சங்கீதம் ஒரு கண்ணோட்டம்




சங்கீதம் அறிமுகம்

சங்கீதப்புஸ்தகம் பரிசுத்த ஆவியானவருடைய உபதேசப் புஸ்தகம். இது தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் இந்த உலகக்காரியங்களிலிருந்து விடுதலைபெற்று, தேவனோடு ஐக்கியமாயிருப்பதற்கு சங்கீதப்புஸ்தகத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு உதவியாயிருக்கும். நம்முடைய இருதயம் தேவனுக்கு நேராகத் திரும்பியிருக்கவேண்டும். நம்முடைய இருதயத்தில் தேவனுடைய சிந்தனை நிரம்பியிருக்கவேண்டும். தேவனுடைய சித்தமே நம்முடைய சித்தமாயிருக்கவேண்டும். கர்த்தருக்குள் பரிசுத்தமாய் ஜீவிப்பதற்கு சங்கீதப்புஸ்தகம் நமக்கு ஆவிக்குரிய ஆலோசனைகளைச் சொல்லுகிறது. 

தலைப்பு 

எபிரெய பாஷையிலே சங்கீதப்புஸ்தகத்தை ""தெகில்லிம்'' என்று அழைக்கிறார்கள். இந்தப் பெயருக்கு ""துதியின் சங்கீதங்கள்'' என்று பொருள். இயேசுகிறிஸ்து இந்தப் புஸ்தகத்தை, ""சங்கீதங்கள்'' என்று அழைக்கிறார் (லூக் 24:44). சங்கீதப்புஸ்தகத்தில் 150 சங்கீதங்கள் உள்ளன. சங்கீதங்களை தேவனுடைய சமுகத்தில் நாம் பயபக்தியாய்ப் பாடவேண்டும். எபிரெய பாஷையிலே ஒவ்வொரு சங்கீதத்தையும், அதற்குரிய பிரத்தியேகமான இசையில் பாடுவது வழக்கம். சங்கீதங்களைப் பாடும்போது நம்முடைய இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பும்.  

சங்கீதப்புஸ்தகத்திலுள்ள சங்கீதங்களை பாடல்களாகப் பாடும்போது அவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது எளிதாயிருக்கும். நம்முடைய இருதயத்தின் எண்ணங்களை கர்த்தருடைய சமுகத்தில் ஊற்றுவதற்கு சங்கீதப்புஸ்தகத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு உதவிபுரியும். 

இஸ்ரவேல் ஜனங்களின் ஜீவியத்தில் சங்கீதப்புஸ்தகம் முக்கியமான இடம்பெற்றிருக்கிறது. எல்லா மனுஷரைப்போலவே அவர்களுக்கும் சந்தோஷமான சமயங்களும், துக்கமான சமயங்களும் உண்டு. நம்முடைய ஜீவியத்தின் எல்லா சூழ்நிலைகளிலும் பாடுவதற்கு ஏற்ற பாடல்கள் சங்கீதப்புஸ்தகத்தில் உண்டு.

நாம் சங்கீதங்களைப் பாடி தேவனைத் துதிக்கலாம். சங்கீதங்களில் எழுதப்பட்டிருக்கிற வசனங்கள் நமக்கு ஆவிக்குரிய ஆலோசனைகளைச் சொல்லுகிறது. அது தேவனுடைய சத்தியங்களை நமக்கு உபதேசிக்கிறது. சங்கீத வார்த்தைகளினால் நாம் ஒருவருக்கொருவர் ஆவிக்குரிய புத்திமதிகளைச் சொல்லிக்கொள்ளலாம். அப்போஸ்தலர் பவுல் சங்கீதங்களைப்பற்றி கொலோசெயருக்கு எழுதின நிருபத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். 

""கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்-க்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி; வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள்'' (கொலோ 3:16,17).

பேதுரு இந்தப் புஸ்தகத்தை, ""சங்கீத புஸ்தகம்'' (அப் 1:20) என்று குறிப்பிடுகிறார். சங்கீதப்புஸ்தகத்தில் 150 சங்கீதங்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த சங்கீதங்கள் எல்லாம் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது.  

ஆசிரியர் 

பரிசுத்த ஆவியானவரே சங்கீதப்புஸ்தகத்தின் ஆசிரியர். இவை அனைத்தும் ஆவிக்குரிய பாடல்கள். சங்கீதப்புஸ்தகத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் நமக்கு உபதேசம்பண்ணுகிறார். அவர் தம்முடைய பரிசுத்தவான்களை ஏவி சங்கீதங்களை எழுத வைத்திருக்கிறார். 

சங்கீதப்புஸ்தகத்திலுள்ள அநேக சங்கீதங்களை தாவீது ராஜா எழுதியிருக்கிறார். இவர் ஈசாயின் குமாரன். பழைய ஏற்பாட்டிலே தாவீதைப்பற்றி சொல்லும்போது ""இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது'' (2சாமு 23:1) என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சில சங்கீதங்களில் தாவீதின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் அந்த சங்கீதங்களையும் தாவீதுதான் எழுதியிருக்கிறார் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். சான்றாக, 2; 96; 105 ஆகிய சங்கீதங்களை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் அப் 4:25; 1நாளா 16; ஆகிய வசனப்பகுதிகள் மூலமாக, இந்த சங்கீதங்களை தாவீதுதான் எழுதினார் என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

ஒரு சங்கீதத்தை மோசே எழுதினார் (சங் 90). இந்த சங்கீதத்திற்கு ""தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்'' என்னும் தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில சங்கீதங்களை ஆசாப் எழுதியிருக்கிறார். ""தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள் என்று எசேக்கியா ராஜா சொன்னார்'' (2நாளா 29:30). இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோன் சிறையிலிருப்பிலிருந்தபோது சங் 137 இயற்றப்பட்டது. பெரும்பாலான சங்கீதங்களை தாவீது ராஜாவே இயற்றியிருக்கிறார்.

