2 கொரிந்தியர் முன்னுரை
அப்போஸ்தலர் பவுல் மக்கெதோனியா நாட்டின் வழியாக போகும்போது, அந்த நாட்டைக் கடந்தபின்பு, கொரிந்தியரிடத்திற்கு வருவதாக, தன்னுடைய முதலாவது நிருபத்தில் ஏற்கெனவே எழுதியிருக்கிறார் (1கொரி 16:5). ஆனால் அவர் கொரிந்து பட்டணம் போகவில்லை. அங்கு போவதற்கு அநேக தடைகள் உண்டாயிற்று. அங்கு போக காலதாமதம் உண்டானபடியினால், பவுல் அவர்களுக்கு இந்த இரண்டாம் நிருபத்தை எழுதுகிறார்.
கொரிந்து சபையில் ஒரு சிலர் பவுலுக்கு துக்கமுண்டாக்குகிறார்கள். அப்படிப்பட்டவனைப்பற்றி பவுல் இந்த நிருபத்தில் குறிப்பிடுகிறார் (2கொரி 2). கொரிந்தியரைப்பற்றிப் புகழ்ந்து பேசுகிறார் (2கொரி 7). எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யும் காரியத்தில், கொரிந்தியரும் சேர்ந்துகொள்ளவேண்டுமென்று ஆலோசனை சொல்லுகிறார் (2கொரி 8,9).
அப்போஸ்தலர் பவுல் பல இடங்களுக்கும் சென்று கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார் (2கொரி 2). பழைய உடன்படிக்கையின் காலத்திற்கும், புதிய உடன்படிக்கையின் காலத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை பவுல் இங்கு குறிப்பிடுகிறார் (2கொரி 3). பவுலுக்கும் அவருடைய உடன்ஊழியருக்கும் அநேக உபத்திவரங்கள் உண்டாயிற்று (2கொரி 4,5). கொரிந்து சபையிலுள்ள விசுவாசிகள் அவிசுவாசிகளோடு ஐக்கியம் வைத்திருக்கக்கூடாது (2கொரி 6). அப்போஸ்தலர் பவுல் தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்தை நியாயப்படுத்துகிறார் (2கொரி 10-12).
கி.பி. 60 ஆம் ஆண்டில் பவுல் இந்த நிருபத்தை பிலிப்பி பட்டணத்திலிருந்து எழுதினார். அப் 19:23-20:3 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்குப் பின்பு இந்த நிருபம் எழுதப்பட்டிருக்கலாம். (2கொரி 1:8)
மையக்கருத்து
பவுல் இந்த நிருபத்தை எழுதுவதற்கு ஐந்து காரணங்கள் இருந்தன. அவையாவன:
1. தனது முதலாம் நிருபத்தின் மூலமாகக் கொரிந்துவிலுள்ள விசுவாசிகளைப் பவுல் கடிந்து கொண்டு திருத்தினார். இதன் மூலமாக இரட்சிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக பவுல் இந்த நிருபத்தை எழுதியிருக்கிறார். (2கொரி 1:1-2:17; 7:1-16)
2. உண்மையான கிறிஸ்தவ ஊழியத்தைப் பற்றி உபதேசம் பண்ணுவதற்காக பவுல் இந்த நிருபத்தை எழுதியிருக்கிறார். (2கொரி 3:1-6:18)
3. யூதேயாவிலுள்ள பரிசுத்தவான்களுக்கு உதவி புரிவதற்காக தருமப்பணம் சேகரிப்பதைப் பற்றியும் கொடுப்பதில் உள்ள ஆசீர்வாதங்களை விளக்கியும் பவுல் இந்த நிருபத்தை எழுதியிருக்கிறார். (2கொரி 8:1-9:15)
4. தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்தை உறுதிபண்ணும் விதமாகப் பவுல் இந்த நிருபத்தை எழுதியிருக்கிறார். (2கொரி 10:1-12:18)
5. கீழ்ப்படியாமையை எச்சரிக்கும் விதமாகப் பவுல் இந்த நிருபத்தை எழுதியிருக்கிறார். (2கொரி 12:19-13:14)
பொருளடக்கம்
ஒ. முன்னுரை: ஆசிரியரும் வாழ்த்தும் (1:1-2)
ஒஒ. பவுலின் சாட்சி
1. மீட்புக்களுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் தேவனுக்கு ஸ்தோத்திரம் (1:3-11)
2. பவுலினுடைய ஊழியத்தின் சுபாவம் (1:12)
3. நிருபத்தின் நோக்கம் (1:13-14)
4. பவுலின் பிரயாண திட்டம் (1:15-16)
5. பவுல் தனது கிரியைகளை உறுதிப்படுத்துகிறார் (1:17-24)
6. முதலாம் நிருபத்திலிருந்து குறிப்பு (2:3-11)
7. தீத்துவைக் குறித்து கலக்கம் (2:12-13)
ஒஒஒ. புதிய ஏற்பாட்டு ஊழியம்
1. கிறிஸ்துவிற்குள் எப்பொழுதும் வெற்றி (2:14)
