1 கொரிந்தியர் நிருபம் ஒரு கண்ணோட்டம்




1 கொரிந்தியர் முன்னுரை

கிரேக்கு தேசத்தில் கொரிந்து மிகவும் முக்கியமான பட்டணம். தேசத்தின் மையப்பகுதியில் கொரிந்து பட்டணம் அமைந்திருக்கிறது. கிரேக்கு தேசத்தில் பெலபொனேசஸ் என்பது ஒரு முக்கியமான பகுதி. கொரிந்து பட்டணம் கிரேக்கு தேசத்தை  இந்தப் பட்டணத்தோடு இணைக்கிறது.  இதற்கு அருகில் இரண்டு துறைமுகப்பட்டணங்கள் உள்ளன. அவையாவன: 1. லீகோயம் 2. கெங்கிரேயா. லீகோயம் துறைமுகம் கொரிந்து பட்டணத்திற்கு அருகாமையிலுள்ளது.    இங்கிருந்து இத்தாலியா தேசத்திற்கும், மேற்கத்தி தேசங்களுக்கும் வியாபாரம் நடைபெற்றது. 

கெங்கிரேயா துறைமுகம் கொரிந்து பட்டணத்திலிருந்து அதிகத் தூரத்தில் அமைந்திருக்கிறது. அக்காலத்தில் இங்கிருந்து ஆசியா தேசத்திற்கு வியாபாரம் நடைபெற்றது.  கொரிந்து பட்டணத்தைச் சுற்றிலும் ஏராளமான  வணிகஸ்தலங்கள் இருந்தன. அதிக வியாபாரம் நடைபெற்றது. பொருளாதாரத்தில் சிறந்து விளங்கிற்று. ஐசுவரியம் பெருகியிருந்ததினால்  பாவப்பழக்க வழக்கங்கள் வாழ்க்கைகளும்  இங்கு பெருகியிருந்தது.  இந்தப் பட்டணத்தில் அப்போஸ்தலர் பவுல்  ஒரு சபையை ஸ்தாபித்தார்.  புறஜாதியாரில் அநேகர்  இந்தச் சபையில் விசுவாசிகளாக இருந்தார்கள். 

கொரிந்துவிலுள்ள சபை விசுவாசிகளில் அநேகர் ஒரு காலத்தில் விக்கிரகாராதனைக்காரராயிருந்தார்கள். யூதமார்க்கத்திலிருந்து இயேசுகிறிஸ்துவைத் தங்கள் தேவனாக ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட ஒரு சிலரும் இந்தச் சபையில்  விசுவாசிகளாயிருந்தார்கள். புறஜாதியாரின் எண்ணிக்கையோடு, யூதமார்க்கத்திலிருந்து வந்த விசுவாசிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவர்கள் மிகவும் கொஞ்சம் பேராயிருந்தார்கள். 

கிறிஸ்பு என்பவர் ஜெபலயத்திற்குத் தலைவர். இவர் கர்த்தராகிய     இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருந்தார். “”ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்’’  (அப் 18:8).

பவுல் கொரிந்து பட்டணத்தில் இரண்டு வருஷங்கள் தங்கியிருந்து ஊழியம் செய்தார். கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி இந்தப் பட்டணத்தில் தமக்கு அநேக ஜனங்கள் உண்டு என்று  சொன்னார். “”இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்’’ (அப் 18:9,10). கர்த்தரின் வார்த்தையினால் பவுல் உற்சாகமடைந்து, கொரிந்து பட்டணத்தில் உண்மையாய் ஊழியம் செய்தார். 

இரண்டு வருஷங்களுக்குப் பின்பு பவுல்  மற்ற இடங்களில் ஊழியம் செய்வதற்காக கொரிந்து பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனார். சிறிது காலத்திற்குப் பின்பு  அவர் கொரிந்துவிலுள்ள விசுவாசிகளுக்கு  இந்த நிருபத்தை எழுதினார்.  பவுல் இங்கு  சபையை ஸ்தாபித்திருக்கிறார்.  சபையை நட்டியிருக்கிறார். புதிய சபைக்கு தண்ணீர் பாய்ச்சும் வண்ணமாக பவுல் இந்த நிருபத்தை எழுதியிருக்கிறார்.  