நோக்கம் 

பரிசுத்த ஆவியானவர் நமக்கு சங்கீதப்புஸ்தகத்தைக் கொடுத்திருப்பதற்கு விசேஷித்த நோக்கம் உண்டு. நம்முடைய ஆத்துமா உயிர்பெறவேண்டும். நாம் தேவனிடத்தில் முழுமனதோடு அன்புகூரவேண்டும். கர்த்தரே நம்முடைய சிருஷ்டிகர். அவரே நம்மை ஆளுகை செய்கிறவர். அவரே நம்முடைய எஜமான். கர்த்தரே நம்மை பாதுகாத்து பராமரிக்கிறவர் என்பதையெல்லாம் நம்முடைய ஆத்துமா உணர்ந்திருக்கவேண்டும். கர்த்தர் நம்முடைய ஜீவியத்தில் செய்திருக்கிற நன்மைகளுக்காக, நாம் அவருடைய சமுகத்தில் வந்து, அவரை நன்றியோடு துதிப்பதற்கு, சங்கீதப்புஸ்தகத்திலுள்ள வசனங்கள் நமக்கு உதவிபுரிகிறது. 

நம்முடைய ஜீவியத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நாம் கர்த்தரையே சார்ந்திருக்கவேண்டும். நம்முடைய வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் நாம் கர்த்தருடைய சமுகத்தில் ஏறெடுக்கவேண்டும். கர்த்தருடைய சமுகத்தில் நாம் பயபக்தியோடு வந்து அவரைத் துதிக்கவேண்டும். அவருக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்தவேண்டும். 

வேதாகமத்தில் பொதுவாக கர்த்தருடைய சர்வவல்லமையையும், சர்வஆளுகையையும், சர்வஅதிகாரத்தையும் பற்றி எழுதப்பட்டிருக்கும். ஆனால் சங்கீதப்புஸ்தகத்திலோ, நாம் கர்த்தரோடு எவ்வாறு ஐக்கியமாக இருக்கவேண்டும் என்று ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. நம்முடைய ஜீவியத்தில் வெவ்வேறு சூழ்நிலைகள் வரும். நாம் பலவிதமான அனுபவங்கள் வழியாக கடந்துபோகிறோம். நம்முடைய ஜீவியத்தின் எல்லா சூழ்நிலைகளிலும், நாம் கர்த்தரோடு எவ்வாறு நெருங்கி ஐக்கியமாயிருப்பது என்று சங்கீதப்புஸ்தகம் நமக்கு உபதேசம்பண்ணுகிறது.  

சங்கீதப்புஸ்தகத்திலே தேவனுடைய தெய்வீக சுபாவம் நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் புஸ்தகத்தில் மார்க்கப்பிரமாணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், மனுஷருடைய ஆத்துமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் ஜனங்கள் பல வருஷங்களாக தேவனுக்கு பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தி வந்தார்கள். ஆனால் கர்த்தர் பலியையும் காணிக்கையையும் விரும்பவில்லை என்று சங்கீதம் சொல்லுகிறது (சங் 40:6; 51:16). 

தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக பலிகளும் காணிக்கைகளும் ஒழிந்துபோயிற்று. ஆனாலும், கர்த்தருடைய வார்த்தையும், அவருடைய பிரமாணமும் நித்திய காலமாய் நிலைத்து நிற்கிறது. பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய பலிபீடத்திலே மிருகங்களை பலிகளாகச் செலுத்தினார்கள். புதிய ஏற்பாட்டுக்காலத்தில் ஜீவிக்கிற கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், அவருடைய சமுகத்திற்கு முன்பாக ஸ்தோத்திரபலிகளை செலுத்துகிறோம். தேவனுக்கு பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தி, நம்முடைய பக்தியை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, நாம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து பரிசுத்தமாய் ஜீவிக்கவேண்டும். நம்முடைய துதியினாலும், ஸ்தோத்திரத்தினாலும், வார்த்தையினாலும், கிரியையினாலும் கர்த்தரை மகிமைப்படுத்தவேண்டும். 

சங்கீதப்புஸ்தகத்தில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவே நம்முடைய விசுவாசத்திற்கு அஸ்திபாரமாகவும், நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு மூலைக்குத் தலைக்கல்லாகவும் இருக்கிறவர். இயேசுகிறிஸ்துவைப்பற்றி சங்கீதப்புஸ்தகத்திலே தீர்க்கதரிசனங்களாகவும், அடையாளங்களாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அவருடைய பாடுகளையும், அதைத் தொடர்ந்து அவருக்கு வரும் மகிமையையும், இந்த உலகத்தில் அவர் ஸ்தாபிக்கப்போகிற ராஜ்யத்தையும் சங்கீதப்புஸ்தகம் தெளிவாக முன்னறிவிக்கிறது. 

