எகிப்திற்க்குள் அனுப்பப்பட்ட தவளைகள் யாத் 8:1-15
யாத் 8:1. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.
யாத் 8:2. நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன்.
யாத் 8:3. நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும்; அவைகள் உன் வீட்டிலும் உன் படுக்கை அறையிலும், உன் மஞ்சத்தின் மேலும், உன் ஊழியக்காரர் வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும்.
யாத் 8:4. அந்தத் தவளைகள் உன்மேலும், உன் ஜனங்கள் மேலும், உன் ஊழியக்காரர் எல்லார்மேலும் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
யாத் 8:5. மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையில் இருக்கிற கோலை நதிகள் மேலும் வாய்க்கால்கள் மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.
யாத் 8:6. அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.
யாத் 8:7. மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்.
யாத் 8:8. பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக் கொள்ளுங்கள்; கர்த்தருக்கு ப-யிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.
யாத் 8:9. அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலே மாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்து போகும்படி செய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.
யாத் 8:10. அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது.
யாத் 8:11. தவளைகள் உம்மையும் உம்முடைய வீட்டையும் உம்முடைய ஊழியக்காரரையும் உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கி, நதியிலே மாத்திரம் இருக்கும் என்றான்.
யாத் 8:12. மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கி கூப்பிட்டான்.
யாத் 8:13. கர்த்தர் மோசேயின் சொற்படி செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப் போயிற்று.
யாத் 8:14. அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது.
யாத் 8:15. இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சொல்-யிருந்தபடி ஆயிற்று.
பார்வோன் இஸ்ரவேல் புத்திரரை கர்த்தருக்கு ஆராதனை செய்ய அனுப்ப மறுக்கிறான். அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறான். கர்த்தர் எகிப்து தேசத்தின்மீதும், அந்த தேசத்து ஜனங்கள்மீதும் ஒவ்வொரு வாதையாக அனுப்புகிறார்.
கர்த்தர் எகிப்து தேசத்தின்மேல் தவளைகள், பேன்கள், வண்டுகள் ஆகியவற்றை அனுப்புகிறார். இவையெல்லாம் எகிப்தியருக்கு மிகுந்த வாதைகளாகயிருக்கிறது.
பார்வோனோ தற்காலிகமாக மனந்திரும்புகிறான். ஆனாலும் அவனுடைய இருதயம் மறுபடியும் மறுபடியும் கடினப்படுகிறது. அவன் இஸ்ரவேல் புத்திரரை அனுப்ப மறுக்கிறான்.
கர்த்தர் சர்வவல்லமையுள்ள தேவன். அவர் யானைகளைப்போல பெரிய மிருகங்களையும் சிருஷ்டிக்கிறார். அதே கர்த்தர், பேன்களைப்போல சிறிய வஸ்துக்களையும் சிருஷ்டிக்கிறார். கர்த்தருடைய சிருஷ்டிக்கும் வல்லமையே சர்வசிருஷ்டிகளையும் சிருஷ்டிக்கிறது. இவையெல்லாம் கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாக சிருஷ்டிக்கப்படுகிறது.
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன் இருதயத்தில் பெருமையோடும், அகந்தையோடும் இருக்கிறான். அவனுடைய இருதயம் கடினப்பட்டிருக்கிறது. கர்த்தர் பார்வோனை தண்டிப்பதற்கு மிகப்பெரிய மிருகங்களை பயன்படுத்தாமல், தவளைகள், பேன்கள், வண்டுகள் போன்ற மிகவும் சிறிய, சாதாரண வஸ்துக்களை பயன்படுத்துகிறார். பார்வோன் எகிப்து தேசத்திற்கு ராஜாவாகயிருந்தாலும், அவன் தவளைகளுக்கும், பேன்களுக்கும், வண்டுகளுக்கும் பயப்படுகிறான். பார்வோனாலும், அவனுடைய பலத்த சேனையாலும், இந்த வஸ்துக்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி ஜெயிக்க முடியவில்லை.
