பிரசங்கி புத்தகம் ஒரு கண்ணோட்டம்





பிரசங்கி  புத்தகம் ஒரு கண்ணோட்டம் 

சாலொமோன் ராஜா தன்னுடைய ஜீவியக்காலத்தின் கடைசிப்பகுதியில்  தேவனைவிட்டு பின்வாங்கிப் போய்விட்டார். ஆரம்ப காலத்தில் கர்த்தரோடு நெருங்கிய ஐக்கியத்திலிருந்தார்.  அதன் பின்பு அந்நிய ஸ்திரீகளை விவாகம்பண்ணி, அவர்களுடைய தெய்வங்களை பின்பற்றிப்போய்விட்டார்.  

""ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.  கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று             சொல்-யிருந்தார்; 

சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.  அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள்.  சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை'' (1இராஜா 11:1-4).

சாலொமோன் ராஜா கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப்போனது, அவருடைய ஜீவியத்தில்  காணப்பட்ட மிகவும் துக்கமான சம்பவம். சாலொமோன் தன்னுடைய வாலிப நாட்களிலும், தன்னுடைய ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்திலும்,  கர்த்தரோடு நெருங்கிய ஐக்கியத்திலிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் ""நீதிமொழிகள்'' புஸ்தகத்தை எழுதினார் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். 

சாலொமோனுக்கு முதிர் வயதானபோது அவருடைய சிந்தனைகளில் மாற்றங்கள் உண்டாயிற்று.  அவர் பல அனுபவங்கள் வழியாகக் கடந்து வந்தார். சாலொமோன் தன்னுடைய முதிர்வயதில், கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப்போய்,  அநேக துன்பங்களை அனுபவித்தார். தன்னுடைய கசப்பான அனுபவத்தின் மூலமாய் ஆவிக்குரிய அநேக பாடங்களை கற்றுக்கொண்டார். ""நீ உன் வாலிப பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை''       (பிர 12:1) என்று தன்னுடைய ஜீவியத்தின் கஷ்டங்களை உணர்ந்து, வாலிபருக்கு நல்ல ஆலோசனை சொல்லுகிறார். 

சாலொமோன் தன்னுடைய ஜீவியத்தின் கடைசி காலத்தில், கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப்போனாலும், கர்த்தருடைய பெரிதானக்கிருபையால் அவர் மறுபடியும் கர்த்தரோடு  ஐக்கியமாகயிருக்கிறார். தன்னுடைய பின்மாற்றத்திற்காக மனம் வருந்தி கர்த்தரை மனப்பூர்வமாய்ப் பற்றிக்கொள்கிறார். கர்த்தரிடத்தில் மறுபடியும் சேர்ந்த பின்பு,  தன்னுடைய ஜீவியத்தின் அனுபவங்களை, இந்தப் புஸ்தத்தில் எழுதியிருக்கிறார். சாலொமோனுடைய ஞானமும், ஜீவியஅனுபவமும், பிரசங்கி புஸ்தகத்தின் வாக்கியங்களில் தெளிவாக பிரதிபலிக்கிறது. பிறருடைய அனுபவங்களை  கவனிப்பதன் மூலமாய், நாம் அநேக பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

பிரசங்கியின் புஸ்தகம்,  ""எழுதப்பட்டுள்ள ஒரு பிரசங்கம்'' (பிர 1,2). மாயை, மாயை, எல்லாம் மாயை என்பதுதான்  இந்தப் புஸ்தகத்தின் மையக்கருத்து. இதுவே சாலொமோனின் பிரதான உபதேசம். எல்லாம் மாயை என்பதை நிரூபிப்பதற்கு சாலொமோன் அநேக  விவாதங்களையும், எடுத்துக்காட்டுக்களையும் சொல்லுகிறார்.  

சாலொமோனுடைய புத்திமதிகளை கவனமாய்க் கேட்டு,  அவருடைய ஆலோசனைகளை நம்முடைய ஜீவியத்தில் கடைபிடித்தால் நமக்கு  ஆவிக்குரிய ஆசீர்வாதம் உண்டாகும். நம்முடைய சிருஷ்டிகரை நாம் நினைக்கவேண்டும். கர்த்தருக்குப் பயப்படும் பயம்  நம்மிடத்தில் காணப்படவேண்டும். நாம் கர்த்தருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும். இதுவே சாலொமோனுடைய பிரதான உபதேசம்.  

