எகிப்து தேசமெங்கும் வத்த பேன்கள் Lice all over Egypt யாத் 8:16-19
யாத் 8:16. அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் எங்கும் பேன்களாய் போம் என்று சொல் என்றார்.
யாத் 8:17. அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் பேன்களாய் எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று.
யாத் 8:18. மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ் செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று; பேன்கள் மனிதர்மேலும் மிருகஜீவன்கள் மேலும் இருந்தது.
யாத் 8:19. அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்-யிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.
எகிப்து தேசத்திலே பேன்கள் மூலமாக வாதை உண்டாயிற்று. இந்த வாதை எகிப்து தேசம் எங்கும் வருகிறது. கர்த்தர் மோசேயினிடத்தில், ""நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் எங்கும் பேன்களாய் போம் என்று சொல்'' (யாத் 8:16) என்று சொல்லுகிறார்.
மோசேயும் ஆரோனும் அப்படியே செய்கிறார்கள்; ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடிக்கிறார்; அப்பொழுது அது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் பேன்களாய் எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று (யாத் 8:17).
தவளைகள் தண்ணீரிலிருந்து வந்தது. இந்தப் பேன்களோ பூமியின் புழுதியிலிருந்து வருகிறது. கர்த்தர் எகிப்தியர்மீது பேன்கள் மூலமாக வாதைகளை அனுப்புவதற்கு முன்பு, அவர் பார்வோனை எச்சரிக்கவில்லை. பார்வோனுக்கு எந்த அளவுக்கு எச்சரிப்பின் வார்த்தைகளை சொல்லவேண்டுமோ, அந்த அளவுக்கு கர்த்தர் அவனை எச்சரித்து முடித்துவிட்டார். கர்த்தருடைய ஆவியானவர் மனுஷனோடு எப்போதும் போராடிக்கொண்டிருக்கமாட்டார்.
எகிப்தியர்மீது பேன்கள் மூலமாக வரும் வாதை மூன்றாவது வாதையாகும். இது காலதாமமில்லாமல் உடனே வருகிறது. ஆரோன் தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தவுடனே எகிப்து தேசம் எஙகும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று.
பார்வோன் எப்போதும் போல தன்னுடைய மந்திரவாதிகளைப் பார்க்கிறான். மோசே எதையெல்லாம் செய்கிறாரோ அதையெல்லாம் தன்னுடைய மந்திரவாதிகளாலும் செய்ய முடியும் என்று பார்வோன் நம்புகிறான். மந்திவாதிகளும் எப்போதும்போல தங்களுடைய மந்திர வித்தைகளினால் பேன்களை பிறப்பிக்க மந்திரம் ஓதுகிறார்கள். அவர்கள் தங்கள் மந்திரவித்தையினாலே பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ்செய்கிறார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று; பேன்கள் மனிதர்மேலும் மிருகஜீவன்கள் மேலும் இருக்கிறது (யாத் 8:18).
மந்திரவாதிகளால் தண்ணீரை இரத்தமாக மாற்றமுடிந்தது. அவர்களால் தவளைகளை வரப்பண்ண முடிந்தது. ஆனால் இப்போது அவர்களால் பேன்களை பிறப்பிக்க முடியவில்லை. பேன்கள் மிகவும் சிறிய வஸ்து. ஆனால் அந்த மந்திரவாதிகளால் சிறிய வஸ்துவாகிய பேன்களைக்கூட பிறப்பிக்க முடியவில்லை. அப்போது அவர்கள் தங்களுடைய மாய்மாலத்தையும், கர்த்தருடைய தெய்வீக வல்லமையையும் புரிந்துகொள்கிறார்கள்.
மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி, ""இது தேவனுடைய விரல்'' என்று சொல்லுகிறார்கள் (யாத் 8:19). கர்த்தருடைய சர்வவல்லமையையும், அவருடைய சர்வஆளுகையையும் அவருடைய சத்துருக்கள் அங்கீகாரம்பண்ணி அறிக்கை செய்கிறார்கள். கர்த்தருடைய சித்தத்தின் பிரகாரமாகவே காரியங்கள் நடைபெறும் என்பதை எகிப்தின் மந்திரவாதிகள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் ""தேவனுடைய விரல்'' என்று சொல்லும் வார்த்தைக்கு ""தேவனுடைய வல்லமை'' என்று பொருள்.
எகிப்தின் மந்திரவாதிகள் மோசேயின் மூலமாக நடைபெறும் அற்புதங்களெல்லாம் கர்த்தருடைய பலத்தினாலே நடைபெறுகிறது என்பதை இறுதியாக அறிந்து கொண்டு, அவர்கள் பார்வோனிடத்தில் ""இது தேவனுடையவிரல்'' என்று சொல்லுகிறார்கள். தேவனுடைய வல்லமைக்கு முன்பாகத் தங்களுடைய மந்திர சக்திக்கு எவ்விதமான வல்லமையும் இல்லை என்பதை எகிப்தின் மந்திரவாதிகள் அறிக்கை பண்ணுகிறார்கள் (யாத் 8:20; லூக்கா 11:20).
தம்மை எதிர்க்கிறவர்களுக்கு கர்த்தர் பயங்கரமானவராகயிருக்கிறார். சத்துருக்களால் கர்த்தரை மேற்கொள்ளமுடியாது. கர்த்தர் தம்முடைய வல்லமையை, சத்துருக்கள்மீது பிரயோகிக்கும்போது, சத்துருக்களும் கர்த்தருடைய மகிமையை அங்கீகரிப்பார்கள். அவர்களும் கர்த்தரை துதிப்பார்கள்.
எகிப்து தேசத்தின் மந்திரவாதிகள் கர்த்தருடைய வல்லமையை அங்கீகரிக்கிறார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்-யிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்படுகிறது; பார்வோன் அவர்களுக்குச் செவிகொடாமற்போகிறான். கர்த்தருடைய வார்த்தையினால் மனந்திரும்பாதவர்கள், அற்புதங்கள் மூலமாகவும், அடையாளங்கள் மூலமாகவும் மனந்திரும்புவது சந்தேகமே.