மீகா புத்தகம் ஒரு கண்ணோட்டம்




மீகா புத்தகம் முன்னுரை 

மீகா சொன்ன தீர்க்கதரிசனத்திற்கும்,  ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனத்திற்கும்   ஒற்றுமை இருக்கிறது.  ஏசாயா  யூதாவையும் எருசலேமையும் குறித்து தீர்க்கதரிசனம்  சொன்னார் (ஏசா 2:2,3). மீகாவோ  சமாரியாவையும் எருசலேமையும் குறித்து  தீர்க்கதரிசனம் சொல்லுகிறார் (மீகா 4:1,2). 

மீகாவின் தீர்க்கதரிசன புஸ்தகத்தில்  யூதாவின் ராஜாக்களைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது.  அவர்களுடைய  ஆட்சிக்காலங்களை ஆதாரமாக வைத்து, சரித்திர ஆசிரியர்கள் மீகாவின் காலத்தை  கணக்கிடுகிறார்கள்.  

மீகா வடக்கு இஸ்ரவேல் தேசத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்.  அவர்களுடைய பாவங்களினிமித்தமாய்  அவர்களுக்கு அழிவு வரும். இஸ்ரவேலின் பத்துக்கோத்திரத்தாரும் அந்நிய தேசத்து  சிறையிருப்புக்குப்போவார்கள். மீகா இந்த சோகமான செய்தியை தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவர்களுக்காக அழுது புலம்புகிறார். 

வடக்கு இஸ்ரவேல் தேசமும், தெற்கு யூதாதேசமும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள். விக்கிரகாராதனையும்,  பேராசையும், தரித்திரரை ஒடுக்குவதும்,  தேவனுடைய வார்த்தையைப் புறக்கணிப்பதும்  அவர்களுடைய பிரதான பாவங்களாயிருக்கிறது.   தேசத்தை ஆளுகை செய்கிறவர்களும் பாவம் செய்கிறார்கள்.  தேவாலயத்தில்  கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்களும் பாவம் செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.  மீகா  அவர்களுடைய    பாவங்களை  அவர்களுக்கு உணர்த்துகிறார். தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு  அவர்கள்மீது வரும் என்று எச்சரிக்கிறார். 

மீகா கர்த்தருடைய ஜனத்திற்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொன்னாலும், அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளையும் சொல்லுகிறார். கர்த்தருடைய கிருபையும் இரக்கமும் அவர்களுக்கு காண்பிக்கப்படும். அவர்களுடைய வேதனைகளிலிருந்தும் உபத்திரவங்களிலிருந்தும் கர்த்தர் அவர்களை விடுவிப்பார்.  

மேசியாவின் வருகையைக் குறித்து மீகா தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்.  சுவிசேஷத்தின் கிருபை மேசியாவின் மூலமாக  வெளிப்படுத்தப்படும்.  

மீகா சொன்ன தீர்க்கதரிசனங்களில், இரண்டு தீர்க்கதரிசனங்களை மற்றவர்களும் மேற்கோளாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒன்று  எருசலேமின் அழிவைப்பற்றிய தீர்க்கதரிசனம். மற்றொன்று  இயேசுகிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய தீர்க்கதரிசனம். 

எருசலேமின் அழிவைக்குறித்து மீகா தீர்க்கதரிசனமாய்ச் சொன்னபோது “”ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்’’ (மீகா 3:12) என்று சொன்னார்.

தேசத்தின் மூப்பர்கள் சிலர் எரேமியாவை  நியாயப்படுத்தும்போது மீகா சொன்ன தீர்க்கதரிசனத்தை மேற்கோளாகச் சொல்லுகிறார்கள்.  

“”தேசத்திலே மூப்பரானவர்களில் சிலர் எழும்பி, சபையாகிய ஜனங்களை நோக்கி: யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்-, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான். அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்-யிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு         விரோதமாக மகா பொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே’’         (எரே 26:17-19) என்று சொன்னார்கள்.

இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து  மீகா தீர்க்கதரிசனமாய்ச் சொன்னபோது “”எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்தி-ருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது’’       (மீகா 5:2) என்று சொன்னார்.

கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று  ஏரோது பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் கேட்கிறார். அவர்கள் ஏரோதுக்கு பிரதியுத்தரம் சொல்லும்போது, மீகா சொன்ன தீர்க்கதரிசனத்தை  மேற்கோளாக பயன்படுத்துகிறார்கள். 

“”அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே,      யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்தி-ருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்’’ (மத் 2:5,6). 

கி.மு. 772 - 722 ஆகிய வருஷங்களில் மீகாவின் புஸ்தகம் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது. இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் மீகா தீர்க்கதரிசி ஆவார்  (மீகா 1:1).

மையக்கருத்து

1. மீகா யூதாவில் தீர்க்கதரிசியாக இருந்த போதிலும் அவர் சமாரியாவிற்கும், புறஜாதி தேசங்களுக்கும் தீர்க்கதரிசனம் கூறினார். 

2. அவர்கள் எல்லோரையும் அவர்களுடைய பாவங்களின் நிமித்தமாகக் கடிந்து கொண்டார். அவர்கள்மீது நியாயத்தீர்ப்பு வருமென்றும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் எச்சரித்துக் கூறினார். 

3. மேசியாவின் ராஜ்யத்தில் இஸ்ரவேல் தேசத்தார் வருங்காலத்தில் மறுபடியும் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என்பதை முன்னறிந்தார். 

4. கடைசி நாட்களில் நடைபெறப் போகும் மகா பெரிய சம்பவங்களை முன்னறிந்தார்.

5. கர்த்தர் இஸ்ரவேல் தேசத்தையும், யூதா தேசத்தையும் பலமுறை எச்சரித்திருக்கிறார். அவர்கள் தங்கள் பாவங்களில் தொடர்ந்து ஜீவித்தால், கர்த்தருக்கு விரோதமாகத் தொடர்ந்து கலகம் பண்ணினால் அவர்களுடைய ராஜ்யம் விழுந்துபோகும் என்று தேவன் எச்சரித்திருக்கிறார். ஆனால் அவர்களோ கர்த்தருக்கு விரோதமாகத் தொடர்ந்து கலகம் பண்ணினார்கள். தங்களுடைய இருதயத்திலும், ஜீவியத்திலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப் போனார்கள். 

6. அவர்களுடைய மாய்மாலமான ஆராதனையிலும், சடங்குகளிலும், பாவங்களிலும் கர்த்தர் தொடர்ந்து பொறுமையோடு இருக்கவில்லை. ஆகையினால் மோசேயின் உடன்படிக்கையின் பிரகாரம் கர்த்தர் அவர்களை நீதியாய் நியாயம் விசாரிப்பதை அவசியமென்று காண்கிறார்.

7. இஸ்ரவேல் புத்திரரை மனந்திரும்ப வைப்பதற்கான செயல்திட்டம் ஒன்றைக் கர்த்தர் வடிவமைக்கிறார். இதன் மூலமாக அவர் இஸ்ரவேல் புத்திரரோடு செய்து கொண்ட நித்திய உடன்படிக்கைகளை நிறைவேற்ற தீர்மானித்திருக்கிறார்.

முதல் மூன்று அதிகாரங்களில் இஸ்ரவேல் புத்திரருக்கு எதிராகக் கர்த்தருடைய வழக்கு விவரிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு வரும். அவர்கள் சிறையிருப்புக்குப் போவார்கள். இஸ்ரவேலில் மீதியாயிருக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப் படுவார்கள்.

மீகா 4-5 ஆகிய அதிகாரங்கள் ஆயிரம் வருஷ அரசாட்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பாபிலோனிய சிறையிருப்பைப் பற்றியும், இயேசு கிறிஸ்துவின் முதலாவது வருகையைப் பற்றியும், இந்த அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  (மீகா 4:9-10; மீகா 5:1-2). ஆனால் கர்த்தரோ இஸ்ரவேல் புத்திரரின் மிகுதியான பாவங்களின் நிமித்தமாக அவர்களைப் புறஜாதி தேசங்களின் மத்தியில் சிதறிப்போவதற்கு அனுமதித்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரையிலும் இஸ்ரவேல் புத்திரர் பல தேசங்களில் சிதறிப்போயிருப்பார்கள். (மீகா 5:3) இஸ்ரவேலை மீட்பதற்காக இயேசு கிறிஸ்து வரும்போது அவர் அந்திக்கிறிஸ்துவோடு யுத்தம் பண்ணுவார். (மீகா 5:4-15).