2. ஆத்துமாவை இரட்சிக்கும் ஊழியமும் ஆத்துமாவை அழிக்கும் ஊழியமும் (2:15-16)
3. உண்மையுள்ள துப்புரவான ஊழியம் (2:17)
4. தேவன் தகுதிப்படுத்தியுள்ள ஊழியம் (3:1-5)
5. புதிய ஏற்பாட்டு ஊழியம் - பழைய ஏற்பாட்டு ஊழியமல்ல (3:6-8)
6. மகிமையுள்ள ஊழியமும் நீதியைக் கொடுக்கும் ஊழியமும் (3:911)
7. நம்பிக்கை, வெளிச்சம், விடுதலை ஆகியவற்றின் ஊழியம் (3:12-17)
8. மறுரூபப்படுத்தும் ஊழியம் (3:18)
9. உத்தமமான ஊழியம் (4:1-2)
10. சுயநலமில்லாத ஊழியம் (4:3-6)
11. வல்லமையின் ஊழியம் (4:7)
12. பாடுகளின் ஊழியம் (4:8-12)
13. தைரியமும் விசுவாசமுமுள்ள ஊழியம் (4:13-15)
14. நித்திய காரியங்களின் ஊழியம் (4:16)
15. வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின் ஊழியம் (5:1-8)
16. தேவனை பிரியப்படுத்தும் ஊழியம் (5:9-13)
17. ஒப்புரவாகுதலின் ஊழியம் (5:14-19)
18. வேண்டிக் கொள்ளுதலின் ஊழியம் (5:20-21)
19. குற்றம் சாட்டப்படாத அங்கீகரிக்கப்பட்ட ஊழியம் (6:3-10)
20. மனதுருக்கமுள்ள ஊழியம் (6:11-13)
21. வேறுபிரிக்கும் ஊழியம் (6:14-18)
22. பரிசுத்தமான ஊழியம் (7:1)
23. ஐக்கியத்தை விரும்பும் மனுஷ ஊழியம் (7:2-4)
24. போராட்டங்களும் பயங்களும் நிறைந்த மானிட ஊழியம் (7:5-7)
25. துக்கப்படுத்தும் ஊழியம் (7:8-16)
ஒய. எருசலேமிலுள்ள ஏழைப் பரிசுத்தவான்களுக்கு தர்மப்பணம் சேகரிப்பு
1. மக்கெதோனியா நாட்டு சபைகள் (8:1-5)
2. தீத்துவின் ஊழியம் - புத்திமதி (8:6-7)
3. பவுலின் விண்ணப்பத்திற்குக் காரணங்கள் (8:8-12)
4. கொடுப்பதில் சமநிலை (8:13-15)
5. தீத்துவை கொரிந்துவிற்கு அனுப்புகிறார் (8:16-23)
6. உண்மையுள்ளவர்களாக இருக்கும்படி விண்ணப்பம் (8:24)
7. பக்தி வைராக்கியத்திற்காக புகழ்ந்துரை (9:1-2)
8. மற்றவர்களிடம் இவர்களைக் குறித்து புகழ்ந்த பிரகாரம் வாழ வேண்டும் என்னும் விண்ணப்பம் (9:3-5)
9. உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் (9:6-9)
10. தேவன் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார் (9:10-15)
ய. பவுல் தனது அப்போஸ்தல ஊழியத்தை உறுதிபண்ணுகிறார்
1. பவுலின் போராயுதங்கள் (10:1-5)
2. கிரியைகளோடு வருகிறார் (10:6-11)
3. பவுலின் அதிகாரமும் புகழ்ச்சியும் தேவனிடமிருந்து வந்தவை (10:12-18)
4. தனது மேன்மை பாராட்டலை சகித்துக் கொள்ளுமாறு விண்ணப்பம் (11:1-4)
5. மற்ற அப்போஸ்தலர்களோடு சமநிலை (11:5-6)
6. பவுலின் கிருபையுள்ள பிரசங்கம் (11:7-11)
7. கள்ள அப்போஸ்தலர்கள் கபடமுள்ள வேலையாட்களைக் குறித்து எச்சரிப்பு (11:12-15)
8. மேன்மை பாராட்டியதைக் குறித்து சகித்துக் கொள்ளுமாறு விண்ணப்பம் (11:16-20)
9. மாம்சத்தில் சமநிலை (11:21-22)
10. ஊழியத்திலும் பாடுகளிலும் சமநிலை (11:23-27)
11. ஸ்தானத்திலும் பொறுப்பிலும் சமநிலை (11:28-29)
12. பவுலின் மேன்மை பாராட்டுதல் உண்மையானவை என்பதற்கு தேவனே சாட்சி (11:30-33)
13. தரிசனங்கள் தேவனுடைய வெளிப்பாடுகள் ஆகியவற்றில் சமநிலை (12:1-6)
14. பொறுமையிலும் வல்லமையிலும் சமநிலை (12:7-12)
15. அவர்களை வருத்தப்படுத்தாதிருந்ததற்காக மன்னிப்பு கோருகிறார் (12:13)
16. பவுலின் பிரயாண ஆயத்தம் (12:14-16)
17. தீத்துவின் மேன்மை பாராட்டுதல் (12:17-18)
18. மறுபடியும் வரும்போது அவர்களை நியாயம்தீர்க்கும் அதிகாரம் பவுலுக்கு உள்ளது (12:19-21)
19. பவுலின் பிரயாண ஆயத்தம் (13:1-4)
20. தெளிவு பெறுமாறு புத்திமதி (13:5-10)
21. பிரிந்து போகும்போது புத்திமதி (13:11-12)
22. வாழ்த்தும் ஆசீர்வாதமும் (13:13-14)