ஆபகூக் புத்தகம் ஒரு கண்ணோட்டம்




ஆபகூக் புத்தகம் முன்னுரை 

ஆபகூக் தீர்க்கதரிசி மனாசே ராஜாவின் ஆட்சிக்காலத்தில் கர்த்தருடைய ஊழியத்தை செய்தார். இக்காலத்தில் யூதாவிலும் எருசலேமிலும் துன்மார்க்கம் அதிகமாயிருந்தது.  யூதாதேசத்திற்கு அழிவு நெருக்கமாக வந்துகொண்டிருக்கிறது. தேவனுடைய நியாயத்தீர்ப்பு யூதாவின் மனுஷர்மீதும்,  எருசலேமின் குடிகள்மீதும் வரப்போகிறது.  கர்த்தர் தம்முடைய நியாயத்தீர்ப்பை அவர்கள்மீது நிறைவேற்றுவதற்கு, கல்தேயரை  தம்முடைய கருவியாகப் பயன்படுத்துகிறார். 

யூதமார்க்கத்து ரபீமார்கள் ஆபகூக்கின் சரித்திரத்தை வித்தியாசமாகச் சொல்லுகிறார்கள். எலிசா சூனேமிய ஸ்திரீயின் குமாரனை உயிரோடு எழுப்பினார். அந்தக் குமாரனே ஆபகூக் என்பது யூதமார்க்கத்து  ரபீமார்களின் விளக்கம் இவர்கள் யோனாவின் சரித்திரத்தையும் வித்தியாசமாய்ச் சொல்லுகிறார்கள்.  சாரிபாத் ஊர்  விதவையின் குமாரனே யோனா என்பது  இவர்களுடைய விளக்கம். யூதமார்க்கத்து ரபீமார்களின் சரித்திர விளக்கத்திற்கு ஆதாரம் எதுவுமில்லை.

ஆபகூக் தன்னுடைய தீர்க்கதரிசன புஸ்தகத்தில், ஜனங்களுடைய நாமத்தினால்  தேவனிடத்தில் பேசுகிறார். மேலும் அவர்  தேவனுடைய நாமத்தினால் ஜனங்களிடத்திலும் பேசுகிறார். இதுவே தீர்க்கதரிசிகளின் ஊழியம்.  அவர்கள் கர்த்தர் சொல்லுவதை ஜனங்களுக்கு சொல்லவேண்டும். ஜனங்களுடைய வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும்  கர்த்தரிடத்தில் ஏறெடுக்கவேண்டும். 

கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் கிருபையுள்ள தேவனுக்கும், தேவையுள்ள ஆத்துமாக்களுக்கும் நடுவே, பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். யூதாதேசத்தின்மீது கல்தேயர்கள் யுத்தம்பண்ண வரப்போகிறார்கள் என்பதே ஆபகூக் சொல்லுகிற பிரதான செய்தி.  

கி.மு. 679 - 648 ஆம் வருஷங்களில் ஆபகூக்கின் புஸ்தகம் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது.  இந்தப் புஸ்தகத்தின்  ஆசிரியர் ஆபகூக் தீர்க்கதரிசி ஆவார் (ஆப 1:1,3:1).

மையக்கருத்து

1. தேவனுடைய பரிசுத்தத்தையும், அவருடைய நீதியையும் நிரூபித்தல்.

2. தேவனுடைய சுபாவங்களை நிரூபிப்பதில் ஆபகூக் மற்ற தீர்க்கதரிசிகளைவிட அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறார். 

3. தீர்க்கதரிசிக்கும், தேவனுக்கும் இடையில் நடைபெறும் சம்பாஷணை இந்தப் புஸ்தகத்தில் மையக்கருத்தாக உள்ளது. 

4. பூமியில் அநியாயத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்று ஆபகூக் தேவனிடம் விண்ணப்பம் பண்ணுகிறார்.

5. யூதாவின்மீது மகா பயங்கரமான பழிவாங்கும் நாள் பாபிலோனிலிருந்து வரும் என்று கர்த்தர் ஆபகூக்கிற்குப் பதிலளிக்கிறார். (ஆப 1:1-11).

6. ஆபகூக் கர்த்தரிடத்தில் மற்றொரு விண்ணப்பத்தையும் கேட்கிறார்.           (ஆப 1:12-17) இரண்டாம் அதிகாரத்தில் கர்த்தர் கூறும் பதில்   கொடுக்கப் பட்டிருக்கிறது. யூதாவின்மீது மேலும் பல நியாயத் தீர்ப்புகள் வரும்.

7. இஸ்ரவேல் உயிர்ப்பிக்கப்பட வேண்டுமென்று ஆபகூக் ஜெபிக்கிறார். இந்த ஜெபம் ஆபகூக் மூன்றாம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

8. யூதா தேசத்தார் தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்படும். யூதா தேசம் அழிக்கப்படும். 

பொருளடக்கம்

 ஒ. இஸ்ரவேலுக்கு எதிராக ஜெபம் (1:1-4) 

 ஒஒ. சிதறிப்போவது குறித்து தீர்க்கதரிசனம் 

1. தேசங்கள் நடுவே தேவனுடைய கிரியை (1:5) 
2. பாபிலோனியச் சிறையிருப்பு  (1:6-11)

 ஒஒஒ. சாட்சி - தேவனுடைய சுபாவம் (1:12-16)

 ஒய. ஆபகூக்கிற்கு தேவனுடைய பதிலுரை 

1. தரிசனத்தை எழுது - காரணம் (2:1-3) 
2. வேறுபட்ட சுபாவங்கள் (2:4)  
3. பேராசை (2:5-8) 
4. பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவர்களுக்கு ஐயோ (2:9-13) 
5. காரணம் - பூமியில் தேவனுடைய நோக்கம் (2:14) 
6. மதுபானப்பிரியருக்கு ஐயோ - காரணம் (2:15-17) 
7. விக்கிரகாராதனைக்காரருக்கு ஐயோ - காரணம் (2:18-19)

 ய. ஆபகூக்கின் ஜெபம்  

1. தேச எழுப்புதலுக்காக (3:1-2) 
2. தேவனுடைய முப்பது அம்ச மகத்துவம் (3:3-15)  
3. ஆபகூக்கின்மீது ஏற்பட்ட விளைவு (3:16)  
4. ஆறு அம்ச பொருத்தனை (3:17-19) 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.