மல்கியா முன்னுரை
கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் அவருடைய சபைக்கு சாட்சிகளாயிருக்கிறார்கள். தீர்க்கதரிசிகள், தங்களுடைய காலத்திலும், இனிமேல் வரப்போகிற காலத்திலும், நடைபெறும் சம்பவங்களை கர்த்தருக்கு சாட்சியாகச் சொன்னார்கள். கர்த்தருடைய அதிகாரத்திற்கு அவருடைய தீர்க்கதரிசிகள் சாட்சி சொன்னார்கள்.
கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் பாவத்திற்கும், பாவிகளுக்கும் விரோதமாக கர்த்தருடைய வார்த்தைகளை சாட்சியாய் அறிவித்தார்கள். கர்த்தர் தம்முடைய ஜனத்திற்கு கிருபையாகக் கொடுக்கிற தெய்வீக பராமரிப்புக்களுக்கு தீர்க்கதரிசிகள் சாட்சிகளாயிருக்கிறார்கள். மேசியாவின் நாட்களில், கர்த்தருடைய சபையிலே, அவருடைய கிருபை வெளிப்படும் என்பதையும் தீர்க்கதரிசிகள் சாட்சியாய்ச் சொன்னார்கள்.
சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்கள் இரண்டாம் தேவாலயத்தைக் கட்டினார்கள். இக்காலத்தில் நாற்பது வருஷங்களுக்கு தீர்க்கதரிசன ஊழியம் நடைபெற்றது என்று யூதருடைய பாரம்பரிய வரலாறு சொல்லுகிறது. அந்த தீர்க்கதரிசிகளில் மல்கியா தீர்க்கதரிசி, தீர்க்கதரிசனத்தின் முத்திரையாயிருக்கிறார். பழைய ஏற்பாடு மல்கியா தீர்க்கதரிசியோடு நிறைவுபெறுகிறது. பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளின் காலம் மல்கியாவோடு முடிவு பெறுகிறது.
மல்கியா தீர்க்கதரிசி எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றோ அல்லது அவருடைய வம்சவழியைப்பற்றியோ வேதாகமத்தில் ஒன்றும் சொல்லப்படவில்லை. மல்கியா என்னும் பெயருக்கு “”என் தூதன்’’ என்று பொருள் (மல் 3:1) தீர்க்கதரிசிகள் எல்லோருமே கர்த்தருடைய தூதர்களாயிருக்கிறார்கள்.
சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்கள் கர்த்தருடைய ஆலயத்தை சுறுசுறுப்பாய்க் கட்டவில்லை. அவர்கள் ஆலயக்கட்டுமான வேலையிலே மெத்தனம் காட்டினார்கள். இதற்காக ஆகாய் தீர்க்கதரிசியும், சகரியா தீர்க்கதரிசியும் யூதர்களைக் கடிந்துகொண்டார்கள்.
மல்கியா தீர்க்கதரிசியின் காலத்தில் இரண்டாம் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் தேவாலய ஆராதனையில் கவனம் செலுத்தவில்லை. அவர்களிடத்தில் பரிசுத்தமில்லை. கர்த்தருடைய நியமங்களை அவர்கள் பயபக்தியோடு கடைப்பிடிக்கவில்லை. இதன் நிமித்தமாய் மல்கியா தீர்க்கதரிசி யூதர்களைக் கடிந்துகொள்கிறார்.
மல்கியா மேசியாவின் வருகையைப்பற்றியும் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார். மேசியாவின் வருகை சமீபித்திருக்கிறது. ஜனங்கள் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக பயபக்தியோடு காத்திருக்கிறார்கள். அதே வேளையில் அவர்கள் மோசேயின் பிரமாணத்தையும் கைக்கொள்ளவேண்டும் என்று மல்கியா அவர்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார்.