பிரசங்கியின் புஸ்தகத்தில், ஒரு சில உபதேசங்கள், புரிந்துகொள்வதற்கு கடினமாயிருக்கிறது.  அதன் அர்த்தங்களும் வியாக்கியானங்களும் நமக்கு மறைபொருளாயிருக்கிறது. நாஸ்திகர்கள் கர்த்தரை நம்புவதில்லை. சாலொமோனுடைய உபதேசம் வெளிப்பார்வைக்கு நாஸ்திகரின் உபதேசத்தைப்போலவே இருக்கிறது.    சாலொமோன் ஒரு நாஸ்திகரல்ல. அவர் கர்த்தரை விசுவாசிக்கிறவர். கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்டிந்து ஜீவிக்கிறவர்.  

இந்த உலகம்  ஒரு மாயை. இந்த சத்தியத்தை நமக்குப் புரியவைப்பதற்காக  சாலொமோன் அநேக எடுத்துக்காட்டுக்களை விவரமாகச் சொல்லுகிறார்.  இந்த உலகத்தால் நமக்கு மெய்யான சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது. பாவம்  மிகவும் பயங்கரமானது. பாவத்தின் சம்பளம் மரணம். பாவத்தினால் நமக்கு பேரழிவு உண்டாகும்.  கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம். 

நாம் கர்த்தருக்குப் பயந்து ஜீவித்தால், நம்முடைய ஜீவியத்தில்  சந்தோஷமும் சமாதானமும் இருக்கும். நாம் கர்த்தரிடத்தில் பக்தியாகவும்,  மனுஷரிடத்தில் அன்பாகவும் ஜீவிக்கவேண்டும். அப்போதுதான் நம்முடைய ஜீவியத்தில்  திருப்தி உண்டாகும். நமக்கு கர்த்தரைப்பற்றிய ஞானம் தேவை. நம்முடைய சுயபுத்தியினாலோ,  சுயபக்தியினாலோ கர்த்தரை அறிந்துகொள்ள முடியாது. கர்த்தர் தாமே, தம்முடைய கிருபையினால்,  தம்மை நமக்கு வெளிப்படுத்தினால் மாத்திரமே, நம்மால் தேவனைப்பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பிரசங்கியின் புஸ்தகத்தில் சாலொமோனுடைய மனவருத்தம்  சொல்லப்பட்டிருக்கிறது. அவர் தான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்துகிறார். இந்த உலகம் தனக்கு  எல்லாவிதமான சந்தோஷத்தையும் கொடுக்கும் என்று சாலொமோன் இந்த உலகத்தை நம்பினார். ஆனால் இந்த உலகம்  அவருக்கு மெய்யான சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. சாலொமோன் மாம்ச இச்சைகளில் விழுந்தார். கர்த்தர் தடைபண்ணியிருந்த எல்லா பாவங்களையும் சாலொமோன்  தாராளமாய் செய்து பார்த்தார். அப்போதும் சாலொமோனுக்கு மெய்யான சந்தோஷமும், மனஅமைதியும் கிடைக்கவில்லை. சாலொமோனுடைய வாழ்க்கை அவருக்கு கசப்பாயிற்று.  துன்மார்க்கருக்கு அழிவும் மரணமும் உண்டாகும் என்பதை சாலொமோன் புரிந்துகொண்டார். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதே சத்தியம்.

நம்முடைய சுயபலத்தின்மீது  நாம் நம்பிக்கை வைப்பது நமக்கு ஆபத்தானது. மனுஷனுடைய பலவீனம்  அவனை கீழே விழ வைத்துவிடும். சாலொமோன் தன்னையும், தன்னுடைய ஐசுவரியத்தையும் நம்பினார். அவை அவருக்கு மெய்யான சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. சாலொமோன்  தன்னுடைய ராஜ்யபாரத்தின்மீது நம்பிக்கை வைத்தார். அதுவும் அவருக்கு சமாதானம் கொடுக்கவில்லை. 

ஞானி தன்னுடைய  சுயஞானத்தின்மீது  பெருமைப்படக்கூடாது.  சாலொமோன் மிகப்பெரிய ஞானி.  ஆனால் அவருடைய ஜீவியத்தின் முடிவில் மதியீனமே வெளிப்பட்டது.  அவர் ஞானியாகயிருந்தாலும், அவர் கர்த்தருக்கு விரோதமாக பல பாவங்களை செய்தார். 

