தண்ணீர் இரத்தமாய் மாறிற்று யாத் 7:14-25
யாத் 7:14. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.
யாத் 7:15. காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,
யாத் 7:16. அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்துக்கு அனுப்பியும், இதுவரைக்கும் நீர் கேளாமற்போனீர்.
யாத் 7:17. இதோ, என் கையில் இருக்கிற கோ-னால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,
யாத் 7:18. நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
யாத் 7:19. மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்துக் கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள் மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படிக்கு, உன்கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.
யாத் 7:20. கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.
யாத் 7:21. நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருந்தது.
யாத் 7:22. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்-யிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.
யாத் 7:23. பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான்.
யாத் 7:24. நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.
யாத் 7:25. கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று.
கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது அனுப்பின பத்து வாதைகளில் முதலாவது வாதை தண்ணீர் இரத்தமாய் மாறுவதாகும். கர்த்தர் அந்த வாதையினால் எகிப்து தேசத்தை வாதிக்கிறார். தண்ணீர் இரத்தமாக மாறிப்போகும் வாதை, எகிப்தியருக்கு மிகவும் பயங்கரமானதாயிருக்கிறது. அதனால் அவர்களுக்கு மோசமான விளைவுகள் உண்டாயிற்று.
எகிப்தியருக்கு மீன்கள் பிரதான ஆகாரம். ""நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம்'' (எண் 11:5).
எகிப்து தேசத்திலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போனதினால், அந்த தேசத்தின் மீன்களெல்லாம் செத்துப்போயிற்று. நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருக்கிறது (யாத் 7:21).
பிற்காலத்தில் எகிப்து தேசத்தின்மீது மற்றொரு வாதை வரும். அப்போது மீன் வளர்க்கிற குளங்களில் தண்ணீர் இருக்காது. அவையெல்லாம் உடைந்துபோகும். ""மீன் வளர்க்கிற குளங்களைக் கூ-க்கு அணைக்கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோம்'' (ஏசா 19:10).
கர்த்தர் தம்முடைய நீதியினால் எகிப்தியரை வாதிக்கிறார். எகிப்து தேசத்தில் ஓடுகிற நைல் நதியே பிரதான நதியாகும். எகிப்தியருக்கு நைல் நதி ஒரு விக்கிரகமாக இருக்கிறது. அவர்கள் நைல் நதியை தங்கள் தெய்வமாக நினைத்து, அதற்கு ஆராதனை செய்கிறார்கள். நைல் நதி எகிப்து தேசத்தை செழிப்பாக்குகிறது. நைல் நதியின் மூலமாக எகிப்தியருக்கு ஏராளமான நன்மைகள் உண்டாயிருக்கிறது. எகிப்தியர்கள் நைல் நதியை சிருஷ்டித்த சிருஷ்டிகரை ஆராதியாமல், சிருஷ்டிக்கப்பட்ட நைல் நதியை ஆராதிக்கிறார்கள்.
கர்த்தர் எகிப்தியரை தண்டிக்கிறார். நைல் நதியிலுள்ள தண்ணீர் எகிப்தியருக்கு தெய்வமாயிருக்கிறது. கர்த்தரோ அந்த தண்ணீரை இரத்தமாக மாற்றுகிறார். இதுவரையிலும் அவர்களுக்கு பிரயோஜனமாயிருந்த நைல் நதியின் தண்ணீர், இப்போது நாற்றம் எடுக்கிறது. நைல் நதியின் தண்ணீரை எகிப்தியரால் குடிக்க முடியவில்லை.
நாம் கர்த்தர் சிருஷ்டித்த ஒரு காரியத்தை நமக்கு தெய்வமாக்கும்போது, கர்த்தர் அந்த சிருஷ்டியையும், அதன் மூலமாக நாம் அனுபவிக்கும் நன்மைகளையும் நம்மை விட்டு நீக்கிப்போடுகிறார். கர்த்தர் தம்முடைய மகிமையை யாரோடும் பகிர்ந்துகொள்ளமாட்டார்.
