ஆமோஸ் புத்தகம் ஒரு கண்ணோட்டம்




ஆமோஸ் புத்தகம் ஒரு கண்ணோட்டம்

முன்னுரை 

ஆமோஸ் கிராமப்பகுதியில் விவசாய வேலை செய்கிறவர். அவர் ஒரு மேய்ப்பர்.  ஆமோஸ் என்னும் பெயருக்கு  ""பாரம்'' என்று பொருள் சொல்லலாம். ஆமோஸ் தெளிவாகப் பேசமாட்டார் என்றும், அவர் கொன்னை வாயையுடையவர் என்றும் யூதருடைய  பாரம்பரியம் சொல்லுகிறது. ஆமோஸ்  கொன்னை வாயோடும், தெற்று நாவோடும்  பேசினாலும், அவருடைய வார்த்தையில் உறுதியிருந்தது. கர்த்தர் தனக்கு கொடுத்த வார்த்தைகளை, ஆமோஸ் தெளிவாகவும், உறுதியாகவும், நிச்சயமாகவும் பேசினார்.  ஆமோஸ் சொன்ன வார்த்தைகள் கர்த்தருடைய  பாரமாயிருந்தது. 

ஆமோஸ் யூதாதேசத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் அவர் இஸ்ரவேலுக்கு விரோதமாக அதிகமாய்த் தீர்க்கதரிசனம் சொன்னார்.  வடக்கு இஸ்ரவேல் தேசத்திலுள்ள பெத்தேலில், ஆமோஸ் தீர்க்கதரிசனம் சொன்னார்       (ஆமோ 7:13).  

ஆமோஸ் ஒளிவு மறைவில்லாமல், எதையும் தெளிவாகப் பேசக்கூடியவர். உள்ளதை உள்ளது என்றும், இல்லாததை இல்லாதது என்றும் பேசக்கூடியவர்.  இவருடைய காலத்தில்,  பெத்தேலில் அமத்சியா  என்பவர்  ஆசாரியராய் ஊழியம் செய்தார். ஆமோசுக்கும் அமத்சியாவுக்கும் கருத்து வேறுபாடு உண்டாயிற்று. ஆமோஸ் அமத்சியாவோடு  விவாதம் பண்ணுவதற்கு பயன்படுத்திய வார்த்தைகள், ஆமோசின் மனஉறுதியையும்,  அவருடைய தெளிந்த சிந்தனையையும் வெளிப்படுத்துகிறது. 

இஸ்ரவேல் புத்திரருடைய பாவங்களை  ஆமோஸ் கடிந்து சொன்னார்.  கர்த்தர் தனக்கு கொடுத்த வார்த்தைகளை  ஆமோஸ் பயப்படாமல்,  மறைக்காமல்,  தெளிவாகச் சொன்னார். ஜனங்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்ப வேண்டும். அவர்களுடைய இருதயங்கள் புதுப்பிக்கப்படவேண்டும்.  ஆமோஸ் இந்த இரண்டு சத்தியத்தையும்  இஸ்ரவேல் புத்திரர் மத்தியில்  வலியுறுத்தி பேசினார்.  மனந்திரும்புவதற்கு  தேவையான ஆலோசனைகளையும் அவர்களுக்கு  தெளிவாக எடுத்துச் சொன்னார். 

இஸ்ரவேல் தேசத்திற்கு, அவர்களுடைய அண்டை தேசத்தார் சத்துருக்களாயிருந்தார்கள். அவர்கள்மீது  தேவனுடைய  நியாயத்தீர்ப்பும்,  கோபமும் வரும் என்பதே  ஆமோசின் ஆரம்பச் செய்தி (ஆமோ 1,2 - ஆகிய அதிகாரங்கள்).

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்ப வேண்டுமென்று ஆமோஸ் சொல்லுகிறார். அவர்கள்  தங்களுடைய பாவங்களைக் குறித்து கர்த்தருக்கு கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.  இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரைவிட்டு விலகி, விக்கிரகங்களைப் பின்பற்றிப்போகிறார்கள்.  அவர்களுடைய விக்கிரகாராதனையின்  நிமித்தமாக,   கர்த்தர் அவர்களை நியாயந்தீர்ப்பார்.  கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை தண்டித்த போதிலும்,  அவர்கள்  தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பாமல், கடின இருதயத்தோடிருக்கிறார்கள்             (ஆமோ 3,4 - ஆகிய அதிகாரங்கள்). 