ஐசுவரியவான் தன்னுடைய ஐசுவரியத்தின்மீது நம்பிக்கை வைக்கவும் கூடாது. அந்த ஐசுவரியத்தினால் பெருமைப்படவும் கூடாது. சாலொமோன்  மிகப்பெரிய ஐசுவரியவான். அவருடைய ஐசுவரியமே அவருக்கு மிகப்பெரிய கண்ணியாயிற்று. யோபுவுக்கு தரித்திரத்தினால் சோதனை உண்டாயிற்று. சாலொமோனுக்கு ஐசுவரியத்தினால் சோதனை உண்டாயிற்று. சாலொமோன் ஐசுவரியத்தின் கண்ணியில் சிக்கிக்கொண்டார். அநேக பாவங்களை செய்தார். ஆனாலும் கர்த்தருடைய பெரிதான கிருபையினால், சாலொமோன்  கர்த்தரிடத்தில் மறுபடியும் திரும்பி வந்தார். இது தேவனுடைய சுத்தக்கிருபை.  

தம்மிடத்தில் வருகிற யாரையும் கர்த்தர்  ஒருபோதும் புறம்பே தள்ளிவிடுவதில்லை. மனம் திரும்பி,  தன்னைத் தாழ்த்தி, ஒருவர் கர்த்தரிடத்தில் வரும்போது, கர்த்தர் அவரை ஏற்றுக்கொள்கிறார்.  சாலொமோன் கர்த்தரை விட்டுத் தூரமாய் விலகிப்போயிருந்தாலும், தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி,  கர்த்தரிடத்தில் மறுபடியும் திரும்ப வருகிறார். கர்த்தரும் அவரை அன்போடு ஏற்றுக்கொள்கிறார்.

பிரசங்கியின் புஸ்தகத்தில்  நம்முடைய அன்றாட ஜீவியத்திற்கு  பிரயோஜனப்படும் அநேக உபதேசங்கள் உள்ளன.  சாலொமோன் தாவீதின் குமாரன். சாலொமோன் தன்னுடைய  பாவங்களுக்கு மனம் வருந்திய பின்பு, தாவீதைப்போலவே ""பாதகருக்கு உம்முடைய வழிகளை  உபதேசிப்பேன்'' (சங் 51:13) என்று தீர்மானம் பண்ணுகிறார். அந்தத் தீர்மானத்தின் ஒரு பகுதியாகவே  அவர் பிரசங்கியின் புஸ்தகத்தை எழுதியிருக்கிறார்.

ஏதேன் தோட்டத்திலே நம்முடைய  முற்பிதாவாகிய ஆதாமும், ஏவாளும்  தங்கள் கண்களின் இச்சைகளுக்கும், மாம்சத்தின் இச்சைகளுக்கும்  தங்களை ஒப்புக்கொடுத்து, தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனார்கள். பார்வைக்கு அழகும்,  புசிப்பதற்கு சுவையாகவும் உள்ளதுதான் ஆசீர்வாதம் என்று நினைத்தார்கள். கர்த்தருடைய கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,  தங்களுடைய விருப்பத்திற்கும், சுயஇச்சைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பாவத்தில் விழுந்தார்கள். ஆதியிலே அவர்கள் செய்த தப்பிதத்தை, இக்காலத்தில் அநேக ஜனங்கள் செய்கிறார்கள். 

தேவனாகிய கர்த்தர் நம் எல்லோருக்கும் சுயாதீனமாக  சிந்திக்கும் திறமையைக் கொடுத்திருக்கிறார். நம் எல்லோருக்குமே விருப்புக்களும், வெறுப்புக்களும் உண்டு.  விசுவாசிகளாகிய நம்முடைய ஜீவியத்தில், தேவனுடைய சித்தமே, நம்முடைய சித்தமாக இருக்கவேண்டும். நாம் விரும்பியதை  செய்ய நமக்கு உரிமை உண்டு என்று நினைத்து, தேவனுடைய சித்தத்திற்கு விரோதமானதைச் செய்துவிடக்கூடாது. நம்முடைய ஜீவியத்திற்கு  நாம் தேவனல்ல. கர்த்தரே நம்முடைய தேவன். கர்த்தரே நம்மை ஆளுகை செய்யவேண்டும். கர்த்தர் நமக்குள் வாசம்பண்ணவேண்டும். நாம் என்ன செய்யவேண்டும் என்பதை  கர்த்தரே நமக்காக தீர்மானம்பண்ணவேண்டும்.

