ஓசியா புத்தகம் ஒரு கண்ணோட்டம்




ஓசியா புத்தகம் ஒரு கண்ணோட்டம்

முன்னுரை 

ஓசியா முதல் மல்கியா வரையிலும் உள்ள பன்னிரெண்டு தீர்க்கதரிசிகள் சிறிய தீர்க்கதரிசிகள் என அழைக்கப்படுகிறார்கள். சிறிய தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்படுவதினால் இவர்கள் கூறியுள்ள தீர்க்கதரிசனங்கள் முக்கியத்துவம் குறைந்தவை என்றோ அல்லது பரிசுத்த ஆவியானவரால் முழுவதுமாக ஏவப்படவில்லை என்றோ பொருள்படாது. இந்தத் தீர்க்கதரிசிகளுடைய புஸ்தகங்கள் அளவில் சிறியவையாக இருப்பதினால் இவை சிறிய தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மற்ற தீர்க்கதரிசிகளெல்லாம் பெரிய தீர்க்கதரிசிகள்  என்று அழைக்கப் படுகிறார்கள். 

எபிரெய வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். அவையாவன:

1. முந்திய தீர்க்கதரிசிகள்  - யோசுவா முதல் 2இராஜாக்கள் புஸ்தகம் வரையிலும் உள்ள ஆகமங்களில் தீர்க்கதரிசனம் கூறியுள்ள தீர்க்கதரிசிகள் இந்தப் பிரிவில் வருகிறார்கள். (சக 1:4; 7:7,12)

2. பிந்திய தீர்க்கதரிசிகள்  - ஏசாயா முதல் மல்கியா வரையிலும் உள்ள தீர்க்கதரிசன ஆகமங்களின் ஆசிரியர்கள் இந்தப் பிரிவில் வருகிறார்கள்.

ஆயினும் யூதமார்க்கத்து ரபிமார்கள் தானியேலை இந்தப் பிரிவில் சேர்க்கவில்லை. தானியேலின் புஸ்தகத்தை ""ஹாகியோகிராஃபா''  என்னும் பிரிவில் சேர்க்கிறார்கள்.

பழைய ஏற்பாட்டில், பன்னிரண்டு  தீர்க்கதரிசிகளின் ஆகமங்கள், ""சிறிய தீர்க்கதரிசிகளின் ஆகமங்கள்'' என்று  அழைக்கப்படுகிறது. சில சமயங்களில்  வேதபண்டிர்கள், இந்தப் பன்னிரண்டு ஆகமங்களையும் ஒரே புஸ்தகமாகவும் கோர்த்திருக்கிறார்கள். 

இந்த ஆகமங்கள் சிறிய  தீர்க்கதரிசிகளின் ஆகமங்கள் என்று அழைக்கப்படுவதினால், இந்தத் தீர்க்கதரிசிகளின் ஆவிக்குரிய வல்லமை      மற்ற தீர்க்கதரிசிகளின் வல்லமையைவிட குறைவானது என்பது பொருளல்ல.  மற்ற தீர்க்கதரிசிகளைப்போலவே இவர்களும்  பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை   தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கிறார்கள். 

மற்ற தீர்க்கதரிசிகளின் ஆகமங்களைவிட,  இந்த தீர்க்கதரிசிகளின் ஆகமங்கள் அளவில் சிறியவை. ஆகையினால் இவை சிறிய தீர்க்கதரிசிகளின் ஆகமங்கள் என்று அழைக்கப்படுகிறது.              மற்ற தீர்க்கதரிசிகளைப்போலவே இவர்களும் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்கள். கர்த்தருடைய வார்த்தையை  பிரசங்கம் பண்ணியிருக்கிறார்கள்.  ஆனாலும்   இவர்கள் தாங்கள் சொன்ன தீர்க்கதரிசன  வாக்கியங்களை எழுத்து வடிவில் கொண்டு வரவில்லை. 

எஸ்றாவின் காலத்தில், பிரதான ஜெபஆலயத்திலிருந்த  வேதபண்டிதர்கள்,  இந்தப் பன்னிரண்டு தீர்க்கதரிசன ஆகமங்களையும் ஒரே புஸ்தகமாகக் கோர்த்திருந்தார்கள். 

