சங்கீதம் 18 விளக்கம்
(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். கர்த்தருடைய தாசனாகிய தாவீது இந்தப் பாட்டின் வார்த்தைகளைக் கர்த்தர் தன்னைத் தன்னுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் சவு-ன் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்த நாளிலே பாடினது.)
முதலாவது மீட்பின் சங்கீதம் - (2சாமு 22)
பொருளடக்கம்
1. தாவீதின் தேவன் - தேவனுடைய ஒன்பது காரியங்கள் - (18:1-2)
2. நெருக்கத்தில் தாவீதின் ஜெபம் - (18:3-6)
3. தேவனுடைய பதில் - முப்பத்தைந்து அற்புதமான கிரியைகள் - (18:7-20)
4. சாட்சி - ஐந்து செயல்பாடுகள் - (18:21-24)
5. தேவனுடைய பதினைந்து விதமான சுபாவங்கள் - (18:25-31)
6. தேவனுடைய இருபத்தி ஒன்று ஆசீர்வாதங்கள் - (18:32-50)
2சாமுவேல் புஸ்தகத்தில் தாவீதின் சரித்திரம் எழுதப்பட்டிருக்கிறது. பதினெட்டாவது சங்கீதத்திலுள்ள வசனங்கள் 2சாமு 22-ஆவது அதிகாரத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த சங்கீதம் எழுதப்படுவதற்கு முன்பே 2சாமு 22-ஆவது அதிகாரம் எழுதப்பட்டது. தாவீது அதன்பின்பு அந்த வசனங்களிலுள்ள சில வார்த்தைகளை ஓரளவு புதுப்பித்து இந்த சங்கீதத்தை எழுதியிருக்கிறார். சபையில் இந்த சங்கீதத்தை பாடுவதற்கு ஏற்ற பிரகாரமாக தாவீது இதைத் திருத்தி அமைத்திருக்கிறார்.
கர்த்தர் தாவீதுக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்திருக்கிறார். அவருடைய சத்துருக்களின் கைகளிலிருந்து கர்த்தர் பல சமயங்களில் தாவீதை விடுவித்து இரட்சித்திருக்கிறார். கர்த்தருடைய பெரிதான கிருபைக்கும், இரக்கத்திற்கும், இரட்சிப்புக்கும் நன்றி சொல்லும் வண்ணமாக தாவீது இந்த சங்கீதத்தை இயற்றியிருக்கிறார்.
இந்த சங்கீதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் நம்முடைய பக்திவிருத்திக்கு உதவிபுரியும். அவை நம்முடைய விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும். இந்த சங்கீதத்தின் வார்த்தைகளும் கருத்துக்களும் தெளிவாக இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எபிரெய பாஷையில் எழுதப்பட்டுள்ள இந்த சங்கீதத்தில் இசை நயம் அதிகமாய் இருப்பதாக எபிரெய வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். இசை நயமும் பயபக்தியும் இந்த சங்கீதத்தில் இணைந்திருக்கிறது. இசை நயத்தைவிட பயபக்தியும், கர்த்தரைத் துதிக்கும் ஸ்தோத்திர வார்த்தைகளும் இந்த சங்கீதத்தில் அதிகமாய் உள்ளன.
கர்த்தருடைய பிள்ளைகளிடத்தில் பரிசுத்த விசுவாசமும், மெய்யான அன்பும், கர்த்தருக்குள் சந்தோஷமும், கர்த்தரைத் துதிக்கிற துதியும், கர்த்தரை நம்புகிற விசுவாசமும் காணப்படவேண்டும். இவையெல்லாம் நமக்குள் ஜீவனுள்ளவையாயிருக்கவேண்டும். அப்போதுதான் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் அனலுள்ளதாயும், உற்சாகமானதாயும் இருக்கும். நமக்கு ஆவிக்குரிய வளர்ச்சி உண்டாகும்.
தாவீது கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கிறார். கர்த்தரில் அன்பு கூருகிறார் (சங்18:1-3). கர்த்தர் தனக்குக் கொடுத்த விடுதலைகளுக்காக தாவீது கர்த்தரை துதித்துப் பாடுகிறார் (சங் 18:4-19). கர்த்தர் தாவீதின் நீதிக்குத் தக்கதாக அவருக்குப் பதிலளித்திருக்கிறார் (சங் 18:20-28). தனக்குக் கிடைத்த எல்லா வெற்றிகளுக்கும் தாவீது கர்த்தரை மகிமைப்படுத்துகிறார் (சங் 18:29-42). கர்த்தர் தனக்கும், தம்முடைய பிள்ளைகளுக்கும் இன்னும் என்னென்ன நன்மைகளையெல்லாம் செய்வார் என்பதை தாவீது நினைவுகூர்ந்து தன்னுடைய இருதயத்தில் உற்சாகமாயிருக்கிறார் (சங் 18:43-50).
பதினெட்டாம் சங்கீதம் தாவீதின் சங்கீதம். தாவீது கர்த்தருடைய தாசன். இந்த சங்கீதத்தின் மூலமாய் தாவீது கர்த்தரோடு பேசுகிறார். கர்த்தர் தாவீதை அவருடைய எல்லா சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்தார். கர்த்தர் தன்னை விடுவித்த அந்த நாளிலே தாவீது இந்த சங்கீதத்தைப் பாடியிருக்கிறார்.
கர்த்தாவே உம்மில் அன்புகூருவேன் சங் 18 : 1,2
சங் 18:1. என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
சங் 18:2. கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
2சாமு 22-ஆவது அதிகாரத்தில் இந்த சங்கீதம் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது. சாமுவேல் புஸ்தகத்தில் இந்த சங்கீதம் இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டதாக சொல்லப்படவில்லை. சங்கீதப்புஸ்தகத்திலே, இந்த சங்கீதத்தின் தலைப்பில் ""இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்'' என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த சங்கீதம் தேவாலயத்தில் பாடவேண்டிய சங்கீதமாகும். நாம் இதை இக்காலத்தில் திருச்சபைகளிலும் பயபக்தியோடு பாடலாம்.
இந்த சங்கீதத்தில் தாவீது தன்னைப்பற்றிச் சொல்லும்போது, ""கர்த்தருடைய தாசனாகிய தாவீது'' என்று சொல்லுகிறார். மோசே கர்த்தருடைய தாசனாக இருந்ததுபோல, தாவீதும் கர்த்தருடைய தாசனாயிருக்கிறார். தாவீது தன்னை இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லிக்கொள்வதைவிட, தன்னை கர்த்தருடைய தாசன் என்று சொல்லிக்கொள்வதிலேயே பிரியப்படுகிறார். கர்த்தருடைய தாசனாகயிருப்பதே தாவீதுக்கு மேன்மையும் மகிமையும் ஆகும். நமக்கு அதுதான் மேன்மை.
116-ஆவது சங்கீதத்தில் தாவீது தன்னைப்பற்றிச் சொல்லும்போது, ""கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன்'' (சங் 116:16) என்று சொல்லுகிறார். தாவீது கர்த்தரோடு நெருங்கிய ஐக்கியத்திலிருக்கிறார். இந்த ஐக்கியத்திற்காக அவர் கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறார். கர்த்தருக்குள் சந்தோஷமாயிருக்கிறார். ""கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்'' என்று கர்த்தரைத் துதித்துப் பாடுகிறார்.
கர்த்தரே தாவீதுக்குப் பெலனாயிருக்கிறவர். ""என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்'' என்று தாவீது பாடும்போது, கர்த்தரிடத்தில் அவர் வைத்திருக்கிற அன்பும், விசுவாசமும், பயபக்தியும் பரிபூரணமாய் வெளிப்படுகிறது. நாம் ஒருவரிடத்தில் அன்புகூரும்போது, அவர் நம்மீது பிரியமாயிருப்பார்.
தாவீது கர்த்தரில் அன்புகூருகிறார். தம்மிடத்தில் அன்புகூருகிற தாவீதின்மீது கர்த்தர் மிகவும் பிரியமாயிருக்கிறார். அவர் தாவீதை நினைத்து மிகுந்த சந்தோஷப்படுகிறார். தாவீது இந்த சங்கீதத்தை ஆரம்பிக்கும்போதே, ""என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்'' என்னும் வார்த்தைகளால் ஆரம்பித்து, கர்த்தர்மீது தான் வைத்திருக்கும் அன்பையும், பயபக்தியையும் வெளிப்படுத்துகிறார்.
தாவீது இந்த சங்கீதத்தில் கர்த்தரைப் போற்றிப் புகழுகிறார். அவருடைய சுபாவங்களையும், அவர் தனக்குக் காண்பிக்கிற நன்மைகளையும், உதவிகளையும் நன்றியோடு சொல்லி கர்த்தரைத் துதிக்கிறார். கர்த்தர் தாவீதுக்கு, அவருடைய கன்மலையாகவும், அவருடைய கோட்டையாகவும் இருக்கிறார். தாவீதுக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் கர்த்தரே அவருடைய இரட்சகராகயிருந்திருக்கிறார்.
கர்த்தரே தாவீதுக்குத் தேவன். தாவீது கர்த்தரையே நம்பியிருக்கிறார். தாவீதுக்கு நெருக்கங்களும், பாடுகளும், உபத்திரவங்களும் வந்தபோது கர்த்தர் தாவீதின் துருகமாகவும், அவருடைய கேடகமாகவும், அவருடைய இரட்சணியக்கொம்பாகவும் இருந்திருக்கிறார். தாவீதுக்கு கர்த்தரே அடைக்கலமானவர். அவர் தாவீதுக்கு உயர்ந்த அடைக்கலமாயிருக்கிறார். கர்த்தரிடத்தில் தாவீது அடைக்கலம் பெற்றிருப்பதினால், சத்துருக்களால் தாவீதைத் தொடமுடியவில்லை. தாவீதை தொடுகிறவர்கள் கர்த்தருடைய கண்மணியை தொடுகிறார்கள். தாவீதோடு யுத்தம்பண்ணுகிறவர்கள் கர்த்தரோடு யுத்தம்பண்ணுகிறார்கள். கர்த்தரே தாவீதுக்கு எல்லாமுமாகயிருக்கிறார்.
தேவனுடைய குணாதிசயங்கள்
1. கன்மலை - அஸ்திபாரம்
2. கோட்டை - பாதுகாப்பு (சங் 18:2; சங் 31:3; சங் 71:3)
3. இரட்சகர் - தப்புவிக்கிறவர் (சங் 18:2; சங் 40:17; சங் 70:5; சங் 144:2)
4. தேவன் - சர்வ வல்லமையுள்ளவர். தமது ஜனத்திற்காக தேவன் எல்லாம் அறிந்தவராகவும், எல்லாவற்றையும் காண்பவராகவும் எல்லாம் செய்பவராகவும் இருக்கிறார் (சங் 57:2)
5. துருகம்
6. கேடகம் (சங் 18:2,30; நீதி 2:7; ஆதி 15:1). தேவன் நமது தலையையும் இருதயத்தையும் மூடுகிறார். இதனால் விரோதிகளிடமிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம்
7. இரட்சணியக்கொம்பு - (சங் 18:2; 2சாமு 22:3) கொம்பு என்பது வல்லமையின் அடையாளம். ஆகவே இது வல்லமையுள்ள இரட்சணியம் என்று பொருள்படும் (லூக்கா 1:69; 1சாமு 2:1, 10; சங் 132:17)
8. உயர்ந்த கோபுரம் - ஆபத்திற்கு அப்பாற்பட்டது (வெளி 18:2; வெளி 144:2; 1சாமு 22:3)
வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள நான்கு முக்கியமான கன்மலைகள்
(1) தேவன் - கன்மலை அல்லது அஸ்திபாரம் (சங் 18:2; சங் 31:3)
(2) கிறிஸ்து - ஞானக்கன்மலை (சங் 78:16; எண் 20:8-11; நெகே 9:15; 1கொரி 10:4; சங் 31:2)
(3) கிறிஸ்து - சபையின் அஸ்திபாரம் (மத் 16:18; ரோமர் 9:33)
(4) ஏதோமின் தலைநகரம் - சேலா (2இராஜா 14:7; ஏசா 16:1) - அந்தி கிறிஸ்துவிடமிருந்து இஸ்ரவேலர்கள் தப்பித்து இங்கு பாதுகாப்பிற்காக ஓடிவருவார்கள் (வெளி 12:6,14)
துதிக்குப் பாத்திரராகிய கர்த்தர் சங் 18 : 3-6
சங் 18:3. துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.
சங் 18:4. மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
சங் 18:5. பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
சங் 18:6. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்தி-ருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
கர்த்தர் தாவீதை அவருடைய எல்லா ஆபத்துக்களுக்கும் விலக்கி காத்துக்கொண்டார். கர்த்தருடைய கிருபையினால் தாவீது, ஆபத்துக்களிலிருந்து இரட்சிக்கப்பட்டிருக்கிறார். இப்போது அவர், கர்த்தருடைய சமுகத்திற்கு வந்து, கர்த்தர் தனக்குச் செய்த உதவிகளையெல்லாம் நன்றியோடு நினைவுகூருகிறார். கர்த்தர் நமக்குச் செய்த நன்மைகளையெல்லாம் நாம் நன்றியோடு நினைவுகூரவேண்டும். கர்த்தர் செய்த உதவிகளை நாம் மறந்துவிடுவோமென்றால், நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நம்மால் வளர்ச்சி பெறமுடியாது.
இயேசுகிறிஸ்து ஒரு சமயம் பத்து குஷ்டரோகிகளை சுத்தமாக்கினார். அவர்களில் ஒருவன் மாத்திரமே இயேசுகிறிஸ்துவிடம் நன்றி சொல்ல வந்தான். சுத்தமான மற்ற ஒன்பதுபேரும் இயேசுகிறிஸ்துவிடம் நன்றி சொல்ல வரவில்லை. இயேசுகிறிஸ்துவோ தன்னிடம் நன்றிசொல்ல வந்தவனிடம், ""சுத்தமானவர்கள் பத்துபேர் அல்லவா, மீதி ஒன்பது பேர் எங்கே'' என்று கேட்டார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அந்த ஒன்பதுபேரில் ஒருவராக இருக்கக்கூடாது.