பவுல் கொரிந்து சபையில் இல்லாத காலத்தில், சபைக்குள் சில பிரச்சனைகள் உண்டாயிற்று. குழப்பங்கள் உண்டாயிற்று. அவற்றையெல்லாம் சரிசெய்யும் வண்ணமாக பவுல் இந்த நிருபத்தை எழுதுகிறார்.  பெருமை,  மாம்சத்தின் இச்சை, பிரிவினைகள், ஐசுவரியத்தின் மயக்கம், வேசித்தனங்களும் விபசாரங்களும், துன்மார்க்கமான  சுபாவங்களும் கிரியைகளும் கொரிந்து     சபையில் நிறைந்திருந்தது. அப்போஸ்தலர் பவுல் கொரிந்துவிலுள்ள விசுவாசிகளுக்கு  இந்த நிருபத்தைப் பொதுவாக எழுதினாலும், அவர்களில் ஒரு சிலரைக் குறிப்பிட்டும் எழுதுகிறார். ஒரு சில விசுவாசிகளின் பெருமையினால் சபைக்குள் பிரிவினைகளும் குழப்பங்களும் உண்டாயிற்று.

ஒரு சிலர் ஐசுவரிய மயக்கத்தினால்  நிறைந்திருந்தார்கள்.  வேறு சிலர் கிறிஸ்துவின் உபதேசத்தோடு கிரேக்க தத்துவ உபதேசங்களையும் கலந்து உபதேசித்தார்கள்.  விசுவாசிகள் மத்தியில் பிரச்சனைகள் வந்தபோது, அவர்களுடைய வழக்குகள்  புறஜாதியாருடைய நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டது.  அதிகமான வியாபாரங்களும், அதிகமான பொருளாதாரங்களும் கொரிந்து பட்டணத்தில் இருந்ததினால், அதிகமான பிரச்சனைகளும், அதிகமான வழக்குகளும் உண்டாயிற்று.  

கொரிந்து சபையிலுள்ள விசுவாசிகளிடத்தில் ஒழுங்கும் கிரமமும் காணப்படவில்லை. கர்த்தருடைய பந்தியை அவர்கள் ஒழுங்காயும், கிரமமாயும் ஆசரிக்கவில்லை. கர்த்தருடைய பந்தியை அவர்கள் அசுத்தப்படுத்தினார்கள். கர்த்தருடைய சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களில் சிலர் தங்கள் மாம்ச இச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.  ஒரு சிலர் தங்கள் தகப்பனின் மனைவியை  தங்களுக்கு மனைவியாகக் கொண்டார்கள்.  கொரிந்து சபையில் இந்த அளவுக்கு  துன்மார்க்கம் நிறைந்திருந்தது. 

விசுவாசிகள் மத்தியில் வேசித்தனமும் விபச்சாரமும் நிறைந்திருந்தது.              இவர்கள் ஒரு காலத்தில் விக்கிரகாராதனைக்காரராயிருந்தார்கள்.  இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவர்களாயிருந்தார்கள்.  அக்காலத்தில் அவர்களிடத்தில் விக்கிரகாராதனையும், வேசித்தனமும் அதிகமாயிருந்தது.   கிறிஸ்துவின் சபைக்கு வந்த பின்பு அவர்கள்  விக்கிரகாராதனையை விட்டு விலகி வந்தார்கள்.  ஆனால் அவர்கள் வேசித்தனத்தையும் விபச்சாரத்தையும் விட்டு விலகிவரவில்லை.  மாம்ச சிந்தையினால் நிறைந்திருந்தார்கள். பவுல் இவர்களுடைய துன்மார்க்கமான  கிரியைகளுக்கு விரோதமாக இந்த நிருபத்தில்  எச்சரித்து எழுதுகிறார். 

