ரோமர் நிருபம் ஒரு கண்ணோட்டம்




ரோமர் முன்னுரை

பரிசுத்த வேதாகமத்தில் அறுபத்தாறு புஸ்தகங்கள் கோர்வையாகக் கோர்க்கப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் முப்பத்தொன்பது புஸ்தகங்களும், புதிய ஏற்பாட்டில் இருபத்தேழு புஸ்தகங்களும் இடம்பெற்றுள்ளன. பழைய ஏற்பாட்டில் தாவீதின்  சங்கீத புஸ்தகம் மிகவும் பிரபல்யமானது. அதுபோலவே புதிய ஏற்பாட்டில் பவுல் எழுதின நிருபங்கள் மிகவும் பிரபல்யமானவையாகும். 

புதிய ஏற்பாட்டில் பலர் எழுதின நிருபங்கள்  இடம்பெற்றிருந்தாலும், பவுலின் நிருபங்களே  எண்ணிக்கையில் அதிகம். பவுலின் வார்த்தைகள்  பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்கிறது. பவுல் எழுதியிருக்கிற ஒவ்வொரு நிருபமும் ஜீவனுள்ளது. இருதயத்தை உணர்த்தக்கூடியது.  பவுல் தன்னுடைய நிருபங்களில் ஆவிக்குரிய சத்தியங்களை, மிகவும் எளிமையான மொழிநடையில், வாசிப்போர் எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதியிருக்கிறார்.  

பவுல் இரட்சிக்கப்படுவதற்கு முன்பாகவே யூதமார்க்கத்தின் வேதத்தை கற்று அறிந்தவர்.  கமாலியேலின் பாதபடியில் வேதத்தைப் படித்த பரிசேயர். கிறிஸ்துவின் சீஷர்களை அதிகமாய்த் துன்பப்படுத்தினார். யூதமார்க்கத்தில் பக்திவைராக்கியமாகயிருந்தார். பவுல் இரட்சிக்கப்பட்ட பின்பு, அவருக்கிருந்த வேதஅறிவு, வேதாகம சத்தியங்களை நிருபங்களாக எழுதுவதற்கு பெருமளவில் உதவிற்று. இரட்சிக்கப்பட்ட பின்பு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சாதுரிய ஞானத்தினால் பிரசங்கம்பண்ணினார். பக்திவைராக்கியத்தோடு  கர்த்தருக்காக ஊழியம் செய்தார். ஆத்தும ஆதாய பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டார். 

பவுல் எழுதின நிருபங்களில், அவர் ரோமருக்கு எழுதின நிருபம் முதலாவதாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது. காலவரிசையின்படி,  ரோமருக்கு எழுதின நிருபத்தைவிட, வேறு சில நிருபங்கள் முந்தி எழுதப்பட்டவையாகும். ஆனாலும் பவுல் ரோமருக்கு எழுதின நிருபமே  முதலாவது கோர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிருபத்திலுள்ள சத்திய உபதேசங்களே, இந்த நிருபம் முதலாவது கோர்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம். கிறிஸ்தவ உபதேசங்கள் அனைத்தையும் பவுல் இந்த நிருபத்தில் விரிவாகவும் முழுமையாகவும் எழுதியிருக்கிறார்.

பவுல் கொரிந்து பட்டணத்திலிருந்து, கி.பி. 56-ஆம் வருஷத்தில் இந்த நிருபத்தை எழுதினார். பவுல் இந்த நிருபத்தை எழுதுகிற சமயத்தில் அவர் கொரிந்துவிலிருந்து எருசலேமுக்கு பிரயாணம் செய்துகொண்டிருக்கிறார். எருசலேமிலுள்ள தரித்திரருக்கு உதவி செய்வதற்காக பவுல் தருமப்பணத்தை சேகரித்து தன்னோடு கொண்டுபோகிறார். 

பவுல் தன்னுடைய நிருபங்களில் வேதத்தின் ரகசியங்களையெல்லாம் தெளிவுபடுத்தி எழுதுகிறார். புரிந்துகொள்வதற்கு  கடினமான சத்தியங்களைக்கூட, பவுல் தேவனுடைய கிருபையினால், விளக்கமாக எழுதி, அதை விளங்க வைக்கிறார். 

அப்போஸ்தலர் பேதுரு, பவுல் எழுதின நிருபத்தைக்குறித்து, தான் எழுதின நிருபத்தில்  இவ்வாறு எழுதியிருக்கிறார். “”நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;  எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேத வாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்’’              (2பேது 3:15,16). 