பயன்பாடு

வேதவாக்கியங்களெல்லாம் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு பிரயோஜனமுள்ளவை. வேதவாக்கியத்தின் மூலமாகவே தேவனைப்பற்றிய வெளிப்பாடுகளை நாம் பெற்றுக்கொள்கிறோம். வேதவசனங்களே நமக்கு தெய்வீக வெளிச்சமாயிருக்கிறது. நாம் பரிசுத்தமாய் ஜீவிக்கவேண்டுமென்று சங்கீதப்புஸ்தகம் நமக்கு ஆலோசனை சொல்லுகிறது. தேவனிடத்தில் அன்பாயிருப்பதற்கும், ஐக்கியமாயிருப்பதற்கும், பயபக்தியாயிருப்பதற்கும் சங்கீதப்புஸ்தகம் நமக்குப் பிரயோஜனமாயிருக்கிறது. 

சங்கீதப்புஸ்தகம் பாடல்களாக இயற்றப்பட்டிருக்கிறது. எபிரெயர்கள் ஒவ்வொரு சங்கீதத்தையும் அதற்குரிய ராகத்தோடு பாடுவது வழக்கம். அந்த ராகங்களின் பெயர்கள் மாத்திரமே நமக்குத் தெரிகிறது. ஆனால் அந்த ராகத்தைப்பற்றிய விவரம் நமக்கு சரியாகத் தெரியவில்லை. சங்கீதங்கள் பல பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாஷைக்கும், அதற்கென்று பிரத்தியேகமான ராகங்கள் இருக்கும். அந்தந்த பாஷைகளின் ராகங்களுக்கேற்ற பிரகாரம் சங்கீதங்களை பயபக்தியோடு பாடலாம். சபையின் பக்திவிருத்திக்காக சங்கீதங்களை பாடவேண்டும். 

சங்கீதப்புஸ்தகம்ஆவிக்குரிய காரியங்களின் பொக்கிஷமாயிருக்கிறது. சங்கீதப்புஸ்தகத்திலிருந்து நாம் எவ்வளவு எடுத்தாலும் அது ஒருபோதும் குறைந்துபோவதில்லை. ஒவ்வொரு சங்கீதமும் தெய்வீகப்பாடல்கள். சங்கீதத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பாடலாம். சங்கீதத்தைப் பாடுவதினால் ஒருபோதும் சலிப்பு உண்டாகாது. நாம் சங்கீதத்தை பயபக்தியாய்ப் பாடும்போது நம்முடைய ஆத்துமா புத்துயிர் பெறும். சோர்ந்துபோயிருக்கிற ஆத்துமா உற்சாகம் பெறும். 

கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் சங்கீதப்புஸ்தகத்திலுள்ள வசனங்களை விசுவாசிகளுக்கு வாசித்து, உபதேசம்பண்ணவேண்டும். சங்கீதப்புஸ்தகத்திலே ஆவிக்குரிய சத்தியங்கள் ஏராளமாய் உள்ளன. நன்மை, தீமை என்றால் என்ன என்பது இந்தப் புஸ்தகத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக்கொள்ளவேண்டும். 

கர்த்தருடைய பரிசுத்தவான்கள் எல்லோருமே சங்கீதங்களை வாசித்து தியானிக்கவேண்டும். சங்கீதங்களை எழுதிய ஆசிரியர்களும் நம்மைப்போலவே பாடுள்ள மனுஷர்கள். அவர்களுடைய ஜீவியத்தில் அவர்களுக்கு பல்வேறுவிதமான அனுபவங்கள் உண்டாயிற்று. அவர்கள் தங்கள் ஜீவியத்தின் வெவ்வேறு சூழ்நிலைகளில், இந்த சங்கீதங்களை இயற்றியிருக்கிறார்கள். அவர்கள் எழுதின சங்கீதங்களை நாம் தியானிக்கும்போது நமக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதம் உண்டாகும். ஒரு சில சங்கீதங்கள் நம்மை எச்சரிக்கும். சில சங்கீதங்கள் நம்மை உற்சாகப்படுத்தும். சில சங்கீதங்கள் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நம்மை வழிநடத்தும்.   

தேவனுக்கும் மனுஷருடைய ஆத்துமாவுக்கும் இடையிலுள்ள ஐக்கியத்தைப்பற்றி சங்கீதத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. தேவனிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கலாம் என்பதை சங்கீதத்தின் மூலமாய் அறிந்துகொள்கிறோம். அதே வேளையில் தேவன் நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதையும் சங்கீதம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. தேவன் தம்முடைய கிருபையினாலே நம்மை அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறார். 

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் தேவனுடைய சமுகத்தில் ஜெபம்பண்ண வரும்போது எப்படி ஜெபிப்பது என்று தெரியாமல் தவிக்கிறோம். பல சமயங்களில் ஜெபவார்த்தைகள் நம்முடைய வாயிலிருந்து சரளமாய் வருவதில்லை. பரிசுத்த ஆவியானவரோ சங்கீதப்புஸ்தகத்திலுள்ள வசனங்கள் மூலமாய் ஜெபம்பண்ணுவதற்கு நமக்கு உதவிபுரிகிறார். நாம் ஜெபிக்கும்போது பயன்படுத்தவேண்டிய வார்த்தைகளை சங்கீதப்புஸ்தகத்தின் மூலமாய் ஆவியானவர் நமக்குக் கற்றுத்தருகிறார்.