கர்த்தருடைய பிள்ளைகளுக்கு பிரயோஜனமுண்டாகும் வண்ணமாக,  தேவனுடைய தெய்வீக கிருபையினாலும், அவருடைய  தெய்வீக பராமரிப்பினாலும்,  சிறிய தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்கள் பரிசுத்த வேதாகமத்தில் கோர்க்கப்பட்டிருக்கிறது. 

பன்னிரண்டு சிறிய தீர்க்கதரிசிகளில் ஒன்பது பேர் சிறையிருப்புக்கு முன்பு தீர்க்கதரிசனம் சொன்னார்கள். மீதமுள்ள மூன்று தீர்க்கதரிசிகள்,  சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்கள்  தங்கள் சொந்த தேசத்தில் வந்து குடியேறிய பின்பு, தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.  

பன்னிரண்டு சிறிய தீர்க்கதரிசிகளின் ஆகமங்களை,  வரிசையாகக் கோர்ப்பதில்  ஒரு சில வித்தியாசங்கள் உள்ளன. •மூலஎபிரெய பாஷையில், எந்த வரிசையில் இந்தஆகமங்கள் கோர்க்கப்பட்டிருக்கிறதோ,  அந்த வரிசையிலேயே, நம்முடைய வேதாகமத்திலும்  கோர்க்கப்பட்டிருக்கிறது. 

சிறிய தீர்க்கதரிசிகளுடைய ஆகமங்களில்  ஓசியாவின்  ஆகமமே  முதலாவதாக கோர்க்கப்பட்டிருக்கிறது. இதை வேதபண்டிதர்கள் எல்லோரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்கிறார்கள். பழங்காலத்து செப்துவஜிந்த் பதிப்பில், முதல் ஆறு சிறிய தீர்க்கதரிசிகளின்  ஆகமங்கள், ஓசியா, ஆமோஸ், மீகா, யோவேல், ஒபதியா,         யோனா என்னும் வரிசைப் பிரகாரம் கோர்க்கப்பட்டிருக்கிறது. 

தீர்க்கதரிசன ஆகமங்களில், ஓசியா தீர்க்கதரிசியின் ஆகமமே காலத்தால் முந்தியது. இவர்  பெத்ஷிமேஸ் ஊரைச் சேர்ந்தவர் என்றும்,  இசக்கார்  கோத்திரத்தார் என்றும்  வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.  இவர்  நீண்டகாலமாக  தீர்க்கதரிசன ஊழியம் செய்து வந்தார். 

ஓசியா தீர்க்கதரிசி, வடக்கு இஸ்ரவேல் தேசத்திலுள்ள பத்துக்கோத்திரத்தாரின் அழிவை தீர்க்கதரிசனமாகச் சொன்னார். அவர்கள் அழிந்துபோவதை ஓசியா தன்னுடைய கண்களால் பார்த்தார்.  அவர்களுடைய அழிவுக்காக ஓசியா அழுது புலம்பினார். 

இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள்.  அவர்களுடைய  பாவங்களை ஓசியா தன்னுடைய  தீர்க்கதரிசன வார்த்தைகளின்  மூலமாக உணர்த்துகிறார்.  அவர்கள்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும் என்று ஓசியா எச்சரித்துச் சொல்லுகிறார். கர்த்தருடைய ஜனம் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பவில்லையென்றால்,  அவர்களுக்கு  அழிவு நிச்சயம் வரும். 

ஓசியா தன்னுடைய தீர்க்கதரிசன ஆகமத்தை எழுதியிருக்கிற விதம்,  நீதிமொழிகள் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற விதம் போலவே இருக்கிறது. ஓசியாவின் தீர்க்கதரிசனங்களை, அவருடைய பிரசங்கங்கள் என்று சொல்லுவதற்குப் பதிலாக, அவருடைய வசனங்கள் அல்லது  வார்த்தைகள் என்று சொல்லுவது சிறப்பாகயிருக்கும். 

பாலஸ்தீன தேசத்தில் கி.மு. 781-711 ஆவது வருஷங்களில் ஓசியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் எழுதப்பட்டது. இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் ஓசியா தீர்க்கதரிசி ஆவார். (ஓசி 1:1-2).  