பவுல் ரோமருக்கு எழுதின நிருபத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவில், முதல் பதினொரு அதிகாரங்களையும், இரண்டாவது பிரிவில் மீதமுள்ள அதிகாரங்களையும், இரண்டு பிரிவாகப் பிரித்து தியானிக்கலாம். முதலாவது பிரிவில் பவுல் உபதேசம் சம்பந்தமான காரியங்களை எழுதியிருக்கிறார். கடைசி ஐந்து அதிகாரங்களில் ஆவிக்குரிய ஜீவியம் ஜீவிப்பதற்குப் பிரயோஜனமாகயிருக்கும் நடைமுறை ஆலோசனைகளைப்பற்றி எழுதியிருக்கிறார். 

பவுல் உபதேசத்தைப்பற்றி எழுதும்போது, இரண்டு உபதேசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அவையாவன : 1. இரட்சிப்பின் வழி. 2. மனுஷருடைய இரட்சிப்பு, கிருபையின் தெரிந்தெடுப்பு, புறஜாதியாரும் யூதரும் இரட்சிக்கப்படுவது. பவுல் ஊழியம் செய்த காலத்தில் “”விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுவது’’ என்பது யூதர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு உபதேசமாகயிருந்தது. நியாயப்பிரமாணத்தின் கிரியையினால் மாத்திரமே மனுஷர் இரட்சிக்கப்பட முடியும் என்று யூதர்கள் நினைத்தார்கள்.  புறஜாதியாரை சபைக்குள் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்றார்கள். யூதர்கள் தங்கள் மார்க்கத்தில் மிகுந்த வைராக்கியத்தோடிருந்தார்கள். பவுல் ரோமருக்கு எழுதின நிருபத்தின் முதலாவது பகுதியில், இவ்விரண்டு உபதேசங்களையும் தெளிவுபடுத்தி எழுதியிருக்கிறார். 

பவுலின் உபதேச பகுதியைத் தொடர்ந்து,  ஆவிக்குரிய ஜீவியத்திற்குப் பிரயோஜனமாயிருக்கும் நடைமுறை ஆலோசனைகளையும் தெளிவாக எழுதியிருக்கிறார். இந்த நிருபத்தின் முடிவில் சில குறிப்பிட்ட விசுவாசிகளுக்கு  வாழ்த்துதல் சொல்லி, பவுல் இந்த நிருபத்தை எழுதி முடிக்கிறார். 

கி.பி. 58-60 ஆம் ஆண்டில் பவுல் கொரிந்துவிலிருந்து இந்த நிருபத்தை எழுதினார். இது பவுலின் ஆறாவது நிருபமாகும். ரோமாபுரிக்கு பெபேயாள் மூலமாக இந்த நிருபம் அனுப்பப்பட்டது.

மையக்கருத்து

நிருபங்களின் வரிசையில் ரோமருக்கு எழுதின நிருபம் முதலாவதாக வருகிறது. உபதேசப் பிரகாரமாகவும், வேதாகமம் கோர்க்கப்பட்டிருக்கிற பிரகாரமாகவும் இந்த நிருபம் முதலாவது வருவது சரியானது. கிறிஸ்தவத்தின் அஸ்திபார உபதேசங்களைப் பவுல் இந்த நிருபத்தில் எழுதியிருக்கிறார். ரோமருக்கு எழுதின நிருபத்தில் பவுல் எழுதியிருக்கும் உபதேசங்களை நாம் தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், கிறிஸ்தவத்தின் மெய்யான கோட்பாடுகளை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. சபையின் அஸ்திபார உபதேசத்தை இந்த நிருபத்தில் நாம் வாசிக்கிறோம். இந்த நிருபத்தில் கூறப்பட்டிருக்கும் உபதேசங்களை நாம் தவறாகப் புரிந்து கொண்டால் நமது கிறிஸ்தவ ஜீவியமே தவறானதாக இருக்கும்.

இந்த நிருபத்தில் இரண்டு மையக்கருத்துக்கள் உள்ளன. அவையாவன: 1. பாவத்திற்கு எதிராகத் தேவனுடைய கோபம் வெளிப்பட்டிருக்கிறது. 2. விசுவாசத்தின் மூலமாக வரும் நீதி நீதிமானாக்கப்படுவதற்கு ஆதாரமாக இருக்கிறது.

தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷரையும் ரோமர்கள் குற்ற உணர்வுடையவர்களாக ஆக்கிவிட்டார்கள். ஆகையினால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மனுஷருக்கு இரட்சிப்பு தேவைப்படுகிறது. ரோமருக்குப் பவுல் எழுதின இந்த நிருபத்தில் பல அதிகாரங்கள் கிறிஸ்தவ உபதேசத்தை விளக்குவதற்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது. (ரோமர் 1:16-8:39) யூதர்களோடும், புறஜாதியாரோடும் தேவன் எவ்வாறு கிரியை நடப்பிக்கிறார் என்பதும், ஒவ்வொரு காலத்திலும் தேவன் அவர்களோடு எவ்வாறு உறவு வைத்திருப்பார் என்பதும் இந்த உபதேசப்பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது. (ரோமர் 9:1-11:36) இரட்சிப்பினால் நடைமுறை வாழ்வில் ஏற்படும் விளைவுகளை ரோமர் 12:1-16:27 ஆகிய வசனங்கள் விளக்குகிறது.

பொருளடக்கம்

  ஒ.  முன்னுரை  

1. ஆசிரியர் - அழைப்பும் ஊழியமும் (1:1)  
2. தீர்க்கதரிசிகளின் மையக்கருத்து சுவிசேஷம் (1:2) 
3. சுவிசேஷத்தின் மையக்கருத்து இயேசு கிறிஸ்து (1:3-6) 
4. பவுலின் வாழ்த்துரை (1:7)  
5. நல்ல பிரயாணத்திற்காக ஜெபம் (1:8-10) 
6. பவுலின் பிரயாணத்தின் நோக்கம் (1:11-13) 
7. பவுலின் பொறுப்பு - தன்னால் இயன்ற மட்டும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க விரும்புகிறான் (1:14-15)   
8. எல்லா விசுவாசிகளுக்கும் இரட்சிப்பு உண்டாவதற்கு சுவிசேஷம் தேவபெலனாயிருக்கிறது (1:16-17) 

  ஒஒ. முழு உலகமும் தேவனுக்கு முன்பாக குற்ற உணர்வோடு இருக்கிறது  

1. தேவ கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (1:18)   
2. உலகமும் காணப்படாதவைகளும் தேவனுடைய வெளிப்பாடாகும் (1:19-20)   
3. உலகம் தேவனை விட்டு விலகிப்போனதன் பதினெட்டு நிலைகள்  

(1) தேவன் மனுஷரை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார் (1:21-23)   
(2) தேவனை விட்டு விலகிப் போனதினால் ஏற்பட்ட விளைவு - அசுத்த இச்சைகள் (1:24) 
(3) தேவன் மனுஷருடைய ஆத்துமாக்கள் தீட்டுப்பட ஒப்புக்கொடுத்தார் (1:25)   
(4) தேவனை விட்டு விலகிப் போனதினால் ஏற்பட்ட விளைவு - இச்சை ரோகங்களும் சுபாவத்திற்கு விரோதமான அநுபோகமும்  (1:26-27) 
(5) தேவன் மனுஷருடைய ஆவிகளை தீட்டுப்பட ஒப்புக்கொடுத்தார் (1:28)   
(6) தேவனை விட்டு விலகிப் போனதினால் ஏற்பட்ட விளைவு - ஆத்துமாவை அழிக்கும் 23 பாவங்கள் (1:29-31) 
(7) தேவனை மறுதலிப்பதினால் ஏற்படும் இறுதி விளைவு - தேவன் தீர்மானித்த நீதியான நியாயத் தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அதற்காக அவர்கள் பயப் படுவதில்லை (1:32) 

4. தேவ பக்தியின்மை - மன்னிக்கப்பட முடியாத பாவம்  (2:1)   

5. தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின் படியே இருக்கிறது (2:2)  

6. தேவனுடைய நியாயத்தீர்ப்பு - மனுஷனுடைய மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி இருக்கும் (2:3-6)  

7. தேவனுடைய நியாயத்தீர்ப்பு - சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாத்திற்குக் கீழ்ப் படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிர கோபாக்கினை வரும் (2:7-11)  

8. தேவனுடைய நியாயத்தீர்ப்பு - எவர்கள் நியாயப் பிரமாணத்துட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத் தீர்ப்படைவார்கள் (2:12-16)  

9. யூதனைக் குறித்த காரியம்  

(1) யூதனுடைய பத்து அம்ச நிலைமை  (2:17-20)  
(2) யூதனுடைய ஆறு அம்ச பாவமும் தேவனை விட்டு அவன் பின்வாங்கியிருப்பதும் (2:2:21-24)  
(3) விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளது (2:25-27)   
(4) உண்மையான யூதனுக்கு விளக்கம்  (2:28-29)

