யோபு அறிமுகம்
யோபுடைய சரித்திர புஸ்தகம் மிகவும் விசேஷமானது. பரிசுத்த வேதாகமத்தில் மொத்தம் 66 புஸ்தங்கள் உள்ளன. யோபுடைய சரித்திரப் புஸ்தகம் வேதாகமத்திலுள்ள மற்ற புஸ்தங்களோடு எவ்விதத்திலும் தொடர்பில்லாமல், தனித்தன்மை உடையதாயிருக்கிறது. இதனால் வேதபண்டிதர்கள் யோபுடைய சரித்திர புஸ்தகத்திற்கு விசேஷித்த கவனம் செலுத்தி வியாக்கியானம் சொல்லுகிறார்கள்.
பரிசுத்த வேதாகமத்தின் பழைய எபிரெய பாஷை பதிப்புக்களில், யோபுடைய சரித்திர புஸ்தகம், சங்கீதப்புஸ்தகத்திற்கு அடுத்தபடியாக கோர்க்கப்பட்டிருக்கிறது. வேறு சில பதிப்புக்களில், இந்தப் புஸ்தகம், நீதிமொழிகள் புஸ்தகத்திற்கு அடுத்தபடியாக கோர்க்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் யோபுடைய சரித்திர புஸ்தகத்தை ஏசாயா தீர்க்கதரிசியோ, அல்லது பிற்காலத்து தீர்க்கதரிசிகளில் ஒருவரோ எழுதியிருக்கவேண்டும் என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்லுகிறார்கள்.
யோபுடைய சரித்திர புஸ்தகம், சங்கீதப்புஸ்தகத்திற்கு முன்பாக கோர்க்கப்பட்டிருப்பதுதான் சரியானது என்றும் வேதபண்டிதர்களில் அநேகர் சொல்லுகிறார்கள். நீதிமொழிகள் புஸ்தகத்தைப்போலவே, யோபுடைய சரித்திர புஸ்தகமும் தேவனுடைய நீதியை விவரிக்கிறது. சங்கீதப்புஸ்தகம் ஒரு ஸ்தோத்திர கீத புஸ்தகம். கர்த்தரைத் தியானிப்பதற்கு சங்கீதப்புஸ்தகம் உதவியாயிருக்கும். நம்முடைய நடைமுறை ஜீவியத்தில் நாம் எப்படி ஜீவிக்கவேண்டும் என்று நீதிமொழிகள் புஸ்தகம் நமக்குப் போதிக்கிறது. யோபுடைய சரித்திர புஸ்தகமோ தேவனைப்பற்றிய சத்தியத்தை நமக்குப் போதிக்கிறது.
நாம் ஆராதிக்கிறவர் இன்னாரென்பதை அறிந்திருக்கவேண்டும். நாம் ஆராதிக்கிறவரைப்பற்றி சரியாகத் தெரிந்துகொள்ளாமல், அவரை சிறப்பாக ஆராதிக்கவும் முடியாது, அவருக்கு சரியாக கீழ்ப்படியவும் முடியாது.
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியானவரால் அருளப்பட்டிருக்கிறது. யோபுடைய சரித்திர புஸ்தகமும் தேவஆவியானவரால் அருளப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. யூதர்கள் யோபுவுக்கு சிநேகிதர்களல்ல. யோபு இஸ்ரவேலின் காணியாட்சியை சேர்ந்தவருமல்ல. அவர் ஊத்ஸ் என்னும் புறஜாதி தேசத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் யோபு தேவனிடத்தில் பக்தியுள்ளவராயிருக்கிறார்.
கர்த்தர் தம்முடைய ஆகமங்களை பக்தியுள்ள யூதர்களிடம் பாதுகாப்பாக ஒப்புக்கொடுத்திருக்கிறார். அவைகளை பாதுகாக்கிற யூதர்கள், யோபுடைய சரித்திர புஸ்தகத்தையும் பல சந்ததிகளாக பாதுகாத்து வருகிறார்கள். யூதர்களுடைய பரிசுத்த வேதாகமத்தில் யோபுடைய சரித்திர புஸ்தகமும் இடம்பெற்றிருக்கிறது.
புதிய ஏற்பாட்டுக்காலத்தில், நிருபங்களை எழுதிய அப்போஸ்தலர்கள், யோபுடைய சரித்திர புஸ்தகத்திலுள்ள வசனங்களையும் மேற்கோளாகச் சொல்லியிருக்கிறார்கள்.