எபேசியர் நிருபம் ஒரு கண்ணோட்டம்




எபேசியர்
முன்னுரை 

அப்போஸ்தலர் பவுல் எபேசியருக்கு எழுதின நிருபம், அந்தச் சபையாருக்கு மாத்திரம் எழுதப்பட்டதா அல்லது அக்காலத்திலுள்ள சபைகளெல்லாவற்றிலும் வாசிக்கும்படியாக, ஒரு  சுற்றறிக்கை நிருபமாக எழுதப்பட்டதா என்பது பற்றி வேதபண்டிதர்கள் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். இந்த நிருபத்தில் பவுல் சொல்லுகிற ஆலோசனைகளும் உபதேசங்களும், ஒரு குறிப்பிட்ட சபையாருக்கு என்று இல்லாமல், எல்லா சபையாருக்கும் பிரயோஜனமுள்ளதாகயிருக்கிறது. ஆவிக்குரிய  பிள்ளைகளெல்லோருக்கும் பவுல் சத்தியத்தைத் தெளிவாக உபதேசம் செய்கிறார். எல்லோருக்கும் ஆவிக்குரிய ஆலோசனைகளைச் சொல்லுகிறார். 

அப்போஸ்தலர் பவுல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும்போது, அவர் இந்த நிருபத்தை எழுதியிருக்கலாம் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.  அவருக்கு  உபத்திரவம் அதிகரித்தது. உபத்திரவம் அதிகரிக்கும்போது, அவருக்கு தேவகிருபையும் அவருக்கு  அதிகரித்தது. தேவனுடைய ஆறுதலை பவுல் அதிகமாகப் பெற்றுக்கொண்டார்.

எபேசியர்கள் சத்தியத்தில் நிலைத்திருக்கவேண்டும். சுவிசேஷத்தின் இரகசியத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.  இந்த நோக்கத்தோடுதான் பவுல் இந்த நிருபத்தை எழுதியிருக்கிறார்.  இந்த நிருபத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். முதலாவது பிரிவில், எபேசியருடைய ஆவிக்குரிய சிலாக்கியங்களைத் தெளிவுபடுத்துகிறார். எபேசியர்கள் இரட்சிக்கப்பட்டு தேவனோடு உடன்படிக்கையில் இருக்கிறார்கள். தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு சுதந்தரவாளிகளாக இருக்கிறார்கள்.  இந்தச் சத்தியத்தை எபேசியர் 1-3  ஆகிய மூன்று அதிகாரங்களில்  தெளிவாக எழுதுகிறார். இரண்டாவது பகுதியில் விசுவாசிகளின் ஆவிக்குரிய கடமைகளைத் தெளிவுபடுத்துகிறார்.

கி.பி. 64 ஆம் ஆண்டு பவுல் இந்த நிருபத்தை ரோமாபுரியிலிருந்து எழுதினார். கொலோசெயர், பிலேமோன் ஆகிய நிருபங்களோடு இந்த நிருபத்தையும் பவுல் தீகிக்கு மூலமாகக் கொடுத்து அனுப்பினார். பவுலின் நிருபங்களில் இந்த நிருபம் பொதுவான நிருபமாகும். 

  எபே 1:1 ஆவது வசனத்தில் “”எபேசுவிலே’’  என்னும் வார்த்தை உள்ளது. ஒருசில மூலபாஷைச் சுவடிகளில் இந்த வார்த்தை காணப்படவில்லை. இந்த இடத்தில் எந்த சபையின் பெயரையும் சேர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக ஒருவேளை “”எபேசுவிலே’’ என்னும் வார்த்தை அகற்றப்பட்டிருக்கலாம். கொலோசெயர் நிருபத்தில் லவோதிக்கேயருக்கு நிருபம் எழுதப்பட்டதற்கான குறிப்பு காணப்படுகிறது. (கொலோ 4:16)

பவுல்ரோமருக்கு எழுதின நிருபம் முதலாவது உபதேச நிருபமாகும். இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் விசுவாசிகளுடைய ஸ்தானத்தைக் குறித்து ரோமருக்கு எழுதின நிருபம் விளக்குகிறது. பவுல் எபேசியருக்கு எழுதின நிருபம் இரண்டாவது உபதேச நிருபமாகும். உன்னதங்களில் இயேசு கிறிஸ்துவோடு விசுவாசிகள் அமர்ந்திருப்பதைக் குறித்து இந்த நிருபம் விளக்குகிறது. சபை ஆராதனையின் ஒழுங்குமுறைகளை விவரிப்பதற்குப் பதிலாக சபையைப் பற்றிய உன்னத சத்தியங்களை இந்த நிருபம் விளக்குகிறது. 