(5) சுவிசேஷத்திற்கு யூதனுடைய மூன்று அம்ச மறுப்புரை  

(அ) யூதனுடைய மேன்மை என்ன? (3:1-2)  
(ஆ) யூதனுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? (3:3-4) 
(இ) நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? (3:5-8)   

10. தேவனுக்கு முன்பாக முழு உலகமும் பாவத்திற்குட்பட்டிருக்கிறது   

(அ) யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட் பட்டவர்கள் (3:9)  
(ஆ) முழு உலகமும் பாவத்திற்குட் பட்டிருப்பதற்கு பதினைந்து காரணங்கள் (3:10-18)  
(இ) நியாயப்பிரமாணத்தின் நோக்கம் - உலகத்தார் யாவரையும் தேவனுக்கு முன்பாக ஆக்கினைத்தீர்ப்பிற்கு ஏதுவானவர்களாக ஆக்குகிறது  (3:19-20)  

 ஒஒஒ. இயேசு கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் - இதுவே பாவத்திற்கு பரிகாரம்                

1. மனுஷன் எவ்வாறு நீதிமானாக்கப் படுகிறான்  (3:21-26) 
2. மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் (3:27-28)   
3. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுவது உலகத்தின் பாவத்திற்கு பரிகாரமாகும் (3:29-31)  
4. விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல் - எடுத்துக்காட்டுக்கள்  

(1) ஆபிரகாம் - ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது  (4:1:3)
(2) நியாயப்பிரமாணமும் கிரியைகளும் இல்லாமல் எல்லா மனுஷரும் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படமுடியும்  (4:4-5)
(3) தாவீது - நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருந்த தாவீது நியாயப் பிரமாணமும் கிரியைகளும் இல்லாமல் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் நீதிமானாக்கப் பட்டான் (4:6-8)
(4) எல்லா மனுஷரும் நியாயப்பிரமாணமும் கிரியைகளும் இல்லாமல் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட முடியும்  (4:9)
(5) ஆபிரகாம் - விருத்தசேதனமுள்ளவனாக இருப்பதற்கு இருபத்தினான்கு வருஷங்களுக்கு முன்பாகவே ஆபிரகாம் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் நீதிமானாக்கப் பட்டான்  (4:10-12) 
(6) விசுவாசத்தினால் நீதிமானாக்கப் படுவது நியாயப் பிரமாணத்தினாலும் கிரியைகளினாலும் உண்டானதல்ல  (4:13-16)    
(7) விசுவாசத்தினால் நீதிமானாக்கப் படுவதன் விளக்கமும் எடுத்துக்காட்டும்  (4:17-21) 
(8) கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் எல்லா மனுஷருக்கும் நீதிமானாக்கப்படுதல் உரியது  (4:22-25)

5. விசுவாசத்தினாலே நீதிமானாக்கப் படுவதன் பத்து அம்ச விளைவு (5:1-5)  
6. விசுவாசத்தினாலே நீதிமானாக்கப் படுவதன் ஆதாரமும் எல்லா ஆசீர்வாதங்களும் (5:6-11)  

  ஒய. ஜென்ம பாவம்  

1. ஆதாமின் பாவமும் மரணமும் (5:12-14) 
2. ஆதாமிற்கும் கிறிஸ்துவிற்குமிடையே ஒன்பது வேறுபாடுகள் (5:15-21) 

 ய. இரட்சிப்பு - பாவத்திலிருந்து மீட்கப் படுவதற்கு தெய்வீக உபாயம்  

1. கிறிஸ்துவின் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவர் மூலமாகவும் பாவத்திற்கு மரிக்க வேண்டும்  (6:1-2) 
2. இயேசு கிறிஸ்துவிற்குள்ளாக ஞானஸ்நானம் (6:3-5)  
3. நம்முடைய பழைய மனுஷன் கிறிஸ்துவுடனேகூட அறையப்பட வேண்டும் (6:6-10)   
4. நம்மை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக் கொள்ள வேண்டும்  (6:11) 
5. சாவுக்கேதுவான நம்முடைய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யக்கூடாது -  நமது அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் (6:12-14)   