மீகா 6:1-7:6 ஆகிய வசனங்களில் இஸ்ரவேல்மீது கர்த்தருடைய வழக்கு மறுபடியும் கூறப்பட்டிருக்கிறது. மீகா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில் கடைசிப் பகுதி கடைசி நாட்களில் நடைபெறும் சம்பவங்களைப் பற்றிக் கூறுகிறது. தேவன் ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றுவார். (மீகா 7:7-20).

மீகா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில்  தேவனுடைய நோக்கங்கள் அவருடைய கிரியைகளில் விவரிக்கப்பட்டுள்ளன. தம்முடைய நித்திய சித்தத்திற்கும், நித்திய திட்டத்திற்கும் இஸ்ரவேல் புத்திரரையும், மனுபுத்திரர் அனைவரையும் இணங்கச் செய்ய வேண்டுமென்பது கர்த்தருடைய நோக்கம். ஆரம்பத்தில் தேவன் பண்ணிய ஆசீர்வாதங்களின் வாக்குத்தத்தங்கள் இறுதியாகப் பூரணமாக நிறைவேறுகிறது. 

 ஏசாயா, ஆமோஸ் ஆகியவர்கள் ஊழியம் செய்த நாட்களில்  மீகா வாழ்ந்தார்.  மீகா சமாரியாவையும், யூதாவையும் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார். மீகா மொரேசா ஊரைச் சேர்ந்தவர். இந்த ஊர் யூதேயாவில் இருந்தது. ஏசாயாவின் பிறந்த ஊரும் இதுதான். எரேமியா 26:18-19-இல் எருசலேமின் வீழ்ச்சியைப்பற்றி தீர்க்கதரிசனமாகக் கூறியபோது, இவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். மேசியாவின் வருகையைப் பற்றி இவர் கூறிய தீர்க்கதரிசனம் மிகவும் முக்கியமானது ஆகும் (மீகா 5:2).

புத்தகத்தின் பொதுவான சுருக்க வருணனை

1. அவர்களுடைய விக்கிரக வழிபாட்டின் நிமித்தமாக கர்த்தரின் கடுங்கோபமானது சமாரியா மேலும், யூதாவின் மேலும் கடந்து வந்தது. (அதிகாரம் 1)

2. கள்ளத் தீர்க்கதரிசிகளும் மீட்பைப் பற்றிய வாக்குத்தத்தமும் (அதிகாரம் 2)

3. பிரபுக்கள், நியாயாதிபதிகள், ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள் ஆகியோரின் அநீதிக்கேடுகள்  (அதிகாரம் 3)

4. கடைசி நாட்கள் (அதிகாரம் 4)

5. அசீரியர்களிடமிருந்தும் விக்கிரக வழிபாட்டி-ருந்தும் விடுவிக்கப்படுதல் (அதிகாரம் 5)

6. தேவன் தமது ஜனங்களைக் குற்றப்படுத்திக் கூறும் வார்த்தைகள்      (அதிகாரம் 6)

7. தேவனுடைய இரக்கத்திற்காகவும் மனதுருக்கத்திற்காகவும் தேவனிடம் விண்ணப்பம் பண்ணுவதும் அவரைத் துதிப்பதும் (அதிகாரம் 7)

