எட்டாவது தரிசனம்

(1) பறக்கிற புஸ்தகச்சுருள் (5:1-2)
(2) இது சாபம் (5:3-4)

9. ஒன்பதாவது தரிசனம்

(1) மரக்கால் (5:5-7)
(2) இது அக்கிரமம் (5:8)
(3) சிநேயாருக்கு மரக்கால் எடுத்துச் செல்லப்பட்டது - பாபிலோன் திரும்ப கட்டப்படும் (5:9-11)

10. பத்தாவது தரிசனம்

(1) நான்கு இரதங்களும் குதிரைகளும் (6:1-3)
(2) வானத்தினுடைய ஆவிகள் - வடதேசத்தில் தேவனுடைய நியாயத் தீர்ப்பை சாந்திபண்ணிற்று (6:4-8)

 ஒஒஒ. தீர்க்கதரிசனங்கள் - மீட்கப்பட்ட யூதாவை உற்சாகப்படுத்துவதற்கு செய்திகள்

1. அடையாளம் 

(1) யோசுவாவின் தலையில் கிரீடம் வைக்கப்பட்டது (6:9-11)
(2) மேசியா ஆயிர வருஷ ஆலயத்தைக் கட்டுவார் - அதில் ஆசாரியராகவும் இராஜாவாகவும் இருப்பார் - யோசுவாவும் தேவாலயம் செப்பனிடப்படுவதும் இதற்கு அடையாளம் (6:12-13)
(3) தேவன் யூதாவிற்கு உண்மையுள்ளவராக இருந்ததற்கு கிரீடங்கள் நினைப்பூட்டுதலாக வைக்கப்பட்டுள்ளன (6:14)
(4) சிறையிலிருந்தவர்கள் அநேகர் வந்து செருபாபேலுக்கு கட்டுவதில் உதவி புரிவார்கள் (6:15)

2. உபவாசங்களைப் பற்றி விசாரிப்பு (7:1-3)

3. தேவனுடைய பதில்

(1) அவர்களுடைய உபவாசம் பெயரளவில் இருந்தது - அவர்கள் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளுக்கு செவிகொடுக்க வேண்டும் (7:4-7)
(2) அவர்களுடைய ஜெபங்கள் ஏன் கேட்கப்படவில்லை? - அவர்களுக்கு ஏன் நியாயத்தீர்ப்பு வந்தது (7:8-14)
(3) தேவனுடைய நோக்கம் இன்னும் மாறவில்லை - இஸ்ரவேல் ஆசீர்வதிக்கப்படும் (8:1-8)
(4) மீட்கப்பட்ட யூதாவிற்கு நிபந்தனையுள்ள ஆசீர்வாதங்கள் (8:9-17)
(5) பதிலுரை (8:18-19)
(6) முழு உலகத்திற்கும் எருசலேம் ஆவிக்குரிய மையமாக இருக்கும் (8:20-22)
(7) யூதர்கள் தேசங்களுக்கு இன்னும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் (8:23)

 ஒய. இஸ்ரவேலுக்காக முதலாவது பாரம் 

1. விரோதிகளிடமிருந்து மீட்பு (9:1-8)

2. மேசியாவின் முதலாவது வருகை (9:9)

3. மேசியாவின் இரண்டாவது வருகை (9:10-11)

4. அர்மகெதோனில் அந்திக்கிறிஸ்துவிற்கு எதிராகவும் புதிய கிரேக்க சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் தேவன் யூதாவின் பாதுகாப்பாக இருக்கிறார் (9:12-17)

5. உலகப்பிரகார மழையும் ஆவிக்குரிய மழையும் (10:1-2)

6. அர்மகெதோனில் யுத்தம் பண்ணுவதற்கு யூதா பெலப்படுத்தப்பட்டது (10:3-5)

7. யூதாவும் யோசேப்பும் மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்பட்டார்கள் (10:6-8)