எகிப்து தேசம் முழுவதுமே நைல் நதியை சார்ந்திருக்கிறது. எகிப்தின் விவசாயங்களும், தொழில்களும், வியாபாரங்களும் நைல் நதியை சார்ந்தே நடைபெறுகிறது.
""மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும் போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கவராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்'' (சக 14:18).
மோசே நைல் நதியை அடிக்கிறார். நைல் நதியின் தண்ணீர் இரத்தமாக மாறிப்போயிற்று. இது எகிப்து தேசம் முழுவதும் அழிந்துபோவதற்கு அடையாளம். எகிப்தியர் சிவப்பு நிறத்தை விரும்பவதில்லை. அந்த நிறம் அழிவுக்கு அடையாளமாயிருக்கிறது. பார்வோனும் அவனுடைய ரதவீரர்களும் செங்கடலிலே மூழ்கி செத்துப்போனார்கள். இந்த சம்பவத்திற்கு பின்பு எகிப்தியர்கள் சிவப்பு நிறத்தை அருவருத்தார்கள். இப்போதோ கர்த்தர் நைல் நதியை சிவப்பு நிற இரத்தமாக மாற்றுகிறார்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் மோசே நடப்பித்த முதலாவது அற்புதங்களில் ஒன்று தண்ணீரை இரத்தமாக மாற்றினது. புதிய ஏற்பாட்டுக்காலத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நடப்பித்த முதலாவது அற்புதம் தண்ணீரை திராட்சரசமாக மாற்றினது.
மோசேயின் மூலமாக நமக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. நியாயப்பிரமாணமானது மரணத்திற்கும், பயங்கரத்திற்கும் அடையாளம். திராட்சரசமானது கிருபைக்கும் சத்தியத்திற்கும் அடையாளம். திராட்சரம் களைத்துப்போயிருக்கும் இருதயத்தை சந்தோஷப்படுத்தும். இயேசுகிறிஸ்துவின் மூலமாக மனுக்குலத்திற்கு சந்தோஷமும் ஆசீர்வாதமும் வருகிறது.
கர்த்தர் மோசேயை நோக்கி, ""பார்வோனின் இருதயம் கடினமாயிற்று. அவன் ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்'' (யாத் 7:14) என்று கர்த்தர் சொல்லுகிறார். பார்வோனுடைய கடினமான இருதயத்தை மென்மையான இருதயமாக மாற்றவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்பது கர்த்தருக்கு தெரியும்.
இதற்காக கர்த்தர் மோசேயை காலமே பார்வோனிடத்திற்கு போகுமாறு சொல்லுகிறார். பார்வோன் அதிகாலையில் நதிக்கு புறப்பட்டு வருவான். அப்போது மோசே பார்வோனுக்கு எதிராக நதி ஓரத்தில் நிற்கவேண்டும். மோசே தன்னுடைய கையிலே சர்ப்பமாக மாறின கோலை பிடித்துக்கொண்டு நிற்கவேண்டும் (யாத் 7:15).
""சர்ப்பமாக மாறின கோல்'' என்னும் இந்த வாக்கியத்தில் சர்ப்பம் என்பதற்கு ""நாகாஷ்'' என்னும் வார்த்தை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இங்கு ""தன்னீய்ன்'' என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை.
கர்த்தர் பார்வோனுடைய ஒவ்வொரு அசைவுகளையும் அறிந்து வைத்திருக்கிறார். பார்வோன் அதிகாலை வேளையிலே நைல் நதிக்கு வந்து, அந்த நதியை ஆராதிப்பதற்காக வருவான். அதிகாலை வேளையிலே அவன் நைல் நதிக்கு தூபம் காண்பிப்பான். அந்த வேளையில் மோசே பார்வோனுக்கு எதிராக நதி ஓரத்தில் நிற்கவேண்டும்.