இந்தப் புஸ்தகம் மனந்திரும்புதலை மையச்செய்தியாகக் கொண்டிருக்கிறது. கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப்போனவர்கள் கர்த்தரிடத்தில் திரும்பி வருமாறு அழைக்கப்படுகிறார்கள். திரும்பி வரவில்லையென்றால், அதன் விளைவாக அவர்கள் அகற்றப் படுவார்கள். தீர்க்கதரிசியின் வீட்டுப் பிரச்சனைகள் மூலமாகக் கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரிடம் பேசுகிறார். கர்த்தர் ஓசியாவிடம் ஒரு சோரஸ்திரீயைச் சேர்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார். (ஓசி 1:2) தேவன் இஸ்ரவேலை அழைக்கும்போது அவர்களுடைய நிலைமை சோரஸ்திரீயைப்போல இருக்கிறது. கர்த்தர் அப்படிப்பட்ட நிலைமையிலுள்ள ஜனங்களைத் தம்மோடு உடன்படிக்கையின் உறவுக்குள் வருமாறு அழைக்கிறார். அப்போது அவர்கள் கர்த்தருடைய ஜனமாக இருப்பார்கள். 

ஓசியாவின் மனைவியின் பெயர் கோமேர். ஓசியாவிற்கும், கோமேருக்கும் பிள்ளைகள் பிறக்கிறார்கள். அதன் பின்பு கோமேர் ஓசியாவைவிட்டு விட்டு, தன்னுடைய பழைய நேசர்களோடு போய்விடுகிறாள். அதன் பின்பும் ஓசியா அவளைத் திரும்பவும் கிரயம் செலுத்தி அழைத்து, தன்னுடைய மனைவியாக்கிக் கொள்கிறார். இனிமேல் அவள் தன்னுடைய பழைய நேசர்களோடு போவதில்லையென்று ஓசியாவோடு உடன்படிக்கை பண்ணிக் கொள்கிறாள். 

இந்த அனுபவம் இஸ்ரவேலுக்கு ஒரு பாடமாகக் கூறப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களை ஆராதிக்கிறார்கள். அவர்கள் அதை விட்டுவிட்டு கர்த்தரிடத்தில் திரும்பி வரவேண்டும். அப்போது கர்த்தர் அவர்களோடு நித்திய உடன்படிக்கையின் உறவை உறுதிபண்ணுவார். 

ஓசியாவின் புஸ்தகத்தில் காணப்படும் மையக்கருத்துக்களை இரண்டு வார்த்தைகளில் கூறலாம். அவை 1. லோகம்மீ 2. அம்மீ என்பனவாகும். லோகம்மீ என்பதற்கு ""என் ஜனமல்ல'' என்றும், அம்மீ என்பதற்கு ""என் ஜனம்'' என்றும் பொருள். (ஓசி 1:9; ஓசி 2:1).

ஓசி 2:14-23 ஆகிய வசனங்களில் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரிடத்தில் திரும்பவும் கூட்டிச் சேர்க்கப்படுவதைப் பற்றிக் கூறப் பட்டுள்ளது. இது பல நாட்களுக்குப் பின்பு நடைபெறும். (ஓசி 3:4-5) அப்போது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய நித்திய ஜனமாக இருப்பார்கள்.  ஓசி 6:1-3 ஆகிய வசனங்கள் இஸ்ரவேல் புத்திரர் மனந்திருந்தி, கர்த்தரிடத்தில் வருவதைப் பற்றிக் கூறுகிறது.  ஓசி 13:14; ஓசி 14:3-9 ஆகிய வசனங்கள் கர்த்தர் அவர்களை நித்தியமாக மீட்பதைப் பற்றிக் கூறுகிறது.

ஓசியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் எழுதப்பட்டதற்கான முக்கியமான நோக்கங்கள் வருமாறு:

1. இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரைவிட்டு பின்வாங்கிப்போவதை முன்னறிவிப்பது.

2. அவர்கள் பின்வாங்கிப்போகும் நாட்களில் தேசங்கள் மத்தியில் சிதறடிக்கப்படுவார்கள் என்பதை முன்னறிவிப்பது.

