பிலேமோன்
முன்னுரை
பிலேமோன் கொலோசெ சபையிலுள்ள ஒரு ஊழியக்காரராகயிருக்கவேண்டுமென்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். கொலோசெ பட்டணம் பிரிகியா தேசத்திலுள்ளது. இவருக்கு ஒநேசிமு என்னும் பெயரில் ஒரு வேலைக்காரர் இருந்தார். இவர் பிலேமோனின் பொருளுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கவேண்டும். அல்லது அவருடைய பொருளை திருடி எடுத்துக்கொண்டு, அவரை விட்டு ஓடிவந்திருக்கவேண்டும்.
ஒநேசிமு பிலேமோனுக்குத் தப்பி ரோமாபுரிக்கு ஓடிவருகிறார். அப்போது பவுல் அங்கு சுவிசேஷத்திற்காக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒநேசிமுக்கும் பவுலுக்கும் சிநேகமுண்டாகிறது. தேவனுடைய கிருபையினாலே, பவுலின் ஊழியத்தினால் ஒநேசிமு இரட்சிக்கப்படுகிறார். இதன்பின்பு, ஒநேசிமு சிறைச்சாலையிலுள்ள பவுலுக்கு சிறிதுகாலம் உதவியாகயிருக்கிறார்.
ஒநேசிமு பவுலின் வேலைக்காரரல்ல. அவர் பிலேமோனுக்கு வேலைக்காரர். பிலேமோனுடைய அனுமதியில்லாமல் ஒநேசிமுவைத் தன்னிடத்தில் வைத்துக்கொள்வது தவறானது என்று பவுல் நினைக்கிறார். அவரை மறுபடியும் பிலேமோனிடம் திருப்பி அனுப்பிவிடவேண்டுமென்று தீர்மானித்து, ஒநேசிமுவைப்பற்றி நல்ல வார்த்தைகளை ஒரு நிருபத்தில் எழுதுகிறார். அந்த நிருபத்தோடு ஒநேசிமுவை பிலேமோனிடத்திற்கு அனுப்புகிறார்.
பிலேமோன் ஒநேசிமுவின்மீது அன்புகூர்ந்து அவன் செய்த தப்பிதங்களை மன்னித்துவிடுமாறு பவுல் அவனுக்காக மன்றாடுகிறார். பிலேமோன் ஒநேசிமுவை மன்னித்து ஏற்றுக்கொண்டாரா என்று இந்த நிருபத்தில் எழுதப்படவில்லை. ஆனாலும் பிலேமோன் பவுலின் வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்து, ஒநேசிமுவை மன்னித்து ஏற்றுக்கொண்டிருப்பார் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள்.
கி.பி. 64 ஆம் ஆண்டில் பவுல் ரோமாபுரியிலிருந்து இந்த நிருபத்தை எழுதினார்.
மையக்கருத்து
பிலேமோன் என்பவன் கொலோசே பட்டணத்திலுள்ள ஒரு விசுவாசி. இவனிடத்தில் ஒநேசிமு என்பவன் அடிமையாக இருந்தான். இவன் தன்னுடைய எஜமானை வஞ்சித்து விட்டு ரோமாபுரிக்குத் தப்பியோடி விட்டான். அங்கு பவுலின் ஊழியத்தின் மூலமாக ஒநேசிமு இரட்சிக்கப்பட்டான். பவுல் பிலேமோனுக்கு ஒரு நிருபத்தை எழுதி அதை ஒநேசிமு மூலமாகக் கொடுத்து அனுப்புகிறார். ஒநேசிமுவை மன்னித்து ஏற்றுக் கொள்ளுமாறு பவுல் பிலேமோனுக்கு இந்த நிருபத்தில் எழுதியிருக்கிறார்.
பொருளடக்கம்
ஒ. ஆசிரியரும் வாழ்த்துரையும் (1:1-3)
ஒஒ. பிலேமோனின் சுபாவம் (1:4-7)
ஒஒஒ. ஒநேசிமுக்காக பவுலின் மன்றாட்டு (1:8-19)
ஒய. கர்த்தருக்குள் பவுல், பிலேமோன் ஆகியோரின் ஐக்கியம் (1:20-22)
ய. முடிவுரையும் ஆசீர்வாதமும் (1:23-25)