கொரிந்து சபையிலுள்ள விசுவாசிகளில்  சிலர் அதிகம் கல்வி கற்றவர்கள். உலகப்பிரகாரமான ஞானிகளாகயிருக்கிறார்கள்.  கிறிஸ்துவின் உபதேசத்தைவிட இவர்கள்  உலகஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்னும் உபதேசத்தை இவர்களில் ஒரு சிலர் விசுவாசிக்கவில்லை.  அந்த உபதேசத்திற்கு விரோதமாகத் தர்க்கம்பண்ணினார்கள். 

கொரிந்து சபையில் பலவிதமான ஒழுங்கீனங்கள் காணப்பட்டது. இவையெல்லாவற்றையும் திருத்தவேண்டுமென்றும், ஒழுங்குபடுத்தவேண்டுமென்றும் தீர்மானித்து  பவுல் இந்த நிருபத்தை அவர்களுக்கு எழுதுகிறார். பவுல் புறஜாதியாருக்கு அப்போஸ்தலராயிருக்கிறார். தேவன் அவரிடத்தில் அப்போஸ்தல ஊழியத்தையும், அப்போஸ்தல அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். பவுல் இந்த நிருபத்தை எழுதும்போது, தன்னுடைய அப்போஸ்தல அதிகாரத்தையும், அதோடு தான் அவர்கள்மீது வைத்திருக்கும் அன்பையும் சேர்த்து எழுதுகிறார். 

இந்த நிருபத்தின் ஆரம்பத்தில் கொரிந்துவிலுள்ள விசுவாசிகளுக்கு  வாழ்த்துதல் சொல்லுகிறார். அதன்பின்பு  அவர்களிடத்தில் காணப்படுகிற குழப்பங்களையும், ஒழுங்கீனங்களையும் அவர்களுக்கு விளக்கமாகச் சொல்லுகிறார்.  அதனிமித்தமாக அவர்களைக் கடிந்துகொள்கிறார். அவர்கள் மத்தியில் மனத்தாழ்மையும் உண்மையான அன்பும் காணப்படவேண்டுமென்று அவர்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார். 

முதல் நான்கு அதிகாரத்தில் கொரிந்து சபையில் காணப்படுகிற பிரச்சனைகளைப்பற்றியும், அவற்றை தீர்த்துவைப்பதற்கு தன்னுடைய ஆலோசனைகளையும் பவுல் விரிவாக எழுதுகிறார். ஐந்தாவது அதிகாரத்தில் விபச்சாரம்பண்ணுகிறவர்களைக் கடிந்துகொண்டு அவர்களுக்குப் புத்திசொல்கிறார்.

ஆறாவது அதிகாரத்தில் விசுவாசிகள் மத்தியில் காணப்படுகிற வழக்குகளைப்பற்றி பேசுகிறார். புறஜாதியாரின் நீதிபதிகள் மத்தியில்  விசுவாசிகளுடைய வழக்குகள் விசாரிக்கப்படுவதைப் பவுல் கடிந்துகொள்கிறார்.  ஏழாவது அதிகாரத்தில் திருமண காரியங்களைக் குறித்து ஆலோசனை சொல்லுகிறார்.  எட்டாவது அதிகாரத்தில் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப்பற்றி பவுல் எழுதுகிறார்.  

ஒன்பதாவது அதிகாரத்தில் தன்னைப்பற்றியும், தன் ஊழியத்தைப்பற்றியும்  பவுல் சுருக்கமாகச் சொல்லுகிறார். பத்தாவது அதிகாரத்தில் விக்கிரகாராதனைக்காரரோடு  நமக்குள்ள ஐக்கியத்தைக் கட்டுப்படுத்துகிறார்.  விக்கிரங்களுக்கு படைக்கப்பட்டதை விசுவாசிகள் புசிக்கக்கூடாது என்று தடைபண்ணுகிறார். கொரிந்துவிலுள்ள விசுவாசிகள் கர்த்தருடைய பந்தியிலும் பிசாசுகளின் பந்தியிலும் பங்குபெறுவதைக் கண்டித்து உணர்த்துகிறார்.