கர்த்தர் நம்மை பல ஆபத்துக்களிலிருந்து விடுவிக்கிறார். நம்முடைய ஆபத்துக்களும், பிரச்சனைகளும் பெரிதாகயிருக்கும்போது கர்த்தருடைய உதவியும் நமக்கு அதிகமாய்த் தேவைப்படுகிறது. நாம் அதிகமாய் கஷ்டப்படும்போது, கர்த்தருடைய கிருபையையும் இரக்கத்தையும் அதிகமாய் எதிர்பார்ப்போம். கர்த்தர் நம்மை பெரிய ஆபத்துக்களிலிருந்தும், பெரிய பிரச்சனைகளிலிருந்தும், பெரிய நெருக்கங்களிலிருந்தும் விடுவிக்கும்போது, கர்த்தருக்கு நாம் சொல்லுகிற நன்றியும் பெரியதாயிருக்கவேண்டும். நம்முடைய துதிகளும் ஸ்தோத்திரங்களும் அதிகமாயிருக்கவேண்டும்.
தாவீது தனக்கு வந்த ஆபத்துக்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறார். சத்துருக்கள் தாவீதைச் சூழ்ந்து வளைந்துகொண்டார்கள். தன்னுடைய சுயபலத்தினால் தன்னால் தப்பிக்க முடியாத சூழ்நிலையில், கர்த்தர் தாமே தம்முடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும், தன்னை தன்னுடைய சத்துருக்களுக்கு விலக்கி இரட்சித்ததை தாவீது நன்றியுள்ள இருதயத்தோடு நினைவுகூருகிறார்.
தாவீது கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்போது, ""துதிக்குப் பாத்திரராகிய கர்த்தாவே'' என்று சொல்லுகிறார். நம்முடைய எல்லா துதிகளுக்கும், ஸ்தோத்திரங்களுக்கும் கர்த்தர் மாத்திரமே பாத்திரராயிருக்கிறார். நம்முடைய ஜெபங்களையும், வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரிடத்தில் மாத்திரமே ஏறெடுக்கவேண்டும். அவர் நம்முடைய துதிக்குப் பாத்திரராயிருப்பதினால், அவர் செய்த நன்மைகளையும், அவருடைய கிருபைகளையும், அவருடைய இரக்கங்களையும் நன்றியோடு நினைத்து, அவரைத் துதிக்கவேண்டும்.
கர்த்தர் தாவீதின் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி அவரை இரட்சித்தார். இதற்காக தாவீது கர்த்தரைத் துதிக்கிறார். கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார். கர்த்தரைத் துதிக்கும்போது தனக்கு இனிமேலும் அவருடைய உதவியும், ஒத்தாசையும், இரட்சிப்பும் கிடைக்கும் என்று தாவீது எதிர்பார்க்கிறார். தன்னுடைய எதிர்பார்ப்பைப்பற்றி தாவீது சொல்லும்போது, ""துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன், அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்'' என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார்.
தாவீதுக்கு ஏற்கெனவே பல ஆபத்துக்கள் வந்தது. அவருடைய சத்துருக்கள் மூலமாய் அவருக்கு அநேக சதிமோசங்கள் உண்டாயிற்று. அவருக்கு விரோதமாக கண்ணிகள் வைக்கப்பட்டிருந்தது. இவையெல்லாவற்றிலிருந்தும் கர்த்தர் தாவீதை மீட்டு இரட்சித்திருக்கிறார். கர்த்தர் தனக்குச்செய்த உதவிகளையெல்லாம் தாவீது நன்றியோடும், ஸ்தோத்திரத்தோடும் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.
மரணக்கட்டுக்கள் தாவீதைச் சுற்றிக்கொண்டது. துர்ச்சனப்பிரவாகம் அவரைப் பயப்படுத்திற்று. பாதாளக்கட்டுக்கள் தாவீதைச் சூழ்ந்துகொண்டது. மரணக்கண்ணிகள் அவர்மேல் விழுந்தது. தாவீதின் சத்துருக்கள் பேலியாளின் ஜனமாயிருக்கிறார்கள். அவர்கள் ஜலப்பிரவாகத்தைப்போல தாவீதின்மீது விழவருகிறார்கள்.
தாவீதுக்கு அதிகமான நெருக்கம் உண்டாயிற்று. அவருடைய சுயபலத்தினால் இந்த நெருக்கத்திலிருந்து அவரால் தப்பிக்க முடியாது. துர்ச்சனப்பிரவாகம் தாவீதை பயப்படுத்திற்று. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தாவீது கர்த்தரையே நம்பியிருக்கிறார். கர்த்தரை நோக்கி அபயமிட்டால் அவர் தன்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு தனக்கு உதவிபுரிவார் என்று தாவீது விசுவாசிக்கிறார்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் ஜெபங்களைக் கேட்கிறவர். நம்முடைய வேண்டுதல்களுக்கும், விண்ணப்பங்களுக்கும் ஏற்ற வேளையிலே பதில்கொடுக்கிறவர். தாவீதைப்போல நம்முடைய வாழ்க்கையிலும் பல நெருக்கங்களும், ஆபத்துக்களும் உண்டாகலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் கலக்கமடையாமல், கர்த்தரை நோக்கி விசுவாசத்தோடு கூப்பிடவேண்டும். கர்த்தர் நம்முடைய விண்ணப்பத்தைக் கேட்பார். நாம் கூப்பிடுவது அவருடைய சந்நிதியில் போய், அவருடைய செவிகளில் ஏறும் என்று நம்பவேண்டும்.
கர்த்தர் நம்முடைய விண்ணப்பத்தைக்கேட்டு, நமக்கு உதவிசெய்யும்போது, நாம் கர்த்தருடைய சமுகத்தில் அவரை நன்றியோடு துதிக்கவேண்டும். கர்த்தருடைய கரத்திலிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொண்ட நமக்கு, அவரைத் துதிக்கவேண்டிய கடமை உண்டு. நம்முடைய கர்த்தர் துதிகளுக்குப் பாத்திரராயிருக்கிறார்.
தாவீதுக்கு நெருக்கமுண்டானபோது அவர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். தன்னுடைய ஆபத்துக்களையும், பிரச்சனைகளையும், சத்துருக்களையும் பற்றி தாவீது தேவனை நோக்கி அபயமிட்டார். கர்த்தர் தம்முடைய ஆலயத்திலிருக்கிறார். தாவீது சத்துருக்கள் மத்தியில் ஆபத்திலிருக்கிறார். கர்த்தர் தம்முடைய ஆலயத்திலிருந்தாலும் தாவீதின் அபயசத்தத்தைக் கேட்டார். தாவீது கூப்பிடுவது கர்த்தருடைய சந்நிதியில் போய், அவருடைய செவிகளில் ஏறிற்று. தாவீது தன்னுடைய இருதயத்திலிருந்து அபயமிடுகிறார்.
கர்த்தருடைய பிள்ளைகள் பாரத்தோடு ஜெபிக்கும்போது, கர்த்தர் அவர்களுடைய விண்ணப்பங்களை கவனித்துக் கேட்டு, அவர்களுக்கு உதவிசெய்கிறார். கர்த்தர் தனக்குச் செய்த நன்மைகளையெல்லாம் நினைத்து தாவீது கர்த்தரை நன்றியோடு துதிக்கிறார். கர்த்தரைப்பற்றிச் சொல்லும்போது ""துதிக்குப் பாத்திரராகிய கர்த்தர்'' என்று அறிக்கை செய்கிறார்.
மனுஷரைப் பிடிக்கும் கண்ணிகள்
1. இருதயத்தைக் கடினப்படுத்துதல் (யாத் 10:1,7)
2. விக்கிரகாராதனை (யாத் 23:33)
3. பொறாமை (1சாமு 18:6-21)
4. மரணத்திற்கு காரணமானது (சங் 18:5)
5. நீதிமானுக்கு எதிராகத் துன்மார்க்கனின் சதி ஆலோசனை (சங் 64:5)
6. பாவம் (சங் 69:22)
7. மதிகேடனின் உதடுகள் (நீதி 18:7)
8. பக்தியில்லாமை (நீதி 20:25)
9. கோபம் (நீதி 22:25)
10. துன்மார்க்கமான கிரியைகள் (நீதி 29:4-8)
11. மனுஷபயம் (நீதி 29:25)
12. கிறிஸ்துவை மறுதலித்தல் (ஏசா 8:14-16)
நெருக்கத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள்
1. கர்த்தரை நோக்கி கூப்பிட வேண்டும்
2. தேவனை நோக்கி அபயமிட வேண்டும்
பூமி அசைந்து அதிர்ந்தது சங் 18 : 7-12
சங் 18:7. அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
சங் 18:8. அவர் நாசியி-ருந்து புகை எழும்பிற்று, அவர் வாயி-ருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.
சங் 18:9. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
சங் 18:10. கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்.
சங் 18:11. இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக்கூடாரமாக்கினார்.
சங் 18:12. அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் கேட்டு அவர்களுக்கு அற்புதமாய் பதில்கொடுக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகள் ஆபத்துக்களில் சிக்கியிருக்கும்போது கர்த்தர் பலத்த கிரியைகளைச் செய்து அவர்களை ஆபத்துக்களிலிருந்து மீட்டு இரட்சிக்கிறார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை இரட்சிக்கும் கிருபை பெரியது. தம்முடைய பிள்ளைகளை மீட்டு இரட்சிப்பதற்காக கர்த்தர் செய்கிற கிரியைகளும் பெரியது.
தாவீது தனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். கர்த்தர் தன்னுடைய விண்ணப்பத்தைக்கேட்டு, தன்னை எப்படி இரட்சித்தார் என்று தாவீது இங்கு தெளிவுபடுத்துகிறார். தாவீது தேவனை நோக்கி அபயமிட்டார். தாவீதின் கூப்பிடுதல் கர்த்தருடைய செவிகளில் ஏறிற்று. உடனே பூமி அசைந்து அதிர்ந்தது. தாவீதின் சத்துருக்கள்மீது கர்த்தருக்கு கோபமுண்டாயிற்று. இதனால் பர்வதங்களின் அஸ்திபாரங்களும் குலுங்கி அசைந்தது.
கர்த்தருடைய பிள்ளைகளை நெருக்குகிறவர்கள் கர்த்தரையே நெருக்குகிறார்கள். நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறவர்கள் கர்த்தருக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறார்கள். நம்மைத் தொடுகிறவர்கள் நம்முடைய கர்த்தருடைய கண்மணியையே தொடுகிறார்கள். இதனால் நம்மை நெருக்குகிறவர்கள்மீது, நம்மைத் துன்பப்படுத்துகிறவர்கள்மீது, நம்மை ஒடுக்குகிறவர்கள்மீது கர்த்தர் கோபப்படுகிறார். கர்த்தர் கோபங்கொள்ளும்போது பர்வதங்களின் அஸ்திபாரம் குலுங்கி அசையும்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை அவர்களுடைய நெருக்கத்திலிருந்து மீட்க வரும்போது, அவர் தம்முடைய மகிமையோடும், சர்வவல்லமையோடும் வருகிறார்.
கர்த்தருடைய பார்வையில் நம்முடைய நெருக்கங்களும், துன்பங்களும் மிகவும் சாதாரணம். ஆனாலும் கர்த்தரோ நம்மை மீட்க வரும்போது, சாதாரண வல்லமையோடு வருவதில்லை. அவர் எப்போதுமே சர்வவல்லமையுள்ளவர். அவர் தம்முடைய சர்வவல்லமையோடு வருகிறார். அவர் வரும்போது பர்வதங்களின் அஸ்திபாரங்களும் குலுங்கி அசையும். சீனாய் மலை தேவனுடைய பிரசன்னத்தினால் குலுங்கி அசைந்ததுபோல, அவர் தம்முடைய பிள்ளைகளை மீட்க வரும்போதும் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசையும்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை நெருக்குகிறவர்கள்மீதும், துன்பப்படுத்துகிறவர்கள்மீதும், ஒடுக்குகிறவர்கள்மீதும் கோபப்படுகிறார். கர்த்தர் அன்புள்ளவர். அதே வேளையில் தம்முடைய பிள்ளைகளை துன்பப்படுத்துகிறவர்கள்மீது கர்த்தர் கோபப்படுகிறவர்.
கர்த்தர் கோபப்படும்போது அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பும். அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்படும். அதனால் தழல் மூளும். தம்முடைய பிள்ளைகளுக்கு சத்துருவாக எழும்பியிருக்கிறவர்களை அதம்பண்ணுகிற வரையிலும் கர்த்தருடைய கோபம் தணியாது. அவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்சிக்கிற அக்கினி அவியாது. தேவனுடைய கோபத்தினால் அக்கினி தழல் மூண்டுகொண்டேயிருக்கும்.
நமக்கு நெருக்கமுண்டாகும்போது, நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், நம்முடைய கூப்பிடுதல் அவருடைய செவிகளில் உடனடியாக போய்ச் சேர்ந்துவிடும். கர்த்தர் நம்மை விடுவிக்க காலதாமதமில்லாமல் உடனே வந்துவிடுவார். தம்முடைய பிள்ளைகளின் விண்ணப்பங்களுக்கும், வேண்தல்களுக்கும் பதில் கொடுப்பதற்கு கர்த்தர் எப்போதும் ஆயத்தமாயிருக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகள் ஆபத்துக்களில் சிக்கியிருக்கும்போது, அவர்களை மீட்பதற்காக கர்த்தர் விரைந்து வருவார்.
தன்னுடைய ஆபத்துக்களிலிருந்து, தன்னை மீட்பதற்காக கர்த்தர் எவ்வளவு விரைவாக வந்தார் என்பதை தாவீது இங்கு விரிவாக சொல்லுகிறார். ""கர்த்தர் வானங்களைத் தாழ்த்தி இறங்கினார். அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. கேருபீன்மேல் வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்'' (சங் 18:9,10).
கர்த்தர் நமக்கு உதவிசெய்ய வேகமாய் வருவார். அவர் வரும்போது அவரைத் தடைபண்ண யாராலும் முடியாது. கர்த்தர் நம்மை ஆபத்துக்களிலிருந்து மீட்டு இரட்சிப்பதற்காக பறந்து வருவார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் நன்மைகளை விசாரிக்கிறவர். விசுவாசிகளின் உரிமைகளை ஸ்திரப்படுத்துவதற்கும், அவர்களுக்கு உண்டாயிருக்கிற நெருக்கங்களிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கும் கர்த்தர் பறந்து வருவார். கர்த்தர் பறந்து வரும்போது அவரை எந்த வல்லமைமயினாலும் தடை பண்ண முடியாது. கர்த்தரே சர்வவல்லமையுள்ளவர்.