 யஒ. பாவத்துடன் பழைய உறவும் தேவனுடன் புதிய உறவும் - விளக்கம்  

1. எஜமானும் அடிமையும்  

(1) நாம் எதற்குக் கீழ்ப்படியும்படி நம்மை அடிமைகளாக ஒப்புக் கொடுக்கிறோமோ, அதற்கே கீழ்ப் படிகிற அடிமைகளாயிருக்கிறோம்  (6:15-16) 
(2) முன்னே நாம் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தோம் - இப்பொழுது நீதிக்கு அடிமைகளாக இருக்கிறோம்  (6:17-18) 
(3) பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நம்முடைய அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக் கொடுக்க வேண்டும்  (6:19-20) 
(4) நாம் தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் நமக்கு கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்  (6:21-23)

2. பாவத்துடன் பழைய உறவும் தேவனுடன் புதிய உறவும் - திருமணத்தின் மூலமாக விளக்கப்படுகிறது (7:1-6)  

 யஒஒ. நியாயப்பிரமாணத்திற்குக் கீழ் பாவத்திற்கு அடிமையாக இருந்த பவுலின் அனுபவம்  

1. நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே  (7:7)
2. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்கும்  (7:8) 
3. முன்னே நியாயப் பிரமாணமில்லாதவனாயிருந்த போது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன். கற்பனை வந்தபோது பாவம் உயிர் கொண்டது, நான் மரித்தவனானேன்  (7:9-11) 
4. நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான் - ஆனால் பாவமே எனக்கு மரணமாயிற்று  (7:12-14) 
5. நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன் ஆனால் நன்மை செய்வது என்னிடத்திலில்லை. ஏனெனில் நான் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறேன்  (7:15-20) 
6. என் மனதின் பிரமாணத்தின் பிரகாரம் நான் பாவத்திற்கு அடிமையல்ல  (7:21-23) 
7. புதிய எஜமானனை நான் காணும் வரையிலும் நிர்பந்தமான அடிமையாக இருக்கிறேன்  (7:24-25)

யஒஒஒ.  பாவத்திலிருந்தும் பிரமாணத்திலிருந்தும் முழுவதுமாக விடுதலை பெற்ற பவுலின் அனுபவம்  

1. ஆக்கினைத்தீர்ப்பு இல்லை - ஏன்?  (8:1-5) 
2. மாம்சத்தின்படி நடப்பதற்கும் ஆவியின்படி நடப்பதற்கும் வேறுபாடுகள்  (8:6-13) 
3. பாவத்திலிருந்து விடுதலை பெறுவதினால் உண்டாகும் விளைவுகள் (8:14-16) 
4. பாவத்திலிருந்து விடுதலை பெறுவதினால் உண்டாகும் நித்திய விளைவுகள் (8:17-25)  
5. விசுவாசிகளிடத்தில் திரித்துவ தேவனின் கிரியை   

(1) பரிசுத்த ஆவியானவரின் கிரியை  (8:26-27) 
(2) பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்களுடைய ஜீவியத்தில் தேவனுடைய கிரியை (8:28-33)   
(3) பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்களுடைய ஜீவியத்தில் கிறிஸ்துவினுடைய கிரியை (8:34-39)  

 ஒல. இஸ்ரவேலரின் காலம்  

1. இஸ்ரவேலும் தேவனுடைய சர்வ ஆளுகையும்  

(1) இஸ்ரவேலின்மீது பவுலின் அன்பு  (9:1-3) 
(2) யூதரின் சிலாக்கியம்  (9:4-5) 
(3) உண்மையான யூதன் (9:6-7) 
(4) இயற்கையான இஸ்ரவேலும் ஆவிக்குரிய இஸ்ரவேலும் (9:8-13)   
(5) தேவனுடைய இரக்கம் (9:14-18)  
(6) தேவனுடைய சர்வ ஆளுகை (9:19-24)  

2. இஸ்ரவேலின் தோல்வியும் அவிசுவாசமும்  

(1) தோல்வி முன்னறிவிக்கப்பட்டது  (9:25-29) 
(2) தோல்விக்குக் காரணம்  (9:30-33)
(3) அறியாமையும் கீழ்ப்படியாமையும்  (10:1-3) 
(4) கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்  (10:4) 
(5) நியாயப்பிரமாணத்தின் நீதியும் கிறிஸ்துவின் நீதியும்  (10:5-8) 
(6) தேவனுடைய நீதியைப் பெற்றுக் கொள்ளும் விதம்  (10:9-13) 
(7) விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளும் விதம்  (10:14-17) 
(8) இஸ்ரவேலின் மன்னிக்கப்படமுடியாத பாவம்  (10:18-21)