3. அவர்களுடைய பின்மாற்றமான நாட்களில் அவர்களுக்கு ராஜாவோ, அதிபதியோ, தேவாலயத்தின் பலிகளோ, ஏபோத்தோ, தேராபீமோ இராது என்பதை முன்னறிவிப்பது. (ஓசி 1:9; ஓசி 3:4-5)

4. இஸ்ரவேல் புத்திரர் இறுதியாகவும் நித்தியமாகவும் மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்படுவதை வெளிப்படுத்துவது.

5. தேவனுடைய மன்னிப்பையும், நித்திய ஆசீர்வாதத்தையும் அவர்களுக்கு உறுதி பண்ணுவது. (ஓசி 6:1-3; ஓசி 14:3-9).

பொருளடக்கம்

 ஒ. அடையாள தரிசனங்கள்  

1. தலைப்பு, ஆசிரியர், வரலாற்றுப் பின்னணி (1:1)

2. திருமணம் - யெஸ்ரயேலின் பிறப்பு - பொருள் (1:2-5)

3. லோருகாமாவின் பிறப்பு - பொருள் (1:6-7)

4. லோகம்மீயின் பிறப்பு - பொருள் (1:8-9)

5. வருங்காலத்தில் இஸ்ரவேலர் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்   (1:10-11)

6. கோமரின் சிட்சிப்பு - இஸ்ரேல்மீது சிட்சிப்பு - பொருள்      (2:1-13)

7. கோமருக்கு நயங்காட்டுதல் - இஸ்ரவேலர் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள் - பொருள் (2:14-23)

8. கோமர்மீது ஓசியாவின் தெய்வீக அன்பு - தனக்காக மட்டும் அநேக நாட்களாக இருக்குமாறு ஓசியா வாங்கினான் - பொருள் (3:1-4)

9. பின்பு - மேசியாவின்கீழ் இஸ்ரவேல் மீட்கப்படும் (3:5)

 ஒஒ. இஸ்ரவேலுக்கு எதிராக தேவனுடைய வழக்கு  

1. இஸ்ரவேலின் எட்டு பாவங்கள் (4:1-2)

2. இஸ்ரவேல்மீது எட்டு அம்ச நியாயத்தீர்ப்பு (4:3-5)

3. இஸ்ரவேலின் எட்டு அம்ச ஆவிக்குரிய நிலையும் நீதிநெறி நிலையும் - எட்டு அம்ச நியாயத்தீர்ப்பு (4:6-11)

4. இஸ்ரவேலின் ஏழு அம்ச விக்கிரகாராதனை - நான்கு அம்ச நியாயத்தீர்ப்பு (4:12-14)

5. யூதாவுக்கு எச்சரிப்பு (4:15-19)

6. இஸ்ரவேலுக்கு அழைப்பு (5:1-2)

7. இஸ்ரவேலின் பாவங்களும் யூதாவின் பாவங்களும் (5:3-15)

ஒஒஒ. கடைசி நாட்களில் இஸ்ரவேல் மனந்திருந்துவது குறித்த தீர்க்கதரிசனம் (6:1-3)

 ஒய. இஸ்ரவேலுக்கு எதிராக தேவனுடைய வழக்கு  

1. தெய்வீக பொறுமை (6:4)

2. இஸ்ரவேல்மீது மூன்று அம்ச நியாயத்தீர்ப்பு (6:5)

3. இஸ்ரவேலின் ஆவிக்குரிய பாவங்கள் (6:6-11)

4. பாவங்களும் உள்நாட்டு கலகங்களும் (7:1-7)

5. தேசங்கள்மீது நம்பிக்கை வைப்பது (7:8-11)

6. அசீரியாவிற்குச் சிறைப்பட்டுப்போதல் (7:12-8-3)

7. இஸ்ரவேலின் விக்கிரகாராதனை (8:4-6)

8. இஸ்ரவேலர் சிதறிப்போனார்கள் (8:7-8)

9. வேசித்தனமும் விக்கிரகாராதனையும் (8:9-9:1)

10. எகிப்திற்கும் அசீரியாவிற்கும் சிறைப் பட்டுப்போனார்கள் (9:2-7)