கி.மு. 557-525 ஆகிய வருஷங்களில் மல்கியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது. இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் மல்கியா தீர்க்கதரிசி ஆவார் (மல் 1:1)
மையக்கருத்து
1. இஸ்ரவேல் புத்திரர்மீது தேவனுடைய குற்றச்சாட்டுகள். ஆனால் தேவனுடைய குற்றச்சாட்டு நியாயமானவை அல்ல என்று இஸ்ரவேல் புத்திரர் மறுத்துப் பேசுகிறார்கள்.
2. மல்கியா புஸ்தகத்தில் தேவனுடைய 14 குற்றச்சாட்டுகளும் இஸ்ரவேல் புத்திரரின் பத்து முரண்பாடான பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
3. கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப் போனவனுடைய ஜீவியத்தில் மாய்மாலமான ஆவி கிரியை நடப்பிக்கும். அவன் எதையும் கேள்வி கேட்பான். தேவனுடைய வார்த்தைகளையும் நம்பாமல் விவாதம் பண்ணுவான். மனுஷரிடத்திலும், கர்த்தரிடத்திலும் தவறு காண முயற்சி பண்ணுவான்.
4. இஸ்ரவேல் புத்திரரின் ஏராளமான பாவங்களின் நிமித்தம் அவர்கள் கடிந்து கொள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய 32 பாவங்கள் மல்கியா புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது.
5. ஆகாயும், சகரியாவும் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்கள்மீது தேவனுடைய நியாயத் தீர்ப்பை முன்னறிவித்தார்கள். அவர்களை விட மல்கியா கடினமான வார்த்தைகளினால் இஸ்ரவேல் புத்திரரைக் கடிந்து கொள்கிறார்.
6. மல்கியாவின் புஸ்தகத்தில் இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையையும், இரண்டாம் வருகையையும் குறித்த அற்புதமான தீர்க்கதரிசனங்கள் இடம் பெற்றுள்ளன. (மல் 3:1-5)
7. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு எலியா, ஏனோக்கு, ஆகியோரின் ஊழியங்களைப் பற்றியும், இந்தப் புஸ்தகத்தில் விவரிக்கப் பட்டிருக்கிறது. (மல் 3:17-4:6).
மல்கியா புஸ்தகத்தின் முக்கியமான நோக்கம் வருமாறு:
1. சிறையிருப்பிலிருந்து திரும்பி வரும் யூதர்களுடைய பாவங்களின் நிமித்தமாக அவர்களைக் கடிந்து கொள்வது.
2. சிறையிருப்பிலிருந்து யூதர்கள் திரும்பி வரும்போது அவர்கள் ஒருதேசமாக மறுபடியும் ஸ்தாபிக்கப்படப்போவதை அவர்களுக்கு அறிவிப்பது.
3. சிறையிருப்பிலிருந்து வந்த யூதர்களுடைய முற்பிதாக்களின் பாவங்களைக் கர்த்தர் பொறுத்துக் கொள்ளவில்லை. அது போலவே இவர்களுடைய பாவங்களையும் அவர் பொறுத்துக் கொள்ளமாட்டார் என்று அவர்களுக்கு எடுத்துக்கூறுவது.
4. யூதருடைய முற்பிதாக்கள் பாவம் செய்ததினால் அழிந்துபோனார்கள், அவர்களுடைய தேசம் அழிந்துபோயிற்று, அவர்கள் சிறையிருப்புக்குட்பட்டார்கள் என்னும் செய்தியைச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கு அறிவிப்பது.
5. அவர்கள் தொடர்ந்து பாவம் செய்தால், அவர்கள்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும் என்று எச்சரிப்பது.
6. இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையின்போதும், இரண்டாம் வருகையின் போதும் நடைபெறும் நிகழ்ச்சிகளை முன்னறிவிப்பது.