தேவனுக்குப் பயந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது  நமக்கு மிகுந்த ஆசீர்வாதம் உண்டாகும். கர்த்தருக்குப் பிரியமாக ஜீவிப்பதே  நமக்கு மெய்யான சந்தோஷம். நாம் கர்த்தருக்கு பிரியமானவர்களாயும் இருக்கவேண்டும், பிரயோஜனமுள்ளவர்களாயும் இருக்கவேண்டும்.  மனுஷன் தன்னுடைய சந்தோஷத்திற்காக இந்த உலகத்தைப் பார்க்கிறான். ஆனால் இந்த உலகமோ ஒரு மாயை என்று சாலொமோன் விவரமாகச் சொல்லுகிறார். 

மனுஷன் தன்னுடைய கல்வியிலும், அதிகாரத்திலும்,  ஐசுவரியத்திலும், கனத்திலும் பெருமைப்படுகிறான்.   இவற்றைப் பெற்றுக்கொண்டால் தனக்கு சந்தோஷம் உண்டாகும் என்று  நினைக்கிறான். ஆனால் இவையெல்லாமே மாயை. மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறார்.

நாம் மெய்யான சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்வது எப்படி என்பதற்கான ஆலோசனைகள் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.  எல்லாம் மாயையாயிருக்கும்போது, எது மெய்யானது என்பதையும் சாலொமோன் சொல்லுகிறார். நம்மால் மாயையை மெய்யாக மாற்ற முடியாது.  மாயையைக் குணப்படுத்த முடியாது. மாயையினால் நமக்கு துன்பங்களும் வேதனைகளும் வரும். நம்மால் மாயையை மாற்ற முடியாவிட்டாலும், மாயையினால் வரும் துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் நாம் தப்பித்துக்கொள்ளலாம். 

நாம் மாயையை நம்பினால்  நமக்கு ஏமாற்றமுண்டாகும்.  நாம் மாயையை விட்டு விலகி ஜீவிக்கவேண்டும்.  மாயையின்மீது நாம் நம்பிக்கை வைக்கக்கூடாது. தேவனுடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.  மாயையான காரியங்களைப் பின்பற்றாமல், கர்த்தருடைய அடிச்சுவடுகளையே பின்பற்றவேண்டும். நம்முடைய வாலிபபிராயத்திலேயே,  நம்முடைய சிருஷ்டிகராகிய கர்த்தரை நினைக்கவேண்டும் என்று சாலொமோன் நமக்கு ஆலோசனை சொல்லுகிறார். நம்முடைய ஜீவியத்தில் நாம் கர்த்தரை நினைப்பதும், கர்த்தருக்குப் பயந்து ஜீவிப்பதும் தொடரவேண்டும்.  நம்முடைய ஜீவியகாலமெல்லாம் நாம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய ஊழியத்தை செய்யவேண்டும். கர்த்தரை நம்பி நன்மை செய்யவேண்டும்.

பிரசங்கியின் புஸ்தகம் கி.மு. 1000 ஆம் வருஷத்தில் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது.

சாலொமோன் கர்த்தரைவிட்டுப் பின்வாங்கிப் போன காலத்தில் தன்னுடைய உபதேச வார்த்தைகளைப் பிரசங்கியின் புஸ்தகத்தில் கூறியிருக்கிறார். (பிர 1:3; பிர 2:10-22; பிர 3:18-22; பிர 7:23) செப்துவஜிந்த் பதிப்பில் இந்தப் புஸ்தகத்திற்கு தி பிரீச்சர் என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே இந்தப் புஸ்தகத்திற்குப் பெயராயிற்று. (பிர 1:1). பிரசங்கி என்பதற்குக் ""கூட்டத்தைக் கூட்டுகிறவர் அல்லது கூட்டத்தில் பேசுகிறவர்'' என்று பொருள்.

இந்தப் புஸ்தகம் எழுதப்பட்டதற்கான காரணம் வருமாறு:

    1. உலகச்சிற்றின்பங்கள், பாவங்கள் ஆகியவை எல்லாம் மாயையே என்பதை விளக்குவது.

    2. ஜீவியத்தின் மெய்யான முடிவை விளக்கிக் கூறுவது.

    3. கர்த்தருக்குப் பயந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டால் அவரோடு நித்தியகாலமாக ஜீவிக்கலாம் என்னும் சத்தியத்தை விளக்குவது. 