பார்வோன் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, எகிப்து தேசத்திலே அடிமைகளாகயிருக்கும் இஸ்ரவேல் புத்திரரை விடுதலைபண்ணி அனுப்பிவிடவேண்டும். ஆனால் அவனோ இஸ்ரவேல் புத்திரரை அனுப்பிவிட மறுக்கிறான். அவனுடைய மனம் மாறவேண்டும். கர்த்தர் பார்வோனை உடனே அழித்துப்போடாமல் அவனுடைய மனம் மாற்றமடைவதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார். கர்த்தருடைய கட்டளையை மோசே பார்வோனுக்கு சொல்லவேண்டும். பார்வோன் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய மறுத்தால், அவனுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கப்படும் என்பதையும் மோசே அவனுக்கு அறிவிக்கவேண்டும்.
மோசே பார்வோனுக்கு சொல்லவேண்டிய வார்த்தைகளை, கர்த்தர் மோசேக்கு வெளிப்படுத்துகிறார். மோசே பார்வோனை நோக்கி, ""வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்துக்கு அனுப்பியும், இதுவரைக்கும் நீர் கேளாமற்போனீர்'' என்றும்,
""இதோ, என் கையில் இருக்கிற கோ-னால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி, நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்'' (யாத் 7:16-18) என்றும் சொல்லவேண்டும்.
மோசேயும் பார்வோனும் நைல் நதி ஓரமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். மோசே நைல் நதியின் ஓரத்திலே நின்றுகொண்டு, பார்வோனுக்கு கர்த்தருடைய வார்த்தையை சொல்லுகிறார். பார்வோன் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லையென்றால் அவர்கள் எந்த நதியின் ஓரத்திலே நிற்கிறார்களோ, அந்த நதியிலுள்ள தண்ணீர் இரத்தமாய் மாறும்.
நைல் நதியின் தண்ணீர் இரத்தமாய் மாறும்போது அதை ஏதோ ஒரு இயற்கையின் மாற்றம் என்றோ அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் நதியின் தண்ணீர் சிவப்பு நிறமாக மாற்றிற்று என்றோ பார்வோன் நினைத்துவிடக்கூடாது. கர்த்தரே நைல் நதியின் தண்ணீரை இரத்தமாக மாற்றினார் என்பதை பார்வோன் உணரவேண்டும். இதற்காகவே கர்த்தர் மோசேயின் •மூலமாக பார்வோனுக்கு எச்சரிப்பின் வார்த்தைகளை சொல்லுகிறார்.
மோசே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தினால் பேசுகிறார். எபிரெயரின் தேவன் வல்லமையுள்ளவர். பார்வோனுக்கு கர்த்தருடைய வல்லமையைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவன் கர்த்தரைப்பற்றி அறிந்துகொள்ளவேண்டும். நைல் நதியின் தண்ணீர் இரத்தமாய் மாறி, எகிப்தியர் அந்த தண்ணீரை குடிக்கக்கூடாமல் அரோசிக்கும்போது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே மெய்யான தேவன் என்பதை பார்வோன் அறிந்துகொள்ளவேண்டும்.
கர்த்தர் பார்வோனுக்கு எச்சரிப்பின் வார்த்தைகளை சொல்லுகிறார். கர்த்தருடைய ஒவ்வொரு வார்த்தையும், அவருடைய ஒவ்வொரு கிரியையும் நீதியும் நியாயமுமுள்ளதாயிருக்கும். கர்த்தர் ஒருவனை காயப்படுத்துவதற்கு முன்பாக அவனுக்கு எச்சரிப்பின் வார்த்தைகளை சொல்லுகிறார்.