பொருளடக்கம்
 ஒ.  முன்னுரை - ஆசிரியரும் வாழ்த்தும் (1:1-2)
 ஒஒ. கிருபையில் விசுவாசியின் ஸ்தானம் 

1. கிறிஸ்துவில் ஒன்பது ஆசீர்வாதங்கள் 

(1) ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதிக்கிறார் (1:3)
(2) கிறிஸ்துவுக்குள் நம்மை பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு தெரிந்து கொண்டார் (1:4)
(3) தமக்கு சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார் (1:5)
(4) நமக்கு தம்முடைய கிருபையின் மகிமையைத் தந்தருளினார் (1:6)
(5) கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது (1:7)
(6) சகல ஞானத்தோடும் புத்தியோடும் நம்மிடத்தில் பெருக பண்ணினார் (1:8)
(7) தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை நமக்கு அறிவித்தார் (1:9-10)
(8) கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம் (1:11-12)
(9) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைப் போடப்பட்டோம் (1:13-14)

2. ஆசீர்வாதத்திற்காக ஐந்து அம்ச ஜெபம் (1:15-19)
3. வல்லமையின் பத்து அம்ச மகத்துவம் (1:20-23)
4. சாத்தானிலும் பாவங்களிலும் நம்முடைய பழைய நிலைமை (2:1-3)
5. நித்திய மீட்பின் ஆதாரமும் நோக்கமும் (2:4-7)
6. மனுஷர் இரட்சிக்கப்படும் விதம் (2:8-10)
7. புறஜாதியாரின் பழைய நிலைமையின் ஏழு அம்சங்கள் (2:11-12)
8. கிறிஸ்து இயேசுவிற்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் புறஜாதியாரின் தற்போதைய நிலைமை (2:13)

 ஒஒஒ. சபை

1. யூதரும் புறஜாதியாரும் புதிய ஏற்பாட்டு சபையில் இருக்கிறார்கள் (2:14-22)
2. சபை - பவுலுக்கு விசேஷித்த வெளிப்பாடு (3:1-4)
3. சபையின் இரகசியம் முற்காலங்களில் மறைக்கப்பட்டிருந்தது இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (3:5-9)
4. தேவனுடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் தெரிய வருகிறது (3:10-12)
5. தேவனுடைய பரிபூரணமான ஆசீர்வாதங்களுக்காக பத்து அம்ச ஜெபம் (3:13-21)

 ஒய. விசுவாசிகள் நடக்க வேண்டிய விதம்

1. அழைப்பிற்கு பாத்திரவான்களாக அன்பிலும் ஒற்றுமையிலும் நடக்க வேண்டும் (4:1-3)
2. தேவனுடைய ஒற்றுமை (4:4-6)
3. தமது சரீரத்திற்கு கிறிஸ்துவின் வரங்கள் (4:7-11)
4. வரங்களின் நோக்கம் (4:12-16)
5. புறஜாதியார் நடக்கும் விதம் (4:17-19)
6. களைந்துபோட வேண்டியவை (4:20-22)
7. தரித்துக் கொள்ள வேண்டியவை (4:23-24)
8. கிறிஸ்தவருக்கு இருபது கட்டளைகள் (4:25-32)
9. தேவனைப் பின்பற்றுவதற்கு இரண்டு கட்டளைகள் (5:1-2)
10. பொதுவான ஆறு பாவங்கள் (5:3-4)
11. தேவனுடைய இராஜ்ஜியத்தின் சுதந்தரமடையாத ஐந்து பிரிவினர் (5:5-7)
12. கிறிஸ்தவருக்கு பதினைந்து கட்டளைகள் (5:8-21)

 ய. விசுவாசிகளின் குடும்ப வாழ்வு

1. மனைவிகளின் கடமைகள் (5:22-24)
2. புருஷர்களின் கடமைகள் (5:25-33)
3. பிள்ளைகளின் கடமைகள் (6:1-3)
4. பிதாக்களின் கடமைகள் (6:4)
5. வேலைக்காரரின் கடமைகள் (6:5-8)
6. எஜமான்களின் கடமைகள் (6:9)

 யஒ. விசுவாசிகளின் ஆவிக்குரிய போராட்டம் 

1. விசுவாசிகளின் வல்லமை (6:10)
2. விசுவாசிகளின் எதிரி (6:11-12)
3. விசுவாசிகளின் சர்வாயுத வர்க்கம் (6:13-17)
4. விசுவாசிகளின் ஆதாரம் (6:18-20)

 யஒஒ. முடிவுரையும் ஆசீர்வாதமும் (6:21-24)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.