2பேதுரு
முன்னுரை
அப்போஸ்தலர் பேதுரு தான் எழுதின முதலாவது நிருபத்தைப்போலவே இரண்டாவது நிருபத்தையும் எழுதுகிறார். இவ்விரண்டு நிருபங்களிலும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. தான் ஏற்கெனவே சொன்னதை நினைவூட்டும்படியாக பேதுரு இந்த நிருபத்தையும் எழுதுகிறார். கர்த்தருடைய பரிசுத்தவான்கள் நமக்குச் சொல்லியிருக்கிற புத்திமதிகளை நாம் கருத்தாய்த் தியானிக்கவேண்டும். அவற்றை மறந்துவிடாமல் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
சீமோன் பேதுரு கி.பி. 61-65 ஆம் ஆண்டில் பாபிலோனிலிருந்து இந்த நிருபத்தை எழுதினார்.
மையக்கருத்து
1. 1பேதுரு நிருபம் யாருக்கு எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டதோ அவர்களுக்கே அந்த நோக்கத்திற்காக 2பேதுரு நிருபமும் எழுதப்பட்டிருக்கிறது. (2பேதுரு 3:1) விசுவாசிகள் தங்களுக்கு வரும் பாடுகளிலும் தேவனிடத்தில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய கிருபையைப் பற்றிக் கொள்ள வேண்டும். (1பேதுரு 5:12)
2. கடைசி நாட்களில் நடைபெறப் போகிற சம்பவங்களைப் பேதுரு இந்த நிருபத்தில் முன்னறிவிக்கிறார். நோவாவின் காலத்தில் ஜலத்தினால் பூமி அழிக்கப்பட்டதுபோல, இப்பொழுதுள்ள உலகம் அக்கினியினால் அழிக்கப்படப் போவதைப் பற்றி பேதுரு விளக்கிக் கூறுகிறார். (2பேதுரு 3:1-13).
3. இந்த நிருபமும், 2தெசலோனிக்கேயர், 1தீமோத்தேயு, 2தீமோத்தேயு, யூதா, வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய புஸ்தகங்களும் பல விஷயங்களில் ஒத்திருக்கிறது. கடைசி நாட்களில் காணப்படும் வேதப்புரட்டை இவை விளக்குகின்றன. வெளிப்படுத்தின விசேஷத்தில் அந்திக்கிறிஸ்துவின்கீழ் சத்தியம் எவ்வாறு புரட்டப்படும் என்பது விளக்கப்பட்டிருக்கிறது.
பொருளடக்கம்
ஒ. ஆசிரியரும் வாழ்த்துரையும் (1:1-2)
ஒஒ. கிறிஸ்தவ நீதிகள்
1. தேவனுடைய முழுமையான பராமரிப்பு (1:3)
2. சுவிசேஷத்தின் அநுகூலங்கள் (1:4)
3. கூட்டி வழங்க வேண்டியவை - எட்டு கிறிஸ்தவ நீதிகள் (1:5-11)
ஒஒஒ. பேதுருவின் மூன்று அம்ச சாட்சி
1. தன்னைப் பற்றி (1:12-15)
2. இயேசு கிறிஸ்துவைப் பற்றி (1:16-18)
3. வேதவாக்கியங்களைப் பற்றி (1:19-21)
ஒய. கள்ளத்தீர்க்கதரிசிகளும் கள்ளப் போதகர்களும்
1. அவர்களுடைய கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுக்கள் (2:1)
2. அவர்களைப் பின்பற்றுவோரின் நடக்கைகளும் நியாயத்தீர்ப்பும் (2:2-3)
3. வேதப்புரட்டர்களின் நியாயத்தீர்ப்பு - எடுத்துக்காட்டுக்கள் (2:4-6)
4. கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நீதியானது (2:7-9)
5. கள்ளப்போதகர்களின் அடையாளங்கள்
(1) அசுத்த இச்சைகளும் கர்த்தத்துவத்தை அசட்டை பண்ணுவதும் (2:10-11)
(2) வஞ்சனையில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள் (2:12-13)
(3) பொருளாசையுடையவர்கள் - இரக்கமற்றவர்கள் (2:14)
(4) இவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் காரியம் (2:15-17)
(5) மனுஷரின் தந்திரம் (2:18)
(6) நிலையில்லாத ஆத்துமாக்களை தந்திரமாய் பிடிக்கிறார்கள் (2:19)
(7) கள்ளப்போதகர்களுக்கு இரட்சிப்பின் நம்பிக்கையில்லை (2:20-22)
ய. கர்த்தருடைய நாள்
1. நிருபத்தின் நோக்கம் (3:1-2)
2. கிறிஸ்துவின் வருகையை மறுதலிக்கும் பரியாசக்காரர் (3:3-4)
3. பரியாசக்காரர் பூர்வகாலத்தை அறியாதிருக்கிறார்கள் (3:5-7)
4. கர்த்தருக்கு ஒரு நாளும் ஆயிரம் வருஷமும் (3:8-9)
5. அக்கினியினால் புதுப்பிக்கப்படுதல் (3:10-13)
6. கர்த்தருடைய நாளின் நிமித்தமாக ஆலோசனைகள் (3:14)
7. சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது (3:15-16)
8. பின்வாங்கிப்போவதற்கு எதிராக இரண்டு கட்டளைகள் (3:17-18)