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்ப வேண்டுமென்று ஆமோஸ் சொல்லுகிறார் (ஆமோ 5 - ஆவது அதிகாரம்). இஸ்ரவேல் புத்திரருக்கு பாதுகாப்புக்கள் இருந்தாலும், அவர்கள்மீது அழிவு வரும் என்று ஆமோஸ் முன்னறிவிக்கிறார்  (ஆமோ 6-ஆவது அதிகாரம்) அவர்கள்மீது வரும் ஒரு சில  நியாயத்தீர்ப்புக்களை ஆமோஸ் தெளிவுபடுத்துகிறார் (ஆமோ 7- ஆவது அதிகாரம்). விசேஷமாக அமத்சியா மீது  தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும்.  

ஆமோஸ் இஸ்ரவேல் புத்திரரை, அவர்களுடைய பாவங்களினிமித்தமாய்,  தொடர்ந்து  கடிந்துகொள்கிறார். அவர்களுக்கு ஆபத்து வரும் என்று எச்சரிக்கிறார் (ஆமோ  8,9 - ஆகிய அதிகாரங்கள்). ஆமோஸ் தன்னுடைய ஆகமத்தின் முடிவுரையில்  மேசியாவின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்  என்று தீர்க்கதரிசனமாய்ச்  சொல்லுகிறார். தேவனுடைய  ஆவிக்குரிய இஸ்ரவேலுக்கு  நித்திய சந்தோஷமுண்டாகும். 

ஆமோஸ் தீர்க்கதரிசியின் புஸ்தகம் பாலஸ்தீன தேசத்தில் கி.மு. 824-810 ஆவது வருஷங்களில் எழுதப்பட்டது. இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் ஆமோஸ் தீர்க்கதரிசி ஆவார் (ஆமோ 1:1).   

மையக்கருத்து

1. யூதர்கள்மீதும், புறஜாதியார் மீதும் அவர்களுடைய பாவங்களின் நிமித்தம், கர்த்தருக்கு விரோதமாக அவர்கள் செய்த கலகங்களின் நிமித்தம் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும்.

2. தேவனுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் இடையேயுள்ள பிரச்சனைகள்.

3. இஸ்ரவேல் நியாயத்தீர்ப்பைத் தவிர்த்துக் கொள்ள வேண்டிய விதம்.

4. மேசியாவின்கீழ் இஸ்ரவேல் தேசம் இறுதியாக மறுபடியும் ஸ்தாபிக்கப்படுவது.

ஆமோஸ் தீர்க்கதரிசியின் புஸ்தகம் எழுதப்பட்டதற்கான நோக்கம் வருமாறு:

1. தேவன் பாவத்தைக் குறித்து என்ன நினைக்கிறார் என்பதை விளக்குவது.

2. யூதராக இருந்தாலும், புறஜாதியாராக இருந்தாலும் பாவம் செய்த எல்லோர்மீதும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும் என்பதை அறிவிப்பது.

3. ஒவ்வொரு தேசத்தின்மீதும் நியாயத்தீர்ப்பு ஏன் வருகிறது என்பதைக் கவனமாக விளக்குவது.

4. இஸ்ரவேல் தேசத்தார் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்ற போதிலும் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து அவர்களும் தப்பிக்க முடியாது என்பதை விளக்குவது.

5. இஸ்ரவேல் தேசம் கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப்போன நிலைமையை விளக்குவதும், அவர்களுக்கு எதிராகத் தேவனுடைய வழக்கை விவரிப்பது.

6. இஸ்ரவேலின் எல்லாக் கோத்திரத்தாரும் தங்களுடைய வழிகளை மாற்றிக் கொள்ளவில்லையென்றால், அவர்களுக்கு நிச்சயமான அழிவு உண்டாகும் என்பதை அறிவிப்பது. (ஆமோ 2:4-9:10).

7. அநேகம் முறை எச்சரிக்கப்பட்ட பின்பும், இஸ்ரவேல் பாவத்திலும், கலகத்திலும் தொடர்கிறது. ஆகையினால் கர்த்தர் தம்முடைய வார்த்தையின் பிரகாரம் தேசத்தை அழிப்பது அவசியமாக இருக்கிறது என்பதை அறிவிப்பது. 

8. ஆமோஸ் இந்தப் புஸ்தகத்தின் முடிவில் இஸ்ரவேல் புத்திரருக்கு உற்சாகமான வார்த்தைகளைக்கூறி முடிக்கிறார். இஸ்ரவேல்  புத்திரர் முழுவதுமாக மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்பட்டு, ஒரு தேசமாக மறுபடியும் ஸ்தாபிக்கப் படுவார்கள்.

