கலாத்தியர் நிருபம் ஒரு கண்ணோட்டம்




கலாத்தியர்
முன்னுரை

அப்போஸ்தலர் பவுல் கலாத்தியரோடு இருக்கும்போது அவர்கள் அவர்மீது மிகுந்த  அன்போடிருந்தார்கள். அவருடைய ஊழியத்திற்கு அதிக மதிப்பும் முக்கியத்துவமும் கொடுத்தார்கள். கலாத்தியர் மத்தியிலே யூதமார்க்கத்தை உபதேசிக்கிற உபதேசியார்கள் சிலர் பிரவேசித்தார்கள். இவர்கள் கள்ளப்போதகர்கள். இயேசுகிறிஸ்துவின் சத்தியத்தை இவர்கள் தவறாக உபதேசிக்கிறார்கள். 

ஒவ்வொரு விசுவாசியும் மோசேயின் நியாயப்பிரமாணத்தை கைக்கொண்டால் மாத்திரமே இரட்சிக்கப்பட முடியும் என்பது இவர்களுடைய உபதேசம். பவுலோ விசுவாசத்தினால் நாம் நீதிமானாக்கப்படுவதாக உபதேசம்பண்ணுகிறார். நாம் இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதினால் இரட்சிக்கப்படுகிறோம். ஆனால் கள்ளஅப்போஸ்தலர்களோ சுவிசேஷத்தை கலப்பாய் உபதேசம்பண்ணுகிறார்கள். அப்போஸ்தலருடைய அதிகாரத்தையும் மரியாதையையும் அவமதிக்கிறார்கள். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அப்போஸ்தலர் பவுல் தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்தை  கலாத்தியர் மத்தியிலே உறுதிபண்ணுகிறார்.  பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைப்போல தானும் அப்போஸ்தல ஊழியத்தை செய்வதாக சொல்லுகிறார். 

கலாத்தியா நாட்டுச் சபையிலுள்ள விசுவாசிகள் கிறிஸ்துவை விட்டுப் பின்வாங்கிப்போய்விட்டார்கள். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசிப்பதற்குப் பதிலாக வேறொரு சுவிசேஷத்தை விசுவாசிக்கிறார்கள். கள்ளப்போதகர்கள் இவர்கள் மத்தியில்  கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்டுகிறார்கள். அப்போஸ்தலர் பவுலோ  மனுஷரைப் பிரியப்படுத்தாமல் தேவனைப் பிரியப்படுத்துகிறார்.

நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்திலே நீதிமானாகிறதில்லையென்று பவுல் இந்த நிருபத்தில் தெளிவாக எழுதுகிறார். மேலும் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்னும் சத்தியத்தையும் தெளிவுபடுத்துகிறார். சுதந்தரவாளிக்கும், அடிமையானவனுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை பவுல் இந்த நிருபத்தில் எடுத்துச் சொல்லுகிறார். கிறிஸ்து நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இரட்சித்திருக்கிறார். நாம் மறுபடியும்  அடிமைத்தனத்தின் நுகத்திற்கு உட்படக்கூடாது. கிறிஸ்து நமக்குண்டாக்கின சுயாதீன  நிலமையிலே நிலைகொண்டிருக்கவேண்டும். 

இந்த நிருபத்தின் முடிவுரையில், பவுல் கலாத்தியரிடம் “”நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக’’ என்று புத்திசொல்லி, “”ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும்  நன்மை செய்யக்கடவோம்’’ என்று புத்தி சொல்லுகிறார். உலகம் பவுலுக்கு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. பவுலும் உலகத்திற்கு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய அச்சடையாளங்களைப் பவுல்தன் சரீரத்திலே  தரித்துக்கொண்டிருக்கிறார். “”கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை அவர்கள் ஆவியுடனே கூடயிருப்பதாக’’ என்று சொல்லி பவுல் இந்த நிருபத்தை நிறைவுசெய்கிறார்.

கி.பி. 68-ஆம் ஆண்டில் பவுல் இந்த நிருபத்தை  ரோமாபுரியிலிருந்து எழுதினார்.

 பவுல் இந்த நிருபத்தை எழுதுவதற்குக் காரணங்கள். 

1. கலாத்தியர்களில் சிலர் இயேசு கிறிஸ்துவை விட்டுப் பின்வாங்கிப்போனார்கள். யூதேயாவிலிருந்து வந்த யூதமார்க்கத்து உபதேசியார்களைப் பின்பற்றி நியாயப்பிரமாணத்தின் கிரியைகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். இவர்களைத் திருத்துவதற்காக பவுல் இந்த நிருபத்தை எழுதியிருக்கிறார்.

2. யூதருடைய பழைய உடன்படிக்கைக்கும், கிறிஸ்தவ விசுவாசிகளுடைய புதிய உடன்படிக்கைக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விவரித்து பவுல் இந்த நிருபத்தில் எழுதியிருக்கிறார்.