பார்வோன் எகிப்து தேசத்திற்கு ராஜாவாகயிருந்தாலும், அவனுடைய கையில் செங்கோல் இருந்தாலும், பார்வோனுக்கு முன்பாக எகிப்து தேசத்தார் எல்லோரும் முழங்கால் படியிட்டு அவனை வணங்கினாலும், பார்வோன் கர்த்தருக்கு முன்பாக முழங்கால் படியிட்டு தன்னை தாழ்த்தி, அவரை ஆராதிக்கவேண்டும். பார்வோனுடைய கடினமான இருதயத்தை உடைப்பதற்காகவும், அவனை தாழ்த்துவதற்காகவும் கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது ஒவ்வொரு வாதையாக அனுப்புகிறார்.
கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது தவளைகளை வரப்பண்ணுவதற்கு முன்பாக, பார்வோனை எச்சரிக்கிறார். கர்த்தர் மோசேயை நோக்கி, ""நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு. நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன்'' (யாத் 8:1,2) என்று எச்சரிப்பின் வார்த்தைகளை சொல்லச்சொல்லுகிறார்.
பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டிருக்கிறது. அவன் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிய மறுக்கிறான். பார்வோன் பிடிவாதம்பண்ணக்கூடாது. அவன் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, இஸ்ரவேல் ஜனங்களை, கர்த்தருக்கு ஆராதனை செய்ய அனுப்பிவிடவேண்டும். பார்வோனோ தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, இஸ்ரவேல் புத்திரரை அனுப்ப மறுத்துவிடுகிறான்.
கர்த்தர் தம்முடைய நீதியினால் பாவிகளை தண்டிக்கிறார். ஆனாலும் அவர்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்ப வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அதற்காக கர்த்தர் பொறுமையோடு காத்திருக்கிறார். பாவிகளை தண்டிக்கவேண்டும் என்பது கர்த்தருடைய விருப்பமல்ல. அவர்கள் தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும் என்பதே கர்த்தருடைய விருப்பம்.
கர்த்தர் பாவிகளை தண்டிப்பதற்கு முன்பாக, அவர்களுடைய பாவத்தினால் அவர்களுக்கு வரப்போகும் தண்டனையைப்பற்றி அவர்களுக்கு எடுத்து சொல்லி, அவர்களை எச்சரிக்கிறார். அவர்கள் தங்கள் பாவங்களுக்கு விலகி மனந்திரும்பினால், தண்டனைக்கு தப்பித்துக்கொள்ளலாம். பாவிகள் தங்கள் பாவத்தில் நிலைத்திருந்தால், கர்த்தர் தம்முடைய நீதியினால் அவர்களை தண்டிப்பார். அவர்களால் கர்த்தருடைய தண்டனைக்கு தப்பிக்க முடியாது. பாவத்தின் சம்பளம் மரணம்.
கர்த்தர் பார்வோனை எச்சரிக்கும்போது, அவன் இஸ்ரவேல் புத்திரரை கர்த்தருக்கு ஆராதனை செய்ய அனுப்பவில்லையென்றால், கர்த்தர் அவனுடைய எல்லை அடங்கலை தவளைகளால் வாதிப்பதாக சொல்லுகிறார். பார்வோன் இஸ்ரவேல் புத்திரரை அனுப்பிவிட்டால், கர்த்தர் எகிப்து தேசத்தை தவளைகளால் வாதிக்கமாட்டார்.
கர்த்தருடைய வாதை எகிப்து தேசத்திலே மிகவும் பயங்கரமாயிருக்கும். கர்த்தர் பார்வோனிடத்தில் ""தவளைகளால் வாதிப்பேன்'' என்று சொல்லும்போது, எகிப்து தேசத்தில் ஒன்று அல்லது இரண்டு தவளைகள் வரும் என்பது பொருளல்ல. தவளைகள் திரளாய் வரும். அவை எகிப்து தேசத்தையே மூடும்.
எகிப்து தேசத்திலே தவளைகள் மூலமாக எப்படிப்பட்ட வாதைகள் வரும் என்பதையும், கர்த்தர் மோசே மூலமாக, பார்வோனுக்கு எடுத்து சொல்லுகிறார்.
நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும்; அவைகள் பார்வோனுடைய வீட்டிலும் அவன் படுக்கை அறையிலும், அவன் மஞ்சத்தின் மேலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், அவன் ஜனங்களிடத்திலும், அவன் அடுப்புகளிலும், மாப்பிசைகிற அவன் தொட்டிகளிலும் வந்து ஏறும். அந்தத் தவளைகள் பார்வோன்மேலும், அவன் ஜனங்கள் மேலும், அவன் ஊழியக்காரர் எல்லார்மேலும் வந்து ஏறும் (யாத் 8:3,4).
கிழக்கு தேசங்களில் மண்பானைகளைத் தரையில் புதைத்து, அதற்கடியில் நெருப்பூட்டி, அப்பம் சுடுவது வழக்கம். அந்த அடுப்புப் பானை முழுவதிலும் தவளைகள் நிறைந்திருந்ததால், எகிப்து தேசத்தில் ஜனங்களுக்குச் சாப்பிடுவதற்கே வழியில்லை.
பார்வோன் கர்த்தருடைய கட்டளைக்கு செவிகொடுக்காமல் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறான். கர்த்தர் எகிப்து தேசத்தின்மீது தவளைகள் வருவதற்கு அனுமதி கொடுக்கிறார். கர்த்தர் மோசேயோடு பேசுகிறார். மோசே கர்த்தருடைய வார்த்தையை ஆரோனிடத்தில் சொல்லுகிறார்.
கர்த்தர் மோசேயை நோக்கி, ""நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையில் இருக்கிற கோலை நதிகள் மேலும் வாய்க்கால்கள் மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல்'' (யாத் 8:5) என்று சொல்லுகிறார்.
மோசேயின் கட்டளைப்படி ஆரோன் நதிகள், வாய்க்கால்கள், குளங்கள் ஆகியவற்றின்மேல் கோலை நீட்டுகிறார். ஏராளமான தவளைகள் உற்பத்தியாகி, அவை எகிப்து தேசத்தையே மூடிக்கொள்கிறது (யாத் 8:5-6).
எகிப்து தேசத்திற்கு விரோதமாக சத்துருக்கள்ƒ யுத்தம்பண்ண வருவதுபோல, தவளைகள் திரளாய் வருகிறது. எகிப்தியரால் அந்த தவளைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. சத்துருக்கள் கோட்டையை முற்றிக்கையிடுவதுபோல, தவளைகள் எகிப்து தேசத்தை முற்றிக்கையிடுகிறது. அவை தேசத்திற்குள்ளே பிரவேசித்து, பார்வோனுடைய மஞ்சத்தின்மேலும் வந்துவிடுகிறது.
வெட்டுக்கிளிகளின் சேனைகளைப்பற்றி யோவேல் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லியிருக்கிறார். ""அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமானநாள்; விடியற்காலவெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதுமில்லை. இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டவாதுமில்லை'' (யோவே 2:2).
""கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்-ற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்'' (ஏசா 34:16,17).
எகிப்து தேசத்தில் தவளைகள் திரளாயிருப்பது பார்வோனுக்கு பெரிய அதிசயமாக தெரியவில்லை. தன் தேசத்திலுள்ள மந்திரவாதிகளாலும் தவளைகளை வரப்பண்ண முடியும் என்று பார்வோன் நம்புகிறான். அவன் தன்னுடைய இருதயத்தின் கடினத்தினால், கர்த்தரை நோக்கிப் பார்க்காமல், தன் மந்திரவாதிகளை நோக்கிப் பார்க்கிறான்.
பார்வோனுடைய மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணுகிறார்கள் (யாத் 8:7). மந்திரவாதிகள் தவளைகளை வரப்பண்ணினாலும், கர்த்தர் வரப்பண்ணின தவளைகளை அவர்களால் வெளியே அனுப்ப முடியவில்லை. கர்த்தருடைய வல்லமைக்கு விரோதமாக மந்திரவாதிகளால் எதிர்த்து நிற்கமுடியவில்லை.