கர்த்தர் தன்னுடைய நெருக்கத்திலிருந்து தன்னை மீட்பதற்கு வரும்போது, அவர் வானங்களைத் தாழ்த்தி இறங்கினார் என்று தாவீது எழுதுகிறார். தாவீதை அவருடைய ஆபத்துக்களிலிருந்து மீட்டு இரட்சிப்பதற்கு கர்த்தர் தேவதூதரை அனுப்பவில்லை. அவரே வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வருகிறார். தாவீதுக்குச் செய்த உதவியை கர்த்தர் நமக்கும் செய்வார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் நெருக்கப்படும்போது, தாவீதைப்போல நாமும் கர்த்தரை நோக்கிக் கூப்பிடவேண்டும். அப்போது கர்த்தர் நம்முடைய விண்ணப்பத்தையும் கேட்டு, நமக்கு உதவிபுரிவதற்காக, வானங்களைத் தாழ்த்தி இறங்கி வருவார்.
தம்முடைய பிள்ளைகள் துன்பப்படும்போது கர்த்தரும் துன்பப்படுகிறார். நாம் வருத்தப்படும்போது நம்முடைய தேவனும் வருத்தப்படுகிறார். நாம் அழும்போது நம்முடைய தேவனும் நமக்காக அழுகிறார். நாம் சந்தோஷப்படும்போது நம்முடைய கர்த்தரும் நம்மோடுகூட சந்தோஷப்படுகிறார்.
கர்த்தர் இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார். இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய கர்த்தர் மெய்யாகவே தம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறார் (ஏசா 45:15). கர்த்தர் தம்மை மறைத்துக்கொண்டாலும், தம்முடைய பிள்ளைகளை விடுவிப்பதற்காக அவர்களுக்கு இருளிலிருந்து வெளிச்சத்தைக் கொடுக்கிறார்.
கர்த்தரே நமக்கு வெளிச்சமாகயிருக்கிறவர். கர்த்தருடைய அடிச்சுவடுகளை நாம் பின்பற்றிச் செல்லும்போது, நாம் இருளில் நடவாமல் வெளிச்சத்தில் நடக்கிறோம். ஆனால் கர்த்தரோ இருளை தமக்கு மறைவிடமாக்கினார். கரும்புனல்களையும், ஆகாயத்து கார்மேகங்களையும் தம்மைச் சூழ கூடாரமாக்கினார். இதனால் கர்த்தருடைய மகிமையை நம்மால் பிரத்தியட்சமாய்க் காணமுடியவில்லை. நம்மை இரட்சிப்பதற்கும், நமக்கு உதவிபுரிவதற்கும் கர்த்தர் எப்படி வருவார் என்பதை நம்மால் தெளிவாய்த் தீர்மானிக்க முடியவில்லை.
கர்த்தருடைய கிரியைகளெல்லாமே நாம் அறியமுடியாதபடிக்கு நமக்கு இரகசியமாயிருக்கிறது. அவர் தம்முடைய இரக்கத்தையும் கிருபையையும் நமக்குக் காண்பிக்கிறார். ஆனால் அவற்றை எப்படி காண்பிக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. தேவனுடைய திட்டங்களெல்லாம் நமக்குப் புரியாத இரகசியமாயிருக்கிறது. அவர் தம்மை நம்புகிற பிள்ளைகளுக்கு நன்மையை மாத்திரம் செய்கிறவர். அவர் தம்மை மறைத்துக்கொண்டாலும், அவரே நம்முடைய தேவனாயிருக்கிறவர்.
இஸ்ரவேலின் தேவன் இருளைத் தமக்கு மறைவிடமாக்கினாலும் அவரே இஸ்ரவேலின் தேவன். அவருடைய இரட்சிக்கும் கிரியைகளை நம்மால் பிரத்தியட்சமாய்க் காணமுடியாமல் போனாலும் அவரே நம்முடைய இரட்சகர். கர்த்தர் மகிமைப் பிரகாசமாகயிருக்கிறார். அவருடைய சந்நிதி பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று. அவர் காற்றில் செட்டைகளைக் கொண்டு பறக்கிறார். கர்த்தருக்கு இருள் மறைவிடமாகயிருந்தாலும், ஆகாயத்து கார்மேகங்கள் அவரைச் சூழுகிற கூடாரமாகயிருந்தாலும், அவருடைய சந்நிதி பிரகாசத்தில் அனைத்தும் வெளிச்சமாயிருக்கிறது. அந்த மகிமைப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைப் பாதுகாக்கிறவர். அவர்களுடைய நன்மையை விசாரிக்கிறவர். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக சத்துருக்கள் எழும்பும்போது, கர்த்தர் அந்த சத்துருக்களை கண்டும் காணாதவர்போல இருந்துவிடமாட்டார். தம்முடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்பி வருகிறவர்களை, கர்த்தர் தமக்கு விரோதமாக எழும்பி வருகிறவர்களாகப் பாவிக்கிறார். தம்முடைய பிள்ளைகளைத் தொடுகிறவர்களை, தம்முடைய கண்மணியைத் தொடுகிறவர்களாக தீர்மானித்து, கர்த்தர் அவர்கள்மேல் கோபங்கொள்கிறார். கர்த்தர் கோபங்கொள்ளும்போது, அவருடைய சத்துருக்கள்மீது கல்மழையும் நெருப்புத்தழலும் விழும். சத்துருக்களால் ஜெயம்பெறமுடியாது. அவர்கள் கர்த்தருடைய கோபத்தினால் சங்காரமாவார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவர்களுடைய சத்துருக்களிடமிருந்து பரிபூரண விடுதலை கிடைக்கும்.
தேவனுடைய பௌதீகக் கிரியைகள்
1. பூமி அசைந்து அதிர்ந்தது (சங் 18:7)
2. பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது
3. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார் (சங் 18:9)
4. காரிருளை மறைவிடமாக்கினார். (சங் 18:9-11)
5. கரும்புனல்களை தம்மைச் சூழக் கூடாரமாக்கினார் (சங் 18:11)
6. மேகங்கள் பறந்து விலகிற்று (சங் 18:12)
7. கல்மழை விழுந்தது (சங் 18:12-13)
8. மின்னல்களைப் பிரயோகித்தார் (சங் 18:12-14)
9. வானங்களிலே குமுறினார் (சங் 18:13)
10. தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது (சங் 18:15)
தேவனுடைய ஆள்தத்துவக் கிரியைகள்
1. கர்த்தர் கோபங்கொண்டார் (சங் 18:7)
2. கர்த்தரின் நாசியிலிருந்து புகை எழுப்பிற்று (சங் 74:1; உபா 29:20)
3. அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது (சங் 18:8)
4. அவர் அக்கினித் தழலை மூட்டினார். (சங் 18:8)
5. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார் (சங் 18:9)
6. அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது
7. கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார் (சங் 18:10; எசே 1:4-24)
8. காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்
9. இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார் (சங் 18:11)
10. கரும்புனல்களையும், ஆகாயத்து கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார் (நாகூம் 1:3)
11. அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று (சங் 18:12)
12. கல்மழையும் நெருப்புத் தழலும் விழப்பண்ணினார் (சங் 18:12-14)
13. கர்த்தர் வானங்களிலே குமுறினார் (சங் 18:13)
14. உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்
15. கர்த்தர் பூதலத்தைக் கண்டித்தார். அஸ்திபாரங்கள் காணப்பட்டது (சங் 18:15)
16. கர்த்தருடைய நாசியின் சுவாசக் காற்றினால் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டன
17. கர்த்தர் உயரத்திலிருந்து, கைநீட்டி என்னைப் பிடித்துத் தூக்கினார் (சங் 18:16)
18. ஜலப்பிரவாகத்திலிருந்த என்னைத் தூக்கிவிட்டார்
19. என்னுடைய சத்துருக்களிடமிருந்து என்னை விடுவித்தார் (சங் 18:17)
20. என் ஆபத்துநாளில், கர்த்தர் எனக்கு ஆதரவாயிருந்தார் (சங் 18:18)
21. கர்த்தர், என்னை விசாலமான இடத்தில் வைத்தார் (சங் 18:19)
22. என்னைத் தப்புவித்தார்
23. என்மேல் பிரியமாயிருந்தார்
24. கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார் (சங் 18:20)
25. என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிகட்டினார்
தேவனுடைய சரீர அவயவங்கள்
1. நாசி
2. வாய்
3. பாதங்கள் (சங் 18:9)
4. சரீரம் (சங் 18:11-12)
5. சத்தம் (சங் 18:13)
6. சுவாசக்காற்று (சங் 18:15)
7. கைகள் (சங் 18:16)
கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்
சங் 18 : 13-18
சங் 18:13. கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
சங் 18:14. தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
சங் 18:15. அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
சங் 18:16. உயரத்தி-ருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்தி-ருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
சங் 18:17. என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
சங் 18:18. என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
தம்முடைய பிள்ளைகளுக்கு பெரிய ஆபத்துக்கள் நேரிடும்போது, கர்த்தர் பலத்த கிரியைகளை நடப்பித்து தம்முடைய பிள்ளைகளை மீட்டுக்கொள்கிறார். நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பங்கள் ஏற்படும்போது, கர்த்தர் மெய்யாகவே நம்மை மீட்டுக்கொள்வார். அப்போது அவருடைய பலத்த செய்கைகளும், மகிமையும் பிரத்தியட்சமாய் வெளிப்படும்.
தாவீதுக்கு நெருக்கங்கள் அதிகமாய் உண்டாயிற்று. கர்த்தர் தாவீதை விடுவிப்பதற்காக தண்ணீர்களின் மதகுகளைத் திறந்தார். பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்படும் மட்டாகவும் கர்த்தர் தண்ணீர்களின் மதகுகளைத் திறந்துவிட்டார். கர்த்தர் தாவீதை அவருடைய ஆபத்துக்களிலிருந்து விடுவித்தபோது, பூமியின் அஸ்திபாரங்கள் பிரத்தியட்சமாய்க் காணப்பட்டது.
தாவீதுக்கு நெருக்கமுண்டானபோது அவர் ஜலப்பிரவாகத்தில் சிக்கிக்கொண்டதுபோல தவித்துக்கொண்டிருந்தார். அவருடைய சுயபலத்தினால் அவரால் துர்ச்சனப்பிரவாகத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. ஜலப்பிரவாகம் தாவீதை மூழ்கச் செய்தது. ஆனால் கர்த்தரோ தாவீதை கிருபையோடு நோக்கிப் பார்த்தார். கர்த்தர் வானத்திலிருந்தாலும், உயரத்திலிருந்து தம்முடைய கையைநீட்டி, ஜலப்பிரவாகத்திலிருந்த தாவீதை தூக்கிவிட்டார். தாவீது மரணத்தோடு போராடிக்கொண்டிருந்தார். கர்த்தர் அந்தப் போராட்டத்தில் தாவீதுக்கு ஜெயத்தைக் கொடுத்து, மரணத்தின் பிடியிலிருந்து அவரை மீட்டு இரட்சித்தார்.
மோசே என்னும் பெயருக்கு ""தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்டவர்'' என்று பொருள். மோசே சிறுபிள்ளையாகயிருந்தபோது அவருடைய தாயார் அவரை ஒரு பேழையில் வைத்து நைல் நதியிலே அனுப்பிவிட்டாள். கர்த்தரோ மோசேயை பாதுகாத்தார். அவரை ஜலப்பிரவாகத்திலிருந்து பிரத்தியட்சமாய்த் தூக்கிவிட்டார். மோசேக்கு ஏற்பட்ட நெருக்கத்தைப்போல தாவீதுக்கும் நெருக்கமுண்டாயிற்று. தாவீது ஜலப்பிரவாகத்தில் சிக்கிக்கொள்ளவில்லை. ஜலப்பிரவாகம் என்னும் வார்த்தை தாவீதின் ஜீவியத்தில் ஓர் அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தாவீது ஜலப்பிரவாகத்தில் சிக்கிக்கொள்ளாமல் துர்ச்சனப்பிரவாகத்தில் சிக்கிக்கொண்டார். தாவீதின் சத்துருக்கள் அவரை வெள்ளம்போல சூழ்ந்துகொண்டார்கள்.
தாவீதுக்கு நெருக்கமுண்டானபோது, அவர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். கர்த்தர் தாவீதின் கூப்பிடுதலைக் கேட்டு, அவருக்கு உதவிசெய்ய சித்தங்கொண்டார். கர்த்தர் வானங்களிலே குமுறினார். உன்னதமானவர் தமது சத்தத்தை தொனிக்கப்பண்ணினார். தாவீதுக்கு விரோதமாக எழும்பியிருக்கிறவர்கள் கர்த்தருக்கும் சத்துருக்களாயிருக்கிறார்கள். தாவீதை நெருக்குகிறவர்கள் கர்த்தரையும் நெருக்குகிறார்கள். தாவீதோடு யுத்தம்பண்ணுகிறவர்கள் கர்த்தரோடும் யுத்தம்பண்ணுகிறார்கள். கர்த்தர் தம்முடைய சத்துருக்களோடு யுத்தம்பண்ணும்போது, கல்மழையும் நெருப்புத்தழலும் அவர்கள்மேல் விழும்.
கர்த்தர் தம்முடைய அம்புகளை தாவீதின் சத்துருக்கள்மீது எய்தார். கர்த்தருடைய குறி ஒருபோதும் தப்புவதில்லை. கர்த்தர் தம்முடைய அம்புகளை எய்து தாவீதின் சத்துருக்களை சிதறவிட்டார். அவர்கள்மீது மின்னல்களை பிரயோகித்தார். தாவீதின் சத்துருக்கள் மின்னல்களைப் பார்த்து கலங்கினார்கள். தங்கள்மீது வந்திருக்கிற வாதைகளை நினைத்து பயமடைந்தார்கள்.
கர்த்தர் கிருபையும், நீடிய பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர். ஆனாலும் தம்முடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்புகிற சத்துருக்கள்மீது கர்த்தர் கோபங்கொள்கிறவர். அவர் கோபங்கொள்ளும்போது அவர் நாசியிலிருந்து புகை எழும்பும். அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்படும். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளிடத்தில் அன்பை காண்பிக்கிறார். தம்முடைய சத்துருக்களிடத்திலோ அவர் கண்டிதத்தைக் காண்பிக்கிறார்.
கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டது. பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. கர்த்தருடைய நாசியின் சுவாசக்காற்று, அவருடைய கோபத்தினால் புகையாக எழும்பிற்று. அது புயல்காற்றைப்போல வீசிற்று. கர்த்தருடைய நாசியின் சுவாசக்காற்றை யாராலும் எதிர்த்து நிற்கமுடியாது. அவருடைய சுவாசக்காற்று தண்ணீர்களின்மேல் பட்டபோது, மதகுகள் திறவுண்டதுபோல, தண்ணீர் பாய்ந்து ஓடிற்று. பூமியிலுள்ள சகலமும் அவருடைய நாசியின் சுவாசக்காற்றினால் அடித்துச்செல்லப்பட்டது. அப்போது பூமியின் அஸ்திபாரம் முதலாய் சகலமும் பிரத்தியட்சமாய் எல்லோருக்கும் காணப்பட்டது.
தாவீது ஜலப்பிரவாகத்தில் சிக்கிக்கொண்டதுபோல தன்னுடைய சத்துருக்களின் கைகளில் சிக்கிக்கொண்டார். அவர்கள் தாவீதைப் பிடிப்பதற்கு விரைந்து வந்தார்கள். அவருடைய ஆபத்து நாளில் அவருக்கு எதிரிட்டு வந்தார்கள். தாவீதுக்கு மிகுந்த நெருக்கமுண்டாயிற்று. இந்த நெருக்கத்தின் மத்தியிலும் கர்த்தர் தாவீதை கைவிடவில்லை. துர்ச்சனப்பிரவாகம் தாவீதைச் சூழ்ந்துகொண்டபோதிலும், கர்த்தருடைய பிரசன்னம் அவரோடு கூடயிருந்தது. தாவீது ஜலப்பிரவாகத்தில் மூழ்கிவிடாதவாறு, கர்த்தர் தம்முடைய பலத்த கையை நீட்டி, தாவீதைப் பிடித்து, துர்ச்சனப்பிரவாகத்திலிருந்து தூக்கிவிட்டார். தாவீது ஜலப்பிரவாகத்தில் மூழ்கிவிடாதவாறு கர்த்தர் அவரைத் தப்புவித்தார். இது அவருடைய சுயவல்லமையினால் உண்டாகவில்லை. கர்த்தருடைய வல்லமையினால் தாவீதுக்கு இரட்சிப்பு உண்டாயிற்று.
தம்முடைய பிள்ளைகளுக்கு துன்பங்களும், நெருக்கங்களும் வரும்போது கர்த்தர் ஏற்றவேளையிலே, அவர்களைக் காப்பாற்றுகிறார். அவர்களை ஆபத்துக்களிலிருந்து மீட்டு இரட்சிக்கிறார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுகிற தேவனல்ல. நமக்கு உண்டான நெருக்கத்திலே நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது, கர்த்தர் மெய்யாகவே நம்முடைய அபயக்கூரலைக் கேட்பார். நமக்கு நேரிட்டிருக்கிற ஆபத்துக்களிலிருந்து நம்மை மீட்டு இரட்சிப்பதற்காக அவர் விரைந்து வருவார். நம்மை மீட்பதற்கு கர்த்தர் தம்முடைய பலத்த கரத்தைப் பயன்படுத்துவார்.
தாவீதின் சத்துருக்கள் அவரை விட பலவான்களாயிருந்தார்கள். அவர்கள் பலத்த சத்துருக்கள். அவர்கள் எல்லா வேளைகளிலும் தாவீதைப் பகைத்தார்கள். தாவீதால், தன்னுடைய சுயபலத்தினால் அவர்களை மேற்கொள்ள முடியவில்லை. கர்த்தரோ தாவீதுக்கு உதவிபுரிய முன்வந்தார். தாவீதின் ஜெபத்தைக் கேட்டு கர்த்தர் அவரை விடுவித்தார். சத்துருக்கள் அதிகபலவான்களாயிருந்தாலும், அவர்களால் கர்த்தருக்கு விரோதமாக எதிர்த்து நிற்கமுடியாது. அவர்கள் தாவீதைப் பொறுத்தவரையில் அதிகபலவான்கள். கர்த்தருக்கு முன்பாக அவர்கள் பலவீனர்கள். கர்த்தர் நம்மோடு கூடயிருக்கும்போது நாமும் இந்தப் பூமியிலே பலவான்களாயிருப்போம். கர்த்தர் நம்மோடு கூடயில்லையென்றால், நாம் ஒன்றுமேயில்லை.
தாவீதுக்கு விரோதமாக பலத்த சத்துருக்கள் எதிரிட்டு வந்தார்கள். அவர்கள் தாவீதை விட பலவான்களாயிருந்தார்கள். தாவீதால் அவர்களை எதிர்த்து நிற்கமுடியவில்லை. தாவீதுக்கு ஆதரவாக யாருமில்லை. தாவீது எல்லா திசையிலிருந்தும் நெருக்கப்பட்டார். தனக்கு உண்டான நெருக்கத்திலே அவர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். தேவனை நோக்கி அபயமிட்டார். கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருந்து தாவீதின் கூப்பிடுதலைக் கேட்டார். பலத்த சத்துருக்கள் தாவீதை சூழ்ந்திருந்தாலும் கர்த்தர் தாவீதுக்கு ஆதரவாயிருந்தார். அதனால் சத்துருக்களால் தாவீதை மேற்கொள்ள முடியாமற்போயிற்று.
என்னைத் தப்புவித்தார் சங் 18 : 19
சங் 18:19. அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
கர்த்தர் நம்மை ஆபத்துக்களிலிருந்தும், சத்துருக்களிடமிருந்தும் விடுவிக்கிறவர். அவர் நம்மை விடுவிக்கிறவர் மாத்திரமல்ல, அவரே நமக்கு ஆதரவாயிருக்கிறவர். கர்த்தருடைய விடுதலையின் கனியாக நமக்கு அவருடைய ஆதரவு கிடைக்கிறது. கர்த்தர் நம்மை விடுவிக்கும்போது அவரே நமக்கு ஆதரவாயிருக்கவேண்டும். கர்த்தருடைய ஆதரவு இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது.
கர்த்தர் தாவீதை அவருடைய சத்துருக்களிடமிருந்து விடுவித்தார். அதன்பின்பு கர்த்தர் தாவீதுக்கு ஆதரவாயிருந்து, அவரை விசாலமான இடத்திலே கொண்டு வந்தார். தாவீதின் சத்துருக்கள் அவரை நெருக்கினார்கள். அப்போது தாவீதால் எங்கும் போகமுடியவில்லை. தன்னுடைய சரீரத்தைக்கூட அவரால் அசைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட நெருக்கத்திலிருந்தவரை கர்த்தர் விசாலமான இடத்திலே கொண்டு வந்திருக்கிறார். இந்த இடத்தில் தாவீதால் அசையமுடியும். கர்த்தரைத் துதித்துப் பாட முடியும். கர்த்தருடைய சமுகத்தில் மனமகிழ்ச்சியோடு நடனமாட முடியும்.
கர்த்தர் தாவீதின்மேல் பிரியமாயிருக்கிறார். கர்த்தர் தாவீதை விடுவிப்பதற்கு அவருடைய பிரியம்தான் காரணம். தாவீதின் பரிசுத்தத்தைப் பார்த்தோ அல்லது அவருடைய பக்தியைப் பார்த்தோ கர்த்தர் அவரை விடுவிக்கவில்லை. கர்த்தர் தாவீதின்மேல் பிரியமாயிருந்தபடியால் கர்த்தர் அவரை அவருடைய எல்லா சத்துருக்களுக்கும் நீங்கலாக்கி தப்புவித்தார். கர்த்தர் தம்முடைய கிருபையினால் தாவீதுக்கு இந்த நன்மையைச் செய்தார்.
விசுவாசிகளாகிய நாம் இந்த சங்கீதத்தைப் பாடும்போது, இந்த சங்கீதத்திலுள்ள வார்த்தைகளை, தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் தொடர்புபடுத்தி தியானிக்கவேண்டும். மரணமும் வருத்தமும், பாடுகளும் இயேசுகிறிஸ்துவை சூழ்ந்துகொண்டது. கிறிஸ்துவானவர் தம்முடைய நெருக்கத்திலே பிதாவினிடத்தில் ஜெபம்பண்ணினார். எபிரெயருக்கு நிருபம் எழுதின ஆசிரியர் இயேசுகிறிஸ்துவின் ஜெபத்தைப்பற்றி இவ்வாறு சொல்லுகிறார்.
""அவர் மாம்சத்தி-ருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்'' (எபி 5:7-10).
பிதாவானவர் தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை விடுவிக்க வந்தபோது அவர் வானங்களிலே குமுறினார். அவருடைய சுவாசக்காற்றினால் பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. இயேசுகிறிஸ்து கல்லறையிலே அடக்கம்பண்ணப்பட்டார். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது, நெருக்கத்திலிருந்த அவரை பிதாவானவர் விசாலமான இடத்திலே கொண்டுவந்தார். பிதாவானவர் குமாரன்மேல் பிரியமாயிருந்தபடியால், அவரைத் தப்புவித்து, அவரை விசாலமான இடத்திலே கொண்டு வந்தார்.
கர்த்தர் எனக்குப் பதிலளித்தார் சங் 18 : 20-24
சங் 18:20. கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
சங் 18:21. கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
சங் 18:22. அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
சங் 18:23. அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
சங் 18:24. ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.
தாவீதின் மனச்சாட்சி கர்த்தருக்கு முன்பாக சுத்தமாயிருக்கிறது. ஆகையினால் கர்த்தர் தன் நீதிக்குத்தக்கதாக பதிலளித்தார் என்று தாவீது சந்தோஷப்படுகிறார். தாவீதின் கைகள் சுத்தமாயிருக்கிறது. கர்த்தர் தன்னுடைய கைகளின் சுத்தத்திற்குத் தக்கதாக தனக்குச் சரிக்கட்டினார் என்று தாவீது கர்த்தருடைய சமுகத்தில் களிகூருகிறார். தாவீது மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடு பேசவில்லை. தேவனுடைய சமுகத்தில் பயபக்தியாயும் உண்மையாயும் பேசுகிறார்.
அப்போஸ்தலர் பவுல் தன்னுடைய ஊழியத்தைப்பற்றி கொரிந்தியருக்கு எழுதின இரண்டாம் நிருபத்தில் எழுதியபோது தாவீதைப்போலவே சொல்லுகிறார். ""மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ் சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது'' (2கொரி 1:12).
கர்த்தர் தாவீதை அவருடைய சத்துருக்களிடமிருந்து மீட்டு இரட்சித்தார். தாவீது நெருக்கப்பட்டபோது கர்த்தர் அவருக்கு உதவிபுரிந்தார். தாவீதுக்கு உதவி தேவைப்படும்போது கர்த்தர் தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் அவருக்குக் காண்பித்து உதவிசெய்தார். தாவீதின் நீதிக்கும், அவருடைய கைகள் சுத்தமாயிருப்பதற்கும் இவையெல்லாம் சாட்சிகளாயிருக்கிறது. தான் மீட்கப்பட்டதைக் குறித்து தாவீது மிகுந்த ஆறுதலடைந்திருக்கிறார்.
கர்த்தர் தாமே தம்முடைய பலத்த கரத்தினால் தாவீதை விடுவித்தார். தாவீதுக்கு விரோதமாக சத்துருக்கள் பொய்யாய் குற்றம் சொன்னார்கள். சத்துருக்களின் எல்லா குற்றச்சாட்டுக்களுக்கும் கர்த்தர் தாவீதை விலக்கிக் காத்துக்கொண்டார். தாவீதிடத்தில் பாவமோ, அநியாயமோ, அக்கிரமமோ இல்லையென்பதை கர்த்தர் உறுதிபண்ணினார்.
கர்த்தர் தனக்குச் செய்த உதவிகளை தாவீது நன்றியோடு நினைவுகூருகிறார். கர்த்தர் தன்னுடைய நீதிக்குத் தக்கதாக தனக்குப் பதிலளித்தார் என்று தாவீது அறிக்கை பண்ணுகிறார். இதே வாக்கியத்தை தாவீது மறுபடியும் சொல்லுகிறார் (சங் 18:24).
தாவீது கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டு வந்தார். அவர் எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை விட்டு விலகிப்போய்விடவில்லை. கர்த்தரே தனக்கு போதுமானவர் என்று நினைத்து, கர்த்தருடைய சமுகத்தில் அவருடைய இரக்கத்திற்காகக் காத்திருந்தார். தாவீது கர்த்தருக்கு ஒருபோதும் துரோகம்பண்ணினதில்லை. தேவனுக்குத் துரோகம்பண்ணாதவர்கள் மனுஷருக்கும் துரோகம்பண்ணமாட்டார்கள்.
தாவீது கர்த்தருடைய நியாயங்களையெல்லாம் தனக்கு முன்பாக நிறுத்திப் பார்த்தார். தன்னுடைய பேச்சுக்களையும், செய்கைகளையும் தேவனுடைய நீதியை முன்வைத்து, நியாயந்தீர்த்துக்கொண்டார். கர்த்தருடைய பிரமாணங்களை தாவீது ஒருபோதும் தள்ளிப்போடவில்லை. தாவீது தன்னுடைய சுத்தமனச்சாட்சியை நினைத்து சந்தோஷப்படுகிறார்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஓட்டத்தை நியமித்திருக்கிறார். நாம் கர்த்தரையே நோக்கிப் பார்த்து, நமக்கு முன்பாக நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டத்தில் விசுவாசத்தோடு ஓடவேண்டும். ஒருவேளை நம்முடைய ஓட்டத்தில் நாம் தவறி விழுந்துவிடலாம். நாம் வேகமாக ஓடாமல் ஒருவேளை மெதுவாக ஓடலாம். சில சமயங்களில் நம்முடைய நடைகள் ஸ்திரமில்லாமல் போகலாம்.