3. இஸ்ரவேலின் தற்கால நிலைமையும் வருங்கால மீட்பும்  

(1) சுவிசேஷம் இஸ்ரவேலை தள்ளிவிட வில்லை  (11:1-4) 
(2) நியாயப்பிரமாணத்தினால் அல்லாமல் கிருபையினால் மீதியாயிருந்தவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் (11:5-6)   
(3) அவிசுவாசத்தினாலும் மீறுதலினாலும் இஸ்ரவேலர்கள் குருடரானார்கள்  (11:7-10) 
(4) இஸ்ரவேலுக்குள்ளே வைராக்கியம் எழும்பிற்று  (11:11-16) 
(5) புறஜாதியாருக்கு எச்சரிப்பு  (11:17-24) 
(6) இஸ்ரவேலின் வருங்கால இரட்சிப்பு  (11:25-32) 
(7) தேவனுடைய மகத்துவம்  (11:33-36)

 ல. நடைமுறை உபதேசங்கள்  

1. கிறிஸ்தவ மார்க்கத்தின் அஸ்திபாரம்  (12:1-2) 
2. கிறிஸ்துவின் சரீரமும் ஆவிக்குரிய வரங்களும்  (12:3-8) 
3. கிறிஸ்தவ சகோதரத்துவத்தை காத்துக்கொள்ள இருபது கட்டளைகள்  (12:9-16) 
4. உலகத்தில் கிறிஸ்தவ நடத்தையைக் காத்துக் கொள்ள ஏழு கட்டளைகள்  (12:17-21)
5. கிறிஸ்தவரும் அதிகாரமும் அதிகாரிகளும்  (13:1-7) 
6. பிறரிடத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைக் கூறும் எட்டு கட்டளைகள்  (13:8-10) 
7. தேவனுக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைக் கூறும் பன்னிரெண்டு கட்டளைகள்  (13:11-14)
8. கிறிஸ்தவரும் சந்தேகமுள்ள காரியங்களும்  

(1) விசுவாசத்தில் பலவீனமுள்ளவனை சேர்த்துக் கொள்ள வேண்டும்  (14:1) 
(2) சந்தேகமுள்ள நடத்தைகளை நியாயந்தீர்க்கக் கூடாது  (14:2-9) 
(3) கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக எல்லா கிறிஸ்தவரும் நிற்க வேண்டும்   (14:10-12) 
(4) கிறிஸ்தவருடைய பொறுப்பு  (14:13-21) 
(5) சந்தேகமுள்ள காரியங்களைக் குறித்து விசுவாசத்தின் பிரமாணம்  (14:22-23)
(6) பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும்  (15:1-3)
(7) கிறிஸ்தவர்கள் வேதவசனங்களை வாசித்து ஒருமனப்பட்டு ஜீவிக்க வேண்டும்  (15:4-7) 
(8) யூத மார்க்கத்து கிறிஸ்தவர்களும் புறஜாதி கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவில் ஒன்றாயிருக்கிறார்கள் (15:8-12) 

  லஒ. சாட்சியும் புத்திமதிகளும்  

1. ரோமாபுரி சபையைக் குறித்து பவுலின் ஆர்வமும் நிச்சயமும்  (15:13-14) 
2. புறஜாதியார் மத்தியில் தனது ஊழியத்தைக் குறித்து பவுலின் சாட்சி  (15:15-16) 
3. பவுலின் தத்துவமும் வல்லமையும் - வெற்றியின் இரகசியம்  (15:17-21) 
4. ரோமாபுரிக்குச் செல்ல பவுலின் வாஞ்சை  (15:22-24)
5. எருசலேமிலிருந்த ஏழை பரிசுத்தவான்களுக்கு பவுலின் ஊழியம்  (15:25-28)
6. சுவிசேஷத்தின் வல்லமையில் பவுலின் நம்பிக்கை  (15:29) 
7. எருசலேமிற்கும் ரோமாபுரிக்கும் தனது பிரயாணத்தைக் குறித்த ஜெபம் (15:30-33)
8. பெபேயாளைப் பற்றிய காரியம்  (16:1-2) 
9. கிறிஸ்தவ வாழ்த்துக்கள்  (16:3-16) 
10. ஸ்திரமான உபதேசத்திலும் ஒற்றுமையிலும் இருக்குமாறு புத்திமதி  (16:17-18) 
11. ரோமாபுரி கிறிஸ்தவரின் கீழ்ப்படிதல்  (16:19-20)
12. மற்றவர்களிடமிருந்து வாழ்த்துக்கள்  (16:21-24) 
13. ஆசீர்வாதம் (16:25-27)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.