கோல் சர்ப்பமாயிற்று யாத் 7:8-13
யாத் 7:8. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
யாத் 7:9. உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார்.
யாத் 7:10. மோசேயும், ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.
யாத் 7:11. அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.
யாத் 7:12. அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று.
யாத் 7:13. கர்த்தர் சொல்-யிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.
மோசே இதற்கு முன்பு பார்வோனிடத்தில் பேசியபோது, அவர் கர்த்தர் தனக்கு சொன்ன வார்த்தைகளை மாத்திரம் பார்வோனுக்கு சொன்னார். இஸ்ரவேல் புத்திரரை அனுப்பிவிடவேண்டும் என்று மோசே கர்த்தருடைய நாமத்தினால் பார்வோனைக் கேட்டுக்கொண்டார். பார்வோனோ மோசேயின் வார்த்தைக்கு செவிகொடுக்காமல், இஸ்ரவேல் புத்திரரை அனுப்பிவிட மறுத்துவிட்டான்.
இப்போது மோசே இரண்டாம் முறையாக பார்வோனுக்கு முன்பாக நிற்கிறார். கர்த்தரே மோசேயை பார்வோனிடத்திற்கு அனுப்பியிருக்கிறார். இதை உறுதிபண்ணும் வண்ணமாக, மோசே கர்த்தருடைய நாமத்தினால் அற்புதங்களை செய்யப்போகிறார்.
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, “”உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது சர்ப்பமாகும்’’ (யாத் 7:8,9) என்று சொல்லுகிறார்.
எகிப்து தேசத்திலே மந்திரவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் மந்திரவித்தைகளை செய்யக்கூடியவர்கள். பார்வோன் மோசேயையும் ஆரோனையும் பார்த்து, “”உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள்’’ என்று சொல்லுவான். பார்வோன் என்ன சொல்லுவான் என்பது கர்த்தருக்கு தெரியும். ஆகையினால் பார்வோன் சொல்லப்போகிற வார்த்தைகளை, கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் முன்கூட்டியே சொல்லுகிறார்.
ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் மோசேயோடும், ஆரோனோடும் சொன்னால், அவர்கள் என்ன செய்யவேண்டும் என்றும், கர்த்தர் அவர்களுக்கு சொல்லுகிறார். அப்போது மோசே ஆரோனை நோக்கி பேசவேண்டும். மோசே ஆரோனை நோக்கி, “”உன் கோலை எடுத்து அதை பார்வோனுக்கு முன்பாக போடு’’ என்று சொல்லவேண்டும். ஆரோன் அந்தக் கோலை எடுத்து பார்வோனுக்கு முன்பாக போடும்போது அது சர்ப்பமாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சர்ப்பம் என்பதற்கான எபிரெய வார்த்தை “”தன்னீய்ன்’’ என்பதாகும். இந்த வசனத்திலும், யாத் 7:10,12 ஆகிய வசனங்களிலும் இந்த வார்த்தை சர்ப்பம் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எசே 29:3; மீகா 1:8 ஆகிய வசனங்களில் இந்த வார்த்தை வலுசர்ப்பம் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆதி 1:21; யோபு 7:12 ஆகிய வசனங்களில் மகா மச்சம் எனவும், புல 4:3 ஆவது வசனத்தில் திமிங்கலம் எனவும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
சீனாய் மலையில் கோல் சர்ப்பமாக மாறிற்று. அது சாதாரண சர்ப்பம். அதற்கான எபிரெய வார்த்தை “”நாகாஷ்’’ என்பதாகும். (யாத் 4:3-4; யாத் 7:15; ஆதி 3) பார்வோனுக்கு முன்பாக மோசேயின் கோல் முதலையாக மாறிற்று என்று வேதபண்டிதர்களில் சிலர் கூறுகிறார்கள். முதலை எகிப்தின் அடையாளம். நைல் நதிப் பகுதியில் ஏராளமான முதலைகள் இருக்கும். (சங் 74:13; ஏசா 51:9; எசே 29:3). பழைய ஏற்பாட்டு மூலபாஷை சுவடிகள் சிலவற்றில் கோல் முதலையாக மாறிற்று என்றுள்ளது. செப்துவஜிந்த் பதிப்பில் கோல் வலுசர்ப்பமாக மாறிற்று என்றிருக்கிறது.