தாவீதின் சங்கீதம் நம்முடைய இருதயத்தில் நிரம்பியிருக்கவேண்டும். சங்கீதங்களிலுள்ள வார்த்தைகளை நாம் மனப்பாடம் செய்யவேண்டும். தேவனுடைய கிருபையுள்ள சமுகத்திற்கு முன்பாக நாம் நிற்கும்போது, தேவனோடு பேசுவதற்கு சங்கீதத்திலுள்ள வார்த்தைகள் நமக்கு உதவிபுரியும். தேவன் நம்முடைய ஜெபங்களை அங்கீகரிக்கும் வண்ணமாக ஜெபவார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு, சங்கீதத்திலுள்ள வார்த்தைகள் நமக்கு பிரயோஜனமாயிருக்கும். 

நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் ஒவ்வொரு சங்கீதமாக வாசித்து, அதிலுள்ள வசனங்களை தியானிக்கலாம். சங்கீதத்தில் சொல்லப்பட்ட பிரகாரம் கர்த்தருடைய சமுகத்தில் நாம் ஜெபம்பண்ணலாம். ஒவ்வொரு வசனத்தையும் நம்முடைய சிந்தனையில் தியானிக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வார்த்தைகளை, நாம் புரிந்துகொள்வதற்கு, நமக்கு உதவிபுரிவார்.  

நம்முடைய ஸ்தோத்திரங்களையும், துதிகளையும் கர்த்தருக்கு ஏறெடுத்து, அவரை நாம் மகிமைப்படுத்தவேண்டும். நம்முடைய வார்த்தையும், கிரியையும் கர்த்தருக்குப் பிரியமானதாயிருக்கவேண்டும். நாம் ஸ்தோத்திர பலியிடும்போது கர்த்தரை மகிமைப்படுத்துகிறோம். நம்முடைய வழியை செவ்வைப்படுத்தும்போது, தேவன் தம்முடைய இரட்சிப்பை நமக்கு வெளிப்படுத்துவார் (சங் 50:23). 

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கர்த்தருடைய பரிசுத்தவான்கள் சங்கீதங்களைப்பாடி தேவனைத் துதித்தார்கள். அவர்களுடைய பக்திவிருத்திக்கு சங்கீதப்புஸ்தகம் பிரயோஜனமாயிருந்தது. புதிய ஏற்பாட்டுக்காலத்திலே ஜீவிக்கிற கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு, சங்கீதப்புஸ்தகம் இன்னும் அதிக ஆசீர்வாதத்தைத் தருகிறது. பழைய ஏற்பாட்டுக்காலத்து பரிசுத்தவான்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்தப் பூமியிலே மனுஷராக பிறப்பதற்கு முன்பு ஜீவித்தவர்கள். இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கிற வசனங்களின் சத்தியங்கள் நமக்கு தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

சங்கீதப்புஸ்தத்தில்•150 சங்கீதங்கள் உள்ளன. இந்த 150 சங்கீதங்களையும் ஐந்து பாகங்களாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பாகமும் ""ஆமென், ஆமென்'' என்றோ அல்லது ""அல்லேலூயா'' என்றே முடிவுபெறும். ஐந்து பாகங்களின் விவரம் வருமாறு : 

1. முதலாவது பாகம் : சங்கீதம் 1-41 

2. இரண்டாவது பாகம் : சங்கீதம் 42-72   

3. மூன்றாவது பாகம் : சங்கீதம் 73-89

4. நான்வது பாகம் : சங்கீதம் 90-106

5. ஐந்தாவது பாகம் : சங்கீதம் 107- 150

சங்கீதப்புஸ்தகங்களை இந்த ஐந்து பிரிவுகளாகப் பிரிப்பதற்குப் பதிலாக, ஒரு சிலர் வேறு விதமாகவும் பிரிக்கிறார்கள். நாம் தியானம்பண்ணுவதற்கு ஏற்றபிரகாரம் சங்கீதப்புஸ்தகங்களை ஆவியானவருடைய வழிநடத்துதலின்படி, நமக்கு பிரயோஜனமுள்ள வழியில் பிரித்துக்கொள்ளலாம். ஆவியானவர் சங்கீதங்களில் சொல்லியிருக்கிற சத்தியங்களைப் புரிந்துகொள்ளவேண்டும். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு சங்கீதப்புஸ்தகத்திலுள்ள வாக்கியங்கள் ஆசீர்வாதமாயிருக்கவேண்டும். சங்கீதம் நம்முடைய ஆத்துமாவில் நிரம்பியிருக்கவேண்டும். அது நம்முடைய ஆத்துமாவோடு பேசவேண்டும். நாம் தேவனோடு பேசுவதற்கு சங்கீதத்திலுள்ள வார்த்தைகளை நாம் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளவேண்டும். 

இந்நூ-ன் பெயர் ""செப்பேர் தெகில்-ம்''. இதற்கு ""துதிகளின் புஸ்தகம்'' என்று பொருள்.

சங்கீதப் புஸ்தகத்தில் மொத்தம் 150 சங்கீதங்கள் உள்ளன. இவை எழுதப்பட்ட காலம் சுமார் கி.மு. 1500-450. பாலஸ்தீன தேசத்திலும் பாபிலோனிலும் சங்கீதக்காரர்கள் சங்கீதங்களை இராகத்தோடு இயற்றினார்கள்.

