நீதிமொழிகள் அறிமுகம்
பரிசுத்த ஆவியானவரின்ஏவுதலினால் சாலொமோன் நீதிமொழிகள் புஸ்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தப் புஸ்தகத்தின் மூலமாய் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சிந்தையை நமக்கு வெளிப்படுத்துகிறார். நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு ஆகிய மூன்று புஸ்தகங்களுக்கும் சாலொமோன் ராஜாவே ஆசிரியர். பிரசங்கியின் புஸ்தகம் பிரசங்கச் செய்தியைப்போல எழுதப்பட்டிருக்கிறது. உன்னதப்பாட்டு புஸ்தகம் பாடல் நடையில் எழுதப்பட்டிருக்கிறது.
சாலொமோன் ராஜா தன்னுடைய வாலிபவயதில் ""உன்னதப்பாட்டு'' புஸ்தகத்தை எழுதினார் என்றும், ""நீதிமொழிகள்'' புஸ்தகத்தை அவருடைய ஜீவியத்தின் மத்திய வயதில் எழுதினார் என்றும், ""பிரசங்கி'' புஸ்தகத்தை சாலொமோன் ராஜா தன்னுடைய முதிர்வயதில் எழுதினார் என்றும் வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.
சாலொமோன் ராஜா சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாகயிருந்தார். அவர் தாவீது ராஜாவின் குமாரன். வேதாகமத்திலுள்ள புஸ்தகங்களில் பலவற்றை எழுதிய ஆசிரியர்கள் எல்லோருமே சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்திலிருந்தவர்கள். தேசத்தில் அதிகாரமுள்ளவர்கள். மோசே, யோசுவா, சாமுவேல், தாவீது, சாலொமோன் ஆகியோர் தங்கள் காலத்தில் பிரபலமானவர்களாகவும், முக்கியஸ்தர்களாகவும் இருந்தார்கள்.
இவர்களுக்குப் பின்பு சமுதாயத்தில் சாதாரண அந்தஸ்துள்ளவர்களும் வேதாகம புஸ்தகங்களை எழுதியிருக்கிறார்கள். தீர்க்கதரிசிகள் ராஜாக்களைப்போல செல்வாக்குள்ளவர்களல்ல. ராஜ்யத்தில் தீர்க்கதரிசிகளுக்கு ராஜாக்களைப்போல அதிகாரமுமில்லை. தீர்க்கதரிசிகளில் அநேகர் தரித்திரராகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். கர்த்தர் சாதாரண ஜனங்களையும் தம்முடைய சத்தியத்தை எழுதுவதற்கு பயன்படுத்தியிருக்கிறார்.
""ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும் இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்'' (1கொரி 1:27-29) என்று அப்போஸ்தலர் பவுல் சொல்லுகிறார்.
சாலொமோன் ஐசுவரியமுள்ள ஒரு ராஜா. சாலொமோனின் ராஜ்யம் மிகவும் விஸ்தாரமாக பரவியிருந்தது. அவர் சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாயிருந்தார். சாலொமோன் ராஜா தாவீது ராஜாவின் குமாரன். சாலொமோன் ராஜாவாகயிருந்தாலும், அவர் ஒரு தீர்க்கதரிசியாகவும், தீர்க்கதரிசியின் குமாரனாகவும் இருந்தார். கர்த்தர் சாலொமோன் மூலமாய் தம்முடைய ஞானத்தையும், அறிவையும் மனுஷருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். சாலொமோன் ராஜா சிங்காசனத்தில் அமர்ந்து, சமஸ்த இஸ்ரவேலையும் ஆட்சிசெய்வதற்கு முன்பாக, கர்த்தரை நோக்கி இவ்வாறு ஜெபம்பண்ணினார்.
""இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன். ஆகையால் உமது ஜனங்களை நியாயம்விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும்'' (1இராஜா 3:7-9) என்று சாலொமோன் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணினார். சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
""ஆகையினால் தேவன் சாலொமோனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால், உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. இதுவுமின்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை. உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன்'' ((1இராஜா 3:11-14) என்று கர்த்தர் சாலொமோனின் ஜெபத்திற்குப் பதில் கொடுத்தார்.