8. இஸ்ரவேலர்கள் சிதறிப்போனதும் கூட்டிச் சேர்க்கப்பட்டதும் (10:9-12)

9. மேசியாவின் முதலாவது வருகையும் அவர் புறக்கணிக்கப்பட்டதும் - விளைவு

(1) கோபம் (11:1-6)
(2) கோபத்தின் காரணம் 

(அ) அநுக்கிரகம், கோல்கள்  (11:7-9)
(ஆ) அநுக்கிரகம் என்னும் கோல் முறித்துப் போடப்பட்டது - மேசியாவின் இரண்டாம் வருகை வரையிலும் இஸ்ரவேலின்மீது இரக்கமில்லை (11:10-11)
(இ) மேசியா மந்தையால் விற்கப்பட்டார்  (11:12-13)
(ஈ) அப்பொழுது - கோல்கள் முறித்துப் போடப்பட்டன - இஸ்ரவேல் மறுபடியும் சிதறிப்போயிற்று (11:14)

10. அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலிடம் வந்து நல்ல மேய்ப்பனை எவ்வாறு போற்ற வேண்டுமென்று அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பான் (11:15-17)

 ய. இஸ்ரவேலுக்காக இரண்டாவது பாரம்

1. அந்திக்கிறிஸ்து இஸ்ரவேலை முற்றுகையிட்டான் (12:1-3)

2. மேசியாவின் இரண்டாவது வருகை - அர்மகெதோனில் யூதாவின் பங்கு (12:4-9)

3. இஸ்ரவேலின் மனமாற்றம்

(1) ஆவியானவர் ஊற்றப்படுகிறார் - சிலுவையில் அறையப்பட்ட மேசியா வெளிப்படுத்தப்படுகிறார் (12:10)
(2) இஸ்ரவேலின் மனந்திரும்புதல் (12:11-14)
(3) இஸ்ரவேல் சிலுவையை ஏற்றுக் கொள்கிறது (13:1)
(4) விக்கிரகாராதனையும் அசுத்த ஆவிகளும் அழிக்கப்பட்டன (13:2)
(5) கள்ளத்தீர்க்கதரிசிகள் கொலையுண்டு போனார்கள் (13:3-5)
(6) சிலுவையில் அறையப்பட்ட மேசியா வெளிப்படுத்தப்பட்டார் (13:6)
(7) இஸ்ரவேலின் மீட்பு எவ்வாறு கிரயத்திற்குக் கொள்ளப்பட்டது (13:7)

4. உபத்திரவத்தின் நோக்கம் - யூதாவிலிருந்து கலகக்காரர்கள் அகற்றப்படுவார்கள் (13:8-9)

5. கர்த்தருடைய நாள்

(1) அர்மகெதோனில் துவங்குகிறது (14:1-3)
(2) மேசியாவின் இரண்டாவது வருகை - பாலஸ்தீனத்தில் ஏற்படும் மாற்றங்கள் (14:4-7) 
(3) எருசேலமின் ஜீவதண்ணீருள்ள நதி (14:8)
(4) மேசியாவினுடைய ஆளுகையின் விஸ்தீரணம் (14:9)  
(5) பாலஸ்தீனத்தில் ஏற்படும் மாற்றங்கள் (14:10) 
அகிதூபு, அகித்தோப்பேல்
(6) எருசலேம் மீட்கப்படும் (14:11)  
(7) அர்மகெதோனில் சேனைகள் எவ்வாறு அழிக்கப் படும் (14:12-13)
(8) அர்மகெதோனில் கொள்ளைப் பொருளும் யூதாவின் பங்கும் (14:14)
(9) மிருகங்கள்மீது வாதை (14:15)
(10) கூடாரப்பண்டிகை கொண்டாடப் படுகிறது (14:16)
(11) ஆயிர வருஷ ஆட்சியில் கீழ்ப்படியாத தேசங்கள்மீது நியாயத்தீர்ப்பு (14:17-19) 
(12) இராஜ்ஜியத்தின் சுபாவம் (14:20-21)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.