நம்மிடத்தில் தப்பிதம் இருக்கும்போது அதை கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கை செய்யவேண்டும். நாம் மனந்திரும்பி கர்த்தரிடத்தில் வரும்போது அவர் நம்மை அன்போடு ஏற்றுக்கொள்வார். நாம் செய்த தவறுகளையெல்லாம் திருத்திக்கொண்டு, மறுபடியும் சீராக ஓடுவதற்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற கடமைகளை நேர்த்தியாய்ச் செய்யவேண்டும். நம்முடைய தப்பிதங்களுக்கு மனந்திரும்பி, நாம் மறுபடியும் சீராய் ஓடும்போது, கர்த்தருடைய கிருபை மெய்யாகவே நமக்குத் திரும்பவும் கிடைக்கும்.
கர்த்தர் நமக்கு நியமித்த ஓட்டத்தில் நாம் பின்வாங்கிப்போய்விட்டோமென்று நாம் வருத்தப்படவேண்டியதில்லை. கர்த்தருக்கு நம்முடைய பலமும், பலவீனமும் நன்றாய்த் தெரியும். நாம் கர்த்தருடைய சமுகத்தைவிட்டு துணிகரமாக விலகிப்போய்விடக்கூடாது. நாம் அறியாமல் செய்த தப்பிதங்களை கர்த்தர் மெய்யாகவே மன்னிப்பார். நம்முடைய ஓட்டத்தில் பலவீனத்தினால் நாம் கீழே விழுந்தாலும், தேவனுடைய கிருபையினால் நாம் மறுபடியும் எழும்பி நின்று ஓடவேண்டும்.
கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தை நாம் எப்படி வேண்டுமானாலும் ஓடிக்கொள்ளலாம் என்று கர்த்தர் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. அவர் மனுபுத்திரருக்கு தம்முடைய நியாயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தம்முடைய பிரமாணங்களை நமக்குச் சொல்லியிருக்கிறார். கர்த்தருடைய நியாயங்களை நமக்கு முன்பாக நிறுத்திக்கொள்ளவேண்டும். தேவனுடைய பிரமாணங்களை நாம் தள்ளிப்போடாமல் அவற்றைக் கைக்கொள்ளவேண்டும்.
தாவீது கர்த்தருக்கு முன்பாக மனஉண்மையாயிருந்தார். எல்லா மனுஷருக்கும் உண்டாகிற பொதுவான பலவீனம் தாவீதுக்கும் உண்டாயிற்று. ஆனாலும் தாவீது துர்க்குணத்திற்குத் தன்னை விலக்கிக் காத்துக்கொண்டார். தாவீதிடத்தில் அநீதி காணப்படவில்லை. நீதி காணப்பட்டது. தாவீதின் கைகள் அசுத்தமாகயில்லை. அவை சுத்தமாயிருந்தது. ஆகையினால் கர்த்தர் தன்னுடைய நீதிக்கும், தன்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக தனக்குப் பலனளித்தார் என்று தாவீது விசுவாசத்தோடு சொல்லுகிறார். கர்த்தர் தாவீதை அவருடைய சத்துருக்களின் கைகளிலிருந்து மீட்டு இரட்சித்தார். இதுவே கர்த்தர் தாவீதுக்கு அளித்த பலன்.
தாவீதின் சாட்சி
1. கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டு வந்தேன்
2. நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை
3. அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்
4. கர்த்தருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை (சங் 18:22)
5. கர்த்தர் முன்பாக மனவுண்மையாயிருந்தேன்
6. என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன் (சங் 18:23)
தேவபக்தியாக இருப்பதனால் வரும் ஆசீர்வாதங்கள்
1. தேவன் நீதிக்குப் பலனளிப்பார்
2. கைகளின் சுத்தத்திற்குத் தக்கதாகப் பலனளிப்பார்
கர்த்தர் தயவுள்ளவனுக்கு தயவுள்ளவராகயிருக்கிறார் சங் 18:25,26
சங் 18:25. தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,
சங் 18:26. புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
நாம் கர்த்தரை ஆராதிக்கிறோம். நாம் ஆராதிக்கிறவர் இன்னாரென்பதை நாம் அறிந்திருக்கவேண்டும். அப்போதுதான் நம்முடைய ஆராதனையில் ஆவியும் ஜீவனும் இருக்கும். கர்த்தர் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். அதேவேளையில் நாம் கர்த்தரிடமிருந்து எதை எதிர்பார்க்கலாம் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கவேண்டும். கர்த்தருடைய ஆளுகையையும், அவருடைய நீதியையும், அவருடைய நியாயத்தீர்ப்பையும் நாம் அறிந்தவர்களாகயிருக்கவேண்டும்.
தாவீது கர்த்தருடைய சுபாவத்தைத் தெளிவாகச் சொல்லுகிறார். அவர் தயவுள்ளவனுக்கு தயவுள்ளவராகயிருக்கிறார். அவர் உத்தமனுக்கு உத்தமராகயிருக்கிறார். மேலும் அவர் புனிதனுக்கு புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராகவும் தோன்றுவார் (சங் 18:25,26). நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் இந்த சத்தியத்தை தம்முடைய மலைப்பிரசங்கத்தில் இவ்வாறு போதகம்பண்ணியிருக்கிறார். ""இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்'' (மத் 5:7).
நாம் கர்த்தருடைய சமுகத்தில் உத்தமனாகயிருப்போமென்றால், கர்த்தரும் நமக்கு உத்தமராகயிருப்பார். நாம் பிறருக்கு தயவுள்ளவர்களாக இருக்கும்போது, கர்த்தரும் நமக்கு தயவுள்ளவராகயிருப்பார். நாம் நம்மிடத்தில் அன்புகூருவதுபோல பிறரிடத்திலும் அன்புகூரவேண்டும் என்பதுதான் இயேசுகிறிஸ்துவின் உபதேசம். பிறர் நமக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறோமோ, அதை அவர்களுக்கு நாமும் செய்யவேண்டும். நாம் மனுஷர்மீது இரக்கம் காண்பிக்கவேண்டும். அப்போது கர்த்தரும் நம்மீது இரக்கம் காண்பிப்பார். இரக்கமுள்ளவர்களுக்கு கர்த்தருக்கும் இரக்கமுள்ளராகயிருப்பார்.
மனுஷரின் பிரிவுகள்
1. தயவுள்ளவன் (சங் 18:25; மத் 5:7; லூக்கா 6:36)
2. உத்தமன் (சங் 18:25)
3. புனிதன் (சங் 18:26)
4. மாறுபாடுள்ளவன் (சங் 18:26)
5. சிறுமைப்பட்டவன் (சங் 18:27)
6. மேட்டிமையானவன் (சங் 18:27; ஏசா 2:11; ஏசா 10:12)
உத்தமனுக்கு வரும் ஆசீர்வாதங்கள்
1. இரட்சிப்பு (சங் 7:10; நீதி 28:18)
2. கிருபை (சங் 11:7)
3. வெகுமதிகள் (சங் 18:23-24)
4. தேவனுடைய கிரியைகள் (சங் 18:25)
5. பாதுகாப்பு (சங் 25:21)
6. சந்தோஷம் (சங் 32:11; சங் 64:10; சங் 97:11)
7. கிருபை (சங் 36:10)
8. நித்திய சுதந்தரம் (சங் 37:18)
9. சமாதானம் (சங் 37:37)
10. சத்துருவின் மீது ஜெயம் (சங் 49:14)
11. எல்லா நன்மைகள் (சங் 84:11)
12. நீதி (சங் 94:15)
13. வளமை (சங் 112:2; நீதி 14:11; நீதி 28:10)
14. வெளிச்சம் (சங் 112:4)
15. நன்மை (சங் 125:4; மீகா 2:7)
16. தேவனோடு நித்திய வீடு (சங் 15:1-2; சங் 140:13)
17. போதும் என்னும் மனம் (நீதி 28:6)
18. உலக வீடு (நீதி 2:21)
19. பாதுகாப்பு (நீதி 2:7)
20. பெலன் (நீதி 10:29)
21. வழிநடத்துதல் (நீதி 11:3; நீதி 21:29)
22. மீட்பு (நீதி 11:6)
23. மற்றவர்களுக்கு ஆசீர்வாதம் (நீதி 11:11)
24. தேவனுடைய பிரியம் (நீதி 11:20)
25. ஜெபத்திற்குப் பதில் (நீதி 15:8)
புனிதமானவை
1. பொன் (யாத் 25:11)
2. ஒலிவ எண்ணெய் (யாத் 27:20; லேவி 24:2)
3. வெள்ளைப்போளம் (யாத் 30:23)
4. சாம்பிராணி (யாத் 30:34; லேவி 24:7)
5. குத்துவிளக்கு (யாத் 31:8; லேவி 24:4)
6. தூபவர்க்கம் (யாத் 37:29; யாத் 39:37)
7. மேஜை (லேவி 24:6)
8. திராட்சரசம் (உபா 32:14)
9. கர்த்தருடைய வார்த்தை (சங் 12:6; சங் 119:140; நீதி 30:5)
10. கர்த்தர் (சங் 18:26)
11. கற்பனைகள் (சங் 19:8)
12. இருதயம் (சங் 24:4; மத் 5:8; 1தீமோ 1:5; 2தீமோ 2:22; 1பேதுரு 1:22)
13. மனுஷர் (நீதி 15:26; நீதி 21:8; அப் 20:26; 1தீமோ 5:22)
14. பஞ்சு (தானி 7:9)
15. பாஷை (செப் 3:9)
16. காணிக்கை (மல் 1:11)
17. பதார்த்தங்கள் (ரோமர் 14:20; தீத்து 1:15)
18. மனச்சாட்சி (1தீமோ 3:9; 2தீமோ 1:3)
19. ஜலம் (எபி 10:22)
20. மார்க்கம் (யாக் 1:27)
21. ஞானம் (யாக் 3:17)
22. மனது (2பேதுரு 3:1)
23. கிறிஸ்து (1யோவான் 3:3)
24. மெல்லிய வஸ்திரம் - தூதர்கள் (வெளி 15:6; வெளி 19:)
25. ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி (வெளி 22:1)
மாறுபாடுள்ளவை
1. சந்ததி (உபா 32:20)
2. இருதயம் (சங் 101:4; நீதி 11:20; நீதி 17:20)
3. பேச்சு (நீதி 2:12; நீதி 10:31)
4. பாதைகள் (நீதி 2:15)
5. வாய் (நீதி 4:24; நீதி 6:12; நீதி 8:13)
6. நாவு (நீதி 10:31)
7. மனுஷர் (நீதி 16:28; நீதி 22:5; 1பேதுரு 2:18)
8. திட்டங்கள் (நீதி 6:14; நீதி 16:30)
9. வழிகள் (நீதி 21:8; ஏசா 57:17)
10. தேவன் - மாறுபாடுள்ளவனுக்கு அவர் மாறுபடுகிறவர் (சங் 18:26)
கர்த்தர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பார் சங் 18 : 27,28
சங் 18:27. தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
சங் 18:28. தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்
கர்த்தர் மனத்தாழ்மையுள்ளவர்களுக்கு இரக்கம் காண்பிப்பார். அவர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பார். சத்துருக்கள் நமக்கு விரோதமாகத் தீங்கு செய்தாலும், நாம் அவற்றை பொறுமையோடு சகித்துக்கொள்ளவேண்டும். நமக்கு விரோதமாகத் தூஷண வார்த்தைகளையும் சாபவார்த்தைகளையும் மற்றவர்கள் பேசினாலும், நாம் நீடிய பொறுமையோடிருந்து அவர்களை ஆசீர்வதிக்கவேண்டும்.
நம்மிடத்தில் பெருமை இருக்கக்கூடாது. கர்த்தர் மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவார். இருதயத்தில் மேட்டிமையுள்ளவன் தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பான். அவன் தன்னுடைய சுயஆசைகளையும், சுயவிருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டுமென்று பேராசைப்படுவான். இருதயத்தில் பெருமையுள்ளவர்கள் தங்களுக்கு பெரிய காரியங்கள் வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். இவர்களுக்கு தாங்கள் மாத்திரமே உயர்ந்தவர்களாகத் தெரிவார்கள். இவர்களுடைய பார்வைக்கு மற்றவர்கள் தாழ்ந்தவர்களாயிருப்பார்கள். ஏழைகளையும், பக்தியுள்ளவர்களையும் இவர்கள் மதிக்கமாட்டார்கள். ஆனால் கர்த்தரோ சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பார். மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவார்.
தாவீது கர்த்தருடைய சமுகத்தில் தன்னுடைய ஆத்துமாவை உற்சாகப்படுத்துகிறார். கர்த்தர் தன்னுடைய விளக்கை ஏற்றுவார் என்று விசுவாசத்தோடு சொல்லுகிறார். தாவீதின் இருதயம் வருத்தத்தோடிருக்கும்போது கர்த்தர் அவருடைய இருதயத்தை தேற்றுவார். தாவீதின் இருதயம் சோர்ந்துபோயிருக்கும்போது, கர்த்தர் அவருடைய இருதயத்தை உற்சாகப்படுத்தி உயிர்ப்பிப்பார். கர்த்தர் தாவீதை அழுகையின் பள்ளத்தாக்கில் நிரந்தரமாக தங்கவைக்கமாட்டார்.
கர்த்தர் தனக்கு நியமித்திருக்கிற கடமைகளை செய்வதற்கு தாவீதுக்கு வெளிச்சம் வேண்டும். கர்த்தருக்கு ஊழியம் செய்ய தாவீதுக்கு வாய்ப்புக்கள் வேண்டும். மனுஷர் மத்தியிலே தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க கர்த்தர் தாமே அநுகூலமான கதவுகளைத் திறக்கவேண்டும். ஆனால் தாவீதோ இப்போது சத்துருக்கள் மத்தியில் இருளிலிருக்கிறார். அவருடைய விளக்கை அவரால் ஏற்ற முடியவில்லை. தன்னால் முடியாததை கர்த்தர் தனக்காகச் செய்து முடிப்பார் என்று தாவீது விசுவாசிக்கிறார். தேவரீர் தாமே, தன்னுடைய விளக்கை ஏற்றுவார் என்றும், தேவனாகிய கர்த்தர் தன்னுடைய இருளை வெளிச்சமாக்குவார் என்றும் தாவீது விசுவாசத்தோடு சொல்லுகிறார்.