எகிப்து தேசத்தின் மந்திரவாதிகள் ஜனங்களை வஞ்சிக்கிறார்கள். அவர்கள் பார்வோனை வஞ்சிப்பதற்காகவே தவளைகளை வரப்பண்ணுகிறார்கள். ஆனால் கர்த்தரோ பார்வோன் மனந்திரும்பவேண்டும் என்பதற்காக தவளைகளை வரப்பண்ணுகிறார். மனுஷரை வஞ்சிக்கிறவர்களை கர்த்தர் அழிப்பார். துன்மார்க்கரை அழிப்பதற்கு பெரிய ஆயுதம் எதுவும் தேவைப்படவில்லை. கர்த்தர் சாதாரண தவளைகளை அனுப்புகிறார். எகிப்து தேசத்தின் ராஜாவாகிய பார்வோனாலும், அந்த தேசத்து மந்திரவாதிகளாலும், கர்த்தர் அனுப்பின தவளைகளை அழிக்க முடியவில்லை.
தவளைகள் மூலமாக எகிப்து தேசத்திற்கு வந்த வாதை மிகவும் பெரிதாயிருக்கிறது. பார்வோனால் இந்த வாதையை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் முதல்முறையாக மோசேயினிடத்தில் உதவி கேட்கிறான். தனக்காக கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுமாறு, பார்வோன் மோசேயினிடத்திலும், ஆரோனிடத்திலும் கேட்டுக்கொள்கிறான்.
பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, ""அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக் கொள்ளுங்கள்; கர்த்தருக்கு ப-யிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன்'' (யாத் 8:8) என்று சொல்லுகிறான்.
மோசேயும், ஆரோனும் எந்தவிதமான அற்புதங்களையும் செய்வார்கள் என்பது பார்வோனுக்குத் தெரிய வருகிறது. பார்வோனின் மந்திரவாதிகளால் எகிப்தியருக்கு வரும் வாதைகளை அகற்ற முடியவில்லை. ஆகையினால் பார்வோன் எகிப்தின் மந்திரவாதிகளை நம்பவில்லை. எகிப்தியருக்கு வந்த எந்த வாதையையும் எகிப்தின் மந்திரவாதிகள் நீக்கிப்போட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. தங்கள்மீது வந்த வாதைகள் அகன்றுபோனால், இஸ்ரவேலரை விடுவிப்பதாகப் பார்வோன் கூறுகிறான். ஆனால் பார்வோனோ தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி இஸ்ரவேலரை விடுவிக்க மறுத்துவிடுகிறான். (யாத் 8:8-15).
ஆரோனும் மோசேயும் தனக்காக கர்த்தரிடத்தில் பரிந்து பேசுமாறு பார்வோன் அவர்களை கேட்டுக்கொள்கிறான். தவளைகள் எகிப்து தேசத்தை விட்டு வெளியேறிவிட்டால், இஸ்ரவேல் புத்திரரையும் எகிப்து தேசத்தைவிட்டு போகவிடுவதாக பார்வோன் வாக்குப்பண்ணுகிறான்.
மோசே பார்வோனுக்காக ஜெபம்பண்ண ஆயத்தமாயிருக்கிறார். எகிப்து தேசத்திலிருக்கிற தவளைகளெல்லாம் கர்த்தர் வரப்பண்ணின தவளைகள். அவை கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியும். கர்த்தர் அந்த தவளைகளை எந்த நேரத்திலே எகிப்து தேசத்திற்கு வரவேண்டும் என்று கட்டளையிட்டாரோ, அந்த நேரத்திலே அந்த தவளைகள் எகிப்து தேசத்திலே வந்தது.
கர்த்தருடைய கட்டளையின் பிரகாரமாக எகிப்து தேசத்திற்கு வந்த தவளைகள், கர்த்தர் மறுபடியும் கட்டளை கொடுக்கும்போது அவை எகிப்து தேசத்தை விட்டு வெளியேறும். எகிப்து தேசத்திற்கு வந்த தவளைகள் தானாய் வந்தவையல்ல. இது எதேச்சையாய் நடைபெற்ற சம்பவமுமல்ல. இவையெல்லாமே கர்த்தருடைய கடட்ளையின் பிரகாரமாக எகிப்து தேசத்திற்கு வந்திருக்கிறது.
