யோவேல் புத்தகம் ஒரு கண்ணோட்டம்
முன்னுரை
யோவேல் தீர்க்கதரிசி எந்தக்காலத்தில் தீர்க்கதரிசனம் சொன்னார் என்பது நிச்சயமாய்த் தெரியவில்லை. ஆமோஸ் தீர்க்கதரிசனம் சொன்ன அதே காலத்தில், யோவேலும் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க வேண்டுமென்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஓசியா, ஒபதியா ஆகிய தீர்க்கதரிசிகளும் இதே காலத்தில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய இரண்டாம் எரொபெயாமின் காலத்தில் ஆமோஸ் தீர்க்கதரிசனம் சொன்னார். ""அப்பொழுது பெத்தே-ல் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவே-ன் ராஜாவாகிய எரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது'' (ஆமோ 7:10).
கர்த்தர் தம்முடைய ஜனத்தாரிடம் பல தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். தீர்க்கதரிசிகள்ஒருவரையொருவர் பெலப்படுத்திக்கொண்டு, கர்த்தருடைய வார்த்தையை உண்மையாய் அறிவிக்கிறார்கள்.
யூதா தேசத்தின்மீது ஏராளமான வெட்டுக்கிளிகள் பறந்து வரும். அவை தேசத்தை அழித்துப்போடும் (யோவே 1,2 ஆகிய அதிகாரங்கள்). ஜனங்கள் மனந்திரும்பவேண்டுமென்று அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது (யோவே 2-ஆவது அதிகாரம்).
ஜனங்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பும்போது, கர்த்தர் அவர்களுக்கு கிருபைகளையும் இரக்கங்களையும் மறுபடியும் கொடுப்பதாக வாக்குப்பண்ணுகிறார் (யோவே 2-ஆவது அதிகாரம்). கடைசி நாட்களிலே கர்த்தர் மாம்சமான யாவர்மேலும் தம்முடைய ஆவியை ஊற்றுவதாக வாக்குப்பண்ணுகிறார்.
கர்த்தருடைய ஜனத்தை சத்துருக்கள் நெருக்குகிறார்கள். ஏற்ற காலத்தில் கர்த்தர் தம்முடைய சத்துருக்களின் அக்கிரமங்களை விசாரிக்கிறார் (யோவே 3-ஆவது அதிகாரம்) சுவிசேஷ எருசலேமின் மகிமையான காரியங்களைப்பற்றிய விவரம்.
யோவேலின் புஸ்தகம் கி.மு. 795-755 ஆவது வருஷத்தில் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது. இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் யோவேல் தீர்க்கதரிசி ஆவார். (யோவே 1:1).
மையக்கருத்து
1. இஸ்ரவேல் தேசம் பாபிலோன் தேசத்தினால் உடனடியாக அழிவதும், பிற்காலத்தில் அழிவதும்.
2. வருங்கால அந்திக்கிறிஸ்து
3. அர்மெகதோன் யுத்தம்.
4. கர்த்தருடைய நாளில் இஸ்ரவேல் தேசத்தார் கூட்டிச் சேர்க்கப்படுவது.
யோவேல், ஏசாயா, எசேக்கியேல், சகரியா ஆகியோர் மாம்சமான யாவர்மேலும் வருங்காலத்தில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப் படுவதைப் பற்றி முன்னறிவித்திருக்கிறார்கள். (யோவே 2:28-32; ஏசா 32:15; ஏசா 44:3; எசே 36:26-27; எசே 37:14; எசே 39:29; சக 12:10-13:1).
யோவேல் தீர்க்கதரிசியின் புஸ்தகம் எழுதப்பட்டதற்கான நோக்கம் வருமாறு:
1. இஸ்ரவேலின் பின்மாற்றத்தின் நிமித்தமாக அவர்கள் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்பதை அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காக.
2. கர்த்தரிடத்தில் மனந்திருந்தி வந்தால், கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், தேவனுடைய ஆசீர்வாதங்கள் இஸ்ரவேலுக்குக் கிடைக்கும் என்பதை உறுதி பண்ணுவதற்காக.
3. வருங்கால ஆசீர்வாதங்களை அறிவிப்பதற்காக.
4. மேசியாவின்கீழ் இஸ்ரவேல் புத்திரர் நித்தியமாக கூட்டிச் சேர்க்கப்படுவதை மறுபடியும் அறிவிப்பதற்காக.
பொருளடக்கம்
ஒ. பாபிலோனினால் யூதாவின் உடனடி அழிவு
1. தலைப்பு, ஆசிரியர், கேட்பதற்கு அழைப்பு (1:1-3)
2. அழிப்பவர்கள் - அடையாளம் (1:4)
3. விழிக்குமாறு அழைப்பு - யூதாவின்மீது பாபிலோனிய படையெடுப்பு (1:5-7)
4. புலம்பல் - காரணம் (1:8-10)
5. அலறுதல் - காரணம் (1:11-12)
6. அலறுதலும் புலம்பலும் - காரணம் (1:13-14)
ஒஒ. கர்த்தருடைய நாள்
1. கர்த்தருடைய நாளில் அழிவு (1:15-20)
2. எச்சரிப்பின் சத்தமிட அழைப்பு (2:1)
3. அர்மகெதோனில் தேவனுடைய தெய்வீக சேனைகள் (2:2-11)
ஒஒஒ. இஸ்ரவேலின் வருங்கால மீட்பு
1. மனந்திரும்புவதற்கு அழைப்பு (2:12-17)
2. அப்பொழுது - ஆறு அம்ச மீட்பு (2:18-19)
3. அப்பொழுது - விரோதிகளின் அழிவு (2:20)
4. அப்பொழுது - தேசம், ஜனம் ஆகியவற்றின் பதினான்கு அம்ச மீட்பு (2:21-27)
5. அதற்குப்பின்பு எல்லா ஜனங்களுடைய ஐந்து அம்ச ஆவிக்குரிய மீட்பு (2:28-29)
6. கர்த்தருடைய நாளும் மேசியாவின் இரண்டாம் வருகைக்கு முந்திய அடையாளங்களும் (2:30-32)
ஒய. அர்மகெதோன் யுத்தம்
1. யூதாவும் எருசலேமும் மீட்கப்பட்டன (3:1)
2. சகல ஜாதியாரையும் கூட்டுதல் (3:2)
3. தேசங்கள்மீது நியாயத்தீர்ப்பிற்கான காரணங்கள் (3:3-8)
4. ஜனங்களைக் கூட்டுமாறும் யுத்தம் பண்ணுமாறும் கூறுவதன் பத்து அம்சங்கள் (3:9-12)
5. அந்திக்கிறிஸ்துவின் சேனையினுடைய பத்து அம்ச அழிவு (3:13-16)
ய. அர்மகெதோன் யுத்தத்திற்குப் பின்பு இஸ்ரவேலின் வருங்கால மீட்பு
1. கர்த்தர் சீயோனில் ஆளுகை செய்கிறார் (3:17)
2. இஸ்ரவேலின் பௌதீக ஆசீர்வாதங்கள் (3:18)
3. இஸ்ரவேல் தன் விரோதிகள்மீது பழிதீர்த்தது (3:19)
4. நித்திய ஜனமான யூதா (3:20-21)