கர்த்தர் இந்த அற்புதத்தைப்பற்றி மோசேக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். “”அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான்’’ (யாத் 4:3).
மோசேயும், ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்கிறார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போடுகிறான், அது சர்ப்பமாயிற்று (யாத் 7:10).
கோல் சர்ப்பமானதை பார்க்கும்போது பார்வோனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கும். அவன் ஆச்சரியப்படவேண்டும் என்பதற்காக இந்த அற்புதம் நடைபெறவில்லை. பார்வோனுடைய மனதிலே கர்த்தரைக்குறித்து பயமும், நடுக்கமும் உண்டாகவேண்டும். இதற்காகவே, கர்த்தர் இந்த அற்புதத்தை செய்கிறார். ஆனால் பார்வோனோ தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறான்.
பார்வோன் எகிப்து தேசத்திலே இதுபோன்ற மந்திர வித்தைகளை ஏராளமாய்ப் பார்த்திருக்கிறான். கோல் சர்ப்பமாவது பார்வோனுக்கு ஒரு புதுமையல்ல. அது அவனுக்கு அற்புதமாகவும் தெரியவில்லை. பார்வோன் அந்த அற்புதத்தைப் பார்த்து பயப்படவுமில்லை.
அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பிக்கிறான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயிற்று; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று (யாத் 7:11,12).
சாஸ்திரிகள் கல்வி கற்றவர்கள். அவர்களுக்கு எல்லாவிதக் கலைகளும் தெரியும். மந்திர தந்திரங்களும் படித்திருக்கிறார்கள். சூனியக்காரர்கள் மந்திரவாதிகளைப் போன்றவர்கள். இவர்கள் மறைந்திருக்கும் இரகசியங்களை அறிவிப்பார்கள். நடைபெறும் காரியங்களுக்கு வியாக்கியானம் கூறுவார்கள். அக்காலத்தில் மந்திர புஸ்தகங்கள் ராஜாவுக்கே உரியவை. ஆசாரியரும், சாஸ்திரிகளும் மட்டும் ராஜாவின் அனுமதிபெற்று மந்திர புஸ்தகங்களை வாசிக்கலாம். 2தீமோ 3:8 ஆவது வசனத்தில் இவர்களில் இருவரான யந்நேயைப் பற்றியும், யம்பிரேயைப் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது.
மோசே நடப்பித்த அற்புதத்தை பார்வோனால் மறுக்க முடியாது. அது பிரத்தியட்சமாக நடைபெற்ற அற்புதம். பார்வோனுக்கு முன்பாகவும், அவனுடைய அரண்மனையிலிருக்கிற எல்லோருக்கும் முன்பாகவும் ஆரோன் போட்ட கோல் சர்ப்பமாயிற்று. ஆனாலும் எகிப்து தேசத்தின் மந்திரவாதிகள் போட்ட கோல்களும் சர்ப்பங்களாக மாறிற்று. இதனால் பார்வோனுடைய இருதயம் கடினப்படுகிறது.
மோசே தன்னுடைய ஜீவியத்தின் ஆரம்பகாலத்தில், எகிப்து தேசத்திலே இருந்தவர். அவர் நாற்பது வருஷங்களாக எகிப்து தேசத்தின் கல்வியையும், மந்திரவித்தைகளையும் கற்றவர். எகிப்து தேசத்தின் மந்திரவாதிகள் என்ன செய்வார்கள் என்பது மோசேக்கு நன்றாய்த் தெரியும். மோசேயைப்பற்றி பார்வோனுக்கும் தெரியும். மோசே ஒரு வேளை, தான் எகிப்து தேசத்தில் கற்ற மந்திரவித்தைகளை, இப்போது இங்கே தனக்கு முன்பாக நடத்தி காண்பிக்கிறார் என்று பார்வோன் நினைக்கிறான்.
பார்வோன் இதற்காகவே தன்னுடைய மந்திரவாதிகளை தனக்கு முன்பாக அழைப்பிக்கிறான். அவர்களும் ஆரோனைப்போல தங்களுடைய கோல்களை போடுகிறார்கள். அவைகள் சர்ப்பங்களாயிற்று.