பதினோராவது அதிகாரத்தில் ஆவிக்குரிய ஆராதனையைப்பற்றிச் சொல்லுகிறார்.  கர்த்தருடைய பந்தியில்  கடைப்பிடிக்கப்படுகிற ஒழுங்குமுறைகளை விவரிக்கிறார்.  பன்னிரண்டாவது அதிகாரத்தில்  பவுல் ஆவிக்குரிய வரங்களைப்பற்றி  எழுதுகிறார். பதிமூன்றாவது அதிகாரத்தில்  அன்பின் முக்கியத்துவத்தைப்பற்றிச் சொல்லுகிறார். 

பதிநான்காவது அதிகாரத்தில் ஆவிக்குரிய வரங்களை சபையின் பக்திவிருத்திக்கேதுவாக எவ்வாறு பயன்படுத்தவேண்டுமென்று ஆலோசனை சொல்லுகிறார்.   பதினைந்தாவது அதிகாரத்தில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றிய உபதேசத்தை விரிவாக எடுத்துச்சொல்லுகிறார். இந்த நிருபத்தின் முடிவில் பவுல் கொரிந்துவிலுள்ள விசுவாசிகளிடத்தில் ஒரு  சில ஆலோசனைகளைச் சொல்லி, அவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லி இந்த நிருபத்தை நிறைவுசெய்கிறார். 

 எபேசுவில் பவுல் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்த மூன்றாம் ஆண்டின் இறுதியில் கி.பி. 59 ஆம் ஆண்டில் பவுல் இந்த நிருபத்தை எழுதினார்.

மையக்கருத்து

கிறிஸ்தவ ஜீவியமும், கிறிஸ்தவ நடத்தையும். பவுல் இந்த நிருபத்தை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. அவையாவன: 

1. ஒரு சில உபதேசங்களைக் குறித்து கொரிந்துவிலிருந்த விசுவாசிகள் பவுலிடம் விசாரித்து எழுதினார்கள். (1கொரி 7:1, 1கொரி 8:1-13)

2. கொரிந்து சபையில் காணப்பட்ட ஒரு சில பிரச்சனைகளையும், அந்தச் சபையைக் குறித்த நிலைமையையும் அங்கிருந்து வந்த சகோதரர்கள் பவுலுக்கு அறிவித்தார்கள். (1கொரி 1:11, 1கொரி 5:1, 1கொரி 11:18, 1கொரி 15:12)

இந்தக் காரியங்களுக்குப் பதில் கூறும் விதமாக பவுல் கொரிந்தியருக்கு முதலாம் நிருபத்தை எழுதுகிறார்.

பொருளடக்கம்

  ஒ.  முன்னுரை  

1. ஆசிரியரும் வாழ்த்துதலும் (1:1-3)  
2. தேவனுக்கு ஸ்தோத்திரம் - காரணம் (1:4-6)  
3. கொரிந்தியர்மீது பவுலின் வாஞ்சை (1:7)  
4. வருங்காலத்தில் பவுலின் நம்பிக்கை (1:8-9)   
  ஒஒ. ஊழியர்கள் மத்தியில் பிரிவினைகள் இருப்பதற்காக கடிந்துரை  

1. ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய் இருக்க வேண்டும் (1:10)  
2. சகோதரர்களுக்குள்ளே வாக்குவாதங்கள் கூடாது (1:11-13)        
3. தண்ணீர் ஞானஸ்நானம் (1:14-17)  
4. மானிட ஞானமும் சிலுவையைப் பற்றிய உபதேசமும் வெவ்வேறானவை (1:18-25)  
5. கிறிஸ்தவர்களுடைய அழைக்கப்பட்ட அழைப்பும் அழைப்பின் காரணமும் (1:26-29)  
6. கிறிஸ்துவே நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார் (1:30-31)  
7. தேவனைப் பற்றிய சாட்சியை அறிவிப்பதும் அதன் தெய்வீக நோக்கமும் (2:1-5) 
8. கிறிஸ்தவ வெளிப்பாடு தெய்வீக ஞானமாயிருக்கிறது  (2:6-8) 
9. ஆவிக்குரிய காரியங்கள் ஆவியினாலே வெளிப்படுத்தப்பட்டு உபதேசிக்கப்பட்டவை (2:9-16) 
10. கொரிந்திய விசுவாசிகளின் மாம்சத்திற்குரிய நிலைமை (3:1-4)    
11. உண்மையான ஊழியக்காரர்களுக்கு தேவன் மட்டுமே ஆசீர்வாதத்தின் ஆதாரமாயிருக்கிறார்  (3:5-7) 
12. ஊழியக்காரர்கள் தேவனுக்கு உடன் வேலையாட்களாய் இருக்கிறார்கள் (3:8-10)  
13. ஒரே அஸ்திபாரம் (3:11) 
14. இரண்டு விதமான கட்டிடங்கள் - இரண்டு விதமான விளைவுகள் (3:12-15) 
15. தேவனுடைய ஆலயத்தைப் போல சரீரம் பரிசுத்தமாயிருக்க வேண்டும் (3:16-17) 
16. மாம்சத்தில் நம்பிக்கை வைப்பதற்கு எதிரான எச்சரிப்பு (3:18-23)  
17. ஊழியக்காரரின் நியாயத்தீர்ப்பு (4:1-5) 
18. தாழ்மையாக இருக்குமாறு புத்திமதி (4:6-8) 
19. தாழ்மைக்கும் பாடுகளுக்கும் அப்போஸ்தல எடுத்துக்காட்டு (4:9-13)  
20. பவுல் சுவிசேஷத்திற்கு அவர்களுடைய தந்தையாக இருக்கிறார் (4:14-17)  
21. உண்மையான ஊழியக்காரரின் அழைப்பு கிரியை ஆகியவற்றிற்கு சான்று (4:18-21)  

 ஒஒஒ. விபசாரமும் வழக்குகளும்  

1. பிரசித்தமாய் சொல்லப்படுகிற பாவம் (5:1) 
2. பாவத்தில் இறுமாப்படைந்திருப்பது பிரிவினைகளுக்குக் காரணம்  (5:2) 
3. ஸ்தல சபையில் பாவத்திற்கு நியாயம் தீர்க்கும் விதம்  (5:3-5)
4. பாவம் என்னும் பழைய புளித்தமாவை புறம்பே கழித்துப் போடுங்கள் (5:6-8)  
5. உலகத்திலுள்ள பாவிகளுக்கும் சபையிலுள்ள பாவிகளுக்கும்  இடையிலுள்ள வேறுபாடு (5:9-11) 
6. சபையில் பொல்லாதவனை தள்ளிப்போடுவதற்கு ஸ்தல சபைக்கு அதிகாரம் உள்ளது (5:12-13) 
7. பரிசுத்தவான்கள் வழக்காடும்படி அநீதக்காரரிடத்தில் போக துணியக்கூடாது (6:1) 
8. பரிசுத்தவான்கள் தங்கள் வழக்குகளை தங்களுக்குள்ளே நியாயம் தீர்த்துக் கொள்ள வேண்டும் (6:2-3)  
9. பரிசுத்தவான்கள் அநியாயத்தை சகித்துக் கொண்டு நஷ்டத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும்  (6:4-8) 
10. ஆத்துமாவை அழிக்கும் பாவங்கள் (6:9-10)  
11. பாவத்தின்மீது வெற்றி பெறுவதன் இரகசியம் (6:11-12)  
12. சரீரம் வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது (6:13-18)  
13. சரீரம் பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாய் இருக்கிறதினால் அது பாவமில்லாமல் இருக்க வேண்டும் (6:19-20)  