கர்த்தர் சொன்ன பிரகாரம் சாலொமோன் ஐசுவரியம் மிகுந்தவராகவும், ஞானமுள்ளவராகவும் இருந்தார். ஆனாலும் சாலொமோனின் ஜீவியத்திலும் ஒரு சில தவறுகள் காணப்பட்டது. சாலொமோன் ஆரம்பத்தில் கர்த்தருடைய வழியை விட்டு விலகாமல், கர்த்தருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து ஜீவித்தார். கர்த்தரை பயபக்தியாய் சேவித்தார். அதன் பின்பு சாலொமோன் அநேக அந்நிய ஸ்திரீகளை விவாகம்பண்ணினார். அவர்கள் சாலொமோன் ராஜாவை கர்த்தரைவிட்டு வழிவிலகிப்போகச்செய்துவிட்டார்கள். சாலொமோன் தன்னுடைய முதிர்வயதில் கர்த்தரை உண்மையாய் சேவிக்காமல், அந்நிய தெய்வங்களுக்கும் தூபங்காட்டி, விக்கிரகாராதனையில் பங்குபெற்றார்.
சாலொமோனின் சரித்திரம் நமக்கு ஆலோசனையாகவும், எச்சரிப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது. சாலொமோனைப்போல ஐசுவரியமுள்ளவர்களாகவும், ஞானமுள்ளவர்களாகவும் இருக்கிறவர்கள் தங்கள் இருதயத்தில் பெருமையோடிருக்கக்கூடாது. கர்த்தருடைய ஆலோசனைகளை நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு கீழ்ப்படியவேண்டும்.
சாலொமோன் தான் மற்றவர்களுக்குச் சொன்ன தன்னுடைய ஆலோசனையின் பிரகாரமாக ஜீவிக்கவில்லை. ஆனாலும் அவர் சொன்ன ஆலோசனைகள் எல்லோருக்கும் பிரயோஜனமுள்ளதாயிருக்கும். ஆலோசனை சொன்னவர் தவறு செய்திருக்கிறார் என்பதற்காக, அவருடைய ஆலோசனைகளை நாம் புறக்கணித்துவிடக்கூடாது. கர்த்தர் சாலொமோன் மூலமாய் நமக்குப் போதிக்கிற செய்திகளுக்கு செவிகொடுக்கவேண்டும். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கவேண்டும்.
வேதாகமத்திலுள்ள மற்ற புஸ்தகங்களின் மொழிநடைக்கும், நீதிமொழிகள் புஸ்தகத்தின் மொழிநடைக்கும் வித்தியாசமுள்ளது. இந்தப் புஸ்தகத்தின் வாக்கியங்கள் நீளமாயிராமல் சுருக்கமாயிருக்கும். ஒவ்வொரு வசனமும் தேவனுடைய சத்தியத்தை தெளிவாக எடுத்துச் சொல்லும். சில சமயங்களில் ஒரு வசனத்திற்கும், மற்ற வசனத்திற்கும் தொடர்பு இருக்காது. இவையெல்லாமே பரிசுத்த ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்த விரும்புகிற தெய்வீக உபதேசங்கள்.
பரிசுத்த வேதாகமத்தில் பஞ்சாகமம் புஸ்தகம் இருக்கிறது. இந்தப் புஸ்தகத்தில் தேவனுடைய பிரமாணம் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. சரித்திர ஆகமங்களில் இஸ்ரவேல் தேசத்தின் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. பாடலாகமத்தில் கர்த்தரைத் தியானித்து, அவரைப் போற்றி பாடப்படும் பயபக்தியான கீதங்கள் எழுதப்பட்டிருக்கிறது. நீதிமொழிகள் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற நீதிமொழிகளெல்லாம் பரிசுத்தமானவை.
வேதாகமத்திலுள்ள ஆகமங்கள் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு வித்தியாசமான மொழிநடையில் எழுதுவதற்கு பரிசுத்த ஆவியானவர் ஏவியிருக்கிறார். இவற்றின் மூலமாய் தேவனுடைய அனந்த ஞானம் நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தின் வசனங்களை, நாம் வாசித்து, தியானித்து, முதலாவதாக அதை நமக்கு நாமே போதித்துக்கொள்ளவேண்டும். அதன் பின்பு நாம் மற்றவர்களுக்கும் சத்தியத்தை உபதேசம்பண்ணவேண்டும்.