11. இஸ்ரவேலர் தங்களை முழுவதுமாக கெடுத்துக் கொண்டார்கள் (9:8-10)

12. முழுவதுமாக சிதறிப்போனார்கள் (9:11-17)

13. இஸ்ரவேலின் விக்கிரகாராதனை (10:1)

14. முழுவதுமாக அகற்றப்பட்டார்கள் (10:2-8)

15. கிபியாவின் நாட்களிலிருந்து இஸ்ரவேலின் பாவ சுபாவத்தைப் பற்றி குற்றச்சாட்டு (10:9-11)

16. நியாயத்தீர்ப்பைத் தவிர்ப்பதற்கு வாய்ப்பு (10:12)

17. மறுப்பு - நியாயத்தீர்ப்பு தவிர்க்க முடியாதது (10:13-15)

18. தொடர்ச்சியான கலகம் (11:1-7)

19. தேவனுடைய பொறுமை (11:8-11)

20. இஸ்ரவேலின் பாவங்கள் (11:12-12:1)

21. யாக்கோபு மனந்திருந்திய போது அவன்மீது தேவனுடைய இரக்கம் (12:2-5)

22. இஸ்ரவேலுக்கு இது பொருந்தும் (12:6)

23. இஸ்ரவேலின் குணாதிசயங்கள் (12:7-8)

24. இஸ்ரவேல் இன்னும் மனந்திருந்த வேண்டும் (12:9-10)

25. இஸ்ரவேலின் விக்கிரகாராதனை  

26. பிரயாணத்தில் யாக்கோபிற்கும் இஸ்ரவேலருக்கும் தேவனுடைய இரக்கங்கள் (12:11-13)

27. இஸ்ரவேல் இப்பொழுது தேவனுக்கு நன்றி செலுத்தவில்லை (12:14-13:2)

28. இஸ்ரவேல்மீது நியாயத்தீர்ப்பு (13:3-8)

 ய. இஸ்ரவேலின் இறுதி மீட்பு  

1. தற்பொழுதுள்ள நியாயத்தீர்ப்புக்களுக்குக் காரணம் (13:9-13)

2. மீட்பின் வாக்குத்தத்தம் (13:14)

3. முதலாவது முழுமையான அழிவு (13:15-16)

4. தேவனிடம் திரும்பி வருமாறு அழைப்பு (14:1)

5. இஸ்ரவேலின் வருங்கால பாவஅறிக்கை (14:2-3)

6. பதினான்கு அம்ச மீட்பு (14:4-9)

கர்த்தருடைய சிந்தை ஓசியா தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஓசியா கர்த்தருடைய சிந்தையை  ஜனங்களுக்கு வெளிப்படுத்துகிறார்.  இந்த ஆகமத்தின் முதல் மூன்று அதிகாரங்களில் ஓசியா அடையாளங்கள் மூலமாக கர்த்தருடைய செய்தியை சொல்லுகிறார். அதன் பின்பு ஓசியா இஸ்ரவேல் வம்சத்தாரிடம்,  நேரடியாகவே, வார்த்தைகள் மூலமாக, கர்த்தருடைய செய்தியை  பிரசங்கம்பண்ணுகிறார். 

ஓசியா தீர்க்கதரிசன ஆகமத்தின் தலைப்பு  (ஓசி 1).  கர்த்தருடைய ஜனத்திற்கு ஓசியா சொல்லவேண்டிய செய்தி (ஓசி 2,3).  இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமாக  அவர்களுக்கு அழிவு வரும். ஓசியாவினுடைய  குமாரர்களின் பெயர்கள் இந்த அழிவுக்கு விளக்கம் கொடுக்கிறது (ஓசி 4-6,8,9). 

ஓசியா யூதாராஜ்யத்திற்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லுகிறார். அவர்கள்  கர்த்தரை உண்மையாய் ஆராதிக்கிறார்கள்  (ஓசி 7). கடைசி நாட்களிலே, கர்த்தர் இஸ்ரவேல் தேசத்திற்கும்,  யூதாதேசத்திற்கும்  தம்முடைய கிருபையையும், இரக்கத்தையும் வெளிப்படுத்துவார் (ஓசி 10,11).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.