ஒருவரும் அழிந்துபோவது கர்த்தருடைய சித்தமல்ல. எல்லோரும் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பி ஜீவனைப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கர்த்தருடைய சித்தம். இதற்காகவே கர்த்தர் பாவிகளை உடனே தண்டித்துவிடாமல், அவர்களை உடனே நிர்மூலம்பண்ணிவிடாமல், அவர்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும் என்று நீடிய பொறுமையோடு காத்திருக்கிறார். பாவிகளோ கர்த்தருக்கு விரோதமாகத் துணிகரமாய்ப் பாவம் செய்து, தேவனுடைய கிருபைகளையும், அவருடைய பொறுமைகளையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
மோசேயின் கையிலுள்ள கோல் இப்போது ஆரோனின் கையிலே இருக்கிறது. அந்தக் கோலை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று கர்த்தர் மோசேக்கு கட்டளை கொடுக்கிறார்.
கர்த்தர் மோசேயை நோக்கி, ""நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்துக் கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள் மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படிக்கு, உன்கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல்'' (யாத் 7:19) என்று சொல்லுகிறார்.
தேவனுடைய சர்வவல்லமை இங்கு வெளிப்படுகிறது. கர்த்தரே சர்வசிருஷ்டிகர். எல்லா சிருஷ்டிகளும் நமக்கு தண்ணீராகவோ அல்லது இரத்தமாகவோ இருக்கிறது. சூரியனுக்கு கீழே உள்ள சிருஷ்டிகளெல்லாவற்றிலும் ஒரு சில மாற்றங்கள் உண்டாகும். அந்த மாற்றங்களை நாம் அன்றாடம் கவனித்துக்கொண்டிருக்கிறோம்.
ஒரு நதியின் தண்ணீர் கலங்கலாகயிருக்கும். அல்லது தெளிவாகயிருக்கும். ஆனால் இங்கோ கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு, நைல் நதியின்மீது வருகிறது. அந்த நதியின் தண்ணீர் முழுவதும் இரத்தமாய் மாறுகிறது.
நைல் நதியின் தண்ணீர் மாத்திரம் என்று அல்லாமல், எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள் மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும் தண்ணீர் இரத்தமாக மாறுகிறது. தேவனுடைய தெய்வீக நியாயத்தீர்ப்பு சீக்கிரத்தில் வெளிப்படுகிறது.
கர்த்தர் தண்ணீரை மனுஷருக்கு ஆசீர்வாதமாக சிருஷ்டித்திருக்கிறார். மனுக்குலத்திற்கு தண்ணீர் மூலமாக ஏராளமான நன்மைகள் உண்டாகிறது. ஆனால் மனுஷருடைய பாவமோ, நன்மையை தீமையாக மாற்றுகிறது. ஆசீர்வாதத்தை சாபமாக மாற்றுகிறது. எகிப்து தேசத்திலுள்ள மொத்த தண்ணீரையும், பார்வோனுடைய பாவம், இரத்தமாக மாற்றுகிறது.
நம்முடைய அன்றாட ஜீவியத்தில், நமக்கு நன்மையாயிருந்த காரியங்கள் தீமையாக மாறும்போது, நம்மை நாமே சோதித்துப் பார்க்கவேண்டும். நமக்கு வந்துள்ள பிரச்சனைகளுக்கு நம்முடைய பாவம் காரணமாயிருக்கிறதா என்பதை ஆராய்ந்து அறியவேண்டும். பார்வோனுடைய பாவம் நைல் நதியின் தண்ணீரை இரத்தமாக மாற்றினதுபோல, நம்முடைய பாவம் நம்முடைய ஜீவியத்தில், சந்தோஷத்தை துக்கமாக மாற்றும். ஆசீர்வாதத்தை சாபமாக மாற்றும். ஆரோக்கியத்தை வியாதியாக மாற்றும். நம்முடைய பாவங்களுக்கு மனந்திரும்பினால், நாம் கர்த்தருடைய கிருபைகளை மறுபடியும் பெற்றுக்கொள்ளலாம்.
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை. மோசேயும் ஆரோனும் கர்த்தர் கட்டளையிட்டபடி செய்கிறார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் அவர்கள் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று (யாத் 7:20).
நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருக்கிறது (யாத் 7:21). ஆனாலும் பார்வோன் மனம் மாறவில்லை. அவனுடைய இருதயம் கடினமாயிற்று. அவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து அனுப்பிவிட மறுத்துவிடுகிறான்.
கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது முதலாவது வாதையை அனுப்பியிருக்கிறார். எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருக்கிறது. கர்த்தருடைய கோபத்தினாலும், அவருடைய நியாயத்தீர்ப்பினாலும் எகிப்து தேசத்தின்மீது இந்த வாதை வந்திருக்கிறது என்பதை பார்வோன் அங்கீகரிக்க மறுக்கிறான்.
மோசேயின் கையிலுள்ள கோல் சர்ப்பமாக மாறினபோது, அது ஒரு மந்திர வித்தை என்று பார்வோன் நினைத்தான். அதுபோலவே இப்போதும், நைல் நதியின் தண்ணீர் இரத்தமாய் மாறியது மற்றொரு மந்திரவித்தை என்று பார்வோன் நினைக்கிறான். பார்வோன் எகிப்து தேசத்திலுள்ள மந்திரவாதிகளை வரவழைத்து, மோசேயும் ஆரோனும் தண்ணீரை இரத்தமாக மாற்றியதுபோல அவர்களையும் மாற்றுமாறு சொல்லுகிறான்.
எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்கிறார்கள்; கர்த்தர் சொல்-யிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்படுகிறது; பார்வோன் அவர்களுக்குச் செவிகொடாமற்போகிறான். பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப் போகிறான் (யாத் 7:22,23).
எகிப்தின் மந்திரவாதிகளால் தண்ணீரை இரத்தமாக மாற்ற முடிகிறது. ஆனால் அவர்களால் இரத்தத்தை மறுபடியும் தண்ணீராக மாற்ற முடியவில்லை. பார்வோன் இதை சிந்தித்துப் பார்க்கவில்லை. பார்வோனுடைய மனக்கண்கள் குருடாயிருக்கிறது. அவனுடைய இருதயம் கடினமாயிருக்கிறது.
மந்திரவாதிகளால் தண்ணீரை இரத்தமாக மாற்ற முடிகிறது. அவர்களால் அதை மாத்திரமே செய்ய முடிகிறது. கர்த்தருடைய வல்லமையோ தண்ணீரை இரத்தமாகவும் மாற்றும். அந்த இரத்தத்தை மறுபடியும் தண்ணீராகவும் மாற்றும். இதுவே தேவனுடைய தெய்வீக வல்லமை. கர்த்தருடைய வல்லமை பரிபூரணமானது. அதுவே மெய்யானது. எகிப்தின் மந்திரவாதிகளுடைய வல்லமையானது அறைகுறையானது. அது மாய்மாலமானது. அது மனுஷரை வஞ்சிக்கக்கூடியது.
எகிப்தியரால் நைல் நதியின் தண்ணீரை குடிக்க முடியவில்லை. எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருக்கிறது. எகிப்தியருக்கு மாத்திரமல்ல, எல்லா மனுஷருக்குமே தண்ணீர் அத்தியாவசிய தேவை. கர்த்தர் நைல் நதியின் தண்ணீரை இரத்தமாக மாற்றியிருக்கிறார். எகிப்தியர்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்புவதற்கு பதிலாக, வேறு ஏதாவது வழியில், தங்களுக்கு தண்ணீர் கிடைக்குமா என்று தேடிப்பார்க்கிறார்கள்.
நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டுகிறார்கள் (யாத் 7:24) அவர்கள் நைல் நதி ஓரத்தில் ஒரு சில இடங்களில் தண்ணீர் ஊற்றுக்களை கண்டுபிடிக்கிறார்கள்.
பார்வோன் தேவனுடைய செய்தியை மறுபடியும் புறக்கணித்து விடுகிறான். அவன் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், தனக்கு அழிவைத் தேடிக் கொள்கிறான்.
எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டுகிறார்கள். மோசே ஏற்கெனவே நதியை இரத்தமாக மாற்றிவிட்டார். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்களுக்கு இரத்தமில்லாத நல்ல தண்ணீர் வேண்டும். எகிப்தியர் எல்லோரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டி, நல்ல தண்ணீரைக் காண்கிறார்கள். எகிப்தின் மந்திரவாதிகள் இந்தத் தண்ணீரை இரத்தமாக மாற்றுகிறார்கள்.
பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டிருந்தாலும், கர்த்தர் எகிப்தியர் மீது கிருபையும் மனதுருக்கமுமுள்ளவராகவே இருக்கிறார். கர்த்தர் எகிப்து தேசம் முழுவதும் தண்ணீரை இரத்தமாக மாற்றுகிறார். இது கர்த்தருடைய நீதியான நியாயத்தீர்ப்பு. ஆனாலும் கர்த்தர் நைல் நதி ஓரத்தில் ஒரு சில ஊற்றுக்கண்களையும் அவர்களுக்கு திறந்துகொடுக்கிறார். இது கர்த்தருடைய கிருபை. கர்த்தர் எகிப்தியரை தண்டித்தாலும், ஆரம்பத்தில் அவர்களை மொத்தமாய்த் தண்டித்து நிர்மூலம்பண்ணிவிடாமல், அவர்களை மட்டாய்த் தண்டிக்கிறார்.
கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று. எகிப்து தேசம் முழுவதும் ஏழுநாட்களுக்கு இரத்தமாயிருக்கிறது (யாத் 7:25). இந்த ஏழுநாட்களிலும் பார்வோனும், எகிப்து தேசத்தாரும் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆனாலும் இந்த நாட்களில் பார்வோன் தன்னுடைய தப்பிதத்திற்கு மனம் வருத்தப்பட்டு, மோசேயினிடத்தில் வந்து, எகிப்து தேசத்திலுள்ள இரத்தத்தை தண்ணீராக மாற்றுமாறு விண்ணப்பம்பண்ணவில்லை. பார்வோனுடைய இருதயம் மிகவும் கடினமாயிருக்கிறது. அவன் தன்னுடைய தவறுகளுக்கு மனந்திரும்புவதற்கு பதிலாக, அதனால் வரும் தண்டனைகளை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாயிருக்கிறான்.
எகிப்து தேசத்தின்மீதும், எகிப்து தேசத்தார்மீதும் வந்த நியாயத்தீர்ப்புக்கள், எகிப்தியரின் தெய்வங்கள் மீது வந்த நியாயத்தீர்ப்பாகவே இருக்கிறது. பார்வோனும், எகிப்தியரும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை தேவன் என்று அங்கீகரியாமல், தங்களுடைய தெய்வங்களை தேவர்கள் என்று சொல்லுகிறார்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே மெய்யான தேவன் என்பதை எகிப்தியர்கள் அறிந்துகொள்ளவேண்டும். இதற்காகவே கர்த்தர் எகிப்தியர்கள்மீது வாதைகளை அனுப்புகிறார். இந்த வாதைகள் எல்லாம் எகிப்தியரின் தெய்வங்கள்மீது வந்த கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகளாகும்.
விக்கிரகாராதனை செய்யும் ஒரு தேசத்திற்கு அழிவு வந்தால் அந்தப் பழி அனைத்தும் அந்தத் தேசத்தின் விக்கிரகங்களையே சேரும். அந்தத் தெய்வங்கள் தங்களுடைய ஜனங்களைத் தண்டிக்கின்றன. அல்லது அந்தத் தேசத்தை விட்டு, ஓடிப்போய் விட்டன என்று ஜனங்கள் நினைப்பார்கள். சில சமயங்களில் வல்லமையான மற்ற தெய்வங்கள் இந்தத் தேசத்தின் தெய்வங்களை மேற்கொண்டு ஜெயித்தன என்றும், தங்களுடைய தெய்வங்களுக்கு வல்லமையில்லை என்றும், நினைப்பார்கள். எகிப்து தேசத்தில் தேவன் பத்து வாதைகளை அனுப்புகிறார். இந்த வாதைகள் அனைத்தும், எகிப்தியரின் தெய்வங்கள்மீது நியாயத்தீர்ப்பாக அனுப்பப்பட்டவையாகும் (ஏசா 37:6-13).