கர்த்தர் கட்டளையிட்டால் மாத்திரமே எகிப்து தேசத்திலுள்ள தவளைகள் தங்களை விட்டு நீங்கும் என்பது பார்வோனுக்கு தெரிந்திருக்கிறது. மேலும், மோசே இதற்காக கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணினால், கர்த்தர் மோசேயின் ஜெபத்தைக்கேட்டு, இந்த தவளைகளை எகிப்து தேசத்தைவிட்டு நீங்கச் செய்வார் என்பதும் பார்வோனுக்கு தெரிந்திருக்கிறது. ஆகையினால் பார்வோன் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, ""அந்த தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்'' என்று சொல்லுகிறான்.
தான் கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணினால், கர்த்தர் தன்னுடைய ஜெபத்திற்கு பதில் கொடுப்பார் என்பது மோசேக்கும் தெரிந்திருக்கிறது. தான் கர்த்தரிடத்தில் எப்பொழுது ஜெபம்பண்ணவேண்டும் என்பதை பார்வோனே தீர்மானித்துக்கொள்ளட்டும் என்று மோசே நினைக்கிறார். கர்த்தருடைய கிரியைகள் ஒவ்வொன்றும், அவருக்கு சித்தமான வேளையில் நிறைவேறும் என்பதை மோசே பார்வோனுக்கு நிரூபிக்க விரும்புகிறார்.
மோசே பார்வோனை நோக்கி: ""தவளைகள் நதியிலே மாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்து போகும்படி செய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக'' என்று சொல்லுகிறார். அதற்கு பார்வோன், ""நாளைக்கு'' என்று சொல்லுகிறான் (யாத் 8:9).
தவளைகள் எகிப்து தேசத்தைவிட்டு நாளைக்கு நீங்கவேண்டும் என்பது பார்வோனுடைய விருப்பம். அவனே அந்தக் காலத்தைக் குறித்திருக்கிறான். எகிப்து தேசத்தின் மந்திரவாதிகள் நாட்களையும், ஜோசியத்தையும் பார்க்கிறவர்கள். ஒருவேளை நாளைக்கு எந்த அற்புதமும் நடக்காது என்று பார்வோனுடைய மந்திரவாதிகள் சொல்லியிருக்கலாம். பார்வோனும் அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு, ""நாளைக்கு'' என்று சொல்லுகிறான்.
கர்த்தரே எகிப்து தேசத்திலிருந்து தவளைகளை நீக்குகிறவர். மோசே கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணும்போது, அவர் கேட்டுக்கொண்ட பிரகாரம், கர்த்தர் நாளைக்கு, எகிப்து தேசத்திலிருந்து தவளைகளை நீங்கிப்போகும்படி செய்வார் என்று மோசே நம்புகிறார்.
மோசே ஒரு தெய்வீக காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார். மோசே கூறியது ஏதாவது நடைபெறவில்லையென்றால், எகிப்தியர்கள் மோசேயையும், மோசேயின் தேவனையும் நம்பமாட்டார்கள். ஆகையினால், மோசே பார்வோனிடத்தில் கூறும்போது, தான் விண்ணப்பம் பண்ண வேண்டிய காலத்தைப் பார்வோனே தீர்மானம் பண்ணட்டும் என்றுதான் கூறுகிறார். தவளைகள் எப்பொழுது எகிப்து தேசத்தைவிட்டு போகவேண்டுமென்பதை நிர்ணயம் பண்ணுமாறு மோசே பார்வோனை கேட்டுக் கொள்ளவில்லை. பார்வோனும் நாளைக்கு ஜெபம்பண்ணுமாறு கூறுகிறான். கர்த்தர் மோசேயின் ஜெபத்தைக் கேட்கிறார். மோசேயின் சொற்படிச் செய்கிறார். வீடுகளிலும், முற்றங்களிலும், வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயிற்று (யாத் 8:10-15).