சங்கீதங்களை இயற்றியோரின் பெயர் அந்தந்த சங்கீதங்களிலேயே காணப்படுகிறது. நூறு சங்கீதங்களை இயற்றியோர் யார் என்னும் விபரம் நமக்குக் கிடைத்துள்ளது.

 வரிசை சங்கீதம் இயற்றிய

எண் இயற்றியோர் சங்கீதங்கள்

  1. மோசே 1

  2. தாவீது 73

  3. சாலொமோன் 2

  4. ஆசாப் 12

  5. ஏமான் 1

  6. ஏத்தான் 1

  7. கோராகின்புத்திரர் 10

மீதமுள்ள 50 சங்கீதங்களை இயற்றியோர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை தாவீதும் சாலொமோனும் இவற்றில் பெரும்பாலான சங்கீதங்களை இயற்றியிருக்கலாம்.

 பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் சங்கீதங்களைப் பாலஸ்தீன தேசத்திலும் பாபிலோனிலும் இசையோடு பாடிவந்தார்கள். இவற்றையெல்லாம் எஸ்றா சேகரித்து, தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் சங்கீதப் புஸ்தகமாகத் தொகுத்தார்.

 எஸ்றா சேகரித்துத் தொகுத்த சங்கீத புஸ்தகத்தின் எபிரெயப் பெயர் ""செப்பேர் தெகில்லீம்'' இதன்பொருள் துதியின் புஸ்தகம். இந்த எபிரெயப் புஸ்தகத்தில் 150 சங்கீதங்கள் உள்ளன. இவை 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிப்புக்குக் காரணம் தெரியவில்லை. மோசே எழுதிய பஞ்சாகமத்தில் 5 புஸ்தகங்கள் உண்டு. அதுபோல சங்கீத புஸ்தகத்திலும் 5 பிரிவு வேண்டுமென்று எஸ்றா நினைத்து, சங்கீதங்களை ஐந்து பிரிவுகளாகப் பிரித்திருக்கலாம்.

சங்கீத புஸ்தகத்தின் புள்ளியியல் விபரம்

1. வேதாகமத்தில் 19-ஆவது புஸ்தகம்

2. மொத்த சங்கீதங்கள் - 150

3. மொத்த வசனங்கள் 2461

4. நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் - 160

5. நிறைவேறய வேண்டிய தீர்க்கதரிசனங்கள் - 274

6. வரலாற்றைக் குறிக்கும் வசனங்கள் - 2027

7. கேள்விகள் - 164

8. கட்டளைகள் - 413

9. தேவனுடைய கிரியைகள் - 338

10. பொருத்தனைகள் - 124

11. துதியின் வாக்கியங்கள் - 174

12. மனக்குறையை அறிவித்தல் - 118

13. யூதர்களைப் பற்றிய சத்தியங்கள் - 72

14. தேவனைப் பற்றிய சத்தியங்கள் - 865

15. தேவனுடைய வார்த்தையைப் பற்றிய காரியங்கள் - 235

16. சாட்சிகள் - 182

17. வாக்குத்தத்தங்கள் - 97

18. மேசியாவைப்பற்றிய சத்தியங்கள் - 128

19. ஆசீர்வாதங்கள் - 281

20. சங்கீதக்காரர்களைப் பற்றிய குறிப்புக்கள் - 190

21. நீதியின் கிரியைகள் - 78

22. துன்மார்க்கரின் கிரியைகள் - 101

23. பாவங்கள் - 233

24. விண்ணப்பங்கள் - 582

25. விண்ணப்பத்திற்கான காரணங்கள் -187

சங்கீதங்களைப் பிரிக்கும் முறை

சங்கீத புஸ்தகத்தில் மொத்தம் 150 சங்கீதங்கள் உள்ளன. இவற்றை நான்கு அடிப்படைகளில் பிரிக்கலாம். அவையாவன:

    1. முதலாவது பிரிவு - தலைப்புகளின் அடிப்படையில் பிரிக்கும் முறை

    2. இரண்டாவது பிரிவு - பொருள் அடிப்படையில் பிரிக்கும் முறை

    3. மூன்றாவது பிரிவு - ஆசிரியரின் அடிப்படையில் பிரிக்கும் முறை

    4. நான்காவது பிரிவு - பஞ்சாகம அடிப்படையில் பிரிக்கும் முறை

முதலாவது பிரிவு - தலைப்புகளின் அடிப்படையில் பிரிக்கும் முறை

சங்கீத புஸ்தகத்திலுள்ள 150 சங்கீதங்களையும் தலைப்புகளின் அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 16 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

    1. நீதிமானின் சங்கீதங்கள் = 9 (சங்கீதங்கள் 1, 15, 84, 91, 92, 101, 112, 128, 131)

    2. மோசியாவைப்பற்றிய சங்கீதங்கள் = 19 (சங்கீதங்கள் 2, 8, 16, 21, 23, 40, 41, 45-48, 68, 69, 72, 89, 102, 110, 118) 

    3. நெருக்கத்தின் ஜெபங்கள் = 20 (சங்கீதங்கள் 3, 4, 6, 12, 13, 17, 25, 27, 31, 38, 43, 56, 57, 70, 80, 109, 120, 123, 130, 143) 