யாரெல்லாம் இரட்சிக்கப்படுவார்கள்
1. சிறுமைப்பட்டவர்கள் (சங் 18:27)
2. ஏழை (சங் 72:4,13)
3. தாழ்மையுள்ளவன் (சங் 76:9)
4. துன்மார்க்கன் (எசே 18:27)
5. தேவனுடைய ஜனங்கள் (மத் 1:21)
6. கெட்டுப்போனவர்கள் (மத் 18:11; லூக்கா 19:10)
7. உலகம் (யோவான் 3:16-20; யோவான் 12:47)
8. விசுவாசிக்கிறவர்கள் (1கொரி 1:21)
9. பாவிகள் (1தீமோ 1:15; 1தீமோ 2:4)
10. முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவன் (மத் 10:22; 1தீமோ 4:11-16; 1பேதுரு 1:9)
11. இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்கள் (எபி 7:25)
12. கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவர்கள் (அப் 2:21; ரோமர் 10:9-10)
மனுஷரை சிறுமைப்படுத்தும் வழிகள்
1. அடிமைத்தனம் (ஆதி 16:11; யாத் 1:11-12)
2. உபவாசம் (லேவி 23:27-29; ஏசா 58:3)
3. பெரிய பொறுப்பு (எண் 11:11)
4. இழப்பு (ரூத் 1:21)
5. சோதனைகள் (1இராஜா 2:26; சங் 25:16; ஏசா 48:10)
6. யுத்தத்தில் தோல்வி (2இராஜா 17:20; சங் 129:1)
7. சரீரத்தில் வியாதி (யோபு 6:14; யோபு 30:11)
8. கிறிஸ்துவின் பாடுகள் (ஏசா 53:4,7)
9. பசி (ஏசா 58:10)
10. உபத்திரவங்கள் (மாற்கு 4:17)
11. கிறிஸ்துவிற்காகப் பாடுகள் (2கொரி 1:6; 2கொரி 8:2; 2கொரி 11:23-28; எபி 10:32-33; எபி 11:37)
12. மன உளைச்சல் (ஆதி 29:32)
13. நெருக்கம் (ஆதி 41:52)
14. மலடு (1சாமு 1:11)
15. இகழ்ச்சி (2சாமு 16:12)
16. சிறைப்பிடிப்பு (2நாளா 33:12)
17. நம்பிக்கை இல்லாத சூழ்நிலைகள் (யாத் 1:11; யாத் 3:7)
18. சிறைவாசம் (சங் 107:10)
19. பாவத்திற்குத் தண்டனை (2சாமு 7:10; 1இராஜா 11:39)
20. பாடும் உபத்திரவமும் (யோபு 5:6-7; பிலி 4:14; 1பேதுரு 5:9)
கர்த்தர் தாவீதுக்குச் செய்த நன்மைகள் சங் 18 : 29-40
சங் 18:29. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
சங் 18:30. தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
சங் 18:31. கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
சங் 18:32. என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
சங் 18:33. அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
சங் 18:34. வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
சங் 18:35. உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
சங் 18:36. என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
சங் 18:37. என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.
சங் 18:38. அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்.
சங் 18:39. யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
சங் 18:40. நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
தாவீது நன்றியுள்ள இருதயத்தோடு கர்த்தர் தனக்குச் செய்த நன்மைகள் ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்கிறார். கர்த்தர் தாவீதுக்கு பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். நாம் கர்த்தருடைய சமுகத்தில் அவரைத் துதிப்பதற்காக வரும்போது, அவர் நமக்குக் காண்பித்த இரக்கங்களையும், கிருபைகளையும் நன்றியுள்ள இருதயத்தோடு நினைவுகூரவேண்டும். கர்த்தருடைய சமுகத்தில் ஜெபிக்கும்போது மாத்திரம் என்று இல்லாமல், எப்போதுமே நம்முடைய இருதயம் கர்த்தருக்கு நன்றியுள்ளதாயிருக்கவேண்டும்.
தாவீது தம்முடைய ஜீவியத்தில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருக்கிறார். அவருடைய ஜீவியத்தில் உயர்வும் உண்டாயிற்று. தாழ்வும் உண்டாயிற்று. அவர் அரண்மனையிலும் இருந்தார். மலைகளிலும் ஒழிந்திருந்தார். அவர் சத்துருக்களின் பயமில்லாமலும் இருந்தார். பலவேளைகளில் சத்துருக்கள் அவரை நெருக்கியதினால் ஜீவன் தப்பிக்க ஓடி ஒழியவும் செய்தார். தாவீது எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் கர்த்தருடைய சமுகம் அவரோடு கூடவே இருந்தது. அவர் ஆபத்துக்களில் சிக்கியிருந்தபோது கர்த்தருடைய பலத்த கரம் அவரை மீட்டு இரட்சித்தது. தனக்கு ஏற்பட்ட ஒவ்வொரு அனுபவங்களையும் தாவீது இங்கு வரிசையாகச் சொல்லுகிறார்.
1. கர்த்தர் தாவீதுக்கு எல்லா வேலைகளையும் செய்வதற்கு திறமையைக் கொடுத்திருக்கிறார். கர்த்தரே தாவீதுக்கு ஆசிரியர். வெண்கல வில்லை அவருடைய புயங்களால் வளையும்படி, கர்த்தர் தாவீதின் கைகளை யுத்தத்துக்குப் பழக்குவிக்கிறார். கர்த்தரே யுத்தம்பண்ணுகிறவர். ஆனாலும் அவர் தாவீதுக்கும் யுத்தத்தில் பயிற்சி கொடுக்கிறார். தாவீது தன்னுடைய இளமைப்பருவத்தில் யுத்தவீரனாக பயிற்சி பெறவில்லை. தாவீது சிறுபிள்ளையாயிருக்கும்போது ஈசாய் அவருக்கு யுத்தப்பயிற்சி கொடுக்காமல் அவரை வரையாடுகளை மேய்க்க அனுப்பிவிட்டார். தாவீதின் சகோதரர்களோ பெலிஸ்தியருக்கு எதிரான யுத்தத்தில் போர்வீரர்களாக பங்குபெற்றார்கள்.
தாவீது இளம்பிராயத்திலிருந்தபோது கர்த்தர் அவருக்கு இசையிலும், பாடல்களை இயற்றுவதிலும் அதிக ஞானத்தைக் கொடுத்தார். தாவீதுக்கு எல்லாவிதமான இசைக்கருவிகளையும் இசைக்கத் தெரியும். கர்த்தரைத் துதித்து ராகத்தோடு பாடத்தெரியும். தாவீது சிறு பையனாகயிருந்தபோது மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அப்போது அவருக்கு சத்துருக்கள் என்று யாருமில்லை. ஆடுகளை பிடிக்க வருகிற ஓநாய்களும், சிங்கங்களும்தான் தாவீதுக்கு சத்துரு. இந்த மிருகங்கள் தவிர, தாவீதுக்கு வேறு எந்த மனுஷரோடும் யுத்தம்பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் கர்த்தர் தாவீதுக்கு வெண்கல வில்லை அவருடைய புயங்களினால் வளைக்கும் பயிற்சியைக் கொடுத்தார். அவருடைய கரங்களை யுத்தத்திற்குப் பழக்கினார்.
கர்த்தர் தாவீதுக்கு யுத்தப்பயிற்சியைக் கொடுத்ததினால், ""உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்'' என்றும், ""என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்'' என்றும் விசுவாசத்தோடு சொல்லுகிறார். தன்னுடைய சுயவல்லமையினால் தாவீதால் இந்தக் காரியங்களைச் செய்யமுடியாது. கர்த்தர் அவரோடு கூடயிருப்பதினால், இந்தக் காரியங்களை தன்னால் செய்ய முடியுமென்று தாவீது விசுவாசிக்கிறார்.
தேவனுடைய வழி உத்தமமானது. கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது. யுத்தம்பண்ணுகிறவர்களுக்கு கேடகம் வேண்டும். கேடகமே யுத்தவீரர்களை பாதுகாக்கிற ஆயுதம்.பட்டயத்தினால் மற்றவர்களை அழிக்கமுடியும். தங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால் யுத்தவீரர்களுக்கு நல்ல கேடகம் வேண்டும். கர்த்தரே தாவீதுக்கு கேடகமாயிருக்கிறார். கர்த்தரைமீறி யாராலும் தாவீதை தொடமுடியாது. கர்த்தர் தாவீதுக்கு மாத்திரமல்ல, தம்மை நம்புகிற அனைவருக்கும் கேடகமாயிருக்கிறார்.
தாவீது கர்த்தருடைய சமுகத்தில் அநேக நன்மைகளைப் பெற்றிருக்கிறார். கர்த்தர் தம்மை அவருக்கு பிரத்தியட்சமாய் வெளிப்படுத்தியிருக்கிறார். ள்ஆகையினால் தாவீது கர்த்தரைப்பற்றிச் சொல்லும்போது, ""கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?'' என்று கேட்கிறார். மெய்யாகவே கர்த்தரையல்லாமல் வேறு தெய்வம் ஒன்றுமில்லை. கர்த்தர் மாத்திரமே ஒரே மெய்த்தேவன். அவர் மாத்திரமே கன்மலை. கர்த்தர் மாத்திரமே ஜீவனுள்ளவர்.
கர்த்தர் தாவீதை பலத்தால் இடைகட்டுகிறார். பலமில்லாதவர்களால் யுத்தம்பண்ண முடியாது. யுத்தம்பண்ண சரீர பலமும், மனதிடமும் வேண்டும். இவை இல்லாதவர்கள் கோழைகளாகயிருப்பார்கள். தாவீது தன்னுடைய சுயபலத்தினால் யுத்தம்பண்ணவில்லை. கர்த்தரே தாவீதை தம்முடைய பலத்தால் இடைகட்டுகிறார். தாவீது கீழே விழப்போகிற வேளையில், கர்த்தருடைய பலம் அவரை கீழே விழுந்துவிடாமல் தாங்கும். கர்த்தர் தாவீதின் வழியை செவ்வைப்படுத்துகிறார். கர்த்தர் தாவீதின் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்குகிறார். தாவீதின் உயர்தலங்களில் கர்த்தர் அவரை நிறுத்துகிறார்.
2. யுத்தம்பண்ணுவதற்கு சரீரபலம் வேண்டும். யுத்தம்பண்ணும்போது சரீர களைப்பு உண்டாகும். மனமும் சோர்ந்துபோகும். நம்முடைய பலம் புதுப்பிக்கப்படவேண்டும். கர்த்தர் தாவீதுக்கு சரீர பலத்தைக் கொடுக்கிறார். தாவீது யுத்தம்பண்ணும்போது, அவர் சரீரத்தில் சோர்ந்துபோய்விடாமல் இருப்பதற்காக, அவரைப் பலத்தால் இடைகட்டுகிறார். கர்த்தர் தாவீதுக்கு மிகுதியான பலத்தைக் கொடுத்திருக்கிறார். அவருடைய புயங்கள் பலமுள்ளதாயிருக்கிறது. தாவீது தன்னுடைய புயங்களினால் வெண்கல வில்லையும் வளைக்கிறார். இது அவருடைய சுயபலமல்ல. கர்த்தர் அவருக்குக் கொடுத்திருக்கிற பலம். கர்த்தர் தாவீதை பலத்தால் இடைக்கட்டியிருப்பதினால், தாவீது தன்னுடைய புயங்களினால் வெண்கல வில்லை வளைக்க முடிகிறது.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் குறித்து ஒரு நோக்கமும் ஒரு திட்டமும் வைத்திருக்கிறார். நாம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய திட்டத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, கர்த்தர் நமக்கு விசேஷித்த பயிற்சிகளைக் கொடுக்கிறார். கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிற ஊழியத்தை நேர்த்தியாய்ச் செய்வதற்கு பயிற்சி கொடுக்கிறார். கர்த்தர் தாவீதின் கைகளை யுத்தத்திற்கு பழக்குவித்ததுபோல, தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும், அவர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஊழியத்தைச் செய்வதற்கு, அவர்களுடைய கைகளையும் பழக்குவிக்கிறார்.
3. யுத்தவீரர்கள் விரைவாக ஓடவேண்டும். தங்களுடைய சத்துருக்களைப் பார்த்து தோற்றுப்போய் விரைவாக பின்வாங்கி ஓடிவிடக்கூடாது. விரோதிகளை நோக்கி யுத்தவீரர்கள் வேகமாய் முன்னேறிச் செல்லவேண்டும். கர்த்தர் தாவீதின் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்குகிறார். மான்கள் மலைகளில் வேகமாய் ஓடும். அவற்றின் கால்கள் உருவத்தில் சிறியதாயிருந்தாலும், அதிக பெலமுள்ளவை. அவை எளிதில் சோர்வடைவதில்லை. கர்த்தர் தாவீதின் கால்களை மான்களைப்போல விரைந்து ஓடும் கால்களாக்கியிருக்கிறார்.
யுத்தம்பண்ணுகிறவர்கள் விரைந்து ஓடும்போது இடறி விழுந்துவிடக்கூடாது. நாம் செம்மையான வழிகளில் ஓடவேண்டும். கர்த்தரே தாவீதின் வழியை செவ்வைப்படுத்துகிறார். நம்முடைய நடைகளை விசாலமுள்ளதாக்குகிறார். தாவீது யுத்தத்திலே சத்துருக்களை நோக்கி ஓடும்போது, அவர் மான்களைப்போல விரைந்து ஓடுகிறார். அவருடைய கால்கள் இடறி கீழே விழுந்துவிடாதவாறு, கர்த்தர் தாவீதை பலத்தால் இடைகட்டுகிறார். வேகமாக ஓடும்போது கீழே விழுந்தால் காயம் பலமாயிருக்கும்.
கர்த்தர் தாவீதுக்கு மிகுந்த தைரியத்தைக் கொடுத்திருக்கிறார். தாவீது கோலியாத்தோடு யுத்தம்பண்ணினார். அது ஒருதனி மனுஷனோடு நடைபெற்ற யுத்தம். அந்த யுத்தத்தில் தாவீதுக்கு ஜெயமுண்டாயிற்று. தாவீதின் சத்துரு ஒரு தனிமனுஷனாகயிருந்தாலும், ஒரு சேனையாகயிருந்தாலும் அவர் எதற்கும் பயப்படுவதில்லை. கர்த்தர் அவரை தைரியப்படுத்தியிருக்கிறார். எதிரிகளின் சேனைகளைப் பார்த்து தாவீது பயந்து பின்னிட்டு ஓடிப்போய்விடமாட்டார். கர்த்தருடைய கிருபையினாலும், அவர் தன்னை தம்முடைய பலத்தால் இடைகட்டியிருப்பதினாலும், தாவீது ஒரு சேனைக்குள் பாய்ந்து போவார்.
