ஆகாய் முன்னுரை
யூதர்கள் எழுபது வருஷங்களாக பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்தார்கள். சிறையிருப்பின் அனுபவம் யூதர்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டுபண்ணிற்று. அவர்களுடைய வரலாற்றிலும், ஒரு மாற்றமுண்டாயிற்று. கர்த்தர் தீர்க்கதரிசிகள் மூலமாக யூதர்களுக்கு சொன்ன செய்தியிலும் மாற்றமுண்டாயிற்று.
பன்னிரண்டு சிறிய தீர்க்கதரிசிகளில் ஒன்பதுபேர் சிறையிருப்புக்கு முன்பு தீர்க்கதரிசனம் சொன்னவர்கள். மீதமுள்ள மூன்றுபேரும் சிறையிருப்புக்கு பின்பு தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
யூதர்கள் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பி வந்து, பதினெட்டு வருஷங்களுக்கு பின்பு ஆகாயும், சகரியாவும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள், எருசலேமில் பாழாய்க்கிடந்த தேவாலயத்தை மறுபடியும் புதுப்பித்துக் கட்டுகிறார்கள். ஆனால் சத்துருக்களுடைய பிரச்சனைகளினால், தேவாலய கட்டுமான வேலைகளில் தடை உண்டாயிற்று. யூதர்களும் கர்த்தருடைய ஆலயத்தை உற்சாகமாய்க் கட்டாமல் சோர்ந்துபோய்விடுகிறார்கள்.
இக்காலத்தில் ஆகாய் தீர்க்கதரிசி, இத்தோவின் குமாரனாகிய சகரியா ஆகியோர் எருசலேமிலிருக்கிற யூதர்களுக்கு கர்த்தருடைய வார்த்தையை தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.
“”அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்’’ (எஸ்றா 5:1).
தடைபட்டிருக்கிற தேவாலய கட்டுமான வேலைகள் மறுபடியும் ஆரம்பிக்கப்படவேண்டும். யூதர்கள் தேவாலயத்து கட்டுமான வேலையில் தங்களை உற்சாகமாய் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். இதுவே இவர்களுடைய பிரதான செய்தி.
சகரியா தீர்க்கதரிசனம் சொல்லுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஆகாய் கர்த்தருடைய வார்த்தையை தீர்க்கதரிசனமாய்ச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனாலும் ஆகாய் தீர்க்கதரிசியைவிட, சகரியா அதிக காலத்திற்கு கர்த்தருடைய செய்தியை தீர்க்கதரிசனமாய்ச் சொன்னார்.
ஆகாய் தீர்க்கதரிசனம் சொல்லி இரண்டு வருஷங்களுக்கு பின்பு, சகரியா தீர்க்கதரிசனம் சொன்னதாக அவருடைய தீர்க்கதரிசன புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. “”தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம்மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று’’ (சக 7:1).
யூதர்கள் பாபிலோன் தேசத்து சிறையிருப்பிலிருந்து விடுதலை பெற்று, எருசலேமுக்கு திரும்பி வந்த பின்பு, யூதர்களை எண்ணித்தொகையேற்றும் பணி நடைபெற்றது. இவர்கள் பிரதான ஜெபாலயத்தில் அங்கத்தினர்களாகயிருந்தார்கள். ஆகாயும், சகரியாவும் இந்தப் பிரதான ஜெபாலயத்து அங்கத்தினர்கள்.
ஆகாயும், சகரியாவும் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்களுக்கு கர்த்தருடைய செய்தியை, தீர்க்கதரிசனமாய்ச் சொன்னபோது, அவர்கள் இயேசுகிறிஸ்துவைப்பற்றியும் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆகாய் தீர்க்கதரிசி பிந்தின ஆலயத்தின் மகிமையைப்பற்றிச் சொல்லுகிறார். சகரியா “”இதோ ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்’’ (சக 6:12) என்று இயேசுகிறிஸ்துவைப்பற்றி தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே அவதரிக்கப்போகும் நாள் சமீபமாயிற்று என்பதை சகரியா தீர்க்கதரிசனமாய்ச் சொன்னார்.
சங்கீதம் 138; 146; 147; 148 ஆகியவற்றை ஆகாயும், சகரியாவும் எழுதினார்கள் என்று செப்துவஜிந்த் பதிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
கி.மு. 557 - 525 ஆம் வருஷங்களில் ஆகாய் புஸ்தகம் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது. இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் ஆகாய் தீர்க்கதரிசி ஆவார் (ஆகாய் 1:1-3,13).