1. எகிப்தியர்கள் நைல்நதியை ஒரு தெய்வமாக வழிபட்டார்கள். இதற்கு பல்வேறு பெயர்களும், பல்வேறு அடையாளங்களும் உண்டு. தெய்வங்களின் பிதா, ஜீவியத்தின் பிதா என்றெல்லாம் எகிப்தியர் நைல் நதியை அழைத்தார்கள். மேலும் எகிப்தியர் இரத்தத்தை அருவருத்தார்கள். தங்களுடைய புனித நதி இரத்தமாக மாறியபோது, எகிப்தியர் அனைவரும் பயந்திருப்பார்கள். தங்களுடைய நதி தெய்வம் வல்லமை இழந்து, ஏன் இரத்தமாயிற்று என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பிப் போயிருப்பார்கள் (யாத் 7:19-21).
2. எகிப்து தேசத்தில் தவளையும், ஒரு தெய்வமாகக் கருதப்பட்டது. ஏராளமான தவளைகள் எகிப்திற்கு வந்தன. இவற்றைக் கண்டு, எகிப்தியர் அருவருப்படைந்தார்கள். தவளை தங்கள் தெய்வமாக இருந்த போதிலும், அவை திரளாக வந்தபடியினால், தங்களுடைய தெய்வத்தையே அருவருக்கிறார்கள் (யாத் 8:5-6).
3. புழுதியிலிருந்து பேன்களும் (யாத் 8:16-19), திரளான வண்டு ஜாதிகளும் (சங் 78:45), எகிப்து தேசத்தின்மீது வருகிறது. எகிப்தியரின் தெய்வங்களினால் அவர்களைப் பாதுகாக்க முடியவில்லை. அந்தத் தெய்வங்களின் வல்லமையையும் மீறி, எகிப்து தேசம் முழுவதையும் பேன்களும், வண்டு ஜாதிகளும் நிரப்பிற்று.
4. எகிப்தியர் விக்கிரகாராதனை செய்தாலும், தங்களுடைய விக்கிரகக் கோவில்களைச் சுத்தமாக வைத்திருப்பார்கள். எகிப்து தேசம் முழுவதும் வண்டு ஜாதிகள் வந்து நிரம்புகிறது. (யாத் 8:24) பெயல்செபூல் வண்டுகளின் தெய்வம் என்று கருதப்பட்டன. எகிப்து ஜனங்களை அவனால் வண்டுகளிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. அவனுக்கு வல்லமையில்லை என்பது இதனால் தெளிவாயிற்று.
5. எகிப்தியர்கள் தங்கள் மிருகஜீவன்களைப் புனிதமானவைகளாகக் கருதினார்கள். அவைகளின்மீது கொடிய கொள்ளை நோய் வந்தது. (யாத் 9:5-7) எகிப்தியரின் தெய்வங்களினால் அவர்களுடைய புனிதமான மிருகஜீவன்களைப் பாதுகாக்க முடியவில்லை. எகிப்தியர் சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், ஆறுகள், மலைகள், மிருகஜீவன்கள், தாவர வகைகள் ஆகிய எல்லாவற்றையும் தெய்வங்களாக வழிபட்டார்கள். எகிப்தியர்கள் மிருகங்களைப் பலியிட மாட்டார்கள். தங்களுடைய மிருக ஜீவன்களுக்குக் கொடிய வாதைகள் வந்ததினால், தங்கள்மீது ஏதோ ஒரு தெய்வத்திடமிருந்து நியாயத்தீர்ப்பு வந்திருப்பதாகக் கருதினார்கள். அந்தத் தெய்வத்திற்கு முன்பாக எகிப்தியரின் தெய்வத்திற்கு வல்லமையில்லை என்பதையும் புரிந்து கொண்டார்கள்.