    4. நியாயத்தீர்ப்பின் சங்கீதம் = 1 (சங்கீதம் 50)

    5. நியாயத்தீர்ப்புக்காக ஜெபங்கள் = 11 (சங்கீதங்கள் 5, 7, 28, 35, 58, 59, 79, 82, 83, 94, 140)

    6. துதியின் சங்கீதங்கள் = 24 (சங்கீதங்கள் 29, 65, 66, 75, 95-100, 103-105, 107, 117, 134, 136, 145-150) 

    7. துதித்து ஜெபிக்கும் சங்கீதங்கள் = 11 (சங்கீதங்கள் 9, 19, 30, 33, 64, 67, 71, 86, 106, 138, 144) 

    8. நம்பிக்கையின் சங்கீதங்கள் = 6 (சங்கீதங்கள் 11, 20, 61, 63, 125, 127)

    9. துன்மார்க்கனின் சங்கீதங்கள் = 2 (சங்கீதங்கள் 10, 36) 

    10. மீட்பின் சங்கீதங்கள் = 4 (சங்கீதங்கள் 18, 34, 124, 126)

    11. தேவனுடைய சங்கீதங்கள் = 8 (சங்கீதங்கள் 24, 93, 111, 113-115,  121, 139) 

    12. ஜெபமும் சாட்சியும் சங்கீதங்கள் = 6 (சங்கீதங்கள் 26, 39, 116, 129, 137, 142)  

    13. போதக சங்கீதங்கள் = 20 (சங்கீதங்கள் 14, 32, 37, 42, 44, 49, 52-55, 60,73, 74, 76-78, 81, 88, 108, 133)

    14. ஜெப சங்கீதங்கள் = 4 (சங்கீதங்கள் 51, 85, 90, 141) 

    15. சீயோனின் சங்கீதங்கள் = 3 (சங்கீதங்கள் 87, 122, 132) 

    16. தேவனுடைய வார்த்தையின் சங்கீதம் = 1 (சங்கீதம் 119) 

இரண்டாவது பிரிவு - பொருள் அடிப்படையில் பிரிக்கும் முறை

சங்கீதபுஸ்தகத்திலுள்ள 150 சங்கீதங்களையும் ஏற்கனவே பிரித்தது போல, பொருள் அடிப்படையில் கீழ்க்கண்ட 15 பிரிவுகளாகவும் பிரிக்கலாம். 

    1. போதக சங்கீதங்கள் = 27 (சங்கீதங்கள் 1, 10, 12, 14, 15, 19, 36, 37, 39, 48, 49, 52, 53, 73, 75-77, 82, 87, 90, 112, 115, 119, 122, 128, 133, 139)

    2. வழிபாட்டு சங்கீதங்கள் = 9 (சங்கீதங்கள் 8, 29, 47, 50, 67, 93, 95, 116, 134)

    3. துதித்து ஸ்தோத்தரிக்கும் சங்கீதங்கள் = 33 (சங்கீதங்கள் 18, 21, 22, 28, 30-34, 40, 66, 68, 92, 97, 98, 100, 101, 103, 104, 108, 111, 113, 117, 124, 126, 136, 138, 145-150) 

    4. மனம் வருந்தி மன்னிப்புக்கோரும் சங்கீதங்கள் = 8 (சங்கீதங்கள் 6, 13, 32, 38, 51, 102, 130, 143)

    5. ஜெப சங்கீதங்கள் = 26 (சங்கீதங்கள் 13, 17, 20, 25, 28, 35, 40, 43, 44, 54-59, 64, 70, 71, 86, 88, 123, 140-144) 

    6. நம்பிக்கையின் சங்கீதங்கள் = 18 (சங்கீதங்கள் 3, 4,7, 11, 16,  23, 27, 37, 42, 46, 61, 62, 91, 118, 121, 125, 127, 130) 

    7. சாபமிடும் சங்கீதங்கள் = 6 (சங்கீதங்கள் 35, 58, 69, 83, 109, 129)

    8. வரலாற்று சங்கீதங்கள் = 16 (சங்கீதங்கள் 40, 42, 43, 70, 78, 81, 102, 104-107, 114, 124, 126, 129, 132) 

    9. தேவாலய சங்கீதங்கள் = 29 (சங்கீதங்கள் 4, 11, 15, 19, 23, 26, 27, 30, 33, 44-47, 49, 50, 65, 67, 74, 76, 79, 81, 82, 85, 92, 95, 100, 118, 132, 136)

    10. யாத்திரிகரின் சங்கீதங்கள் = 10 (சங்கீதங்கள் 121-123, 125, 127, 128, 130, 131, 133, 134) 

    11. சிறுதொலைவுகள் அல்லது யாத்திரிகரின் சங்கீதங்கள் = 15 (சங்கீதங்கள் 120-134)

    12. புதிர்வகை சங்கீதங்கள் = 9 (சங்கீதங்கள் 9, 10, 25, 34, 37, 111, 112, 119, 145)

    13. ராஜரீக சங்கீதங்கள் = 8 (சங்கீதங்கள் 8, 19-21, 24, 29, 61, 101)

    14. மனக்குறையை அறிவித்துப் புலம்பும் சங்கீதங்கள் = 8 (சங்கீதங்கள் 31, 41, 60, 74, 79, 102, 120, 137) 