யுத்தம்பண்ணுகிறவர்களுக்கு பல தடைகள் இருக்கும். எதிரிகள் மதில்களுக்குப் பின்பாக ஒழிந்திருந்து தாக்குவார்கள். அவர்களோடு ƒயுத்தம்பண்ணவேண்டுமென்றால் மதில்களைத் தாண்டவேண்டும். மதில்களைத் தாண்டுவது நம்முடைய சுயவல்லமையினால் கடினமான காரியம். தாவீதோ தேவனாலே தான் ஒரு மதிலையும் தாண்டுவதாக அறிக்கை செய்கிறார். தாவீது யுத்தத்திலே முன்னேறிச் செல்வதற்கு சேனையோ, மதிலோ தடையாகயில்லை. தேவனுடைய கிருபையும், அவருடைய அநுக்கிரகமும் தாவீதுக்குக் கிடைத்திருக்கிறது. ஆகையினால் தாவீது சத்துருக்களுக்கு மேலாக தன்னுடைய உயர்தலங்களில் நிற்கிறார். கர்த்தரே தன்னை உயர்தலங்களில் நிறுத்துவதாக தாவீது சாட்சியாக அறிவிக்கிறார்.
5. கர்த்தர் தாவீதை பாதுகாக்கிறார். தாவீதுக்கு மிகுந்த நெருக்கங்களும், ஆபத்துக்களும் வந்தாலும் கர்த்தரே அவருக்குப் பாதுகாப்பாக இருக்கிறவர். கர்த்தர் தாவீதுக்கு எந்தத் தீங்கும் வந்துவிடாதவாறு, அவரை பத்திரமான இடத்தில் பாதுகாக்கிறார். கர்த்தர் தாவீதுக்கு தம்முடைய இரட்சிப்பின் கேடகத்தைத் தந்திருக்கிறார். இந்த கேடகத்தினால் அவர் தாவீதின் எல்லா பக்கங்களிலும் அவரைப் பாதுகாக்கிறார். கர்த்தர் தம்முடைய கேடகத்தினால் தாவீதைச் சுற்றிலும் வேலி அமைத்திருக்கிறார்.
ஜனங்களின் சண்டைகளுக்கு கர்த்தர் தாவீதை தப்புவிக்கிறார். தாவீதுக்கு விரோதமாக சத்துருக்கள் ஏராளமானோர் வரும்போது கர்த்தருடைய வலதுகரம் அவரைத் தாங்குகிறது. கர்த்தர் தம்முடைய காருணியத்தினால் தாவீதை பெரியவனாக்குகிறார். தாவீது ஆடுகளை மேய்க்கிற சாதாரண மேய்ப்பனாகயிருந்தார். வரையாடுகளின் பின்னாகச் சென்ற தாவீதை, கர்த்தர் இஸ்ரவேல் தேசத்தின் சிங்காசனத்தில் அமரச்செய்து உயர்த்தினார். கர்த்தருடைய காருணியமே தாவீதை பெரியவனாக்கிற்று.
தாவீதுக்கு விரோதமாக சத்துருக்கள் யுத்தம்பண்ண வந்தபோது, கர்த்தரே தாவீதை அவருடைய சத்துருக்களுக்கு விலக்கி விடுவிக்கிறார். தாவீதுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் கர்த்தர் அவரை உயர்த்துகிறார். கொடுமையான மனுஷனுக்கு கர்த்தர் தாவீதைத் தப்புவிக்கிறார் (சங் 18:48). தாவீது இந்த வசனத்தில் கொடுமையான மனுஷன் என்று சவுலைப் பற்றிச் சொல்லுகிறார். சவுல் தாவீதைக் கொல்லுவதற்காக அவரை நோக்கி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகளில் தன்னுடைய ஈட்டியை எய்தார். கர்த்தரோ தாவீதை கொடுமையான சவுலுக்குத் தப்புவித்தார்.
6. தாவீது செழித்திருக்கவேண்டும் என்பது தேவனுடைய திட்டம். தாவீதின் வழிகள் செவ்வையாயிருக்கவேண்டும் என்பது கர்த்தருடைய விருப்பம். இதற்காக கர்த்தர் தம்முடைய வலதுகரத்தினால் தாவீதைத் தாங்குகிறார். தாவீதின் வழிகளை செவ்வைப்படுத்துகிறார்.
7. கர்த்தரால் கைவிடப்பட்டவர்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவார்கள். கர்த்தருக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிறவர்கள் சங்காரமாவார்கள். கர்த்தர் தம்முடைய சத்துருக்களை காற்று நுகத்திலே பறக்கிற தூளாக இடித்துப்போடுவார். கர்த்தர் தனக்குக் கொடுத்திருக்கிற பலத்தினால் தாவீது தன்னுடைய சத்துருக்களை தெருக்களிலுள்ள சேற்றைப்போல எரிந்துபோடுவார்.
தாவீது யாரையும் பழிவாங்குவதில்லை. தாவீதுக்கு யார்மீதும் கோபமோ அல்லது விரோதமோ இல்லை. சத்துருக்கள் தாவீதுக்கு விரோதமாக எழும்பி வருகிறார்கள். தாவீது நீதியுள்ளவர். ஆனாலும் மற்றவர்கள் தாவீதை தங்கள் சத்துருவாகப் பாவிக்கிறார்கள். அவரை நெருக்குகிறார்கள். அவரைக் கொலைசெய்வதற்கு துர்ஆலோசனைபண்ணி, அவருக்கு மறைவாக கண்ணிகளை வைக்கிறார்கள். தாவீது தன் சத்துருக்களை பழிவாங்காவிட்டாலும் கர்த்தர் தாவீதுக்காக, தாவீதின் சத்துருக்களை பழிக்குப் பழிவாங்குகிறார். தாவீதுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் கர்த்தர் அவரை உயர்த்துகிறார்.
8. தாவீது ஆரம்பத்திலே வரையாடுகளின் பின்னாகச் சென்று ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். கர்த்தரோ அவரை சிங்காசனத்தில் அமரச்செய்தார். தாவீதின் சத்துருக்களிடமிருந்து கர்த்தர் அவரை விடுவித்ததோடு, அவரை உயர்த்தவும் செய்திருக்கிறார். கர்த்தருடைய காருணியம் தாவீதை பெரியவனாக்கிற்று. காருணியம் என்னும் வார்த்தைக்கு, கிருபை என்றும், போதகம் என்றும் கட்டுப்பாடு என்றும் பொருள் சொல்லலாம்.
தாவீது நெருக்கத்திலிருந்தபோது அவர் கர்த்தரிடமிருந்து தனக்குப் பிரயோஜனமான நல்ல உபதேசங்களைக் கற்றுக்கொண்டார். தாவீதுக்கு பல்வேறுவிதமான அனுபவங்கள் உண்டாயிற்று. கர்த்தர் அந்த அனுபவங்கள் மூலமாய் தாவீதுக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தார். கர்த்தர் கற்றுக்கொடுத்த பாடங்களெல்லாம் தாவீதின் ஜீவியத்திற்கு மிகவும் பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது. அவர் சிங்காசனத்தில் வீற்றிருந்து ஆட்சிசெய்யும்போது கர்த்தர் அவரை ஏற்கெனவே பழக்குவித்ததினால், அவரால் கண்ணியமாக ஆட்சிபுரிய முடிந்தது. சத்துருக்களோடு தைரியமாய் யுத்தம்பண்ண முடிந்தது. தாவீது தன்னை கர்த்தருடைய சமுகத்தில் அதிகமாய்த் தாழ்த்தினார். தாவீது தன்னைத் தாழ்த்த தாழ்த்த, தேவனுடைய கிருபை அவருக்கு அதிகம் அதிகமாய் பெருகிற்று. நாம் கர்த்தருடைய சமுகத்தில் நம்மைத் தாழ்த்தும்போது, அவர் நம்மை உயர்த்துவார். நாம் கர்த்தரைத் துதிக்கும்போது நமக்கு அவருடைய கிருபை பெருகும்.
கர்த்தர் தாவீதுக்கு பல சந்தர்ப்பங்களில் உதவி செய்திருக்கிறார். கர்த்தருடைய உதவி தாவீதுக்குக் கிடைக்கவில்லையென்றால், அவரால் சத்துருக்களோடு யுத்தம்பண்ண முடியாது. அவருடைய கால்கள் வலுவிழந்து போகும். தடுமாறி விழுந்துவிடுவார். தாவீது நெருக்கமான வழியில் செல்ல வேண்டியதாயிற்று. கர்த்தரோ தாவீது நடக்கிற வழியை அகலமாக்கினார். அவருடைய கால்கள் வழுவாதபடிக்கு கர்த்தர் காத்துக்கொண்டார்.
தாவீது சத்துருக்களைப் பிடிப்பதற்காக அவர்களைப் பின்தொடர்ந்து போகிறார். கர்த்தர் தாவீதின் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கினதினால் அவர்களை வேகமாகப் பின்தொடர்ந்து ஓடுகிறார். சத்துருக்களை நிர்மூலமாக்கவேண்டுமென்பது தாவீதின் தீர்மானம். அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் தான் பின்னிட்டுத் திரும்பப்போவதில்லையென்று தாவீது கர்த்தருடைய சமுகத்தில் அறிக்கை செய்கிறார்.
தன்னுடைய சத்துருக்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு தாவீது அவர்களை வெட்டிப்போட்டார். அவர்களோ தாவீதின் பாதங்களின் கீழ் விழுந்தார்கள். இதற்கு முன்பு தாவீதுக்கு யுத்தம்பண்ணி பழக்கமில்லை. யுத்தம் பண்ண பலமுமில்லை. கர்த்தரே தாவீதை யுத்தத்திற்கு தம்முடைய பலத்தால் இடைகட்டியிருக்கிறார். கர்த்தரே தாவீதின் கைகளை யுத்தத்திற்கு பழக்குவித்திருக்கிறார்.
சத்துருக்கள் தாவீதின்மேல் ஏராளமாய் எழும்பினார்கள். தாவீதுக்கு இதுவரையிலும் ஏராளமான ஆடுகளை மேய்க்கத்தான் தெரியும். ஆடுகளை மடக்கத்தெரியும். தாவீதுக்கு மனுஷரை மடக்கி பழக்கமில்லை. கர்த்தர் தாவீதுக்கு உதவி செய்கிறார். அவர் தாவீதுக்காக யுத்தம்பண்ணுகிறார். தாவீதின்மேல் எழும்பினவர்களை கர்த்தர் அவருக்குக் கீழ் மடங்கப்பண்ணுகிறார். கர்த்தருடைய உதவியினாலும், ஒத்தாசையினாலும் தாவீதுக்கு யுத்தத்தில் வெற்றி உண்டாயிற்று.
தாவீது தன்னுடைய சத்துருக்களைப் பிடிப்பதற்கு பின்தொடர்ந்து ƒவிரைவாக ஓடுகிறார். அவர்களைப் பிடிப்பதற்கு கர்த்தரும் தாவீதுக்கு உதவிசெய்கிறார். தாவீதினுடைய சத்துருக்களின் பிடரியை கர்த்தர் அவருக்கு ஒப்புக்கொடுத்தார். பிடரியைப் பிடிக்கும்போது சத்துருக்களால் திமிர முடியாது. மீறமுடியாது. அந்தப் பிடியிலிருந்து தப்பிக்கவும் முடியாது. தாவீது தன்னுடைய சத்துருக்களின் பிடரியைப் பிடித்து, அந்தப் பகைஞரை எளிதாகச் சங்கரித்துவிடுகிறார். இதுவும் கர்த்தருடைய கிருபையினாலும், உதவியினாலும் தாவீதுக்கு சாதகமாய் நடைபெற்றது. கர்த்தர் தனக்குச் செய்த நன்மைகளையெல்லாம் நினைவுகூர்ந்து, தாவீது அவரை நன்றியோடு துதிக்கிறார்.