பொருளடக்கம்

 ஒ யூதாவிற்கு எதிராகவும் இஸ்ரவேலுக்கு எதிராகவும் தேவனுடைய வழக்கு

1. தலைப்பு, ஆசிரியர், வரலாற்றுப் பின்னணி (1:1) 
2. மேசியாவின் இரண்டாம் வருகை (1:2-4)  
3. யூதாவின் பாவங்களும் இஸ்ரவேலின் பாவங்களும் (1:5)
4. அசீரியர்கள் இஸ்ரவேலரைச் சிறைப்பிடித்தார்கள் (1:6-7)
5. இஸ்ரவேலுக்காக புலம்பல் (1:8-16)
6. இஸ்ரவேலின் ஏழு பாவங்கள் (2:1-2)
7. இஸ்ரவேலின்மீது நியாயத்தீர்ப்பு (2:3)
8. இஸ்ரவேலுக்காக புலம்பல் (2:4-5)
9. யாக்கோபின் பாவங்களும் நியாயத்தீர்ப்பும் (2:6-11)
10. மேசியாவின் இரண்டாம் வருகை (2:12-13)

 ஒஒ. இஸ்ரவேலை ஆளுபவர்களுக்கு தீர்க்கதரிசனம் 

1. அவர்களுடைய எட்டு பாவங்கள் (3:1-3)
2. தேவன் அவர்களைத் தள்ளிவிட்டார் (3:4)
3. தீர்க்கதரிசிகள்மீது நியாயத்தீர்ப்பு (3:5-7)
4. மீகாவும் கள்ளத்தீர்க்கதரிசிகளும்  (3:8)  
5. தலைவர்களின் எட்டு பாவங்கள்  (3:9-11)
6. எருசலேம், தேவாலயம் ஆகியவற்றின் முழுமையான அழிவு (3:12)

 ஒஒஒ. ஆயிர வருஷ மீட்பு

1. மேசியாவினுடைய இராஜ்ஜியத்தின் விஸ்தீரணமும் மேன்மையும் (4:1-2)
2. உலக அமைதி (4:3)
3. உலக செழுமை (4:4)
4. உலக மார்க்கம் (4:5)
5. மேசியாவின்கீழ் நித்திய தேசத்திற்கு இஸ்ரவேலரின் மீட்பு (4:6-8)
6. பாபிலோனியச் சிறையிருப்பு முதலாவது வரும் (4:9-10)
7. இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும் விதம் (4:11-13)
8. மேசியாவின் முதலாவது வருகையும் அவருடைய மீட்பின் கிரியையும் நித்திய மீட்பிற்கு அச்சாரம் (5:1-2)
9. இஸ்ரவேல் மனந்திரும்பும் வரையிலும் அது ஒப்புக்கொடுக்கப்படும் (5:3)
10. மேசியாவின் இரண்டாம் வருகையின் போது அந்திக்கிறிஸ்துவிடமிருந்து இஸ்ரவேல் மீட்கப்படும் (5:4-6)
11. மேசியாவின் வருகையின்போது இஸ்ரவேல் மீட்கப்படும் (5:7-15)

 ஒய. இஸ்ரவேலுக்கு எதிராக கர்த்தருடைய கடந்த கால வழக்கும் நிகழ்கால வழக்கும் 

1. பர்வதங்கள், மலைகள், ஜனங்கள் ஆகியவற்றிற்கு அழைப்பு (6:1-2)
2. ஜனங்களோடு வழக்கு - பாவங்களும் நியாயத்தீர்ப்பும் (6:3-8)
3. பட்டணத்தோடு வழக்கு - பாவங்களும் நியாயத்தீர்ப்பும் (6:9-16)
4. இஸ்ரவேல் முழுமையாக நீதியிலிருந்து பாழாகும் (7:1-6)

 ய. இஸ்ரவேலின் மீட்பு

1. கடைசி நாட்களில் இஸ்ரவேலின் மனந்திரும்புதல் (7:7-9)
2. இஸ்ரவேலின் விரோதிகள் தாழ்த்தப்படுவார்கள் (7:10)
3. இஸ்ரவேல் மறுபடியும் கூட்டிச் சேர்க்கப் படும் (7:11-13)
4. தேவனிடம் ஜெபம் (7:14)
5. விரோதிகள்மீது நியாயத்தீர்ப்பு (7:15-17)
6. தேவனிடத்தில் இஸ்ரவேலின் நம்பிக்கை (7:18-20)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.