மையக்கருத்து
பாபிலோனிய சிறையிருப்புக்குப் பின்பு எருசலேமில் தேவனுடைய ஆலயம் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் இருக்கிறது. பாபிலோனிலிருந்து திரும்பி வந்தவர்கள் புதிய நம்பிக்கையோடு தேவாலயத்தைக் கட்ட வேண்டுமென்று ஆகாய் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். தேவனுடைய ஆலயம் பாழாய்க்கிடக்கும்போது ஜனங்கள் தங்களுடைய வீடுகளில் சுகமாய்க் குடியிருப்பதை ஆகாய் கடிந்து கொள்கிறார். (ஆகாய் 1:2-15).
புதிய இஸ்ரவேல் தேசத்தின் தலைவர்களுக்கு ஆகாய் கர்த்தருடைய வார்த்தையைக் கூறுகிறார். கர்த்தர் அவர்களோடு கூட இருக்கிறார். அவர்களுடைய எல்லாப் பிரச்சனைகளிலும் அவர் அவர்களுக்கு உதவி புரிகிறார். ஆகையினால் அவர்கள் திடன் கொண்டு பலமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
புதிய தேவாலயத்தின் வருங்கால மகிமையைக் குறித்தும் ஆகாய் விவரித்துக் கூறுகிறார். மேசியாவின் வருங்கால மகிமையையும், நித்திய மகிமையையும் விவரிக்கிறார். (ஆகாய் 2:1-9).
ஆயிரம் வருஷ அரசாட்சியின் முடிவில் வானங்களும், பூமியும் புதுப்பிக்கப்படும் என்னும் செய்தியும் ஆகாய் புஸ்தகத்தில் இரண்டு இடங்களில் கூறப்பட்டிருக்கிறது. (ஆகாய் 2:6,20-23, எபி12:24-28, 2பேதுரு 3:5-13) கர்த்தர் சகல ஜாதிகளாலும், விரும்பப்பட்டவராக வருவார். (ஆகாய் 2:7)
ஆகாய், சகரியா, மல்கியா ஆகிய தீர்க்கதரிசிகள் எஸ்றா, நெகேமியா எஸ்தர் ஆகியோரின் காலங்களுடன் சம்மந்தப் பட்டவர்கள் ஆவார்கள். ஆகாய் தீர்க்கதரிசியின் புஸ்தகமானது தேவனுடைய ஆலயத்தை மறுபடியும் கட்டும்படி உற்சாகமூட்டும் வார்த்தைகளடங்கிய புத்தகமாகும். நான்கு வெவ்வேறு காலங்களில் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
1. ஆறாம் மாதம் (செப்டம்பர்) முதல் நாளில் (1:1)
2. ஏழாம் மாதம் (அக்டோபர்) 21-ம் நாள் (2:1)
3. ஒன்பதாம் மாதம் (டிசம்பர்) 24ம் நாள் (2:10)
4. ஒன்பதாம் மாதம் (டிசம்பர்) 24ம் நாள் (2:20)
ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் தரியு ராஜாவின் இரண்டாம் வருஷ ஆட்சிக்காலத்தில் உரைக்கப்பட்டது. ஆகையினால் சுமார் நான்கு மாதங்கள் ஆகாய் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்திருக்க வேண்டும்.
புத்தகத்தின் பொதுவான சுருக்க வருணனை
1. தேவாலத்தைக் கட்டுமாறு ஆகாயின் கட்டளையும், ஜனங்கள் அதற்குச் செவி கொடுத்தலும் (அதிகாரம் 1)
2. ஆகாயின் மூலமாக தேவன் ஜனங்களை வேலை செய்ய உற்சாகப் படுத்துகிறார் (அதிகாரம் 2)
பொருளடக்கம்
ஒ. காலமும் பொருளும் (1:1-2)
ஒஒ. மீட்கப்பட்ட யூதாவிற்கு தீர்க்கதரிசனம்
1. ஏழு அம்ச நியாயத்தீர்ப்பு - காரணம் (1:3-11)
2. வேலை உற்சாகப்படுத்தப்படுகிறது (1:12-15)
ஒஒஒ. தேவாலயங்களைப் பற்றிய செய்தி
1. சாலொமோனின் தேவாலயம் பற்றியது (2:1-5)
2. வானத்தையும் பூமியையும் அசையப் பண்ணுவார் (2:6)
3. மேசியாவின் இரண்டாம் வருகையும் ஆயிர வருஷ தேவாலயமும் (2:7-9)
ஒய. ஆசாரியர்களுக்குச் செய்தி
1. கேள்விகள் - சரியான பதில்கள் (2:10-13)
2. யூதாவிற்குப் பொருந்தும் (2:14-19)
ய. புறஜாதி தேசங்களை அகற்ற மேசியாவின் இரண்டாம் வருகை (2:20-23)