பொருளடக்கம்

  ஒ.  முன்னுரை  

1. ஆசிரியரும் வாழ்த்தும் (1:1-5)  
2. நிருபத்தின் கருத்தும் எழுதப்பட்ட சூழ்நிலையும் (1:6-10) 

 ஒஒ. பவுலின் சுவிசேஷம்  

1. இயேசு கிறிஸ்துவிடமிருந்து நேரடியாக வந்த வெளிப்பாடு (1:11-12) 
2. பவுலின் முந்தைய ஜீவியம்  (1:13-14) 
3. பவுலின் சுவிசேஷமும் ஊழியமும் தேவனிடமிருந்து வந்தவை - மனுஷருடைய யோசனையின்படியானது அல்ல (1:15-24)
4. பதினாலு வருஷம் சென்ற பின்பு - தன் சுவிசேஷத்தையும் மற்ற அப்போஸ்தலருடைய சுவிசேஷத்தையும் பவுல் ஒப்பிடுகிறார் (2:1-2)
5. பவுலின் உடன் ஊழியன் தீத்து - கிரேக்கன் - விருத்தசேதனம் பண்ணிக் கொள்ளும்படிக்கு கட்டாயம் பண்ணப்படவில்லை (2:3-5)
6. பவுலின் சுவிசேஷம் புறஜாதி கிறிஸ்தவர்களுக்கு நிறைவானது  (2:6)
7. விருத்தசேதனம் உள்ளவர்களுக்கும் விருத்தசேதனம் இல்லாதவர்களுக்கும் இரண்டு விதமான பிரசங்கங்கள் (2:7-10)
8. பேதுருவையும் மற்றவர்களையும் அவர்களுடைய மாய்மாலத்திற்காகவும் தவறான உபதேசத்திற்காகவும் பவுல் கடிந்து கொள்கிறார் (2:11-14)  

 ஒஒஒ. கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுதல் 

1. யூதரும் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட முடியும் (2:15-16)  
2. யூதமார்க்கத்தின் ஸ்திரமற்ற தன்மை (2:17-18)  
3. விசுவாசிகள் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப் பட்டிருக்கிறார்கள் - நியாயப்பிரமாணத்திற்கு மரித்திருக்கிறார்கள்  (2:19-20)
4. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே (2:21)  
5. விசுவாசக்கேள்வியினாலே ஆவியைப் பெற்றிருக்கிறோம் - நியாயப் பிரமாணத்தின் கிரியைகளினாலே பெறவில்லை (3:1-4)  
6. நமக்கு ஆவியை அளித்து நமக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை விசுவாசக்கேள்வியினாலேயே செய்கிறார் (3:5) 
7. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு 430 வருஷங்களுக்கு முன்பாகவே ஆபிரகாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டான் (3:6) 
8. விசுவாச மார்க்கத்தார் அனைவரும் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப் பட்டார்கள் (3:7-9)  
9. நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள் (3:10-12) 
10. கிறிஸ்து நமக்காக சாபமாகி நியாயப் பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் (3:13-14)
11. ஆபிரகாமின் விசுவாச உடன்படிக்கையை நியாயப்பிரமாணமானது தள்ளி வியர்த்தமாக்கமாட்டாது (3:15-18)  
12. நியாயப்பிரமாணத்தின் உண்மையான நோக்கம் (3:19-20)  
13. நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமானது அல்ல (3:21-24)  
14. விசுவாசம் நியாயப்பிரமாணத்திலிருந்து விசுவாசிகளை விடுதலை பண்ணுகிறது (3:25) 
15. விசுவாசத்தினால் விசுவாசிகள் தேவனுடைய குடும்பத்தில் புத்திரராயும் சுதந்திரராயும் இருக்கிறார்கள் (3:26-29)
16. சுதந்தரவாளி (4:1-3) 
17. கிறிஸ்து நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக் கொண்டு அவர்களை தேவனுடைய புத்திரராக ஆக்குகிறார் (4:4-5)  
18. புத்திரராயும் சுதந்தரராயும் இருப்பதற்கு ஆதாரம் (4:6-7)  
19. நாம் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தோம் (4:8-11)  
20. ஆதியிலிருந்த ஆனந்த பாக்கியத்தைக் கொண்டிருக்குமாறு கலாத்தியருக்கு விண்ணப்பம் (4:12-16)  
21. நியாயப்பிரமாணக்காரர்கள் பாவத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் நம்மை மறுபடியும் உட்படுத்துவார்கள் (4:17-18)  
22. கிறிஸ்து நம்மிடத்தில் உருவாகுமளவும் நமக்காக பவுல் மறுபடியும் கர்ப்ப வேதனைப்படுகிறார் (4:19-20)  
23. கிருபையும் பிரமாணமும் ஒன்றுக்கொன்று முரண்பாடுடையவை (4:21-31)  
24. மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குட்படாமல் இருக்க வேண்டும் என்னும் எச்சரிப்பு (5:1)  
25. நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிறவர்களுக்கு கிறிஸ்துவும் கிருபையும் விருதாவாக இருக்கும் (5:2-6)  
26. நியாயப்பிரமாணத்தை மறந்து விட்டு கிறிஸ்துவிடமும் தேவனுடைய கிருபையிடமும் வருமாறு அழைப்பு (5:7-12)  
27. நியாயப்பிரமாணத்திற்கும் மாம்ச ஜீவியத்திற்கும் திரும்பி போவதற்கு எதிராக கடைசி எச்சரிப்பு (5:13-15)  

 ஒய. நடைமுறை உபதேசங்கள்  

1. பாவத்தின்மீது வெற்றி பெறுவதன் இரகசியம் (5:16-18)  
2. மாம்சத்தின் கிரியைகள் (5:19-21)  
3. ஆவியின் கனி (5:22-23)
4. ஆவிக்குரிய ஜீவியம் (5:24-26) 
5. மாம்சத்திற்கென்று விதைப்பதும் ஆவிக்கென்று விதைப்பதும் (6:7-8) 
6. நன்மை செய்கிறதில் சோர்ந்து போகக்கூடாது (6:9-11)  
7. புறஜாதியார் பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்று யூதர்கள் விரும்புவதற்கு காரணம் (6:12-13)  
8. புறஜாதியாரும் யூதரும் பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டியதில்லை என்பதற்கு காரணம் (6:14-16)  
9. முடிவுரையும் ஆசீர்வாதமும் (6:17-18)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.