பொருளடக்கம்
ஒ. தேவன் யாக்கோபை சிநேகித்து, ஏசாவை வெறுத்தார் (1:1-5)
ஒஒ. இஸ்ரவேலின் பாவங்கள்
1. ஆசாரியர்களின் பாவங்கள்
(1) தேவனுடைய நாமத்தை அசட்டை பண்ணினார்கள் (1:6)
(2) அவர்களுடைய பாவமான காணிக்கைகள் (1:7-10)
(3) தேவனுடைய ஆயிர வருஷ நோக்கம் - உலகளாவிய உண்மையான மார்க்கம் (1:11)
(4) அவர்களுடைய மாய்மாலமும் தேவனுக்கு அவர்கள் செலுத்திய கெட்டுப்போன காணிக்கைகளும் (1:12-14)
(5) ஆசாரியர்களுக்குக் கட்டளைகள் (2:1-2)
(6) ஆசாரியர்கள்மீது நியாயத்தீர்ப்பு (2:3-4)
(7) லேவியரோடு உடன்படிக்கை (2:5-7)
(8) கீழ்ப்படியாமையும் நியாயத்தீர்ப்பும் (2:8-9)
2. ஜனங்களுடைய பாவங்கள்
(1) தேவனுக்கும் மனுஷனுக்கும் யூதா செய்த துரோகம் (2:10-11)
(2) துரோகத்திற்கு நியாயத்தீர்ப்பு (2:12)
(3) யூதாவின் மாய்மாலம் (2:13)
(4) மனைவிகளுக்குத் துரோகம் - எச்சரிப்பு (2:14-16)
(5) தேவன் அநீதியானவரென்று அவர்மீது குற்றச்சாட்டு (2:17)
ஒஒஒ. மேசியாவின் முதலாவது வருகையும் இரண்டாவது வருகையும்
1. மேசியாவின் முதலாவது வருகை (3:1)
2. மேசியாவின் இரண்டாவது வருகை - கலகக்காரர்கள் இஸ்ரவேலிலிருந்து அகற்றப்படுவார்கள் (3:2-3)
3. அப்பொழுது - இஸ்ரவேல் மீட்கப்படும் (3:4)
4. எல்லோருக்கும் பரிபூரண நீதி கிடைக்கும் - யூதாவின் எட்டு பாவங்கள் (3:5-6)
ஒய. இஸ்ரவேலின் பாவங்கள்
1. யூதாவின் பின்மாற்றங்கள் (3:7)
2. தேவனை வஞ்சித்தது - சாபம் (3:8-9)
3. கட்டளையும் அறைகூவலும் (3:10)
4. ஏழு அம்ச ஆசீர்வாதம் (3:10-12)
5. தேவனுக்கு எதிராக முறுமுறுப்பும் கலகமும் (3:13-14)
6. துன்மார்க்கர் உயர்த்தப்பட்டு நியாயத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் (3:15)
ய. கர்த்தருடைய நாள்
1. கர்த்தருடைய நாளுக்கான ஆயத்தம் - மீதியாக இருக்கும் உண்மையுள்ளவர்கள் (316
2. தமது சம்பத்தைச் சேர்ப்பதற்கு மேசியாவின் இரண்டாவது வருகை (3:17)
3. இஸ்ரவேல் மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்படுகிறது (3:18)
4. தேவபக்தியற்றவர்களின் அழிவு (4:1)
5. நீதிமானுக்கு இரட்சிப்பு (4:2)
6. அர்மகெதோனில் துன்மார்க்கர் நீதிமான்களுடைய உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் (4:3)
7. யூதாவிற்கு கடைசி புத்திமதி (4:4)
8. மேசியாவின் முதலாவது வருகைக்கு முன்பு யூதாவிற்கு கூறப்பட்ட கடைசி தீர்க்கதரிசனம் - மேசியாவின் இரண்டாவது வருகைக்கு முன்பாக யூதாவிற்கு ஊழியம் செய்வதற்கு எலியா திரும்பி வருவார் (4:5-6)