 ஒய. கிறிஸ்தவரும் திருமணமும்  

1. திருமணமாகாத கிறிஸ்தவருக்கு ஆலோசனை (7:1-2)  
2. திருமணமான கிறிஸ்தவருக்கு ஆலோசனை  (7:3-6)
3. திருமணமாகாதவருக்கு ஆலோசனை (7:7-9) 
4. திருமணமான கிறிஸ்தவருக்கு ஆலோசனையும் ஒழுங்குகளும் (7:10-16)  
5. கர்த்தர் அவனவனை அழைத்தது எப்படியோ அப்படியே அவனவன் நடக்கக் கடவன் (7:17-24)  
6. கன்னிகைகளைக் குறித்தும் விவாகம் இல்லாதிருக்கிற மனுஷனைக் குறித்தும் ஆலோசனை  (7:25-28)
7. திருமணமான கிறிஸ்தவருக்கு ஆலோசனை (7:29-31)  
8. திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் ஆகியோரின் பொறுப்பு   (7:32-35)
9. தன் புத்திரிகையின் கன்னிப்பருவத்தைக் குறித்து பெற்றோருக்கு ஆலோசனை (7:36-38)  
10. கிறிஸ்தவ விதவைகளுக்கு ஆலோசனை (7:39-40)  

  ய. கிறிஸ்தவ விடுதலைகள்  

1. அறிவு, அன்பு ஆகியவற்றால் ஏற்படும்  விளைவுகள் (8:1-3)          
2. பல விக்கிரகங்கள் ஆனால் ஒரே ஒரு மெய் தேவன் (8:4-5) 
3. பிதாவாகிய தேவனும் இயேசு கிறிஸ்துவும் (8:6)  
4. அறியாமை அடிமைத்தனத்தை உண்டுபண்ணும் (8:7-8) 
5. கிறிஸ்தவ விடுதலையை தவறாக பயன்படுத்துவதும் அதன் விளைவும் (8:9-13)  

 யஒ. பவுலைப் பற்றிய விவாதங்களுக்கு பவுலின் மாறுத்தரம்  

1. பவுலின் அப்போஸ்தல ஊழியம் (9:1-2)  
2. மற்றவர்களைப் போல ஜீவிக்க பவுலுக்கு அதிகாரம் உண்டு (9:3-8)  
3. மற்றவர்களைப் போன்று சுவிசேஷத்தினால் பிழைப்பு நடத்த பவுலுக்கு அதிகாரம் உண்டு (9:9-11) 
4. பவுல் இந்த அதிகாரத்தைச் செலுத்தவில்லை  (9:12-15) 
5. சுவிசேஷத்தை பிரசங்கிப்பது பவுல்மேல் விழுந்த கடமை (9:16-18) 
6. ஊழியம் செய்வதில் பவுலின் கொள்கை (9:19-23)  
7. வெகுமதிக்கு நிபந்தனைகள் (9:24-27)  

 யஒஒ. இரண்டு காலங்கள்  

1. பிரமாணத்தின் காலம்  

(1) இஸ்ரவேலின் ஐந்து ஆசீர்வாதங்கள் (10:1-4)  
(2) இஸ்ரவேலின் ஐந்து சாபங்கள் (10:5-11)  

2. கிருபையின் காலம்   

(1) விக்கிரகாராதனை, பெருமை ஆகியவற்றிற்கு எதிராக கிறிஸ்தவருக்கு எச்சரிப்பு (10:12-14) 
(2) மூன்று ஐக்கியங்கள்  

(அ) சபையின் ஐக்கியம்  (10:15-17)
(ஆ) இஸ்ரவேலின் ஐக்கியம் (10:18-19) 
(இ) புறஜாதியாரின் ஐக்கியம் (10:20) 