9. இஸ்ரவேல் தேசம் மேசியாவின்கீழ் ஆசீர்வாதமாக இருக்கும்.           (ஆமோ 9:11-15).  

பொருளடக்கம்

 ஒ. ஆறு புறஜாதி வல்லமைகளுக்கு எதிராக தீர்க்கதரிசனங்கள்  

1. தலைப்பு, ஆசிரியர், வரலாற்றுப் பின்னணி (1:1)

2. நியாயத்தீர்ப்பின் அறிவிப்பு (1:2)

3. தமஸ்குவிற்கு எதிராக (1:3-5)

4. பெலிஸ்தியாவிற்கு எதிராக (1:6-8)

5. தீருவிற்கு எதிராக (1:9-10)

6. ஏதோமிற்கு எதிராக (1:11-12)

7. அம்மோனுக்கு எதிராக (1:13-15)

8. மோவாபிற்கு எதிராக (2:1-3)

 ஒஒ. யூதாவிற்கும் இஸ்ரவேலிற்கும் எதிராக தீர்க்கதரிசனங்கள்  

1. யூதாவிற்கு எதிராக பாபிலோன் (2:4-5)

2. இஸ்ரவேலுக்கு எதிராக அசீரியா (2:6-16)

 ஒஒஒ. முரண்பாடு - தேவனும் இஸ்ரவேலின் முழு குடும்பமும்  

1. கேட்பதற்கும் பதில் கூறுவதற்கும் அழைப்பு (3:1-8)

2. இஸ்ரவேலின் பாவங்களைக் காணுமாறு அழைப்பு (3:9-10)

3. அசீரியாவிடம் சிறையிருப்பு (3:11-15)

4. இஸ்ரவேலின் பாவங்களும் நியாயத்தீர்ப்பும் (4:1-3)

5. பெத்தேலில் இஸ்ரவேலின் மாய்மாலம் (4:4-5)

6. தேவனுடைய ஐந்து நியாயத்தீர்ப்புக்கள் இஸ்ரவேலை உடைப்பதற்குப் பதிலாக கடினப்படுத்திற்று (4:6-11)

7. தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு (4:12-13)

 ஒய. புலம்பல்கள், நியாயத்தீர்ப்புக்கள், புத்திமதிகள்  

1. புலம்பல் - இஸ்ரவேலின் அழிவு 90 சதவீதம் இருக்கும் (5:1-3)

2. நியாயத்தீர்ப்பைத் தவிர்ப்பதற்கு மூன்று அம்ச புத்திமதி (5:4-9)

3. பத்து அம்ச பாவங்களும் நியாயத்தீர்ப்பும் (5:10-13)

4. வரப்போகிற நியாயத்தீர்ப்பைத் தவிர்ப்பதற்கு நான்கு அம்ச புத்திமதி (5:14-15)

5. ஐந்து அம்ச புலம்பல் - காரணம் (5:16-17)

6. கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ (5:18-20)

7. ஏழு அம்ச மாய்மாலம் (5:21-24)

8. விக்கிரகாராதனையும் நியாயத்தீர்ப்பும் (5:25-27)

9. சீயோனிலே நிர்விசாரமாய் இருக்கிறவர்களுக்கும் மனுஷரை நம்புகிறவர்களுக்கும் ஐயோ (6:1-6)

10. அசீரியாவிடம் சிறையிருப்பு (6:7-14)

 ய. அடையாளங்கள் - தீர்க்கதரிசனங்கள்  

1. வெட்டுக்கிளிகள் - அழிவு (7:1-3)

2. அக்கினி - அழிவு (7:4-6)

3. தூக்குநூல் - இனிமேல் இரக்கமில்லை (7:7-9)

4. இராஜாவிற்கு முன்பாக அமத்சியா ஆமோசின்மீது குற்றம் சாட்டுகிறான் (7:10-13)

  5. அமத்சியாவிற்கு ஆமோசின் பதிலுரை (7:14-17)

6. பழுத்த பழங்களுள்ள கூடை - இஸ்ரவேல் விரைவில் அழிந்து போகும் (8:1-3)

7. இஸ்ரவேலின் பத்து பாவங்கள் (8:4-6)

8. நியாயத்தீர்ப்பும் அலைந்து திரிவதும் (8:7-14)

9. போதிகையை அடி - முழுமையான அழிவு (9:1-4)

10. சிதறிப்போவது பற்றிய கடைசி தீர்க்கதரிசனம் (9:5-10)

11. மேசியாவின்கீழ் தாவீதின் இராஜ்ஜியம் மீட்கப்படும்    (9:11-12)

12. இஸ்ரவேலின் வருங்கால மீட்பு (9:13-15)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.