பூர்வகாலம் முதலே, நீதிமொழிகள் மூலமாய் உபதேசம்பண்ணும் பழக்கம் இருந்தது. கிரேக்கர்கள் மத்தியில் நீதிமொழிகளைப் பயன்படுத்தி உபதேசம்பண்ணுவது மிகவும் பிரபல்யமானது. நீதிமொழிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிற வாக்கியங்கள் தெளிவானவை, எளிமையானவை. இவற்றை உபதேசத்திற்கு எளிமையாகப் பயன்படுத்தலாம். நீதிமொழிகளின் வசனங்கள் சுருக்கமாகயிருந்தாலும், அதில் அதிகமான கருத்துக்கள் இருக்கும். ஒரு சிறிய வரைபடத்தில் ஒரு தேசம் முழுவதையும் விவரிப்பதுபோல,நீதிமொழிகள் புஸ்தகத்திலுள்ள வசனங்கள் விஸ்தாரமான சத்தியங்களை சுருக்கமாகச் சொல்லுகிறது. எளிதாகப் புரிந்துகொள்வதற்கு இது உதவியாயிருக்கிறது.
சத்தியத்தை உபதேசிப்பதற்கு பலவிதமான முறைகள் உள்ளன. அவற்றுள் நீதிமொழிகள் மூலமாய் உபதேசம்பண்ணுவது மிகவும் சிறப்பானது. ""முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்தில் ஆகாமியம் பிறக்கும்'' (1சாமு 24:13) என்று தாவீது சொல்லுகிறார். நீதிமொழிக்கு, ""முதியோர் மொழி'' என்றும், ""பழமொழி'' என்றும் பல பெயர்கள் உள்ளன. நீதிமொழிகளிலுள்ள வாக்கியங்கள் பூர்வகாலமுதல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அன்றாட உரையாடலுக்கும், விவாதங்களுக்கும், விவாதங்களுக்குத் தீர்ப்பு சொல்லுவதற்கும் முதியோர்கள் நீதிமொழிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்தப் பிரபஞ்சத்தில், எல்லா தேசங்களிலுமே முதியோர்களின் மொழிகள் உள்ளன. அவற்றில் பல நன்மையானவை. வேறு சில தீங்குவிளைவிக்கக்கூடியவை. பிசாசும் பழமொழிகளைப் பயன்படுத்துகிறான். ஒரு தேசத்தில் எப்படிப்பட்ட பழமொழிகள் வழக்கத்திலிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்து, அந்தத் தேசத்தாரின் குணாதிசயத்தைப் புரிந்துகொள்ள முடியும். மோசமான பழமொழிகள் மனுஷரை தவறான பாதையில் வழிநடத்தும். அது அவர்களுடைய இருதயத்தையும் வஞ்சித்துவிடும்.
பரிசுத்த வேதாகமத்தில், கர்த்தர் நீதிமொழிகள் மூலமாய் நம்மோடு பேசுகிறார். சாத்தான் தேவனைப்போல மாய்மாலம் பண்ணுகிறவன். அவனும் அவிசுவாசிகள் மத்தியிலே தன்னுடைய பழமொழிகளை பிரபல்யப்படுத்துகிறான். இந்த உலகத்தாருக்கென்று விசேஷித்த பழமொழிகள் உண்டு. மாம்சப்பிரகாரமான ஜீவியத்தை ஆதரிக்கிற பழமொழிகளும் உண்டு. இவற்றைப் படிப்பதினால் நமக்கு பக்திவிருத்தி உண்டாகாது.
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில், தேவனாகிய கர்த்தர் தப்பிதமான பழமொழிகளைக் குறித்து எச்சரித்துச் சொல்லுகிறார். ""பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன? ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவே-லே இந்தப் பழமொழியைச் சொல்- வராதபடிக்கு நான் அதை ஒழியப்பண்ணுவேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு. இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும். நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்'' (எசே 12:21-25).
சாலொமோன் நீதிமொழிகள் புஸ்தகத்தை எழுதிய காலத்தில், இஸ்ரவேல் தேசத்தில் முதியோரின் மொழிகள் ஏராளமாயிருந்தது. சாலொமோன் அவற்றையெல்லாம் தொகுத்து இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறார் என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள். ஆனாலும் இந்தக் கருத்தை ஒரு சிலர் மறுக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் சாலொமோன் ராஜாவுடைய இருதயத்தில் ஏவிய வார்த்தைகள் மாத்திரமே, இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்றும் அநேகர் சொல்லுகிறார்கள். நீதிமொழிகள் புஸ்தகத்திலுள்ள வசனங்கள் சாலொமோனுடைய சுயகற்பனையல்ல. இவை மனுஷருடைய வாக்கியங்களுமல்ல. இவையெல்லாமே பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள். தேவன் தம்முடைய சிந்தையை நீதிமொழிகள் புஸ்கதத்தின் மூலமாக நமக்கு வெளிப்படுத்துகிறார்.