(3) கிறிஸ்தவருக்கு எச்சரிப்பு (10:21-22) 
(4) கிறிஸ்தவருடைய விடுதலைகள் எப்போதும் ஞானத்தையும்  பக்தி விருத்தியையும் உண்டாக்காது (10:23-24) 
(5) கடையில் விற்கப்படுகிற எதையும் வாங்கி புசிக்கலாம் (10:25-26) 
(6) அவிசுவாசிகளின் விருந்துகள் (10:27-30) 
(7) நமது கிறிஸ்தவ உரிமைகளை தேவனுடைய மகிமைக்கென்றே செய்ய வேண்டும்  (10:31-33)

 யஒஒஒ.  கிறிஸ்தவ கட்டளைகள்  

1. பவுலைப் பின்பற்றி கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்னும் புத்திமதி (11:1-2)  
2. புருஷனுக்கு கிறிஸ்து தலையாயிருக்கிறார் (11:3)  
3. புது ஆராதனைகளில் புருஷர்களுக்கும் ஸ்திரீகளுக்கும் ஒழுங்குகள் (11:4-12) 
4. சுபாவம் போதிக்கிற காரியம்  (11:13-15)
5. இதனால் பிரிவினைகளும் வாக்குவாதங்களும் உண்டானால்  நமக்கு அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன் (11:16) 
6. கொரிந்துவில் பொதுவாக காணப்பட்ட பிரிவினைகளும் மார்க்க பேதங்களும் (11:17-19) 
7. கர்த்தருடைய இராப்போஜனத்தில் காணப்படும் பாவங்கள் (11:20-22) 
8. கர்த்தருடைய இராப்போஜனம் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டது (11:23-26) 
9. கர்த்தருடைய இராப்போஜனத்தில் அபாத்திரமாய் பங்கு பெறக்கூடாது (11:27-28) 
10. அபாத்திரமாய் போஜனபானம் பண்ணுகிறதினால் ஏற்படும் விளைவு (11:29-30) 
11. நியாயத்தீர்ப்பைத் தவிர்ப்பதற்கு வழி (11:31-32) 
12. கொரிந்துவில் காணப்படும் குறைகளைக் குறித்து புத்திமதி (11:33-34) 