பார்வோனுடைய மந்திரவாதிகளின் கோல்கள் சர்ப்பங்களானதும், கர்த்தருடைய வல்லமையினாலேயே நடைபெறுகிறது என்று வேதபண்டிதர்களில் சிலர் விளக்கம் சொல்லுகிறார்கள். பார்வோனுடைய இருதயத்தை கடினப்படுத்த வேண்டும் என்பது கர்த்தருடைய சித்தமாயிருக்கிறது. இதற்காகவே கர்த்தர் எகிப்து தேசத்தின் மந்திரவாதிகளுடைய கோல்களை சர்ப்பங்களாக மாற்றுகிறார் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். வேதபண்டிதர்களில் வேறு சிலரோ, மந்திரவாதிகளின் கோல்கள் சர்ப்பங்களாக மாறினது அசுத்த ஆவிகளால் நடைபெற்ற காரியம் என்று விளக்கம் சொல்லுகிறார்கள்.
கர்த்தர் சில சமயங்களில் பொய்சொல்லுகிற ஆவிகளுக்கு அனுமதி கொடுக்கிறார். அந்த ஆவிகள் விநோதமான காரியங்களை செய்யும். கர்த்தர் தம்முடைய ஜனத்தின் விசுவாசத்தை சோதிப்பதற்காகவும், தம்முடைய வல்லமையை அவர்களுக்கு விளங்கப்பண்ணுவதற்காகவும், சில சமயங்களில் இது போன்ற காரியங்களை அனுமதிக்கிறார்.
“”அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்’’ (உபா 13:3).
“”உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்க வேண்டியதே’’ (1கொரி 11:19).
மந்திரவாதிகளின் கோல்கள் சர்ப்பங்களாக மாறினாலும், இந்த விஷயத்திலும் கர்த்தர் மோசேயை கனம்பண்ணுகிறார். ஆரோனுடைய கோல் மந்திரவாதிகளுடைய கோல்களை விழுங்கிற்று. இந்த சம்பவமே, மோசேயும் ஆரோனும் கர்த்தருடைய நாமத்தினால் பேசுகிறார்கள் என்பதற்கும், அவர்கள் இருவரும் கர்த்தருடைய வல்லமையினால் இந்த அற்புதத்தை செய்கிறார்கள் என்பதற்கும் அடையாளமாயிருக்கிறது.
ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று. மந்திரவாதிகளின் கோல்களும் சர்ப்பங்களாயிற்று. (யாத் 7:9) ஆரோனின் கோல் அவர்களுடைய கோல்களை விழுங்கின படியால், சாத்தானின் வல்லமையைவிட தேவனுடைய வல்லமை மகத்துவமானது என்பது இங்கு நிரூபிக்கப்படுகிறது.
மந்திரவாதிகள் ஒருசில அற்புதங்களைச் செய்கிறார்கள். ஆனாலும் தேவன் அனுப்பும் வாதைகளிலிருந்து அவர்களால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை. (யாத் 8:18; யாத் 9:11). சாத்தானிடம் குறைவான வல்லமையே இருக்கிறது. ஜனங்களை ஏமாற்றுவதற்காக சாத்தான் சில மாயையான அற்புதங்களைச் செய்து, ஜனங்களை வஞ்சிப்பான். (மத் 24:24; 2தெச 2:8-12; வெளி 13:2,4,11-18; வெளி 16:13-16; வெளி 19:20).
ஆனால் பார்வோனோ மோசேக்கும் ஆரோனுக்கும் செவிகொடுக்கவில்லை. அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறான். கர்த்தர் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்படுகிறது. பார்வோன் அவர்களுக்கு செவிகொடாமற்போகிறான் (யாத் 7:13).
மோசே கோலை சர்ப்பமாக மாற்றுவதுபோல, எகிப்து தேசத்தின் மந்திரவாதிகளும் தங்கள் கோல்களை சர்ப்பங்களாக மாற்றுகிறார்கள். ஆகையினால் இந்த சம்பவத்தில் விசேஷித்த அற்புதம் எதுவுமில்லை என்று பார்வோன் சாதாரணமாக நினைத்துவிடுகிறான்.