பொருளடக்கம்

 ஒ. அறிமுகமும் கருத்தும் (1:1-2) 

 ஒஒ. மாயை - மனுஷனுடைய பிரயாசம் 

    1. மனுஷனுடைய பிரயாசங்களினால் பலனில்லை (1:3)

    2. மனுஷடைய பிரயாசங்கள் மாறும் - என்றும் நிலைத்திருக்கும் நான்கு காரியங்கள் (1:4-7)

    3. மனுஷனுடைய பிரயாசங்கள் திருப்தியடைவதில்லை (1:8)

    4. மனுஷனுடைய பிரயாசங்கள் திரும்ப திரும்பச் செய்ய வேண்டும் (1:9-10)

    5. மனுஷனுடைய பிரயாசங்களை விரைவில் மறந்து போவார்கள் (1:11)

 ஒஒஒ. மாயைகள் -  பின்வாங்கிப்போன பிரசங்கியின் சொந்த அனுபவங்கள்  

    1. மாயை - எல்லா மனுஷருடைய பிரயாசங்கள் (1:12-14)

    2. மாயை - ஞானம், அறிவு, பைத்தியம், மதியீனன் (1:15-18)

    3. மாயை - சந்தோஷங்கள் (2:1-3)

    4. மாயை - பெரிய வேலைகள் (2:4-6)

    5. மாயை - ஐசுவரியங்களும், மகிமையும் (2:7-9)

    6. மாயை - இச்சைகள் (2:10-11)

    7. மாயை - ஞானமும், மதியீனமும் (2:12-17)

    8. மாயை - நிலையில்லாத பிரயாசங்கள் (2:18-19)

    9. மாயை - தகுதியில்லாத சுதந்தரவாளிகள் (2:20-21)

    10. சொந்த பிரயோஜனங்களினால் பலனில்லை (2:22-23)

    11. மாயை - ஒரு பாவி கடினமாக பிரயாசப்படுவது அவனுடைய ஜீவியத்திற்கு நியாயத்தீர்ப்பாகவே முடியும் - அவனுடைய பிரயாசங்கள் நல்லவன் வசமாகும் (2:24-26)

 ஒய. மனுஷனுடைய ஆயுசு நாள்  

    1. மனுஷவாழ்வில் எல்லாவற்றிற்கும் காலமுண்டு (3:1-8)

    2. பிரயாசப்படுகிறவனிடம் கேட்கப்படும் கேள்வி (3:9)

    3. ஜீவனும் மரணமும்  

        (1) மனுஷனுடைய பிரயாசமும் அறியாமையும் (3:10-11)

        (2) ஆசீர்வாதங்களும் வாய்ப்புகளும் (3:12-13)

        (3) மனுஷனுடைய ஜீவியத்தின் முடிவு (3:14-15)

        (4) மனுஷனுடைய துன்மார்க்கமும் நியாயத்தீர்ப்பும் (3:16-17)

        (5) மனுஷன் மிருகங்களைப்போல மரிக்கிறான் ஆனால் அவனுடைய ஆவி வேறு இடத்திற்குச் செல்லும் (3:18-21)

        (6) பின்மாறுகிறவனுடைய முடிவு (3:22)

 ய. மாயைகள், ஆலோசனை, புத்திமதி  

    1. மாயை - மற்றவர்களால் ஒடுக்கப்படுவதும் மற்றவர்களுக்காக வேலைசெய்வதும் (4:1-4)

    2. ஆலோசனை - சமாதானத்தோடு ஜீவிப்பது (4:5-6)

    3. மாயை - கஞ்சனுடைய முடிவு (4:7-8)

    4. ஆலோசனை - ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம் (4:9-12)

    5. மாயை - ஜீவியத்தில் நீதியோ சந்தோஷமோ இல்லை (4:13-16)

    6. ஆலோசனை - ஞானத்தின் கிரியைகள், பொருத்தனைகள், நீதி ஆகியவற்றைப் பற்றிய ஆலோசனைகளின் பதினான்கு அம்சங்கள் (5:1-9)

    7. மாயை - பணஆசை (5:10)

    8. ஆலோசனை - உன்னுடைய பிரயாசங்களின் பலனால் திருப்தியடைய வேண்டும் (5:11-12)

    9. மாயை - மற்றவர்களுடைய ஐசுவரியம் உதவாது (5:13-17)

    10. ஆலோசனை - உன் ஜீவியத்தின் எல்லா நாட்களிலும் உன் பிரயாசங்களின் பலனை அனுபவி (5:18-20)

 யஒ. மாயைகளும் தீமைகளும் 

    1. மாயை - ஜீவியத்தில் பல ஆசீர்வாதங்களை அனுபவிக்க சக்தியில்லை (6:1-2)