சாலொமோன் ராஜா இந்தப் புஸ்தகத்தின் ஆரம்பத்தில் ""கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்'' (நீதி 1:7) என்று சொல்லுகிறார். இந்தவாக்கியம், கர்த்தர் பூர்வகாலத்தில் மனுஷருக்குச் சொன்ன வாக்கியத்தோடு ஒத்திருக்கிறது. ""இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்'' (யோபு 28:28) என்று யோபுவின் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
சாலொமோன் இஸ்ரவேல் தேசத்தில் மிகவும் பிரசித்திப் பெற்றவர். அவர் எல்லோருக்கும் அறிமுகமானவர். நீதிமொழிகள் புஸ்தகத்தை நாம் வாசிக்கும்போது, நாம் சாலொமோனுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. ஏனெனில் ""சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்'' (மத் 12:42) என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றி வெளிப்படுத்தியிருக்கிறார்.
நீதிமொழிகள் புஸ்தகத்தில் சாலொமோன் நம்மோடு பேசவில்லை. தேவனாகிய கர்த்தரே, சாலொமோன் மூலமாய், நம்மோடு பேசுகிறார். நீதிமொழிகள் புஸ்தகத்தின் முதல் ஒன்பது அதிகாரங்கள், இந்தப் புஸ்தகத்திற்கு ஒரு முன்னுரையாக எழுதப்பட்டிருக்கிறது. இதன் பின்பு நீதிமொழிகளின் முதலாவது பாகம் 10-24 ஆகிய அதிகாரங்களிலும், இரண்டாவது பாகம் 25-29 ஆகிய அதிகாரங்களிலும் தொகுக்கப்பட்டிருக்கிறது. 30-ஆவது அதிகாரம் ஆகூரின் நீதிமொழிகளாகும். 31-ஆவது அதிகாரம் லேமுவேலின் நீதிமொழிகளாகும்.
நீதிமொழிகள் புஸ்தகம் கி.மு. 1000 ஆம் வருஷத்தில் எழுதப்பட்டது. நீதிமொழிகள் 30-31 ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்தையும் சாலொமோன் பேசினார். நீதி 1-24 ஆகியவற்றை சாலொமோன் ஒரு புஸ்தகத்தில் எழுதியிருந்திருக்கிறார். இந்த முதல் புஸ்தகத்தோடு நீதி 25-29 ஆகியவற்றை எசேக்கியா கி.மு. 730 ஆவது வருஷத்தில் சேர்த்தார். இதன் பின்பு நீதி 30-31 ஆகியவை இந்தப் புஸ்தகத்தோடு சேர்க்கப்பட்டிருக்கிறது. சேர்க்கப்பட்ட காலம் தெளிவாகத் தெரியவில்லை.
சாலொமோன் முதல் 29 அதிகாரங்களை எழுதினார். சாலொமோன் கூறிய 3,000 நீதிமொழிகளில் இவை மட்டுமே கிடைத்திருக்கிறது. (1இராஜா 4:32) பிறருடைய நீதிமொழிகளைச் சாலொமோன் ராஜா பயன்படுத்தியிருப்பதற்கும் வாய்ப்பில்லை. சாலொமோனின் காலத்திற்குப் பின்பே பலர் தங்களுடைய சொந்த ஞானவார்த்தைகளை எழுதினார்கள். அவை பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டவையல்ல. நீதிமொழிகள் புஸ்தகத்தில் கடைசி இரண்டு அதிகாரங்களையும், பெயர் தெரியாத ஒரு புருஷனும் ஒரு ஸ்திரீயும் எழுதியிருக்கிறார்கள். சாலொமோனின் நீதிமொழிகளோடு இவ்விரண்டு அதிகாரங்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை எசேக்கியா இதைச் சேர்த்திருக்கலாம். (நீதி 25:1).
தேவனுடைய ஜனங்களுக்குப் பிரயோஜனமான நீதிநெறிக் கருத்துக்களும், ஆவிக்குரிய சத்தியமும் நீதிமொழிகளாக இந்தப் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது. (2தீமோ 3:15-17).