 ஒல. ஆவிக்குரிய வரங்கள்  

1. இயேசுவை மகிமைப்படுத்தும் (12:1-3) 
2. வரங்களில் வித்தியாசங்கள் உண்டு  (12:4-6) 
3. வரங்களின் நோக்கம் (12:7)  
4. வரங்களின் எண்ணிக்கையும் விதமும்  (12:8-10)
5. வரங்கள் பகிர்ந்து கொடுக்கப்படும் விதம் (12:11)  
6. சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்  (12:12)
7. சரீரத்தில் அநேக அவயவங்கள் இருக்கிறது (12:13-14) 
8. சரீரத்தின் அவயவங்கள் ஒன்றோடொன்று இசைந்திருக்கிறது (12:15-20) 
9. சரீரத்தின் அவயவங்கள் ஒன்றுக்கொன்று துணைபுரியும்  (12:21-23)
10. சரீரத்தின் அவயவங்கள் ஒன்றுக்கொன்று சிந்திக்கும்  (12:24-26)  
11. கிறிஸ்தவர் அனைவரும் கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே ஊழியமுடையவராயும் இருக்கிறார்கள் (12:27-30) 
12. ஆவிக்குரிய வரங்களைக் குறித்து ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை (12:31)  
13. அன்பில்லாவிட்டால் வரங்களினால் பயனில்லை (13:1-3)  
14. அன்பின் சுபாவம்  (13:4-7) 
15. வரங்கள் ஒழிந்துபோகும் - ஆனால் அன்பும் மற்ற கிருபைகளும் ஒழியாது (13:8-13)   
16. எல்லா வரங்களையும் விசேஷமாய் தீர்க்கதரிசன வரத்தையும் விரும்புங்கள் (14:1-2) 
17. தீர்க்கதரிசன வரமும் அந்நிய பாஷைகளும் (14:3-4) 
18. அந்நிய பாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்தி விருத்தியுண்டாகும்படி பேச வேண்டும் (14:5) 
19. அந்நிய பாஷைகளை பிரயோஜனம் உண்டாகும் விதத்தில் பேசவேண்டும் (14:6-11) 
20. சபைக்கு பக்தி விருத்தியுண்டாகத் தக்கதாக ஆவிக்குரிய வரங்களில் தேறும்படி நாடவேண்டும் (14:12) 
21. ஆவியோடும் விண்ணப்பம் பண்ண வேண்டும், கருத்தோடும் விண்ணப்பம் பண்ண வேண்டும் (14:13-17) 
22. பவுல் அதிகமாய் பாஷைகளைப் பேசினார் (14:18-19)  
23. புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள் (14:20)  
24. அந்நிய பாஷைகள் அவிசுவாசிகளுக்கு அடையாளமாய் இருக்கிறது (14:21-22) 
25. எல்லோரும் அந்நிய பாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது ஏற்படும் காரியம் (14:23) 
26. எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்லும் போது ஏற்படும் காரியம் (14:24-25)
27. சகலமும் பக்தி விருத்திக்கேதுவாக செய்யப்படக்கடவது  (14:26)
28. சபையில் அந்நிய பாஷையில் பேசும் ஒழுங்கு  (14:27-28)
29. தீர்க்கதரிசிகள் பேச வேண்டிய ஒழுங்கு (14:29-31)   
30. தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே (14:32-33) 
31. சபையில் ஸ்திரீகள் குழப்பம் விளைவிக்கக் கூடாது (14:34-35) 
32. இவைகள் கர்த்தருடைய கற்பனைகள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் (14:36-38) 
33. ஆவிக்குரிய வரங்களைக் குறித்து கடைசி எச்சரிப்பும் புத்திமதியும்  (14:39-40)

 ல. உயிர்த்தெழுதல்கள்  

1. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பவுலின் பிரசங்கம்  (15:1-8)
2. ஊழியத்தில் பவுலின் தாழ்மை (15:9-11)  
3. கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்  (15:12-19)           
4. கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலின் நிச்சயம்  (15:20-22)
5. உயிர்த்தெழுதலின் வரிசை  (15:23)
6. உலகத்தின் முடிவு (15:24-28) 
7. மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள்  (15:29)           
8. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால் பாடுகளினால் என்ன பிரயோஜனம்  (15:30-32)
9. பாவம் செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருங்கள் (15:33-34)
10. மரித்தோர் எழுந்திருக்கும் விதம் (15:35-38) 
11. உயிர்த்தெழுந்த சரீரங்களின் நிலைமை  (15:39-44) 
12. உயிர்த்தெழுதலின் அவசியம் (15:45-50)  
13. உயிர்த்தெழுதலின் வேளையும் விதமும் (15:51-57)  
14. கர்த்தருக்குள் நாம் படுகிற பிரயாசம் விருதாவாயிராது (15:58)      

  லஒ. முடிவுரையும் வாழ்த்துதல்களும்  

1. பரிசுத்தவான்களுக்காக சேர்க்கப்படும் தர்மப்பணம்  (16:1-4)            
2. பவுலின் வருகை (16:5-9)  
3. தீமோத்தேயுவும் அப்பொல்லோவும்  (16:10-12) 
4. ஐந்து கட்டளைகள்  (16:13-14)
5. ஸ்தேவானுடைய வீட்டாரும் மற்ற சகோதரரும் (16:15-16)                      
6. பவுலை வந்து சந்தித்த சகோதரர்கள் (16:17-18) 
7. வாழ்த்துதலும் ஆசீர்வாதமும்  (16:19-24)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.