    2. மாயை - அநேகம் பிள்ளைகளை வளர்த்தாலும் முடிவில் தரித்திரனாக மரிப்பது (6:3-6)

    3. மாயை - ஆசையும் ருசியும் ஒருபோதும் திருப்தியடையாது (6:7-9)

    4. மாயை - ஜீவியத்தில் நன்மையானது எது என்பது பற்றிய கேள்விகள் (6:10-12)

 யஒஒ. ஆலோசனையும் ஜீவியத்தில் நன்மையான காரியங்களும்  

    1. ஜீவியத்தில் எட்டு நன்மையான காரியங்கள்(7:1-8)

    2. ஆலோசனையின் ஆறு அம்சங்கள் - காரணங்கள் (7:9-14)

    3. அதிக நீதியுள்ளவனாக இருக்க வேண்டாம் - காரணம் (7:15-16)

    4. அதிக துன்மார்க்கனாக இருக்க வேண்டாம் - காரணம் (7:17-18)

    5. வலிமையில் நம்பிக்கை வைக்க வேண்டாம் - காரணம் (7:19-20)

    6. அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடாது - காரணம் (7:21-22)

    7. பின்மாற்றக்காரனிடம் காணப்படும் ஏழு காரியங்கள் (7:23-29)

 யஒஒஒ.  மாயைகள், ஆலோசனை, புத்திமதி  

    1. ஆலோசனை - தேவனுக்கு முன்பாகவும், இராஜாவுக்கு முன்பாகவும் ஞானத்தோடு நடந்து கொள்வது (8:1-8)

    2. மாயை - ஒடுக்கப்படுவதும் பாவங்களும் (8:9-10)

    3. ஆலோசனை - பாவம் முடிவில் உதவாது (8:11-13)

    4. மாயை - சமநிலையில்லாத வெகுமதிகள் (8:14)

    5. ஆலோசனை - சொந்த பிரயாசத்தை அனுபவி (8:15)

    6. மாயை - மனுஷனுடைய ஓயாத பிரயாசம் (8:16-17)

    7. ஆலோசனை - மனுஷனை விட தேவனுக்கு அதிகம் தெரியுமென்றும் தேவன் சர்வவல்லவர் என்றும் நினைத்து திருப்தியாக இரு (9:1)

    8. மாயை - எல்லோருக்கும் எல்லாம் ஒரேவிதமாய் சம்பவிக்கும் (9:2-6)

    9. ஆலோசனை - தேவன் அருளிய அநேக ஆசீர்வாதங்களை அனுபவி (9:7-10)

 ஒல. ஞானமும், புத்தியீனமும்  

    1. ஞானத்திற்கு சமமில்லாமல் கொடுக்கப்படும் வெகுமதி (9:11-12)

    2. வலிமையைவிட ஞானம் நலம் (9:13-18)

    3. பேர்பெற்றவர்களின் புத்தியீனம் (10:1)

    4. ஞானத்தை நடத்தையினால் அறிந்து கொள்ளலாம் (10:2-3)

    5. ஞானம் வலிமையைவிட நலம் (10:4)

    6. பேர்பெற்றவர்களிடம் புத்தியீனம் (10:5-7)

    7. பிரயாசத்தைவிட ஞானம் நலம் (10:8-10)

    8. ஞானியும் மூடரும் (10:11-15)

    9. பேர்பெற்றவர்களிடம் புத்தியீனம் (10:16-20)

 ல. நல்ல ஆலோசனை 

    1. எல்லா மனுஷருக்கும் (11:1-3)

    2. விவசாயிகளுக்கு ஆலோசனை (11:4-6)

    3. வாலிபருக்கு ஆலோசனை  

        (1) மற்றவர்களுடைய அனுபவங்களிலிருந்து ஆதாயம் (11:7-8)

        (2) வரப்போகும் நியாயத்தீர்ப்பை எதிர்பார்த்து ஜீவிக்க வேண்டும் (11:9-10)

        (3) தேவனை நினைக்கவேண்டும் - காரணங்கள் (12:1-2)

        (4) மரணம் உறுதியானது என்பதை நினைவு கூரவேண்டும் - மனுஷனுடைய சரீரம், மரணம் ஆகியவற்றின் பதினெட்டு அம்சங்கள் (12:3-7)

        (5) ஞானிகளின் வாக்கியங்களுக்கு செவிகொடுக்க வேண்டும் (12:8-12)

        (6) காரியத்தின் கடைசித்தொகை (12:13-14)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.