6. எரிபந்தமான கொப்புளங்கள் எகிப்து தேசத்து மனுஷர்மீதும், மிருகஜீவன்கள் மீதும் எழும்பப்பண்ணிற்று. (யாத் 9:9) இதுபோன்ற வாதைகளிலிருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று எகிப்து தேசத்தார் தங்கள் தெய்வங்களிடம் வழிபட்டார்கள். ஆனால் அந்தத் தெய்வங்களால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. (யாத் 9:8).
7. எகிப்து தேசமெங்கும் அக்கினியும், கல்மழையும் பொழிந்தது. (யாத் 9:22-26) எகிப்தியர்கள் தண்ணீரையும், அக்கினியையும், காற்றையும், பூமியையும், தாவரவர்க்கங்களையும் தெய்வங்களாகக் கருதி அவற்றை வழிபட்டார்கள். அக்கினியும், கல்மழையும் பயிர் வகைகளையெல்லாம் அழித்துப் போட்டது. வெளியின் மிருகங்களையெல்லாம் முறித்துப் போட்டது. எகிப்தியர்கள் தங்களுடைய தெய்வமென்று கருதியவைகளெல்லாம் அக்கினியினாலும், கல்மழையினாலும் அழிந்தன. எகிப்தியர்கள் அக்கினியையும், வெளிச்சத்தையும் ஈசிஸ், ஓசிரிஸ் என்னும் தெய்வங்களாகப் பாவித்து அவற்றை வழிபட்டார்கள். எகிப்தியருடைய தெய்வங்களால் தங்களைக் காத்துக் கொள்ள முடியவில்லை. எகிப்திய ஜனங்களுக்கு அவைகளால் உதவி புரியவும் முடியவில்லை.
8. எகிப்தியரின் சேராபீஸ் என்னும் தெய்வம் பயிர் வகைகளை வெட்டுக் கிளிகளிடமிருந்து பாதுகாக்கும் என்று எகிப்தியர் நம்பினார்கள் (யாத் 10:12-15) ஆனால் அந்தத் தெய்வத்தால் வெட்டுக்கிளிகளை ஒன்றும் செய்ய முடியவில்லை. தேவனுடைய கட்டளைப்படி அவை வந்தன. தேவனுடைய கட்டளைப்படியே அவை செயல்படுகின்றன. எகிப்தியரின் தெய்வத்திற்கு அவை கீழ்ப்படியவில்லை. எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமையுள்ள தேவன். எகிப்தியரின் தெய்வங்கள் மாயையானவை (யாத் 10:4).
9. எகிப்தியர் சூரியனைத் தங்கள் தெய்வமாக ஆராதனை செய்தார்கள். சூரிய தெய்வம் தங்களை இருளிலிருந்து பாதுகாத்து வெளிச்சத்தைத்தரும் என்பது எகிப்தியரின் நம்பிக்கை. ஆனால் இந்தத் தெய்வத்தால் எகிப்தியருக்கு வந்த காரிருளிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களுக்கு வெளிச்சத்தைத் தரமுடியவில்லை. (யாத் 10:21-23)
10. எகிப்தியரின் தெய்வங்கள் எகிப்தியரையும், அவர்களுடைய மிருகஜீவன்களையும் பாதுகாக்க வேண்டும். எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகளுக்கு மரணம் நேர்ந்த போது, எகிப்தியரின் தெய்வங்களால் அவர்களைப் பாதுகாக்க முடியவில்லை. (யாத் 12:29-30) எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகள் கர்த்தருடைய கட்டளைப்பிரகாரம் மாண்டுபோனார்கள். எகிப்தியரின் தெய்வத்தினால் இஸ்ரவேலின் தேவனுக்கு எதிராக எதிர்த்து நிற்க முடியவில்லை.