    15. அல்லேலூயா சங்கீதங்கள் = 22 (சங்கீதங்கள் 104-106, 110-114, 116-118, 134, 135, 145-150)

மூன்றாவது பிரிவு - ஆசிரியரின் அடிப்படையில் பிரிக்கும் முறை

சங்கீத புஸ்தகத்திலுள்ள 150 சங்கீதங்களையும் இவற்றை எழுதிய ஆசிரியரிகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட 9 பிரிவுகளாகப் பிரிக்கலாம்

     1. தாவீது = 75 (சங்கீதங்கள் 3-32, 34-41, 51-65, 68-70, 72, 86, 101, 103, 108-110, 122, 124, 131, 133, 138-145)

    2. ஆராப் = 12 (சங்கீதங்கள் 50, 73-83) 

    3. கோராகின் புத்திரர் = 10 (சங்கீதங்கள் 42, 44-49, 84, 85, 87)

    4. ஏமான் = 1 (சங்கீதம் 88)

    5. சாலொமோன் = 2(சங்கீதங்கள் 72, 127)

    6. மோசே = 1 (சங்கீதம் 90)

    7. ஏத்தான் = 1 (சங்கீதம் 89) 

    8. இயற்றியவரின் பெயரில்லாமல் தலைப்பு மட்டும் = 17 (சங்கீதங்கள் 66, 67, 92, 98, 100, 102, 120-123, 125, 126, 128-130, 132, 134, 135) 

    9. இயற்றியவரின் பெயரோ அல்லது தலைப்போ அற்றவை = 33 (சங்கீதங்கள் 1, 2, 10, 33, 43, 71, 91, 93-97, 99, 104-107, 111-119, 136, 137, 146-150)

நான்காவது பிரிவு - பஞ்சாகம அடிப்படையில் பிரிக்கும் முறை

சங்கீத புஸ்கத்திலுள்ள 150 சங்கீதங்களையும், எபிரெய மொழியில் ஐந்து பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். மோசே எழுதிய பஞ்சாகமம் போன்று சங்கீத புஸ்தகத்தையும் ஐந்து பிரிவுகளாகப் பிரித்திருக்கலாம். அவையாவன:

    1. ஆதியாகம சங்கீதம் (1முதல் 41 வரையுள்ள சங்கீதங்கள்) = 41

    2. யாத்திராகம சங்கீதம் (42முதல் 72 வரையுள்ள சங்கீதங்கள்) = 31

    3. லேவியராகம சங்கீதம் (73 முதல் 89 வரையுள்ள சங்கீதங்கள்) = 17

    4. எண்ணாகம சங்கீதம் (90 முதல் 106 வரையுள்ள சங்கீதங்கள்) = 17

    5. உபாகம சங்கீதம் (107 முதல் 150 வரையுள்ள சங்கீதங்கள்) = 44

1. ஆதியாகம சங்கீதம் (1-41)

இந்த சங்கீதங்களில் மையக் கருத்தாயிருப்பவன் மனுஷனே. துவக்கம் முதல் முடிவு வரையிலும் மனுஷனுக்குத் தேவைப்படும். தெய்வீக ஆலோசனைகள் இந்த சங்கீதங்களில் இடம் பெற்றுள்ளன. 

ஆதியாகமத்தைப் போன்றே, ஆதியாகம சங்கீதமும் மனுக்குலத்தின் மீது தேவனுடைய ஆசீர்வாதத்துடன் துவங்குகிறது. மனுஷன் தேவனுக்கு கீழ்ப்படிந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டால் ஆசீர்வாதம் பெறுவான். (ஆதியாகமம் 1-2 ஒப்பிடவும் சங்கீதம் 1) 

இதைத் தொடர்ந்து மனுஷனுடைய வீழ்ச்சியும் கீழ்ப்படியாமையும் இடம் பெறுகிறது (ஆதியாகமம் 3-11 ஒப்பிடவும் சங்கீதம் 2-15)

கிறிஸ்துவின் மூலமாக மனுக்குலத்திற்கு கிடைக்கக்கூடிய மீட்பின் நம்பிக்கையுடன் ஆதியாகமும் ஆதியாகம சங்கீதமும் முடிவு பெறுகிறது. (ஆதியாகமம் 12-50 ஒப்பிடவும் சங்கீதம் 16-41)

ஆதியாகம சங்கீதத்தின் கடைசி வசனம் சங்கீதம் 41:13 ஆமென், ஆமென் என்று கூறி முடிவு பெறுகிறது. 

2. யாத்திராகம சங்கீதம் (42-72)

இந்த சங்கீதங்களின் மையக் கருத்து இஸ்ரவேல் தேசம்.  இஸ்ரவே-ன் அழிவு, மீட்பர், மீட்பு ஆகியவை இவற்றில் இடம் பெற்றுள்ளன. 