பரிபூரண உத்தமத்திற்கு எடுத்துக்காட்டுகள்
1. பிதாவாகிய தேவன் (மத் 5:48)
2. தேவனுடைய கிரியை (உபா 32:4)
3. தேவனுடைய வழி (2சாமு 22:31; சங் 18:30)
4. தேவனுடைய சித்தம் (ரோமர் 12:1-2)
5. தேவனுடைய வரங்கள் (யாக் 1:17)
6. தேவனுடைய வார்த்தை (சங் 19:7; யாக் 1:25)
7. இயேசு கிறிஸ்து (லூக்கா 6:40; எபி 2:10; எபி 5:9)
உத்தமமான ஜனங்களுக்கும் உத்தமமான தூதர்களுக்கும் எடுத்துக்காட்டுகள்
1. லூசிபர் (வீழ்ச்சிக்கு முன்பு) (எசே 28:12-15)
2. தாவீது (1இராஜா 11:4; 1இராஜா 15:3)
3. ஆசா (1இராஜா 15:14; 2நாளா 15:17)
4. யோபு (யோபு 1:1,8; யோபு 2:3)
5. பரலோகத்தில் பூரணராக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகள் (எபி 12:23)
உத்தமனாக இருக்க வேண்டுமென்னும் கட்டனைகள்
1. ஆபிரகாமிற்கு (ஆதி 17:1)
2. இஸ்ரவேலிற்கு (உபா 18:13)
3. சாலொமோனுக்கு (1இராஜா 8:61)
4. கிறிஸ்தவருக்கு (2கொரி 13:11)
நாம் எவற்றில் உத்தமனாக இருக்க முடியும்
1. நமது நடையில் (ஆதி 17:1; கலா 5:16,25)
2. பரிசுத்தத்தில் (2கொரி 7:1; எபி 12:14)
3. நமது வழிகளில் (2சாமு 22:33; சங் 18:32)
4. சமாதானத்தில் (ஏசா 26:3)
5. ஒற்றுமையில் (யோவான் 17:23; 1கொரி 1:10; எபே 4:13)
6. நற்கிரியைகளில் (எபி 13:21; 2தீமோ 3:17)
7. தேவனுடைய சித்தத்தில் (ரோமர் 12:1-2)
8. பொறுமையில் (யாக் 1:4)
9. விசுவாசத்தில் (யாக் 2:22)
10. அன்பில் (1யோவான் 2:5; 1யோவான் 4:17-18)
தேவனுடைய ஆசீர்வாதங்கள்
1. பலத்தால் என்னை இடைகட்டுவார் (சங் 18:32)
2. என் வழியைச் செவ்வைப்படுத்துவார்
3. என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, என் சத்துருக்களிடமிருந்து என்னைத் தப்புவிப்பார் (சங் 18:33)
4. என்னை உயர்தலங்களில் நிறுத்துவார்
5. வெண்கல வில்லும், என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்கு பழக்குவிக்கிறார் (சங் 18:34)
6. இரட்சிப்பின் கேடகத்தை எனக்குத் தந்தார் (சங் 18:35)
7. கர்த்தருடைய வலதுகரம் என்னைத் தாங்கும்
8. கர்த்தருடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்
9. என்னுடைய கால்கள் வழுவாதபடிக்கு வழியை அகலமாக்குவார் (சங் 18:36)
10. என் சத்துருக்களை ஜெயிக்க உதவி புரிவார் (சங் 18:37)
11. சத்துருக்களை பின்தொடர்ந்து பிடிக்க உதவிபுரிவார்
12. அவர்களை நிர்மூலமாக்க உதவிபுரிவார்
13. என் பாதங்களின் கீழ் அவர்களை விழப்பண்ண உதவிபுரிவார் (சங் 18:38)
14. யுத்தத்திற்கு என்னைப் பலத்தால் இடைக்கட்டுவார் (சங் 18:39)
15. சத்துருக்களை என் கீழ் மடங்கப் பண்ணுவார்
16. என் பகைவர்களை உதவி அற்றவர்களாகப் பண்ணுவார் (சங் 18:40)
17. என் சத்துருக்களுக்கு செவிகொடுக்க மாட்டார் (சங் 18:41)
18. என் சத்துருக்களை முழுவதுமாக அழிக்க உதவி புரிவார் (சங் 18:41)
19. என் ஜனங்களின் சண்டைகளுக்கு என்னைத் தப்புவித்தார் (சங் 18:43)
20. ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறார்
21. நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கும் படி செய்தார் (சங் 18:44)
22. என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்கு அவர்கள் கீழ்ப்படியும்படி என்னை எஜமான் ஆக்கினார்
23. அந்நியர் முனைவிழுந்து, அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படப்பண்ணுவார் (சங் 18:45)
24. கர்த்தர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்குவார் (சங் 18:46-47)
25. என் சத்துருக்களை எனக்குக் கீழ்ப்படுத்துவார் (சங் 18:47)
26. என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிப்பார் (சங் 18:48)
27. எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் மேல் என்னைஉயர்த்துவார்
28. கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிப்பார்
29. மகத்தான இரட்சிப்பை அளித்தர் (சங் 18:49-50)
30. சதாகாலமும் கிருபை செய்கிறார் (சங் 18:50)
தாவீதின் ஸ்தோத்திர ஜெபம் சங் 18 : 41-50
சங் 18:41. அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
சங் 18:42. நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
சங் 18:43. ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
சங் 18:44. அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம் பேசி அடங்குகிறார்கள்.
சங் 18:45. அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களி-ருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
சங் 18:46. கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.
சங் 18:47. அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
சங் 18:48. அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
சங் 18:49. இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
சங் 18:50. தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
தாவீது கர்த்தரை மனத்தாழ்மையோடும் பயபக்தியோடும் நோக்கிப் பார்க்கிறார். தேவனுடைய தெய்வீக மகிமையையும், அவருடைய பரிபூரணத்தையும் நினைவுகூர்ந்து தாவீது கர்த்தரை மகிமைப்படுத்துகிறார். ""கர்த்தர் ஜீவனுள்ளவர். என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக, என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக'' (சங் 18:46) என்று சொல்லி கர்த்தரைத் துதிக்கிறார். தாவீது கர்த்தரை அறிந்திருக்கிறார். அவருடைய சுபாவங்களையும் குணாதிசயங்களையும் அறிந்து தாவீது அவரை மகிமைப்படுத்துகிறார். தாவீது கர்த்தரை மகிமைப்பத்துகிற விவரம் வருமாறு:
1. கர்த்தர் ஜீவனுள்ளவர். புறஜாதியாரின் தேவர்களுக்கு ஜீவனில்லை. அவையெல்லாம் ஜீவனில்லாத விக்கிரகங்கள். அவை மரித்த நிலமையிலுள்ளன. அவற்றிற்கு வாயிருந்தாலும் பேசாது. செவிகள் இருந்தாலும் கேட்காது. இஸ்ரவேலின் தேவனோ ஜீவனுள்ளவர். அவர் நித்திய காலமாய் ஜீவிக்கிறவர். தம்மை நம்புகிறவர்களைப் பாதுகாத்து இரட்சிக்கிறவர். கர்த்தர் ஜீவனுள்ளவராக இருக்கிறபடியினால் அவரை விசுவாசிக்கிறவர்களும் ஜீவனுள்ளவர்களாக இருக்கிறார்கள். கர்த்தரே தம்முடைய பிள்ளைகளுக்கு ஜீவனாக இருக்கிறார்.
புறஜாதியார் தங்கள் தெய்வங்களிடம் உதவி கேட்டு கூப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை. அவர்களுடைய தெய்வங்களுக்கு செவிகள் இருந்தாலும், அவற்றால் கேட்க முடியாது. தங்களுடைய தெய்வங்கள் பதில் கொடுக்காததினால், புறஜாதியார் கர்த்தரை நோக்கியும் கூப்பிடுகிறார்கள். கர்த்தரோ அவர்களுக்கு உத்தரவு கொடுக்கிறதில்லை. கர்த்தர் இஸ்ரவேல் ஜனத்தாரோடு உடன்படிக்கை செய்திருக்கிறார். புறஜாதியார் இஸ்ரவேல் புத்திரருக்கு சத்துருக்களாகயிருக்கிறபடியினால், அவர்கள் கர்த்தருக்கும் சத்துருக்களாகயிருக்கிறார்கள். இதனிமித்தமாகவே புறஜாதியார் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டும், கர்த்தர் அவர்களுக்கு உத்தரவு கொடாதிருக்கிறார் (சங் 18:41).
புறஜாதியாருக்கு கர்த்தருடைய உதவி கிடைக்கவில்லை. அவர்களை இரட்சிப்பதற்கு யாருமில்லை. ஆகையினால் தாவீது அவர்கள்மீது யுத்தம்பண்ணி, அவர்களை எளிதாக ஜெயித்துவிடுகிறார். அவர்களை காற்று முகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எரிந்துவிடுகிறார் (சங் 18:42). சத்துருக்களால் தாவீதை ஜெயிக்க முடியவில்லை. கர்த்தர் தாவீதுக்கு கேடகமாயிருக்கிறார். அவர் தாவீதை தம்முடைய பெலத்தால் இடைகட்டியிருக்கிறார். இதனிமித்தமாய் தாவீது கர்த்தருடைய பெலத்தினால் அவர்களை எளிதாக சங்காரம்பண்ணிவிடுகிறார்.
2. தேவன் உத்தமர். இந்த வார்த்தைக்கு அவர் பரிபூரணமுள்ளவர் என்றும் பொருள் சொல்லலாம். கர்த்தர் தமக்குத் தாமே உத்தமராக இருக்கிறார். அவருடைய வழியும் உத்தமமானது (சங் 18:30). கர்த்தர் எதை ஆரம்பித்தாரோ அதை கட்டி முடிப்பதற்கு திராணியுள்ளவர்.
3. கர்த்தர் உண்மையுள்ளவர். கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது. தாவீது கர்த்தருடைய வார்த்தையை நம்பினார். கர்த்தர் அவரைக் கைவிடவில்லை. தம்மை நம்புகிற அனைவருக்கும் கர்த்தர் கேடகமாயிருக்கிறார் (சங் 18:30). பலவேளைகளில் நாம் கர்த்தருக்கு உண்மையில்லாதவர்களாயிருக்கிறோம். ஆனாலும் நம்முடைய கர்த்தர் தம்முடைய கிருபையினால் நமக்கு உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.
கர்த்தர் தாவீதுக்கு அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருக்கிறார். இந்த வாக்குத்தங்களையெல்லாம் நிறைவேற்றுவதில் கர்த்தர் உண்மையுள்ளவர். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவிற்குள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கிறது. கர்த்தர் தம்முடைய வார்த்தையின் பிரகாரமாக தம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து பராமரிக்கிறார். தாவீது தன்னுடைய ஜீவியத்தில் கர்த்தருடைய பாதுகாப்பையும், பராமரிப்பையும், இரட்சிப்பையும் அதிகமாய் ருசித்துப் பார்த்திருக்கிறார். இதனிமித்தமாய் அவர் கர்த்தரை நன்றியோடு துதித்து அவரை மகிமைப்படுத்துகிறார்.
4. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைப் பாதுகாக்கிறவர். கர்த்தரே நம்முடைய இரட்சிப்பின் தேவன். கர்த்தருடைய வல்லமையினாலும் கிருபையினாலும் நமக்கு இரட்சிப்பும் நம்பிக்கையும் உண்டாயிருக்கிறது. கர்த்தர் தாவீதுக்கு இரட்சிப்பின் தேவனாயிருக்கிறார். தாவீது இதை உணர்ந்து, ""என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக'' (சங் 18:46) என்று கர்த்தரைத் துதித்துப் பாடுகிறார்.
கர்த்தர் தாவீதை மாத்திரம் இரட்சிப்பார் என்றோ, அவர் தாவீதுக்கு மாத்திரம் இரட்சிப்பின் தேவனாயிருப்பார் என்றோ நாம் வியாக்கியானம் பண்ணக்கூடாது. கர்த்தர் தம்மை நம்புகிற அனைவருக்கும் கேடகமாயிருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் இரட்சிப்பின் தேவனாயிருக்கிறார். கர்த்தர் தம்மை நம்புகிற அனைவருக்கும் அடைக்கலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார். கர்த்தரால் தம்முடைய பிள்ளைகள் அனைவரையும் பாதுகாக்க முடியும். நம்மைப் பாதுகாப்பதற்கு கர்த்தர் எப்போதுமே ஆயத்தமாயிருக்கிறார். நம்மைப் பாதுகாத்து பராமரிப்பது தேவனுக்குப் பிரியமானது. இதுவே தேவனுக்குச் சித்தமுமானது.
தாவீது கர்த்தரை நம்பிக்கையோடு நோக்கிப் பார்க்கிறார். தனக்கு இதுவரையிலும் நன்மை செய்த கர்த்தர், இனிமேலும் நன்மை செய்வார் என்று கர்த்தரை விசுவாசிக்கிறார். ஜனங்களின் சண்டைகளுக்கு கர்த்தர் தன்னைத் தப்பிவித்து, ஜாதிகளுக்குத் தன்னைத் தலைவனாக்குவார் என்றும், தான் அறியாத ஜனங்கள் தன்னைச் சேவிப்பார்கள் என்றும் தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசுவாசத்தோடு சொல்லுகிறார் (சங் 18:43).
தாவீதின் சத்துருக்கள் அவருக்கு முற்றிலுமாய் அடங்கிப்போவார்கள். தாவீதின் ராஜ்யம் விஸ்தாரமாகும். தாவீதுக்கு அறிமுகமான ஜனங்களும், அறிமுகமில்லாத ஜனங்களும் தாவீதைச் சேவிப்பார்கள். அவர் கர்த்தரை நம்பியிருக்கிறபடியினால் செழிக்கிறார். கர்த்தருடைய வாக்குத்தத்தம் தாவீதின் ஜீவியத்தில் நிறைவேறியிருக்கிறது. இதனால் அவர் உயர்ந்திருக்கிறார். அவருடைய சத்துருக்கள் தாழ்ந்திருக்கிறார்கள்.
தாவீதின் சத்துருக்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டவுடனே அவருக்குக் கீழ்ப்படிகிறார்கள். அந்நியர் அவருக்கு விரோதமாக இதுவரையிலும் இச்சகம் பேசினார்கள். இப்போதோ அவர்கள் தாவீதுக்கு அடங்கிவிடுகிறார்கள். அந்நியர்கள் முனைவிழுந்துபோய் தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள் (சங் 18:44,45).
கர்த்தர் தாவீதின் சத்துருக்களை, தாவீதினிமித்தமாய் பழிக்குப் பழிவாங்குகிறார். தாவீதின் சத்துருக்களை அவருக்குக் கீழ்ப்படுத்துகிறார். சத்துருக்கள் மூலமாய் தாவீதுக்கு ஏராளமான நெருக்கங்கள் உண்டாயிற்று. ஆபத்துக்களும் உண்டாயிற்று. கர்த்தரே தாவீதை அவருடைய சத்துருக்களுக்கு விலக்கி விடுவிக்கிறார். சவுல் கொடுமையான மனுஷனாயிருக்கிறார். தாவீதைக் கொல்லுவதற்கு பல சமயங்களில் முயற்சி செய்தார். கர்த்தரோ கொடுமையான மனுஷனாகிய சவுலுக்கு தாவீதைத் தப்புவித்தார். தாவீதுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் கர்த்தர் அவரை உயர்த்தினார் (சங் 18:48).
தாவீது கர்த்தரைத் துதித்துப் பாடுகிறார். கர்த்தருடைய நாமத்திற்கு சங்கீதம் பாடுகிறார். கர்த்தர் தனக்கும் தன்னுடைய சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்தததை நினைத்து தாவீது கர்த்தரைத் துதித்து அவருடைய நாமத்திற்கு சங்கீதம் பாடுகிறார் (சங் 18:49).
தாவீதின் வித்து மேசியாவில் நித்தியகாலமாய்த் தொடருகிறது. தாவீது இதைத் தீர்க்கதரிசனமாக முன்னறிவிக்கிறார் ""தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும், அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்'' என்று தாவீது தீர்க்கதரிசனம் சொல்லுகிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே பிதாவினால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் பிதாவானவர் தாம் அபிஷேகம்பண்ணின குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு சதாகாலமும் கிருபை செய்கிறார் (சங் 18:50).
தேவன் யாருக்கு கிருபை செய்கிறார்
1. மேசியா - அபிஷேகம் பண்ணப்பட்டவர்
2. தாவீது
3. தாவீதின் சந்ததி (2சாமு 7)