மோசே பார்வோனை நோக்கி, ""எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது. தவளைகள் உம்மையும் உம்முடைய வீட்டையும் உம்முடைய ஊழியக்காரரையும் உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கி, நதியிலே மாத்திரம் இருக்கும்'' (யாத் 8:10,11) என்று சொல்லுகிறார்.
மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்படுகிறார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கி கூப்பிடுகிறார். கர்த்தர் மோசேயின் சொற்படி செய்கிறார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப் போயிற்று. அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்க்கிறார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுக்கிறது (யாத் 8:12-14).
தேசத்தின்மீது வாதை வந்தபோது, மோசே ஜெபத்தின் மூலமாகவே அவற்றை அகற்றுகிறார். நாமும் ஜெபம் பண்ணித்தான், பிரச்சனைகளைப் போக்க வேண்டும். தேவன் எப்படி கிரியை செய்யப் போகிறார் என்று தெரியவில்லையே என்று நினைத்து பயந்து விடக்கூடாது. நம்மிடம் அவிசுவாசம் இருக்கக்கூடாது. மோசே தேவனை நம்புகிறார். கர்த்தர் அவருடைய விண்ணப்பத்தைக்கேட்டு, அதற்கேற்ற பிரகாரம் கிரியை செய்கிறார். விசுவாசத்தோடு நாம் ஜெபிக்கும்போது, கர்த்தர் நிச்சயமாகவே நமது ஜெபத்திற்குப் பதில் தருவார்.
பார்வோன் தன் இருதயத்தைக் கடினப்படுத்துவான் என்று கர்த்தர் மோசேக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். இப்போது எகிப்து தேசத்தின் வீடுகளிலும் முற்றங்களிலும், வயல்களிலும் இருந்த தவளைகளெல்லாம் செத்துப்போயிற்று. எகிப்து தேசத்திலே வாதை நீங்கி இலகுவுண்டாயிற்று. இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறான். அவன் அவர்களுக்குச் செவிகொடாமற்போகிறான்; கர்த்தர் சொல்-யிருந்தபடி ஆயிற்று (யாத் 8:15).
தேவனுடைய கிருபையினால் நம்முடைய இருதயம் புதுப்பிக்கப்படவேண்டும். இருதயம் புதுப்பிக்கப்படவில்லையென்றால், கர்த்தர் நம்மை எவ்வளவுதான் தண்டித்தாலும், நம்முடைய பாவங்களுக்கு மனந்திரும்பவேண்டும் என்னும் மெய்யான உணர்வு நமக்குள் ஏற்படாது.
கர்த்தர் ஒரு சிலரை அவர்களுடைய பாவங்களினிமித்தமாக தண்டிக்கிறார். ஆனால் அவர்களோ தங்கள் பாவங்களுக்கு மனந்திரும்பாமல், தண்டனைகளை சகித்துக்கொள்கிறார்கள். இவர்கள் தங்கள் இருதயங்களை கடினப்படுத்தி, பாவத்தில் நிலைத்திருக்கிறார்கள்.
துணிகரமாய்ப் பாவம் செய்கிறவர்களும், பாவத்தில் நிலைத்திருக்கிறவர்களும், கர்த்தருடைய கிருபையையும், அவருடைய பொறுமையையும் அசட்டைபண்ணுகிறார்கள். நம்முடைய பாவங்களுக்கு நாம் மனந்திரும்பும்போது, கர்த்தர் நம்மோடு சமாதான உடன்படிக்கை பண்ணுகிறார். அப்போது தேவனோடு ஒப்புரவாகும் சிலாக்கியம் நமக்கு கிடைக்கும். நம்முடைய பாவங்களுக்கு மனந்திரும்பாமல், பாவங்களில் நிலைத்திருப்போமென்றால், நாம் தேவனுக்கு சத்துருக்களாகவே இருப்போம்.
""துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது'' (பிர 8:11).
""அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி; தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைகூர்ந்தார்கள்''
""ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள். அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை''.
""அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார். அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்'' (சங் 78:34-39).