யாத்திராகமம் போன்றே, யாத்திராகம சங்கீதமும் அழிவினாலும், மனமுறிவினாலும் ஏற்படும் கதறுதலோடு ஆரம்பமாகிறது. (யாத்திராகமம் 1-3 ஒப்பிடவும் சங்கீதம் 41-42) 

தேவனுடைய வல்லமையான கிரியைகளும் மீட்பும் இதைத் தொடர்ந்து வருகிறது. (யாத்திராகமம் 4-15 ஒப்பிடவும் சங்கீதம் 44-50)

இதைத் தொடர்வது இஸ்ரவேலரின் பின்மாற்றமும், எதிரிகளிடம் தோல்வியுறுவதும், அதனால் ஏற்படும் உபத்திரவங்களும் ஆகும். (யாத்திராகமம் 16-27 ஒப்பிடவும் சங்கீதம் 51-55)

இஸ்ரவேலுக்காக தேவன் நடப்பிக்கும் மீட்பின் கிரியை, அவர்கள் மீது தேவனுடைய ஆளுகை ஆகியவற்றுடன் இந்தப் புஸ்தகம் முடிவு பெறுகிறது. (யாத்திராகமம் 19-40 ஒப்பிடவும் சங்கீதம் 56-72) 

யாத்திராகமம் சங்கீதம் ஆமென், ஆமென் என்று கூறி      (சங்கீதம் 72:19) நிறைவு பெறுகிறது. 

3. லேவியராகம சங்கீதம் (73-89)

இந்த சங்கீத புஸ்தகத்தின் மையக்கருத்து தேவனுடைய பரிசுத்தஸ்தலமும், தேவனையும் மனுஷனையும் குறித்த இதன் நோக்கமும். 

மனுஷனுக்கு தேவன் வெளிப்படுத்தும் பரிசுத்த ஸ்தலம், தேவனோடு ஐக்கியமாக இருப்பதன் அவசியம் ஆகியவற்றை விளக்கி இப்புஸ்தகம் ஆரம்பமாகிறது. (லேவியராகமம் 1-7 ஒப்பிடவும் சங்கீதம் 73-83) 

தேவனுக்கும் பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு, மீட்கப்பட்டோர் தேவனுக்கு முன்பாக நடந்து கொள்ளவேண்டிய விதம், தேவனோடு வைத்திருக்க வேண்டிய ஐக்கியம் ஆகியவற்றை இந்த சங்கீத புஸ்தகம் தொடர்ந்து விவரிக்கிறது. (லேவியராகமம் 8-27 ஒப்பிடவும் சங்கீதம் 84-49).

இந்தப்புஸ்தகத்திலுள்ள ஒவ்வொரு சங்கீதமும் தேவனுடைய பரிசுத்தஸ்தலத்தைப் பற்றியும், இத்துடன் மனுஷனுக்கு இருக்கவேண்டிய தொடர்பு பற்றியும் விவரிப்பது, இப்புஸ்தகத்தின் தனிச் சிறப்பு ஆகும். 

மற்ற சங்கீத புஸ்தகங்களைப் போலவே, லேவியராகம சங்கீதபுஸ்தகமும் ஆமென், ஆமென் (சங்கீதம் 89:52) என்று கூறி நிறைவு பெறுகிறது. 

4. எண்ணாகம சங்கீதம் (90-106)

இந்த சங்கீத புஸ்தகத்தின் மையக் கருத்து பூமியிலுள்ள இஸ்ரவேலரும் புறஜாதி ஜனங்களும். மனுக்குலத்திற்கு தேவனைத் தவிர வேறு நம்பிக்கை இல்லை. மனுஷன் இந்த உலகத்தில் ஜீவிக்கும்போது நல்ல ஜீவியத்தையும் நல்ல உலகத்தையும் நாடி தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இஸ்ரவேலரின் பிரயாணம் வனாந்தரத்தில் ஆரம்பமாயிற்று. இதில் அவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டார்கள். (எண்ணாகமம் 1-8 ஒப்பிடவும் சங்கீதம் 90) 

இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவனுடைய பிரமாணமும் வருங்காலத்திற்குரிய கட்டளைகளும் கொடுக்கப்பட்டன. (எண்ணாகமம் 9-14 ஒப்பிடவும் சங்கீதம் 91-94). இஸ்ரவேலர்கள் இளைப்பாறுதலை எதிர்பார்த்தார்கள் (எண்ணாகமம் 15-26 ஒப்பிடவும் சங்கீதம் 95-100) 

இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு ஆதாரங்கள் (எண்ணாகமம் 27:36 ஒப்பிடவும் சங்கீதம் 101-106). 

எண்ணாகம சங்கீதபுஸ்தகம் ஆமென், அல்லேலூயா என்று கூறி நிறைவு பெறுகிறது (சங்கீதம் 106:48). 

5. உபாகம சங்கீதம் (107-150)

இந்தப் புஸ்தகத்தின் மையக்கருத்து தேவனும் அவருடைய வார்த்தையும் ஆகும். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால் மனுக்குலத்திற்கும், இஸ்ரவேலுக்கும், தேவனுடைய வாசஸ்தலத்திற்கும், பூமிக்கும், முழு மனுக்குலத்திற்கும் எல்லா ஆசீர்வாதங்களும் உண்டு (உபாகமம் 8:3).

கீழ்ப்படியாமையினால் மனுஷனுக்கு வருத்தம் வந்தது. இஸ்ரவேல் சிதறிப் போயிற்று. தேவாலயம் அழிந்து போயிற்று. பூமியில் பாடுகள் உண்டாயிற்று. தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதினால் மட்டுமே இந்த சாபங்களை அகற்றமுடியும். 

இந்த சங்கீத புஸ்தகத்தில் உட்பிரிவு எதுவும் இல்லை. தேவனுடைய வார்த்தையைப் போல, இந்தப் புஸ்தகம் பரிபூரணமாக முழுமையானது. 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.